Advertisement

சசிதரனுடன் வெளியே வந்த அபய்தேவ் இவனைப் பார்த்து நக்கலுடன், “வாங்கினது பத்தலையா! ஒரு முறை தான் உயிர் பிச்சை கொடுக்க முடியும்” என்றான்.
‘டேய்’ என்று கத்த முயற்சித்தபடி வெகுண்ட குற்றாசு அபய்தேவ் மீது பாய,
அவன் பாயும் முன் அவனை தடுத்து நிறுத்திய சசிதரன், “யாருணா?” என்று கேட்டான்.
சசிதரனின் பிடியில் திமிறியபடி தன்னை வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்த குற்றாசை பார்த்தபடி, “அபியோட நிலைக்கு காரணமானவன்” என்றவனின் குரலில் இன்னமும் கோபம் இருந்தது.
அடுத்த நொடி சசிதரன் சிறிதும் யோசிக்காமல் கோபத்துடன் குற்றாசின் மூக்கில் குத்து விட,
இந்த தாக்குதலை எதிர்பார்க்காத குற்றாசு ‘ஆ’ என்று அலறியபடி இரத்தம் வடிந்த மூக்கை பிடித்தான்.
மீண்டும் அவனைத் தாக்க முயற்சித்த சசிதரனை தடுத்த அபய்தேவ் குற்றாசிடம், “உசுரை காப்பாத்திக்கணும்னா இடத்தை காலி செய்” என்று உறுமினான்.
மூக்குடன் தலையும் ‘வின்’ என்று தெரிக்கவும் குற்றாசு வைத்தியர் வீட்டை நோக்கி சென்றான்.
“எப்படி அண்ணா இவனை சும்மா விட்டீங்க?” என்று சசிதரன் கொந்தளித்தான்.
ஒற்றை கையால் அவனை அடக்கிய ஆபய்தேவ், “அதெல்லாம் செஞ்சுவிட்டாச்சு.. நீ இப்ப ஊருக்கு கிளம்பு” என்றான்.
அதையும் மீறி சீறிய சசிதரனை அடக்க அபய்தேவின், “சசி” என்ற ஒற்றை அழைப்பு போதுமானதாக இருந்தது.
சசிதரனின் முகத்தில் கோபம் எஞ்சி இருப்பதைக் கண்ட அபய்தேவ் சுற்றுபுறத்தை கருத்தில் கொண்டு மெல்லிய குரலில், “இனி அவனால் பேசவே முடியாது டா..” என்றான். பின் இயல்பு குரலில், “நாம அப்புறம் பேசலாம்.. நீ கிளம்பு” என்று கூறி அவனை கிளம்பிவிட்டான்.

 

