எரியும் நெருப்பில்
பஸ்பமாகி கொண்டிருக்கிறது
என் எதிர்ப்புகளும்
எதிர்பார்ப்புகளும்
இனி நான்
என்பதன் அடையாளம்
நீயாகி போனாயோ…
திருமணத்திற்கான அலங்காரங்கள் நடந்துகொண்டிருக்க பிடித்து வைத்த பொம்மை போல அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அலங்காரம் முடியவும் கண்ணாடி முன் நின்ற அவளுக்கு ‘இது நாம் தானா’ என்று தோன்றியது.
ஏனெனில் இதுவரை அவள் மேக்கப் என்ற ஒன்று பயன்படுத்தியதே கிடையாது. அதிகமாக அலங்காரங்களில் ஆர்வம் செலுத்தியதும் கிடையாது.
ஆனால் இப்பொழுதெல்லாம் வீட்டிலுள்ளவர்கள் சரணின் பதவியை சொல்லியே., நீட்டாக ட்ரஸ் பண்ணிக்கோ அப்படி இருக்கணும்., இப்படி இருக்கணும் என்று அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சரி சரி என்று கேட்பாளே ஒழிய., எதைப்பற்றியும் யோசித்தது கிடையாது. ஆனால் இன்றைய அவளை கண்ணாடியில் பார்க்கும் போது, ‘இத்தனை நாள் நாம ஏன் அப்படி இருந்தோம்’ என்று தான் யோசிக்கத் தோன்றியது.
அவள் அறியாமல் நேற்றைய எண்ணங்கள் இப்போது தோன்றியது., திருமணத்திற்கு முதல்நாள் மாலை நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது., அழகு நிலைய பெண்களை வைத்து அவளின் அத்தை அவளுக்கு எப்படி அலங்காரம் செய்வது என்பதை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
வீட்டில் இருக்கும் போது எப்படி சிம்பிளாக அழகாக இருக்க வேண்டுமென்று., அதற்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்ய சொல்லி கொடுத்ததை இப்போது நினைவு படுத்தியவள்., இனி தன்னை ஒழுங்காக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
இயற்கையிலே ஓரளவு அழகாக இருந்தால் தான் அவளுக்கு மேலும் அழகு படுத்திக் கொள்ள தோன்றியதே இல்லை., வீட்டில் உள்ளவர்கள் அவளை சொல்லியதும் இல்லை., எப்போதும் அழகு ஆபத்தை கொடுக்கும் என்ற ஒரு பயமும் கூட., அதனால் தான் அவள் அம்மா இதுவரை அவளை அப்படி இரு., இப்படி இரு., என்று மேக்கப் விஷயத்தில் எதுவும் சொன்னது கிடையாது.
ஆனால் இப்பொழுது அத்தை சொல்லும் போது கூட தோன்றாததது., திருமண கோலத்தில் இத்தனை அலங்காரத்தோடு பார்த்த போது., நேற்று அவர்கள் சொன்னது தான் சரி என்று தோன்றியது.
நிச்சயதார்த்தத்தின் போது கூட சாதாரண அலங்காரத்துக்கே அழகாக தான் இருந்தது., ஆனால் இப்போது அது ஒன்றும் அவளுக்கு தெளிவாக தெரியவில்லை.
புடவை கட்டி திருமணக்கோலத்தில் தயாராக நிற்கும் போது., அவளுக்கு கல்லூரி சென்று வந்த ‘அந்த மதுவின் முகம் தானா இது’ என்று சந்தேகம் வரும் அளவிற்கு இருந்தது.,
அவளுக்கு அத்தனை பொருத்தமாக பாந்தமாக புடவையில் பார்க்க தெரிந்தது., தன்னை மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்தவளுக்கு., பெருமூச்சு மட்டும் வந்தது.
அதே நேரத்தில் வீட்டில் உள்ளவர்கள் தான், “பொண்ணுங்களுக்கு புடவை கட்டி அலங்காரம் செய்தா கல்யாண கலை வந்திருந்தது, முகத்துல பொறுப்பு தெரியுது பாத்தீங்களா, என்ன அழகா இருக்கா” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே வீட்டில் பெற்றோர்களும் வந்து பார்த்து விட்டு கண்ணம் தொட்டு முத்தமிட்டு நின்றனர்.
