Advertisement

மகளைப் பார்த்த செந்தில்வேல் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வேகமாக அவள் அருகே வந்தார்.
“இப்போ என்னாத்துக்கு இந்த வெயில்ல இங்குட்டு வந்த ராசாத்தி!” என்றபடி தோளில் இருந்த துண்டைக் கொண்டு அவள் முகத்தில் துளிர்த்திருந்த வேர்வையை ஒற்றி எடுத்தார்.
“வெயில் அப்புடி ஒன்னு இல்லங்கெ அய்யா.. மணி தா நாலரையாவ போவுதே” என்றாள்.
கதிர் சற்று தள்ளி நிற்பதைப் பார்த்துவிட்டு, “என்ன ராசாத்தி பேசோனும்?” என்று கேட்டார்.
“அது வந்து அய்யா” என்று அவள் சிறிது தயங்க,
அவர் பரிவுடன் பார்த்தபடி, “தயங்காம சொல்லுடா” என்றார்.
“என்னிய மன்னிச்சிடுங்கெ அய்யா.. நா நெசமாலும் மயங்கல..” என்றவளின் பேச்சை இடையிட்டவர் மென்னகையுடன்,
“திரியும் ராசாத்தி” என்றார். 
அவள் அதிர்ச்சியுடன், “யே மேல கோவம் வாரலயா அய்யா?” என்று கேட்டாள்.
அவர் அதே மென்னகையுடன், “ஏ ராசாத்தி மேல என்னைக்கும் கோவம் வாராது.. ஓ அம்மை வாய அடைக்கதேன் நடிச்சேனுட்டு, இந்த அய்யனுக்கு திரியாதா என்ன!” என்றார்.
“அப்ப, இன்னு ஏ ஆத்தா கிட்டக்க பேசல?” 
சட்டென்று சிறு கோபம் அவர் முகத்தில் உதிக்க, “ஒன்னிய எமவீதிக்கு போவ வெச்சது அவ தான!” என்றவர் சற்றே பிசிறிய குரலில், “நெசமாலுமே ஒன்னுகெடக்க ஒன்னு ஆகியிருந்தாக்க!” என்றார்.
பின் தனது கையை நீட்டியபடி, “இனி வெளையாட்டுக்கு கூட அங்கிட்டு போவ மாட்டனுட்டு சத்தியம் செய்யி ராசாத்தி” என்றார்.
நெகிழ்ச்சியுடன் தந்தையைப் பார்த்தவள், “என்னிய மன்னிச்சிபுடுங்க அய்யா.. இனி வெளையாட்டுக்கு அங்கிட்டு போவ மாட்டேன்” என்று சத்தியம் செய்தவள் கண்ணில் குறும்புடன், “ஆனாக்க தேவபட்டா போவேனுட்டு ஆத்தாவ மிரட்டுவேன்” என்று கூறி சிரித்தாள்.
அவரும் சிரிப்புடன், “போக்கிரி” என்றார். 
“ஒங்களுக்கு எப்புடி திரியும் அய்யா?” என்று அவள் வினவ,
“வைத்தியர் சொன்னார்” என்றார்.
“எப்போ அய்யா?” 
“நேத்தி காலம்பற ஒன்னிய சாப்புட வெச்சிட்டு சோலிக்கு வைத்தியர் வுட்ட தாண்டி போனப்ப, என்னிய கூப்பிட்டு பேசினாரு.. ஏதோ ஒரு காரணத்துக்காக நீயி நடிக்கிறனுட்டு சொன்னார்”  
“பொறவு ஏ நேத்தி ரவைக்கு என்னிய அப்பத்தா அறையில படுக்க சொன்னீகெ?” 
“ஓ அம்மைக்காக தான் அப்புடி சொன்னே.. நீயி நாடகத்தை முடிக்கிற வர நானும் நாடகமாட நெனைச்சேன்” 
“தங்கமான அய்யா” என்று கொஞ்சியவள், “எனக்காக ஆத்தா கிட்டக்க பேசுங்க அய்யா” என்றபடி கண்ணில் கெஞ்சலுடன் நோக்கினாள்.
“ஏ ராசாத்தி ஆருக்காகவும் எதுக்காகவும் கெஞ்சக் கூடாது” 
“அப்போ பேசுவீங்கெ தான அய்யா?” என்று உற்சாக குரலில் கேட்டாள்.
அவர் புன்னகையுடன் தலையை ‘ஆம்’ என்பது போல் ஆட்ட,
“தங்க.. தங்கமான அய்யா” என்று உற்சாகத்துடன் குதித்தாள்.
