உத்தமின் பார்வை மணியின் கையைப் பற்றிக் கொண்டிருந்த அர்ஜுன் மீது விழ,”யார் இது?” என்று அவளிடம் அவன் விசாரிக்க, அவனைப் போலவே,”இது யார் அக்கா?” என்று மணியிடம் மெல்லியக் குரலில் விசாரித்தான் அர்ஜுன். ஒரு வருடத்திற்கு மேலாக, கிட்டதட்ட இரண்டு வருடங்களாக அவளுடன் எல்லா இடங்களும் அழைத்து சென்றாலும் அவளைத் தவிர மற்றவர்களிடம் பேச, பழக அவனுக்குத் தயக்கம், பயம் இருந்தது. பத்து நாள்களுக்கு மேலாக சாரதியின் வீட்டில் அவர்கள் தங்கியிருந்தாலும் இதுவரை அவனிடம் கூட ஒரு வார்த்தை பேசியதில்லை அர்ஜுன். அவனுமே இவனுடன் பேச முயற்சி செய்யவில்லை.
‘அக்கா’ என்ற அவனது அழைப்பை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்ததால் அர்ஜுனின் கேள்வி காதில் விழுந்தாலும் உத்தமிடமிருந்து அதற்கு பதில் வரவில்லை. பெரியவர்கள் இருவரும் அமைதியாக இருப்பதைப் பார்த்து,
‘அக்கா’ என்று அவன் மணியை அழைக்க, மணியைக் கேள்விக்குறியுடன் உத்தம் நோக்க,”என்னோட தம்பி அர்ஜுன்..இரண்டு வருஷமா என்கூட தான் இருக்கான்.” என்று பதிலளித்தாள் மணி.
‘இவளுக்குத் தம்பியா? சாரதியும் இவளும் தான்னு இத்தனை வருஷமா நினைச்சிட்டு இருந்தேன்..எங்கேயிருந்து இவனை அழைச்சிட்டு வந்திருக்கா? அப்போ இவனையும் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகணுமா? இந்தப் பையனைப் பற்றி அம்மா ஏன் எதுவும் சொல்லலை? இப்போ என்ன செய்ய?’ என்று யோசனையில் ஆழ்ந்தான் உத்தம்.
அவனது எண்ண ஓட்டத்தை அப்படியே படித்த மணியின் செவியில்,’இவனை எதுக்கு நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்த? உனக்கு ஸ்கூல் இல்லாத நேரத்திலே இங்கேயும் அங்கேயும்னு எங்கே வேணும்னாலும் இருக்கற நீ எப்படி இவனோட பொறுப்பை ஏத்துக்கிட்ட? இவனை நம்ம வீட்லே வைச்சுக்க முடியாது.’ என்று காவேரி மாமி மறுப்பு தெரிவித்தது இப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தது.
மாமியின் மறுப்பு வேதனை அளிக்க, எப்படியாவது அவரைச் சம்மதிக்க வைக்க எண்ணியவள் அவளது வாயைத் திறக்கும் முன்,”அவனுக்கு வேற யார் இருக்கா காவேரி? அக்கான்னு இவ ஒருத்தி தான் இருக்கா..சின்ன பையன் தானே நம்மளோட இருந்திட்டுப் போகட்டும்.” என்று மூர்த்தி மாமா அவரது ஒப்புதலைக் கொடுத்தவுடன்,
“இவ வேலைக்குப் போக ஆரம்பிச்சதிலிருந்து வீட்டு வேலைக்கு ஆள் வைச்சிருக்கு..அப்படி ஆள் போட்டும் முன்னே மாதிரி மீனாக்கு முடியறதில்லை..இப்போ இவனையும் கூட வைச்சுக்கிட்டா அவனோட வேலையைச் செய்யவே இவளுக்கு நேரம் சரியா இருக்கும்..அப்புறம் எப்படி சமையல் வேலை நடக்கும், உங்களுக்கு நேரத்துக்கு எப்படிச் சாப்பாடு கிடைக்கும்? அதுக்கும் ஆள் போட்டா இவளையும் மீனாவையும் நான் எதுக்கு வைச்சுக்கணும்?” என்று கணவர் மீது பாய்ந்தார் காவேரி.
