Advertisement

மாயம் 19

கோபத்தை அடக்கிக் கொண்டு அபய்தேவ் பேசும் முன்,
இளந்தாரியின் பார்வையை கண்டு கொண்ட செந்தில்வேல், “நீயி அடங்க மாட்டியால! செத்த நேரம் கம்மினுட்டு இருக்கோனும்” என்று அதட்டினார்.
“அது இல்லிங்கெ ஐயா..” என்று பம்மியபடிபேசியவனை இடையிட்ட அபய்தேவ்,
“என்னை நம்ப வேண்டாம்.. உங்க ஊர்காரர் சொன்னா நம்புவீங்களா?என்று கேட்டான். 
“ஆர சொல்லப் போறீகெ? பட்டாளத்தாரையா?அவுரு என்னிக்கு ஊரோட ஒத்து போயிருக்காவ! அதுவு ஒங்களுக்காவ பொய் வேற சொல்லி இருக்காப்ல” என்றபடி பட்டாளத்தாரை முறைத்தவன், “கேக்கிறவே கேணயனா இருந்தாக்க, கத்திரிக்காயில நெய் வடியுதுனுட்டு சொல்லுவியானாம்” என்று சத்தமாக முணுமுணுத்தான்.
செந்தில்வேல், “ஏலே!” என்று குரல் கொடுக்க,
அவன் குரலை சற்று தாழ்த்தியபடி, “இவுரு சொல்லுறது உண்மனாக்க, எமவீதி உள்ளார போயி காணா போனவுகெள திரும்ப கூட்டியாற சொல்லுங்கெ ஐயா” என்றான்.
செந்தில்வேல் பேசும் முன்,
“காணாம போனவங்களை நிச்சயம் கூட்டிட்டு வரேன்” என்ற அபய்தேவை, ஊரே ‘என்ன!?’ என்பது போல் பார்க்க,
அவனோ கூட்டத்தில் ஒருத்தரைப் பார்த்து,“என்ன சண்முகம்! நான் சொல்றது உண்மையா பொய்யா?என்று கேட்டான். 
கூட்டத்தினர் பார்வை மொத்தமும் அந்த மனிதர் பக்கம் திரும்ப,
அவர் சட்டென்று முன்னால் வந்து செந்தில்வேலின் காலில் விழுந்தபடி,“என்னிய மன்னிச்சிடுங்கெ ஐயா.. யே மவென் சாவுல.. உசுரோடதீ இருக்கியான்.. இந்த உண்மய வெளில சொன்னாக்க அவென கொண்டு புடுவாங்கெனுட்டு சொன்னான்.. அதீன் நா வாயி தொறக்கவே இல்லங்கெ ஐயா.. அவென் உசுரோட இருக்கது யே பொஞ்சாதிக்கும் மவெளுக்கு கூட திரியாதுங்கெ” என்று கலங்கிய குரலில் கூறினார்.
நெஞ்சில் அடித்துக் கொண்டு முன்னே வந்த அந்த மனிதரின் மனைவி, “நல்லா இருப்பியாயா! பெத்த வயிறு பத்தி எரியுவுது.. இத்தினி வருசம் உசுரே இல்லாம வெறுங் கூடா தானஅழையுறே! நா யன்னயா ஒனுக்கு தப்பு செஞ்சே!ஒத்த வார்த்த சொன்னியா!” என்று ஒப்பாரி வைக்க ஆரம்பிக்க,
அந்த மனிதர் ஓய்ந்து போய் அமர்ந்தபடி,“என்னிய மன்னிச்சிடு புள்ள” என்றார் கண்ணீருடன்.
கூட்டத்தினர் தங்களுக்குள் சலசலக்க,
கனகப்ரியா,“இவுரு எமவீதியில இருந்தவரு தான?என்று தோழியிடம் கிசுகிசுத்தாள்.
அமிர்தவள்ளி, “ஹ்ம்ம்.. மொத இவுரு தா எமவீதியவுட்டு வெளில வந்தாரு.. இவுர தொடர்ந்து ஒவ்வொருத்தரா வந்தாவுகெ.. அது மட்டுமில்ல, மணி இவுரு பையனோட ஜோட்டுதா” 
“இதெல்லாம் ஒனக்கு எப்புடி திரியும்? 