“செரி கண்ணு.. நேரத்தோட வுட்டுக்கு கெளம்பு” என்றவர், “ஏலே கதிரு” என்று குரல் கொடுத்தார்.
“ஐயா” என்றபடி ஓடி வந்தவனிடம்,
“ரெண்டு பேரும் வெரசா வுட்டுக்கு போய்ச் சேருங்கெலே” என்றார்.
“செரிங்கெ ஐயா” என்று கதிர் கூற,
“செரி அய்யா” என்ற அமிர்தவள்ளி கதிருடன் வீட்டிற்கு கிளம்பினாள்.
அமிர்தவள்ளியிடம் பேசிவிட்டு வீட்டிற்கு சென்ற அபய்தேவை, “ஹாய் அண்ணா” என்ற பாசமான குரலில் வற்றவேற்றபடி ஒருவன் அணைத்துக் கொள்ள,
அபய்தேவ் பல்லை கடித்தபடி, “உனக்கு யாரும் ஆஸ்கார் அவார்ட் கொடுக்கப் போறது இல்லை” என்று மெல்லிய குரலில் கூறி அவனை தன்னிடம் இருந்து விலக்கினான்.
அவனோ தெருவில் இருந்தபடி தங்களை பார்த்துக் கொண்டிருந்த சிலரை ஓரப்பார்வை பார்த்துவிட்டு, அபய்தேவிடம் சிரித்தபடி மெல்லிய குரலில், “அதை விட உயிரு முக்கியம் பாஸ்” என்றான்.
அபய்தேவும் சிரித்தபடி, “வா டா.. வரதா சொல்லவே இல்லையே!” என்று சத்தமாக கூறியபடி அவன் புஜத்தில் தட்டினான்.
வெளியே இருந்தவர்களுக்கு அவன் லேசாக தட்டியது போல் தெரிய, அடி வாங்கியவன் சிரிப்புடன் லேசாக வலித்த புஜத்தை தடவியபடி, “சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டுமேனு தான் அம்மாவைக் கூட உங்க கிட்ட சொல்ல வேணாம்னு சொல்லிட்டேன்” என்றவன் அம்மாவில் சற்று அழுத்தம் கொடுத்திருந்தான்.
அவன் கூற வருவது புரிந்தாலும் பிறர் அறியாமல் அவனை முறைத்த அபய்தேவ், “சரி வா.. உள்ளே போய் பேசலாம்” என்றபடி வீட்டின் கதவை திறவுகோல் கொண்டு திறந்தான்.
(பட்டாளத்தார் என்று அழைக்கப்படும் ராமலிங்கத்தின் வீட்டில் தான் அபய்தேவ் இருக்கிறான். அவர் தற்போது வீட்டில் இல்லாததால் இவன் சாவி கொண்டு திறக்கிறான்)
அப்பொழுது ஒருவர் இவர்கள் வீட்டின் தெருவாசல் முன் நின்றபடி, “தம்பி உங்க தம்பிங்களா தம்பி?” என்று கேட்டார்.
புதியவன், ‘எத்தன தம்பி!’ என்று முணுமுணுக்க,
அபய்தேவ் மென்னகையுடன் கேள்வி கேட்டவரைப் பார்த்து, “என்னோட தம்பி தான் சார்” என்றான்.
“நேத்திக்கே வாயார அழகா சித்தப்பானுட்டு கூப்பிட சொன்னே தான!” என்று உரிமையுடன் அவர் கோபம் கொள்ள,
அபய்தேவ் மென்னகையுடன், “சாரி.. சட்டுன்னு வரலை” என்றான்.
புதியவனோ அவரைப் பார்த்து புன்னகையுடன், “யூ டோன்ட் வொர்ரி சித்தப்பு.. நான் வாயார உங்களை சித்தப்புனு கூப்பிடுறேன் சித்தப்பு” என்றான்.
அபய்தேவ் அவனைப் பார்த்து முறைக்கவும், அவன் இவனைப் பார்த்து சிறிது அசடு வழிந்தபடி அமைதியானான்.
அபய்தேவைப் பார்த்து மென்னகையுடன், “வுடுங்க தம்பி.. தம்பி வெளையாட்டுப் புள்ளையா இருக்காப்புல!” என்றவர் புதியவினின் தோளை தட்டியபடி,
“தம்பிக்கு அண்ணே மேல நெம்ப மருவாத போல! அப்புடிதேன் இருக்கோனும்” என்றார்.
‘என்ன வாதமோ! உள்ள போனா, அவர் அடிக்கிற அடியில் எனக்கு பக்கவாதம் வராம இருந்தா சரி!’ என்று மனதினுள் நினைத்த புதியவன் வெளியே அவரைப் பார்த்து சிரித்து வைத்தான்.
