Advertisement

மாலை நேரத்து மயக்கம் 7

உயிர் வரை
ஊடுருவும் குளிரிலும்
உன்னைக் காணும்போது
உதறல் தான் எடுக்கிறது.,
எப்படி மாற்றிக் கொள்வேன்
மனதில் பதிந்து போன
எண்ணங்களை
மாற்றிக்கொள்ள
முடியுமா.,

    அவன் சொன்ன இரண்டரை  மணி நேரத்திற்கு சற்று முன்பே வந்து சேர்ந்திருந்தனர்., 3 மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை அத்தனை வேகமாக கடந்து வந்து சேர்ந்திருந்தான்.,

       சரண் நேராக காரை அவர்கள் வீட்டின் அருகில் நிறுத்தியவன்., வீட்டின் பக்கம் உள்ள விளக்கு எல்லாம் போட்டு சுற்றிலும்  பக்கத்திலும் தேடச் சொன்னான்.,

       ஏனென்றால் சில நேரங்களில் அவர்கள் வீட்டு தோட்டத்தில் உள்ள மரங்களில் ஏறி விளையாடுவதும்., அவளின் எப்போதைய பழக்கம் தான்., அதற்காக அங்கும் போய் தேட சொல்லிவிட்டு., ‘சரியாக தேடுகிறார்களா என்னவோ’ என்ற எண்ணத்தில் அவனும் அவர்கள் வீட்டை சுற்றி ஒரு முறை தேடிவிட்டு மதுவின் வீட்டிற்கு வந்தான்.

     “என்ன பண்ணி வச்சு இருக்கீங்க ன்னு., தெரியுதா” என்று சொல்லி அனைவரையும் சத்தம் போட்டு விட்டு “என்ன நடந்ததுன்னு சொல்லுங்க” என்று கேட்டான்.

    மதுவின் அம்மா மீண்டும் ஒரு முறை என்ன நடந்தது என்று சொன்னார்.,

        “எத்தனை நாளைக்கு எல்லாரும் சேர்ந்து அவ ட்ட முகம் காட்டுறீங்க” என்று கேட்டான்.

    அனைவரும் அமைதி காக்கவும்., “சோ பேச  தொடங்கியதில் இருந்து அவ ட்ட தான் எல்லாரும் முகம் காட்டி இருக்கீங்க,  இல்ல.,  அவ வேண்டானு சொன்னா சரி ன்னு விட்டு இருக்க வேண்டியது தானே.,  படிக்கணும்னு சொல்லி இருக்கா இல்ல.,  சரி படிக்கட்டும் ன்னு  விட்டு இருக்க வேண்டியது தானே.,  இப்ப யார் அவளிடம் இது பத்தி பேச சொன்னது”.,  என்று கோபப்பட்டான்.

      சிவாவின் மீது கோபத்தை காட்டினான்., “இருக்குற கோவத்தில்  உன்னை அடிச்சிடுவேன் டா ., உன் கிட்ட  எத்தனை ப்ரண்ட்லியா இருந்தா., நீ என்னடா பண்ணி வச்சிருக்க”., என்று கோபப்பட்டவன்.,

        “எல்லா இடத்திலும் கேட்டீங்களா., எங்கெல்லாம் தேடுனீங்க” என்று கேட்டான்.

         சிவாவின் தோழன் மதுவின் அப்பாவோடு  சேர்ந்து தேடிய இடங்களை எல்லாம் சொன்னான்.

      மழை வேறு  அப்போது தான் குறைந்திருந்தது. இத்தனை மழையில் அவள் எங்கே போய் இருப்பாள் என்று அனைவருக்குமே தோன்றியது.

      வீடு முழுவதும் தேடியவர்கள்., அவர்கள் வீட்டு மொட்டை மாடியிலும் சேர்ந்து தேடத் தொடங்கினர்.,

    அப்போது தான் சிவாவின் வீட்டு மொட்டை மாடியை விட்டு கீழே இறங்கி வரும் போது சரண் யோசனையோடு கீழே வந்தவன்.,

     “இன்னொரு தடவ வண்டி எடுத்துட்டு போங்க., எல்லாரும் மெதுவாக ஒவ்வொரு ஏரியாவாக தேடுங்க., அம்மாவும் அத்தையும் வீட்டிலேயே இருங்க கொஞ்சம் லேசா சுத்திப் பாருங்க.,  இன்னொரு முறை தோட்டத்துக்குள் பாருங்க., ரெண்டு பேரும் லைட்ட போட்டுட்டு போங்க.,  மழை பெஞ்சு இருக்கு பூச்சி எதுவும் இருக்க கூடாது கையில் கம்பு எடுத்துக்கோங்க”.,  என்று சொல்லி விட்டு நிதானமாக மீண்டும் படிகளில் ஏறியவன் மொட்டை மாடியை ஒரு முறை மீண்டும் சுற்றி வந்தான்.

