Advertisement

ராமலிங்கம் வீட்டில் தங்கள் அறையில் மெத்தையில் சசிதரனை கிடத்திய அபய்தேவ் அவனது முகத்தில் தண்ணீரைத் தெளித்தான்.
“சசி” என்று அழைத்த அபய்தேவ் இரண்டு முறை அவனது கன்னத்தில் தட்டிவிட்டு மீண்டும் தண்ணீரைத் தெளித்தான்.
சசிதரனிடம் சிறு அசைவு தெரியவும், மீண்டும் அவன் கன்னத்தில் தட்டியபடி, “டேய் சசி!” என்று அழைத்தான்.
மெல்ல மயக்கம் தெளிந்து கண்களைத் திறந்த சசிதரன் தன் அருகே அமர்ந்திருந்த அபய்தேவைப் பார்த்ததும் சடாரென்று எழுந்து அமர்ந்தபடி அவனது கையைப் பற்றி பயம் கலந்த குரலில், “அண்ணா.. நாம கிளம்பிடலாம்.. இந்த ஊரை விட்டே கிளம்பிடலாம்” என்று படபடத்தான்.
“ஹ்ம்ம்.. கிளம்பிடலாம்.. வந்த வேலையை முடிச்சிட்டு” 
“விளையாடாதீங்க ணா! இனி என்னால் இங்கே இருக்க முடியாது.. உங்களையும் இருக்க விடமாட்டேன்”
“நீ பயப்படுற அளவுக்கு எதுவும் இல்லை டா” 
“எது! கிணத்துக்குள்ள இருந்து ஒரு கை வந்து ட்ரோனை இழுத்துட்டுப் போனது ஒன்னுமே இல்லையா?” 
அபய்தேவோ அலட்டிக் கொள்ளாமல், “டேய் நமக்கு பயம் காட்ட யாரோ கிணத்துக்குள்ள இருந்து அப்படி செஞ்சு இருக்காங்க” என்றான்.
சசிதரன் முறைக்கவும்,
அபய்தேவ், “என்ன?” என்றபடி புருவம் உயர்த்தினான்.
சசிதரன் முறைப்புடனே, “அவ்ளோ நீளமான கை ஒரு மனுஷனோட கைனு சொல்றீங்க!” என்றான். 
“எஸ்” என்றபடி அபய்தேவ் தோள்களை குலுக்க,
“நீங்க சொல்றதை நம்ப நான் ஒன்னும் விரல் சப்பும் குழந்தை இல்லை” 
“இச்சிட்!” என்று அபய்தேவ் நடிகர் வடிவேல் போல் கூற,
சசிதரன் முறைப்புடன் கண்களை லேசாக சுருக்கி, மூச்சை இழுத்து விட்டபடி, “வாயில நல்லா வந்திடும்” என்றான்.
“வந்தா சொல்லு” 
“அண்ணா!” 
“என்ன?” 
“உங்களுக்கே தெரியும்.. அது நிச்சயம் ஒரு மனுஷனோட கை இல்லைனு” 
“அது பேயோட கையும் இல்லை” 
“அப்போ மனித கை இல்லைனு ஒத்துக்கிறீங்க?” 
“பேயோட கை இல்லைன்னு தான் சொன்னேன்” 
சசிதரன் மீண்டும் முறைப்புடன், “கிணத்துக்குள்ள ஆள் இருந்ததை நீங்க பார்த்தீங்களா?” என்று கேட்டான்.
“எங்க! நீ தான் மயங்கி விழுந்துட்டியே! உன்னைப் பார்ப்பேனா பேயைப் பார்ப்பேனா?” 
“ஏன்! போய் அந்த பேயைப் பார்த்திருக்க வேண்டியது தானே!” 
“அப்போ பேச்சு மூச்சு இல்லாம கிடந்துட்டு, இப்போ வாய் கிழியுது.. உன்னை அப்படியே விட்டுட்டு போய் இருக்கணும்” 
சசிதரன் முறைக்க,
அபய்தேவ், “அது பேய்னா, ஏன் வெளியே வந்து நம்மளை எதுவும் செய்யலை?” என்று கேட்டான். 
“அதில் உங்களுக்கு ரொம்ப வருத்தமோ!” 
