இதோ இரண்டாவது நாள் காலை வேலையில் நேரே இங்கே அத்வைத் வீட்டிற்குத் தான் வந்தனர் சம்யுக்தாவும் அவளின் தாத்தா பாட்டியும். அன்று ஞாயிறு, விஸ்வநாதன் தன் மற்ற இரண்டு மக்கள், பெரியவன் ஷாந்தனு, சிறியவன் அபிஜித்துடன் சென்று அவர்களை அழைத்து வந்தார்.
ஏர்போர்டில் அப்பாவைத் தம்பிகளை பார்த்ததும் அவ்வளவு உற்சாகம் மகிழ்ச்சி சம்யுக்தாவிற்கு… கிட்ட தட்ட இரண்டு வருடமாகிறது அம்மாவையும் தம்பிகளையும் நேரில் பார்த்து, விஸ்வநாதன் மட்டும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை சென்று மகளை பார்த்து வந்து விடுவார்.
“பா, என்னப்பா இப்படி வளர்ந்துட்டானுங்க? எனக்கு வீடியோ கால்ல பார்க்கவும் தெரியலை” என்று ஆச்சர்யப்பட்டவள்…
“டேய், இன்னும் நீ காலேஜ் போனா எனக்கு அண்ணா மாதிரி ஆகிடுவடா” என்றாள் பெரியவனை பார்த்து, சிறியவனை பார்த்து “டேய், என்னை விட நீ ஹைட் ஆகிட்ட” என்றாள். இப்படியாக அவளின் உற்சாகம் அமர்க்களப்பட்டது.
“பா, அம்மா ஏன் வரலை?”
“அம்மா, அங்கே அத்தை வீட்ல இருக்காங்க?”
“அம்மா, அத்தை வீட்லையா? என்னடா இது நம்ம வீட்டுக்கு வந்த சோதனை, ஆமாம் இந்த சாதனை எப்போ நடந்தது”
“ஓய் அக்கா டீ, யு எஸ் ரிடர்ன், நீ என்ன தமிழ்ல பின்ர” என்றான் அவளின் சிறிய தம்பி.
“நம்ம யு எஸ் ல போய் இங்கிலீஷ் கத்துக்கறது முக்கியம் இல்லை, அங்க இருக்குறவனுக்கு தமிழ் கத்துக் குடுக்கணும்டா, அது தான் நம்ம டிசைன்” என்று அவளின் சட்டையின் காலரை தூக்கிவிட்டாள்.
ஆம்! நீள கால்சராய், ஒரு குட்டை கை வைத்த சட்டை அதனை கால்சராயினுள் அடக்கி இருந்தாள். மேலே நீளமாய் முட்டிக்கு மேல் இருக்கும் அங்கி… பார்க்க… ஒரு நவீன அழகி… அவ்வளவு பாந்தமாய் பளிச்சென்று இருந்தாள். எந்த அணி மணிகளும் இல்லை… காதில் இருந்த தோடு மட்டுமே, ஒரு சிறிய கருப்புப் பொட்டு. கழுத்து கைகள் என்று எதிலும் ஒன்றுமில்லை. தோள்வரை இருக்கும் முடி. அது பாட்டிற்கு அவள் தலையை திருப்பம் திசையெல்லாம் பறந்தது.
“ஏன்டா விஸ்வநாதா, உன் பொண்ணையே தான் பார்ப்பியா? அப்பா எப்படி இருக்கார்ன்னு கேட்க மாட்டியா?” என்று விஸ்வநாதனின் அம்மா பொரிய…
“ஏன், ரெண்டு மாசம் முன்ன தானே தாத்தா வந்தார், என்னை எங்கப்பா பார்த்து ஆறு மாசம் ஆச்சு” என்று உடனே சம்யு பதில் கொடுத்தாள், அப்பாவின் தோளில் சாய்ந்து செல்லம் கொஞ்சி.
“எப்போ தான் பதிலுக்கு பதில் பேசறதை விடுவியோ, ரொம்ப வாயாகிடுச்சு உன் பொண்ணுக்கு, என்ன வளர்க்கறியோ?” என்று அவளின் பாட்டி சொல்ல…
“உங்க பொண்ணுங்களுக்கு இருக்குற வாயை விட கம்மி தான், நீங்க வளர்க்கறதை விட எங்கப்பா என்னை நல்லா வளர்க்கறார்” என்று சொல்லிவிட…
விஸ்வநாதன் மகளை முறைத்தார்!