          ஏனெனில் அவளுக்கு எப்போதும் மொட்டைமாடி  பிடித்த இடம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்., கோபம் வந்தாலும் சிவாவோடு சண்டை போட்டாலோ அல்லது கல்லூரி தோழிகளோடு பிரச்சனை வந்தாலோ., ப்ரபஸர் திட்டினால் கூட அவள் மொட்டைமாடியில் தான் தவம் இருப்பாள்.,  என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.,

      எனவே  மீண்டும் மொட்டை மாடிக்கு வந்தவன் அங்கு அவளை காணவில்லை என்றவுடன் இறங்க தோன்றியது..,

       மீண்டும் அம்மாவும் மதுவின் அம்மாவும் தேடுவதை உறுதி செய்து கொண்டவன் எங்கே போய் இருப்பாள் என்ற எண்ணத்தோடு அவள் அறையிலும் சென்று தேடினான்.

    அப்போது அவள் என்னைத் தேட வேண்டாம் என்று எழுதி வைத்த பேப்பரை ஒருமுறைக்கு இருமுறை வாசித்தவன்., அதில் அவள் நிதானமாக எழுதி இருப்பதைப் பார்த்தவுடன் ‘இவ நிதானமா தான் எழுதி இருக்கா., அப்போ எங்கேயோ தெரிஞ்ச இடத்துக்குத்தான் போயிருக்கனும்., தெரியாத இடத்துக்கு போய் இருக்க வாய்ப்பில்லை’., என்று யோசிக்கும் போதே..,

    ‘இல்ல நிதானமா எழுதிட்டு பிளான் பண்ணி எங்கேயும் போயிருந்தா’., என்றும் தோன்றியது மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டிருந்தவன் அருகில் இருந்த புத்தகத்தை எடுத்து பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.,

         அவள் நந்தினியோடு பேசும் போது அந்த புத்தகத்தை தான் கையில் வைத்துக் கொண்டிருந்தாள்.

      அதில் அவள் சொன்னதை போல  ‘தெரியாத பேயை விட தெரிந்த பிசாசே மேல்’ என்று எழுதி வைத்திருந்ததை பார்த்ததும் ‘எதுக்கு இந்த வார்த்தை எழுதி இருக்கா’ என்று யோசித்தவன்., ‘ஏதாவது தெரிந்த பிரென்ட் வீட்டுக்கு போய் இருக்காளா., இல்ல வேற எங்கேயும்  போயிருபாளா’., என்று யோசித்தான்.,

  ஆனால் அவன் மனம் என்னவோ மொட்டை மாடியில் சுற்றிக் கொண்டிருக்க.,  மீண்டும் மொட்டை மாடிக்கு ஏறினாள்.,

         ஏறியவன் கீழே ஆட்கள் வரும் பேச்சு சத்தம் கேட்கவும்.,  எட்டிப்பார்க்க, எங்கும் இல்லை என்பது போல் அவர்கள் பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

        சத்தமே இல்லாமல் மொட்டை மாடியில்  மது வீட்டில்  சின்டெக்ஸ் டேங்க் வைத்திருக்கும் மொட்டைமாடியில் உயரமான இடம் ஒன்று உண்டு., அதற்கு சிறிய ஏணி போல போட்டு இருப்பார்கள்.

         அந்த ஏணியில் ஏறுவதற்காக கால் வைத்தவனுக்கு ஒரு நிமிடம் மனம் நடுங்கி தான் போனது.,

         ஏனெனில் ‘வேறு ஏதேனும் தவறான முடிவு எடுத்து இருப்பாளோ’என்று தோன்ற தொடங்கிய போதே மனம் படபடப்போடு லேசாக கால்கள் நடுங்குவது போல இருந்தது.,

         ‘தேவையா இவங்க எல்லாரும் சேர்ந்து கடைசில எனக்கு ஒரு பாவத்தை ஏற்படுத்தி விட்டார்களே’என்ற எண்ணம் தான் அவன் மனதில் ஆழமாக தோன்றியது.,