“ச.. ச.. பேயை நேரில் பார்க்க முடியலையேனு சின்ன வருத்தம்”
சசிதரன் அவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்க்க,
அவனோ அலட்டிக் கொள்ளாமல், “கேட்டதுக்கு பதிலை சொல்லுடா” என்றான். 
“ஹ்ம்ம்.. நாம எமவீதி உள்ளே போகலையே! உள்ள போனா தான் அது தாக்குமா இருக்கும்” 
“ஓ! வேற என்ன ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருக்குது?” என்று நக்கலுடன் கேட்டான்.
“உங்களோட மிடிலணா” என்று இயலாமையுடன் அலுத்துக் கொண்டான். 
“நீ வேணா ஊருக்கு கிளம்பு” 
“பேய் கூட உங்களை தனியா விட்டுட்டா?” 
“கூட இருந்தா மட்டும்! மயங்கி விழுறதைத் தவிர என்ன செஞ்சிடப் போற?” 
“ஸோ.. என்னை ஊருக்கு கிளப்பி விடுற திட்டத்தோட தான் என்னை அங்கே கூட்டிட்டு போய் இருக்கிறீங்க!” 
அபய்தேவ் அமைதியாக இருக்கவும்,
சசிதரன், “அண்ணா ப்ளீஸ்.. நாம கிளம்பிடலாம்.. இந்த விபரீத விளையாட்டு வேண்டாம்” என்றான்.
அபய்தேவ் கோபத்துடன் எழுந்து நின்றபடி, “அப்போ அபிக்கு நியாயம் செய்ய வேண்டாமா? அபியோட இந்த நிலைக்கு காரணமானவங்களைச் சும்மா விடச் சொல்றியா?” என்றான்.
“அண்ணா புரிஞ்சுக்கோங்க.. நீங்க சண்டை போட நினைக்கிறது ஒரு பேயுடன்” 
“பேயோ பூதமோ மனுஷனோ! எனக்கு பதில் சொல்லியே ஆகணும்” 
“ப்ச்.. அண்ணா.. இந்த ஆபத்தான வேலையை நீங்க செய்றதை அபி அண்ணாவே விரும்ப மாட்டாங்க” 
“அவனே இதை விடச் சொன்னாலும் நான் விட மாட்டேன்.. ஆனா அவன் தான் சொல்ற நிலையில் இப்போ இல்லையே! என்றவனின் ரௌத்திர தோற்றத்தில் சசிதரனுக்கே பயம் வந்தது.
இருப்பினும், “அண்ணா ப்ளீஸ் ணா” என்று கெஞ்சினான்.
அபய்தேவிடம் மாற்றம் இல்லை என்றதும், அவனது கையை பற்றிய சசிதரன் மீண்டும் கெஞ்சும் குரலில், “அண்ணா ப்ளீஸ் ணா” என்றான்.
தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்து சற்றே இயல்பிற்கு திரும்பிய அபய்தேவ்,
“நீ ஊருக்கு கிளம்பு.. எனக்கு எதுவும் ஆகாது” என்றான்.
“கிளம்பினா ரெண்டு பேரும் சேர்ந்தே கிளம்புவோம்” 
“நிச்சயம் இது பேய் வேலை இல்லை” 
“ஊரே நம்புது நீங்க மட்டும்…” என்றவனின் பேச்சை இடையிட்ட அபய்தேவ்,
“ராம் அங்கிள் நம்புறாங்களா?” என்று கேட்டான். 
“அவரு விதிவிலக்கு” 
“நான் விதிவிலக்குக்கெல்லாம் விதிவிலக்குடா” 
“ஏன் ணா!” என்று மீண்டும் அலுத்துக் கொண்டவன், “அந்த கையைப் பார்த்துமா பேய் இல்லைன்னு சொல்றீங்க?” என்று கேட்டான். 
“எனக்கு நம்பிக்கை இல்லை” 
“அது பேய் தான் ணா” 
“என் கண்ணால் பார்க்கிற வரை நம்ம மாட்டேன்” 
“அதான் பார்த்தீங்களே?” 
மறுப்பாக தலை அசைத்து, “நிச்சயம் அதில் ஏதோ இருக்குது” என்றவன், “இந்த எமபுர மாயத்தை கண்டு பிடிக்கிறேன்” என்று உறுதியான குரலில் கூறினான். 
“அண்ணா” என்று சசிதரன் ஆரம்பிக்க,
அபய்தேவ், “ஒன்னு ஊருக்கு கிளம்பு, இல்லை மூடிட்டு தள்ளி போய் படு” என்றான் முடிவான குரலில்.
