Advertisement

வைத்தியரிடம் கனகப்ரியாவின் அன்னை, தான் உலக்கையை எடுக்கும் பொழுது கை தவறி கீழே போட்டுவிட, அது தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த குற்றாசு கழுத்தின் மீது விழுந்துவிட்டது என்று கூறினார்.
நம்பாத பார்வை பார்த்த வைத்தியர் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் காயத்தை ஆராய்ந்தார்.
பரிசோதித்துவிட்டு நிமிர்ந்த வைத்தியரை கண்ணில் எதிர்பார்ப்புடன் அவன் அன்னை நோக்க,
அவரோ, “மனச தளர வுடாதத்தா.. தொண்டகுளி உள்ளார இருக்க காயம் ஆற மருந்து தாறேன்.. புண்ணு செரியாகிபுடும்.. ஆனா..” என்று நிறுத்தி குற்றாசின் முகத்தைப் பார்த்தார்.
அவன் அன்னை பதைப்புடன், “ஆனா யன்ன வைத்தியரே?” என்று கேட்டார்.
பெருமூச்சை வெளியிட்ட வைத்தியர், “குரவளை நல்லா சேதம் ஆகிபுடிச்சித்தா.. இனி ஓ மவென் பேசுறது சந்தேகம் தா” என்றார்.
“அய்யோ.. யே ராசா!” என்று அவர் ஒப்பாரி வைக்க ஆரம்பிக்க, குற்றாசு கோபத்துடன் வெளியேறினான்.
மகன் வெளியேறியதும், வடியும் கண்ணீரை துடைத்தபடி மருந்தை பெற்றுக் கொண்டு, கொடுக்கும் முறை பற்றி கேட்டுக் கொண்டவர் பணத்தை கொடுத்துவிட்டு அவசரமாக வெளியேறப் போக,
வைத்தியர், “ஒரு வாரம்காட்டியாவது பேச முயலாம இருக்க சொல்லுத்தா.. இல்லனாக்க ரத்தம் கக்குவியான், காயமும் லேசில ஆறாது.. பாத்துக்கோ” என்றார்.
கண்ணில் தேங்கிய கண்ணீருடன் ‘செரி’ என்பது போல் தலையை ஆட்டி வேகமாக வெளியேறிவர் குற்றாசை தேட, அவனோ அதற்குள் பாதி தூரத்தை கடந்து இருந்தான்.
விழியை மறைத்த கண்ணீரைத் துடைத்தவர் மகன் நிலையை நினைத்து எழுந்த துக்கத்தையும் மகள் மீதான கோபத்தையும் அடக்கியபடி ஓட்டமும் நடையுமாக வீடு வந்து சேர்ந்தார்.
அதே நேரத்தில் பட்டாளத்தார் வீட்டில் சசிதரன் அபய்தேவிடம் புலம்பிக் கொண்டிருந்தான்.
“இந்த வீட்டைத் தவிர இந்த ஊருக்குள்ள என்னை எங்கேயும் தனியா விட்டுட்டு போகாதீங்க அண்ணா” 
“ஏன்டா?” 
“பொடுசுங்க கூட என்னா போடு போடுதுங்க!” 
அபய்தேவ் மென்னகையுடன், “கதிர் என்ன செய்தான்?” என்று கேட்டபடி பையினுள் சசிதரனின் உடைமைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தான்.
பேச்சின் மும்மரத்தில் அதை கவனிக்காமல், “என்ன செய்தானா!” என்ற சசிதரன் நடந்ததை கூற ஆரம்பித்தான்.
அபய்தேவ் கனகப்ரியா வீட்டினுள் சென்றதும் சசிதரன் கதிரிடம், “உன் பெயரென்ன தம்பி?” என்று கேட்டான்.
கதிரோ சிறு முறைப்பு கலந்த விரைப்புடன், “ஒனக்கு காது கேக்காதா?” என்று கேட்டான்.
‘நல்ல மரியாதை’ என்று மனதினுள் நினைத்தவன், “ஏன்டா தம்பி?” என்று கேட்டான்.
“இப்போ ஒனக்கு யன்ன வேணு?” என்று எகிறிக் கொண்டு வர, 
“பெயரைத் தானேடா கேட்டேன்!” 
“ஓ அண்ணே என்னிய கூப்பிட்டப்ப நெனப்ப மேய வுட்டு இருந்தியாக்கும்?” 
சசிதரன் முழிக்க,
கதிர், “யன்ன?” என்று மிரட்டுவது போல் கேட்டான்.
‘பேச்சை ஆரம்பிக்க பெயர் கேட்டது குத்தமா!’ என்று மனதினுள் கூறிக் கொண்ட சசிதரன், “சரியா கவனிக்கலை” என்றான்.
“கெவனிக்கலயா? செரியா கெவனிக்கலயா?” 
“ஏன்டா!” 
“நீயி யன்ன கேள்விக்கு பொறந்தவனா?” 
‘நீ தானே டா என்னை கேள்வி கேட்டுட்டு இருக்க!’ என்று நினைத்தவன், “ஒரே ஒரு கேள்வி தானேடா கேட்டேன்!” என்றான்.
“பொறவு இந்த ஏன்டா ஏன்டானுட்டு கேக்கத யதுல சேக்க?” 
“நீ எதுக்கு கேட்கிறன்னு புரியாம கேட்டேன்” 
“ஏ நா தமிழுல தான பேசுறே?” 
“ஹ்ம்ம்” 
“பொறவென்ன?” என்றவன், “ஆமா, யே பேர திரிஞ்சுகிட்டு நீயி யன்ன செய்யப் போறியாம்?” என்று கேட்டான்.
“சும்மா தெரிஞ்சிக்க கேட்டேன்” 
“அதத்தே கேக்கேன்.. நீயி யதுக்கு திரிஞ்சிக்கோனும்?” 
“பொழுது போக உன் பெயரை கேட்டது தப்பாடா?” 
“ஒனக்கு பொழுது போவனுனாக்க என்னிய ராவுவியா?” 
இதற்கே நொந்து கொண்ட சசிதரன், “எல்லார் கிட்டயும் இப்படி தான் பேசுவியா?” என்று கேட்டான்.
“எப்புடி?” 
கடுப்பான சசிதரன் அவனை நக்கல் செய்ய நினைத்து, “இவ்ளோ மரியாதையுடன் தான் பேசுவியானு கேட்டேன்” என்றான்.
கதிரோ, “ஓ நொண்ணனுக்கே இம்புட்டு மருவாத தா” என்று இவனை நக்கல் செய்தான்.
‘இப்போவே கண்ண கட்டுதே!’ என்று நினைத்த சசிதரன் அமிர்தவள்ளியின் மனதை பற்றி அறியும் எண்ணத்துடன், “ஏன் அப்படி?” என்று கேட்டான்.
கதிர், “எப்..” என்று ஆரம்பிக்க,
சசிதரன் கையை காட்டி நிறுத்தியபடி, “ஏன் அண்ணனுக்கே இவ்ளோ மரியாதை தான்னு கேட்டேன்” என்றான்.
“மொதவே வெவரமா பேசுறதுக்கென்ன?” 
“உனக்கு விளக்கமா சொன்னா தான் புரியும்னு எனக்கு இப்போ தானே புரிந்தது” என்று அவனை மட்டும் தட்ட நினைக்க,
அவனோ அலட்டிக் கொள்ளாமல், “ஒனக்கு தெளிவா பேச திரியாட்டி என்னிய மக்குனுட்டு சொல்லிவியா! இத்தே ஆட திரியாதவென் தெரு கோணல்னானாம்” என்று கூறி மீண்டும் பல்ப் கொடுத்தான்.
சிறு பெருமூச்சை வெளியிட்டவன், “யப்பா ராசா.. நான் தான் மக்கு.. நீ தெளிவா சொல்லுப்பா” என்றான்.
அவனை மிதப்பாக பார்த்த கதிர், “யதை?” என்று கேட்டான்.   
“திரும்பவுமா!” என்று சசிதரன் வாய்விட்டே அலறிவிட,
கதிர் பாவம் பார்த்து, “இப்போ யன்ன! ஓ அண்ணாத்தைக்கு ஏ இம்புட்டு மருவாதனுட்டு திரியோனுமா?” என்று கேட்டான்.
சசிதரம் அமைதியாக ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டியபடி அவனது பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தான்.
ஆனால் கதிரோ, “யனக்கே புரிஞ்ச வெஷயம் ஒனக்கு புரியலனுட்டு என்னிய நம்ப சொல்லுறியா?” என்று கேட்டு தான் விடாகண்டன் என்று நிரூபித்தான்.
காற்று போன பலூனான சசிதரன், “நான் தா மக்குனுட்டு சொன்னேனே! நீ தெளிவா சொல்லு” என்றான்.
“அப்ப ஒனக்கு வெளக்கினாக்க கூட புரியாதுவெ.. வுட்டுடு” என்று முடித்துவிட்டான்.
‘எப்படி போனாலும் கேட்டு(gate) போடுறானே!’ என்று நினைத்த சசிதரன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய, பின் கதிர் கேள்விகளை கேட்க ஆரம்பித்தான்.
“நீயி எங்குட்டு வேல பாக்க?”
“சென்னை” 
“அது திரியும்வெ.. எந்த கம்பனியில வேல பாக்க?” 
சசிதரன் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் பெயரை சொன்னதும்,
கதிர், “ஓ அண்ணே?” என்று கேட்டான். 
“ஆங்.. அவரும் அங்க தான்” 
“ரெண்டு பேரும் ஒரே எடத்தில தா வேல பாக்கிவளா?” 
“ஹ்ம்ம்” என்று ஒரு தினுசாக சசிதரன் தலையை ஆட்டினான்.
அவனை சந்தேகமாக பார்த்த கதிர், “இப்போ என்னாத்துக்கு ஒரு மார்க்கமா தலைய ஆட்டுறவெ? நெசமாலுமே என்ஜினியர் தானா! இல்லனாக்க களவாணி பயல்வளா?” என்று கேட்டான்.
“டேய்!” என்று அலறிய சசிதரன், “இதெல்லாம் எதுக்கு கேட்கிறன்னு யோசிச்சா! இப்படி பட்டுன்னு திருட்டு பசங்கனு சொல்ற!” என்றான்.
“ஓ முழி அப்புடி” என்ற கதிர், “செரி.. செரி.. அத்த வுடு.. சொந்த ஊரே சென்னையா இல்ல பொழப்பு தேடிய ஊரா?” என்று அடுத்த கேள்வியை கேட்டான். 
“சொந்த ஊர் திருநெல்வேலி” 
“ஓ சம்பளம் யன்ன?”
“***” 
“இம்புட்டா! அப்போ ஓ அண்ணே எம்புட்டு வாங்குறியான்?” 
“***” 
“ஒன்னிய விட கம்பியா சொல்லுற? என்னவெ சும்மானாக்க வாயில வட சுடுறியா? என்னிய சின்ன பையனுட்டு நெனைச்சு ஏமாத்த பாக்குறியா?” 
“உண்மையை தான் சொல்றேன்.. அவர் வேற டோமைன்.. அதான்.. அது போக, அண்ணா இப்போ தான் எங்க கம்பெனி வந்தார்.. முன்னாடி வேற கம்பெனியில் வேலை பார்த்தார்.. அதான் இப்படி” 
மீண்டும் அவனை சந்தேகமாக பார்த்தபடி, “என்னமோ சொல்லுற!” என்ற கதிர், “ஓ வூட்டுல யத்தினி பேரு?” என்று கேட்டான்.
“ஆமா நீ மட்டும் எங்களை பத்தி இத்தனை கேள்வி கேட்கிற! உன்னை பத்தி எதுவும் சொல்ல மாட்டிக்கிற?” 
“ஒங்கள பத்தி சொல்லிதா ஆவனுட்டு நா சொல்லுலியே! நீயி தா ஓட்ட வாயாட்ட சொன்ன” 
‘அடப்பாவி!’ என்பது போல் பார்த்த சசிதரன், “இப்போ எதுக்கு இதெல்லாம் கேட்ட?” என்று கேட்டான். 
“ஹான்.. பின்னாடி ஒதுவுனுட்டு தா” 
“எதுக்கு உதவும்? உன்னோட அக்காக்கு மாப்பிள்ளை தேடுறப்பவா?” என்று துண்டில் போட,
அவனோ சிக்காமல், “அந்த வேலய ஐயா பாப்பாவ.. நா சொன்ன பின்னாடி, நா வேலைக்கு போறப்ப ஒதவுனுட்டு சொன்னே” என்றான். 
“அப்படியா?” 
“ஏ நா என்ஜினியர் ஆவ மாட்டேனாக்கும்! ஒன்னியாட்ட வேலைக்கு போவ மாட்டேனா!” என்று கதிர் சண்டைக்கு வர,
“வருவப்பா.. வருவ.. என்னை விட பெரிய ஆளாவே வருவ” என்று சரணடைவது போல் கூறினான். 
“ஹான்.. அது”  
“எங்க வீட்டில் எத்தனை பேருனு எதுக்கு கேட்ட?” 
சசிதரன் தான் அவனை மடக்கிவிட்டதாக நினைக்க, அவனோ, “அது சும்மா ஒன்னிய பத்தி பொது அறிவு வளத்துக்க கேட்டே” என்றபோது அபய்தேவ் வந்துவிட சசிதரன் விட்டால் போதுமென்று ஓடிவிட்டான்.
அபய்தேவ் சத்தமாக சிரிக்க, சசிதரன், “அண்ணா!” என்றான் முறைப்புடன்.
அபய்தேவ் இன்னும் சிரிப்புடன், “ஒரு சின்ன பையனை சமாளிக்க துப்பில்லை” என்றான்.
“அவனா சின்ன பையன்! என்ன விவரமா பேசுறான்! அவன் கிட்ட அவ்ளோ மெச்சுரிட்டி அண்ணா!” என்று வியந்தான்.
அபய்தேவ் மென்னகையுடன், “ஹ்ம்ம்.. இப்போலாம் சின்ன பசங்க கூட படு விவரமா தான் இருக்கிறாங்க.. அதுவும் கிராமத்தில் இன்னும் விவரமா இருப்பாங்க” என்றான்.
“அது என்னவோ உண்மை தான் அண்ணா” 
“இதுக்கே நீ சொல்றியே! கதிருக்காவது பதினைஞ்சு வயசு.. என்னோட சீனியர் கொலீக் ஒருத்தரோட பையனுக்கு எட்டு வயசு தான்.. சரியா சொல்லனும்னா இன்னும் மூணு மாசம் கழிச்சு தான் எட்டு வயசு கம்ப்ளீட் ஆகுது.. ஒரு பர்த்டே பார்ட்டிக்காக இன்னொரு கொலீக் வீட்டுக்கு போய் இருந்தப்ப அவன் பேசினதை கேட்க நேர்ந்தது.. அவனும் அவன் பிரெண்ட்ஸ் டிவி பார்த்துட்டு இருந்தாங்க.. அதுல ஒரு படத்தில் ஹீரோ ரெண்டு மூணு முறை ஹீரோயின் கிட்ட காதலை சொல்ல வந்து ‘ஐ.. ஐ’ னு திணறிட்டு விட்டுடுவான்.. அதை பார்த்து அந்த பையன் ‘எனக்கு தெரியும், அவன் ஐ லவ் யூ தான் சொல்லப் போறான்’ னு சொல்றான்..
இது கூட பரவாயில்லை.. சொந்தமா ஒரு கடி ஜோக் சொன்னான் பாரு, அதில் தான் கொஞ்சம் ஜெர்க் ஆனேன்” 
“அப்படி என்னணா சொன்னான்?” 
“ரெண்டு பேரு லவ் பண்ணிட்டு இருந்தாங்களாம்.. அப்போ அவனை போலீஸ் பிடிச்சிட்டு போயிட்டாம், ஆனா அந்த பொண்ணு அவனை தேடி வரலையாம்.. ஏன்னு கேட்டான்” 
“ஏனாம்?” 
“நீ உன்னோட பதிலை சொல்லு” 
“எதுக்கு பல்ப் வாங்கவா! நீங்களே சொல்லுங்க” 
அபய்தேவ் சிரிப்புடன், “இல்லைனா மாட்டும் பல்ப் வாங்க மாட்ட!” என்றான்.
“அப்படி சொன்னேனா! பதிலை சொல்லுங்க” 
“இருந்தாலும் இந்த விஷயத்தில் நீ பெல்பாட்டம் முதலாளி டா” 
“விடுங்க.. விடுங்க.. ஓவரா புகழாம பதிலை சொல்லுங்க” 
“அந்த பொண்ணு அவனை காதலிக்கவே இல்லையாம்.. அவன் பேட்(bad) பாயாம்(boy).. அவனை போலீஸ் கிட்ட பிடிச்சு கொடுக்க காதலிச்ச மாதிரி நடிச்சாளாம்.. அவளோட லவ்வர் வேறயாம்” 
வாயில் கை வைத்தபடி நின்ற சசிதரன் இரண்டு நொடிகள் கழித்து, “நிஜமாவே எட்டு வயசு பையன் சொன்னதா?” என்று தான் கேட்டான்.
“ஹ்ம்ம்.. அதுவும் சொந்தமா சொன்னது” 
“கதிர் பேச்செல்லாம் ஒன்றுமே இல்லை” 
“அதைத் தான் நானும் சொல்றேன்” 
அப்பொழுது தான் தனது பையைக் கவனித்தவன், “என்னணா செய்துட்டு இருக்கிறீங்க?” என்று கண்டனத்துடன் கேட்டான்.
“செய்துட்டு இல்லை, செஞ்சு முடிச்சிட்டேன்” என்ற அபய்தேவ், “இப்போ உனக்கு கார் வரும்.. அதில் நீ திருநெல்வேலி கிளம்புற” என்று திட்டவட்டமாக கூறினான்.
“அண்ணா!” 
“என்ன?” 
“தனியாலாம் கிளம்ப முடியாது” 
“வேணும்னா பரிமளத்தோட ஆவியை துணைக்கு அனுப்பவா?” என்று நக்கலுடன் கேட்க,
முதலில் முறைத்தவன் பின் நக்கலுடன், “அந்த பேய் கூட நீங்க டூயட் பாடி ஆடத் தானே என்னை கிளப்பி விடுறீங்க!” என்றான்.  
அபய்தேவோ சிறிதும் அலட்டிக்கொள்ளாமல், “இங்க இருந்தா மட்டும், குரூப்பா குத்தாட்டம் போட வரப் போறியா என்ன!” என்றான்.
அப்பொழுது அபய்தேவின் கைபேசியில் அழைப்பு வர, அதைப் பார்த்தவன், “டிரைவர் தான்.. கார் வந்துடுச்சு.. கிளம்பு” என்றபடி அழைப்பை எடுத்து, “அஞ்சு நிமிஷத்தில் வரேன்” என்று கூறி அவரது பதிலை பெற்றுக் கொண்டு அழைப்பைத் துண்டித்தான்.
சசிதரன் ஆயாசத்துடன், “ஏன்ணா இப்படி செய்றீங்க?” என்றான்.
“நான் நாளைக்கு வந்திருவேன்டா” 
“அப்போ சேர்ந்தே போகலாமே!” 
“நீ இப்போ கிளம்பி போகலைனா, மருமகளை கூட்டிட்டு போகனு உன்னோட ராஜமாதா கிளம்பி வந்திருவாங்களே” 
“அது தானே முறை! நாம தானே அண்ணியை கூட்டிட்டு போகணும்” 
“அதுக்கு முன்னாடி சில வேலைகள் செய்யணும்டா” 
“என்ன வேலை?” 
“எமவீதி மர்மத்தை உடைச்சா தான், என்னால் அமிர்தா அப்பா கிட்ட அபிக்காக பேசி சம்மதம் வாங்க முடியும்.. அவர் சம்மதிச்சா ஊர் மக்கள் சரி சொல்லிடுவாங்க” 
“அப்போ உங்க கல்யாணம்!” 
“அதுக்கென்ன! முதல்ல அபி விஷயத்தை பார்ப்போம்” என்றவன், “சரி சரி.. நீ கிளம்பு” என்று விரட்டாத குறையாக கிளப்பினான்.
கதிருடன் நிகழ்ந்த உரையாடலை சசிதரன் சொல்லி முடித்த நேரத்தில், அங்கே தனது வீட்டினுள் நுழைந்த குற்றாசு கனகப்ரியாவின் அறைக்கு தான் முதலில் சென்றான். அங்கே அவள் இல்லை என்றதும் வீடு முழுவதும் தேடியவன் அவள் இல்லை என்றதும் அபய்தேவுடன் சென்றுவிட்டாள் என்று நினைத்து பட்டாளத்தார் வீட்டிற்கு செல்ல நினைத்தான்.
“சிறுக்கி மவ, எப்போடா திண்ண காலியாகுனுட்டு காத்திருந்தாக்க கம்பி நீட்டிபுட்டாளே! நா யன்ன செய்ய! யே குடும்ப மானம் சந்தி சிரிக்க போவுதே”  என்ற அன்னையின் ஒப்பாரியை கேட்டவன் வேகமாக வீட்டின் கதவை மூடிவிட்டு வந்து அன்னை முன் நின்றான்.
அவர் அவன் முகம் நோக்கவும், கோப விழிகளுடன் முறைத்தபடி கையால் வாயை மூடும்படி செய்கை செய்தான்.
மகனின் கோபத்தில் வாயை மூடியவர் அடுத்த நொடியே மெல்லிய குரலில், “ஏய்யா ராசா தொண்ட வலிக்குவுதா?” என்று கேட்டார்.
இன்னும் அதிகமாக முறைத்தவன் தனது கைபேசியில், “குளு குளுனுட்டு இருக்குவுது” என்று தமிழில் எழுதி அவர் முகத்தின் முன் நீட்டினான்.
அழுகையுடன், “ஆத்தாளுக்கு படிக்க திரியலயே ராசா” என்றவர் கீழே அமர்ந்து நெஞ்சில் அடித்துக் கொண்டு, “அய்யோ யே ராசாக்கா இந்த நெல வாரோணும்! இனி எப்புடி பேச? யே ராசாவோட கொரல எப்புடி கேப்பேன்!” என்று மீண்டும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார்.
ஒப்பாரியின் நடுவே கனகப்ரியாவை திட்டுவதோடு சேர்த்து சாபமும் கொடுத்தார். இறுதியில் குற்றாசின் பிறக்க போகும் குழைந்தையை பற்றி கூறி புலம்பியவர், “பொறக்க முன்னவே அப்பன் கொரல ஓச்சிபுடுச்சே.. இன்னு யன்னலா…” என்று பேசக் கொண்டு இருந்தவரின் முன் தண்ணீர் நிறைந்த மண்பானையை போட்டு உடைத்த குற்றாசு ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தான்.
மயிரிழையில் தலை தப்பிய அதிர்ச்சியுடன் நிமிர்ந்தவர் மகனின் ரௌத்திரத்தை கண்டு நெஞ்சில் கை வைத்தபடி அரண்டுவிட்டார்.
அவர் முகத்தின் முன் சுட்டு விரலை ஆட்டி மிரட்டுவது போல் கத்தியவன், அடுத்த நொடியே இரும, வலியில் முகத்தை சுருக்கினாலும் சிறிது கசிந்த இரத்தத்தை அலட்சியமாக துடைத்தெறிந்தான்.
இரத்தத்தை பார்த்ததும் சுயம் பெற்று பதறிய அன்னையின் கையை உதறியபடி கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறினான்.
அப்பொழுது அவன் வீட்டு தெருவாசல் கதவை திறந்துக் கொண்டு வந்த காமாட்சி இவனை கண்டதும் இவனது நலனை கேட்க வாயை திறக்கும் முன் கோபத்துடன் முறைத்தபடி, ‘மூடிட்டு போ’ என்றபடி செய்கை செய்துவிட்டு வாயிற்கதவை உடைக்காத குறையாக ஓங்கி திறந்துவிட்டு வெளியேறினான்.
அவனது செயலில் அவமானமாக உணர்ந்த காமாட்சி கனகப்ரியாவை மனதில் கொண்டு, “மலரு” என்று அழைத்தபடி உள்ளே சென்றார்.
இவரது குரலில் வேகாமாக வந்த கனகப்ரியாவின் அன்னை கோபத்துடன், “யதுக்கு வந்த? யே மவென் படுற கஷ்டத்த கண் குளிர பாத்து சந்தோஷப் படவா?” என்று கேட்டார்.
அவருக்கு மேல் கோபமாக முறைத்த காமாட்சி, “இந்த கொரல ஒசத்துற வேல வெச்சிகிட்ட மொகறைய பேத்து, கடவாபல்லு ரெண்டினினத்த கையில கொடுத்துப்புடுவேன்!” என்று மிரட்டியவர் ஒன்றுவிட்ட தங்கையின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியில் சற்று கோபம் தனிந்தவராக,
“ஆருகிட்ட கொரல ஒசத்துற! தப்பெல்லாம் ஒன்னாண்ட வெச்சிகிட்டு என்னிய பேசுறியோ! தொலைச்சுபுடுவேன் தொலைச்சி.. மவள நெனச்சி வெசனப்படுவியேனுட்டு வந்தாக்க ரெம்பத்தா துள்ளுறவ!” என்றார்.
பின், “கனகா ஏமுட்டுலதீன் இருக்கா.. நீயே ஒப்பாரி வெச்சி, ஓ குடும்ப மானத்த சந்தி சிரிக்க வெச்சிப்புடாத.. அம்புட்டுதா சொல்லுவே, பொறவு ஓ இஷ்டம்” என்றவர் அவரது பதிலை எதிர்பார்க்காம சென்றுவிட்டார்.
கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய குற்றாசு ஆவேசத்துடன் சென்று நின்ற இடம் பட்டாளத்தாரின் வீடு.

Advertisement