தன் முன் நின்ற குற்றாசை கண்ட வைத்தியர், “இப்ப நீயி ஒக்காந்து இருக்கயிலே ஒலக்கு ஓ மூக்கு மேல வுழுந்துபுடுச்சா!” என்று கேட்டார்.
சட்டென்று குற்றாசு கிளம்பவும், “அட இரப்பா!” என்றபடி அவனது கையை பற்றி நிறுத்தியவர், ‘இந்த ரோசதுக்கு ஒன்னியும் கொறசல்லு இல்ல’ என்று முணுமுணுத்தபடி காயத்தை ஆராயத் தொடங்கினார்.
சசிதரன் கிளம்பியதும், சில முக்கிய அழைப்புகளை விடுத்து பேசிக் கொண்டிருந்த அபய்தேவ், நடுவில் வந்த அமிர்தவள்ளியின் அழைப்பை கண்டாலும் மற்ற அழைப்புகளை முடித்த பிறகே அவளுக்கு அழைத்தான்.
அப்பத்தாவுடன் பேசிக் கொண்டிருந்த அமிர்தவள்ளி தனது கைபேசியின் பிரத்தியேக பாடலின் ஒலியில் அபய்தேவின் அழைப்பை அறிந்து கைபேசியை எடுக்க கனகப்ரியா இருக்கும் அறைக்கு அவசரமாக ஓடினாள்.
“பைய போ ராசாத்தி.. அது அடிச்சி ஓஞ்சாக்க தா இப்ப யன்னவாம்!’ என்று குரல் கொடுத்த அப்பத்தா, “யன்னைக்குமில்லாம இன்னிக்கு என்னாத்துக்கு இம்புட்டு வெரசா ஓடுறா!” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டார். 
“ஆருடி இந்த தேவ் மாமோய்?” என்று கேட்ட தோழியிடம்,
“பொறவு சொல்லுறே” என்றவள் தோழியின் கையில் இருந்த கைபேசியை பறித்துக் கொண்டு இரண்டாவது தளத்தில் இருக்கும் தனது அறைக்கு வேகமாக ஓடினாள்.
கடைசி வினாடியில் அழைப்பை எடுத்தவள் ‘ஹலோ’ என்று கூறாமல் மூச்சு வாங்கியபடி தனது மெத்தையில் பொத்தென்று அமர்ந்தாள்.
எதிர்முனையில் இருந்த அபய்தேவ், “ஏய் அம்ரு! என்னாச்சு? ஏன் இப்படி மூச்சு வாங்குது? எங்க இருக்க? ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டபடி தனது அறையை விட்டு வெளியே வந்தான்.
“ஹ..லோ..” என்றவள் மூச்சை நன்றாக இழுத்துவிட்டுக் கொண்டு, “ஒன்னுமில்ல.. நல்லாதீ.. இருக்கேன்.. வுட்டுலதீ.. இருக்கேன்.. ஓடியாந்து ஓ போனை எடுத்தே.. அதான்” என்றதும் நிம்மதி மூச்சை வெளியிட்டவன் தனது அறைக்கு திரும்பினான்.
“வேற ஒன்றும் இல்லையே!” 
“இல்ல” என்றவள், “ஏ? நீயி யன்ன நெனச்ச?” என்று கேட்டாள். 
“நீ போன் செஞ்சப்ப வேற நான் எடுக்கலையா, போனை எடுத்ததும் இப்படி மூச்சு வாங்கவும் எதுவும் பிரச்சனையோனு கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்”
“இதானா சார் ஒங்க டக்கு!” என்று நடிகர் கர்னாஸ் போல் நக்கலாக அவள் கூறவும்,
அவன் மென்னகையுடன், “அராத்து” என்றான்.
“ம்க்கும்” 
“அப்போ கொஞ்சம் பிஸி.. சில முக்கியமான வேலைகள் பார்த்துட்டு இருந்தேன்.. சட்டுன்னு பேச முடியலை.. சாரி” 
“பொறவாயில்ல வுடு” 
“எதுக்கு போன் செஞ்ச?” 
“அது.. ஹிட்லர் வுட்டுமின்ன ப்ளஷரு வண்டி பாத்தேன்” 
“அது என்ன ப்ளஷரு வண்டி?” 
“கார்” 
“இதை முதல்லேயே சொல்றதுக்கு என்ன?” 
“ஏ வெளக்கம் கேட்டாக்க தொர கொறஞ்சிபுடுவீகெளோ?” 
“முதல்லேயே எனக்கு புரியுற மாதிரி சொன்னா நீ குறைந்து போயிடுவியா என்ன?” 
“நா நானாதீ இருப்பேன்” 
“நான் மாற சொல்லலையே” 
“பொறவு நா எப்புடி பேசினாக்க யன்ன?” 
“நான் இந்த வார்த்தைகளுக்கு பழகும் வரை, என்னோட பேசும் போது எனக்கு தெரிந்த மாதிரி உனக்கு பேச தெரிந்தால், அதை அப்படியே பேசுன்னு தான் சொல்றேன்..” 
“எங்கூரு பாசைய நா பேசினாக்க தான, நீயி அத்த பழகிக்க முடியும்?” 
“உங்க ஊரு பாஷையை நீ மட்டும் தான் பேசுறியா?” 
“ஸ்ப்பா! இப்போ என்னாத்துக்கு குண்டக்க மண்டக்க பேசுறயா?” 
“யாரு? நானு?” 
“பின்ன! கேட்ட கேள்விக்கு பதில சொல்லாம வீயாக்கானம் பேசுறது ஆரு?”    
“அது சரி!” 
“அது செரிதே” 
“ரைட்டு.. இப்போ உனக்கு என்ன தெரியனும்?” 
“ஒன்னியு திரிய வேணா” 
“ப்ச்.. அம்ரு” 
“அம்ரு கிம்ருனுட்டு சொல்லுறதுல ஒன்னியு கொறசல்லு இல்ல” 
“ஏய்! என்னாச்சு உனக்கு?” 
‘அதானே! இவென் கிட்டக்க இப்போ என்னாத்துக்கு இப்புடி கரையிறே! யே தவிப்பு கொஞ்சுண்டாவது இவெனுக்கு இருக்குவுதா! தொர சொகுசா நாளிக்கு கெளம்பட்டுமே! யனக்கு யன்ன!’ என்று மனதினுள் கோபத்துடன் கூறிக் கொண்டவள் அவனுக்கு பதில் கூறாமல் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.   