“அப்பத்தா சொல்லுச்சு” என்றவள்,“ஹ்ம்ம்.. இன்னு யன்ன குட்டுலா வெளிப்பட போவுதோ!” என்றாள்.
பின் கதிரை யோசனையாக பார்த்தபடி,“நீயி ஏ டா அமைதியா இருக்க?என்று கேட்டாள்.
அவன்,“இப்பதீ ஒன்னு நாபகம் வந்திச்சி” என்றான்.
“யன்ன?” 
“இவுரு இம்மா பெரிய ஆபீசரா இருப்பாருனுட்டு நா நெனைக்கல”
“நீயி ரெம்ப பயந்தவென் தா! அதான் செத்த மின்ன கூட மருவாதயா பேசின!” என்று அவள் நக்கலாக கூற,
அவன் முறைத்தான்.
அவள், “இதில ஒனக்கு யன்னல செரமம்?என்று கேட்க,
“ஹான்.. ஏ சொல்ல மாட்ட!நீயிபாட்டுக்கு இவுரு மேல ஆசய வளத்துப்புட்ட.. இவுரு ஆரு யன்னனுட்டு திரிஞ்சுக்க, அந்த கைப்புள்ள கிட்டக்க போட்டு வாங்க பாத்தப்ப அவிங்க களவானி பயல்வலானுட்டு கேட்டுபுட்டீன்..” என்றான்.
அவள் மென்னகையுடன்,“வுடு.. ஒன்னு சொல்ல மாட்டவ” என்று கூற,
அவனோ,“ஆருக்கு பேலுது! அவுரு அதிகாரிங்கது ஊருக்குதீ.. யனக்கு மாமா.. அம்புட்டுதீ” என்றான்.
அமிர்தவள்ளி விரிந்த புன்னகையுடன் அவன் தலை முடியை கலைத்துவிட்டாள்.
செந்தில்வேலின் பார்வையில் ஒரு பெண்மணி வந்து அந்த மனிதரின் மனைவியை ஆறுதலாக பற்ற, அவர் இவர் தோளில் சாய்ந்தபடி ஒப்பாரியைத் தொடர்ந்தார்.
செந்தில்வேல், “இப்பயாச்சும் உண்மய சொல்லு சண்முகம்” என்றார் கடுமையான குரலில்.
அந்த மனிதர் கண்ணீருடன், “யனக்கு முழுசா திரியாதுங்கெ ஐயா.. மொத யே மவென் கெணத்துக்குள்ளார வுழுந்து செத்துபுட்டதாதீ நானு நெனெச்சிக்கிட்டு இருந்தேனுங்கெ.. பொறவு ஒரு நா நடு சாமத்தில திண்ணையில் ஒறங்கிட்டு இருந்த என்னிய யே மவென் உசுப்பினா.. நா கூட மொத பேயோனுட்டு பயந்தேன்.. பொறவு அவென் நடந்தத சொன்னான்..” என்றவர் அரை நொடி இடைவெளி விட்டு தொடர்ந்தார்.
“சின்னதுல இருந்தே யே மவெனுக்கு யங்க வறுமையான நெலம(நிலைமை) மேல ஆற்றாமையும் வெறுப்பும் உண்டுங்கெ.. எம்புட்டு பாடு பட்டாச்சி கை நெறைய பணம் சம்பாதிக்கனுமுட்டு ஆசை.. இல்ல பேராசையே உண்டுங்கெ.. அத அந்த பெரிய மனிதர் தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டாரு..
அவுரு ஆரு யன்னனுட்டு யனக்கு திரியாதுங்கெ.. யேமவென் தப்பான வெசயத்திக்கு தொண போறது திரியுங்கெ ஆனா அது யன்னனுட்டு சத்தியமா திரியாதுங்கெ..
