Advertisement

அபய்தேவ் சத்தமின்றி வெளியே சென்று பார்த்த போது அழுக்கு சட்டைக்காரன் நின்றுக் கொண்டிருந்தான். அபய்தேவைக் கண்டதும் அவன் அதிரவில்லை. தனது பற்களை காட்டி இளித்தான்.
“இங்க என்ன செய்ற?” என்ற அபய்தேவின் குரலில் சசிதரன் வெளியே வந்தான்.
அழுக்கு சட்டைக்காரன் தனது தலையை ஆட்டி ஆட்டி, ‘வேணுமா? சாப்புடுறியா?’ என்பது போல் தான் பாதி கடித்திருந்த மாங்கனியை நீட்டினான்.
சசிதரன், “உங்களுக்கு இவனை தெரியுமா? யாருணா?” என்று கேட்டான்.
அபய்தேவ், “ஹ்ம்ம்.. தெரியும்” என்றபோது, அழுக்கு சட்டைக்காரன் இவர்கள் இருவருக்கும் நடுவே புகுந்து இடித்தபடி வேகமாக சென்றான்.
சசிதரன், “பார்க்க அரைலூசு மாதிரி தெரியுது!” என்றான்.
திறந்திருந்த நுழைவாயில் கதவின் வெளியே போய் நின்ற அழுக்கு சட்டரைக்காரனைப் பார்த்தபடி அபய்தேவ், “ஹ்ம்ம்.. அப்படி தான் சொல்லிக்கிறாங்க?” என்றான்.
அப்பொழுது அங்கே வந்த ராமலிங்கத்திடம் அந்த அழுக்கு சட்டரைக்காரன் தலையையும் கையையும் வேகமாக ஆட்டி சிரித்துவிட்டு ஓடினான்.
“சொல்லிக்கிறாங்கனா?” என்று சசிதரன் வினவ, 
அபய்தேவ், “ஊருக்குள்ள இவனை அப்படித் தான் சொல்றாங்க” என்றான்.
நுழைவாயில் கதவின் வழியே ராமலிங்கம் உள்ளே வந்தார்.
மென்னகையுடன் சசிதரனை பார்த்து, “வா ப்பா” என்றவர் அபய்தேவின் பார்வை வீதியில் சென்றுக் கொண்டிருந்த அழுக்கு சட்டரைக்காரனிடமே இருக்கவும்,
“அவென் கையில இருக்கது நமூட்டு மாங்கனி.. அதேன் நன்றி சொல்லிபுட்டு ஓடுறியான்” என்றார்.
அபய்தேவ் புருவமுடிச்சுடன், “அடிக்கடி இங்கே வருவானா?” என்று கேட்டான்.
“ஹ்ம்ம்.. அவெனுக்கு தோனுறப்ப எல்லா வருவியான்” என்றவர், “அவென் மேல சந்தேகமா?” என்று கேட்டார்.
அபய்தேவ் உதட்டோர சிறு வளைவுடன் தோள்களை குலுக்கிவிட்டு வீட்டின் உட்புறமாக நகர்ந்தான்.
அவர், “அவென் ஒரு அப்பாவி பாவப்பட்ட ஜீவன்” என்றார்.
அவரது கூற்றில் திரும்பியவன் ஊடுருவும் பார்வையுடன், “தேவைப்பட்டால் உங்களைக் கூட சந்தேகப்படுவேன்” என்றான்.
அரை நொடி அதிர்ந்தவர் பின் மென்னகையுடன் அவனது தோளை தட்டிவிட்டு வீட்டின் உள்ளே சென்றபடி சசிதரனைப் பார்த்து, “என்ன தம்பி எங்கூரு எப்புடி இருக்குது?” என்று கேட்டார்.
“திரும்ப தம்பியா!!” என்ற சசிதரன் புருவம் சுளித்தபடி, “என்னை உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டான்.
அவர் மென்னகையுடன், “அபயன் தம்பி வந்திருக்கதா வார வழியில சொன்னாவுகெ” என்றார்.
சசிதரன், “அதானே! இந்த ஊரில் பல ஆல் இந்தியா ரேடியோக்கள் இருக்கிறார்களே!” என்றான். 
