Advertisement

கண்ணில் சிறு கோபம் கலந்த மகிழ்ச்சியுடனும், உதட்டோர சிறு அலட்சிய வளைவுடன் வெற்றிப் புன்னகை புரிந்த அபய்தேவை குற்றாசு வலியை மீறி வன்மத்துடன் முறைத்தான்.
அவனது முறைப்பில், விரிந்த புன்னகையை சிந்திய அபய்தேவ் சட்டைப் பையில் இருந்த கைபேசியை எடுத்து ஏதோ செய்தான்.
பின் கனகப்ரியாவைப் பார்த்து, “இப்போ அபிக்கு வீடியோ காள் போடுறேன்.. அவனைப் பார்த்து அழாம பேசுங்க.. நீங்க திடமா இருந்தா தான் அவன் சீக்கிரம் சரியாகி வீட்டிற்கு வருவான்” என்று கூறியதும்,
வேகமாக கண்களை துடைத்த கனகப்ரியா, “ரெண்டு நிமிஷம்.. மொகத்த கழுவிட்டு வாரேன்” என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறப் போக,
அவளது அன்னை கோபத்துடன், “நில்லுடி” என்றார்.
நின்று அன்னையை திரும்பிப் பார்த்தாள்.
இத்தனை நாட்கள் இல்லாத தனி திடத்தையும் தெளிவையும் மகள் முகத்தில் கண்டவர் கோபத்துடன், “கொஞ்சமாச்சு அண்ணே மேல பாசம் இருக்காட்டீ?” என்றார்.
அவளும் கோபத்துடன், “அவெனுக்கு இருக்கா?” என்று கேட்டாள்.
அவர் முறைப்புடன், “யே ராசாவ இந்த நெலைக்கு கொண்டாந்தவென நீயி கட்டிக்க ஒரு நாளும் நா சம்மதிக்க மாட்டேன்” என்றார். 
“ஓ சம்மதத்தை நா கேக்குலியே” 
“என்னடி வாயி ரொம்ப நீளுது!” 
“நீயி ஓ மவனுக்கு மட்டுதே ஆத்தாவா இருக்க!” என்றவளின் குரலில் அவளை மீறி சிறு வலி தெரிந்தது ஆனால் அதை உணரும் நிலையில் அவளது அன்னை தான் இல்லை.
அவரோ கோபத்துடன், “இருட்டீ.. நானே ஒன்னிய பொழி போட்டுபுடுறே” என்றார். 
அவள் பதில் கூறாமல் அவரை வெறித்துப் பார்க்க, அவருக்கோ அது அலட்சியப் பார்வையாகத் தோன்றியது.
அவர் ஆங்காரத்துடன் முறைத்தபடி, “இவிங்கெ இருக்க தெகிரியதுல ரொம்ப ஆடாதடி” என்றார். 
தோழியின் மனநிலையை புரிந்து ஆதரவாக அணைத்துக் கொண்ட அமிர்தவள்ளி, “இங்கன சவடாலு வுடாம மொத ஓ மவன கெவனி” என்றாள்.
அவர் கோபத்துடன் பதில் கூறும் முன், அபய்தேவ், “வினை விதைத்தவன் வினை அறுப்பான், கேள்விப்பட்டு இருப்பீங்கனு நினைக்கிறேன்” என்றபடி கைபேசியில் ஒரு காணொளியை ஓட விட்டான்.
அதில் குற்றாசு கனகப்ரியாவை அடிப்பதில் இருந்து அவன் இறுதியாக கீழே விழுந்தது வரை பதிவாகி இருந்தது. குற்றாசு அபய்தேவின் காதருகே மெல்லிய குரலில், ‘பத்தலனாக்க யே அடி எப்புடி இருக்கும்னுட்டு ஓ கூட்டாளிய கேளுலே’ என்று கூறியது தெளிவாகப் பதிவாகி இருக்க, குற்றாசு அதிர்ச்சியுடன் அபய்தேவைப் பார்த்தான்.
