Advertisement

“என்..ன..டி சொல்..ற!” என்று அரண்ட நிலையில் இருந்த சசிதரன் திணறலாக கூறியபடி பின்னால் திரும்பிப் பார்த்தான்.
அவன் கண்களுக்கு எதுவும் புலப்படாமல் போகவும், சட்டென்று மனைவியின் விளையாட்டு புரிந்து பயம் நீங்கியவனாக அவளை முறைத்தான்.
பின், “எதுல விளையாடுறதுனு இல்லையா பக்கி!” என்று சசிதரன் கோபமாக கூற,
வினோதா வாய்விட்டு சிரித்தபடி, “என்னை பேய்னு சொன்னதுக்கு சின்னதா திகில் பட ட்ரைலர் ஓட்டினேன்” என்றாள்.
“பிசாசு.. பிசாசு.. போடி” என்றபடி அழைப்பைத் துண்டித்தவன் அபய்தேவ் இருந்த அறைக்குச் சென்றான்.
“என்ன யோசனை அண்ணா?” என்ற சசிதரனின் குரலில் சிந்தனை கலைந்த அபய்தேவ்,
“நீ நாளைக்கு இங்கிருந்து கிளம்பிடு” என்றான்.
“தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.. நீங்க கேள்விபட்டது இல்லை!” என்று சசிதரன் விறைப்பாக கூற,
அபய்தேவ் உதட்டோர நக்கல் சிரிப்புடன், “அதான் நீ அலறினத்தைப் பார்த்தேனே!” என்றான்.
“பேய்லாம் இல்லைனு எனக்கும் தெரியும்.. வினோவுக்காக தான் பயந்த மாதிரி நடித்தேன்” 
“ஸோ உனக்கு பேய்னா பயம் இல்லை” 
“எஸ்” 
“அப்போ இன்னைக்கு நைட் பேய் கூட பேச்சு வார்த்தை நடந்த நீ ரெடி” 
“அண்ணா!!!!” என்று அலறினான்.
“நீ தான் அஞ்சா நெஞ்சன் ஆச்சே!” 
“அதுக்காக பேய் கூடயா சண்டை போட முடியும்?” என்று அவன் திகிலுடன் கூற,
தீவிர முகபாவதுக்கு மாறிய அபய்தேவ், “அதான் சொல்றேன்.. ஊருக்கு கிளம்பு” என்றான்.
“என்னை கிளப்புறதுக்காக சும்மா சொல்லாதீங்க” 
“இதுக்குள்ள உனக்கு கொஞ்சமாச்சும் இந்த ஊரைப் பத்தி தெரிந்து இருக்குமே!” 
“ஹ்ம்ம்.. ஆனாலும் ரொம்ப தான் ணா செய்றான்க! ஓவர் அலம்பு.. ஊருக்குள்ள வந்து இந்த வீட்டுக்கு வரதுக்குள்ள எவ்ளோ என்குவரி!!!” 
“பொதுவாவே கிராமங்களில் அப்படித் தான் இருக்கும்.. இங்கே கொஞ்சம் கூடுதலா இருக்குது” என்றவன், “இதை விடு.. நான் சொல்றதை புரிஞ்சுக்க சசி.. இங்கே ஆபத்து இருக்குது” என்றான்.
“அதான் நீங்க இருக்கிறீங்களே!” 
“நான் இருப்பேன்.. நீ இருப்பியா?” 
“சும்மா பயம் காட்டாதீங்க! சசி ஸ்டராங்” 
“எது! பில்டிங் ஸ்டராங் பேஸ்மென்ட் வீக்கா!” 
“எனக்கு பேஸ்மென்ட் வீக் தான் ணா.. ஆனா எனக்கு நீங்க முக்கியம் அண்ணா” என்றவனின் குரல் விளையாட்டுத் தனமின்றி தீவிரமாக ஒலித்தது. 
“அதே மாதிரி நீ எனக்கு முக்கியம் தானே” 
“அம்மா சொன்னதுக்காக தான் வந்தேன்னு நினைக்கிறீங்களா?” என்று தீவிர குரலில் கேட்டான். 
“நீ என்ன நினைக்கிற?”
“அப்புறம் ஏன் என்னை கிளம்பச் சொல்றீங்க?” என்று சிறு கோபத்துடன் கேட்டான்.
“அபி என்னை விட உனக்கு எவ்வளவு முக்கியம்னு எனக்குத் தெரியாதா! நான் உனக்காகத் தான் பார்க்கிறேன்.. உன்னை நம்பி வினோ இருக்கிறா, அதை மறந்திடாத” என்றான்.