“ஊரை பத்தி சொல்லல!” என்றவர் அபய்தேவைப் பார்த்து, “தம்பி வாரதை சொல்லவே இல்ல?” என்று கேட்டார்.
“இப்போ தானே வந்து இருக்கிறேன்” என்று சசிதரனும்,
“எனக்கே தெரியாது.. சாரி” என்று அபய்தேவும் கூறினார்.
“மன்னிப்பெல்லாம் என்னத்துக்கு! முன்னவே சொல்லுலியேனுட்டு கேட்டேன்.. அம்புட்டுதீன்” 
அபய்தேவ் யோசனையுடன், “உங்களுக்கும் பேய் மேல் நம்பிக்கை இல்லையே.. அப்புறம் ஏன் எமவீதிக்கு போய் பார்க்கலை?” என்று கேட்டான்.
“ஒரு மொற போனே.. ஆனா மணியும் பானுவும் தடுத்துப்புட்டாங்கெ.. பொறவு போவல.. போவ தோனல” 
“மணி யாரு?” என்று சசிதரன் கேட்டான்.
“மணிகண்டன்.. இப்போ போனானே அவன் தான்” என்ற அபய்தேவ் ராமலிங்கத்திடம்,
“மணி ஏன் உங்களைத் தடுத்தான்? எல்லோரையும் தடுப்பானா?” என்று கேட்டான்.
“தெரியல” என்றவர் சிறு யோசனையுடன், “நேத்திக்கு வள்ளிய தடுத்தானுட்டு சொன்னானுவ” என்றார். 
“ஓ” என்றவன் மனதினுள் முன்தினம் அமிர்தவள்ளியை எமவீதி அருகே செல்ல விடாமல் அவன் தடுத்தது வந்து போனது. அமிர்தவள்ளி பற்றி பேசியதும் துள்ளிய ஆசை நெஞ்சை அடக்கிவிட்டு,
“அவன் தடுத்ததை மீறி யாரும் போய் இருக்காங்களா? அவன் தடுக்காமல் விட்ட யாரும் அங்கே போயிட்டு, எந்த வித சேதாரமும் இல்லாம திரும்ப வந்து இருக்கிறாங்களா?” என்று கேட்டான். 
“பானுக்கு முடியாம போன பொறவு நா நெரந்தரமா பட்டாளத்த வுட்டுபுட்டு இங்கனவே வந்துபுட்டேன்.. அதுக்கு முன்ன நடந்தது எனக்கு தெரியில..
நா இங்கன வந்த சமயத்துல வயசு பசங்க ரெண்டு பேரு அங்குட்டு போனானுவ.. ஆனா அவிங்கெ திரும்பவே இல்ல..
அப்போதேன் நா அங்கன கெளம்பினே.. மணி தடுத்தான்.. அவென மீறி போக நா முயற்சி செஞ்சே.. ஆனாக்க, நா அங்குட்டு கெளம்பின வெசயம் தெரிந்து, மேலு முடியாம இருந்த பானு செரமத்துடன் எழுந்து வீதி வந்து பாதி வழியில வுழுந்துட்டா.. பொறவு பானு ஒடம்பு இன்னு சீர்கெட்டு போச்சிது.. என்னிய விட்டும் போயிட்டா” என்று வேதனையுடன் கண்கள் கலங்க கூறினார்.
அவர் கையை பற்றிய அபய்தேவ், “சாரி அங்கிள்.. நான் உங்க கஷ்டத்தை கிளறி விட்டுட்டேன்” என்றான்.
தன்னைத் தானே தேற்றிக் கொண்ட ராமலிங்கம் மென்னகைக்க முயற்சித்தபடி, “ஒன்னுமில்ல” என்றார்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய, தன்னைத் தானே தேற்றி இருந்த ராமலிங்கம், “அதேன் ஒன்னுமில்ல சொல்லுறேனே” என்றார்.
அபய்தேவ், “அந்த பசங்க என்ன ஆனாங்க? அவங்க குடும்பம்?” என்று கேட்டான்.
