Advertisement

8 மாலை நேரத்து மயக்கம்

கனவு என்று நினைத்ததெல்லாம் நிஜமாய் நிற்கும்போது
நிஜமென்று நினைத்ததெல்லாம்
கனவாய் களைவதில்
அதிசயம் ஒன்றுமில்லை.,
நிஜங்களும் நிழல்களும்
போட்டிபோடும் உலகமிது அறிந்துகொள்ள தான்
முடிவதில்லை

        அதிகாலையில் கண் விழித்தவளுக்கு நேற்று நடந்தது எல்லாம் கனவு போலவே தோன்றியது., சற்று நேரம் புரண்டு புரண்டு படுத்தவள்., ‘கல்யாணம் சரண் ன்னு நெனச்சி நெனச்சி கடைசில கனவுல கூட ஃபேமிலி மொத்தமா வந்து நிக்குது டா சாமிஎன்று தனக்குள் குழம்பி கொண்டவள் மெதுவாக கண் திறக்க அப்போது தான் அது கனவல்ல என்பதற்கான அறிகுறியே அவளுக்கு தெரிந்தது.,

          அவள் அறையில் லேசாக கதவு திறந்திருக்க வெளியில் பாட்டி தாத்தாவின் பேச்சு சத்தம் கேட்டது., ‘இவங்க ஏன் காலையிலே வந்திருக்காங்க‘., என்று தோன்ற வெளியே அம்மாவின் குரலும் கேட்டுக் கொண்டிருந்தது.

     காய்ச்சல் எதுவும் வரலையே என்று கேட்டுக் கொண்டிருந்தனர். மதுவின் அம்மாவோ., “இல்ல நான் அவகூட தான் இருந்தேன்., நைட் ஒன்னும் இல்ல டேப்லெட் கொடுத்த பிறகு தூங்கிட்டா., அதுக்கப்புறம் வேற எதுவும் இல்ல., இன்ஜெக்ஸன் வேற போட்டு இருக்கு இல்ல., இடை இடையில கொஞ்சம் முனகினா., அப்புறம்  தூங்கிட்டா என்று பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

        ‘அப்ப நேத்து நடந்ததா பார்த்தது கனவில்லையா.நெஜமா.ஐயோ நான் என்ன  உலறினேன் ன்னு தெரியலையே‘., என்று யோசித்துக் கொண்டிருந்தவளோ.,  ‘இல்லை அவன் கிட்ட நான் முடியாதுன்னு தானே சொன்னேன்‘., என்று தனக்கு தானே பேசிக் கொண்டிருக்க.,

       அவள் அறையை தட்டிக் கொண்டு அவளின் பாட்டி வருவது தெரிந்தது.,

     மெதுவாக  எழுந்து அமரவும்., உங்க அம்மாகிட்ட சொன்னேன் ஒத்த பிள்ளை ன்னு செல்லம் கொடுக்காதே.கண்டித்து வளருன்னு.சொன்ன பேச்சு கேட்டாலா.,   சொன்ன பேச்சு கேட்காம.ஒத்தபிள்ளை ன்னு செல்லம் கொடுத்து வளர்த்தா இல்ல.அதுக்குத்தான் நீ நேத்து எல்லாரையும் பயங்காட்டி இருக்க..என்ன  இருந்தாலும்  உனக்கு இம்புட்டு திமிரு ஆவாது.நீ சரிபட்டு வரமாட்ட.சட்டு புட்டுன்னு கல்யாணத்தை பண்ணி கொடுக்கலைன்னா.எப்பவும் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிற மாதிரி ஒன்ன வச்சிட்டு பயந்து கிட்டே இருக்கனும்.எப்ப என்ன பண்ணுவியோ.என்னத்த சொல்லி மிரட்டுவீயோ.தேடவேண்டாம் ன்னு எழுதிவைக்கிற அளவிற்கு திமிரு உனக்கு”.என்று வாய்க்கு  வந்ததை எல்லாம் சொல்லி திட்டிக் கொண்டிருந்தார்.,

      ‘அய்யோ இந்த பாட்டியே  இப்படி எல்லாம் பேசுதே.அந்த பாட்டி வந்து என்ன எல்லாம் பேச போகுதோ தெரியலையேஎன்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே.,

       சிவாவின் அம்மா தான் உள்ளே வந்து “நீங்க வாங்க அவ கொஞ்ச நேரம் இருக்கட்டும்., இப்ப தானே எந்திரிச்சு இருக்கா” என்று பாட்டியிடம் சொல்லிவிட்டு “போ போய் முகத்தை கழுவிட்டு பிரஷ் பண்ணிட்டு வா., அம்மா சூடா காஃபி கொண்டு வருவா”என்று சொல்லிவிட்டு அவர் சென்றார்.

