அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் பார்க்கிங்கில் கார் நின்றவுடன் பின் கதவைத் திறந்து வெளியே வந்தவன், அவனது கைப்பேசியில்,”விளையாடறீங்களா? அஞ்சு நிமிஷம் தான்..வரலை..நான் கிளம்பிடுவேன்.” என்று அடிக்குரலில் சீறிக் கொண்டிருந்தான்.
அந்தப் புறத்தில் இருந்தவர்,”வந்திடுவா டா..பத்து நிமிஷம் வெயிட் செய்ய முடியாதா உன்னாலே?” என்று கேட்க,
“முடியாது..இங்கே நான் வந்து இரண்டு மாசமாகிடுச்சு..ஒருமுறை கூட நம்ம வீட்டுக்கு வந்து போக அவகாசம் கிடைக்கலை..இன்னும் என்னோட வேலையை ஆரம்பிக்கலை.. நீங்க சொன்னவுடனே அப்படியே எல்லாத்தையும் போட்டிட்டு நான் கிளம்பியிருக்கேன்..நான் இங்கே வர்றத்துக்கு முன்னாடியே அவ வந்து காத்திட்டு இருக்கணுமில்லே?” என்று கோபப்பட,”சரி டா..சரி டா…இப்போவே அவளுக்கு ஃபோன் செய்யறேன் டா.” என்று மகனை சமாதானம் செய்து விட்டு, அந்த அழைப்பைத் துண்டித்து விட்டு அடுத்த நொடியே அவரது கைப்பேசியிலிருந்து வேறொரு இலக்கிற்கு அழைப்பு விடுத்தார் காவேரி.
உத்தம் நின்று கொண்டிருந்த பார்க்கிங்கின் எதிரே இருந்த கட்டிடத்தின் பத்தாவது மாடியில், கிழக்கு நோக்கி இருந்த ஃபிளாட்டின் சர்வீஸ் ஏரியாவில் இருந்தடிஷ்வாஷரின் மேலிருந்த சாம்சங் பட்டன் கைப்பேசி ஒலி எழுப்பியது. சர்வீஸ் பால்கனியின் தடுப்புக் கம்பிகளைப் பற்றியபடி, எதிர் கட்டிடத்தின்மேலே கூட்டமாக படபடத்துக் கொண்டிருந்த புறாக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் சிறுவன் ஒருவன்.
இந்த மூலை அந்த மூலை என்று சமையலறையின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் எதை, எதையோ வேகமாக எடுத்து வந்து, அடுப்பில் இருந்த கடாயில், கவனமாக, சரியான அளவில் அவைகளைச் சேர்த்து, மீண்டும் அதே இடத்தில் அந்தப் பண்டங்களைத் திருப்பிச் சேர்ப்பித்து என்று சடுகுடு ஆடிக் கொண்டிருந்தாள் இளம் பெண்ணொருத்தி. அவளது இடுப்பில் அமைதியாக கை சூப்பியபடி வாகாக அமர்ந்திருந்த குழந்தை சரியாக கைப்பேசி ஒலித்த போது வீறிட்டு அழ, மெலிதாக ஒலித்த கைப்பேசியின் அழைப்பு யுவதியின் காதுகளில் போய்ச் சேரவில்லை.
“லயா குட்டி எதுக்கு அழறா? அத்தை ஊருக்குப் போறேன்னா? விஷயம் உங்களுக்கு இராத்திரியே தெரிஞ்சிடுச்சா? அதான் தூங்காம முழிச்சிட்டு இருந்து உங்கப்பாவைப் பாடுபடுத்துனீங்களா? எனக்கு இன்னைக்கு காலைலே தானே தெரிய வந்திச்சு..அத்தை சென்னைக்குப் போறேன்..நீங்க சமத்தா இருக்கணும்..நிறைய சிரிக்கணும்..விளையாடணும்…” என்று குழந்தையைச் சமாதானம் செய்தபடி உப்புமாவை கிளறி முடித்தவள், அதை அப்படியே ஒரு கையால் ஒரு டப்பாவில் அடைத்துக் கொண்டாள். அதே நொடி, அந்த வீட்டின் மாஸ்டர் பெட்ரூமில் உறங்கி கொண்டிருந்த இருவரின் கைப்பேசிகளில் ஒன்று அலற, மனைவியை இறுக அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்த சாரதி, அடித்துப் பிடித்து எழுந்து கொண்டு, அவனது தாரம் எழும் முன் கைப்பேசியோடு வேக வேகமாக வெளியே வந்து,
“சொல்லுங்க மாமி.” என்று அந்த அழைப்பை ஏற்றான்.
