மணியின் விழியானது வெளியேவேடிக்கை பார்க்க அவளின் மனமானது பின்னோக்கி பயணம் செய்தது.
பள்ளி, கல்லூரி விடுதிகள், சித்தி வீடு, அகிலா, இந்திரா அக்கா இருவரின் வீடுகள் என்று எங்கே போனாலும் வந்தாலும் முக்கால்வாசி சமயங்களில் பேருந்து பயணம் தான். சில வருடங்களுக்கு முன்பு இதே பெங்களூருக்கு சாரதியின் திருமண வரவேற்பில் பங்கேற மாமி, மாமாவோடுகாரில் வந்திருக்கிறாள். அவர்கள் யாருக்கும் தெரிவிக்காமல், ஏன்யென்று காரணம் சொல்லாமல் ஆர்ய சமாஜ முறையில் பல்லவியை திருமணம் செய்து கொண்டான் சாரதி. திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்த போது தான் அனைவர்க்கும் விஷயம் தெரிய வந்தது. சித்தப்பா, சித்தி இருவருக்கும் அவன் மீது மிகுகோபம் (rage). அவனை ஏகத்திற்கும் திட்டி, கரித்துக் கொட்டி திருமண வரவேற்பிற்கு வர முடியாதென்று அவர்கள் மறுக்க, சாரதி அலட்டிக் கொள்ளவேயில்லை. அவர்கள் திட்டியதையெல்லாம் துடைத்துப் போட்டு விட்டு, சிவமூர்த்தி மாமா, காவேரி மாமிக்கு பெற்றோர் ஸ்தானத்தை சாசனம் செய்து கொடுத்தான். அதற்கு ஒரு முக்கியக் காரணம் இருந்தது. காவேரி மாமியும் பல்லவியும் ஆந்திர மகிளாக்கள். சுந்தர தெலுங்கில் மாமியுடன் மாட்லாடி அவருடன் நல்லுறவு வைத்துக் கொள்வாள் பல்லவி என்ற அவனது கணிப்பு தவறவில்லை. காவேரி எத்தனை முயன்றாலும் மணி என்னும் சரணத்திற்கு அவரைப்போக விடாமல் பல்லவி என்னும் பல்லவியிலேயே இருத்தி வைத்திருக்கிறாள் பல்லவி.
பெங்களூரில் நல்ல வேலை, சொந்த ஃபிளாட், மனைவி, மகளென்று முப்பது வயதிற்குள் வாழ்க்கையில் செட்டிலாகி இருந்தான் சாரதி. மணியைப் போல் அவள் சம்மந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களின் கையில் விடாமல் அவனுடைய வாழ்க்கையின் எல்லா முடிவுகளையும் சாரதி தான் எடுத்து வருகிறான். அதற்கு மூலக் காரணம் மூத்தவனாக பிறந்தது தான். மணி முதல் குழந்தையாக பிறந்திருந்தால் சாரதியின் வாழ்க்கை மாறிப் போயிருக்கும். அவனுடைய அம்மா இறந்த போது அவனுக்குப் பதினெட்டு வயதாகியிருந்தது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள் மணி. அம்மா போன பின் அனாதையாகி இருந்தாலும் அடுத்து என்னயென்று தெளிவாக இருந்தான் சாரதி. இனி சித்தியுடன் தான் என்று கலங்கிப் போயிருந்தாள் மணி. நண்பனின் குழந்தைகள் மீது பாசம் வைத்திருந்த மூர்த்தி அவர்களின் படிப்பு மற்றும் இதர செலவுகளை ஏற்றுக் கொண்டு மணியின் காப்பாளர் ஆனார்.
மூர்த்தியின் பணத்தை வீணாக்காமல் பொறுப்பாக படித்து பொறியியல் பட்டதாரியாகி, நல்ல வேலையில் அமர்ந்து அவருக்குப் பெருமை சேர்த்தான் சாரதி. புண்ணியகோடியின் மகனாக பரிமளிக்கிறான் சாரதி என்ற மூர்த்தி மாமாவின் பாராட்டில் அகமகிழ்ந்து போவாள் புண்ணியகோடியின் மகள். அவளை அவனோடு அழைத்துச் செல்லும் நாளிற்காக அவள் காத்திருக்க, அது போல் எண்ணமெல்லாம் அவனுக்கில்லை என்று மணி யுகிப்பதற்குள் பல்லவியின் கணவனாகியிருந்தான் சாரதி. அவளுடைய அப்பா, சிவமூர்த்தி மாமா, சிதம்பரம் சித்தப்பா என்று ஆண்கள் மூவரும் வெவ்வேறு காலக்கட்டத்தில் சாரதியின் விருப்பத்திற்கு தடை சொல்லாமல் அவைகளை நிறைவேற்றி வைத்ததால் மிகுவிருப்பம் (choice) என்ற வரம் கிடைக்கப் பெற்றவனான் பார்த்தசாரதி.