“அவெனுங்கெ எமவீதிய வுட்டு வரவே இல்ல.. அவெனுங்கெ காணா போன ஒரு மாசத்துக்குள்ளார அவெனுங்கெல பெத்தவங்கெ இந்த ஊரை வுட்டே போயிட்டாங்கெ” 
“இது நடந்து எத்தனை வருஷம் இருக்கும்?” 
“ஆறு வருசம்” 
“அந்த எமவீதியில் இருந்த மக்கள் என்னாங்க?” 
“ஒரு சிலர் வேற வீதியில இருக்காங்கெ.. நெறைய பேரு ஊரை வுட்டே போயிட்டானுவ” 
“எதனால?” 
“அப்போ நா பாட்டாளதுல இருந்தே.. செரியா தெரியில.. பரிமளத்தோட ஆவி அங்குட்டு உக்கிரமா சுத்துதுனும், ஆம்பளைங்களை அது தாக்குதுனுட்டும் கெளம்பினதா கேள்விபட்டேன்” 
“அப்போ அது பொண்ணுங்களை எதுவும் செய்யாதா?” 
“தெரியில” 
“என்ன அங்கிள்!” 
“பொம்பள புள்ளகள அது தாக்கியாதா தெரியில” 
“பரிமளத்தோட ஆவிய நேரில் பார்த்தவங்க இருக்காங்களா?” 
“நெறைய பேரு பாத்து இருக்கதா சொல்லுவானுவ” 
“சொல்லுவானுவ-னா! ஏன் அப்படி சொல்றீங்க?” 
“சும்மானாக்கு சொல்லுறவன்கெளும் இருக்கானுவ.. செருக்கு காட்ட அப்புடி சொல்லுவியான்கெ” 
“நிஜமாவே பார்த்தவங்க யாருனு உங்களுக்கு தெரியுமா?” 
அவர் உதட்டோர சிரிப்புடன், “இந்த ரெண்டு நாளுல பேய் இருக்குதுனுட்டு நம்பிக்க வந்துபுடுச்சோ!” என்றார்.
அவன் உதட்டோர வளைவு சிரிப்புடன், “நானே என் கண்ணால பார்க்கிறவரை நம்ப மாட்டேன்.. உங்க கிட்ட கேட்டது, நிஜமாவே பார்த்தவங்க.. அதாவது உண்மைய சொல்றவங்களை உங்களுக்கு தெரியுமானு கேட்டேன்” 
மெச்சும் பார்வையுடன், “ஓ” என்று மென்னகையுடன் கூறியவர், “எம வீதில இருந்தவங்கெ பாத்து இருக்கலாம்.. நா இங்குட்டு வந்தப்ப பாத்ததா சொன்ன ஆரும் நமூருல இல்ல.. கீழவீதி ராமையாவையு அவென் கூட்டாளியவு கேட்டு பாருங்கெ” என்றார்.
பின், “மணி எமவீதி தொவக்கத்துல நின்னு தனியா சிரிச்சு பேசுறத பாத்து இருக்கேன்.. அவென கேட்டாக்க, பரிமளம் நிக்கதா, அங்கன ஏதாவது எடத்த காட்டுவியான்.. ஆனாக்க நா அதை பாத்தது இல்ல” என்றார். 
“பொண்ணுங்க யாரும் பார்த்ததா சொன்னது இல்லையா?” 
“ஏ இல்லாம!” 
“யாரு?” 
“இட்டிலிக்கட பொன்னாத்தாவ கேட்டு பாருங்கெ” 
“அவங்க கிட்ட பேசிட்டேன்.. அவங்க தான் பரிமளம் பத்தி எனக்கு சொன்னது” என்றவன், “ராமையா, பொன்னாத்தா தவிர வேற யாரும் இல்லையா?” என்று கேட்டான். 
“இவிங்கெ செரியா பதில் சொல்லுவியாங்கெ.. அதேன் சொன்னே”  
“நீங்க இங்க வரதுக்கு முன்னாடி யாரும் காணாம போய் இருக்காங்களா?” 
“இத பொன்னாத்தா சொல்லிலயா?” 
“ஆட்கள் வரவும் இதை பத்தி கேட்காம வந்துட்டேன்” 
“ஹ்ம்ம்” என்றவர், “அஞ்சு பேரு காணா போயிருக்கானுவ” என்றார். 