பரிமளத்தோட ஆவி சுத்துறதா மொத பொரளிய கெளப்பிவுட்டாங்கெ.. பொறவு அத நம்ப வெக்க, யே மவென அந்த ஆவி கெணத்துக்குள்ளார இழுத்து கொன்னுபுட்டதா நம்ப வெச்சாங்கெ..
அவென் என்னிய பாக்க வந்தது, அவன் உசுரோட இருக்க வெசயத்த சொல்ல இல்லங்கெ.. ஊர் ஜனங்க மனசுல பரிமளத்தோட ஆவி ஆம்பளைங்க, முக்கியமா இளந்தாரி பயல்வ உசுர காவு வாங்குறதா பரப்பனும்.. அதுக்கு நா குடும்பத்தோட ஊர வுட்டே கெளம்பனுமுட்டு சொல்லதீன் வந்தானுங்கெ..
நா மொத ஒத்துக்கல.. ஒங்க கிட்ட உண்மய சொல்லப் போறதா சொன்னேனுங்கெ.. ஆனா அவென் சொன்னத செய்யிலனாக்க அவென நெசமாலு கொண்டே புடுவாயிங்கெனுட்டு கெஞ்சவு, பாசம் ஜெய்சிபுட்டுங்கெ.. நா ஊர வுட்டு போவ முடியாதுனுட்டு வூட்ட காலி செஞ்சி எமவீதியவுட்டு மட்டும் வந்தீனுங்கெ..
அவிங்க நெனச்சபடி ஊர் மக்கள் பரிமளத்தோட ஆவி காவு வாங்குறதா நம்பினாங்கெ.. அடுத்து அவென் என்னிய பாக்கவந்தப்ப இனி யே மொகத்தில முழிக்க கூடாதுனுட்டு வெரட்டி புட்டேங்கெ.. அவென் கொடுத்த காச வாங்கிக்கவே இல்லங்கெ ஐயா.. என்னிய மன்னிச்சிடுங்கெ ஐயா” என்று மன்னிப்பை யாசிக்கும் குரலில் முடித்தார்.
செந்தில்வேல்,“அந்த எடுபட்ட பய எப்புடி பொழச்சானாம்?” என்று கேட்டார்.
“நா கேட்டதுக்கு அவென் சொல்லலிங்கெ” என்று அவர் கூற,
“அதை நான் சொல்றேன்” என்ற அபய்தேவ் முகேஷைப் பார்த்தான்.
அவன் அந்த கிணற்று கையை வெளியே எடுத்தான்.
“பயப்படாதீங்க.. இதுவும் உண்மை இல்லை” என்ற அபய்தேவ், “இதை எத்தனை பேர் பார்த்தீங்கனு எனக்கு தெரியலை.. எனக்கு தெரிஞ்சுராமையா பார்த்து இருக்கார்” என்றபடி அவரைப் பார்க்க,
அதிர்ச்சி விலகாத நிலையில் அவர் அதை பார்த்தபடியே, “ஆமா தம்பி.. இதீன் யே நண்பன கெணத்துக்கு உள்ளார இழுத்துக்கிடிச்சி” என்றார்.
அவன், “இது உண்மையான கை இல்லை.. இங்கே பாருங்க” என்றபடி அதனுள் இருந்த உலோகத்தை காட்டினான்.
பின், “எமவீதி தொடக்கத்தில் ஒரு மரத்தில் ஒரு காக்கா எப்போதும் உட்கார்ந்து இருக்கிறதை பார்த்து இருப்பீங்க.. அது நிஜமானாது இல்லை.. பொம்மை.. அதோட கண்ணுல கேமராவச்சு, எமவீட்டில் இருந்தபடி கண்காணிச்சுட்டு இருந்து இருக்காங்க.. எமவீட்டு உள்ளே இருந்து ரெண்டு ஆட்கள் ஜாய்ஸ்டிக் மூலம் இந்த வெள்ளை உருவத்தையும், இந்த கையையும் செயல்படுத்தி இருக்காங்க..
