Advertisement

செந்தில்வேலின் வீட்டு பட்டாசலில் அவர் குடும்பத்தினர், கனகப்ரியா, அவள் தாய், கதிர், பட்டாளத்தார், சிவகாமி மற்றும் சசிதரன் இருந்தனர். அபய்தேவ் காவல்துறை அதிகாரிகளுடன் எமவீதிக்கு சென்றிருந்தான்.
செந்தில்வேல் கனகப்ரியாவின் அன்னையைப் பார்த்து, “இப்ப யன்னமா சொல்ற?” என்று கேட்டார்.
அவர் ஓய்ந்த குரலில், “நா சொல்ல யன்ன இருக்குவுது மாமா?” என்றதும்,
சிவகாமி, “அபி கிட்ட என்ன குறையை கண்டீங்க? அவன் தங்கமான பிள்ளை.. அபய் மாதிரி  சட்டுன்னு கோபம் வராது.. எப்போதுமே சிரித்த முகமா, எல்லோரிடமும் அன்பா இருப்பான்.. எத்தனை பேருக்கு இலவசமா படிப்பு சொல்லி தரான் தெரியுமா?” என்றார்.
கனகப்ரியாவின் அன்னை அமைதியான குரலில், “ஒங்க மவென நா கொற சொல்லுலீங்கெ.. யங்க ஊர் கட்டுப்பாடு.. அதுவுமில்லாம, படிக்க போன எடத்தில காதல்னுட்டு வந்து நிக்கவும், அத சட்டுனுட்டு ஏத்துக்க மிடில.. அம்புட்டுதீ” என்றார்.
காமாட்சி அவர் தோள் பற்றி, “அதெல்லாம் வுடு.. இப்ப நாங்கெ கனகுக்கு பாத்த மாப்பிள்ள இவருனுட்டு நெனிச்சிக்க.. இப்போ சொல்லு” என்று கூற,
தாயம்மாள், “அது மட்டுமில்ல மலரு.. நம்ம வள்ளி கண்ண அபய் தம்பிக்கு பேசிட்டு இருக்கோம்.. யங்க யெல்லாருக்கு சம்மதம்.. வள்ளியு அபய் தம்பியு தா சம்மதம் சொல்லோனும்” என்றார்.
அவர் சட்டென்று காமாட்சியைப் பார்க்க, காமாட்சி மென்னகையுடன் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினார்.
கதிர் அமிர்தவள்ளி முகம் பார்க்க, அவள் உதட்டோர புன்னகையுடன் கண்ணடித்தாள்.
கனகப்ரியாவின் அன்னை மகிழ்ச்சியுடன், “யனக்கு சம்மதம் மாமா.. முழு மனசோடதீ சொல்லுறே” என்றார்.
கனகப்ரியா ஆனந்த கண்ணீருடன் தோழியை கட்டிக் கொள்ள, தானும் அவளை மகிழ்ச்சியுடன் கட்டிக் கொண்ட அமிர்தவள்ளி அவளது கண்ணீரை துடைத்தபடி, “மக்கு” என்றாள்.
பட்டாளத்தார், “பொறவென்ன! ரெண்டு கல்யாணத்தயு ஜாம் ஜாமுனுட்டு ஒரே மேடயில வெச்சி ஜமாச்சிப்புடலாம்” என்றார்.
செந்தில்வேல் மகளைப் பார்த்து, “நீயி யன்ன சொல்ற ராசாத்தி?” என்று கேட்டார்.
அப்பொழுது சரியாக வந்த அபய்தேவ் அவள் பதிலை அறிவதற்காக யார் கவனத்தையும் கவராமல் முற்றத்திலேயே பட்டாசல் வாயில் அருகே சற்று மறைவாக நின்று கொண்டான்.
ஆனால் அவன் வரவை கண்டுகொண்ட அமிர்தவள்ளி குறும்பு புன்னகையுடன் சிவகாமியை கட்டிக் கொண்டு, “யனக்கு இவுகெள ரெம்ப புடிச்சி இருக்குவுது அய்யா.. அதனால இவுகெ மவன கட்டிக்க சம்மதம்” என்றாள்.
அவள் கூறிய விதத்தில் அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி பூக்க,
சிவகாமி அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து, “ரொம்ப சந்தோசம் டா” என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
பின் சத்தமாக, “உள்ள வா டா பாஹுபலி” என்றார்.