“மொத்தம் ஏழு பேர்” என்றவன், ஸோ யாரும் இறக்கலை” என்றான். 
“இல்ல.. பரிமளம் செத்த அடுத்த நாளே அவ சாவுக்கு காரணமான மூணு பசங்களோட பொணமும் எம வீதி வெளியே கெடந்திருக்கு” 
“அப்போ அந்த ஏழு பேர் இறக்கலை தானே! இறந்திருந்தா அவங்க பிணமும் எமவீதி வெளியே கிடந்திருக்கனுமே!” 
“அங்குட்டு போனவங்கெள ஆரும் திரும்ப பாக்கல.. ஊர் மக்களு செரி, சுத்தி இருக்க ஊர் மக்களு செரி, அவிங்கெ செத்துட்டதாதேன் நெனைக்கறாங்கெ” 
“நீங்க என்ன நினைக்கிறீங்க?” 
“வாய்ப்பு இருக்குது” 
“உயிரோட இருக்கவா?” 
“இல்ல” 
“எதை வைத்து சொல்றீங்க? யாரோட உடம்பும் கிடைக்கலை தானே!” 
“அங்குட்டு போனாக்க கெடைக்கலாம்” 
“எப்பயாச்சும் எம வீதி பக்கத்துல துர்நாற்றம் வந்து இருக்குதா?” 
“இல்ல ஆனா ஜாதி மல்லி வாட வந்திருக்கு.. ஜாதி மல்லி பரிமளத்துக்கு புடிச்ச பூவுனுட்டு சொல்றாங்கெ” 
“அந்த வீதி மட்டும் எப்படி இப்படி காடு மாதிரி இருக்குது?” 
“எனக்கும் ஆச்சரியம் தா.. நா வந்தப்பவே இப்புடிதேன் இருந்துது..” 
“நீங்க யார் கிட்டயும் கேட்கலையா?” 
“ப்ச்.. இவெனுங்கெ வேற என்னத்த சொல்லுவியாங்கெ! ஆரும் அங்குட்டு வார கூடாதுனுட்டு பரிமளம்தேன் அப்புடி ஆக்கிபுடுச்சுனுட்டு சொல்லுறாயிங்கெ” 
“மணி எங்க இருப்பான்?” 
“ஊரை சுத்திட்டு திரிவியான்” 
“அவன் வீடு எங்க இருக்குது?” 
“இங்கிருந்து அஞ்சி வூடு தள்ளி இருக்குது.. ஆனா ரவைக்கு பாதி நேரம் அவென் ஒறங்குறது ஆரு வூட்டு திண்ணையிலாவதுதேன்” 
“சரி.. நாங்க கொஞ்சம் வெளியே போயிட்டு வரோம்” என்றபடி அபய்தேவ் எழ, சசிதரனும் எழுந்தான்.
“டீ குடிச்சுபுட்டு கெளம்புங்க” என்ற ராமலிங்கம் சமையல் அறைக்குச் சென்று மூவருக்கும் தேநீர் தாயாரித்து வந்து கொடுத்தார்.
தேநீரை பருகிவிட்டு இருவரும் கிளம்பினார்.
சசிதரன், “பரிமளம் யாரு? எப்படி இறந்தாங்க?” என்று கேட்டான்.
“இந்த ஊரோட பெயர் தெரியுமா?” 
“தெரியாது.. எனக்கு தெரிந்து எமபுரம்” 
“ஹ்ம்ம்.. மங்கலபுரம் தான் இந்த ஊரோட பெயர்.. எமவீதினு ஒரு வீதியை சொல்றாங்க.. அங்கே ஒரு பெரிய வீடு இருக்குது.. அதை எமவீடுனு சொல்றாங்க.. அந்த வீட்டுக்கு சொந்தகாரர் சோமசுந்தரம்.. அவர் இப்போ இந்த ஊரில் இல்லை.. அந்த பெரிய வீடு அவரோட பூர்விக வீடு இல்லை.. பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி துபாய் போய் சம்பாதிக்க ஆரம்பிச்சவர் சில வருஷம் கழிச்சு இங்கே வந்து பெரிய வீடும் ரைஸ் மில் ஒன்னும் கட்டி இருக்கார்..
