உத்தமின் கேள்வி சிவமூர்த்தியின் மனத்தில் சுருக்கென்று வலி உண்டாக்கினாலும் அவரால் கேட்க முடியாததை மகன் கேட்டது அவரது மனத்திற்கு நிம்மதியைக் கொடுத்தது. இனி அவருடைய மகன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான் என்ற தெளிவும் கிடைத்தது.
“என்ன டா உன்னோட பேச்சு, நடவடிக்கை எல்லாம் வேற மாதிரி இருக்குது..நம்ம வீட்டைப் பத்தி உனக்கு தெரியாதா..புதுசா கேள்வி கேட்கற.” என்றார் காவேரி.
அதற்கு உத்தம் பதிலளிக்கும் முன்,”அவன் சொல்றது சரி..அவன்கிட்டே விவாதம் செய்து நேரத்தை வீணாக்காத..காலைலே சீக்கிரமா எழுந்திருக்கணும்..போய் படு.” என்று மனைவிக்குக் கட்டளையிட்டவர், மகனிடம்,”நீ சொல்றபடியே செய்திடலாம்.” என்று அவரது சம்மதத்தை தெரிவித்தார்.
மறுநாள் காலையில் மனோவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் நிகழ்வுகள் நடந்தேறின. காலை எட்டு மணி போல் மீனாம்மா, அர்ஜுன், மனோ மூவர் தான் வீட்டில் இருந்தனர். விடியற்காலையிலேயே வீட்டினரைக் கிளப்பி, காப்பியை மட்டும் வீட்டில் முடித்துக் கொண்டு பெரிய வண்டியில் அப்பா, அம்மா, அக்கா, அக்காவின் குழந்தைகள் என்று அனைவரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு சித்தூருக்குப் புறப்பட்டு விட்டான்.
வீட்டிலிருந்து புறப்படும் முன் மனோவிடம்,”மீனாம்மா நல்ல ரெஸ்ட் எடுத்துக்கட்டும்..அவங்களைக் கவனமாப் பார்த்துக்கறது தான் உன்னோட வேலை..சாப்பாடெல்லாம் வெளியே ஆர்டர் செய்திடு.” என்றான்.
அதற்கு, முதல்முறையாக,”ஆர்டர் போட பத்து நிமிஷத்திலே சாப்பாடு டெலிவரி ஆக இது பெங்களூர் இல்லை..மெயின் ரோட்லே இருக்கற அந்த பரோட்டா கடைக்கு போய் வாங்கிட்டு வர அரைமணி நேரமாகிடும்..அந்த நேரத்திலே வீட்லே சமைச்சிடலாம்.” என்று அவளது மனத்தில் தோன்றியதை அப்படியே வெளியிட்டாள்.
அத்தனை சுலபமாக அவளது கருத்தை ஏற்றுக் கொள்வானென்று அவள் எதிர்பார்க்கவில்லை. ‘என்ன டா இது நாம சொல்றதை அப்படியே ஒத்துக்கிட்டாங்க.’ என்று அவனை ஆச்சரியத்தோடு அவள் நோக்க,”என்ன? உனக்கு பரோட்டா பிடிக்குமா? சரி வாங்கிக்க..நோ பிராப்ளம்.’ என்று அவன் அனுமதி கொடுக்க, அதைக் கேட்டு அவளது கண்களில் கோபம் வெடிக்க, அவனது கண்களில் சிரிப்பு தெரிக்க, இருவரின் மனதும் இனிப்பை சுவைக்க, அந்த நொடி நீடிக்கும் முன், அவர்களருகே வந்த காவேரி,