அவனின் தங்கை சென்னைக்கு அருகே மூர்த்தி மாமாவின் வீட்டில் வசித்து வந்தாலும் கேம்பஸிஸ் சென்னையில் பல வேலைகள் கிடைத்த போதும் அவைகளை புறக்கணித்து விட்டு பெங்களூர் கம்பெனி ஒன்றை தேர்ந்தெடுத்தான் சாரதி. அதில் ஏமாற்றமடைந்தாலும் அவனது முடிவில் ஏதாவது நியாயம் இருக்கக் கூடுமென்று நினைத்துக் கொண்டாள் மணி. தங்கை மீது துளியாவது பாசமிருந்திருந்தால் வாரா வாரம், வருடா வருடம் என்று நண்பர்களுடன் சுற்றுலா சென்றவன் ஒருமுறையாவது அவளையும் உடன் அழைத்துச் சென்றிருப்பான் இல்லை ஒரு விடுமுறையை அவளுடன் கழித்திருப்பான். அம்மா கமலம் தவறியப் பின் பண்டிகை நாள்களில் நண்பர்களின் வீட்டிற்குச் சென்றவன் தவறிக் கூட சித்தியின் வீட்டுப் பக்கம் தலை வைத்துப் படுக்கவில்லை. வேலையில் அமர்ந்த பின் அவன் சம்பாதித்தை அவன் மீதே செலவழித்து அவனுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டவனுக்கு தங்கை என்று ஒருத்தி இருக்கிறாள் அவளுக்கும் ஆசைகள் இருக்கும் என்ற எண்ணமே வரவில்லை.
மணியின் பொறுப்பை மூர்த்தி ஏற்றுக் கொண்ட தினத்திலிருந்து மொத்தமாக அவளிடமிருந்து ஒதுங்கி அவளை ஞானம், காவேரி இருவரின் அடிமையாக ஆக்கியிருந்தான் சாரதி. அவனின் ஒதுக்கத்தை சாதகமாக்கிக் கொண்ட இருவரும் மணியின் உழைப்பை சக்கையாக சுரண்டிக் கொண்டனர். மனைவியின் செய்கை மூர்த்திக்குப் பிடிக்கவில்லை என்றாலும் வாயைத் திறந்தால் மணியின் நிலை மிகவும் மோசமாகி விடுமென்று, இன்னும் கொஞ்ச வருஷம் தானென்று அமைதியாக அனைத்தையும் கடந்து போக கற்றுக் கொண்டார். அவளின் பொறுப்பை சாரதியிடம் ஒப்படைக்கும் தருணத்திற்காக பொறுமையாகக் காத்திருந்தவருக்கு தெரியவில்லை அப்படியொரு தருணம் வரப் போவதில்லையென்று.
மணியைப் பற்றி யோசிக்காமல், அவளுக்கு ஒரு வழி செய்யாமல் அவர்களுக்கும் தகவல் சொல்லாமல் அவனது திருமணத்தை இரகசியமாக சாரதி முடித்தது ஞானம், காவேரி இருவரையும் உலுக்கிப் போட்டது.அவர்களின் கையிலிருந்து அவன் நழுவிய பின் தான் அவர்களின் தவறை இருவரும் உணர, அதைச் சரி செய்யும் காலமும் கடந்து போயிருந்தது. சொந்த ரத்தம் என்பதால் மணியின் பொறுப்பு அவர்கள் மீது வந்து விடப் போகிறதென்ற அச்சத்தில் சிவமூர்த்தியிடம் அவரது நிதி நிலைமையை பகிர்ந்து கொண்டு மணியின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று மறுப்பு தெரிவித்து விட்டார் சிதம்பரம். இரண்டு மகள்களுக்கு தகப்பனான சிவமூர்த்தியும் மணியின் எதிர்காலத்தை நினைத்துக் கவலையடைந்தார். மணியைப் பற்றி சாரதியின் எண்ணம் என்னவென்று கண்டறியும் வேலயைக் காவேரியிடம் ஒப்படைத்தார்.