அந்தப் புறம் சொன்னதைக் கேட்டு,”சொன்னேனே..தெரியும் அவளுக்கு..எனக்குத் தெரியலை..பார்க்கறேன்.” என்று அழைப்பைத் துண்டித்து விட்டு வேகமாகச் சமையலறைக்குச் சென்றவன்,”மணி, இன்னும் என்ன செய்திட்டு இருக்க? கிளம்பலையா நீ? கீழே ரொம்ப நேரமா டாக்ஸி வெயிட் பண்ணுது.” என்று அந்த இளம் பெண்ணைக் கோபிக்க, இடுப்பில் இருந்த பத்து மாதக் குழந்தையும் புறாக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பத்து வயது குழந்தையும் பயந்து போனார்கள்.
இரண்டு மணி நேரத்திற்கு முன் அவளை எழுப்பி, குட்டியை அவளிடம் ஒப்படைத்து விட்டு, அன்றைய சமையலையும் முடித்து விட்டு தான் புறப்பட வேண்டுமென்று கட்டளையிட்டவனே இப்போது தாமதமாகி விட்டதென்று கத்த, அவனைப் போலவே கத்தி, அவனுக்குத் தக்க பதில் கொடுக்கும் மனது மணியிடம் இல்லை. அப்படி ஒரு மனது அவளுக்கு இருந்திருந்தால் யாரும் அவளை வேலைக்காரியாக பார்க்க மாட்டார்கள், நடத்த மாட்டார்கள். ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு, ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு என்று அவரவர் தேவைகேற்ப அவளைப் பந்தாட மாட்டார்கள்.
“இதோ ண்ணா..மதியத்துக்கு லன்ச் பேக் செய்து வைச்சிட்டேன்..அடுப்புலே உப்புமா இருக்கு..மிக்ஸி ஜார்லே தேங்காய்ச் சட்னி இருக்கு..கிளம்பிட்டே இருக்கேன்.” என்று சொல்லி விட்டு, அப்படியே லயா குட்டியை அவள் அப்பாவின் கையில் கொடுத்து விட்டு, பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனை நோக்கி ‘வா’ என்று கையை நீட்ட, வேகமாக ஓடி வந்து அவளது கரத்தை அவன் பற்றிக் கொள்ள, அவனை இழுத்துக் கொண்டு அவளுக்கென்று ஒதுக்கபட்டிருந்த அறைக்கு, சமையலறைக்கு அடுத்திருந்த அறைக்குச் சென்றாள் மணி. அவள் பின்னே சென்ற சாரதி,
அந்தச் சூழ்நிலையிலும் அவனது தேவையில் கவனமாக இருந்தவன்,“மணி, நான் கேட்டதுக்குப் பதில் வரலை..அடுத்த வாரம் இங்கே அட்மிஷன் முடியுது.” என்றான்.
தங்கையிடம் பேசிய விஷயம் காவேரி மாமியின் காதிற்கு எட்டினால் அவன் அவ்வளவு தானென்று அவனுக்கும்தெரியும். ஆனாலும் மனைவியின் தொல்லையைத் தாங்க முடியாமல் தான் தங்கையிடம் நேரடியாக பேசியிருந்தான். ‘நீ மாமி மாமின்னு பயந்திட்டு இருக்கற அந்த மாமி என்ன உனக்கு சொந்த மாமியா? எல்லா ஏற்பாடும் செய்திட்டு அவங்களுக்குச் சொன்னாப் போதும்..அண்ணனும் தங்கையும் வாயை மூடிட்டு இருங்க..அவங்க ஏதாவது பிரச்சனை செய்தா நான் பார்த்துக்கறேன்.’ என்று கணவன் சாரதிக்கு ஊக்கம் கொடுத்திருந்தாள் பல்லவி.