அவர் முறைக்கவும் “பா” என்று சம்யு சிணுங்க…
“நம்மை புரியாதவங்களுக்கு, நம்மை புரிய வைக்க நினைக்கறது முட்டாள்தனம், இவங்களை என்னால திட்ட முடியாது” என்று அம்மாவை காண்பித்து சொல்ல…
விஸ்வநாதனுக்கு கோபம் வந்து விட்டது என்று அங்கிருந்த அனைவருக்கும் புரிய, அப்பாவின் கோபத்தில் சம்யுக்தாவின் கண்கள் கலங்கிவிட்டது.
“நீங்களே உங்க அப்பா அம்மாவைக் கூட்டிட்டு வாங்க” என்று சொல்லியவள் வேகமாக நடந்து விட, அவளின் இரு தம்பிகளும் அவளின் பின் சென்று விட்டனர்.
“பாரேன், கொஞ்சம் கூட மரியாதை இல்லாமப் போறா” என்றும் சொல்ல…
நிச்சயம் இவர்களை தன்னால் சமாளிக்க முடியாது என்று புரிந்தவர், மனைவி பார்த்துக்கொள்வால், “ஸ்ரீதேவியே சரணம்” என்று மனதினில் நினைத்து நேராக அவர்களை அழைத்துக் கொண்டு சிந்தூராவின் வீட்டிற்கே சென்றார்.
ஆனால் அது வரையிலும் மக்கள் வரவில்லை, அவர்களின் கையில் பெரிதாய் லக்கேஜ் இல்லை, ஆளுக்கு ஒரு பெட்டி மட்டுமே, எப்படியும் திரும்ப போகப் போகிறார்கள் என்று.
கோபத்தில் வந்தாலும் ஆண்மக்கள் இருவரும் பெட்டிகளை தூக்கி கொண்டு தான் வந்தனர்.
காலையில் எழுந்து எல்லோரும் அப்போது தான் காஃபி டீ என காலை பானங்கள் அருந்தும் நேரம்…
சுசீலாம்மா அந்த நேரமே குளித்து அமர்ந்திருந்தார். இவர்கள் மூவரும் வருவதைப் பார்த்ததும் “வாங்க, வாங்க” என்று வரவேற்க… அவர் அங்கே இருப்பதை பெரியவர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை. சிறு முகமாற்றம், அதனை சுசீலாம்மா கண்டு கொண்டார்.
“வாங்க அண்ணி” என்று விஸ்வநாதனின் அப்பா வரவேற்க, “அக்கா எப்போ வந்தீங்க?” என்று விஸ்வநாதனின் அம்மா கேட்க…
“எப்போ வந்தேன்னு கேட்டீங்களா இல்லை ஏன் வந்தீங்கன்னு கேட்டீங்களா?” என்று கேட்க…
“அச்சச்சோ” என்று பதறி விட்டார் அவர்.
“அம்மம்மா என்ன இது?” என்று அதட்டிக் கொண்டே அத்வைத் வந்து அமர்ந்தவன், “வாங்க” என்றான் இருவரையும் பார்த்து.
“இல்லைடா, அவங்க கேட்ட த்வனி அப்படி தான் இருந்தது” என்றார் அசால்ட்டு போல சுசீலாம்மா.
அதற்குள் ஸ்ரீதேவி வந்திருந்தவர், “எங்கெங்க சம்யு” என்றார். மகளைப் நேரில் பார்க்கும் ஆர்வம் இரு வருடங்களுக்குப் பிறகு.
“அவ தம்பிகளோட வர்றா?”
“ஏன் உங்களோட வரலை?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே சம்யுவும் அவளின் தம்பிகளும் வர, யார் இருக்கிறார்கள் இல்லையென்றெல்லாம் கவனிக்கவில்லை, “அம்மா” என்று வேகமாய் வந்து அணைத்துக் கொண்டாள்.
ஆனால் அவள் உள்ளே நுழைந்ததுமே கவனித்து விட்டான் அத்வைத்…
முக வாட்டம் நன்கு தெரிய, கண்கள் கலங்கலாய் இருப்பதும் தெரிந்தது.
அம்மாவை அணைத்து முடித்து விலகி சுற்றம் பார்க்க, அங்கு அத்வைத்தும் அவளின் பாட்டியும் இருப்பதும் தெரிய, தயக்கமாய் பார்த்தாள் இருவரையும்.
அவளிடம் கோபம் தள்ளி வைத்திருக்கிறோம் பேசக் கூடாது என்பதெல்லாம் அந்தக் க்ஷணத்தில் ஞாபகம் வரவில்லை “அழுதியா, எதுக்கு அழுத?” என்று அத்வைத்தின் கேள்வி வந்தது.