ஆந்திராவைச் சேர்ந்த இருவரும் ஒரே மொழியில் எத்தனை மணி நேரம் உரையாடினாலும் மணியைப் பற்றி காவேரியின் எந்தக் கேள்விக்கும் பல்லவியிடமிருந்து பதில் வரவில்லை. கணவனின் சகோதரி பற்றி வதினாவிற்கு எதுவும் தெரியவில்லை. சாரதி எதையும் பல்லவியிடம் பகிர்ந்து கொள்ளவில்லை என்று புரிந்து போனது காவேரிக்கு. புதுமணத் தம்பதியரை விருந்துக்கு அழைத்து மணியைப் பற்றி முடிவு எடுக்கலாமென்று அவர் திட்டம் போட, சாரதி அதைத் தள்ளிப் போட, காவேரியின் எண்ணம் நிறைவேறும் முன் சிதம்பரம் மரித்துப் போனார். அந்த நேரத்தில் ஞானத்திற்கு உதவியாக இருந்து அனைத்தையும் சமாளித்தது மணி தான். அப்போதும் பல்லவியை உடன் அழைத்து வரவில்லை சாரதி. தனியாக வந்து, அர்ஜுனோடு சேர்ந்து கடைசி காரியங்களைச் செய்து விட்டு மூன்று நாள்களில் பெங்களூருக்குத் திரும்பி விட்டான். ஒருவேளை அவனது திருமணத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால், அவனோடு நல்லுறவு வைத்துக் கொண்டிருந்தால் சாரதியும் சிரத்தையாக விதவையாகியிருந்த சித்திக்கு அவனது கடமையைச் செய்திருப்பானோ என்னவோ.
அவனது குடும்பத்தில் இப்போது அவன் தான் மூத்த ஆண்மகன் என்பதால், அவன் எப்படி நடந்து கொண்டாலும் அவனைக் கேள்வி கேட்க இப்போது யாருமில்லை என்று அவனிடம் ஓர் அலட்சிய மனோபாவம் குடியேறியிருந்தது. அதைக் கண்டு கொண்ட மணியும் அவனிடம் அதிகமாக பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளவில்லை. சித்தி, அர்ஜுன் இருவரையும் அவளுடன் சென்னைக்கு அழைத்துச் செல்ல விரும்பினாள். அதை ஞானத்திற்குத் தெரியப்படுத்தினாள். காவேரியின் கீழ் எடுபிடியாக வாழ ஞானம் விரும்பவில்லை. கடைசிவரை தனியாக, ராணியாக வாழ்ந்து, இறந்து, இறுதியில் அர்ஜுனை மணியின் பொறுப்பில் விட்டுச் சென்று விட்டார்.
மணி என்று ஒரு நாத்தனார் இருப்பது குழந்தை உண்டாகும் வரை பல்லவியின் கருத்தில் பதியவேயில்லை. பல்லவியும் மணியை ஒதுக்கியதால், குழந்தை லயா வரும் வரை அண்ணனின் வீட்டிற்கு ஒருமுறை கூட சென்றதில்லை மணி. பல்லவியின் எண்ணம், குணம், செயல் அனைத்தும் அவனைப் போலவே இருந்தது தான் அவர்கள் ஈர்ப்பிற்கான காரணம் என்பதை இப்போதுவரை சாரதி உணரவில்லை. பரந்த மனம், ஈகை குணம், ஈர மனம் என்று பிறருக்காக வாழ்ந்து மறைந்து போன புண்ணியகோடி, கமலாம்பாள் தம்பதிக்கு சாரதி போன்ற மகனும் மணியைப் போல மகளும் கிடைத்தற்கு கடவுளைத் தான் குற்றம் சொல்ல வேண்டும்.
