Advertisement

5

          சின்ன சின்னதாக ரசிக்க
தொடங்கிய விழிகள்
மட்டுமே உண்மை
சொல்லும்.,
வார்த்தை பல இடங்களில்
உண்மையை மறைக்கவே
முயற்சிக்கும்.,

திருமணத்தை நிறுத்துவது பற்றி பேசிய பிறகு அவளிடம் யாரும் மீண்டும் அதைப் பற்றி பேசவில்லை.,

          இரு வீட்டிற்கும் முன்புபோல பேச்சுவார்த்தை இல்லை என்பதை மதுவின் அம்மா அவ்வப்போது ஜாடையாக மதுவை திட்டுவதில் இருந்து மது அறிந்துகொண்டாள்.

                அவளுக்கும் மனதிற்குள் வருத்தம் தான்., ‘சிவாக்கும் தனக்குமான இத்தனை வருட நட்போடு பழகியது எல்லாம் இந்த ஒரு பேச்சோடு முடிந்துவிட்டதா’., என்று மட்டும் தான் தோன்றியது.

         அது மட்டுமல்லாமல் சிவாவின் அம்மாவும் அவளின் அம்மாவும் எந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தவர்கள் என்பது தெரியும்., ஆனால் இருவரும் இப்பொழுது பேசிக் கொள்வதே இல்லை என்பதை மதுவின் அம்மா ஜாடைமாடையாக சொல்லும் போதெல்லாம் வருத்தமாகவே இருக்கும்.,  அதை நினைத்துக் கொண்டிருந்தவள் இப்போது அவளுடைய தோழிக்கு அழைத்திருந்தாள்.

         “என்னடி., லீவ் டைம்ல என் ஞாபகம் எல்லாம் உனக்கு வருது போல” என்று கேட்டாள்.,

        “ஆமாமா வருது வருது”., என்றவள் “ரிசல்ட் எப்ப டி வரும்” என்று கேட்டாள்.

        “ரிசல்ட் வருவதற்கு இன்னும் ஒரு மாசம் ஆகும் போல., நம்ம ஃபைனல் இயர் இல்ல நமக்கு லேட்டாகும்” என்று சொல்லிக்கொண்டிருந்தவள்., “ஏன் கேட்கிற ரிசல்ட் பத்தி” என்று கேட்டாள்.

              “அட்லீஸ்ட் ரிசல்ட் வந்துச்சினா., பி.ஜி ஜாயின்ட் பண்ணிட்டு காலேஜ் வரலாம் இல்ல., வீட்ல ரொம்ப போர் அடிக்குது.,  இந்த சிவா பன்னி மாடு வேற என்கிட்ட பேச மாட்டேங்கிறான்”., என்றாள்.

            அதைக்கேட்ட அவள் தோழியும் “ஆமா உன் மேல எல்லாருக்கும் இருக்குற வருத்தம் தான்., அதனால கூட உன்ட்ட கோபப்பட்டு பேசாம இருக்கலாம்.,  உன் மேல தான் தப்பு, நீ தான் இப்ப சாரி கேட்டு பேசணும்”., என்று சொன்னாள்.

          ஒஒ சாரி கேட்டு நான் பேசினா தான் என்கிட்ட பேசுவானா., அப்போ இத்தனை வருஷம் பிரெண்டா பழகினதுக்கு என்ன அர்த்தம் இருக்கு., அவன் அப்படி ஒன்னும் ஃபிரண்டா என்று பழகவே வேண்டாம்., அவன்ட்ட சாரி கேட்டேனா,  மறுபடியும் பேச்சு ஆரம்பிப்பாங்க., அது எதுக்கு தேவையே இல்லை”.,  என்று அவளுடைய ஈகோ தலைதூக்க சொன்னாள்.,

        “சரி விடு., ஓவரா யோசிக்காத, எங்காவது  நீ வெளியே போய்ட்டு வர வேண்டியது தானே”., என்று சொன்னாள்.,

       மதுவோ “போரடிக்குது ன்னு சொன்னா மட்டும்  வீட்ல வெளியே கூட்டிட்டு போயிட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க பாரு., என்றாள் சற்றே கோபத்தோடு.,

     “மாட்டாங்க தானே அப்புறம் என்ன புலம்பல்., ஏன்  வெளியே வருவது பத்தி யோசிக்கிற”., என்றாள் தோழி

           “ம்ம்., ஆமா நீ யூ.ஜி க்கு அடுத்து ஏதாவது பண்ணுற ஐடியா இருக்கா”., என்று கேட்டாள்.