இதுவரை அவளிடம் எந்த விஷயத்தையும் அவனின் திருமணம் உள்பட எதையும் கலந்தாலோசித்திராத அவளுடைய அண்ணன் இந்த விஷயத்தை பற்றி அவளிடம் பேசுவது ஏன் என்று தெரிந்திருந்ததால், அதை வெளிப்படையாக சொல்லாமல், “அர்ஜுனுக்கு கஷ்டம் அண்ணா..அவனாலே அட்ஜெஸ்ட் செய்துக்க முடியாது.” என்று மறுத்தாள்.
உடனே,”அவனுக்காக பார்க்கற..பாப்பா கஷ்டப்படறா மணி அது உனக்குத் தெரியலையா.” என்றான் சாரதி.
“நீ போடா..அக்கா வரேன்.” என்று அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையினுள்ளே அர்ஜுனை அனுப்பி வைத்து, கதவைச் சாத்தி விட்டு சாரதியை நோக்கித் திரும்பினாள் மணி.
அண்ணனின் தோளில் தலையைச் சாய்த்து உறங்கிக் கொண்டிருந்த லயாவைப் பார்த்து அவளது நெஞ்சம் நெகிழ்ந்தது. பிள்ளை இப்படி அல்லாடுவது அவளுக்கும் கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் இந்த விஷயத்தில் மட்டுமில்லை எந்த விஷயத்திலும் அவள் செய்யக் கூடியது எதுவுமேயில்லை. அவளது வாழ்க்கை அவளுடையது இல்லை. எனவே,
“மாமிகிட்டே பேசுங்க ண்ணா.” என்று இரண்டே வார்த்தைகளில் அவளது முடிவைத் தெரிவித்து விட்டு அறையினுள் சென்று விட்டாள்.
பத்து நிமிடங்கள் கழித்துஅடர் அரக்கு நிறத்தில் உடல் முழுவதும் தங்க நிறத்தில் கோடுகள் வேய்ந்திருந்த ஜார்ஜெட் புடவை, அதே டிசைன் ஜாக்கெட் அணிந்து தயாராகி வந்தாள் மணி. அவளது தோளில் ஒரு ஹோல்டால் பை. கையிலிருந்த சின்ன பையில் சமையலறையில் தயாராக இருந்த டிஃபன் டப்பா, சின்ன தண்ணீர் பாட்டிலைப் பேக் செய்து கொண்டாள். அர்ஜுனிடம்,”பாத்ரூம் போயிட்டே இல்லே?” என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு வரவேற்பறையை கடந்து வாசல் கதவை அடைந்த போது வீடே நிசப்தமாக இருந்தது.
அவளை விரட்டிய அண்ணன் அவனது படுக்கையறையில் தடைப்பட்ட உறக்கத்தை தொடர்ந்து கொண்டிருப்பான் என்பதால் அவனை அழைத்து விடைபெற்றுக் கொள்ளவில்லை. வாசல் கதவருகே இருந்த அலமாரியைத் திறந்து அர்ஜுனின் காலணியை எடுத்து வெளியே போட்டவள், ஸ்ட்ராப் பிய்ந்து போயிருந்த அவளது காலணியை வெளியே எடுத்து வேலைக்கு ஆகுமா என்று திருப்பி திருப்பி பார்த்தவள், அதை அப்படியே அலமாரியினுள் வைத்து விட்டு, ‘டாக்ஸி தானே, இங்கே ஏறினா அங்கே வீட்லே இறங்கப் போறோம்.’ என்று எண்ணி, புடவையைத் தழைத்துப் பாதங்களை மறைத்துக் கொண்டு, வாசல் கதவைத் திறந்து வெளியே வந்தவள், சத்தமில்லாம அதைச் சாத்தி விட்டு காலணி இல்லாமல் கிளம்பினாள் மணி.