அதே போல் சோம்பேறியாக, சுயநலமாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த ஶ்ரீவித்யா, ரவிக்குமார் தம்பதிக்கு அவர்களைப் போலவே குணம் படைத்த சைதன்யா, பல்லவி குழந்தைகளாக கிட்டயதற்கு கடவுளைத் தான் குறை சொல்ல வேண்டும். சாரதியும் பல்லவியும் இணைந்ததற்கு விதியைத் தான் பழிக்க வேண்டும். சிவமூர்த்தியின் செலவில் படித்து, பட்டம் பெற்று வேலையில் அமர்ந்த தங்கைக்கு ஒரு பைசா செலவழிக்காதவன் திருமணத்திற்கு முன்பே பல்லவிக்கு படியளந்து கொண்டிருந்தான். திருமணம் முடிந்த பின் அவளின் சொந்த செலவுகளை அவள் பார்த்துக் கொள்ள அவளுடைய குடும்பத்தின் செலவுகளை இவன் தான் செய்து வருகிறான். சமீபக் காலமாக, லயா வந்த பின், வீட்டுச் செலவு எக்கசக்கமாக எகிறிப் போக, மாமியார், மாமனாரின் செலவுகள் குறையாமல் அப்படியே இருக்க, குடும்பஸ்தனாக விழி பிதுங்கி போனது சாரதிக்கு. இதற்கிடையே பெங்களூரில் வேலை தேடும் சாக்கில் அவர்களோடு தங்கியிருந்த சைதன்யாவின் செலவுகளும் அவன் தலையில் விழுந்திருந்தன.
லயாவைப் பார்த்துக் கொள்ள ஏஜென்ஸி மூலம் வந்த நபரின் சம்பளம், வீட்டு லோன், கார் லோன், வீக்கெண்டு பார்டிகள், புதுத் துணிகள், வெளியூர் பயணங்கள் என்று எந்தச் செலவையும் குறைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறிப் போன சாரதி மனைவியிடம் சில பொறுப்புக்களை ஒப்படைக்க நினைத்த போது,
‘என்னோட சம்பளத்திலே ஏற்கனவே இந்த ஃபிளாட்டுக்காகப் பாதிப் பணம் போகுது..இன்னும் நான் எதிர்பார்த்த பதவி உயர்வு எனக்கு வந்து சேரலை.அதுக்கு தான் குழந்தை வேணாம்னு சொன்னேன்..நீ என் பேச்சை கேட்கலை..அதை பெத்து எடுக்க நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும்..மார்னிங்க் ஸிக்னஸ்லே எதையும் சாப்பிட முடியாம எத்தனை கஷ்டப்பட்டேன்…சிஸேரியன் செய்ததிலே பேக் பெயின் இருந்திட்டே இருக்கு.’ என்று பிள்ளைப்பேறு பற்றிய பேச்சை ஆரம்பித்தவுடன் வாயை மூடிக் கொண்டான் சாரதி. ‘ஒன்பது மாசம் நீ சுமந்த அவ்வளவு தான். அதுக்கு அப்புறம் நான் தானே பார்த்துக்கறேன்.’ என்று மனைவியின் கூற்றை எதிர்க்கவில்லை. ஆரம்பத்தில் குழந்தை வேண்டாமென்று சொன்னது குழந்தை பிறந்த பின்னும் நீடிக்குமென்று அவன் நினைக்கவில்லை. எல்லாப் பெண்களிடமும் பாசம், நேசம், தாய்மை உணர்வு டிஃபால்ட்டாக இருக்குமென்று தப்புக் கணக்குப் போட்டிருந்தான். பல்லவியின் குடும்பத்தில் பெண்களின் டிஃபால்ட் செட் அப் வேறு என்று அவனுக்குத் தெரியவில்லை. அவள் அப்படித் தான் அது அவனது கவனத்தில் விழாமல் வெகு ஜாக்கிரதையாக பல்லவியும் நடந்து கொண்டாள் என்று சாரதி உணரவில்லை.
இப்பொழுதெல்லாம் பல்லவியின் பேச்சு, நடத்தை அவனுக்கு அவனுடைய சித்தி ஞானத்தை நியாபகப்படுத்தியது. அவனுடைய அம்மாவின் உடல்நிலை குன்றிய போது நிரந்தரமாக அவர்கள் வீட்டில் தங்க வந்தனர் ஞானம் சித்தியும் சிதம்பரம் சித்தப்பாவும். அந்த நேரத்தில் அவன் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்ததால் விடுமுறை போது தான் வீட்டிற்கு செல்வான். அவன் வரும் போதெல்லாம் கைக்குழந்தையான அர்ஜுனை இடுப்பில் வைத்துக் கொண்டு இப்படித் தான் புலம்பிக் கொண்டிருப்பார் சித்தி. அர்ஜுன் பிறக்கும் வரை மலடி என்று ஊர் வாயில் விழுந்து எழுந்தவர் அதையெல்லாம் மறந்து, அழுது கொண்டிருக்கும் அர்ஜுனை வாய்க்கு வந்தபடி வைது கொண்டிருப்பார். மணி தான் அழுது கொண்டிருக்கும் அர்ஜுனை தூக்கிக் கொண்டு போய் வேடிக்கை காட்டி, சமாதானம் செய்து, உணவு கொடுத்து, உடலைத் துடைத்து என்று சகலத்தையும் செய்வாள்.