சந்தடி சாக்கில் மீனாவையும் வைத்துக் கொள்ள முடியாதென்று மனைவி சொன்னதைக் கேட்ட சிவமூர்த்தி,”சரி.” என்ற ஒரு வார்த்தையில் அந்த சர்ச்சையை முடித்து வைத்தார். சப்பென்று சர்ச்சை முடிந்தது ஒருபுறம் ஏமாற்றத்தை அளிக்க அதே சமயம் அந்த ஒரு வார்த்தைக்கு பின்னால் இருக்கும் சக்தியை உணர்ந்திருந்ததால்,
“இந்த வீட்லே நான் யாரையும் எதுவும் சொல்லிடக் கூடாது..உடனே உங்களுக்கு பொத்திட்டு வருது..பத்தாவது படிச்சிட்டு இருந்த இரண்டுங்கட்டானை அழைச்சிட்டு வந்து இன்னொரு ஆளோட பொறுப்பை ஏத்தகற பொறுப்பான பெண்ணா மாத்தி விட்டிருக்கறது நான்..அன்னைக்கு அனாதையா நின்னிட்டிருந்தவளுக்கு இனி நாம தான் ஆதரவுன்னு நீங்க சொன்ன போது நான் ஏதாவது சொன்னேனா?” என்று கேட்க, அந்தக் கேள்விக்கு,’எவ்வளவு சொன்ன’ என்று சொல்ல சிவமூர்த்திக்கு நா துருதுருத்தது. மனைவியின் குணம் தெரியுமாதலால் அதை அடக்கி, காரியம் தான் பெரிசு என்பதால் அவரது வாயைத் திறக்கவில்லை.
கணவரின் மௌனத்தை ஒதுக்கி விட்டு எப்போதும் போல் அவரது பேச்சைத் தொடர்ந்தார் காவேரி.
“முன்னே மாதிரி என்னாலேயும் எல்லோரையும் கட்டி மேய்க்க முடியலை.. சில நாள் மாடியோடவே இருந்திடலாம்னு தோணுது..நான் கீழே இறங்கி வரலைன்னா வீடு எப்படி ஆகிடும்னு உங்களுக்குத் தெரியாதா..அதான் முடியுதோ முடியலையோ தினமும் என்னோட கடமையைச் செய்யறேன்.அப்பா, அம்மா நாம இரண்டு பேரும் இருக்கும் போது நம்ம பிள்ளைங்களை அப்படியே விட்டிட முடியுமா? பெரியவளுக்கு செய்தது போல சின்னவளுக்கும் செய்துதானே ஆகணும்..இவ்வளவு வருஷம் கழிச்சு இப்போவாவது சின்னவளுக்கு நல்லது நடந்திருக்கு..அடுத்தடுத்து குழந்தை வந்ததாலே அவளாலே சமாளிக்க முடியலை..இரண்டும் சேர்ந்து அவளைப் பாடுபடுத்துங்க..வாரம் முழுக்க ஓடி ஆடி ஓய்ஞ்சு போய் வாரக் கடைசிலே நம்ம வீட்டுக்கு வந்து தான் அக்கடான்னு கிடக்கறா சின்னவ..
பெரியவளுக்கு இன்னும் அந்தக் கொடுப்பிணை கூட இல்லை..என் பேத்திக்கே கல்யாண வயசு வந்திடுச்சு..ஆனாலும் அனுமதி கேட்டிட்டு தான் பிறந்த வீட்டுக்கு வரணும்னு ஆர்டர்..அப்படி வந்தாலுமே இரண்டு, மூணு நாளைக்கு மேலே தங்க முடியறதில்லை..இன்னும் உத்தமுக்கு நல்லது நடக்கலை..அவனுக்குன்னு ஒரு குடும்பம் ஆகறவரை யாரும் முறுக்கிட்டுப் போகாம எல்லோரையும் சேர்த்து, சுமூகமா நான் ஓட்டிட்டு போயிட்டு இருக்கேன்..இதுக்கு நடுவுலே மீனாவையும் கவனிச்சிட்டு, வேலைக்கு போகற இவ மேலேயும் ஒரு கண்ணை வைச்சிட்டு ஒவ்வொரு நாளையும் எப்படியோ தள்ளிட்டு இருக்கேன்..நம்ம வீடு இருக்கற சூழ்நிலை தெரிஞ்சும் இந்தப் பையனை கூட அழைச்சிட்டு வந்திருக்கா மணி.. என்னாலே எப்படிச் சமாளிக்க முடியும்? காவேரி நதி மாதிரி இண்டு இடுக்கிலே எல்லாம் பாய்ஞ்சு போயிட்டிருந்த இந்தக் காவேரியோட வேகம், காலம் எல்லாம்மலை ஏறிப் போயிடுச்சு.” என்று பேசி முடித்த போது அவர் எதிர்பார்த்தது போல் சிவமூர்த்தியின் மனம் மாறிப் போயிருந்தது.
