அத்தியாயம் – 10

உத்தமின் தற்பெருமையில்,’எல்லோரும் கூப்பிடற பெயரை மறந்த இவங்க அமிக்டாலாவை அடிச்சுத் துவைக்கணும்.’ என்று கோபம் கொண்டவளின் முகம் அதை வெளிக் காட்டாமல் சாந்தமாக இருந்தது. அப்போது அவளது புடவை கொசுவத்தை வேகமாக இழுத்தாள் ப்ரியங்கா. உடனே, அவளைத் தூக்கிக் கொண்டு வேகமாக வீட்டிற்குள் ஓடினாள் மணி. கீழே இருந்த படுக்கையறை ஒன்றின் கதவைத் திறந்து அவள் உள்ளே சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்த உத்தமிடம்,”இந்த டா..மாமான்னு ஒருத்தன் இருக்கறது இவளுக்குத் தெரியவே தெரியாது.” என்று சின்ன மகளை அவனிடம் கொடுக்க முயல, காரிலிருந்து இறங்கிய போது தூக்கக் கலக்கத்தில் இருந்த குழந்தை இப்போது தெளிவாக இருக்க, உத்தமிடம் போக மறுத்து அழ ஆரம்பித்தது. 

அப்போது அறையிலிருந்து வெளியே வந்த மணியைப் பார்த்து,”மணி, மணி” என்று வேண்டுமென்றே இருமுறை அழுத்தமாக அழைத்து,”சின்னவ அழறா..அவளுக்கு பால் கலந்திட்டு வா.” என்று ஆர்டர் போட்டாள் இந்திரா.

அதைக் காதில் வாங்கிக் கொண்டதற்கு அடையாளமாக தலையசைத்தவள், “அக்கா, ப்ரியாவோடதெல்லாம் எதிலே இருக்கு?” என்று கேட்டாள் 

“ஈரமாக்கிட்டாளா? பத்து செட் கொண்டு வந்தாலும் பத்தாது அவளுக்கு..அவரை சிகப்பு பைலே தான் வைக்கச் சொன்னேன்.” என்றாள் இந்திரா.

இரண்டு குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதே இந்திராவிற்கு பெரிய வேலை என்பதால் முகம் சுளிக்காமல் அனைத்திலும் அவளுக்கு உதவி செய்வது அவளுடைய கணவர் கஜபதி தான். வீட்டு வேலை, வெளி வேலை என்று கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு வேலை செய்பவர்  மணியின் தலை தென்பட்டு விட்டால் காலாட்டியபடி டி வி பார்க்க ஆரம்பித்து விடுவார்.

ப்ரியங்காவின் பொருள்களோடு சின்னவளின் துணிகளும் இருந்ததால் அத்தனையையும் வெளியே கொட்டினால் தான் அவள் தேடுவது கைக்கு கிடைக்கும் என்பதால் அந்தச் சிகப்பு பையை தூக்கிக் கொண்டு அறையினுள்  சென்று விட்டாள் மணி. 

அழுது கொண்டிருந்த வர்ஷினியோடு காவேரி அருகே அமர்ந்தவள், உத்தமைப் பார்த்தபடி,’சின்னவன் நம்ம எல்லோரையும் விட பெரியவனாகிட்டான் போல ம்மா…இந்த மாதிரி விசித்திரமெல்லாம் உங்க வீட்லே தான் நடக்கும்னு என் வீட்டுக்காரர் சொல்றார்.” என்று காவேரியிடம் சொன்னவள், “நீ பெங்களூர் வந்து எத்தனை நாளாகிடுச்சு இந்த அக்கா உன் கண்ணுக்குத் தெரியவேயில்லையில்லே.” என்று  உத்தமிடம் நேரடியாக கேட்டாள். 

“பெங்களூர்லேர்யிருந்து பார்த்தா இங்கே இருக்கற யாரும் கண்ணுக்குத் தெரிய மாட்டாங்க க்கா..ஆனா உனக்கு கார் கதவைத் திறந்து விட்ட என்னைக் கூட உன் கண்ணுக்கு தெரியலையே.” என்று அவனுடைய அக்காவிற்கு நக்கலாகப் பதிலளித்தான் உத்தம்.

உடனே, சின்ன குழந்தை போல்,”அம்மா, எப்படிப் பேசறான் பாருங்க ம்மா..பாத்ரூமை அடக்கி வைச்சிட்டு இருக்கற பிள்ளையைப் பார்ப்பேனா இல்லை இவனைக் குசலம் விசாரிப்பேனா?” என்று அப்படியே கதையைத் திருப்பிப் போட்டு காவேரியிடம் முறையிட்டாள் இந்திரா.