“இல்லையே, நான் அழலையே” என்று பயந்து இரு கைகைளையும் ஆட்டி சிறு பிள்ளையாய் மறுத்தாள். ஆம்! அமெரிக்கா போன புதிதில் அம்மா அப்பா வீட்டை விட்டு வந்தது ஹோம் சிக் ஆக, நினைத்த நேரமெல்லாம் ஒரு மாதங்கள் அழுது வைப்பாள். அத்வைத் என்றொருவன் அங்கில்லையென்றால் அப்போதே இந்தியா திரும்பி இருப்பாள்.
அழுதாள் என்று தெரிந்தால் வைத்து வாங்கிவிடுவான். அந்த பயத்தில் வார்த்தைகள் வேகமாய் வந்தது.
ஏதோ டீச்சர் முன் நிற்கும் மாணவியாய் தான் தோற்றம். அக்காவை இவ்வளவு பவ்யமாய் தம்பிகள் பார்த்ததேயில்லை, ஆச்சர்யமாய் பார்த்தனர். அதற்குள் ஸ்ரீஷா, கீதா, அஸ்வி என்று எல்லோரும் ஹாலிற்கு வந்திருந்தனர்.
அத்வைத் நம்பாமல் விஸ்வநாதனைப் பார்க்க… அவர் விழித்தார் என்ன சொல்வது தெரியாமல். ஸ்ரீதேவி இவனுக்கு என் மகளை இவ்வளவு தெரிகிறதா என்று யோசித்துக் கொண்டே சம்யுக்தாவின் முகத்தினை ஆராய்ந்தார், ஆம்! அழுதிருக்கிறாள், தெரிந்தது. ஆனால் என் கவனத்தில் கூட உடனே பதியவில்லையே என்று யோசித்துப் பார்த்திருந்தார்.
அத்வைத் மீண்டும் கண்டிப்புடன் சம்யுக்தாவைப் பார்க்க…
பதில் சொல்லாமல் விட மாட்டான் என்று புரிந்து “அது அப்பாவை மிஸ் பண்ணினேனா, அவரைப் பார்த்ததும் எமோஷனல் ஆகிட்டேன்” என்று அடித்து விட்டாள். அவள் சொல்லிய பாவனையில் சிறுவர்களுக்கு சிரிப்பு, ஆனாலும் அமைதியாய் நின்றனர் அத்வைதைக் கொண்டு.
“நீ உங்கப்பாவை மிஸ் பண்ணின, அவரைப் பார்த்ததும் எமோஷனல் ஆகிட்ட, நம்பிட்டேன்” என்றவன், “சரி, போ பிரெஷ் ஆகிக்கோ” என்று அவளை விட…
அவனின் அம்மமாவை தயக்கமாய் பார்த்தாள் புன்னகைக்கவா வேண்டாமா என்பது போல…
“சிரி, என்னோட அம்மம்மா உன்னோட சிரிப்பை பார்த்து பயந்துக்க மாட்டாங்க” என்றான் இலகுவாக அதே சமயம் ஸ்ட்ரிக்ட் ஆஃபிசராக…
தயங்கி ஒரு அசட்டு சிரிப்பைக் கொடுக்க, பார்த்த சுசீலாம்விற்கு பொங்கிய சிரிப்பு, சத்தம் போட்டு சிரித்து விட்டார் அவளின் பாவனையில்…
“சின்ன பிள்ளைல பார்த்தது” என்றவர் “வாம்மா வந்து உட்கார்” என்று பக்கத்துக்கு இருக்கையை காண்பிக்க…
“அம்மம்மா, அவ வருவா இப்போ தானே வந்தா போ” என்று விட்டான்.
விட்டால் போதும் என்று அந்த இடத்தை விட்டு உடனே நகர்ந்து விட்டாள்.
நம்ம பொண்ணு பயப்படற மாதிரி ஒரு ஆளா என்று தான் ஸ்ரீதேவி பார்த்திருந்தார். உர்விவை கவனித்துக் கொண்டிருந்த சிந்தூரா, அப்போது தான் வெளியில் வந்தவர், விஸ்வநாதனை, அம்மாவை, அப்பாவை எல்லாம் பார்த்து “வாங்க” என்று அழைத்து…
“பிரயாணமெல்லாம் எப்படி இருந்ததுப்பா, ஒன்னும் தொந்தரவு இல்லையே” என்று விசாரிக்க, அவளுக்கு பதிலளித்த அவளின் அம்மா, “நான் போய் உர்வியைப் பார்க்கிறேன்” என்று அவளின் அறைக்குச் செல்ல…
அங்கே உர்வியை அணைத்திருந்த சம்யு, “ஓய் குட்டிப் பொண்ணு பெரிய பொண்ணு ஆகிட்டியா நீ” என்று கொஞ்சிக் கொண்டிருக்க… அவளும் சம்யுவை அணைத்து பிடித்திருந்தாள்.