கதவைச் சாத்திய பின் தான் டாக்ஸி நம்பர், டிரைவர் பெயர் என்று எந்த விவரத்தையும் அண்ணனிடம் கேட்டுக் கொள்ளாத அவளது முட்டாள்தனத்தை நொந்து கொண்டவள்,’கீழே போய் எத்தனை டாக்ஸி வெயிட் செய்திட்டு இருக்கோ அத்தனை பேர்கிட்டேயும் விசாரிக்க வேண்டியது தான்..இதுக்கு எதுக்கு அவனை எழுப்பணும்? அண்ணியோட அர்ச்சனையை கேட்டுக்கணும்..இன்னையோடு பெங்களூர் படலம் முடியுது..அடுத்து எந்தப் படலமோ?’ என்று எண்ணியபடி மின்தூக்கியின் பொத்தானை அழுத்தினாள்
இத்தனை நேரம் அமைதியாக நின்றிருந்த அர்ஜுனின் கண்கள் மின்தூக்கி பயணத்தை எண்ணி மின்னின. அக்காவின் கையை முந்திக் கொண்டு அது மேலே வர பொத்தானை அழுத்தி விட்டு, பக்கத்தில் இருந்த மற்றொரு மின்தூக்கியின் பொத்தனையும் அழுத்தி விட்டு மணியைப் பார்த்து சிரித்தான். இரண்டில் எது முதலாவதாக வரப் போகிறது என்று ஆவலுடன் பார்த்திருந்தான் அர்ஜுன். அவர்கள் எதிரே இருந்த மின் தூக்கி கீழ்தளத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்த மின் தூக்கி ஐந்தாவது தளத்திலிருந்து மேலே வந்து கொண்டிருந்தது.
“இது தான் முதல்ல வரும்.” என்று சொல்லி மணியின் கையைப் பற்றி அடுத்ததாக இருந்த மின்தூக்கியின் கதவருகே சென்றான் அர்ஜுன். ஆனால் அந்த மின்தூக்கி ஏழாவது தளத்திலிருந்து புறப்பட தாமதமாக, அர்ஜுனின் கையைப் பற்றி கீழே இருந்து வந்து கொண்டிருந்த மின் தூக்கியின் எதிரே நின்று கொண்டாள். அந்த மின்தூக்கி வேகமாக பயணம் செய்து அவர்கள் தளத்தை அடையப் போவதை உணர்ந்து,
“இது தான் டா முதல்ல வரும்.” என்று தம்பியிடம் சொன்னாள். போட்டியில் அவன் தோற்றுப் போனதால் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு மின் தூக்கியின் வருகைக்காக காத்திருந்தான் அர்ஜுன். அவனது சோகமான முகத்தைப் பார்த்தவள், ‘ஏற்கனவே நிறைய லேட்டாகிடுச்சு இரண்டு நிமிஷத்திலே ஒண்ணும் ஆகப் போகறதில்லை’ என்று நினைத்து,
“சரி..அதிலேயே போகலாம்.” என்று சொல்ல,
‘வேணாம்.’ என்று தலையசைத்து விட்டு அவளருகே அமைதியாக நின்று கொண்டான் அர்ஜுன்.
எட்டாவது தளத்தில் நின்று விட்டு அவர்கள் தளத்தை அடைந்ததும் மின்தூக்கியின் கதவு திறக்க, ஆவலோடு ஓர் அடி முன்னே வைத்த அர்ஜுன் அதனுள்ளே இருந்த நபரைப் பார்த்து, மூன்று அடிகள் பின்னே வைத்து மணியின் பின்னால் மறைந்து கொண்டான். அர்ஜுனைப் போலவே எங்கேயாவது ஒளிந்து கொள்ள மணிக்குமே ஆசையாக இருந்தாலும், அவள் சரணடைய யாருமில்லாததால், அரணாய் இருக்க வேண்டிய அவளுடைய அண்ணன் அவளைப் பற்றி கவலைப்படாமல் அவனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டதால், அவளை அடிமையாய் நடத்தும் அவனுடைய மனைவியைக் கண்டிக்காமல் கண்டும் காணாமல்நடந்து கொள்வதால், மின்தூக்கியின் உள்ளே நின்றிருந்தவனின் தோரணை அச்சத்தை ஏற்படுத்தினாலும் பதினான்கு பதினைந்து வயதிலிருந்து யாரையும் சார்ந்து இருக்காமல் தனியாக இருக்கப் பழகிக் கொண்டதால், அமைதியாக, அவன் வெளியே வருவதற்காக காத்திருந்தாள் மணி.