கிணறுக்கு உள்ளே ஒரு மிஷின் இருக்குது.. அது மட்டுமில்லை, கிணறோட தண்ணி லெவெலுக்கு கொஞ்சம் மேலகல்லால் செய்த ஒரு ரகசிய கதவு இருக்குது.. அது வழியா எமவீடுக்கு போய்டலாம்.. கிணற்றில் இருந்து எமவீடு வரை ஒரு சுரங்கப் பாதை இருக்குது.. 
கிணறு கிட்ட யாரு போனாலும் இந்த கை மேல வந்து அவங்க கையை பிடிச்சுக்கும்.. அப்புறம் அவங்களை உள்ளே இழுத்துக்கும்.. ஆனா அவங்க கிணற்று தண்ணி உள்ளே விழுறதுக்கு முன்னாடி அந்த ரகசிய கதவு வழியா இன்னொரு மிஷின் அவங்களை பிடித்து சுரங்கத்துக்குள்ள இழுத்துக்கும்.. அதே நேரத்தில் அந்த மிஷின், பெரிய கல்லு ஒன்றை தண்ணிக்குள்ள போட்டதும் கதவு மூடிக்கும்..
சுரங்கதுக்குள்ள இழுக்கப்படுறவங்க, மயக்க மருந்து புகையை சுவாசித்து உடனே மயங்கிடுவாங்க.. அப்புறம் அவங்களை எமவீட்டிற்கு தூக்கிட்டு போய் அடைத்து வைத்திடுவாங்க.. எமவீடு உள்ளே சவுண்ட் ப்ரூப் செட்-அப் இருக்குது.. அதாவது அங்கே உள்ளே வர சத்தம் வெளியே கேட்காது..
நான் கிணறு கிட்ட போனப்ப இது என் கையை பிடிச்சுகிச்சு.. ஆனா..” என்று தான் கிணற்றுகையையும், வெள்ளை உருவத்தையும் கைப்பற்றியதைப் பற்றி கூறினான்.
“அப்போ காணாம போனவங்க இருக்காங்களா?” என்று ஆர்வத்துடன் சிலரும், தவிப்புடன் சிலரும் கேட்டனர்.
“இருக்காங்க.. நல்லா இருக்காங்க ஆனா இத்தனை வருஷம் ஒரே அறையில்அடைஞ்சு இருந்ததால் உடல் நல பரிசோதனைக்காக ஹாஸ்பிடலில் இருக்காங்க” என்றதும்,
“ஆத்தா மகமாயி!” என்றும்,
“யே ராசா” என்றும்,
“மாமா” என்றும்,
“அண்ணே” என்றும் சில பெண்கள் கண்ணீருடன் தரையில் அமர, சில ஆண்கள் கூட கண்ணீருடன் நின்றனர்.
கூட்டத்தில் ஒருவர், “இது திரியாம நம்ம சுப்பு, ஆதிலாம் ஊர வுட்டு போயிட்டாங்கெளே” என்று வருத்தப்பட,
அபய்தேவ், “இல்லை.. அவங்க தெரிந்தே தான் போனாங்க.. அவங்க வீட்டில் காணாம போனவங்க இந்த சதியில் சம்பந்தப்பட்டு இருக்காங்க.. சண்முகத்தை போல் நேர்மையா இல்லாம, அவங்க வேற ஊருக்குப் போய் செழிப்பா இருக்காங்க” என்றான்.
ஊர் மக்கள் அதிர்ச்சியுடன் பார்க்க,
அவன், “இதுமட்டுமில்ல.. நீங்க நினைக்கிற மாதிரி மணி பிரம்மை பிடித்தவனும் இல்லை, அவன் பரிமளத்தை காதலிக்கவும் இல்லை.. ஊருக்குள் நடக்கிறதை அங்கே சொல்லும் உளவாளி தான் அவன்..சுதந்திரமா செயல் படத் தான் இந்த பயித்தியக்கார நாடகம்.. இப்போ அவன் எங்க கஷ்டடியில் தான் இருக்கிறான்.. அவன் மட்டுமில்லை, அந்த கூட்டத்தையே பிடிச்சாச்சு” என்றான். 