சசிதரன் அமைதியாக இருக்கவும்,
அபய்தேவ், “அபிக்கு நான் நியாயம் செய்ய மாட்டேன்னு நினைக்கிறியா?” என்று கேட்டான்.
“அண்ணா ப்ளீஸ்” என்றவன் கண்கள் லேசாக கலங்கி இருந்தாலும், அதில், ‘உங்களுடன் சேர்ந்து மர்மத்தை கண்டு பிடிக்காம இந்த ஊரை விட்டு நான் போறதா இல்லை’ என்ற உறுதியும் தெரிந்தது.  
“ஆல்ரைட்!” என்ற அபய்தேவ், “வெல்கம் டு எமபுர மாயம்” என்றான்.
“நிஜமாவே பேய் இருக்குதா ணா?” 
“எனக்கு அதில் நம்பிக்கை இல்லை” 
“ஒருவேளை உங்க முன்னாடி நிஜமாவே பேய் வந்து நின்னா, என்னணா செய்வீங்க?” 
“அப்போ பேய்னு ஒன்னு இருக்குதுனு நம்புவேன்” என்றவன் கண்களில் துளி கூட பயம் இல்லை.
“எப்படி ணா இப்படி தில்லா இருக்கிறீங்க?” 
“பயந்து என்னாக போகுது? ஏதாவது மாறுமா? நெவெர்.. இட் மேக்ஸ் தி திங்க்ஸ் வொர்ஸ்(Worse), அவ்ளோ தான்.. ஒருத்தனுக்கு பயம் இருந்தால், அவனை அவனோட எதிரி வீழ்த்துறதுக்கு முன்னாடியே அந்த பயம் அவனை வீழ்த்திவிடும்.. என்னை கேட்டால், பயம் தான் ஒருத்தனோட உண்மையான எதிரி” 
“இருந்தாலும் இந்த பேய் தான்..” என்று சசிதரன் இழுத்து நிறுத்த,
அபய்தேவ், “சரி ஒரு பேச்சுக்கு கேட்கிறேன்.. உன் முன்னாடி ஒரு பேய் வருது.. அது உன்னைக் கொல்ற எண்ணத்துடன் இருக்குது..” என்றவனின் பேச்சை இடையிட்ட சசிதரன்,
“ஏன் ணா இந்த கொலைவெறி!! இந்த ஊருக்கு வந்ததில் இருந்து திகில் படத்துக்கு நடுவில் இருக்கிற பீல் தான் வருது” என்றான். 
“அதுக்கு தான்…” என்ற அபய்தேவின் பேச்சை மீண்டும் இடையிட்டவன், “ஊருக்கு போக சொல்றீங்க.. அதானே! அது மட்டும் முடியாது” என்றான்.
“ஹ்ம்ம்.. விதி வலியது” 
சத்தமாக சிரித்த சசிதரன், “இந்த மர்மத்தை கண்டு பிடிக்கிறவர என்னோட பயத்தை போக்கி புலம்பலை கேட்க வேண்டியது உங்க விதி.. அதை மாத்த முடியாது” என்று கூறி கண் சிமிட்டினான்.
அபய்தேவ் மென்னகையுடன், “அதான் உன் கிட்ட சொல்லாம இங்கே வந்தேன்..  விக்கிரமாதித்யனை துரத்துற வேதாளமா பின்னாடி வந்து நிற்கிறியே!!” என்றான்.
“இதுக்கு கூட பேயை தான் எக்ஸாம்பில்லா சொல்லனுமா!” என்று முறைத்தான்.
“பொருத்தமா சொல்லனும்ல” 
“ரொம்ப முக்கியம்” என்றவன், “சரி.. ஏதோ சொல்ல ஆரம்பிச்சீங்களே! அதை சொல்லுங்க” என்றான். 
“ஹ்ம்ம்.. உன்னை கொல்ற…..” 
“என்னை போட்டுத் தள்ளுறதுலேயே இருக்காதீங்க.. விட்ட இடத்தில் இருந்து சொல்லுங்க” 
அபய்தேவ் மென்னகையுடன் தொடர்ந்தான், “நீ பயந்தா மட்டும் அந்த பேய் ‘இவன் பாவம்.. ரொம்ப பயப்படுறான்’ னு விட்டுட்டு போய்டுமா?” என்று கேட்டான்.
