உடனே,”டேய் உத்தம், ஒரு டாக்ஸி புக் செய்து கொடு டா..யாருக்கு எப்படிக் கல்யாணம் நடந்தா எனக்கு என்ன..நான் என் வீட்டுக்கே போறேன்.” என்று சோஃபாவிலிருந்து எழுந்து கொண்டாள் இந்திரா.
வேகமாக எழுந்து வந்து அவளது தோளைப் பிடித்து அவளை மீண்டும் சோஃபாவில் அமர்த்திய உத்தம்,”நிச்சயத்திலே நீ கலந்துக்காம இருந்தா நல்லாவா இருக்கும்..இன்னைக்கே நீ திரும்பிப் போனா மாமா வீட்லே என்ன நினைப்பாங்க?” என்று அவளுக்கு புத்தி சொல்ல முயன்றான்.
“அகிலா அக்காக்கு நான் வந்தாலும் ஒண்ணு தான் வரலைன்னாலும் ஒண்ணு தான்..நேர்லே வந்தா என்னை ஃபங்ஷனுக்கு அழைச்சிட்டுப் போச்சு? எல்லாம் ஃபோன்லே தான்.” என்றாள் இந்திரா.
அப்போது மீண்டும் இந்திராவின் கைப்பேசி ஒலிக்க, அதை எடுத்துக் கொண்டு கணவனோடு தனிமையில் பேச படுக்கையறைக்குச் சென்று விட்டாள் இந்திரா.
“இவளுக்கு எதுக்குங்க இவ்வளவு வாய்? அகிலா காதுக்கு போச்சு சும்மா இருக்க மாட்டா அவ.” என்றார் காவேரி.
அதற்கு பதில் அளிக்காமல் ஆண்கள் இருவரும் அமைதியாக இருக்க,”பாட்டி அம்மாக்கு பெரிய வாயா? என்று கேட்டாள் காவேரியின் மடியில் அமர்ந்திருந்த ப்ரியங்கா.
உடனே மனைவியை நோக்கி கண்டனப் பார்வை வீசிய சிவமூர்த்தி,”உன்னோட பாட்டிக்கு தான் பெரிய வாய் கண்ணு.” என்று சொல்ல,
உடனே காவேரியின் மடியில் அமர்ந்திருந்தவள் எழுந்து நின்று கொண்டு, காவேரியின் வாயை இழுத்து அதைப் பெரிதாக்கப் பார்க்க,”விடு டீ..விடு டீ” என்று காவேரி கத்த, உத்தமும் சிவமூர்த்தியும் புன்சிரிப்புடன் அதை வேடிக்கை பார்க்க,
அப்போது பால் தம்பளருடன் வரவேற்பறைக்கு வந்த மணி,”ப்ரியா..பாட்டிக்கு வலிக்குமில்லே..கையை எடுங்க.” என்று அதட்ட, டக்கென்று பாட்டியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவரது கண்ணத்தில் முத்தமிட்டு,”ஸாரி” என்று மன்னிப்பு கேட்டாள் ப்ரியா.
“பரவாயில்லை டா தங்கம்.” என்று பேத்தியின் கண்ணத்தில் முத்தமிட்டார் காவேரி.
”சின்னவளை என்கிட்டே கொடு மணி..நான் பால் கொடுக்கறேன்..இவளை அழைச்சிட்டுப் போய் சாப்பிட ஏதாவது கொடு.” என்று ப்ரியங்காவை மணியிடம் ஒப்படைத்தார் காவேரி. இந்தமுறை ப்ரியாவைத் தூக்கிக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள் மணி.
அவனின் பக்கம் பார்வையைத் திருப்பாமல், அவன் இருப்பைப் புறக்கணித்து சென்றவளின் மீது யோசனையாகப் படிந்தது உத்தமின் பார்வை. ஏற்கனவே மீனாம்மா உடல் நலமில்லாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க அவருடைய வேலையையும் சேர்த்து இவள் செய்ய வேண்டுமென்பதால்,”அம்மா, ராத்திரி சாப்பாடு வெளியே சொல்லிடலாமா?” என்று காவேரியிடம் கேட்டான் உத்தம்.