அவரோட தங்கை தான் பரிமளம்.. தங்கையை காலேஜ்ஜில் படிக்க வச்சிருக்கார்.. திருவிழா பார்க்கனு பரிமளத்தோட காலேஜ் பிரெண்ட்ஸ் சிலர் வந்திருக்காங்க.. அதுல மூணு பசங்க பரிமளத்தை கெடுக்க பார்த்ததாவும், அவங்க கிட்ட இருந்து தப்பிக்க எமவீதியில இருக்க கிணத்துக்குள்ள விழுந்து பரிமளம் இறந்ததாவும் சொல்றாங்க..” 
“அந்த பரிமளத்தோட பெரென்ட்ஸ்?” 
“சோமசுந்தரம் துபாய் போகும் போதே அவங்க இறந்துட்டாங்க போல.. அம்மா சின்ன வயசுலேயே இறந்துட்டாங்கலாம்.. அப்பா இறந்ததும் கடனை அடைக்க துபாய் போய் இருக்கார்.. தூரத்து சொந்தத்தில் ஒரு வயசான பாட்டியை பரிமளதுக்கு துணைக்கு வச்சிட்டு போய் இருக்கார்.. அப்புறம் துபாயில் இருந்து வந்து சில வருஷம் இங்கே தான் இருந்து இருக்கார்.. பரிமளம் இறந்த சில மாசத்தில் ஊரைவிட்டு போயிட்டார் போல” 
“ஓ” என்றவன், “இப்போ எதுக்கு மணியை பார்க்க போறோம்?” என்று கேட்டான். 
“அபியை அவனுக்கு தெரியுமானு கேட்க” 
“அவனை ஏன் கேட்கணும்?” 
“அப்புறம் சொல்றேன்.. இப்போ அவனைத் தேடு” என்றான்.
ஆனால் மணிகண்டனை காண முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
 
 
திரும்பும் வழியில் சசிதரன், “இந்த மணிகண்டன் யாரு ணா?” என்று கேட்டான்.
“மணிகண்டனுக்கு யாரும் இல்லை.. பிறந்தப்பவே அம்மா இறந்துட்டாங்கலாம்.. அப்புறம் அப்பாவும் இறந்துட்டாங்கலாம்.. சோமசுந்தரம் கிட்ட டிரைவர் வேலை பார்த்தானாம்.. வீட்டு வேலை கூட செய்வானாம்.. தனிகட்டையான அவன்,  தன்னிடம் அன்பு காட்டின பரிமளத்தை காதலிச்சு இருப்பான் போல.. பரிமளம் இறந்த கொஞ்ச நாளில் இப்படி ஆகிட்டானாம்” 
“அரை மெண்டல் ஆகி இருக்கான்னா, அந்த பொண்ணு மேல எவ்ளோ காதல் இருந்து இருக்கணும்! இல்லையா ணா?” 
“ஹ்ம்ம்.. கேட்டு சொல்றேன்” என்றவன், ஆமா சசி, வினோ மேல உனக்கு எவ்வளவு லவ் இருக்குது?” என்று கேட்டான்.
“அது இருக்கு எக்கச்சக்கம்” 
“அப்போ ஒருவேளை வினோவுக்கு எதுவும் ஆனா நீயும் இப்படி தான் சுத்துவனு சொல்லு” 
“ச.. ச.. இப்படி அரை மெண்டல் ஆகுற அளவுக்குலாம் வினோ வொர்த் இல்லை” 
“ஓ!” என்ற அபய்தேவ் சிரிப்பை அடக்குவதைப் பார்த்தவன்,
“அண்ணா எங்க உங்க செல்? வீடியோ காள் போட்டு இருக்கிறீங்களா?” என்று அலறினான்.
“ரோட்டில் வைத்து வீடியோ காள் செய்வேனா?” 
“ஸ்ப்பா” என்று பெருமூச்சை வெளியிட்டவன் அபய்தேவ் இன்னமும் சிரிப்பை அடக்குவதைப் பார்த்து, “என்ன ணா செஞ்சு வச்சிருக்கீங்க?” என்று மீண்டும் அலறினான்.