அக்காவிடம் அடைக்கலம் அடைந்தவன் அவளது கரத்தில் இறுக்கத்தைக் கூட்டி அவளுக்கு ஆறுதல் அளிக்க முயன்றான் அந்தச் சிறுவன்.
அடுத்து வந்த நொடிகள் காத்திருப்பில் கழிந்தன. மின் தூக்கியின் உள்ளே இருந்தவன் வெளியே வருவான் என்று மணி பொறுமையாகக் காத்திருக்க, அவனோ கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு, மின் தூக்கியின் பின்புறத்தில் உடலைச் சாய்த்து கொண்டு மணியைத் தலை முதல் பாதம் வரை நிதானமாக அளந்து கொண்டிருந்தான்.
இவனை இந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை மணி. நேற்றிரவு வீட்டிற்கு வராததால் இத்தனை காலை வேளையில் வீட்டிற்குத் திரும்புவான் என்று எண்ணவில்லை. இது போல் வெளியே சென்றால் அடுத்த நாள் மதிய உணவு வேளை போது தான் வீட்டிற்கு வருவது அவனது வழக்கம். மதிய வேளையில் துயில் கலைந்து எழும் அவனது தங்கையும் அவனும் சேர்ந்து ஒன்றாக உணவு அருந்துவார்கள். அவர்கள் இருவரும் உண்டு முடிக்கும் வரை அவளுடைய அறையிலிருந்து வெளியே வர மாட்டாள் மணி. அவனது பார்வையும் பேச்சும் சரியில்லை என்று உணர்ந்த தினத்திலிருந்து அவனுடன் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதில்லை. ஆர்ஜுனை அடிக்க கை ஓங்கிய தினத்திலிருந்துஅவனைப் பார்வையாலேயே வெட்டி அவர்களிடமிருந்து அவனை எட்டநிறுத்தினாள்.
இப்போதும் அவளைப் பார்வையால் அளந்து கொண்டிருந்தவனைப் பார்த்து அருவருப்பு ஏற்பட, அது அவளது முகத்தில் தெரிய, அதைப் பார்த்து அவனது முகம் மகிழ்ச்சி அடைய, ஒரு கையால் மின் தூக்கியின் உள்ளே இருந்த பொத்தான்களில் ஒன்றை அழுத்தி கதவு மூடாமல் பார்த்துக் கொண்டவன், இன்னொரு கையைப் பேண்ட் பேக்கெட்டில் விட்டு, கோணல் சிரிப்போடு,”எங்கே கிளம்பிட்ட?” என்று ஆங்கிலத்தில் விசாரித்தான்.
அவனுக்குப் பதில் அளிக்க விருப்பமில்லை மணிக்கு. அதே சமயம் அவனால் நேரம் விரயமாகிக் கொண்டிருந்ததால் எரிச்சலடைந்த மணியின் கவனத்தை பக்கத்திலிருந்து மின் தூக்கி கலைத்தது. ஏழாவது மாடியில் தேங்கியிருந்தது இப்போது கதவைத் திறந்து அவளை உள்ளே அழைக்க, நொடி கூட தாமதிக்காமல், அர்ஜுனை இழுத்துக் கொண்டு வேகமாக அதனுள் புகுந்து கொண்டு கதவை அடைக்கப் பொத்தானை அழுத்தினாள் மணி.
படபடத்த இதயத்தை சாதாரணமாக்க சிரமப்பட்டு கொண்டிருந்தவளின் கையை மேலும் இறுக்கினான் அர்ஜுன். தன்னைப் பற்றிய கவலையை ஒதுக்கி விட்டு, தண்ணீர்ப் பாட்டிலை எடுத்து அவனிடம் நீட்டினாள் மணி.
“வேணாம் க்கா.” என்று அர்ஜுன் மறுத்தவுடன் அவனை வற்புறுத்தவில்லை மணி.
வேறு எந்த தளத்திலும் நிற்காமல் வேகமாக பயணித்த மின்தூக்கி சில நொடிகளில் அவர்களைத் தரைத் தளத்தில் அவர்களைச் சேர்ப்பித்தது.