“இராத்திரி கவனமா பின்பக்கக் கதவை தாழ் போட்டிடு..சாயங்காலம் மோட்டர் போட்டிடு..வேணாம், வேணாம் உங்க மூணு பேருக்கும் அதிகமா தண்ணீர் செலவாகாது அதனாலே இன்னைக்குப் போடாதே..நாங்க வந்த பிறகு போட்டா போதும்..தோட்டத்துக்கு ஒருவேளை தண்ணீர் விட்டா போதும்..தென்ன ஓலையை சீவி துடைப்பம் கட்டி வைச்சிடு..கேட்டைப் பூட்டி வைச்சா தபால் எதுவும் வந்தா மிஸ்ஸாகிடும்..அதைப் பூட்டாத…கதவை மட்டும் பூட்டிக்க..யாருக்கும் கதவைத் திறக்காத..உள்ளேயிருந்தே பதில் கொடு..காய்கறிக்காரன் வந்தா வேணாம்னு சொல்லிடு..கெஞ்சினாலும் எதுவும் வாங்கிடாதே..கம்மி ரேட்லே கொடுக்கறேன்னு நம்ம வீட்லேர்ந்து காய், பழம் சுருட்டிட்டு போறான்..அகிலா வீட்லேர்ந்து காய்கறி கொண்டிட்டு வரேன்..அவங்க தோட்டத்திலே தக்காளிப் போட்டிருந்தாங்க..அஞ்சு கிலோ எடுத்திட்டு வந்தா தொக்கு போட சரியா இருக்கும்..மல்லாட்டை இரண்டு மூட்டை சொல்லி வைச்சேன்..அதை செக்குக்கு..” என்றவரின் கையைப் பிடித்து உத்தம்,
“நாளைக்குள்ளே நம்ம வீடு மறைஞ்சுப் போகாது..அப்படி மறையணும்னா பூகம்பம் தான் வரணும்..இதுவரை அந்த மாதிரி அரகோணத்திலே ஆனதில்லை…நீங்க இப்படி ஆர்டர் மேலே ஆர்டர் போட்டிட்டு இருந்தா பொறுத்தது போதும்னு பூமியே பொங்கிடும்..இங்கே இருக்குது சித்தூர்..ஓடி வந்தா கூட ஒரு நாள்லே வந்திடலாம்..போதும் ம்மா..விடுங்கம்மா அவளை..கிளம்புங்க” என்று அதட்ட,
“உங்கப்பா இன்னும் வரலை டா.’ என்று அவர் அசைய மறுக்க, வர்ஷினியின் அழுகை சத்தம் கேட்க,’என்ன செய்திட்டு இருக்கீங்கண்ணு அக்கா கத்தப் போறா…அப்பா வந்திடுவார்…நாம போகலாம்..வாங்க.’ என்று அவரை வலுக்கட்டாயமாக வண்டிக்கு அழைத்துச் சென்றான் உத்தம்.
அப்போது,”மணி” என்று இந்திரா அழைக்க, “வரேன் க்கா” என்று வண்டியை நோக்கிச் சென்றாள் மணி.
மாடியிலிருந்து இறங்கி வந்த சிவமூர்த்தி, வரவேற்பறை காலியாக இருந்ததைப் பார்த்து, அவருக்கு கிடைத்த அந்த அரிய வாய்ப்பை கைவிட மனமில்லாமல் வேகமாக மீனாம்மா இருந்த அறையை நோக்கிச் சென்றார். இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து ஒருமுறை கூட அங்கே போனதில்லை. மாடியோடு என்று ஆன பின் சாப்பிட மட்டும் கீழ் தளத்திற்கு வந்து போவதால் அந்த நேரத்தில் அந்த அறையின் பக்கம் பார்வையைக் கூட திருப்ப முடிந்ததில்லை. இன்று ஏனோ மனது கேட்கவில்லை. மீனாம்மாவின் அறைக்குச் சென்றவர் உள்ளே போகாமல் அதன் வாயிலில் நின்று கொண்டார். ஆழ்ந்த உறக்கத்தில் மீனாம்மா இருக்க, அவனது படுக்கையில் படுத்தபடி ஆழ்ந்த யோசனையில் இருந்தான் அர்ஜுன்.
வாயிலில் திடீரென்று தோன்றிய சிவமூர்த்தியைப் பார்த்து, குழப்பத்தில் சுவரோடு ஒன்றிக் கொண்டான். சிவமூர்த்தியின் பார்வை மீனாவின் படுக்கையை விட்டு அகலவேயில்லை. போர்வைக்கு அடியில் உடலைக் குறுக்கி சுவரின் புறம் திரும்பிப் படுத்திருந்த உருவத்தைப் பார்த்து அவரது கண்கள் கலங்கிப் போயின. அவரது முகத்தில் அவனது பார்வையை பதித்திருந்த அர்ஜுனுக்கு அவரது வேதனை புரிந்தது போல், எனவே,”பாட்டிக்கு உடம்பு சரியில்லை..தூங்கறாங்க.” என்று மீனாம்மாவைப் பற்றி அவருக்குத் தகவல் கொடுத்தான்.