சசிதரன் அப்படியே அமர்ந்து இருக்கவும்,
அபய்தேவ், “என்ன டா! தள்ளிப் படு” என்று அதட்டினான்.
சசிதரன் வேறு வழி இல்லாமல் நகர்ந்து படுக்க,
“ரெண்டு மணி நேரம் தூங்கி எந்திரி.. இன்னைக்கு நிறைய வேலை இருக்குது.. அந்த மணி கிட்ட பேசணும்.. ராமையா கிட்ட பேசணும்.. அப்புறம் காணாம போனவங்க குடும்பத்தைப் பார்த்து பேசணும்” என்றபடி படுத்தவன் மனதிற்குள், ‘நடுவில் என்னோட அமதசுரபியைப் பார்க்கணும்’ என்று சொல்லிக் கொண்டு கண்களை மூடினான்.
சசிதரன், “ஒருவேளை அந்த பேய் உங்க முன்னாடி வந்து இருந்தா, என்ன செஞ்சு இருப்பீங்க?” என்று கேட்டான்.
கண்களை மூடிய நிலையிலேயே, “ஹ்ம்ம்.. பேட்டி எடுத்து இருப்பேன்” என்றான். 
“செஞ்சாலும் செய்வீங்க” என்ற சசிதரன் உறங்க முயற்சித்தான்.
கண்களை மூடினாலே அந்த கை மனக்கண்ணில் வந்து மிரட்ட, கண்களைத் திறந்து திறந்து மூடியபடி புரண்டுக் கொண்டே இருந்த சசிதரன் ஒரு கட்டத்தில் எழுந்து அமர்ந்துவிட்டான்.
“ஏன் ணா என்னை அங்கே கூட்டிட்டு போனீங்க?” என்று சசிதரன் பரிதாமாக கேட்க, அவனுக்கு பதில் கூறாமல் அபய்தேவோ நிம்மதியான உறக்கத்தில் இருந்தான்.
நாலேமுக்கால் மணி அளவில் விழித்த அபய்தேவ் தன் அருகே அமர்ந்து இருந்த சசிதரனைப் பார்த்து, “தூங்கலையா?” என்று கேட்டான்.
“நீங்க செய்த காரியத்துக்கு இனி எங்கே தூங்க!” 
“ஏன் கனவில் அந்த பேய் வந்து உன்னோட டூயட் ஆடுதா?”
சசிதரன் அமைதியாக இருக்கவும்,
“என்னடா பதிலைக் காணும்!” என்று சீண்டினான்.
“அதான் உங்களுக்கே தெரியுதே, அப்புறம் என்ன!” 
அபய்தேவ் சிரித்துவிட்டு அறை வெளியே சென்று வீட்டின் கொல்லைபுறம் சென்றான்.
தனது காலைக் கடன்களை முடித்துவிட்டு அறையின் உள்ளே வந்த அபய்தேவ் சசிதரனைப் பார்த்து உதட்டோர புன்னகையுடன், “ஒருவேளை நீ சொல்ற பேயை நீ பார்த்து இருந்தா என்ன செஞ்சு இருப்ப?” என்று கேட்டான்.
“நீங்க தான் எனக்கு காரியம் செஞ்சு இருப்பீங்க”
அபய்தேவ் விரிந்த புன்னகையுடன், “சரி ரெப்ரெஷ் ஆகிட்டு வா.. ஒரு ரவுண்டு ஜாக்கிங் போயிட்டு வருவோம்” என்றான்.
“இனி உங்களை நம்பி நான் எங்கேயும் வரதா இல்லை” 
“வெட்டியா இங்கே உட்கார்ந்து இருக்கிறதுக்கு ஊருக்கு கிளம்பு” 
“நோ” 
“அப்போ என்னோட வா” 
“நீங்க ஒரு முடிவோட தான் இருக்கிறீங்க” 
“என்ன முடிவு?” 