எனவே,”அவனை வேற யார்கிட்டே விட முடியும் காவேரி..ஞானம் சைடிலே யாருமில்லை..சிதம்பரம் சைடிலே காசு கேட்கறாங்க..சல்லி காசு இல்லையாம்..எல்லாத்தையும் மொத்தமா காலி செய்திட்டாங்களாம் ஞானமும் சிதம்பரமும்..வீட்டை அடமானம் வைச்சு தான் வீடு ஓடியிருக்கு..வேற போக்கிடம் இல்லைன்னு தான் அவகூடவே அழைச்சிட்டு வந்திட்டா மணி..இப்போ என்ன செய்யச் சொல்ற? நீயே ஒரு முடிவு சொல்லு.” என்று மனைவியிடமே ஆலோசனை கேட்டார் சிவமூர்த்தி.
“எல்லாமும் போயிடுச்சா? நீங்க அனுப்பி வைச்சது கூட போயிடுச்சா?” என்று காவேரி கேட்க,
“ஒண்ணும் இல்லையே..அப்போ செலவாகிடுச்சுன்னு தானே அர்த்தம்.” என்றார் மூர்த்தி.
அவருடைய சினேகிதனின் மனைவி கமலா, மணியின் அம்மா மறைந்ததிலிருந்து இப்போது வரை கமலத்தின் தங்கை ஞானத்திற்கு, மணியின் சித்திக்கு அவ்வப்போது சிறிது, பெரிதாக பணம் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார் சிவமூர்த்தி. அதெல்லாம் என்ன ஆனது என்று மணிக்கும் தெரியவில்லை. பழையைக் கதையை,பணக் கதையை மாமி ஆரம்பித்தால் அவரைச் சமாதானம் செய்வது கடினம் என்பதால் அர்ஜுனின் எதிர்காலத்தை எண்ணி அச்சமடைந்தாள் மணி. அவனைப் பற்றி தான் சர்ச்சை நடக்கிறது என்று புரிந்தும் புரியாமல் புதிய இடத்தை நோட்டம் விட்டபடி அமைதியாக நின்றிருந்தான் அர்ஜுன். அவனது அந்த அமைதியும் மணியைக் கலவரப்படுத்தி இருந்தது. சந்தோஷமாக ஓடியாடி விளையாடிய சிறுவன் அர்ஜுன் இனித் திரும்ப கிடைப்பானா? என்று அவளுக்குத் தெரியவில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன் அவளுடைய சித்தப்பா, அர்ஜுனின் அப்பா மறைந்த போது அவனுக்கு விவரம் தெரியாத வயது. அவளுக்கு விவரம் தெரியும் வயதாக இருந்தாலும் அவளிடம் எந்த விவரத்தையும் ஞானம் சித்தி பகிர்ந்து கொள்ளவில்லை. சித்தப்பா இறந்த பின்னும் எப்போதும் போல் விடுமுறை நாள்களில் அவளை வீட்டுக்கு வரவழைத்துக் கொண்டார். எப்போதும் போல் அர்ஜுனை அவள் பொறுப்பில் விட்டு விட்டு ஊர் சுற்றினார். எப்போதும் போல் வேலைக்காரிக்கு விடுமுறை கொடுத்து விட்டு அவளிடம் வேலை வாங்கிக் கொண்டார். எப்போதும் போல் அது இல்லை, இது இல்லை என்று புலம்பி அவளிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டார்.
இந்தமுறையும் அதே போல் தான் இருக்குமென்று பத்து நாள் விடுமுறைக்கு சித்திக்கு வீட்டுக்குப் போக, இரண்டு நாளாக வயிற்றுப் போக்கு, காய்ச்சலில் படுத்துக் கிடந்த சித்தி இவள் தலையைப் பார்த்ததும் தலை சாய்த்து விட்டார்.
சாரதியைக் கைப்பேசியில் அழைத்து, செய்தியைக் கடத்தி, அவன் வந்து சேரும் வரை அவளது சேமிப்பிலிருந்து சகலத்தையும் ஏற்பாடு செய்து, வேலைக்காரி முதல் பால்காரன், மளிகைக்காரன் வரை பைசல் செய்தாள். இறுதி யாத்திரை முடிந்தவுடன் கை வீசிக் கொண்டு வந்தது போலவே கை வீசிக் கொண்டு சாரதி பெங்களூருக்கு செல்ல, சித்தியின் ஒரே மகன் அர்ஜுனோடு சென்னைக்குப் புறப்பட்டு வந்த மணியை வரவேற்பறையில் நிறுத்தி பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது.