Advertisement

செந்தில்வேலின் வீட்டின் முற்றத்தின் முன் ஊர் மக்கள் பலர் கூடி இருக்க, அபய்தேவ் மற்றும் செந்தில்வேல் முற்றத்தில் நிற்க, அவர்களுக்குப் பின்னால் சற்று தள்ளி சசிதரனும்பாட்டளத்தாரும் நின்று கொண்டிருக்க, பெண்கள் மற்றும் கதிர் பட்டாசலின் வாயிலில் நின்றிருந்தனர். கூட்டம் கூடியதும் அமிர்தவள்ளி கதிரை தன்னுடன் அழைத்துக் கொண்டாள்.

 

“அதுக்கு முன்னாடி, எனக்கு சில விஷயங்களை தெளிவு படுத்தனும்” என்ற அபய்தேவின் குரலில் ஆவலுடன் அறையின் வாயிலுக்கு வந்த அமிர்தவள்ளி அவனது தோற்றத்தில் அதிர்ச்சியுடன் நிற்க, அவளைத் தொடர்ந்து வந்த கனகப்ரியா, “ஆத்தி! போலீசு” என்றாள்.
‘கண்ணு இத்தநம்மட்டசொல்லுலியே!’ என்று நினைத்தபடிபேத்தியைப் பார்த்த தாயம்மாள் அவளது அதிர்ச்சியைக் கண்டு புன்னகைத்தபடி, ‘ராசாத்திக்குஏத்தராஜராஜன் தா பேரன்’ என்று மனதினுள் கூறிக்கொண்டார்.
காமாட்சி அதிர்ச்சி கலந்த சிறு பயத்துடன் அவனைப் பார்க்க, சிவகாமி பெருமையுடன் பார்க்க, சசிதரன் அடுத்து என்ன நடக்குமோ என்ற கலவரத்துடன் பார்க்க, அபய்தேவ் காவல்துறை அதிகாரி என்பதை அறிந்திருந்தபட்டாளத்தார் அமைதியாக நடப்பதை கவனிக்கும் மனநிலையில் பார்த்தார்.
தனது அதிர்ச்சியையும் கோபத்தையும் மறைத்துக் கொண்ட செந்தில்வேல் அமைதியான குரலில், “யன்ன தெளிவு படுத்தோனும்? ஒங்க ஜோலியபத்தியா? இல்ல,நீங்கெ பட்டாளத்தான் ஒறவுக்காரர் இல்லங்கிறதயா?” என்று முடித்த போதுபட்டாளத்தாரை பார்த்து கடுமையாக முறைத்தார்.
அபய்தேவின் தோற்றத்தைக் கண்டதும் அவன் பட்டாளத்தார் உறவினனாக இருக்க முடியாது என்பதை சரியாக யூகித்து விட்டார்.
“உண்மயமறச்சு பொய் சொன்னதிக்கு என்னிய மன்னிச்சிருங்கெ அண்ணே” என்று தயக்கத்துட்டன் கூறிய பட்டாளத்தார் அடுத்து, “ஆனா நா ஊருநன்மைக்காவ தா இத்தசெய்தீன்” என்று நிமிர்வுடனே கூறினார்.
“யதா இருந்தாலு ஊரு கட்டுப்பாட்டை மீறியது தப்புதாலே” என்று அழுத்தத்துடன் கூறிய செந்தில்வேல் அபய்தேவ் பக்கம் திரும்பி, “ஆக பேயை ஆராயிச்சி செய்யத்தீன் வந்திருக்கீவ?” என்று கோபத்தை அடக்கிய குரலில் கேட்டார்.
செந்தில்வேலின் புத்திக்கூர்மையையும் ஆழுமையையும் ரசித்த அபய்தேவ் தனது கம்பீர குரலில், “பொய்களுக்கு பின் மறைந்து இருக்கும் உண்மையையும் குற்றத்தையும் கண்டு பிடிக்கிறது அசிஸ்டன்ட் டெபுட்டி கமிஷ்னர் கடமை தான்.. ஆனா நான் இங்கே வந்த முக்கிய காரணம், என்னோட நண்பனும் சகோதரனுமான அபினவின் தற்போதைய நிலைக்கு காரணமானவனை கண்டுபிடிக்க.. ரெண்டு வேலையையுமே முடிச்சிட்டேன்..
அபியை தாக்கியது அவனை விரும்பும் கனகப்ரியாவோட அண்ணன் குற்றாசு..