அபய்தேவ் சிரிப்புடன், “ஜஸ்ட் வாட்ஸ்அப்-ல நீ பேசினதை ரெகார்ட் செஞ்சு அனுப்பி இருக்கிறேன்” என்றான்.
அவன் அபய்தேவின் கைபேசியை பிடுங்க முயற்சி செய்ய, அபய்தேவ் அவனுக்கு போக்கு காட்டினான். ஒருவழியாக அபய்தேவின் கைபேசியை பிடுங்கி வேகமாக புலனம் சென்று பார்த்தான்.
அபய்தேவ் அனுப்பியதை அவன் மனைவி கேட்டு விட்டதிற்கான அறிகுறி தெரியவும், தலையில் கை வைத்தபடி, “ஏன் ணா இந்த கொலைவெறி உங்களுக்கு! நிஜமாவே வினோ அண்ட் உங்க கூட இருக்கிறதுக்கு அந்த பேய் கூடயே இருந்துறலாம் போல” என்றான்.
“ஓ!!! போய் அந்த பேய் கூடயே குடும்பம் நடத்து.. திரும்ப ஊருக்கு வந்திடாத” என்ற வினோதாவின் கோபக் குரல் கேட்கவும், சசிதரன் பதறியபடி அபய்தேவைப் பார்த்தான்.
அவனது கையில் இவனது கைபேசி இருக்க, வினோதா சாதாரண அழைப்பின் மூலம் இணைந்து இருந்தது தெரிந்தது.
“வினோமா” என்று சசிதரன் ஆரம்பிக்க,
“இப்போ நான் பிஸி.. உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன்” என்ற வினோதா அழைப்பைத் துண்டித்து விட்டாள்.
அபய்தேவ் வாய்விட்டு சிரிக்க,
சசிதரன், “வேணா.. வலிக்குது.. அழுதுருவேன்!” என்று முகத்தை அழுவது போல் வைத்துக் கொண்டு கூறினான்.
சிரித்தபடி தலையை லேசாக தூக்கி கரம் கொண்டு முடியை வாரியபடி கழுத்தை லேசாக சிலுப்பிய அபய்தேவின் கண்ணில் மின்னல் வந்தது. அந்த மின்னலுக்கு சொந்தக்காரி வேறு யாராக இருக்கும்!
ஆம்! அவனது அமுதசுரபியே தான். தனது அறையின் ஜன்னல் வழியே வானை பார்த்தபடி அபய்தேவ் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தவள் அவனது சிரிப்பு சத்தத்தில் அவனை நோக்கினாள்.
சில நொடிகள் இருவரின் பார்வையும் பின்னிக் கொண்டது. காதலை கூற வார்த்தைகள் தேவையா என்ன! விழி பேசிடாத காதல் மொழியை வாய் பேசிடுமா என்ன!
“அண்ணா” என்ற சசிதரனின் அழைப்பில் சுதாரித்தவன் உதட்டோர மென்னகையுடன் அவளைப் பார்த்து கண்ணடித்தான்.
அவனது செயலில் சுதாரித்த அமிர்தவள்ளி அவனை முறைத்துவிட்டு ஜன்னல் கதவை வேகமாக மூடினாள். அபய்தேவ் விரிந்த புன்னகையுடன் நடந்தான்.
அபய்தேவிடம் பதில் இல்லை என்றதும் அவனை கத்தி அழைத்த சசிதரன் அவனது பார்வையைத் தொடர்ந்து மேலே பார்த்த போது அமிர்தவள்ளி ஜன்னலை மூடுவதைத் தான் பார்த்தான். அபய்தேவின் கண் சிமிட்டலையும் பார்க்கவில்லை.
அதனால், “என்ன ணா? எதுக்கு இப்படி வித்யாசமா சிரிக்கிறீங்க?” என்று கேட்டான்.
காதல் தந்த உணர்வை தன்னுள் ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்த அபய்தேவ், “ஒன்றுமில்லை.. ரியாஸ்-கான் வடிவேலுவை அடித்தது போல் வினோ உன்னை கட்டையால் அடிக்கிற மாதிரி கற்பனை செஞ்சு பார்த்தேன்” என்றான்.