        “அது என்ன அப்படி கேட்டுட்ட.,  நீ ஜாயின் பண்ண முடிவு பண்ணியாச்சு., எங்க வீட்டுல எங்க அப்பா முடிவு பண்ணுவாரு”., என்றாள்.

       “நான் நம்ம காலேஜ்ல பி.ஜி பண்ண வேண்டாமாம்.,  அப்பா அவருடைய சொந்த ஊரில் போய் ஜாயின் பண்ண சொல்லுறாங்க., பெரியப்பா வீட்டில் இருந்து படிக்கப் போகனுமாம்”., என்று சொன்னாள்.

        “அப்ப நம்ம காலேஜ்க்கு வரமாட்டியா., அய்யோ நான் தனியாவா பி.ஜி ஜாயின் பண்ணனும்”., என்று கேட்டாள்.

     “ஏன் நம்ம காலேஜ்ல வேற ஆட்களே இருக்க மாட்டாங்களா.,  நீ மட்டும் தான் தனியா போய்  உட்கார போறியா., லூசு மாதிரி பேசாதே”., என்று சொல்லிவிட்டு மற்ற விஷயங்களை பேசிக் கொண்டிருந்து விட்டு போனை வைத்தாள்.

       இவளோ யோசனையோடு அறைக்குள் அடைந்து கிடந்தாள்., அதே நேரம் அவளின் அம்மா “நான் வெளியே போறேன் கதவை பூட்டிட்டு இரு”.,  என்று யாரிடமோ சொல்வது போல சொல்லிவிட்டு சென்றார்.

            மீண்டும் தோழிக்கே அழைத்தவள்., “ஏன்டி எல்லாரும் இப்படி இருக்காங்க., இப்ப கூட பாரு எங்க அம்மா வெளியே போறேன்னு யார்ட்டையோ சொல்ற மாதிரி சொல்லிட்டு போறாங்க”., என்று சொன்னாள்.

         தோழியோ மனதிற்குள்., ‘பின்ன உன்கிட்ட சிவா அம்மாவை மீட் பண்ணி., ரெண்டு பேரும் பேச போறோம் னா சொல்லிட்டு போவாங்க.,  அவங்க எல்லாரும் பேசிட்டு தான் இருக்காங்க., உன் முன்னாடி பேசாத மாதிரி இருக்காங்க’., என்று நினைத்துக் கொண்டவள்.,

       “வெளியே முக்கியமான வேலையா போவாங்களா இருக்கும்.,  அதைப்பற்றி உனக்கென்ன, வீட்டுக்குள்ள நீ ஜாலியா என்ஜாய் பண்ணு”.,  என்று சொன்னவள்.

       “இதுக்காகவா கூப்பிட்ட”என்றாள்.

       “ம்ம் ஆமா., நீ என்னடி பண்ற”., என்று கேட்டாள்.

       “உனக்கு லூசு தான் பிடிக்க போகுது.,  நிம்மதியா ஒரு படம் பார்க்க விடுறீயா., போடி போய் வேற வேலை இருந்தா பாரு” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தாள்.

        ‘இவ தான் லூசு., இவ கூட பேச மாட்டேன்’ என்று நினைத்துக் கொண்டே போனை கட் செய்தவளுக்கு சிவாவோடு வெளியே சுற்ற சென்ற காலங்களை நினைத்துக்கொண்டாள்.

         இந்நேரம் சிவாவோடு பேசிக் கொண்டிருந்தால்., ‘டேய் போர் அடிக்கு’ என்று சொன்னாலே போதும் வண்டியை எடுத்துக் கொண்டு வருவான்.,  அல்லது வெளியே சுற்ற.,  அல்லது நண்பர்களோடு அவன் விளையாட செல்லும் இடங்களுக்கு அழைத்துச் செல்வான்.

          இப்ப பாரு தனியா உட்கார்ந்து இருக்கோம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்., “அதற்காக அவன் அண்ணனை எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது” என்று தனக்குத்தானே பேசிக் கொண்டாள்.,

     “சரி தான் போடா., அப்படி ஒரு பிரெண்ட்ஷிப் எனக்கு ஒன்னும் தேவையில்லை”., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

         அன்று மாலை அவள் அப்பா வீட்டிற்கு வந்தவுடன்., “அப்பா இன்னும் கொஞ்ச நாள்ல ரிசல்ட் வந்துரும்., நான் பிஜி ஜாயின் பண்ணனும்”., என்று சொன்னாள்.