“பேயை பார்க்கிறேனோ இல்லையோ! கூடிய சீக்கிரம் நான் பேயா அலையப் போறேன்” 
“அப்படி அலையுறப்ப என் முன்னாடி வந்து ஒரு ‘ஹாய்’ சொல்லிட்டு போ, அப்போ பேய் இருக்குதுனு நம்புறேன்.. இப்போ கிளம்பு” 
“இந்த அபி அண்ணாவை சொல்லணும்.. எப்படி இப்பிடி ஒரு ஊரைக் கண்டு பிடிச்சாரோ! நம்ம யார் கிட்டயும் சொல்லாம கொள்ளாம எதுக்கு இந்த ஊருக்கு வந்தார்னும் தெரியலை” என்று புலம்பியபடி எழுந்து வீட்டின் கொல்லைப்புறம் நோக்கிச் சென்றான்.
இறுகிய முகத்துடன் சன்னல் அருகே சென்று வெளியே பார்த்தபடி நின்ற அபய்தேவின் உதடுகள், “கனகப்ரியா!” என்று முணுமுணுத்தது.
விடிந்தும் விடியாத அந்த வைகறை பொழுதில் அவன் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அவனது இறுக்கத்தை போக்கவென்று அவனது அமுதசுரபி வந்தாள். அவளை கண்டதும் தனது இறுக்கம் மாயமாக மறைவதைப் போல் உணர்ந்தான்.
ஏதோ திருட்டுத்தனம் செய்வது போல் சுற்றி முற்றி பார்த்தபடி தெருவில் வந்துக் கொண்டிருந்த அமிர்தவள்ளியைப் பார்த்ததும் அவனது இதழில் புன்னகை ஒட்டிக் கொண்டது.
யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துக்கொண்ட அமிர்தவள்ளி மெதுவாக ராமலிங்கத்தின் தெரு வாசல் கதவை திறந்துக் கொண்டு, பக்கவாட்டில் இருந்த சிறு தோட்டத்திற்கு சென்றாள். அபய்தேவ் இருக்கும் அறையின் சன்னல் முன் நின்று கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தபடி அவனைத் தேடினாள்.
“ஒரு கன்னிப் பையன் ரூமை இப்படி திருட்டுத் தனமா எட்டிப் பார்க்கிறியே! தப்பில்லையா?” என்ற குரலில் சிறு திடுக்கிடலுடன் திரும்பியவள் அபய்தேவை கண்டதும் ஆசுவாசம் அடைந்தாலும் வெளியே அவனை முறைத்தாள்.
அவன் உதட்டோர மென்னகையுடன், “பயந்துட்டியா?” என்று கேட்டபடி புருவம் உயர்த்தினான்.
உதட்டோர வளைவுடன் மிதப்புடன் அவனைப் பார்த்தவள், “ஹ! பயமா!” என்று கூறி உதட்டை வளைத்தாள்.
“அது சரி.. பேய்கே பயம் காட்டுற ஆளாச்சே நீ”
“என்னவே லந்தா!” 
“யூ மீன் கிண்டல்! ச.. ச.. மெய்.. நிஜம்.. உண்மை.. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை” என்றவனின் கண்கள் கிண்டலாக சிரித்தது.
அவனை முறைத்தவள், “ஓங்கிட்ட முக்கியமா ஒரு வெசயம் பேசோனும்.. பத்து மணி போல, நேத்தி பாத்த தோப்புக்கு வந்துபுடு” என்றுவிட்டு கிளம்பப் பார்க்க,
அவளது வழியை மறைத்தபடி, “முதல்ல கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போ” என்றான்.
அவள் ‘என்ன?’ என்பது போல் பார்க்கவும்,
“என்னோட ரூமை..” என்று அவன் ஆரம்பிக்க,
அவனை நக்கலாக பார்த்தபடி, “ஏ! கூட ஆரும் இல்லனாக்க அவுத்துபோடுட்டு ஆடுவியா?” என்று கேட்டாள்.
ஒரு நொடி அதிர்ந்தவன் பின், “ஆடி இருந்தால்?” என்றபடி புருவம் உயர்த்தினான்.
அவள் உதட்டோர சின்ன சிரிப்புடன், “ஓ மானம் போயி இருக்கும்” என்றாள்.
அவளது பதிலில் சிரித்தவன், “எனக்கு ஒரு சந்தேகம்” என்றான்.
“என்ன?” 
“நீ அதைத் தான் செய்வியோ?” 
‘எதை!’ என்று யோசித்தவள் புரிந்ததும் கோபத்துடன் அவனை அடிக்க கை ஓங்கி இருந்தாள்.
வாடாத புன்னகையுடன் அவளது கையைப் பற்றி தடுத்தவன், “இதுக்கு தான் பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சுப் பேசணும்” என்றபடி கையை விட்டான்.