அவன் உடனே அழைக்க, அவள் அழைப்பை எடுக்கவில்லை.
இரண்டு முறை அழைத்துப் பார்த்தவன் அவள் எடுக்கவில்லை என்றதும், “இப்போ காள் அட்டென்ட் செய்யலை, வீட்டிற்கே வந்து உன்னை பார்ப்பேன்.. அதுவும் இப்பவே” என்ற குறுஞ்செய்தியை அனுப்பினான்.
அடுத்து அவன் அழைக்கவும், அழைப்பை எடுத்தவள் அமைதியாக இருந்தாள்.
அவன் ஆழ்ந்த குரலில், “அம்ரு என்னாச்சு?” என்று கேட்டான்.
அவள் அப்பொழுதும் அமைதியாக இருக்கவும், “நான் உன் கிட்ட விளையாட கூடாதாடா?” என்று கேட்டான்.
அப்பொழுதும் அவள் அமைதியாக இருக்க, அவன், “ப்ளீஸ் டா பேசு” என்று சற்றே கெஞ்சும் குரலில் கூறினான்.
அவள் சிறு கோபத்துடன், “பொழுதன்னைக்குமா வெளையாடுவாகெ!” என்றாள்.
“நீ பொழுதன்னைக்கும் விளையாடுற ஆளுனு தான் நான் கேள்விப் பட்டேன்” 
“செரி நா வெக்கிறே” 
“ஹே! இரு” என்று அவசரமாக கூறியவன், “கார்ல சசி ஊருக்கு கிளம்பினான்.. ப்ரியாவை கூட்டிட்டு போறேன்னு தானே சொன்னேன்! அப்புறம் எப்படி நான் கிளம்புவேன்?” என்று கேட்டான்.
“ஓ!” 
“என்ன?” 
“நெசமாலும் நாளிக்கு கெளம்புறியா?” 
“ஹ்ம்ம்.. வந்த வேலை முடிஞ்சா கிளம்பனும் தானே!” 
“ஓ” 
“என்ன?” 
“ஒன்னுமில்ல” 
“அப்படியா?” என்று அவனது குரல் ஆழ்ந்து ஒலிக்க, அவள் அமைதியாக இருந்தாள்.
அவளை இயல்பாகக, “ஓய் அமுத சுரபி!” என்று உற்சாச குரலில் அழைத்தான்.
அவன் எதிர்பார்த்தது போல், “ஏதோ மாயத்தை கண்டு புடிக்கறேன், மர்மத்தை ஒடைக்கிறேனுட்டு பீலா வுட்ட!” என்றாள்.
அவன் மென்னகையுடன், “இன்னைக்கு பேய் கூட டூயட் பாட போறேன்.. வரியா?” என்றான்.
“அந்த பேய்யவே புடிச்சி தொங்கு.. போயி சிக்கி சின்னாபின்னமாக வாழ்த்துக்கள்” 
சத்தமாக சிரித்தவன், “அதெல்லாம் அல்ரெடி ஒரு மோகினி கிட்ட சிக்கிட்டேன்” என்றான் ரசனையுடன்.
“ஓ” என்று ராகம் இழுதவள் உதட்டில் ரகசிய புன்னகை மின்னியது.
“என்ன?” 
“ரெம்ப புடிக்குமோ?” 
“யாரை?” 
“அந்த மோகினிய” 
“அதை நீ ஏன் கேட்கிற?” 
“சும்மாதீ” 
“தெரிஞ்சு என்ன செய்யப் போற?” 
“யதுவுமில்ல” 
“அப்போ விடு” 
“செரி, ஆரு அந்த மோகினி?” 
“உனக்கு தெரிந்த மோகினி தான்” 
“ஹ்ம்ஹும்” என்று ராகம் இழுத்தவள், “ஆரது?” என்று மீண்டும் கேட்டாள்.
“நீயே கண்டு பிடி” 
“செரி அத்த வுடு.. அந்த மோகினிக்கு ஒன்னிய புடிச்சி இருக்கா?” 
“ரொம்ப பிடிச்சு இருக்குது” என்றான் விரிந்த புன்னகையுடன். 
“பார் டா!” என்றவள், “அப்ப நாளிக்கு கெளம்புறப்ப யன்ன செய்யிறதா இருக்க?” என்று கேட்டாள். 
“என் மேல் நம்பிக்கை வைத்து அந்த மோகினி காத்திருப்பாளா?” 
“என்னிய ஏ கேக்க?” என்றவளின் முகத்தில் புன்னகை பூத்திருந்தது. 
“மோகினி பத்தி பொண்ணுங்களுக்கு தெரியும்னு கேள்விப்பட்டு இருக்கிறேன்.. அதான்” 
“பிடித்தத்தை அந்த மோகினியாண்ட சொன்னாக்க காத்திருக்கலாம்” 
“என்னோட பிடித்தத்தை சொல்லலைன்னு நினைக்கிறியா?” 
“அப்ப சொல்லிட்ட!” 
“அந்த மோகினி எப்படி சொன்னாளோ அப்படி தான் நானும் சொன்னேன்” 
அப்பொழுது காமாட்சி அவளை கூப்பிடவும், “ஆத்தா கூப்பிடுது.. வெக்கறே” என்றபடி அழைப்பை துண்டிக்கப் போக,
அவன் அவசரமாக, “ஹே பதிலை சொல்லிட்டு போ” என்றான்.
“அத்த அந்த மோகினியாண்ட கேளு” என்றபடி அழைப்பை துண்டிக்கப் போனவள், “யோவ்” என்று அழைத்தாள்.
அவளது குரலின் பேதத்தை கண்டு கொண்டவன் விளையாட்டை கைவிட்டவனாக, “என்ன டா?” என்று கேட்டான்.
“ரவையில கோலாரா போயிட்டு வாயா” 
“அப்படினா” 
“ப்ச்.. ராத்திரி பத்திரமா போயிட்டு வானுட்டு சொன்னே” 
“மோகினியவே சமாளிச்சுட்டேன்” 
“வாரேன்” என்று கத்தி குரல் கொடுத்தவள் இவனிடம், “யோவ்.. இது வெளயாட்டு இல்ல” என்றாள்.
அவளது குரலில் இருந்த தவிப்பை புரிந்துக் கொண்டவன், “எனக்கு ஒன்னும் ஆகாது.. நான் கவனமா இருந்துக்கிறேன்.. நீ கவலைப் படாம நிம்மதியா இரு” என்றான்.
“ஹ்ம்ம்.. சூதானமா போயிட்டு வா.. ஜாக்கிரத” என்று மீண்டும் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள், “அதா வாரேனுட்டு சொல்லுதேனே! பொறவு ஏ யே பேர ஏலம் வுடுற?” என்று குரலை உயர்த்தி கேட்டபடி கீழே இறங்கிச் சென்றாள். 
 