        அவள் அம்மாவோ “இது ஒண்ணுதான் குறைச்சல்”., என்று சொல்லிவிட்டு சென்றவர்.,

      “இங்க பாருங்க சிவா வீட்டில் சரணைதான் வேண்டாம்னு சொல்லிட்டா., அதுக்காக கல்யாணம் பண்ணாம வீட்ல எல்லாம் வச்சு இருக்க முடியாது., சட்டுபுட்டுன்னு மாப்பிள்ளை பாருங்க., கல்யாணத்தை பண்ணி கொடுத்துட்டு நிம்மதியா இருப்போம்”., என்று சொன்னார்.

       “அதெல்லாம் முடியாது., நான் படிக்கணும்”., என்று அவள் பதிலுக்கு சொன்னாள்.

        மதுவின் அப்பாவோ “இங்க பாருமா என்ன படிக்கணுமோ படிச்சிக்கோ.,  அப்ளிகேஷன் வாங்கிட்டு வா, கையெழுத்தை போட்டு தாரேன், எவ்வளவு ஃபீஸ் கட்டனும் ன்னு சொல்லு., அமௌன்ட் தர்றேன் நீயே கட்டிக்கோ., நீ உன் இஷ்டத்துக்கு போய் படி., அப்பாட்ட எதுவும் கேட்காத.., இதுல உன் இஷ்டப்படி தான் நடக்குது., இதுல நான் ஒன்னுமே சொல்லல”., என்று சொன்னார்.

          பட்டும் படாமலும் தன் படிப்பு விஷயத்தில் பேசும் அப்பாவை பார்த்ததும்  கோபம் தான் வந்தது.,  வேறு எதுவும் சொல்லாமல் பின்புறமாக வாசலில் சென்று நின்றவளுக்கு மனதிற்குள் புலம்பதான் முடிந்தது.,

        ‘இது என்ன வீட்ல யாரோ மாதிரி பேசுறாங்க.,  என்ன நினைச்சுட்டு இருக்காங்க., எதுக்கு எடுத்தாலும் அம்மா உடனே சரணை தான் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்ட., வேற மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சா என்ன ன்னு கேட்குறாங்க.,  இது சரியில்லையே., பேசாம வேற ஊர்ல போய் காலேஜ் சேர்ந்துட்டா என்ன’., என்று அவளுக்கு அவளே பேசிக்கொண்டு இருந்தாள்.

அப்பாவும்., அம்மாவும் அவள் தன் கையை ஆட்டி பேசிக் கொண்டிருப்பதை மட்டும் பார்த்தவர்களுக்கு அவள் பேசுவது கேட்கவில்லை.,  இருவரும் அவளே யோசித்து ஒரு முடிவுக்கு வரட்டும் என்று சொல்லிக் கொண்டனர்.

     அவ்வப்போது தனியாக மது புலம்பிக் கொண்டாலும்., வீட்டில் உள்ளவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டு தான் இருந்தாள்.

        அருகில் சிவாவின் வீட்டிலும் அது போல தான் இப்போது யாரும் இவளோடு பேசுவதில்லை., இவள் இல்லாத நேரத்தில் அவர்கள் பேசிக் கொள்கிறார்களா.,? என்பது கூட அவளுக்குத் தெரியாது.

     வீட்டில் இருக்கும் போது முடிந்தவரை தன் அறையில் இருந்து வெளியே வராமல் இருந்து கொண்டாள்.,  இப்படியே நாளும் கிழமையும் ஓட அவளின் கல்லூரி திறக்கும் நாளும் நெருங்கியது.

               முதல் நாள் கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருக்கும் போதே வெளியே தாயும் தந்தையும் பேசுவது தெளிவாக கேட்டது., “இந்தா பாருங்க அவ இஷ்டத்துக்கு காலேஜ் படிக்க வைக்கிறேன் ன்னு சொல்லிட்டீங்க”., என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே.,

      “நான் எங்க சொன்னேன்., அவ இஸ்டத்துக்கு அவதான் ஜாயின் பண்ணினா.,  நான் பணம் மட்டும் தான் கொடுத்தேன்., என்னமோ நானே போய் சேர்த்து விட்டுட்டு வந்த மாதிரி பேசுற.,  அவ தான் பி.ஜி ஜாயின் பண்ண போறேன் ன்னு சொன்னா., அவளே சேர்ந்து கிட்டா., என்னமோ தெரியாத மாதிரி நீ என்கிட்ட பேசற., அவ சேரும் போது நான் பணம் கொடுக்கும் போது நீ பார்த்துட்டு தானே இருந்த.,  அப்பவே சொல்லி இருக்க வேண்டியது தானே”., என்று தந்தை பதில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.

        ‘இரண்டு பேரும் இத  வச்சு சண்டை போடுவாங்க’ என்று மனதிற்குள் நினைத்தபடி கிளம்பிக் கொண்டிருந்தாள்.