அபய்தேவ் முறைப்புடன் உள்ளே வந்ததும்,
வாய்கொள்ளாச் சிரிப்புடன், “என்னை தான் பிடிச்சு இருக்குதாம்” என்றவர் கைதட்டி, “தொப்பி! தொப்பி!” என்றார்.
அபய்தேவ் அலட்டிக் கொள்ளாமல் செந்தில்வேலைப் பார்த்து, “அமிர்தா கூட தனியா பேசிட்டு என்னோட முடிவை நான் சொல்றேன்” என்றான்.
“கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை” என்ற சிவகாமி அபய்தேவின் முறைப்பில் சசிதரனைப் பார்த்து, “அப்படினா என்னனு தெரியுமா சசி?” என்று கேட்டு சமாளித்தார்.
அவன் உஷாராக, “எனக்கு தெரியாது மா” என்று பதில் கூறி தப்பித்துக் கொண்டான்.
சிரிப்புடன் நின்ற மகளை வாஞ்சையுடன் பார்த்த செந்தில்வேல் மனம் நிறைந்தவராக, “போ ராசாத்தி.. மாப்பிள்ளய மச்சிக்கு கூட்டி போயி பேசிட்டு வா” என்றார்.
தந்தை மனதார மாப்பிள்ளை என்று அழைத்ததில் பெரும் மகிழ்ச்சியுடன் அவரைப் பார்த்து ‘சரி’ என்பது போல் தலை அசைத்தவள் அபய்தேவைப் பார்த்து, “வாங்கெ” என்றபடி நடந்தாள்.
அவர்கள் சென்றதும் சிவகாமி கணவருக்கு காணொளி அழைப்பு விடுத்து செந்தில்வேலிடம் பேச வைத்தார். அபினவ் உடல் நன்றாக தேறி வர வேண்டும் என்பதற்காக மூன்று மாதங்கள் கழித்து திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தனர்.
படிகளில் ஏறிக் கொண்டிருந்த போது, அபய்தேவ், “உன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போ” என்று சாதாரண குரலில் கூறினான்.
அவள் சிறு தோள் குலுக்கலுடன் முதல் மாடி பட்டாசலில் இருந்த மரபடிக்கட்டு அருகே சென்று, “நீயி மொத ஏறு” என்றாள்.
அவன் அமைதியாக ஏற,
“அந்த கதவ மேல் பக்கமா தொறந்து உள்ளார போ” என்றபடி அவளும் ஏறினாள்.
அவன் அவ்வாறே செய்து அறையினுள் சென்றதும், படியில் நின்றிந்தவளை நோக்கி வலது கரத்தை நீட்டினான்.
அவன் முகத்தை நோக்கியவள், அவன் புருவத்தை ஏற்றி இருக்கவும் அமைதியாக தனது வலக்கரத்தை அவன் கரத்தில் வைத்தாள்.
அவள் கரத்தை இறுக்கமாக பற்றியபடி, ‘வா’ என்பது போல் தலையை ஆட்டி செய்கை செய்தான்.
அவள் அறையினுள் வந்த நொடியில் அவனது அணைப்பில் இருந்தாள்.
அவள் அதிர்ச்சியுடன், “யன்னயா செய்யிற?” என்று வினவ,
அவனோ, “எப்புடி எப்டி! என் அம்மாவ பிடிச்சதால, போனா போகுதுனு என்னை கட்டிக்கிறியா?” என்றான்.
சிரிப்பை அடக்கியபடி கெத்தாக, “ஆமா அப்புடிதீ” என்றவள், “மொத என்னிய வுடு” என்றாள்.
“அப்போ கட்டிக்கோ” என்று விசம சிரிப்புடன் கூறினான்.
“நா சொன்ன கட்டிக்கிறே வேற.. அது ஒனக்கு திரியு” என்றபடி அவள் விலகப் பார்க்க,
அவனோ அணைப்பை சற்று இறுக்கியபடி, “எனக்கு தெரிந்த கட்டிக்கிறது இது தான்” என்றான்.
“ப்ளீஸ்.. வுடுயா” 
“பிடிக்கலையா?” 
“கல்யாணத்துக்கு மின்ன வேணா” 
பிடியை தளர்த்தியவன், “நான் இன்னும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லலை” என்றான்.