      ‘அச்சச்சோ யார் யாரெல்லாம் திட்ட போறாங்கன்னு தெரியலைஎன்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே நந்தினி வந்து நேற்று இரவு சொல்லிவிட்டு சென்றது நினைவு வர.,  ‘அய்யயையோ அவ வேற காலேஜுக்கு லீவ் போட்டு வந்து விடுவாளேஎன்று நினைத்துக் கொண்டிருக்கும் போது வீட்டிற்குள் உறவினர்களின் பேச்சு சத்தம் கேட்க துவங்கியது.

     யாரெல்லாம் வந்திருக்கான்னு தெரியலையே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே.அப்பா உடன் பிறந்த (தங்கை)அத்தையும்., அப்பா பாட்டியும் ஒருபக்கம் பேசிக்கொண்டிருப்பது கேட்டது.

      அத்தையோ.,  “மதனி நீங்க செல்லம் குடுத்து தான் மதினி அவளை கெடுத்து வச்சிருக்கீங்க.கண்டிக்க வேண்டாமா.அவ என்ன அடம்பிடிப்பதுநம்ம பார்த்து இதுதான் மாப்ள ன்னு சொல்லனும்., அது என்ன அவ இஷ்டத்திற்கு அவ பேச்ச கேட்டுட்டு தாங்கிட்டு நிற்கிறது.இதெல்லாம் சரி இல்லை பாத்துக்கோங்க”.,   என்று சொன்னார்.

           “என்னயவே குறை சொல்லாதே.உன் அண்ணன் கிட்ட போய் கேளு.நான் கல்யாணம் பண்ணி வைக்கலாம் ன்னு சொன்னா.உங்க அண்ணன் தான் சரியான பதில் சொல்லவில்லை.கொஞ்சம் பொறு., கொஞ்சம் பொறு., ன்னு சொல்லிக்கிட்டே இருந்தார்.தப்பு உங்க அண்ணன் மேல தான்., அவர குறை சொல்றத விட்டுட்டு என்னையவே குறை சொல்லுவியா” என்று பதிலுக்கு மதுவின் அம்மா பேச்சு சத்தமும் கேட்டது.

இவர்கள் மற்றவைகளை  பேசிக் கொண்டிருக்கும் போதே ., அவள் அப்பா பாட்டி தான்  அப்பாவை சத்தம் போடுவது கேட்டது.,  “நீயே  ஒத்த பொம்பள புள்ள வச்சிருக்க., அது என்ன எல்லாமே  அவள் இஷ்டத்துக்கு ன்னு விடுற., அவ இஷ்டத்திற்கு தான் கல்யாணத்துக்கு  மாப்பிள்ளை பார்க்கனுமா., இது தான் மாப்பிள்ளை கட்டி தான் ஆகனும் ன்னு சொல்லனும்.அந்த காலத்தில்  எல்லாம் சம்மதமா  கேட்டாங்க., இதுதான் மாப்பிள்ளை கட்டு ன்னு  சொல்லி., நாங்க  கட்டிக்கிட்டு வரலையா.ஒரு மாசம் கழிச்சு தான் பலர் புருஷன் முகம் பார்த்திருப்போம்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

    அது மட்டுமல்லாமல் மதுவின் தாய்மாமா மனைவியும் அங்கிருந்து கொண்டு “நல்ல கேளுங்க பெரியம்மா., அது மட்டும் இல்ல அக்கா., நானும் அண்ணியை தான் சத்தம் போட்டு கொண்டு இருந்தேன்., இப்ப இவகிட்ட என்ன பெர்மிஷன் கேட்கிறது.பையன் ஜட்ஜ் இதுக்கு மேல அவளுக்கு என்ன வேணுமாம்.இது வேண்டாம்., அது வேண்டாம் ன்னு இவ என்னத்தை சொல்றது., பக்கத்தில் பார்த்து வளர்ந்தவர்கள், ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல தெரியும், ஒத்த பொம்பள புள்ளைய யாரோ தெரியாத கண்காணாத இடத்துல குடுத்துட்டு.எல்லாரும் பக்கு பக்குன்னு பயந்துட்டு இருக்கிறதுக்கு தெரிந்த இடத்தில் கொடுத்துட்டு நிம்மதியா இருக்கலாம்.அத விட்டுட்டு இவங்க அவ சம்மதத்தை கேட்டாங்களாம்.