அவன் அன்னை அதிர்ச்சி கலந்த சிறு பயத்துடனும், காமாட்சி அதிர்ச்சி கலந்த கோபத்துடனும், கனகப்ரியா கடும் கோபத்துடன் குற்றாசைப் பார்க்க, அமிர்தவள்ளி, “வசமா சிக்கினடி” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.
குற்றாசு கனகப்ரியாவை அடிப்பதை கண்டதும், அபய்தேவ் கைபேசியில் காணொளியை பதிவு செய்யும் பொத்தானை அழுத்தி கைபேசியை தனது சட்டை பையில் வைத்து விட்டான். அபய்தேவ் வைத்திருந்த கோணத்திற்கு குற்றாசு சரியத் தொடங்கியது மட்டுமே தெரிந்தது, அவன் இரத்தம் கக்கியது தெரியவில்லை ஆனால் அவனது அன்னையின் குரல் பதிவாகி இருந்தது. குற்றாசின் முறைப்பை பொருட்படுத்தாது சிரித்தபடி கைபேசியை சட்டை பையில் இருந்து எடுத்தபோது தான் காணொளி பதிவை நிறுத்தும் பொத்தானை அழுத்தினான்.
காணொளி முடிந்ததும் அபய்தேவ், “இந்த வீடியோவை என்னோட போலீஸ் நண்பனுக்கு அனுப்பிட்டேன்.. இனி அபி விஷயத்தில் நீ தலையிட்டால் களி திங்க வேண்டியது தான்.. உன்னை உள்ள தள்ளத் தான் நினைத்தேன் ஆனா பிறக்கப்போற உன்னோட குழந்தைக்காக இத்தோட உன்னை விடுறேன்..
இங்கிருந்து கிளம்புறப்ப நானே என்னை வெளிப்படுத்துவேன்.. அதுவரை நான் யாருங்கிற விஷயம் யார் மூலமாவது வெளியே கசிந்தாலோ, உன் பார்வை லைட்டா அபி பக்கம் திரும்பினாலோ, கொஞ்சம் கூட யோசிக்காம உன்னை உள்ளே தள்ளுற வேலையை பார்த்திடுவேன்” என்று மிரட்டினான்.
இயலாமை தந்த கோபத்தில் குற்றாசு கையை ஓங்கி தரையில் இரண்டு முறை அடிக்க, அதற்கு மேல் அடிக்க விடாமல் அவனது கையை அன்னை பற்றிக் கொண்டார்.
அபய்தேவ் கனகப்ரியாவை பார்த்து, “நான் ஊருக்கு கிளம்புறப்ப உங்களையும் கூட்டிட்டு போறேன்.. நம்ம வீட்டில் இருந்தே படிங்க.. அபி தேறியதும் முதல் முகூர்த்ததில் உங்களுக்கும் அபிக்கும் கல்யாணம்” என்றான்.
கனகப்ரியா நம்பிக்கை தந்த தெளிவுடன் மெலிதாக புன்னகைக்க, அபய்தேவ் விரிந்த புன்னகையுடன், “நல்லாவே சிரிக்கலாம்.. இனி உங்களுக்கு மகிழ்ச்சி மட்டும் தான்” என்றான்.
“தேங்க்ஸ்” 
“போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க.. அபியை பார்க்கலாம்” என்றதும் அவள் புத்துணர்ச்சியுடன் துள்ளி குதித்து கொல்லைபுறம் நோக்கி ஓடினாள்.
குற்றாசு அபய்தேவை பார்த்து இளக்காரமாக சிரிக்க முயற்சித்து, வலியில் முகம் சுளித்து அலறினான். அவனது அலறல் வித்யாசமான விலங்கின் சத்தத்தை போல் மெலிதாகத் தான் கேட்டது.
அதைப் பார்த்து அவன் அன்னை பதற,
மெலிதாக சிரித்த அபய்தேவ், அடுத்த நொடியே ரௌத்திரம் மின்னும் விழிகளுடன் குரலை உயர்த்தாமல் ஆனால் அழுத்தமான குரலில், “உன்னால் இனி பேசவே முடியாதுடா” என்றான்.
