“கண்ணா” என்று அம்மாம்மா அவனை அழைத்தவர், “அப்பாக்கிட்ட கோபப்படக்கூடாது” என்று சொல்ல…
“அது அவர் நடந்துக்கறதுல தான் இருக்கு” என்றவன், நான் எங்கேயாவது அவரை விட்டுக்குடுக்கறேனா? ஆனா அவர், உங்ககிட்டானாலும், நான் ஒண்ணுமில்லைன்னு சொன்னா விடணும் தானே” என்று சொல்ல…
“விடுடா கண்ணா” என்று அம்மம்மா சமாதானம் செய்ய…
“எதுக்குடா உனக்கு இவ்வளவு கோபம். இனி பண்ணலை” என்று வேதாந்த மகனை வெகுவாக சமாதானம் செய்தார்.
ஆனாலும் அத்வைத் இயல்புக்கு வரவில்லை. கொஞ்சம் கோபமாய் தான் இருந்தான். காலையில் இருந்து இருந்த இலகுத்தன்மை குறைந்துவிட்டது.
அந்த இடத்திலிருந்து அகன்றுவிட்ட சம்யுக்தாவிற்கும் மனம் சற்று சுணங்கித்தான் போனது. சற்றும் வேதாந்த் தன்னை பொருட்டாய் எடுக்கவில்லையென்று. இதெல்லாம்தான் மனதில் மலையளவு அத்வைத் மேல் ஈர்ப்பு இருந்தாலும், மடுவளவு கூட காண்பித்துக் கொள்ள முயலவில்லை. காதல், பிரியம் என்ற வார்த்தைகளுக்குள் கொண்டு வரவில்லை அவளுக்கு அவளே. நடக்காது எனும் போது அந்த வார்த்தைகள் ஏன் சொல்லிக் கொள்ளவேண்டும் என்று. பின்பு அவளுக்கே குற்றவுணர்ச்சி ஆகிவிடும் அல்லவா ஒருவனை காதலித்து இன்னொருவனை கரம் பிடிக்க…
இது ஒரு க்ரஷ், ஈர்ப்பு, ஹீரோ வொர்ஷிப், அவளுக்கு மிகவும் பிடித்த செலேப்ரட்டி மேல் வைக்கும் பிரியம், இப்படி என்னென்னவோ அவளுக்கு அவளே காரணங்கள் கற்பித்துக் கொண்ட நாட்கள் ஏராளம்.
அதுதான் அவன் தவிர்த்தான் எனும் போது, அதன் தாக்கம் இருந்தாலும், அவளுமே அதனை ஏற்றுக் கொண்டு அமைதிகாத்தாள். ஆனால் நான் நினைத்தது அவனுக்கு எப்படித் தெரியும். அப்போது இன்னும் என்ன சொல்லி வைத்திருக்கிறேன்.
இவனுக்கு எப்படித் தெரியும் எப்படித் தெரியும் என்று மண்டையை உடைத்துக் கொண்டாள். பிடிபடவில்லை.
“இந்த சினிமால கதைல வர்ற மாதிரி நாம டைரி எதுவும் எழுதறதில்லை. தண்ணி எதுவும் அடிக்கலை உளற, அப்போ எப்படி?” என்று வெகுவாக யோசனை.
சரியாக ஸ்ரீதேவி அந்த நேரம் அழைத்துவிட… அம்மாவுடன் சென்று நின்று கொண்டாள், இடத்தை விட்டு அசையவில்லை.
காலை புண்ணியாஜனம் முடியும் வரை அப்படித்தான்.
இன்றுமே சிந்தூரா “வா” என்று சொல்லவில்லை.
அன்று கவனிக்கவில்லை, இன்று கவனித்தாள்…
மனம் சுணங்கிப் போனது, “என்ன செய்தேன் நான்? இனி இவர்களின் வீட்டிற்கு வரவேகூடாது” என்று முடிவுசெய்து கொண்டாள்.
அவளின் பாட்டியின் புறம் சற்றும் திருமபவில்லை. ஆனால் மற்ற அத்தைகள், மாமாக்கள், அத்தைகளின் பிள்ளைகள் என்று எல்லோரும் நன்றாய் பேசினர். பேசாதவர்களை ஏன் கவனத்தில் கொள்கிறாய், விடு என்று அவளுக்கு அவளே சமாதானம் செய்துகொண்டாள்.