சசிதரன் அமைதியாக மறுப்பாக தலை அசைக்கவும்,
அபய்தேவ், “அப்புறம் எதுக்கு பயப்படனும்? தைரியமா இருந்தா மூளை வேலை செய்யும்.. எப்படி தப்பிக்கலாம்ங்கிற யுக்தி புத்திக்கு தோணும்.. பி பிரேவ் மேன்” என்றபடி அவனது புஜத்தில் தட்டினான்.
“அப்போ பேய் இல்லைனு சொல்றீங்களா?” 
“பேயே வந்தாலும் தைரியமா இருனு சொல்றேன்” 
‘ரைட்டு!’ என்று மனதினுள் சொல்லிக் கொண்டவன், “இதான் தெளிவா குழப்புறதா ணா?” என்று கேட்டான்.
அபய்தேவ் புன்னகையை பதிலாக தர, 
அவன், “ஆக கடைசி வரை என்னை இப்படியே தெளிவா குழப்பப் போறீங்க!” என்றான்.
வாய்விட்டு சிரித்த அபய்தேவின் கண்கள் சட்டென்று கூர்மைபெற்றது.
சசிதரன், “அபி..” என்று ஆரம்பிக்க, கையை நீட்டி அவனை தடுத்த அபய்தேவ் அந்த அறையில் இருந்த ஜன்னலை சுட்டிக் கட்டினான்.
சசிதரன் அந்த ஜன்னலை பார்க்க, அங்கே ஒரு நிழல் உருவம் லேசாக தெரிந்தது.
சசிதரன் சிறு பயத்துடன் அபய்தேவிடம் ஏதோ கூற வர, அவனோ தனது கைபேசியில் எதையோ தட்டச்சு செய்தபடி தனது உதட்டின் மீது விரலை வைத்து சசிதரனை பேசவிடாமல் தடுத்தான்.
பின், “எத்தனை நாள் லீவ் எடுத்துட்டு வந்திருக்க?” என்று கேட்டபடி கைபேசியை சசிதரனிடம் காட்டினான்.
சசிதரன் கைபேசியை பார்க்க, அபய்தேவ், “என்ன டா பதிலைக் காணும்?” என்றான்.
சசிதரன், ‘நான் பேசவா மொபைல் பார்க்கவா?’ என்பது போல் அபய்தேவை பார்க்க,
அவன், ‘ரெண்டையும் செய்’ என்று பார்வையால் கூறினான்.
“உங்க திறமையெல்லாம் எனக்கு வராது” என்று சசிதரன் வாய்விட்டே கூற, அபய்தேவ் அவனை முறைத்தான்.
“ஒரு வாரம் லீவ் எடுத்து இருக்கிறேன்” என்ற சசிதரன் அபய்தேவின் கைபேசியைப் பார்த்தான்.
அதில், ‘நான் வெளியே போய் பார்க்கிறேன்.. நான் இங்கே இருப்பது போல் நீ பேசிட்டு இரு’ என்று இருந்தது.
“இப்போ என்ன ப்ராஜெக்ட்டில் வொர்க் இருக்கிற? அதை பத்தி சொல்லு” என்ற அபய்தேவ் எழுந்துக் கொண்டான்.
‘பேய் கூட நம்மளை தனியா கோர்த்து விட்டுட்டு போறாரே!’ என்று சசிதரன் மனதினுள் புலம்ப,
அதை புரிந்தது போல் அபய்தேவ் மெல்லிய குரலில், “பேய் மறைந்திருந்து தாக்காதுடா” என்று கூறிவிட்டு சத்தம் எழுப்பாமல் வெளியே சென்றான்.
அதே நேரத்தில் வீட்டை நோக்கி நடந்துக் கொண்டிருந்த கதிர் அமிர்தவள்ளியிடம், “யக்கோவ்.. நீயி நாடகம் ஆடியதுல ஊரே அமைதியா இருக்குது” என்றான்.