அவனது நிலைமையை அறியாதவர், “தம்பி பேரென்ன?” என்று கேட்டார்.
“சசிதரன்” 
“சசிதரன் தம்பிக்கு என்ன சோலி?” 
சசிதரன் புரியாமல் அபய்தேவைப் பார்க்க,
அவன் அவரிடம், “அவனும் சாப்ட்வேர் இஞ்சினியர் தான்” என்றான்.
வாய்விட்டு சிரித்தபடி, “இந்த தம்பிக்கும் பொட்டி தட்டுற சோலி தானுங்கெளா!” என்றவர், “ஒங்களுக்கும் மூள சூடாகிபுடுச்சா?” என்று கேட்டார்.
சசிதரன் இப்பொழுதும் அபய்தேவைப் பார்க்க, அதற்கும் அவர் சிரித்தபடி, “எல்லாதுக்கு அண்ணே மொகத்தயே பாத்தாக்கெ எப்புடி தம்பி?” என்றார்.
அபய்தேவ், “இப்போ தானே வந்து இருக்கிறான், அதான் நீங்க பேசுறது பிடிபடலை” என்றான்.
“தம்பிய வுட்டு கொடுக்காம பேசுது தம்பி.. அம்புட்டு பாசம்.. இப்புடிதேன் இருக்கோனும்.. ஆயுசுக்கும் இப்புடியே ராமன் லக்ஷ்மணனாட்ட இருக்கோனும்” என்றார். 
அபய்தேவ் மென்னகையுடன், “கண்டிப்பா” என்றான்.
மெச்சுதலாக அபய்தேவை பார்த்தவர் பின் சசிதரனைப் பார்த்து, “அப்பொறம்.. தம்பி எத்தின நாள் ஊர் தங்கப் போறீங்க?” என்று கேட்டார்.
சசிதரன் பதில் கூறும் முன் அபய்தேவ், “நாளைக்கு கிளம்பிடுவான்” என்றான்.
“வந்த  வுடனே கெளம்புறதுக்கு என்னாத்துக்கு இம்புட்டு தூரம் வாரோனும்?” 
“மதுரைக்கு வேற வேலையா வந்தவன் என்னை பார்த்துட்டு போக வந்திருக்கிறான்” என்று அபய்தேவ் கூற,
சசிதரன் அபய்தேவின் பார்வையை சந்திக்காமல், “நான் வந்த வேலை கொஞ்சம் இழுத்தடிக்கிற மாதிரி தெரியுது அண்ணா.. அதை முடிச்சிட்டு தான் கிளம்பனும்” என்றான்.
அபய்தேவ் அவர் அறியாமல் சசிதரனை முறைக்க, அவனோ இவன் பக்கம் திரும்பவே இல்லை.
“நமூரு பசங்களா ஆகிபுட்டீங்கெ.. ஏதும் காரியம் ஆகணுனாக்க, தயங்காம சொல்லுங்கெ” 
“தேங்க்ஸ்.. நன்றி சார்.. நாங்களே பார்த்துக்கிறோம்” என்று கூறிய அபய்தேவ், “சரிங்க அப்புறம் பார்க்கலாம்” என்றபடி உள்ளே சென்றுவிட்டான்.
அவன் பின்னால் செல்ல இருந்த சசிதரனிடம் அவர், “மறுதயில என்ன சோலி தம்பி?” என்று கேட்டார்.
அப்பொழுது, “சசி” என்று உள்ளிருந்து அபய்தேவ் குரல் கொடுக்கவும்,
விட்டால் போதுமென்று, “நான் அப்புறம் பேசுறேன்” என்ற சசிதரன் தனது பையை எடுத்துக் கொண்டு உள்ளே ஓடி விட்டான்.
“புதுசா வந்த தம்பி ஆராம்லே?” என்று கேட்டபடி ஒருவர் வர, இவ்வளவு நேரம் அபய்தேவ் மற்றும் சசிதரனிடம் பேசியவர் தான் அறிந்ததை கூறியபடி நடந்தார்.

 

உள்ளே சென்ற சசிதரன் அபய்தேவின் உக்கிரத்தில், “நோ வயலன்ஸ்.. உங்க அடியை இந்த பிஞ்சு உடம்பு தாங்காது” என்று அவசரமாக கூறினான்.
அபய்தேவ் அவனை மேலும் கீழும் பார்க்க,
“சரி.. ஜிம் பாடினாலும் உங்க அடியை தாங்காது” என்றவன், “எதா இருந்தாலும் என்னை இங்கே துரத்திவிட்ட அம்மாவையும் உங்க பாசமலரையும் கேளுங்க” என்றான்.