பருவம் தவறி வந்த பிள்ளை என்பதால் ஞானத்திற்கு உடல் ஒத்துழைக்கவில்லை. குழந்தையின் சின்ன சிணுங்கள்களைக் கூட அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அனைவரிடமும் எரிந்து விழுந்து கொண்டிருப்பார். இந்தச் சூழ்நிலையில் வியாதிக்கார அக்காவையும் அவளது குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளவென்று அவர்கள் வீட்டிற்கு வந்தவரை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அந்த நாள்களில் வீட்டிற்கு போகப் பிடிக்காமல் விடுதியிலே விடுமுறைகளைக் கழித்திருக்கிறான் சாரதி. இப்போது அவனுடைய மனைவியும் அதே போல் தான் செய்கிறாள். லயாவின் அழுகை, சிணுங்கலைத் தொல்லையாக நினைத்து அலுவலத்திலேயே இருந்து விடுகிறாள் இல்லை நண்பர்களோடு விருந்து, பார்ட்டி என்று வெளியே சுற்றி விட்டு நள்ளிரவிற்கு மேல் வீடு திரும்புகிறாள்.
லயாவைப் பார்த்துக் கொள்ள வந்த யாருக்கும் இந்தப் வழக்கம் ஒத்து வரவில்லை. இரவு உறக்கம் கூட இல்லாமல் இருபத்தி நாலு மணி நேரமும் வேலை செய்ய யாரும் தயாராக இல்லை. இந்த நெருக்கடிக்கு தீர்வு மணியை வரவழைப்பது தான் என்று சாரதியின் மண்டைக்குள் பதிய வைத்திருந்தாள் பல்லவி. ஏற்கனவே குழந்தையிலிருந்து அர்ஜுனைப் பார்த்துக் கொண்ட அனுபவம் மணிக்கு இருந்ததால் மனைவியின் ஆலோசனையை செயல்படுத்த முடிவு செய்தான் சாரதி. அர்ஜுனின் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் தான் அவனின் வீட்டிற்கு குடிபெயர்வாள் என்பதால் அர்ஜுனின் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தான் சாரதி. இதில் எந்த இடத்திலும் சிவமூர்த்தி மாமா, காவேரி மாமியை கலந்தாலோசிக்கவில்லை. அவர்களை உள்ளே இழுத்தால் விஷயம் விபரீதமாகி விடுமென்ற அவனது பயத்தை மனைவியிடம் பகிர்ந்து கொண்ட போது, ‘மணி ஓர் அடல்ட் அவளின் முடிவில் தலையிட அவர்கள் யாருக்கும் உரிமையில்லை’ என்று கணவனுக்கு ஆறுதல் அளித்திருந்தாள் பல்லவி. அவளின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளாதவன் இப்போது அர்ஜுனின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்ததை மணியினால் நம்பமுடியவில்லை. மாமி ஒப்புக் கொண்டு விட்டால் பல்லவியின் அண்ணனும் அவளும் ஒரே கூரையின் கீழ் இருக்க வேண்டுமென்ற நினைப்பே மணியின் அடிவயிற்றில் அச்சத்தை ஏற்படுத்தியது. பல்லவியின் குடும்பத்தைப் பற்றி தெரிய வந்தால் குழந்தை ஶ்ரீலயாவிற்காக கூட அண்ணனின் வீட்டு பக்கம் தலை வைத்து படுக்க மாட்டாளென்று அவளுக்குத் தெரியவில்லை.
பல்லவி, பார்த்தசாரதி இருவரும் சுயநலவாதிகள் என்றாலும் அவர்களுக்கு இடையே ஒரு முக்கியமான வித்தியாசம் இருந்தது. பாவப் புண்ணியத்திற்கு கட்டுப்பட்டு செயல்படும் சுயநலவாதி சாரதி. எல்லைகளைக் கடந்த காரியவாதி குடும்பத்தைச் சேர்ந்தவள் பல்லவி.