அப்பொழுது யாரோ வரும் சத்தம் கேட்கவும், சட்டென்று அருகே இருந்த மல்லி பந்தலின் பின் அவனை இழுத்துக் கொண்டு சென்று நின்றவள், மறைவில் நின்றபடி வருவது யார் என்று எட்டிப் பார்த்தாள்.
நூலிழை இடைவெளியில் அவளது மேனிவாசம் அவனை சித்தம் சிதற வைக்கச் செய்தது.
அவளை இறுக்கி அணைத்து இதழில் கவிபாடத் தோன்றும் உணர்வை பெரும் பாடுபட்டு அடக்கியவன், “அம்ரு கையை விடு” என்றான்.
அவனது குரலின் பேதத்தில் அவன் முகம் நோக்கியவள், அவன் கண்களில் வழிந்த மோகம் கலந்த காதலில் பேச்சற்றுப் போனாள்.
“அம்ரு” என்று அவன் கிறக்கத்துடன் அழைக்க,
அவள் படபடத்த இதயத்துடன் தன்னை அறியாமல் தான் பற்றி இருந்த அவனது கையை இன்னும் அழுத்தி பற்றி இருந்தாள்.
அவளது பிடியின் அழுத்தத்தில் அவளது நிலையை உணர்ந்தவன் மென்னகையுடன் அவளது கன்னம் பற்ற போகும் வேளையில், “அண்ணா” என்ற சசிதரனின் குரலில் சுயம் பெற்றவள் அவனது கையை விட்டபடி பின்னால் நகர்ந்தாள்.
அவன் தனது கையை இறக்கியபடி சற்று விலகி நின்றான்.
அவனை பார்க்கமால் மெல்லிய குரலில், “சாரி” என்றவள், “நா பேசியதிக்கும், கையி ஓங்கியதிக்கும்” என்றாள்.
அவளை இப்படி பார்க்க பிடிக்காமல் அவளை சீண்டும் விதத்தில் நடிகை கோவை சரளா போல், “தொரையம்மா இங்கிலிபீஸ்லாம் பேசுது!” என்றான்.
அவன் எதிர்பார்த்தது போல் அவனை முறைத்தவள், “ஒன்னாண்ட போயி மன்னிப்பு கேட்டே பாரு” என்றாள்.
குறுஞ்சிரிப்புடன், “அதுக்காக உன்னை நீயே அடிச்சுக்கப் போறியா?” என்றவன், “எதால அடிப்ப?” என்று யோசிப்பது போல் நிறுத்தினான்.
அவள் இன்னும் அதிகமாக முறைக்க,
அவனோ மென்னகையுடன்,
“பார்வ கற்பூர தீபமா
அமிர்தவள்ளி
பேச்சே கல்யாணி ராகமா
பார்வ கற்பூர தீபமா
அமிர்தவள்ளி
வாசம் கஸ்தூரி வாசமா” என்ற ‘புஷ்பா’ திரைப்பட பாடலை பாடினான். பாடலில் ‘ஸ்ரீவள்ளி’ என்று வர, இவன் அமிர்தவள்ளி என்று மாற்றி பாடினான்.
அவனது பார்வையும் குரலும் அவளை என்னவோ செய்ய, அதை அவனிடம் இருந்து மறைக்கவும் முடியாமல், அந்த உணர்வு தந்த தாக்கத்தை தாங்கிக் கொள்ளவும் முடியாமல் தத்தளித்தவள், “போயா” என்றுவிட்டு கிளம்பினாள்.
சிறு பயத்துடன் தனது கால்களை பார்த்த சசிதரனை கண்டு சிரித்தபடி வெளியே சென்றாள்.
அவள் சென்றதும் விரிந்த புன்னகையுடன் வெளியே வந்த அபய்தேவைக் கண்டு சசிதரன், “யாருணா அது?” என்று கேட்டான்.
“அம்ரு.. அமுதசுரபி.. அமிர்தவள்ளி” என்று அனுபவித்து காதலுடன் ரசித்துக் கூறினான்.
சசிதரன் இன்ப அதிர்ச்சியுடன், “அண்ணா!” என்று அழைக்க,
அபய்தேவ் இன்னும் விரிந்த புன்னகையுடன் அவனை நோக்கினான்.

மாயம் தொடரும்…

Advertisement