“இருங்க ஊருக்கு போய், சிவகாமிதேவி கூட சேர்ந்து உங்களைக் கவனிச்சுக்கிறேன்” 
அபய்தேவ் அலட்டிக் கொள்ளாமல், “கவனி கவனி” என்றான்.
அமிர்தவள்ளியோ மூடிய ஜன்னலின் மீது சாய்ந்தபடி படபடத்த இதயத்தை அடக்கும் விதமாக நெஞ்சின் மீது கை வைத்திருந்தாள். சில நொடிகளில் படபடப்பு குறைந்துவிட, அவளது இதழில் சிறு வெட்கத்துடன் கூடிய ரகசிய புன்னகை உதயமானது.
 
அன்று பின்னிரவில் யாமப் பொழுது முடியும் தருவாயில் சசிதரனை அபய்தேவ் எழுப்பினான்.
அவனோ கண்களை மூடிய நிலையில், “என்ன விட்டுடு.. என்ன ஒன்னும் செஞ்சிடாத பரிமளா” என்று தூக்கத்தில் பயத்துடன் உளறினான்.
அவன் கன்னத்தில் அபய்தேவ் அடிக்கவும், சட்டென்று எழுந்து அமர்ந்தவன், “அண்ணா கிணத்துக்குள்ள இருந்து அந்த பரிமளத்தோட ஆவி வந்து என்னை பிடிக்க வந்துச்சு” என்றான்.
அபய்தேவ் முறைக்கவும்,
“நிஜமா தான் ணா சொல்றேன்” என்றான்.
“இப்படியே பினாத்திட்டு இருந்த! நானே உன்னை அந்த கிணத்துக்குள்ள தள்ளி விட்டுடுவேன்” 
சசிதரன் தனது வாயை கையால் இறுக்கமாக மூடியபடி, ‘இப்போ ஓகே வா?’ என்று கண்களால் கேட்டான்.
“இப்படியே மூடிட்டு என்னோட வா” 
“எங்க ணா?” 
“உன்னை மூடிட்டு வரச் சொன்னேன்” 
மீண்டும் வாயை மூடியபடி அமைதியாக கிளம்பினான். எங்கே செல்கிறோம் என்பது அறியாமல் சசிதரன் பலியாட்டை போல் அபய்தேவுடன் தெருவில் நடக்க ஆரம்பித்தான்.
அபய்தேவ் தனது கூர் விழிகளால் சுற்றம் ஆராய்ந்தபடி செல்ல, சசிதரன் தூக்க கலக்கத்துடன் மனதினுள் புலம்பியபடி சென்றான்.
ஒரு இடத்தில் அபய்தேவ் நிற்கவும், இடத்தை ஆராய்ந்த சசிதரன் பெரும் அதிர்ச்சியுடன் ஓடப் பார்த்தான்.
ஏன் என்றால் அவர்கள் நின்றுக் கொண்டிருந்தது எமவீதி தொடக்கத்தின் அருகே.
சசிதரனின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்ட அபய்தேவ், “ஓடின கொன்னுடுவேன்” என்றான்.
சசிதரன் அழும் குரலில், “இங்கே இருந்தாலும் செத்திடுவேனே!” என்றான்.
“நான் தான் இருக்கிறேனே!”  
“நீங்க சொன்னது தான்.. நீங்க இருப்பீங்க! நான் இருப்பேனா?” 
அபய்தேவ் முறைக்கவும்,
சசிதரன் கெஞ்சும் குரலில், “வேணாம் ணா.. நீங்க பேயை பார்த்தாலும், கன் மாதிரி நின்னுட்டு அதுக்கு ஒரு ஹாய் சொல்லுவீங்க.. ஆனா நான் பயத்துலேயே ஸ்பாட் அவுட் தான்” என்றான்.
“என்னை விட பேய் கூட இருக்கிறது மேல்னு சொன்ன!” 
“ஒரு மனுஷன் ஒரு பேச்சுக்கு சொன்னா! அதை அப்படியே செயல்படுத்துறதா?” 