“பயபுள்ளங்கெ பேலுதுங்கெ” 
“அதே தான்.. நீயி மயங்கினது ஊருக்குள்ள காட்டுத் தீயாட்ட பரவி எல்லா பேலுதுங்கெ” 
“நா பேய பாத்ததா சொல்லவே இல்ல.. இவுனுங்கெலே கெளப்பி வுடுறான்கெ” 
“இன்னு ரெண்டு நாளு நீயி அமைதியா இருந்திருந்தாக்க, ஒன்னிய பேய் பிடிச்சுபுடுச்சுனுட்டு சொன்னாலும் சொல்லுவான்கெ” 
“வுட்டாக்க அந்த பரிமளத்தோட ஆவி யே ஒடம்பு குள்ளார புகுந்துபுடுச்சுனுட்டு பொரளிய கெளப்பி புடுவாங்கெ” 
“கண்டிப்பா.. ஏனா அந்த பரிமளம் ரெம்ப அமைதியாம்.. இருக்க எடம் திரியாதாம்” 
“அப்போ இன்னைக்கே ஏதா செஞ்சி தெறிக்க வுட வேண்டியதேன்.. இல்லனாக்க வள்ளிய பரிமளம்னுட்டு மாத்திபுடுவான்கெ” 
கதிர் உற்சாகத்துடன், “என்ன செய்யிலாம் க்கா?” என்று கேட்டான்.
“இருலே யோசிக்கறேன்” 
“ஹ்ம்ம்” என்றபடி தானும் யோசித்தவன், “ஹிட்லர் வுட்டுல பட்டாசு போட்டாக்க..” இழுத்து நிறுத்தினான். பின் புன்னகையுடன், “பட்டாளத்தார் வுட்டுல பட்டாசு! சொல்லுறச்சவெ செம்மையா இருக்குல க்கோவ்!” என்றவனை அவள் முறைக்க,
அவன், “என்ன?” என்றான்.
“பட்டாளத்தார் பட்டாசுனுட்டு எகனக்கி மொகன பேச வேணா நல்லாயிருக்கும்டி..” என்றவளின் பேச்சை இடையிட்ட கதிர்,
“ஏ! செஞ்சாக்க என்ன? ஒன்னாண்ட வம்பு செஞ்சவனையு கெவனிச்சாப்ல இருக்கும்” என்று விறைப்புடன் கூறினான்.
“நீயி ஹிட்லர் விட்டுக் குள்ளார வெடிய போட நெனைக்கல.. அந்த மைதாமாவு மேலதேன் போட நெனைக்கிற.. செரியா!” 
கதிர் அமைதியாக இருக்கவும், அவள், “இது செரி வாராதுலே” என்றாள்.
சிறு கோபத்துடன், “ஏ! ஏ செரி வாராது?” என்றவன், “ஒனக்கு அவென் மேல ஏதும் நெனப்பு இருக்கா?” என்று கூர் விழிகளுடன் கேட்டான்.
அவள் அவனை முறைக்க,
அவனும் அசராமல் அவளைப் பார்த்தபடி, “இல்லனாக்க ஏ வேணாமுட்டு சொல்லுற?” என்று கேட்டான்.
“யே ஆத்தா ஆஞ்சிபுடும்லே” 
“ஆத்தாவுக்கு நீயி பயப்படுற! அத நா நம்பனுமாக்கும்!” என்று முறைப்புடன் கூறினான். 
“ஏலே நெசமாலு நா அந்த மைதாமாவுக்காக சொல்லலலே” 
“நம்பிட்டேன்” 
“ப்ச்” என்று சலித்தவள், “ஏலே இதுவர நாம ஆதாரமில்லாம சேட்டை செயிததால அய்யா காப்பாத்தி வுட்டாங்கெ” 
“இப்போ மட்டு என்னவாம்? ஆரு கண்ணுலேயு படாம பட்டாச போட முடியாதாக்கும்?” 
“முடியம்தேன் ஆனாக்க..” என்றவளின் பேச்சை இடையிட்டவன்,
“இந்த ஆனா ஆவென்னாலாம் வேணா” என்று கறாராக கூறினான்.
“படுத்தாதலே” 
“ஆரு? நானு?” 
“மொத என்னிய பேச வுடுலே” 
“செரி சொல்லு” 
“இப்போ நம்ம கையில பட்டாசு இருக்கா?” 
‘இது ஒரு வெசயமா?’ என்பது போல் பார்த்தவன், “அண்ணாச்சி கடையில இருக்கும்” என்றான். 
“இததேன் சொல்லுதீன்” 
“என்னத்த சொல்லுற?” 
அவள் முறைக்கவும்,
அவன், “மொறைக்காம வெசயத்த தெளிவா சொல்லுக்கா.. ஒன்னிய போல அறிவு இருந்தாக்க நா ஏ பெஞ்ச தேய்க்கறேன்” என்றான்.
“நாம பட்டாச வெடிச்ச அரை மணி நேரத்துல ஹிட்லர் ஆதாரத்துடன் அய்யா முன்னாடி நிப்பார்லே” 
“எப்புடி?” 