அண்ட் எமவீதி சம்பந்தமா இத்தனை வருஷம் நீங்க நம்பிட்டு இருக்கிறது எல்லாமே புனைக்கப்பட்ட கதை தான்.. உங்கஊரை சேர்ந்த ஒருத்தர் தான், தன்னோடசட்ட விரோதமான செயலை மூடி மறைக்க, இந்த ஊரையே ஏமாத்திட்டுஇருந்து இருக்கார்” 
“யன்ன!” என்று செந்தில்வேலும்,
“யன்ன சொல்றீகெ தம்பி!” என்று பட்டாளத்தாரும் ஒன்றாக கூறினர். 
பெண்களுக்கும் அதிர்ச்சி தான். முதலில் சுதாரித்த தாயம்மாள், “மொதஉள்ளார வந்து ஒக்காருங்கெ ராசா” என்றார்.
அபய்தேவ், “இருக்கட்டும் அப்பத்தா” என்று கூற,
அவர், “மொறய மாத்தாதீங்கெ ராசா” என்றார்.
அவன் மென்னகையுடன், “சரி அம்மாச்சி” என்றதும்,
அவரும் புன்னகையுடன், “இது செரி” என்றார்.
பின் செந்தில்வேலைப் பார்த்து, “நான் சொல்றதை நம்புறது கஷ்டமா இருக்கலாம்.. ஆனா எல்லாத்துக்கும் என்னிடம் ஆதாரம் இருக்குது.. நீங்க எதிர்பார்க்காத நிறைய விஷயங்கள் நடந்து இருக்குது சார்..” என்றவனின் பேச்சை இடையிட்ட தாயம்மாள்,
“என்னிய மொற வெச்சி கூபிட்டுபுட்டு இப்ப யன்னாத்துக்கு சாரு மோருனுட்டு சொல்லுறீகெ?” என்றார்.
அவன் மென்னகையுடன், “உங்களை அம்மாச்சினு கூப்பிட நமக்குள் எந்த உறவு முறையும் இருக்கணும்னு அவசியம் இல்லை! ஆனா உரிமையா மாமானு கூப்பிட, உங்க பேத்தி இன்னும் சம்மதம் சொல்லலையே அம்மாச்சி” என்றவன் முடிக்கும் போது அமிர்தவள்ளியைப் பார்க்க,
அவளோ அவன் தன்னிடம் உண்மையை மறைத்த கோபத்தில் உதட்டை சுளித்து முகத்தை திருப்பிக் கொண்டாள். அவளது ஊடலை ரசித்தவனின் உதட்டோரம் ரகசியப் புன்னகை பூத்தது.
தாயம்மாள், “நீங்கெளுதீ சம்மதம் சொல்லல ராசா” என்றார்.
அவன் வசீகர புன்னகையுடன் கம்பீரம் குறையாமல், “முதல்ல ஊர் பிரச்சனையை முடிச்சிட்டு, நம்ம வீட்டு விசேஷத்துக்கு வரேன் அம்மாச்சி” என்றான்.
“வெசயமா, விசேசமா?”
“விசேஷம்னு தான் சொன்னேன்.. ஆனாமுதல்ல ஊர் பிரச்சனை” என்று சிரிப்புடனே உறுதியான குரலில் கூறினான். 
அப்பொழுதும் விடாமல், “அப்ப நல்ல செய்தித்தீ” என்றவர், “ஆனா என்னிய செத்த நேரம் வாய மூட சொல்லுறீகெ” என்றார்.
இதற்குள் பொறுமை இழந்த செந்தில்வேல், “ஆத்தா ஓ ரவுச பொறவு வெச்சிக்கோ” என்றார்.
பின் அபய்தேவைப் பார்த்து, “நீங்கெ சொல்லுறது நெசமா? அப்போ அங்குட்டு பேயை பாத்தது? ஏ! நானே பாத்து இருக்கேனே தம்பி” என்றவர் பின் சிறு தயக்கத்துடன், “தம்பி சொல்லலாம் தான?” என்று கேட்டார்.
மென்னகையுடன், “தாராளமா” என்றவன், “நிஜமாவே பேய்னு எதுவும் இல்லை.. எல்லாமே செட்டப் தான்.. நான் விவரமா எல்லாத்தையும் சொல்றேன்.. ஆனா ஊர் மக்கள் முன்னாடி சொல்லிட்டா பெட்டர்னு நினைக்கிறேன்” என்றான். 
“அதுவும் செரிதீ” என்றவர், “கடம்பா” என்று குரல் கொடுத்தார்.
அடுத்த நொடியே கடம்பன், “ஐயா” என்றபடி பவ்வியமாக வந்து நின்றான்.