அவர்கள் இருவரும் மின் தூக்கியிலிருந்து வெளியே வந்து கட்டிடத்தின் வாயிலை அடைந்த போது மற்றொரு மின்தூக்கியின் கதவு திறக்க, அந்த ஒலியில் அனிச்சையாக மணி திரும்பிப் பார்க்க, அதிலிருந்து வெளியே வந்தான் சைதன்யா.
‘என்ன இவன்..பின்னாடியே வரான்?’ என்று மனத்தில் கேள்வி வர, பதற்றம் கூடி போக, அர்ஜுனை இழுத்துக் கொண்டு வெளிப்புற கேட் அருகே நின்று கொண்டிருந்த டாக்ஸிகளை நோக்கிச் சென்றாள் மணி.
அவன் வீட்டிலிருந்த போது அடிக்கடி அவள் அறைக் கதவைத் தட்டுவது, காபி, டீ கேட்பது, ஷார்ட்ஸ்ஸில் அலைவது என்று அவனது நடவடிக்கைகள் அவளைப் பீதியடைய வைத்திருந்தன. இப்போது அவளைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தவனின் அந்தச் செய்கை அவளுக்கு அச்சம் அளித்தாலும், வெட்ட வெளியில், ஆள்கள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் அவனால் எதுவும் செய்ய முடியாதென்று அவளது மனத்தை திடப்படுத்திக் கொண்டாள். அவளைப் பார்த்து மலர்ந்த முகத்துடன் காலை வணக்கம் தெரிவித்தனர் சிலர். சைக்கிலில் வலம் வந்து கொண்டிருந்த சிறுவர் இருவர் அர்ஜுனைப் பார்த்து சிரித்தனர். தினம் தோறும் மாலையில் லயாவைப் பூங்காவிற்கு அழைத்துப் போன போது ஏற்பட்ட நட்பு வட்டத்தை சேர்ந்தவர்கள் இவர்கள். இனி, இவர்களை மனத்தின் ஓரத்திற்கு அனுப்பி விட்டு, சென்னையைச் சேர்ந்தவர்களை முன்னே கொண்டு வரவேண்டும்.
கடந்த பத்து வருடங்களாக சென்னை அவளுக்குப் பழக்கம். ஒரு வருடமாக தான் அர்ஜுனுக்கு சென்னை பழக்கம்.சிவமுர்த்தி மாமாவின் வீடு தான் அவளின் வீடு. அவளின் நிரந்தரமான இருப்பிடம். இப்போது அர்ஜுனின் நிரந்தரமான இருப்பிடமும் கூட. இரண்டு நாள்கள் முன்பு தான் மாமாவோடு கைப்பேசியில் உரையாடியிருந்தாள் ‘இன்னைக்கு அப்படியென்ன அவசர வேலை வந்திடுச்சு, இப்படி எல்லாத்தையும் அப்படியே விட்டிட்டுப் புறப்பட்டு வரச் சொல்லியிருக்காங்க மாமி..என்ன ஏதுன்னு இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லியிருக்கலாம் இந்த அண்ணன்.’ என்று சாரதியை மனத்தில் வைதபடி வந்தவள் கண்ணில் டாக்ஸியில் சாய்ந்தபடி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன்பட்டவுடன் அவளைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தவன் அவளது மனத்திலிருந்து மாயமாக மறைந்து போனான்.
‘இவங்க எங்கே இங்கே?’ என்று யோசித்தவளின் நடை தானாகவே வேகத்தைக் குறைக்க, அதில் அவளுக்காக இருபது நிமிடங்களாக காத்திருந்தவன் கோபமடைய, அவனருகே அவள் வந்தவுடன்,”இன்னும் மெதுவா நடந்து வர முடியாதா உன்னாலே?” என்று அவளிடம் எகிற, ’ஏன் முடியாது?’ அடிப் பிரதட்சணத்திலே வரட்டுமா?’ என்று அவனைப் போலவே பதிலுக்கு எகிற நினைத்தாலும் அது போல் கேள்வி கேட்க, உதாசீனமாக நடக்க இந்த ஜென்மத்தில் அவளால் முடியாதென்பதால் அமைதியாக இருந்தாள் மணி.