ஆனாலும் உற்சாகம் குறைந்து விட்டது… அத்வைத் புறம் பார்வையை கூடத் திருப்பவில்லை….
அத்வைத்தும் அதனை உணர்ந்தான். கொஞ்சம் ரொம்ப பேசிட்டோமா என்று தோன்ற, “என்ன புதுசா என்கிட்டே திட்டு வாங்கறாளா என்ன? வாங்கி வாங்கி பெரிய லிஸ்டே வெச்சிருக்காளே. இப்போ என்ன முகத்தை திருப்புறா. வரட்டும் என்கிட்டே அப்போ இருக்கு அவளுக்கு” என்று நினைத்துக்கொண்டான்.
சுசீலாம்மாவுக்கு அவளை அருகில் அழைக்க முடியவில்லை. ஸ்ரீதேவிக்கு எல்லா உதவிகளையும் அவள் தானே செய்து கொண்டிருந்தாள்.
ஆம்! ஸ்ரீதேவி இல்லையென்றால் வெகு சிரமம் எனும்படி எல்லாம் எடுத்துக் கட்டி செய்தார். சிந்தூரா வந்தவர்களை உபசரிப்பதுடன் சரி.
இப்படியாக காலை பூஜை நன்றாக முடிந்து விட..
இதோ பத்தரை மணிக்கு மீண்டும் உர்வி மேடையில் அமர வைக்கப்பட…
ஸ்ரீதேவியும் சம்யுக்தாவும் முக்கியமான தட்டுக்கள் வைக்க, பின் எல்லாம் அவர்களின் உறவுகள் ஆளுக்கு ஒன்றாய் வைத்தனர்.
சம்யுக்தாவின் அம்மா வழிப் பாட்டி, தாத்தா, மாமா, அத்தை, அவர்களின் மக்கள், ஆண் ஒன்று பெண் ஒன்று பள்ளி படிப்பில் இருப்பவர்கள் அவர்களும் கூட வந்திருக்க, அவளுக்கு அவர்களோடும் நேரம் சென்றது.
ஸ்ரீஷாவும் கீதாவும் கூட அவளின் பின்னேயே சுற்ற, “போங்க உர்வி கூட இருங்க” என்று அவள்தான் அதட்டி இருக்க வைத்தாள்.
பேசிக்கொண்டிருக்கும் போதே அவள் நழுவியிருக்கவும், அவளை கூப்பிட முற்பட்ட சுசீலம்மாவை, “அவ அவங்கம்மாவோட இருக்கட்டும் பாட்டி, வேலை இருக்கும் இல்லையா” என்று விட்டிருந்தான்.
வேதாந்த் அங்கொருத்தி இருந்தாள், சென்றாள் என்றுகூட கணக்கில் கொள்ளவில்லை. அத்வைத்தும், சம்யுக்தாவும் ஒரே பள்ளி என்று தெரியும். ஆனால் அவர்களின் நெருக்கம் தெரியாது. அமெரிக்காவில் அவர்களின் வீட்டில் தங்கியிருக்கிறாள், ஒரே கல்லூரி என்று தெரியும். நல்ல பழக்கம் என்று தெரியும். அவர்களின் நெருக்கம் தெரியாது.
அதுவும் புது நம்பரை சம்யுக்தா அவரிடம் கெஞ்சி தானே வாங்கினாள். “எனக்கு பேசணும் மாமா, ஆனா தொந்தரவு பண்ணமாட்டேன்” என்று. மகன் என்ன சொல்வானோ என்று பயந்து தானே கொடுத்தார்.
வீடு முழுக்க உறவுகளாய் இருக்க, சம்யுக்தா அவருக்கு பத்தோடு பதினொன்று அவ்வளவே.
ஒரு நாளைக்கு முன்பே தனியாய் ராதா, விஸ்வநாதனிடம் பணம் கேட்டுப் பெற்றிருந்தார், அவர் தனியாக நகை ஏதாவது உர்விக்கு போடவேண்டும் என்று.