“ஊர் மக்கள நம்மூட்டு மின்ன திரட்டு.. முக்கியமான வெஷயம் பேசோனும்” 
“செரிங்கெ ஐயா” என்று கூறி அகன்றான்.
மனைவியை காபி கொண்டு வரும்படி பார்வையால் பணித்த செந்தில்வேல் அபய்தேவிடம், “ஒக்காருங்கெ.. ஊர் மக்கள் வாரதுக்குள்ளாற காபி குடிச்சிப்புடலாம்” என்றார்.
இப்பொழுது பிகு செய்யாமல் உள்ளே வந்து தனது அன்னை அருகே அமர்ந்துக் கொண்டு, “என்னமா செஞ்சிட்டு இருக்கீங்க?” என்று சிரித்தபடி பல்லை கடித்துக் கொண்டு மெதுவாக கேட்டவன் சசிதரனை, ‘உன்னை அப்புறம் கவனிச்சிக்கிறேன்’ என்று கண்ணால் மிரட்டினான்.
சிவகாமியோ அவன் கேட்ட கேள்வியை கண்டுக்கொள்ளாமல், “உனக்கு வெறும் காப்பி தான்.. நான் அம்ரு செய்த ஸ்வீட் சாபிட்டேனே! செம டேஸ்ட்” என்று அவனை வெறுப் பேற்றினார்.
இப்பொழுது வெளிப்படையாகவே முறைத்தவன் பல்லை கடித்தபடி, “எனக்கு மட்டும் தான் அம்ரு.. ஒழுங்கா அமிர்தானு சொல்லுங்க” என்றான்.
அவரோ குதூகலத்துடன், “டேய் சசி, ஹை-ஃபை கொடு” என்றார்.
அவருடன் கையை தட்டிக் கொண்ட பிறகு, “எதுக்கு மா?” என்று சசிதரன் கேட்க,
“இவனை லாக் செய்ய ஒரு வழி கிடைச்சிருச்சு” என்ற சிவகாமி குரலை வெகுவாக தாழ்த்தி, “இவனை நம்ம வழிக்கு கொண்டு வரனும்னா அம்ருனு கூப்பிட்டா போதும்” என்றார்.
அபய்தேவ் சசிதரனை வெட்டவாகுத்தவா என்பது போல் பார்க்க,
அவன், “அண்ணா எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. இங்கே வந்தது கூட அப்படி தான்.. என்ன ஏதுன்னு சொல்லாம என்னை கடத்தி கூட்டிட்டு வந்துட்டாங்க.. பிலீவ்மீ அண்ணா.. மீ ஒரு அப்பாவி” என்று கெஞ்சினான்.
அப்பொழுது அபய்தேவிற்கு காபியை அமிர்தவள்ளி கொண்டு வந்தாள். அவன் பிறர் அறியாமல் கண்ணடித்தபடி காபியை வாங்க, அவள் முறைத்தபடி கொடுத்தாள்.
பின் சிவகாமியைப் பார்த்து, “இந்த மைதா மாவு காவலாளினா, இந்த கோதுமை மாவு காவாளி.. இவிங்கல வுடுங்கெ.. இனி நாம ரெண்டு பேரும் ஜோட்டு” என்று கூறி கண்ணடித்தபடி கை தட்டிக் கொண்டாள்.
“சூப்பர் டா” என்றபடி சிவகாமியும் குதூகலத்துடன் அவளுடன் கை தட்டினார்.
அபய்தேவைப் பார்த்து பலிப்பு காட்டியவள் நில்லாமல் அறையினுள் சென்று மறைந்தாள். அபய்தேவின் உதட்டோரம் மீண்டும் ரசனையான ரகசிய புன்னகை உதயமானது.
சரியாக அபய்தேவ் காபியை குடித்து முடிக்கவும்,
“ஐயா யல்லாரும் வந்தாச்சி..” என்ற கடம்பன், “இன்னொரு வெஷயம் ஐயா” என்றான்.
“யன்னலே?” 
“குற்றாசுவையு மணியையு காணல” 
செந்தில்வேல் அபய்தேவைப் பார்க்க, அவன் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினான்.
‘மணியை ஏன்!’ என்று யோசித்த செந்தில்வேல், “செரி.. நாங்க வாரோம்”என்றதும் கடம்பன் அகன்றான்.
இவர்கள் வெளியே சென்றதும் அபய்தேவின் காக்கி உடையைக் கண்டு தங்களுக்குள் கிசுகிசுக்க ஆரம்பித்த மக்கள் செந்தில்வேலின் செருமலில் முணுமுணுப்பை நிறுத்திவிட்டு அவரை பார்த்தனர்.
செந்தில்வேல், “அபய் தம்பி ஒரு பெரிய அதிகாரி” என்று கூறியபடி அபய்தேவை பார்க்க,
அவன், “ADCP.. அசிஸ்டன்ட் டெபுட்டி கமிஷ்னர் ஆஃப் போலீஸ்” என்றான்.
செந்தில்வேல், “கொஞ்ச நாளு மின்ன எமவீதியாண்ட அடிபட்டு கெடந்த வெளியூர் தம்பி இவரோட  உடன்பொறப்பு தா.. அவுருக்கு யன்ன நடந்ததுனுட்டு கண்டு புடிக்க வந்தவர், இன்னு சில உண்மகள கண்டு புடிச்சதா சொல்றார்.. யல்லாத்தயு ஊர் மக்கள் மின்ன தா சொல்லுவேனுட்டு தம்பி சொல்லிபுட்டாங்கெ..” என்று கூறி மீண்டும் அபய்தேவை பார்த்தார்.
அப்பொழுது கூட்டத்திற்கு பின்னால் இருந்தபடி கையை தூக்கி, “சார்” என்று முகேஷ் கத்தினான்.
“வாங்க முகேஷ்” என்ற அபய்தேவ், “அவருக்கு கொஞ்சம் வழி விடுங்க” என்று கூட்டத்தினரைப் பார்த்துக்கூறினான்.
ஊர் மக்கள் வழி விட்டதும் முகேஷ் ஒரு பெரிய பையுடன் வந்து அபய்தேவ் அருகே நின்று கொண்டான்.
அபய்தேவ், “நிறைய உண்மைகளை கண்டு பிடித்திருக்கிறேன்.. அதில் முதல் விஷயம், இந்த ஊரில் பேய்னு ஒன்னு இல்லவே இல்லை.. அது வெறும் கட்டுக்கதை மட்டும் தான்..
சட்டத்துக்கு புறம்பா எமவீதியில் செய்த சட்டவிரோத செயல்களை மறைக்க தான் பேய் நாடகத்தை போட்டு ஊரையே ஏமாத்தி இருக்காங்க” என்றதும்,
“சும்மானாக்க எதானும் சொல்லாதீவ”
“அதீன! அங்குட்டு அப்புடியன்ன தப்பு நடக்குவுதாம்?
“வுட்டாக்க ஊரே உடந்தனுட்டு சொல்லுவாகெ போல!”
“அங்குட்டு நாடி போன யத்தன உசுரகாவு வாங்கி இருக்குவுது! பொசுக்குன்னு பேய் இல்லனுட்டு சொல்லுதீகெ!”
“பேய கண்ணால பாத்தவுகெ முட்டாளா? இல்ல பொய்யி சொன்னாவுகெளா?”
“நீங்கெ பெரிய அதிகாரினா! சும்மானாக்க கோக்கு மாக்கா எதானும் சொல்லுவீகெளா?” என்று ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்று கூற,
வயதில் மூத்தவர் ஒருவர், “அட சும்மா இருங்கப்பா.. நம்ம தலைவரு யது செஞ்சாலும் செரியாதீ இருக்கும்.. மொத, தம்பி யன்ன தா சொல்லுறாகெனுட்டு கேப்போம்” என்றதும் சலசலப்பு அடங்கி முணுமுணுப்பாகமாறியது.
அப்பொழுதும் அடங்காத ஒரு இளந்தாரி, “மொத வெளியூர்காரன இத்தினி நா ரா தங்க வுட்டதே தப்பு” என்று கூற,
“அதான.. மொத இவுர ஊர வுட்டு தொரத்துங்கெ” என்று இன்னொருவன் குரல் கொடுத்தான்.
ஒரே பார்வையில் அவர்களை அடக்கிய செந்தில்வேல், “சும்மா சலம்பாம கெவனிங்கெலே”என்று அதட்டினார்.
அவரது குரலுக்கு கூட்டம் கப்-சிப் என்று அடங்கிவிட, அபய்தேவ் தொடர்ந்தான்.
நிதான குரலில்,“என் கிட்ட எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்குது.. உங்களுக்கு செயல் முறையிலேயே விளக்குறேன்..” என்ற அபய்தேவ் முகேஷைப் பார்க்க,
அவன் கொண்டு வந்த பையில் இருந்து ‘வான்கல இயக்கக் கட்டுப்படுத்தி’(Joystick) ஒன்றை எடுத்து அபய்தேவ் கையில் கொடுத்துவிட்டு அபய்தேவ் முகத்தை பார்த்தான்.