அதே நேரத்தில் சிவாவின் பெற்றோர்களும் வந்து பார்த்து விட்டு “அடடே நாங்க பார்க்கும் போது இருந்த குட்டி பொண்ணு மது எங்கே” என்று கேட்டு கிண்டல் செய்து நின்றனர்,
எதுவும் சொல்லாமல் குனிந்து கொண்டாலும் அவளது முகத்தில் வெட்கத்தின் சாயல் அதிகமாகவே இருந்தது,
அதே நேரம் சிவாவும் வந்து பார்த்து விட்டு யாரையோ தேடுவது போல பார்க்க, அருகிலிருந்தவர்கள் தான், “என்னடா தேடுற” என்று கேட்டனர்,
“இல்ல இங்க என் கூட ப்ரண்ட் ன்னு சுத்திட்டு இருந்த மது ன்னு ஒரு பொண்ணு இருந்தா யாராவது பார்த்தீர்களா”, என்று கேட்டான் .
அவளோ “வேண்டாண்டா அடி வாங்கிறாத ஒழுங்கா போயிரு, நானே உன் மேல ரொம்ப கோவமா இருக்கேன், உன்னை அடிக்கக் கூடாது அடிக்கக் கூடாதுன்னு கண்ட்ரோல் செய்துட்டு இருக்கேன், என்ட்ட அடி வாங்குகிறாத”, என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே,
“அட இது தான் மதுவா, நான் வேற யாரோன்னு நினைச்சேன்”, என்றான்.
“ஏன்டா இப்படியா பேர் சொல்லி கூப்பிடுவ”,என்று கேட்டார் அருகில் இருந்த சிவாவின் பாட்டி,
மதுவோ “பாட்டி அப்படி எல்லாம் கூப்பிட சொல்லாதீங்க” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே,
அவன் அம்மாவோ “அவனே ஒன்னும் சொல்லல அத்த, நீங்க எதுக்கு அத பத்தி யோசிக்கீங்க, அப்படி மாத்த சொல்ல வேண்டாம், அவங்க எப்போதும் இருக்கிற மாதிரி இருக்கட்டும்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே சரண் நண்பன்,
“உள்ளே வரலாமா” என்று கேட்டான்.
“நீ எங்கடா இங்க” என்று சிவா அம்மா கேட்டார்.
“சரண் பொண்ணு கூட கொஞ்சம் பேசணும் ன்னு சொன்னான், அது தான் கேட்க வந்தேன்”, என்றான்.
இன்னும் அரை மணி நேரத்தில் கல்யாணம் ஆகிரும், இப்போ அதுக்குள்ள என்ன பேசணுமாம் அவனுக்கு, போய் உட்கார சொல்லு”, என்று சொல்லும் போதே,
“இல்ல ஒரு விஷயம் பேசணும் ன்னு சொல்லியிருக்கான்” என்று சொல்லவும்,
“வர சொல்லு” என்று சொல்லவும், அவன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
அவனை கண்ட உடன் மற்றவர்கள் அங்கிருந்து கிளம்பினர்,
“இன்னும் கொஞ்ச நேரம் கூட இல்ல, அதுக்குள்ள பேச வந்துட்டான்”, என்று ஆளாளுக்கு கிண்டல் செய்தபடி நகர்ந்தனர்.
பாட்டி தான் “என்னடா, சிவா பெயர் சொல்லிக் கூப்பிடுறான், கேட்டதுக்கு உங்க அம்மா சரணும் ஒன்னும் சொல்லல ன்னு சொல்லுறா”, என்றார்.
“மதுவும் அவனும் என்னைக்கும் அதே பிரண்ட் தான், நான் மதுவ கல்யாணம் பண்ணிக்கிறதால, எதுவும் மாறிடலை, அவங்க ரெண்டு பேரும் எப்பவும் போல அப்படியே இருக்கட்டும், மாத்த ட்ரை பண்ணாதீங்க”, என்று சொன்னான்.
“ஆமா நீ எதுக்கு இப்ப பேச வந்த”என்று கேட்டார் .
“பேச தானே வந்தேன், நீங்களும் பக்கத்தில் உட்கார்ந்து கேளுங்க” என்று சொன்னான்.
“நான் முன்னால் போய் உட்கார்ந்துருக்கேன்”என்று சொல்லிவிட்டு மண மேடைக்கு அருகில் போட்டிருந்த சேர்களில் வரிசையாக வீட்டு பெரியவர்கள் மற்றும் வயதில் மூத்தவர்கள் அமர்ந்துகொண்டனர்.
மீதி இருந்தவர்கள் அதே அறையில் சற்று தள்ளி நின்று கொண்டனர்.
மதுவின் அருகிலிருந்த சரண் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, பேச வந்தவங்க பேசலையே என்றபடி குனிந்து இருந்தவள் மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள், ‘ஏன் இந்த பார்வை’ என குழப்பமாக பார்த்தாள்.,
“நான் என்ன சொல்ல வர்றேன் ன்னு உனக்கு புரிய வேண்டாமா”, என்று சொன்னான்.