“இருடா.. முதல்ல அங்க பேசிட்டு வரேன்” என்ற அபய்தேவ் தனது அன்னை சிவகாமியை கைபேசியில் அழைத்தான்.
அவர் அழைப்பை எடுக்கவில்லை என்றதும் சசிதரனை இவன் பார்த்த பார்வையில் அவன், ‘இன்னைக்கு நம்ம கன்னம் பழுக்காம விடாது போல!’ என்று மனதினுள் அலறியபடி தனது கைபேசியை எடுத்து சிவகாமியை அழைத்தான்.
இவனது அழைப்பை அவர் எடுத்ததும், “தவறு செய்துவிட்டாய் சிவகாமி! தவறு செய்துவிட்டாய்” என்று பாகுபலி சத்யராஜ் போல் கூறினான்.
அவர் மென்னகையுடன், “என்னடா?” என்றார்.
“இப்போ அண்ணா கிட்ட பேசுறீங்க” என்று கட்டளைப் போல் கூறினான்.
அவரோ, “முடியாது போடா” என்றார்.
“உன்னோட கட்டப்பாவை பாகுபலி கிட்ட இருந்து காப்பாத்து சிவகாமி” என்று இவன் கெஞ்ச,
“அப்போ உன்னோட சிவகாமியை யாரு காப்பாத்துறது?” என்று பதில் கேள்வி கேட்டார்.
அப்பொழுது சசிதரனிடம் இருந்து கைபேசியை பிடுங்கிய அபய்தேவ், “அம்மா!!!” என்று கோபத்துடன் அழைத்தான்.
உள்ளுக்குள் சிறிது படபடத்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “என்னடா?” என்று மிரட்டலாகவே கேட்டார்.
“உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?” 
“உனக்கு வேண்டாதது எனக்கு வேண்டியது” 
“ஓ!” என்றவன், “இவன் எனக்கு பாதுகாப்பா?” என்று கேட்டான்.
“அவனையே நீ தான் பாதுகாக்கணும்னு எனக்கு தெரியும்” 
“அப்போ எதுக்கு அனுப்புனீங்க?” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான்.
“நீ எப்படியும் நான் போன் செஞ்சா எடுக்க மாட்ட, எடுத்தாலும் எதுவும் சொல்ல போறது இல்லை.. அதான் சசியை அனுப்பினேன்” 
“ஸோ உங்க கட்டப்பாவ எட்டப்பா வேலை பார்க்க அனுப்பி இருக்கிறீங்க” என்று நக்கலுடன் கூறினான்.
“என்னவும் சொல்லிக்கோ..” 
“உங்க பயம் தேவை இல்லாதது” 
சற்றே கரகரத்த குரலில், “அங்க என்ன நடக்குதுனே தெரியாம என்னால நிம்மதியா இருக்க முடியாது டா” என்றவர், “அபி..” என்று ஆரம்பிக்க,
“அம்மா நான் அபி இல்லை.. அபய்” என்று அழுத்தத்துடன் கூறியவன், “என்னை எவனும் எதுவும் செய்ய முடியாது” என்று இன்னும் அழுத்தத்துடன் கூறினான்.
“நீ மோதப் போறது மனிதர்களுடன் இல்லையே!” என்றவரின் குரலில் கலக்கம் கூடி இருந்தது.
“ப்ச்.. பேய்னு எதுவும் இல்லை ம்மா” 
“அப்போ அபி..” என்றவரின் பேச்சை இடையிட்டவன்,
“நிச்சயம் இதில் ஏதோ நடந்து இருக்குது.. அதை கண்டு பிடிக்காம நான் விட மாட்டேன்.. உங்க நிம்மதிக்காக டெய்லி காலையில் எழுந்ததும், நைட் தூங்குறதுக்கு முன்னாடியும் உங்க கிட்ட பேசுறேன்” என்றான். 
“உனக்கு ரெண்டு வாரம் தான் டைம்.. இல்லை நானே வந்து நிற்பேன்” 
“வாங்க.. நீங்க சொல்ற பேய் கூட சேர்ந்து ஒரு குத்தாட்டம் போடலாம்” 
‘இவன் செஞ்சாலும் செய்வான்’ என்று மனதினுள் நினைத்தவர் அவனிடம், “சசியை பார்த்துக்கோ” என்றார். 
சசிதரனை பார்த்தபடி, “பேய் கிட்ட பேச்சு வார்த்தை நடத்த ஒரு ஆள் தேவைப்படுது.. இவனை அனுப்பி வைக்கிறேன்” என்றான்.