அப்போது படுக்கையறையிலிருந்து இந்திராவின் மூத்த பெண் ப்ரியங்காவுடன் வெளியே வந்தாள் மணி. வேறு உடைக்கு மாறியிருந்த ப்ரியங்கா சோஃபா அருகே வந்தவுடன்,“அம்மா” என்று சிணுங்கிக் கொண்டே இந்திராவின் மடியில் அமரச் சென்றாள். அப்படியே கையை நீட்டி அவளை விலக்கி,” இவ அழுதிட்டு இருக்கறது உனக்குத் தெரியலையா? போ டீ..போய் பாட்டி மடிலே உட்கார்.” என்று பெரிய மகளை காவேரியிடம் அனுப்பி வைத்தாள் இந்திரா.

“நீ வாடி கண்ணு.” என்று பேத்தியை அன்பொழுக அழைத்து அவருடைய மடியில் காவேரி அமர வைத்துக் கொண்ட போது வாயிலிருந்து காரின் ஹார்ன் ஒலி கேட்க,”மணி, டாக்ஸிக்கு பணம் கொடுத்திட்டு வா.” என்று கட்டளையிட்டார்.

இது எப்போதும் நடப்பது தான் என்பதால், வரவேற்பறை அலமாரியைத் திறந்து மேல் அடுக்கில் இருந்த பர்ஸை எடுத்துக் கொண்டு வாயிலுக்குச் சென்றாள் மணி.

வர்ஷினி அழ அழ,”அம்மா, இவளைப் பார்த்துக்கோங்க..வாஷ்ரூம் போயிட்டு வரேன்” என்று அவளை காவேரி அருகில் உட்கார வைத்து விட்டு படுக்கையறைக்குள் சென்றாள் இந்திரா. அவளுடைய அம்மா சென்ற திசையை நோக்கி கை நீட்டியபடி உரத்த குரலில் அழுதாள் இளையவள்.

அதைப் பார்க்க முடியாமல்,“மாமாகிட்டே வா டா குட்டி” என்று குழந்தையை நோக்கி கை நீட்டினான் உத்தம். அவனை அடையாளம் தெரியாததால் இன்னும் பெரிய குரலில் அழ ஆரம்பித்தாள் குட்டி.

உடனே, மாடியிலிருந்து சிவமூர்த்தியும் வாசல்படியிலிருந்து அர்ஜுனும் எட்டிப் பார்த்தனர். டாக்ஸியை அனுப்பி விட்டு வீட்டினுள் நுழைந்த மணியைப் பார்த்ததும் தூக்கிக் கொள் என்று இரண்டு கைகளையும் உயர்த்தி அழுகையைத் தொடர்ந்தாள் வர்ஷினி. அவள் பின்னாலிருந்து வீட்டினுள்ளே எட்டிப் பார்த்தபடி நின்றிருந்த அர்ஜுனிடம்,”நீ உள்ளே போ டா..இன்னைக்கு விளையாட்டு முடிஞ்சிடுச்சு.” என்று தம்பியை வீட்டினுள்ளே அனுப்பி வைத்தாள். அக்காவின் கட்டளையை ஏற்றுக் கொண்டாலும் உத்தமைப் பார்த்தபடி தயக்கத்தோடு தான் உள்ளே சென்றான் அர்ஜுன். 

அவனை அர்ஜுன் கடந்து சென்ற போது,“நாளைக்கு கண்டின்யு செய்யலாம் டா.” என்று அர்ஜுனிடம் உத்தம் சொல்ல, ‘சரி’ என்று சந்தோஷமாக தலையசைத்து விட்டு அவனுடைய அறைக்குச் சென்று விட்டான் அர்ஜுன்.

பர்சை அலமாரியில் வைத்து விட்டு வேகமாக வந்த மணி,”குட்டிக்குப் பசிக்குதா? முதல்லே அழுகையை நிறுத்துங்க செல்லம்..பால் கலந்திட்டு வரேன்” என்று குழந்தையைத் தூக்கி தோளில் போட்டு தட்டிக் கொடுத்தபடி சமாதானம் செய்ய ஆரம்பித்தாள்.

அப்போது சோஃபா மீதிருந்த இந்திராவின் கைப்பையிலிருந்த கைப்பேசி ஓசை எழுப்பியது.