“சம்யுக்கா…” என்று அஸ்வி அவளைக் கண்டதும் கத்திக் கொண்டே வந்து அணைத்துக் கொள்ள…
ஸ்ரீஷாவும் கீதாவும் கூட “சம்யுக்கா…” என்றழைத்து…. ஓடி அவளைக் கட்டி கொள்ள, அனைவருமாக கட்டிக் கொண்டு குதித்தனர்.
“சரி, நீ உட்கார்” என்று அவளை அமரவைத்து கூச்சலிட்டு ஆர்ப்பாட்டமாய் குதித்தனர்.
வெளியில் அப்படி சத்தம் கேட்டது…
“பிசாசு, வந்த உடனே குதிக்க ஆரம்பிச்சிட்டா” என்று மனதினுள் நினைத்தாலும் முகத்தினுள் எதையும் காண்பிக்காமல் அத்வைத் அமர்ந்திருந்தான்.
“டேய், இந்த அக்காடீ ஆரம்பிச்சிட்டா” என்று ஷாந்தனு அபிஜித்திடம் சொன்னான்.
உண்மையில் கத்துவதை அஸ்வி ஆரம்பித்து வைக்க, பின்னர் ஸ்ரீஷாவும், கீதாவும், அதில் சேர்ந்துகொண்டனர். அதில் சம்யுக்தாவின் பங்கு கொஞ்சமே கொஞ்சம் தான்.
அறையை விட்டு வெளியில் வந்த ஸ்ரீதேவியிடம் “எதுக்கு இவ்வளவு சத்தம்” என்று விஸ்வநாதன் கேட்க,
“விடு விஸ்வநாதா, ஒரு பங்க்ஷன்னா இவ்வளவு சத்தம் கூட இல்லைன்னா எப்படி?” என்றார் சுசீலாம்மா.
அவருக்கு அவரின் மகள் யாமினியின் நினைப்பு, இப்படித்தான் அவளிருக்குமிடம் அப்படி ஒரு சத்தமாய் உற்சாகமாய் இருக்கும். அந்த நொடி மீண்டும் கடவுளிடம் சண்டையிட்டுக் கொண்டே சென்றார். “எதுக்கு எம் பொண்ணை இவ்வளவு அவசரமா உன்கிட்ட அழைச்சிக்கிட்ட கடவுளே” என்று.
“நான் போய் பார்க்கறேன்” என்று அங்கே சென்றார்.
ஆனால் அப்படி ஒரு நினைப்பு சிந்தூராவின் அம்மாவிற்கு இல்லையே, “எதுக்கு இவ்வளவு சத்தம், இவளோட சேர்ந்தா இப்படித்தான், எப்பவும் சத்தமும் கூச்சலும், நீ கெடறது இல்லாம இந்த பொண்ணுங்களையும் சேர்த்துக் கெடுக்காத, அடுத்தவங்க வீட்ல இருக்கோம்ன்ற நினைப்பு இருக்கணும்” என்று சுள்ளென்று சொல்லிவிட்டார்.
அவருக்கு சிந்தூராவை சம்யுக்தா அங்கே அமெரிக்க வீட்டில் இருந்த போது பேசியது பிடிக்கவில்லை, போதாத குறைக்கு சுசீலாம்மா பேசியிருக்க, பின் ஸ்ரீதேவி பேசியிருக்க, மகள் மன சுணக்கதோடு இந்தியா கிளம்பியது பிடிக்கவில்லை…
முன்பே ஸ்ரீதேவிக்கும் அவருக்கும் ஆகாது, சம்யுக்தா அவளை திட்டினால் உடனே அம்மாவிடம் சொல்லிவிடுவாள், ஸ்ரீதேவியும் அடுத்த நிமிடம் மாமியாரை வைத்து வாங்கி விடுவார்.
ஸ்ரீதேவி, மூன்று நாத்தனார்கள் வீட்டிலும் பிறந்த வீட்டில் இருந்து செய்வது போல மாற்றி மாற்றி ஏதாவது வேலைகள் இருந்து கொண்டே இருக்கும், சற்றும் முகம் சுளிக்காமல் செய்வார், குறை சொல்ல முடியாதபடி தான் செய்வார்.
பணம் காசு கொடுப்பது என்பது வேறு, எடுத்துக் கட்டி செய்வது என்பது வேறு அல்லவா? அப்படி எடுத்துக்கட்டி செய்வார்.