சின்னவளுக்குப் பால் புகட்டியபடி,“வெளியே எதுக்கு டா?..நீயும் இந்திராவும் தான் எக்ஸ்ட் ரா..இரண்டு பேருக்கு சமைக்கறது ஒரு கஷ்டமா?” என்று கேட்டார் காவேரி.
“மீனாம்மாக்கு உடம்பு சரியில்லை ம்மா..அதான்.” என்ற உத்தமின் பேச்சை இடைமறித்து,”எல்லாம் மணி பார்த்துக்குவா.” என்றவர்,”மணி, மணி” என்று அழைக்க, பரியங்காவை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு அவளுக்கு உணவு ஊட்டியபடி வந்த மணியிடம்,”ராத்திரிக்கு ரெடி செய்திட்டேயா?” என்று விசாரித்தார்.
“மதியமே ஏற்பாடு செய்து வைச்சிட்டேன்..இவ சாப்பிட்டதுமே அந்த வேலை தான்.” என்றாள்.
அப்போது கூட ‘இந்திராகிட்டே இவளைக் கொடு..அவ ஊட்டி விடட்டும்’ என்றோ இல்லை ‘நான் ஊட்டி விடறேன்..நீ போய் சமையல் வேலையைப் பார்’ என்றோ சொல்லவில்லை.
“மீனாக்கு என்ன ஆச்சு? இரண்டு நாள் செய்தது முடியாமப் போயிடுச்சா?” என்று அடுத்து கேள்விக்கு தாவி விட்டார்.
‘அவருக்கும் தானே வயசாகிட்டு இருக்கு..முன்னே போல எல்லா வேலையையும் இழுத்திட்டு போட்டு செய்திட்டு இருக்க முடியுமா?’ என்று கேட்க துடித்த நாவை அடக்கிக் கொண்டு,“ம்ம்..இஸ்திரிக்காரன் பொண்டாட்டியைக் கூப்பிட்டிருக்கேன்..அவங்களோட வீட்டு வேலையை முடிச்சிட்டு தான் நம்ம வீட்டுக்கு வர முடியும்னு சொன்னாங்க..எத்தனை லேட்டானாலும் வந்திடுங்கண்ணு அவங்ககிட்டே சொல்லிட்டேன்.” என்றாள்.
“அப்போ கேட்டைப் பூட்டாத..வெளியே பாத்திரத்தை போட்டு வைச்சிடு..பின்பக்கமாப் போய் தேய்ச்சு கழுவி வைச்சிட்டு அவ போகட்டும்.” என்றார் காவேரி.
அதற்கு பின் அத்தனை பாத்திரத்தையும் உள்ளே எடுத்து வைக்கும் வேலை அவள் தானே செய்தாக வேண்டும். அதைச் சொன்னால்,”கழுவிப் போட்டதை உள்ளே எடுத்து வைக்கறது ஒரு வேலையா? அதைக் கூட உன்னாலே செய்ய முடியாதா?” என்று அவள் மீது குற்றம் கண்டுபிடிப்பார் என்பதால் வெறும் தலையசைவில் ஆமோதித்தவள் நள்ளிரவு வரை நிற்க கூட நேரமில்லாமல் வேலை செய்து கொண்டிருந்தாள். அனைவர்க்கும் சேர்த்து சமைப்பது மணிக்குப் பெரிய விஷயமில்லை.ஆனால், மீனாம்மாவின் துணையில்லாமல் இரண்டு குழந்தைகளைச் சமாளித்துக் கொண்டு சமைப்பது தான் பெரிய விஷயமாக இருந்தது. அதனால் அர்ஜுனை சமைலறைக்கு அழைத்து வந்து விட்டாள்.