அந்த அழைப்பு இந்திராவின் கணவனிடமிருந்து தான் என்று சரியாக கணித்த காவேரி,“இரண்டு சின்ன பிள்ளைங்களோட தனியா அவளை அனுப்பி விட்டிட்டு நமக்கும் தகவல் சொல்லாம வந்து சேர்ந்த பிறகு ஃபோன் போட்டு விசாரிக்கறதிலே ஒண்ணும் குறைச்சல் இல்லை.” என்றார்.

அதற்குள் மெதுவாக படிகளில் இறங்கி வந்திருந்த சிவமூர்த்தி,”நேத்திக்கு நிச்சயம்னு செய்தி சொல்லி, கண்டிப்பா வந்திடுன்னு அழைப்பு கொடுத்தா அவராலே எப்படி கொண்டு வந்து விட முடியும்..இவளையாவது விழாவுக்கு அனுப்பி அக்கா, தங்கை உறவு விட்டுப் போகாம பார்த்துக்கிட்டாரேன்னு சந்தோஷப்படு.” என்று மனைவிக்கு பதிலளித்தபடி எதிரேயிருந்த சோபாவில் அமர்ந்தார். அவரருகே அமர்ந்து கொண்ட உத்தமின் பார்வை மணியை விட்டு அகலவில்லை.

சிணுங்கிக் கொண்டிருந்த சின்னவளைச் சமாதானம் செய்தபடி கூடத்தில் நடந்து கொண்டிருந்த மணியின் மனத்தில் இருந்த உறுத்திக் கொண்டிருந்த கேள்வி வெளியேற, அந்த இடத்தை திவ்யாக்கு கல்யாணமா? என்று கேள்வி ஆக்கிரமித்துக் கொண்டது. உத்தமின் பார்வை அவளைத் தடுமாற வைக்க, வர்ஷினையை தூக்கிக் கொண்டு பால் கலக்க சமையலறைக்குச் சென்றாள் மணி.

படுக்கையறையிலிருந்து வெளியே வந்த இந்திரா, காவேரியின் அருகே சோஃபாவில் அமர்ந்து, எரிச்சலோடு,“அக்கா அவளோட மகளுக்குக் கல்யாணம் நிச்சயம் செய்திட்டா..என் பெரிய மகளுக்கு அஞ்சு வயசு ஆகறத்துக்கு முன்னாடி நான் பாட்டியாகிடுவேன்.” என்றாள்.

அதற்கு எந்த எதிர்வினையும் காட்டாமல் சிவமூர்த்தி அமைதியாக இருக்க,”இந்து மறுபடியும் பழைய விஷயத்தை ஆரம்பிக்காதே..உனக்காக தான் சென்னைக்கு போனோம்..எத்தனை டாக்டர், எத்தனை சிகிச்சை..கடைசிலே மழை பொழியறது, மடி நிறையறதெல்லாம் மகேசன் கைலே தான் இருக்குங்கறது உன் விஷயத்திலே உண்மையாகிடுச்சு.” என்றார் காவேரி.

“இப்போ தானே திவ்யாக்கு பத்தொன்பது முடிஞ்சது அதுக்குள்ளே கல்யாணத்துக்கு என்ன அவசரம்? மாப்பிள்ளை யார், என்னென்னு ஒரு தகவலும் சொல்லலை..திவ்யாவோட விருப்பத்தையாவது கேட்டாங்களா?” என்று சிடுசிடுத்தாள் இந்திரா.

“அவளோட சம்மதத்தோட தான் எல்லாம் நடக்குது.” என்று பதில் அளித்த காவேரியின் குரலிருந்து அவரது அபிப்பிராயம் என்னவென்று கேட்டுக் கொண்டிருந்த யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“அவ படிப்பு என்ன ஆகும்? இன்னும் ஒரு வருஷம் இருக்குதே.” என்று தோண்டி துருவ ஆரம்பித்தாள் இந்திரா.

“எல்லாம் அவங்க பேசி முடிவெடுத்திருப்பாங்க..அகிலா வீட்லேர்ந்து நாலு தெரு தள்ளி தான் இந்தப் பையன் வீடு.” என்றார் காவேரி.

“அப்போ இது காதல் கல்யாணம்..அப்படிச் சொல்லாம எதுக்கு ‘திடீர்னு வரன் வந்திச்சு..நல்ல இடம்..பெரிய இடம்னு’ அகிலா அக்கா கதை சொல்லுது ம்மா.” என்று கேட்டாள் இந்திரா.

அதுவரை பொறுமையாக மகளிற்குப் பதிலளித்தவர்,”வாயை மூடு..சும்மா நீயா எதையாவது பேசி பிரச்சனையை இழுத்து விடாத.” என்று அதட்டினார் காவேரி.