     அதே நேரம் மீண்டும் மதுவின் அம்மா அப்பாவிடம் “படிக்கிறா ன்னு சொல்லி அதுக்காக இப்படியே விட்டுறாதீங்க.,  சரணை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னா., இப்ப வேற மாப்பிள்ளை பாருங்க.,  ஆனா சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்., அவளை எவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணி கொடுக்கிறோமோ., அவ்வளவு சீக்கிரம் நல்லது அத புரிஞ்சுக்கோங்க.,  அவ ஜாதகத்துல இப்பதான் கல்யாணம் நேரம் கூடி இருக்காம்., இன்னும் லேட் ஆச்சுன்னா ரொம்ப லேட் ஆகுமாம்” என்று வெளியே பேசிக்கொண்டிருந்தார்.

       இவளோ அறைக்குள் ‘ஜாதகமாம் பெரிய ஜாதகம்., பாரின்ல எல்லாம் ஜாதகம் பார்த்து தான் கல்யாணம் பண்றாங்களா என்ன., இப்ப இதெல்லாம் யார் பார்க்கிறாங்க.,  புதுசா இவங்க மட்டும் தான் வேணும் ன்னே ஜாதகம் ஜாதகம் ன்னு பேசுறாங்க., நல்ல வந்தாங்க எனக்கு ன்னு., முதல் நாள் காலேஜ் போறாலே சந்தோஷமா அனுப்ப நினைக்கிறாங்களா..,

     கண்டிப்பா இப்போ பாரு மூஞ்ச தூக்கி வைச்சிட்டு போ அப்படின்னு சொல்வாங்க’.,  என்று தனக்குள் சொல்லிக் கொண்டே கிளம்பி கொண்டு இருந்தாள்.,அதற்குள் அங்கு தாயும் தந்தையும் மீண்டும் பேசுவது கேட்க தொடங்கியது.

        “இங்க பாரு மாப்பிள்ளை பார்க்க மாட்டேன் ன்னு நான் சொல்லல., அவ கல்யாணத்துக்கு முதல்ல சம்மதிக்கிறாளா ன்னு நீ கேளு.,  மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள நடுவீட்டில் கூட்டிட்டு வந்து மூக்குடை பட எல்லாம் முடியாது.,  ஏதோ பக்கத்து வீட்டில் அவங்க இவ்வளவு நாள் ஒண்ணா பழக போய் வேண்டாம் சொன்னதையும் கண்டுக்காத மாதிரி இருக்காங்க., என்ன இப்போ  முன்னாடி மாதிரி எல்லாம் அவங்க கூட பேசி பழக முடியலை.,  எல்லாம் இவளால் தான் இவ்வளவு ஏன் அவளோட இத்தனை வருஷ பிரெண்ட்ஷிப்பை கெடுத்து வச்சிருக்கா., சிவா கூட பேச முடியுதா இவளால.,  இல்ல தானே.,

        அதே மாதிரி நான்  மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள பார்க்க முடியாது.,  சொந்தக்காரன கூட்டிட்டு வந்துட்டு., இவளால மொத்தமா சொந்த பந்தம் எல்லாத்தையும் சண்டை போட்டுட்டு மத்தவங்க ட்ட மூஞ்ச காட்ட முடியாது.,  அதனால அவளுக்கு கல்யாணத்துக்கு எப்ப சம்மதிக்குறா கேளு.,  அதுக்கு அப்புறம் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கிறேன்.,

      நாம மாப்பிள்ளை பார்த்து கூட்டிட்டு வர., இவ ஏதாவது பேசிட்டா முடியாதுன்னு சொல்லிட்டா.,  மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்துற மாதிரி ஆகிரும்., அதுவும் சொந்தக்காரங்களா போயிட்டாங்கன்னு வை.,  ரொம்ப பிரச்சனை ஆயிடும்., வெளியே போய் அவன் பொண்ணு சம்மதிக்க மாட்டேன்னு சொல்லிடுச்சு.,  அப்படி இப்படினு வெளியே போய் சொல்லுவாங்க.,

       ஒருத்தன் மாத்தி ஒருத்தன் ன்னு சொல்லி அப்படியே பரவிரும்., அப்புறம் சொந்தத்துல கூட மாப்பிள்ளை கிடைக்காது பாத்துக்கோ.,  திருப்பி எல்லாம் நம்ம இஷ்டத்துக்கு மாப்பிள்ளை பார்க்க முடியாது., அதனால முதல்ல அவ கிட்ட பேசு”., என்று சொல்லிவிட்டு அவர் அலுவலகம் செல்ல கிளம்புவதற்காக அறைக்குள் செல்வதை பார்த்தாள்.,

Advertisement