விஸ்வநாதனும் கேட்டதை கொடுத்திருந்தார். அம்மாவாகிற்று மற்ற பெண்மக்கள் ஆகிற்று, எதுவாய் இருந்தாலும் அவரே பார்த்துக் கொள்ளட்டும் என்று.
அவருக்கு விஷேஷத்தை முடித்தால் போதுமென்று இருந்தது…
என்னவோ தங்கை அப்படி ஒன்றும் தங்களை கவனிக்கவில்லை என்ற எண்ணம் எழ, மனதை “அவளுக்கு நிறைய வேலைகள் இருக்கும், நீயேன் எல்லாம் தப்பாய் எடுக்கிறாய். என்னவாகிற்று உனக்கு” என்று அவருக்கு அவரே சமாதானம் செய்து கொண்டார்.
சிந்தூரா, அண்ணனையும் அண்ணியையும் அவரின் மக்களையும் எப்படி கவனித்தாரோ என்னவோ, அண்ணன் அழைத்து வந்திருந்த உறவுகளை முறையாய் வரவேற்று, அவர் மட்டுமில்லாமல் வேதாந்தையும் அழைத்து வந்து வரவேற்றார்.
அதுவே அவருக்கும் ஸ்ரீதேவிக்கும் போதுமானதாக இருக்க… அவர்கள் கடமையை அவர்கள் செய்தனர்.
எல்லாம் ஸ்ரீதேவி முன்னின்று செய்தவர், மற்ற நாத்தனார்களையும் உதவிக்கு அழைத்துக் கொண்டார். சம்யுக்தாவும் அம்மாவை விட்டு அகலவேயில்லை.
மாமியாரைத்தான் முதலில் நலங்கு வைக்க அழைத்தார், “நீ செய்” என்று அவர் சொல்லிவிட, அவர் எல்லாம் செய்த பின்னர் வந்த ராதா தனியாக ஒரு மரகத மாலையை அணிவித்தார்.
“இதென்ன நாம செய்யும் போது இவங்க தனியா செய்யறது… அப்போ நாம தனியா, இல்லை இவங்க தனியா?” என்ற பார்வையை கணவரை நோக்கி வீசினாலும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
தன்னிடம் வாங்கிய பணத்தின் மதிப்பை விட இது சிலமடங்கு அதிகம் என்று புரிந்த விஸ்வநாதன், இது சிந்தூராவின் ஏற்பாடாய் இருக்கும் என்று புரிந்தவர்… என்னவோ செய்து கொள்ளட்டும் என்று நினைத்துக் கொண்டார்.
வசதி வாய்ப்பை தங்கை மனதிலும் மூளையிலும் ஏற்றிக்கொண்டாள் என்று புரிந்தது.
எல்லோரும் நலங்கு வைத்து, அவரவர்குரிய சீர் வரிசையை செய்தனர்.
வேதாந்த் எல்லாம் நிறைவாய் பார்த்திருந்தார்.
அத்வைத் சுசீலாம்மாவுடன் அமர்ந்திருந்தான்.
முன்பே ஸ்ரீதேவி வந்து அழைத்தார்… அவரை நலங்கு வைக்க சொல்லி… அவரும் ராதாவும் வைத்ததுமே அவரே வந்து அழைத்தார். ஆனாலும் சுசீலாம்மா அசையவில்லை… “நீங்க வைங்க” என்றுவிட்டார்.
வேதாந்தின் அம்மா அப்பா இருந்தவரை, எல்லாம் அவர்களே பார்த்துக் கொள்ள, வேதாந்திற்கு பெரிதாய் எதுவம் பரிட்சயமில்லை. இப்போது சிந்தூரா பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிட்டார்.
வீட்டில் இப்படி என்று தெரிந்ததுமே முதலில் அத்தம்மாவிடம் சொல்லி எல்லாம் நீங்கள் தான் என்று சொன்னவர் தான், ஆனால் இன்று முதலில் அவரை அழைக்க வேண்டும் என்றெல்லாம் தெரியவில்லை. அவரைப் பொறுத்தவரை சுசீலாம்மாவும் அவர் வீட்டு ஆள் தான்.
ஆனால் பெரியவராய் அவரை முதலில் அழைத்திருக்க வேண்டும், தெரியவில்லை. சிந்தூரா சொல்லாமல் சுசீல்லாம்மா செல்வதாய் இல்லை.