“தெய்வமே!!!!” என்றபடி சசிதரன் இவன் காலில் சாஷ்டாங்கமாக விழ,
சிவகாமி, “டேய்!!” என்று அலறி இருந்தார். 
அபய்தேவ், “நைட் பேசுறேன்மா” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
பின், “போதும் டா.. எந்திரி” என்றான்.
“முடியாது.. பேய் கிட்ட அனுப்ப மாட்டேன்னு சொல்லுங்க, அப்போ தான் எந்திரிப்பேன்” 
“பொம்பள பேய் தான் டா.. அதுவும் கன்னி பேயாம்” 
முறைப்புடன் எழுந்தவன், “நான் ஊருக்கே கிளம்புறேன்.. தெரியாத பேயை விட தெரிந்த பேயே மேல்” என்றான்.
“நான் பேயாடா?” என்ற பெண் குரலில் அரண்டவனாக, “அண்ணா இங்க நிஜமாவே பேய் இருக்குது போலணா.. வினோ குரலில் இப்போ பேசுச்சு.. உங்களுக்கு கேட்டுச்சா?” என்று கேட்டான்.
அபய்தேவ் புன்னகையுடன் தனது கைபேசியை அவனிடம் காட்ட, அதன் திரையில் சசிதரனின் காதல் மனைவி வினோதா தெரிந்தாள்.
‘வொய் திஸ் கொலைவெறி!’ என்பது போல் சசிதரன் அபய்தேவை பார்க்க,
அவனோ விரிந்த புன்னகையுடன், “என்ஜாய்!!!!” என்றபடி கைபேசியை அவன் கையில் கொடுத்துவிட்டு சென்றான்.
“இல்லடி செல்லக் குட்டி” என்று மனைவியை கொஞ்சியவன், “அண்ணா எப்போதும் போல போட்டு வாங்கிட்டார்” என்றான்.
“அப்போ நிஜமாவே என்னை பேய்னு சொல்றியா?” என்றபடி பத்திரகாளியாக அவனை முறைக்க,
‘இப்படி வந்து சிக்கிட்டேனே! ரவுண்டு கட்டி அடிக்கிறாங்களே!’ என்று மனதினுள் புலம்பியவன், “இல்லைமா.. நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” என்றான்.
“மனசில் இருக்கிறது தானே வெளியே வரும்” 
“இல்லைடி செல்லம்” 
“அது எப்படி மனசில் இல்லாம வரும்?” 
“நிஜமாவே சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன் வினோ.. பிலீவ் மீ பேபிமா”
“விளையாடுக்குனாலும் என்னை பேய்னு சொல்லுவியா?” 
“அப்படி இல்லை டா” 
“பின்ன எப்படி?” என்றவள், “அது எப்படி என்னை பேய்னு சொல்லுவ?” என்று சண்டை போட்டாள்.
“கொஞ்சம் நான் சொல்றதை கேளுடி” 
“முடியாது போடா.. நீ போய் அங்க இருக்கிற பேய் கூடயே டூயட் பாடு.. வீட்டுக்கு வந்திடாத” 
“நீ பேய் தானே! காதல் பேய்-டி செல்லமா.. என்னை துரத்தி துரத்தி காதல் செஞ்சு அன்பு மழை பொழியும் காதல் பேய்”
“டேய்!!” என்றவளின் குரலில் இப்பொழுது கோபத்திற்கு பதிலாக சிறு காதல் எட்டிப் பார்த்தது.
“அப்புறம் வம்பியர் கிஸ் கொடுக்கும் போது முத்தப்பேய்” என்று கிறக்கத்துடன் கூறினான்.
இப்பொழுது, “டேய்!!” என்றவளின் குரலில் காதலுடன் வெட்கமும் கலந்து இருந்தது.
இப்படி பல பிட்டுக்களை போட்டு கொஞ்சி கெஞ்சி ஒருவாறு மனைவியை மலை இறக்கி காதலுடன், “இப்போ கிக்கா ஒரு முத்தம் கொடுடி” என்று கிறக்கத்துடன் கேட்டான்.
“டேய்!” என்று அலறியவள், “நிஜமாவே உன் பின்னால பேய் இருக்கிற மாதிரி இருக்குது டா” என்று கூற, சசிதரன் அரண்டு போய் உறைந்த நிலைக்கு சென்றான்.
விளக்கம்
ரவைக்கு    –      இரவுக்கு
மறுத       –      மதுரை

மாயம் தொடரும்..

Advertisement