 
 
நள்ளிரவில் ஊர் அடங்கியதும் அபய்தேவ் எமவீதியினுள் நுழைந்தான். மரக்கிளையில் அமர்ந்திருந்த அந்த காகம் தனது பார்வையால் உள்ளே நுழைந்த அபய்தேவை தொடர, அதை ஓரப்பார்வை பார்த்தபடி அவன் நடக்க ஆரம்பித்தான்.
எமவீதியே இருட்டாக இருக்க, அபய்தேவ் கைவிளக்கு ஒளியின் உதவியுடன் மெல்ல முன்னேற ஆரம்பித்தான்.
அப்பொழுது ஜாதிமல்லியின் நறுமணம் அவனது நாசியை தீண்டவும் ஒருமுறை நின்று வட்டமடித்தபடி கைவிளக்கு ஒளியில் இடத்தைச் சுற்றி பார்த்தான். அவன் கண்களுக்கு எதுவும் வித்யாசமாக புலப்படவில்லை என்றதும் நடையை தொடர்ந்தான்.
அவன் நகர தொடங்கவும் மரக்கிளைகளின் நடுவில் இருந்து உருவம் இல்லா வெள்ளை உருவமொன்று காற்றில் மிதந்தபடி அவனை பின் தொடர, அவனோ அதை கவனிக்காமல் கிணற்றை நோக்கி நடந்துக் கொண்டிருந்தான்.
அதே நேரத்தில், அபய்தேவை பின் தொடர்ந்து எமவீதி வாயில் வரை வந்த குற்றாசுவும், திண்ணையில் படுத்தபடி ஓரவிழியால் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த மணிகண்டனும்(அழுக்கு சட்டைக்காரன்) சிலரால் சத்தமின்றி கடத்தப்பட்டனர்.

மாயம் தொடரும்…

Advertisement