கூட்டத்தினரைப் பார்த்து “இப்போ ஒரு பொருளை இவர் எடுப்பார்.. யாரும் பயந்துடாதீங்க” என்ற அபய்தேவ் முகேஷிடம் தலை அசைத்து சம்மதம் தெரிவித்தான்.
ஒரு சிலர் அலட்சியமாகவும், இன்னும் சிலர் ஆர்வமாகவும் பார்த்தபடி சன்னமான குரலில் முணுமுணுக்க, முகேஷ் எடுத்த பொருளைக் கண்டு ஒட்டு மொத்த கூட்டமும் பயத்தில் ஓரடி பின்னால் நகர்ந்தது.
வெள்ளை உருவமாகமிரட்டிய அந்த எந்திரத்தை கண்டு செந்தில்வேல் கூட அரை நொடி அதிர்ந்தாலும் அதை சிறிதும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
அமிர்தவள்ளி தனது அதிர்வை மறைத்தபடி, ‘இதான நாம அன்னிக்கு பாத்தது!’ என்று மனதினுள் நினைத்தாள்.
கதிர்,“யன்னக்கா இந்தாளு பேய் வித்தை காட்டப் போறாரா?என்று கேட்க,
நங்கென்று அவன் தலையில் கொட்டியவள், “மாமானுட்டு மருவாதயா பேசுல.. இல்ல தோல உரிச்சிப்புடுவே” என்றாள்.
தலையை தேய்த்தபடி,“இந்த ரணகளத்துலயு இது ஒனக்கு ரெம்ப முக்கியமோ?என்று கேட்க,
அதே நேரத்தில் சிவகாமி,“ஏன்டா சின்ன பையன அடிக்கிற?என்று கேட்டார். 
சிவகாமியிடம்,“ஒன்னுமில்ல அத்த.. சும்மா” என்று சிரித்து மழுப்பியவள், அவர் அறியாமல் கதிரிடம் கண்ணை உருட்டியபடி,“முக்கியம்தீ.. இப்ப மூடிட்டு அங்குட்டு கெவனில” என்று அதட்டினாள்.
“பயப்படாதீங்க” என்ற அபய்தேவ், “பேயை பார்த்ததா சொன்ன எல்லோரும் இதைத் தானே பார்த்தீங்க?என்று கேட்டான்.
கூட்டத்தில் ஒரு சிலர், “ஆமாங்கெ” என்றதும்,
பின்னால் திரும்பி அமிர்தவள்ளியைப் பார்த்து,“நீயும் இதைத்தான பார்த்த?என்று கேட்டான்.
‘இப்ப இது ரெம்ப முக்கியோம்’ என்று மனதினுள் நினைத்தவள் அவனை முறைத்தபடி ‘ஆம்என்று தலையை ஆட்டினாள்.
கூட்டத்தினர் பக்கம் திரும்பியவன் அந்த துணியை விலக்கி, உள்ளே இருந்த எந்திரத்தை சுட்டிக் காட்டியபடி,“இங்க பார்த்தீங்களா.. உள்ளே ஒரு மிஷின் இருக்குது.. இதில் இருக்க பட்டன் ஆன் செஞ்சிட்டு இந்த ஜாய்ஸ்டிக்.. அதாவது ரிமோட் கன்ட்ரோல் மாதிரி.. இந்த ஜாய்ஸ்டிக் உதவியுடன் இதை இயக்கலாம்” என்றவன் அதை செய்தும் காட்டினான்.
கூட்டத்தில் இருந்த வயதான பெண்மணி ஒருத்தர் மொகவாயில் கை வைத்தபடி, “அடி ஆத்தி!” என்று கூற,
“பட்டணத்து மெசின் யல்லா கொண்டாந்து நல்லாவே படம் ஓட்டுறீவ” என்று நக்கலாக கூறிய அந்த இளந்தாரி, “ஆனா எமவீதியில சுத்தறதீ இதுனுட்டு எப்புடி நம்புறது?என்று கூறினான்.
“ஏன்?என்று அபய்தேவ்வினவ,
“அதே மாதிரி ஒன்ன நீங்கெளே கொண்டாந்து இப்புடி செய்யிலாமே!” 
“நான் ஏன் உங்களை ஏமாற்றப்போறேன்?” 
“எங்கூரு பொண்ண ஒங்களுக்கு புடிச்சி இருக்கலாம்” என்றவன் அமிர்தவள்ளியை ஓரப்பார்வை பார்க்கவும் அபய்தேவிற்கு கோபம் வந்தது.

மாயம் தொடரும்…

Advertisement