        அவட்ட போய் சம்மதம் கேட்டுட்டு., எல்லாருமா சேர்ந்து அவர் கிட்ட பேசாம இருந்து ஸ்ட்ரைக் வேற., இவ வேற எழுதி வைத்துட்டு காணாமல் போனாளாம்.இவளை என்ன செய்யலாம் எல்லாரும் கொடுக்குற செல்லம் தான் தெரியுமா.இவளை  மது மது ன்னு தாங்கிக்கிட்டு இருக்காங்க இல்ல அது தான்., இப்படி எல்லாம்  கேட்டா சரிப்பட்டு வராது ன்னு முதல்ல சொல்லுங்க அக்கா.அண்ணி நல்லா கேட்டுக்கோங்க சட்டு புட்டுன்னு கல்யாணத்தை பண்ணி வச்சீருங்க அவ்வளவுதான்”., என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

     உள்ளே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு ஐயோ எல்லோருமா சேர்ந்து என் கதையை முடிக்க பிளான் பண்றாங்களேஎன்று யோசித்த வண்ணம் பயந்து போய் அமர்ந்திருந்தாள்.

     அவள் பயந்ததற்கு ஏற்றார் போல சற்று நேரத்தில் வீட்டு பெரியவர்கள் எல்லாம் ஆளாளுக்கு கூடிப் பேச தொடங்கி இருந்தனர்.

     அதற்குள் சிவாவின் அப்பா விடம்  மற்ற அனைவரும் சேர்ந்து  “ஜாதகப் பொருத்தம் பார்த்து தேதி குறிக்கலாம்” என்று சொன்னார்கள்.,

ஜாதகப் பொருத்தம் பார்த்தாச்சு., தேதி குறிப்பது மட்டும் தான் பாக்கி” என்றார்.,

    “மற்றதெல்லாம் பாருங்க.அவ என்ன சொல்லுறது., நாங்க சொல்றோம் அவ சம்மதிப்பா”., என்று சொல்லிக் கொண்டு இருந்தனர்.,

        உள்ளே அமர்ந்து கேட்டு கொண்டு இருந்தவளால் பேச வாயை திறக்க முடியவில்லை.,

          அதே நேரம் நந்தினியும் வந்து சேர்ந்துவிட.நந்தினியிடம் வீட்டு பெரியவர்கள் இங்கெல்லாம் பேசி முடிச்சாச்சு., உன் பிரண்டு கிட்ட மட்டும் நீ சொல்லிரு.அவ என்ன சொன்னாலும் கல்யாணம் நடக்கப் போறது நடக்கப்போறது தான்”., என்று சொன்னார்கள்.

அவளோ., “நீங்க நடத்துங்க அவளே படிக்க முடியாமல் டென்ஷன்ல உட்கார்ந்திருக்கா., பயத்தில் வேற முழிச்சிட்டு இருக்கா”., என்று வேறு போட்டுக்கொடுத்தாள்.

     உள்ளே அமர்ந்திருந்தவளோ., ‘நீ உள்ள வாடி மவள., நீ செத்தஎன்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தாள்.

        அவளும் உள்ளே வந்து கோபமாக முதுகில் நாலு மொத்து மொத்தியவள்.,  “ஏன்டி திமிருபிடிச்சவளே., அப்படி என்னடி எல்லாரையும் பயங்காட்டிட்டு சுத்துற., உனக்கு எத்தன தடவ சொன்னேன்., எவ்வளவோ எடுத்துச் சொல்லி இருப்பேன்.ஆனாலும் திரும்பத் திரும்ப நீ பிடிச்ச முயலுக்கு மூணு கால் ன்னு நினைக்கிற.சரி இப்ப என்ன பண்ண போற வீட்டில் உள்ளவங்க நாள் பார்க்க போயிட்டாங்க., நீ என்ன பண்ண போறே”.என்று கேட்டாள்.

    அமைதியாக இருந்தவள் சற்று நேரத்தில்., “என்னமோ பண்ணி தொலையட்டும்.நான் சொன்னா மட்டும் சரின்னு சொல்லி வேண்டாம்னு சொல்லிடவா போறாங்க இல்ல தானே., மறுபடியும் இதே தான் பேசி ஆளாளுக்கு என்ன டென்ஷனா மாத்துவாங்க”., என்று சொல்லிவிட்டு தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.

Advertisement