‘இன்னும் சரியாகலையா?’ என்று கவலையோடு அவர் மீனாம்மாவைப் பார்த்திருக்க,”அக்கா மருந்து கொடுத்திருக்கா.” என்று ஆறுதல் சொன்ன சிறுவனின் வார்த்தைகள் அவரது கண்களில் கண்ணீரை வரவழைக்க, அதை மறைத்தபடி,”பாட்டியை ஜாக்கிரதையா பார்த்துக்க.” என்று சொல்லி விட்டு வேகமாக அங்கேயிருந்து வெளியேறி விட்டார் சிவமூர்த்தி.
இந்திராவின் மகள்கள் இருவரும் அழுது கொண்டிருக்க, அவர்களை இந்திராவும் மணியும் சமாதானம் செய்ய, அவர்களை மிரட்டி அழுகையை அடக்க காவேரி முயற்சி செய்ய, சிறிது தூரத்தில் இந்திராவின் கைப்பேசியில் அவளுடைய கணவரோடு,’நீங்க மதியம் வந்திடுங்க மாமா..நாங்க இப்போ கிளம்பிட்டே இருக்கோம்.’ என்று உரத்தக் குரலில் உத்தம் பேசிக் கொண்டிருக்க என்று வாயிலில் நடந்து கொண்டிருந்த களேபரத்தில் மீனாம்மாவைப் பார்க்க சிவமூர்த்தி சென்றது வீட்டினர்க்கும் மணிக்கும் தெரியவில்லை.
வண்டி புறப்பட்டு சென்றதும் கேட்டை சாத்திக் கொண்டு வீட்டிற்குள் வந்தவள் வாயில் கதவை மூடி தாழ் போட்டாள். அந்தப் பெரிய வீட்டில் அவர்கள் மூவரைத் தவிர வேறு யாருமில்லை. இதுபோல் ஒரு நாள் வரக்கூடுமென்று கற்பனையில் கூட நினைத்துப் பார்த்ததில்லை மணி. மீனாம்மாவும் அவளும் தனியாக இருந்த நாள்கள் உண்டு. மீனாம்மா மட்டும் இருந்த நாள்களும் உண்டு. எல்லாம் பகல் வேளைகளில் தான். இரவு நேரங்களில் அவர்களைத் தனியாக இருக்க விட்டதில்லை சிவமூர்த்தி மாமா. துணைக்கு நரஸிம்மன் அங்கிள் மூலம் யாரையாவது ஏற்பாடு செய்து விடுவார். அப்போதெல்லாம் சொல்லாத அறிவுரைகளை அதாவது அவள் சிறு பெண்ணாக இருந்த போது அவர் இஷ்டப்படி வெளியூருக்கு சென்று வந்த மாமி இப்போது இந்த இரண்டு நாள்களுக்கு ஏகப்பட்ட ஆலோசனைகளை அள்ளிக் கொட்டியது அவளுள் ஏனென்ற கேள்வியை எழுப்பியது. அவளையும் அர்ஜுனையும் கவனமாகப் பார்த்துக் கொள்ளும் மீனாம்மா இப்போது உடல் நலமில்லாமல் இருப்பது தான் காரணமாக இருக்கக் கூடுமென்று நினைத்துக் கொண்டாள் மணி. ஒரு வகையில் அது உண்மை தான். மீனாம்மாவின் உடல் நிலையை மனத்தில் வைத்துக் கொண்டு தான் நேற்றிரவு அவருடைய மகன் அளித்த ஆலோசனைக்கு அவரது பரிபூரண ஆதரவை அளித்திருந்தார் சிவமூர்த்தி.
காவேரிக்கு அந்த யோசனை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. “அவளை பெங்களூர்லேர்ந்து அழைச்சிட்டு வரச் சொன்னது இதுக்காக தான்..அவளை நம்ம கூட அழைச்சிட்டுப் போகலைன்னா அகிலாவுக்கு கோபம் வந்திடும்.”என்றார்.
அதற்கு,”சரி..நான் வீட்லே இருந்துக்கறேன்..மணியை அழைச்சிட்டு நீங்க எல்லோரும் நிச்சயத்துக்கு போங்க.” என்று சைலெண்ட்டாக பெரிய குண்டைப் போட்டார் சிவமூர்த்தி.
‘என்ன ஆகிடுச்சு இவருக்கு..இப்படி யோசனையில்லாம பேசறார்’ என்று மனத்தில் கணவனின் வார்த்தைகளை ஆராய்ந்தவர், விடை கிடைக்காமல்,”நீங்க வரலைன்னா நல்லா இருக்குமா? அகிலா வீட்லே என்ன நினைப்பாங்க?’ என்று கோபப்பட,
“அதான் உத்தம் இருக்கானில்லே..இனி என் இடத்திலேர்ந்து அவன் தான் எல்லாத்தையும் செய்யணும்.” என்று சிவமூர்த்தி சொல்ல,
“உளறாதீங்க..நீங்களும் அவனும் எப்படி ஒண்ணாக முடியும்..நீங்க இருக்கறவரை நீங்க தான் வந்தாகணும்..மணியை அழைச்சிட்டுப் போகலை..இங்கேயே இருக்கட்டும்..அகிலா கேட்டா நான் சமாளிச்சுக்கறேன்..நீங்க வரணும்..நாம எல்லோரும் குடும்பமா போகறோம்.”என்றவுடன்,
“குடும்பமாவா?” என்று முணுமுணுத்தவர், மனைவியைக் கேள்வியாய் நோக்க,
அந்தப் பார்வை அவரது மனத்தில் ஏற்படுத்திய பிரளயம் வெளியில் தெரியாமல்,”ஆமாம்..இந்திரா, பேத்திங்க, உத்தம் அதைத் தான் நம்ம குடும்பம்னு சொன்னேன்.” என்றார்.
கணவரின் இந்தப் பேச்சு காவேரியினுள் கலவரத்தை ஏற்படுத்தியிருந்தது. மகன் பெங்களூருக்கு குடிபெயர்ந்தது ஒருவிதத்தில் நல்லது என்றாலும் பலவிதத்தில் அது பிரச்சனையை ஏற்படுத்தப் போகிறதென்று அவருக்கு புரிந்து போனது. அவரது முடிவுகளை, ஆலோசனைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அவனது முடிவுகளை அவர் மீது திணிக்கும் மகனைக் கையாள கணவரின் உதவி கட்டாயம் தேவை என்பதால் அவருடைய இடத்தில் உத்தம் தான் இனி அனைத்தையும் கவனிக்க வேண்டுமென்று கணவர் சொன்னதை காவேரியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவருடைய எண்ணப்படி, விருப்பப்படி அனைத்திலும்அவருக்கு விட்டுக் கொடுக்கும் கணவரின் இடத்தில் மகனை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
எனவே,’இவனைப் பற்றி உங்களுக்குத் தெரியுமில்லே..எடுத்தேன் கவிழ்த்தேன்னு நடந்துக்குவான்..தாட்பூட்டுன்னு பேசுவான்..நாசுக்கா செய்யத் தெரியாது.” என்றார்.
“நியாயமா செய்வான்.” என்று காவேரிக்கு பதில் அளிக்க,”தாங்க்யு ப்பா.” என்று அவரை அணைத்து அவனது நன்றியை தெரிவிட்டு உறங்க சென்று விட்டான் உத்தம். சிவமூர்த்தியும் அதற்கு மேல் அந்த உரையாடலைத் தொடரவில்லை. நாளை ஏதாவது வழி கிடைக்கும் அப்போது பார்த்துக் கொள்ளலாமென்று முடிவு செய்தார்.
மணி அவளது அறைக்கு மணி சென்ற போது கட்டிலின் மீதமர்ந்து ஒரு புத்தகத்தில் எதையோ எழுதிக் கொண்டிருந்தான் அர்ஜுன். சுவரைப் பார்த்தபடி படுத்திருந்தார் மீனாம்மா. மணியின் வருகையை உணர்ந்த அர்ஜுன், அவள் அறைக்குள் நுழையும் முன், வேகமாக எழுந்து வந்தவன், அவளிடம், சன்னக்குரலில்,”அக்கா, பசிக்குது.” என்றான்.
‘டிஃபனெல்லாம் அக்கா வீட்லே பார்த்துக்கலாம் இல்லை வழிலே பார்த்துக்கலாம்.’ என்று காப்பி, பால், ஹார்லிக்ஸோட காலை சமையல் வேலைக்கு விடுமுறை அளித்து விட்டான் உத்தம். இனிமேல் தான் டிஃபன் செய்ய வேண்டும் என்பதால்,”நம்ம அலமாரிலே பிஸ்கெட் பேக்கெட் இருக்குது..அதைப் பிரிச்சு சாப்பிடு..கொஞ்ச நேரத்திலே தக்காளி ஆம்லெட் செய்யறேன்.” என்று சொன்னவள் அப்படியே அவனோடு அறைக்குள் சென்றாள்.
அலமாரியைத் திறந்து பிஸ்கெட் பேக்கெட்டை அவனிடம் கொடுத்தவள் மீனாம்மா அருகே சென்று போர்வையை விலக்கி காய்ச்சல் இருக்கிறதா என்று அவரது நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். சாதாரணமாக தான் இருந்தது.பிஸ்கெட் பேக்கெட்டைப் பிரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அர்ஜுனுக்கு சற்றுமுன் மீனாட்சியைப் பார்க்க சிவமூர்த்தி வந்தது மறந்து போய் விட்டது. ஒருவேளை அந்த சின்ன நிகழ்வைப் பற்றி சிறுவன் சொல்லியிருந்தால் சரியான தருணத்தில் அவள் அதை உத்தமிடம் சொல்லியிருப்பாள் உத்தம்மின் மனம் உடைந்து போவதை தவிர்த்திருப்பாள்.
அவளது தொடுகையில் கண் விழித்த மீனாம்மாவிடம்,”எங்களுக்கு டிஃபன் செய்யப் போறேன்..உங்களுக்கும் சேர்த்து செய்யட்டும்மா?” என்று கேட்டாள்.
வறண்டு போயிருந்த தொண்டையைச் சரி செய்து கொண்டவர்,”டிஃபன் வேணாம்….சூடா ஏதாவது குடிச்சா நல்லா இருக்கும்னு தோணுது.” என்றார்.
“ஹார்லிக்ஸ் கலந்து கொடுக்கறேன்.” என்று அவரிடம் சொன்னவள்,”பாட்டிக்கு கொஞ்சம் பிஸ்கெட் பாக்கி வை டா.” என்று அர்ஜுனிடம் சொன்னாள்.
உடனேயே அவன் சாப்பிட்டு கொண்டிருந்த பேக்கெட்டை அப்படியே கொண்டு வந்து மீனாம்மாவிடம் கொடுத்தான் அர்ஜுன்.
“வேணாம்..நீ சாப்பிடு” என்று அவர் அதை அவனிடம் திருப்பிக் கொடுக்க,”பாட்டி, எனக்குப் போதும்..அக்கா இப்போ டொமேட்டோ ஆம்லெட் செய்து கொடுப்பாங்க..எனக்கு அவசரமா பாத்ரூம் வருது…இதை நீங்களே வைச்சுக்கோங்க.” என்று அவருடைய கையில் அந்தப் பேக்கெட்டை திணித்தவனை,”ஓடு டா” என்று விரட்டினாள் மணி.
அவன் ஓடிப் போவதைப் பார்த்து புன்னகைத்தனர் பெண்கள் இருவரும்.
பாத் ரூம் கதவை வேகமாக அடைத்த ஒலி வீட்டில் எதிரோலிக்க, அப்போது தான் வீட்டின் அமைதியை உணர்ந்த மீனா,”கிளம்பிட்டாங்களா எல்லோரும்?” என்று விசாரித்தார்.
“ம்ம்.” என்றாள் மணி.
“நீ போகலையா?” என்று கேட்க,
“வேணாம்னு மாமி சொல்லிட்டாங்க.” என்றாள்.
அவர் காதில் விழுந்ததை நம்பமுடியாமல், ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள,”நிஜமாவா மணி?” என்று மீனாட்சி கேட்க,
“என்னாலேயும் நம்பமுடியலை..எதுக்கும் சமையல் வேலையை சீக்கிரமா முடிச்சிட்டு தயாரா இருக்கப் போறேன்..என்னை அழைச்சிட்டுப் போக லோகுவை அனுப்பி வைக்க வாய்ப்பிருக்கு.” என்று சொன்ன மணிக்குத் தெரியவில்லை அவளது கணிப்பு மிகச் சரியென்று.
சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அர்ஜுனையும் தயார் செய்து விட்டு அவளது கைப்பேசியை நொடிக்கு ஒரு தரம் பார்த்துக் கொண்டிருந்தாள் மணி. அதே நேரம் சித்தூரில், மணியை ஏன் அழைத்து வரவில்லை என்று ஆர்ப்பாட்டம் செய்த அகிலா,”இப்போவே லோகுவை அனுப்பி வைச்சா தான் மதியத்துக்குள்ளே அவ வந்து சேரமுடியும்..மணிக்கு ஃபோன் போட்டு தயாரா இருக்க சொல்றேன்.” என்று அவளது கைப்பேசியை கையில் எடுக்க,”முதல்லே லோகுக்கு ஃபோன் போடு க்கா..நாங்க திரும்ப வீட்டுக்குப் போயிட்டு அவனோட மனோவை அனுப்பி வைக்கறேன்..அவ தான் முக்கிய விருந்தாளி போல.” என்றான் உத்தம்.