“சம்மதமில்லனுட்டு சொல்லுவியோ?” என்று அவள் மிரட்டலாக வினவ,
வசீகர புன்னகையுடன் அவள் கன்னத்தோடு கன்னம் தேய்த்தவன், அவள் காதோடு தன் உதட்டை பட்டும் படாமல் உரசியபடி, “என்னோட அம்ரூக்காகவே, அவளை விரும்பியே கல்யாணம் செய்துப்பேன்” என்றான் காதலில் கிறங்கியபடி.
அவனது காதலிலும் அணைப்பிலும் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்க, தானே மிதப்பது போன்ற உணர்வில் மயங்கி நின்றவள் கிறக்கத்துடன், “யனுக்கும் ஒன்னிய ரெம்ப புடிக்கும்” என்றாள்.
“தெரியும்” என்றவன் சட்டென்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு விலகி நின்றான்.
அவனது முத்தத்தை நாணத்துடன் ரசித்தவள் திடீர் விலகலில் அவனை பார்க்க,
அவன், “இதுக்குமேல கட்டிக்கிட்டு நின்னேன்! ஒட்டிகிட்டு மட்டும் நிக்காம உனக்குள்ளேயே வர தோணும்” என்று கூறி கண் சிமிட்டினான்.
அவள் கண்களை விரித்து நோக்க,
“என்ன! கிராமத்தில் இதை விட ஓப்பனா பேசுவீங்கனு எனக்கு தெரியும்” என்றவன், “ஏன்! நீயே அவுத்..” என்று பேசியவனின் வாயை கரம் கொண்டு மூடியவள்,
கண்களால் மிரட்டியபடி, “மூச்” என்றாள்.
விஷம சிரிப்புடன், “வாயை அடைக்கனுமா கை யூஸ் பண்ணக் கூடாது” என்றபடி அவள் கையை விலக்கியவன், “இப்படி அடைக்கனும்” என்றபடி தன் இதழ் கொண்டு அவள் இதழ் அணைத்தான்.
அவளது வெற்றிடையை மென்மையாக பற்றி அவளது திமிறலை சுலபமாக சமாளித்தவன் நிதானமாக இதழை ரசித்து சுவைத்த பிறகே அவளை விட்டான்.
நாணத்துடன் அவன் முகம் பார்க்க மறுத்தவளை ரசித்தபடி, “இந்த வெட்கம் கொள்ளை அழகு தான் ஆனா இதை விட எனக்கு பட பட பட்டாசை ரொம்ப பிடிச்சி இருக்குது” என்றான்.
அவள் அப்பொழுதும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை என்றதும் விரிந்த புன்னகையுடன்,  “ஓய் அமுத சுரபி!” என்று அழைத்தான்.
அவன் எதிர்பார்த்தது போல் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் காதல் நிறைந்து இருந்தது.
அவளது கன்னங்களில் தன் கரங்கள் வைத்து அவள் முகம் தாங்கியவன் அவள் விழிகளை காதலுடன் நோக்கியபடி, “என் இறுதி மூச்சு வரை வற்றாத அன்பும் காதலும் பொழிய எனக்கு இந்த அமுத சுரபி வேணும்” என்றான்.
அவன் நெஞ்சில் தலை சாய்த்து அவனை அணைத்தவள், “யே வாழ்க்க யப்பவு சந்தோசமா, பிரகாசமா இருக்க இந்த மைதா மாவு யனக்கு வேணும்” என்றவள் முடிக்கும் பொழுது தலையை நிமிர்த்தி குறும்புடன் கண்ணடித்தாள்.
வாய்விட்டு சிரித்தவன், “அமுதத்தில் மைதாவை கலந்து இனிப்பு பர்ஃபி ரெடி செய்வோமா?” என்று கேட்டு கண்சிமிட்டினான்.
கண்ணை உருட்டி மிரட்டியவள் விலகி நின்றபடி, “செத்த தள்ளியே நில்லு” என்றாள்.
அதற்கும் சிரித்தவன் அறையை சுற்றி பார்த்து, “வாவ்.. சூப்பரா இருக்குது உன்னோட ரூம்” என்றான்.
அவள், “தேங்க்ஸ்” என்று கூற,
அவனோ கண்ணில் விஷமத்தை தேக்கியபடி, “ஏன் அப்படி சொன்னேன்னு கேளு” என்றான்.