“ஏன் நீங்க தமிழ்ல தானே பேச போறீங்க”, என்றாள்.
“பரவாயில்லையே, பதில் எல்லாம் வருது” என்று சொன்னவன், “தமிழ்ல பேசினாலும் நான் என்ன நினைக்கிறேன் றது, என் முகத்தை பார்த்தா நீ இன்னும் புரிஞ்சுக்க முடியும், தலையை கீழே குனிச்சிட்டே இருந்தா, நீ எப்ப முகத்த பார்த்து கத்துக்க போற”, என்று கேட்டான்.
அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ “இப்படியே நிமிர்ந்து பார்த்து பேசு” என்று சொல்லி விட்டு அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அவளுக்கு சற்று படபடப்பாக இருந்தது.
ஏன் என்றால் குரலே, வராத குரலில், “ரொம்ப அழகா இருக்க, இதற்கு மேல இங்க எதுவும் பேசமுடியாது, சுத்தி சுத்தி எல்லாம் நந்தி மாதிரி நிற்காங்க”,என்றான்.
அவனை சற்று விழி விரித்து பார்க்க, அவனும் அவளை ஆழ்ந்து பார்த்தான்.
அவன் பார்வையின் வீரியம் தாங்காமல் தலை குனிய போனவள், நிமிர்ந்து “நீங்க ஏதோ சொல்ல வந்தீங்க, சீக்கிரம் சொல்லுங்க” என்று மெதுவாக சொன்னாள்.
அவளை அப்படி நிமிர்ந்து பார்த்ததும், “இது நல்ல பிள்ளைக்கு அழகு”, என்று சொன்ன படி “வர்றவங்க யாரா இருந்தாலும், நான் இன்ரடியூஸ் பண்ணும் போது ரொம்ப கஷ்டப்பட்டு எல்லாம் மைண்ட் ல ஏத்திகனும் ன்னு அவசியம் இல்ல, ஆபீஷியல் ல நான் சொல்லுவேன், ம்ம் ன்னு மட்டும் வணக்கம் சொல்லிக்கோ, வேற எதுவும் சொல்ல வேண்டா, இதே மாதிரி நிமிர்ந்து நில், யாரையும் பார்த்து பயப்பட கூடாது, நேரா நிக்கும் ரொம்ப நல்லாயிருக்கு, எனக்கு பிடித்திருக்கு”, என்று சொன்னான்.
“இங்கயே இப்பவே இவ்வளவு கண்டிஷன் போடுறீங்க” என்று சொன்னாள்.
“என்னோட அபிஷியல் உனக்கு நிறைய தெரியாது, நான் உனக்கு கொஞ்சம் கொஞ்சமா தான் புரிய வைக்க முடியும், சோ”, என்று மெதுவாக அதே நேரம் அழுத்தமாக சொன்னான்.
மெதுவாக தலையை ஆட்டி கொண்டாலும், ‘ஐயோ கொஞ்சம் ஓவரா பில்டப் இருக்கே’ என்று மனதிற்குள் தோன்றியது.
‘அய்யோ, இந்த பஞ்சாயத்து தன் முகத்தை பார்த்தே கண்டுபிடித்து விடுவானே’ என்று நினைத்து கொண்டாள்.
அதன் பிறகு சில பல அறிவுரைகளைச் சொல்லி விட்டு அவன் வெளியே செல்லவும், சிவா அருகில் வந்தான்.
சிவா முதுகில் ஒரு தட்டு தட்டியவள், “இப்பவே கண்ணே கட்டுதே”,என்று மூச்சு வாங்க, மீண்டும் இருக்கையில் அமர்ந்தாள்.
“ப்ளீஸ் கொஞ்சம் தண்ணீர் தாங்க”, என்று சொல்லி தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் ரெஸ்ட் ரூம் சென்று விட்டு வந்து அமரவும்,
அவளை “வெளியே அழைத்து வாருங்கள்” என்று சொல்லவும் நேரம் சரியாக இருந்தது,
சிவா அருகில் வந்து, “நான் தான் உன்னை கூட்டிட்டு போக போறேன்” என்று சொன்னான்.
“போடா”என்றாள்,
“என்ன டென்ஷன்”, என்றான்.
“உனக்கு இருக்குடா, உங்க அண்ணன் இப்பவே ரூல்ஸ் போடுறாரு, இதுக்கு காரணமே நீ தான், என் கையால நீ அடி வாங்குவ” என்று மிரட்டிக் கொண்டிருந்தாள்.