எப்படிச் சமாளிக்கிறாள் என்று பார்க்க உத்தம் சமையலறைக்கு வந்த போது அர்ஜுனும் பரியங்காவும் சமையலறையின் ஓரத்தில் நோட்புக்கில் கிறுக்கி விளையாடிக் கொண்டிருந்தனர். வர்ஷினியை இடுப்பில் தூக்கிக் கொண்டு சமைத்துக் கொண்டிருந்தாள் மணி.
“மனோ” என்று அழைத்தபடி அவளருகே அவன் செல்ல, அந்த அழைப்பில் திடுக்கிட்டு அவள் திரும்ப,”குட்டியை என்கிட்டே கொடு.” என்று மணியும் குழந்தையும் மறுக்கும் முன், அழ அழ வர்ஷினியைத் தூக்கிக் கொண்டு மாடிக்கு சென்று விட்டான் உத்தம்.
அவள் பெற்ற குழந்தைகளைப் பற்றி கவலைப்படாமல் கீழ் தளத்தில் இருந்த படுக்கையறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் இந்திரா. சிவமூர்த்தியும் காவேரியும் மாறி மாறி உறவினர்களை அழைத்து இல்லை அவர்களின் அழைப்பை ஏற்று நிச்சயம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். இடையே அகிலாவிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்தது. தம்பி, தங்கையைப் பற்றி பொதுவாக அம்மாவிடம் விசாரித்தவள் அதன் பிறகு அரைமணி நேரத்திற்கு மேல் சிவமூர்த்தியிடம் பேசிக் கொண்டிருந்தாள். லோகநாதனையும் வண்டியையும் திருப்பி அனுப்பி வைக்க வேண்டுமென்று சிவமூர்த்தி சொன்னது அவள் காதில் விழுந்தது போல் தெரியவில்லை.
ஆறு மணியானவுடன் இந்திரா உறங்கிக் கொண்டிருந்த படுக்கையறைக்கு சென்றார் காவேரி. குழந்தைகளைப் பற்றிய கவலை இல்லாமல் உறங்கிக் கொண்டிருந்த மகளைப் பார்த்து கோபம் வர, அதை வெளிப்படுத்தி ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதால் வாஷ்ரூமிற்கு சென்று முகத்தை அலம்பி கொண்டு வந்தார். அப்படியே அந்த அறையில் இருந்த கண்ணாடியைப் பார்த்து தலையை வாரி, பொட்டு வைத்துக் கொண்டு வெளியே சென்றவர்,”மணி” என்று உரக்க அழைத்தார்.
சமைலறையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தவள், அடுப்பை சின்னதாக்கி விட்டு, கையை அலம்பிக் கொண்டு வேக வேகமாக வரவேற்பறைக்கு வந்தாள். அங்கே கிழக்கு நோக்கி இருந்த சுவரில் பெரிய அலமாரி போல் தோற்றமளித்த கதவைத் திறந்து விளக்கைப் போட்டாள். நீள வாக்கில் இருந்த அந்த அறையின் இரு பக்கச் சுவர்களிலும் சாமி படங்கள் இருந்தன. அறையின் முடிவில் அழகிய வேலைப்பாடுடன் மரத்திலாலான பூஜை அலமாரி. அதன் நடுவே இருந்த வெள்ளி காமாட்சி விளக்கில் எண்ணெய் ஊற்றி அதன் திரியை இழுத்து விட்டு, ஊதுபத்தியை அதன் ஸ்டாண்டில் சொருகி என்று அனைத்து ஏற்பாட்டையும் செய்து விட்டு வெளியே வந்தவள், விளக்கை மட்டும் ஏற்றாமல், அதைச் செய்ய”மாமி, வாங்க.” என்று காவேரியை அழைத்தாள்.
“விளக்கு ஏத்தற நேரத்திலே தூங்கிட்டு இருக்கா.” என்று புலம்பியபடி உள்ளே வந்தவர் புடவை தலைப்பை இழுத்து சொருக்கிக் கொண்டு விளக்கை ஏற்றி திரு நீற், குங்குமத்தை இட்டுக் கொண்டார். அப்படியே கீழே விளையாடிக் கொண்டிருந்த பேத்திக்கும் மாடியில் உத்தமோடு இருந்த பேத்திக்கும் திரு நீற், குங்குமம் இட்டு விட்டார். இரவு உணவு நேரம் வரை உறக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த மகளை,”எழுந்திரு டீ..குழந்தைங்களைக் கூட பார்க்காம அப்படி என்ன தூக்கம் உனக்கு?” அதட்டி வலுக்கட்டாயமாக எழுப்பி விட்டார் காவேரி.
“என்னம்மா நீங்க? நாளைக்கு ஃபங்கஷ்ன் முடிஞ்சதும் நான் கிளம்பிடப் போறேன்..இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுக்க விட மாட்டேங்கறீங்க.” என்று இந்திரா வருத்தப்பட,காவேரியின் கோபம் கரைந்து போக,
“சாப்பாடு சாப்டிட்டு..குழந்தைங்களை அழைச்சிட்டுப் போய் மாடி ரூம்லே படு..அப்போ தான் காலைலே லேட்டா எழுந்திருக்க முடியும்.” என்று கனிவாக பதில் அளித்தார்.
அர்ஜுன், மீனாம்மா இருவருக்கும் இரவு உணவை அளித்து, இந்திரா அக்காவிற்கு மாடி படுக்கையறையைத் தயார் செய்து, வர்ஷினியை மடியில் போட்டு தட்டி, தாலாட்டு பாடி, உறங்க வைத்து, அவளது இரவு உணவை வாயில் அள்ளிப் போட்டு, பதினொரு மணி போல் கேட்டைப் பூட்டி, வாசல் கதவை அடைத்து, லைட்டை அமர்த்தி என்று அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு அவளது அறைக்கு மணி வந்த போது கிட்டதட்ட நள்ளிரவாகியிருந்தது. மீனாம்மாவோடு உறங்கிக் கொண்டிருந்த அர்ஜுனை தூக்கி வந்து அவளது கட்டிலில் போட்டாள் மணி. அவனுக்கு போத்தி விட்டவள் அப்படியே கட்டிலுக்கு கீழே இருந்த பாயை எடுத்து தரையில் விரித்துப் படுத்துக் கொண்டாள். தரையைத் தொட்டதும் தான் தேகத்தில் இருந்த வலியும் வேதனையும் வெளியே வந்தது. அதனோடு சேர்ந்து அடுத்த நாள் பற்றிய அச்சம் எழுந்தது.
சாதாரண நாள்களில் கூட உதவிக்காக அவளை அழைத்துக் கொள்ளும் அகிலா அக்கா திவ்யாவின் நிச்சயதார்தத்தை வீட்டில் நடத்த இருப்பதால் கண்டிப்பா இரண்டு நாள்களாவது அவளை உடன் வைத்துக் கொள்வார். நாளையிலிருந்து அவளது வாசம் அகிலா அக்கா வீட்டில் தான். அதற்காக தான் தன்னை பெங்களூரிலிருந்து வரவழைத்திருக்கிறார் மாமி என்று புரிந்து போக, உடல் நலமில்லாத மீனாம்மா எப்படித் தனியாக சமாளிக்கப் போகிறார் என்ற கவலையில் அவளை விட்டு விலகியது உறக்கம்.
அதே நேரம் மேல் மாடியில் அவனுடைய பெற்றோரின் அறையில் உறக்கத்தை விரட்டியபடி அமர்ந்திருந்த உத்தம்,”லோகுவும் மனோவும் எப்படி அகிலா அக்காக்கு ஒரே போல தெரியறாங்க?” என்று அழுத்தத்துடன் கேட்டான் உத்தம்.