செந்தில்வேல், “எல்லாத்துக்கும் சோமசுந்தரம் தான் காரணமா?” என்று சரியாக யூகித்து கேட்டார்.
‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டியபடி, “எஸ்.. சோமசுந்தரம் தான்” என்றான்.
“சொந்த தங்கச்சி சாவை தனக்கு சாதகமா பயன் படுத்திக்கிட்டானா! சை அவென்லா மனுசனா!” என்று செந்தில்வேல் கோபத்துடன் கூற,
அபய்தேவ், “இல்லை.. பரிமளத்தோட சாவை அவன் பயன்படுத்திக்கலை, பரிமளத்தைக் கொன்றதே அவன் தான்” என்றான்.
அனைவரும் பெரும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க,
“திடீர்னு வெளி நாட்டில் இருந்து வந்து பெரிய வீடு, ரைஸ்மில் கட்டிய அவனை யாரும் சந்தேகப்படலையா?” என்று கேட்டான்.
செந்தில்வேல், “மொதயனக்கு சந்தேகம் இருந்திச்சி தா.. ஆனா அவென் வெளி நாட்டில் அதிக சம்பளமுனுட்டு சொன்னியான்” என்றார்.
“சம்பளம் அதிகம் கிடைக்கும் தான்.. ஆனா குறுகிய காலத்தில் இவ்வளவு சேமிக்க முடியாது.. முதலில் வேலை பார்த்த நாடு தான் துபாய்.. அங்கிருந்து மெக்ஸிகோ போனவனுக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டு அந்த தொழிலில் இறங்கிட்டான்..
அதிக பணம் கிடைக்கவும், சொந்த நாட்டில் இருந்து கொண்டே அதை செய்தால் என்னனு யோசித்து இந்தியா வந்துட்டான்” என்றவன் கோபத்தை அடக்கிய குரலில், 
“எத்தனை பேர் வாழ்க்கையை அழிச்சிட்டு இருக்கிறான் தெரியுமா? இது ஒரு பெரிய நெட்வொர்க்.. பல வருஷமா போலீஸ் டிப்பார்ட்மென்ட் தேடிட்டு இருக்க பத்ராதான் இந்த சோமசுந்தரம்.. இந்தியா மட்டு மில்லாம வெளிநாட்டிலும் இந்த தொழிலை செய்றவன், இந்த சின்ன கிராமத்தில் இருப்பான்னு யாருமே எதிர்பார்க்கலை” என்றான்.
செந்தில்வேல், “இவெனபுடிக்க தா இங்குட்டு வந்தீகெளா?”என்று கேட்டார்.
“இல்லை.. அபிவிஷயமா உங்க ஊரை பத்தி விசாரிச்சப்ப, எதோ சரி இல்லைன்னு தெரிந்தது.. பரிமளம் டெத், அதை தொடர்ந்து அந்த பசங்க டெத்.. அந்த பசங்க டெத் பத்தி விசாரிச்சப்ப பெருசா எதுவும் விவரம் கிடைக்கலைனாலும், யாரோ மேலிடத்தில் ப்ரெஷர் கொடுத்து கேசைக்ளோஸ் செய்தது தெரிந்தது..
எல்லாத்தையும் வச்சு.. பேய் இல்லை, ஏதோ சட்டத்துக்கு விரோதமா இங்கே நடக்குதுனு எனக்கு தோணுச்சு.. அதான் நானே நேரில் வந்தேன்” 
“பரிமளத்துக்கு என்னாச்சு?” 
“சோமசுந்தரம் ரைஸ்மில் கட்டி, அதுக்கு மிஷின் கொண்டு வர மாதிரி போதை பொருள் தாயரிக்கிற மெட்டிரியல்ஸ் வர வழைச்சிட்டான்.. அந்த நேரத்தில் தான் பரிமளா ஊருக்கு பிரெண்ட்ஸ் கூட்டிட்டு வந்தாங்க..
எதேர்ச்சையா சோமசுந்தரம் பேசியதை பரிமளத்தோட பிரெண்ட்ஸ் மூன்று பேர் கேட்டுட்டாங்க.. அவங்க பரிமளத்துகிட்ட சொல்ல, அவங்க நாலு பெரும் சேர்ந்து ஊர் தலைவரான உங்களிடம் சொல்ல நினைத்து இருக்காங்க..