“ஒன்னு வேணா” 
“நீ கேட்கலைனாலும் நான் சொல்லுவேன்” என்றவன் கூரையில் இருந்த கண்ணாடி சட்டத்தை காட்டியபடி, “முதல் இரவில் நிலவு நட்சத்திரங்களுடன் அமுத சுரபியை ருசிச்சா செம்மயா இருக்கும்” என்று கூறி கண்சிமிட்டினான்.
நாணத்தை மறைக்க முயற்சித்தபடி, “கீழ போவலாம்” என்றாள்.
“அதுக்குள்ளயா?” என்ற போது கீழ் இருந்து, “அபய்” என்ற சிவகாமியின் குரல் கேட்டது.
மென்னகையுடன், “சரி வா போகலாம்” என்றான்.
அவள் இடுப்பில் கை வைத்தபடி செல்ல முறைப்புடன், “நா சொன்னப்ப கெளம்பாம ராஜமாதா சொன்னதும் கெளம்புற!” என்றாள்.
புன்னகையுடன் அவள் இடையை வளைத்தபடி, “எனக்கு ஒன்றுமில்லை.. இங்கேயே இருக்க நான் தயார்” என்றவன், “அம்மா உன்னோட மருமகளுக்கு இன்னும் கொஞ்ச நேரம் கொஞ்சிட்டு இருக்கனுமாம்” என்று கத்தினான்.
“ஏய்!” என்று கத்தியபடி அவனை தள்ளி விட்டவள் வேகமாக கீழே இறங்கி ஓடினாள்.
விரிந்த புன்னகையுடன் அவனும் கீழே இறங்கினான்.
அவன் கூறியதை கேட்டு சத்தமாக சிரித்த தாயம்மாள், “குறும்புக்காரிக்கு ஏத்த குறும்புக்காரன்” என்றார். அனைவர் முகத்திலும் மென்னகை தவழ்ந்தது.
சிறு பதற்றத்துடன் வேகமாக வந்த அமிர்தவள்ளியை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்ட சிவகாமி, “டென்ஷன் ஆகாத.. அவனைப் பற்றி எனக்கு நல்லாவே தெரியும்.. உன்னையும் இங்கே எல்லோருக்கும் தெரியும்” என்றார்.
அதன் பிறகே ஆசுவாசமானவளை நாணம் சூழ்ந்துக் கொள்ள யார் முகத்தையும் அவள் பார்க்கவில்லை.
அவளைத் தொடர்ந்து கீழே வந்த அபய்தேவ், “உன்னோட மருமகளை லேசா எடை போட்டுடாத.. அவ இதுக்கு மேலேயே  பேசுவா” என்றான்.
“சும்மா இரு டா” என்றபடி அவர் அவன் புஜத்தில் அடிக்க,
அன்னையின் அணைப்பில் இருந்தவளை பார்த்து கண்ணில் சிரிப்புடன், ‘சொல்லவா?’ என்று அவன் வாய் அசைக்க,
அவளோ கண்களை உருட்டி மிரட்டினாள். அவன் விரிந்த சிரிப்புடன் காதலுடன் கண்ணடித்துவிட்டு போய் அமர்ந்துக் கொண்டான்.
பேத்தியை நெட்டி முறித்த தாயம்மாள், “இதே மகிழ்ச்சியுடன் ஆயுசுக்கும் இரு கண்ணு” என்று ஆசிர்வதித்தார்.
அதன் பிறகு காலை உணவை அங்கே முடித்துக் கொண்டு அபய்தேவ் அன்னை மற்றும் சசிதரனுடன் கிளம்ப, பட்டாளத்தாரும் அவர்களுடன் கிளம்பினார். கனகப்ரியாவும் அவள் அன்னையுடன் கிளம்பி தன் வீட்டிற்கு சென்றாள்.
மதியம் போல் வீட்டிற்கு வந்த குற்றாசு அபய்தேவ் ADCP என்பதால் அடங்கித் தான் இருந்தான்.
பத்ரா என்ற சோமசுந்தரத்தை திறமையாக பிடித்ததை பாராட்டி அபய்தேவிற்கு பதவி உயர்வு வழங்கப் பட்டது. இப்பொழுது அவன் DCP(டெபுட்டி கமிஷ்னர் ஆஃப் போலீஸ்).