      எதுவும் பேசாமல் மேலே ஏறியவன் தன் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து லைட் ஆன் செய்து விட்டு சின்டெக்ஸ் ன் மூடியை திறந்தவன்., உள்ளே மெதுவாக லைட்டை அடித்து பார்த்தான்., எதுவும் இல்லை என்று தோன்றும் போது நிம்மதி பெரு மூச்சு விடுவதற்கு பதிலாக மனதிற்குள் ஒரு பதட்டம் வந்தது.,

      ஏனெனில் காலின் அடியில் ஏதோ ஊர்வது போல தோன்றியது.,  ஒரு நிமிடம் பயந்தவன் அதை லைட் அடித்து பார்க்க ஏதோ துணி போல தோன்ற பதறிப்போய் அதை லைட்டை நன்றாக அடித்து பார்க்கும் போது தான் அங்கே சின்டெக்ஸ் டேங்க் ஓரமாக சுருண்டு அரை மயக்கத்தில் கிடந்த மது தெரிந்தாள்.,

       அவ்வளவு நேரம் பெய்த மழையில் நன்றாக நனைந்து குளிரில் சுருண்டு இருந்திருக்கிறாள்.,

பயத்தில் சுருண்டாளா இல்லை., குளிரில் சுருண்டு இருக்கிறாளா., என்று தெரியாத அளவிற்கு கண்மூடி கிடந்தாள்.,

      மெதுவாக காலை முட்டி போட்டு கீழே அமர்ந்தவன்., அவள் கன்னத்தில் தட்டி “மது மது” என்று சத்தம் கொடுக்க அவளிடமிருந்து சிறு முணங்கள் கூட இல்லாமல் இருந்தது.,

         பதறியவன் வேகமாக கன்னத்தில் தட்டி அருகில் கிடந்த அவளின் சாலை எடுத்து அவள் முகத்தை அழுத்தமாக துடைத்தான்.

     அவளிடமிருந்து சிறிய ஒரு விம்மல் சத்தம் மட்டும் வெளியே வந்தது.,

       அழுது கொண்டே இருந்திருப்பாள் போல என்று தோன்றியது.,  மெதுவாக அவள் கன்னத்தை தட்டி மீண்டும் “மது மது” என்று அழைத்தான்.

      அவளோ எதுவும் பேசாமல் சத்தமே இல்லாமல் இருக்க மீண்டும் கன்னத்தில் வேகமாக தட்டினான்.

     அவனுக்கு அவள் கிடைத்ததையோ., அங்குதான் இருக்கிறாள் என்பதையோ., பதட்டத்தில் கீழே சொல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட வராமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்., பின்பு தன் போனில் லைட்டை அனைத்து பாக்கெட்டில் போட்டவன்., அவள் சாலில் ஈரம் இருப்பதை உணர்ந்து அதை நன்றாக பிழிந்து அவள் மேல் போட்டு விட்டான்.

      அப்போது தான் மழை குறைந்து வானம் வெளுத்து கருமேகம் விலகி நிலவு வெளிச்சம் தெரிய தொடங்கியிருந்தது.,  அதனால் அவனால் எளிதாக மற்றவற்றை எல்லாம் செய்ய முடிந்தது.,

        எதுவும் பேசாமல் அவள் கன்னத்தை தட்டி மீண்டும் எழுப்ப முயற்சித்தான்., அங்கிருந்த தண்ணீரைத் தொட்டு அவள் முகத்தை மெதுவாக கைகொண்டு துடைத்தான்., மீண்டும் குளிரில் ஒடுங்கியவளை நிமிர்த்தி அமர்த்தினான்.

       அவள் முகத்தை மீண்டும் துடைத்தவன் “மது எழுந்துக்கோ” என்று கன்னத்தில் வேகமாக தட்டினான்.,

       அவளோ அரை மயக்க நிலையில் இருந்து கண்விழித்தவள்., ஏதோ  கனவில் இருப்பது போல ம்ம் ம்ம் என்று மட்டும் சத்தம் கொடுத்தாள்.

      “மது கண்ண தெறந்து பாரு., உன்னை காணும் ன்னு வீட்ல தேடிட்டு இருக்காங்க.,  நீ இங்க வந்து என்ன பண்ணிட்டு இருக்க”., என்று அதட்டலாக கேட்டான்.

      “நீங்க என்னை திட்டி திட்டி பேசுறீங்க”., என்று அறை மயக்க நிலையில் அழத் தொடங்கினாள்.

Advertisement