ஆனா இந்த விஷயம் தெரிந்த சோமசுந்தரம் அந்த பசங்களை கடத்தி அடைத்து வைத்துவிட்டு பரிமளத்தை கொன்று கிணற்றில் போட்டுட்டான்..
ஊருக்குள்ள, அந்த பசங்க குடி போதையில் தப்பா நடந்து கொண்டதால் தன்னோட தங்கை தற்கொலை செய்ததா நம்ப வைத்து, பரிமளத்தோட மற்ற நண்பர்களை ஊருக்கு கிளப்பி விட்டுட்டான்..
அடுத்து, அந்த பசங்களை கொன்று எமவீதி வாசலில் போட்டு அவனோட ஆட்கள் மூலம் பரிமளத்தோட ஆவி தான் அவங்களை கொன்னுட்டதா ஊர் மக்களை நம்ப வச்சி இருக்கிறான்..
சண்முகம் சொன்னது போல் கொஞ்சம் கொஞ்சமா உங்க எல்லோரையும்  ஏமாற்றி எமவீதி பக்கமே யாரும் வராம செஞ்சிட்டான்..
கிணற்றில் இருந்து கையை வர வைத்து நாடகம் போட்டதுக்கு இரண்டு காரணங்கள்.. ஒன்று உங்களுக்கு பயத்தை கொடுக்க, இன்னொரு அந்த தண்ணீரை யாரும் பயன்படுத்தமா இருக்க, ஏன்னா போதை பொருள் தாயாரிக்கும் போது வர கழிவை கிணற்றுக்குள் தான் கலக்கிறான்..
ஜாதிமல்லியோட நறுமணம் வரது கூட இதே காரணம் தான்.. பயத்தை கொடுக்கவும், எமவீதியில் இருந்து துர்நாற்றம் வராமல் இருக்கவும் தான்..
நடுச்சாமத்தில் அவன் இங்கே வந்து போயிட்டு தான் இருக்கிறான்.. நேத்து அப்படி வந்துட்டு இருக்கும் போதுவழியிலேயே அவனை மடக்கி பிடிச்சாச்சு” என்று நீளமாக விளக்கம் கொடுத்தான்.
செந்தில்வேல், “குற்றாசும் இந்த கூட்டத்தில சேர்த்தியா?” என்று வினவ, குற்றாசின் அன்னை பெரும் தவிப்புடன் அபய்தேவைப் பார்த்தார்.
“இல்லை.. என்னை அவன் தொடரவும் சந்தேகப்பட்டு அவனை தூக்கிட்டாங்க” என்றவன் குற்றாசின் அன்னையைப் பார்த்து, “இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் ஸ்டேஷன் போனதும் அவனை விட்டுருவாங்க”  என்றான்.
அந்த இளந்தாரி,“என்னிய மன்னிச்சிபுட்ங்கெ சார்” என்று கூற,
மென்னகையுடன் அவனது தோளை தட்டியஅபய்தேவ், “மன்னிப்பெல்லாம் வேண்டாம்.. இப்படி தான் இருக்கனும்.. எதையும் யாரையும் சட்டுன்னு நம்பிட கூடாது.. குட்” என்று பாராட்டினான்.
அவன் மகிழ்ச்சியுடன், “தாங்க்ஸ் சார்” என்று கூற,
அபய்தேவ் புன்னகையுடன் குரலை தாழ்த்தி,“ஆனா எப்பவும் பொண்ணுங்களை இழுக்க கூடாது.. அதுவும் இத்தனை பேர் மத்தியில் ரொம்ப தப்பு” என்று கண்டிக்கவும் செய்தான்.
அவனும் குரலை தாழ்த்தி,“மன்னிச்சிபுடுங்கெ சார்.. இனி யப்பயு அந்த தப்ப செய்ய மாட்டேனுங்கெ” என்றான்.

மாயம் தொடரும்…

Advertisement