அவனது பதவி உயர்விற்கு தனது மருமகள்கள் தான் காரணம் என்று கூறி சிவகாமி அபய்தேவை வெறுப்பேற்றினார், இல்லை வெறுப்பேற்ற முயற்சித்தார். கனகப்ரியாவை தேடிப் போனதால் தான் அந்த கிராமத்திற்கு போனதாகவும், அமிர்தவள்ளியின் காதல் கிடைத்த ராசியில் தான் வெற்றிகரமாக சோமசுந்தரத்தை பிடிக்க முடிந்ததாகவும் கூறினார்.
என்ன தான் சிவகாமி அவனை மட்டம் தட்டினாலும் அவனோ ஒற்றை விரலால் காதை குடைந்தபடி அலட்சியமாக பார்த்தான்.
“ஊரே கொண்டாடுதுன்னு ரொம்ப ஆடாத டா” என்றவர் மனதினுள் மகனை பெருமையாக நினைத்து மகிழத் தான் செய்தார்.
ஆம், ஊரே அவனை கொண்டாடுகிறது தான். இப்பொழுது அவன் எமபுரம் கிராமத்திற்கே செல்ல மாப்பிள்ளையாக மாறி இருந்தான். தங்களுக்கு அபயம் அழித்த அபயனை அவர்கள் தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடினர்.
இரண்டு ஜோடிகளுக்கும் மூன்று மாதங்கள் மூன்று யுகங்களாக தோன்ற, தங்கள் காதல் பயிரை கைபேசி வாயிலாக வளர்த்தனர். அபினவ் ‘பேச்சு பிறழ்வு சிகிச்சை’ (speech therapy) மூலம் மெல்ல பேச ஆரம்பித்து இருக்க, ஆறு மாத காலத்தில் பேச்சு பழையபடி இயல்பாக வந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.
மூன்று மாதங்கள் கழித்து எமபுர கிராமம் விழாக்கோலம் பூண்டு, அதன் உண்மையான பெயரிற்கு ஏற்றார் போல் மங்களகரமாக காட்சி அளித்தது.
எமவீதி அழகு சோலைவனமாக காட்சியளிக்க, அங்கே தான் மலரினால் அலங்கரித்த மணமேடைகள் போட பட்டு இருந்தது.
நல்ல நேரத்தில் மக்களின் ஆரவாரத்துடன் அபய்தேவ் தன்னவளின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்க, அடுத்து அபினவ் தன்னவளின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான்.
அப்பொழுது அமிர்தவள்ளி சசிதரன் மற்றும் கதிரை பார்த்து கண்ஜாடை காட்ட, அவர்கள் கட்டை விரலை உயர்த்தி காட்டியபடி எதற்கோ தயாராக,
அபய்தேவ், “என்ன செயத்திருக்க?” என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.
அவளோ பதில் கூறாமல் குறும்புடன் கண்ணடித்தாள்.
அடுத்த சில நொடிகளில் மக்கள் இடையே சலசலப்புடன் சிறு அலறல் சத்தமும் கேட்க,
அபய்தேவ், “ஓய் அமுத சுரபி! என்ன?” என்று மீண்டும் கேட்டான்.
அப்பொழுது கூட்டத்தின் நடுவில் இருந்து கிணற்றுக்கை இணைக்கப்பட்ட வெள்ளை உருவம் வந்தது. அது அவனிடம் பூங்கொத்தை நீட்ட,
அவள் குறும்பு புன்னகையுடன் தலை சரித்து, “லவ் யூ தேவ் மாமோய்” என்றாள்.
வாய்விட்டு சிரித்தபடி பூங்கொத்தை வாங்கிக் கொண்டவன், “மீ டூ லவ் யூ என் செல்ல மோகினி” என்றவன் கண்ணடித்தபடி உதட்டசைத்து முத்தம் கொடுத்தான்.
கூட்டத்தில் இருந்த இளவட்டங்கள் ‘ஓ’ என்று கூச்சலிட்டு கரகோஷம் எழுப்ப, அங்கே மகிழ்ச்சி நிறைந்து இருந்தது.
***என்றும் இதே குறும்புடனும் காதலுடனும் அவர்கள் இனிதே வாழ, வாழ்த்தி விடை பெறுவோம்***

Advertisement