“கடைவீதியாண்ட போயி அண்ணாச்சி கடை பையனை கூட்டியாந்து நாமதேன் பட்டாசு வாங்கினோமுட்டி மெய்ப்பிப்பார்லே” 
“நாம பாட்டாசு வாங்கினாக்க, நாமதேன் வெடிக்கனுமுட்டு இல்லையே” 
“இல்லதேன்.. ஆனாக்க வேராரும் வாங்கதப்ப நாமதேனே வெடிச்சோமுட்டு சொல்லுவார்லே” 
“ஓ! அந்தாளு வெனையம் புடிச்சவர்தேன்” 
“அதேன் சொல்லுதீன்” 
“இது மட்டுதேன் காரணமா?” என்று அவன் சந்தேகமாக வினவ, அவள் அவனை முறைத்தாள்.
“செரி வுடு.. வேற யோசிப்போம்” என்றவன், “எனக்கு ஒரு சந்தேகம்” என்றான்.
அவள், ‘என்ன’ என்பது போல் பார்த்தாள்.
“கோபி மாமா மண்டைய ஒடைச்ச மாதிரி அவென் மண்டைய ஏ நீயி ஒடைக்கல?” 
“அந்த நேரம் கம்பால அடிக்கதே தோணுச்சு” என்றபடி தோளை குலுக்கினாள்.
அவன் அவளை உற்று நோக்கவும்,
“இப்பு அவென பத்தி பேசி பேசியே நீயே இல்லாத நெனப்ப யே நெஞ்சு குள்ளார புகுத்திபுடுவ போலவே” என்றாள்.
‘ஆத்தி!’ என்று சற்றே மனதினுள் அலறிய கதிர், ‘இனி அவென பத்தி பேசிடாத கதிரு’ என்று சொல்லிக் கொண்டான்.
அதன் பிறகு இருவரும் அமைதியாக நடக்க, கதிர் வீடு வந்து விட்டது.
அவன் வீட்டிற்குள் செல்லாமல் இவளுடன் வர, அவள், “நாளு வூட்ட கடக்க தொணையா?” என்றபடி முறைத்தாள்.
“ஏ நா ஓ வூட்டுக்கு வார கூடாதா?” 
“ஒழுங்கு மருவாதயா உள்ளார போய்டு” என்று மிரட்டினாள்.
அவன் அசராமல் நிற்கவும், அவள் கோபத்துடன், “ஏலே வேணா, மாமன் மண்டைய ஒடச்ச மாதிரி ஓ மண்டையவு ஒடச்சுபுடுவேன்.. ஓடிடு” என்றாள்.
‘அவென் மண்டைய மட்டு ஒன்னியும் செய்யாத’ என்று சத்தமாக முணுமுணுத்தபடி தனது வீட்டின் உள்ளே சென்றான்.
அதன் பிறகு வீட்டிற்கு சென்ற அமிர்தவள்ளி தனது அறைக்கு சென்று யோசனையில் ஆழ்ந்தாள்.
‘கதிரு சொல்றது போல கல் எறிந்து அவென தாக்கி இருக்கலாமே! மாமன அசால்ட்டா தெறிக்கவுட்ட மாதிரி அவென ஏ செய்யில?’ என்று யோசித்தவள்,
‘மாமன தெறிக்க வுட்டப்ப நா தெளிவா இருந்தீன்.. ஆனாக்க அந்த மைதாமாவு வம்பு செஞ்சப்ப நா நானா இல்லியோ!
கொஞ்சுண்டு படபடப்பு, கோவம், பொறவு.. ஏதோ சொல்லத் திரியாத உணர்வுனுட்டு நா தெளிவா யோசிக்கற நெலயில இல்லியோ! அதேன் கல்ல எறியாம கம்ப தூக்கிட்டு திரும்ப அவென் கிட்டக்க போனேனோ! என்னோட உணர்ச்சிகள் என்னிய மீறி செயல்பட்டுபுடுச்சோ!’ என்று தன்னைத் தானே கேள்வி கேட்டு சுய ஆராய்ச்சியில் இறங்கினாள்.
ஒரு கட்டத்தில் தோப்பில் நின்ற அபய்தேவ் உதட்டோர மென்னகையுடன் வலது கையை நீட்டி அவளை வாவென்று கண்களால் அழைப்பதுப் போல் காட்சி தோன்றவும் பெரிதும் அதிர்ந்தாள்.

மாயம் தொடரும்…

Advertisement