“நாம உள்ள போகப் போறது இல்லை டா” என்ற அபய்தேவ் தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து வலவனிலா வானூர்தியை(Drone) எடுத்தான்.
“உள்ளே போற எண்ணம் வேற இருக்குதா?” என்று அவன் அலற,
அபய்தேவ் அலட்டிக்கொள்ளாமல், “சுயர்(sure)என்றான்.
“இந்த சிவகாமிதேவியை சொல்லணும்! எந்த நேரத்தில் உங்களை பெத்தாங்களோ! ரியல் டைம் பாஹுபலி மாதிரி பயமே இல்லாம வந்து நிற்கிறீங்க” என்றவன், “அய்யோ அண்ணா! அங்க பாருங்க.. அங்க கருப்பா ஒரு உருவம் இருக்குது” என்று அலறினான்.
“கத்தாத டா” என்றவன் பார்வையை சுழற்றி உத்து பார்த்தபடி, “எங்க டா? எனக்கு எதுவும் தெரியலையே!” என்றான்.
“அங்க ணா.. அந்த மரத்தோட கிளையில்” என்று எமவீதி உள்ளே இருந்த ஒரு மரத்தை சுட்டிக் காட்டினான்.
அவன் காட்டிய இடத்தை உற்று நோக்கிய அபய்தேவ் அவன் தலையில் தட்டியபடி, “இதைத் தான் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்லுவாங்க.. ஒழுங்கா பாரு.. அது ஒரு காக்கா” என்றான்.
அது காகம் தான் என்று உறுதி செய்த சசிதரன், “இந்நேரத்தில் ஒரே ஒரு காக்கா மட்டும் இங்க என்ன செய்யுது?” என்று கேட்டான்.
“போய் கேட்டுட்டு வரியா?” 
“நான் இந்த ஆட்டத்துக்கே வரலை.. என்னை விடுங்க” என்று அவன் ஓடுவதிலேயே குறியாக இருக்க,
அபய்தேவ், “படுத்தாத டா.. நாம இங்க தான் நிற்க போறோம்.. ஜஸ்ட் இந்த ட்ரோனை(drone) உள்ளே அனுப்பி என்னோட மொபைலில் உள்ளே இருக்கிறதை பார்க்கப் போறோம்” என்றான்.
அப்பொழுதும் சசிதரன் பயத்துடன், “எனக்கு என்னவோ அந்த காக்கா நம்மளையே பார்க்கிற மாதிரி இருக்குது ணா” என்றான்.
அபய்தேவிற்கும் அப்படி தோன்றியது தான், இருந்தாலும், “கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு அமைதியா இரு” என்றபடி வலவனிலா வானூர்தியை இயக்கினான். 
அந்த வலவனிலா வானூர்தி மெல்ல எமவீதி உள்ளே பறக்க ஆரம்பித்தது. அபய்தேவ் அதை இயக்கியபடியே அது காட்டிய காட்சிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் இருந்த சசிதரன் அரைக் கண்ணால் அக்காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது ஜாதிமல்லியின் நறுமணம் அவர்கள் நாசியை தீண்டியது.
சசிதரன், “அண்ணா அந்த பரிமளதுக்கு பிடிச்ச ஜாதிமல்லி வாசமெல்லாம் வருதுணா” என்று பீதியுடன் திணறலாக கூறியான்.
“பயப்படாத முருகேசா!” என்ற அபய்தேவ் வலவனிலா வானூர்தி காட்டும் காட்சியில் கவனமாக இருந்தான்.
சில நொடிகளில் மரங்களுக்கு நடுவே ஒரு கிணறு தெரியவும், சசிதரன், “இதான் அந்த பரிமளம் குதிச்ச கிணறா ணா?” என்று திகிலுடன் கேட்டான்.
“ஹ்ம்ம்.. இருக்கலாம்” என்று அபய்தேவ் கூறிய போது கிணற்றுக்குள் இருந்து ஒரு கரம் நீண்டு வந்து வலவனிலா வானூர்தியை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டது.
சசிதரன் பயத்தில் மயங்கியேவிட்டான்.

மாயம் தொடரும்…

Advertisement