பின் உதட்டோர அலட்சிய சிரிப்புடன், “வெளி ஆட்களுக்கு பொண்ணு தர ஊர் சம்மதிக்காதுன்னு தானே இந்த இளக்காரம்! அதை சமாளிக்க எனக்குத் தெரியும்.. உன்னை மாதிரி குள்ளநரித்தனம் செய்யாம நேர் வழியிலேயே சமாளிப்பேன்” என்றான்.
குற்றாசு கோபத்துடன் பேச முயற்சிக்க, அது வலியை தந்ததோடு மீண்டும் சிறிது இரத்தம் கக்கினான்.
“அய்யோ ராசா” என்று அழுதபடி அவன் அன்னை பதற,
காமாட்சி, “வள்ளி வைத்தியரை கூட்டிட்டு வா” என்றார்.
குற்றாசின் அன்னை, “ஒன்னு வேணா.. நானே பாத்துகிடுறேன்.. மொத கெளம்புங்க” என்றார்.
காமாட்சி, “சித்தி அப்புடி தா சொல்லுவா.. நீயி போய் கூட்டியா” என்றார்.
ஆனால் அமிர்தவள்ளி அசையாமல் நிற்கவும், அவர், “வள்ளி” என்று அதட்டினார்.
அப்பொழுதும் கிளம்பாமல் அபய்தேவை தான் நோக்கினாள்.
அவன் குற்றாசை பார்த்தபடி, “இவன் எழுந்து அவனோட ரூமுக்கு போனதும், கூப்பிட போ” என்றான்.
‘ஏ வூட்டுலேயே என்னிய நாட்டாம செய்யிறியா?’ என்று கோபமாக கேட்க நினைத்த குற்றாசு மீண்டும் இரத்தம் கக்கினான்.
அவன் அன்னை பதறியவராக, “யய்யா ராசா.. வேணாயா.. ஏதும் பேசாதயா.. நீயி மெல்ல உசும்பினாக்க(எழும்பினாக்க) நாமளே வைத்தியர் வூட்டுக்குப் போய்டலாம்” என்றார் அழுகையுடன்.
அவன் எழும்ப முயற்சிக்க, அவன் அன்னை கைதாங்கலாக பற்றி உதவினார். மெல்ல எழுந்தவன், ‘ஒன்னிய பொறவு கெவனிச்சிகிடுறே’ என்ற முறைப்பு பார்வையை அபய்தேவ் நோக்கி செலுத்திவிட்டு அன்னையுடன் வெளியேறினான்.

 

அப்பொழுது அறைக்கு வந்த கனகப்ரியா, “எங்குட்டு போறாவ?” என்று கேட்டாள்.
“வைத்தியர் கிட்ட போறாங்க” என்ற அபய்தேவ் காமாட்சியை பார்த்து, “எனக்கு ரெண்டு உதவி செய்ய முடியுமா ப்ளீஸ்?” என்று பணிவுடன் கேட்டான்.
அவரோ ‘என்ன?’ என்பது போல் அமைதியாக பார்த்தார்.
என்ன தான் அபய்தேவின் கோபத்தில் நியாயம் இருப்பதாகவும், அவன் நல்லவன் என்ற எண்ணம் அவருக்கு தோன்றினாலும் அவரால் அபய்தேவுடன் இணக்கமாக பேச முடியவில்லை. அதுவும் மகள் தன் பேச்சை பொருட்படுத்தாமல் அனுமதி கேட்பது போல் அவன் முகம் நோக்கி நின்றது அவர் மனதை நெருடியது.
குற்றாசிற்கு மட்டுமே அபய்தேவ் பட்டாளத்தாரின் உறவினன் இல்லை என்ற உண்மை தெரியும். குற்றாசு, ‘புதுசா வந்திருக்க பட்டணத்து ஆளு கூட சேந்துகிட்டு திட்டம் தீட்டுறாவ’ என்று கூறியதில் இருந்தும், அபய்தேவ் பேச்சில் இருந்தும் பட்டாளத்தாரின் உறவினனான அபய்தேவும் அபினவும் நண்பர்கள் என்றே காமாட்சி நினைத்துக் கொண்டிருக்கிறார்.
அபய்தேவ், “இன்னைக்கு ஒரு நாள் மட்டும், இங்கே நடந்ததை அமிர்தா அப்பா கிட்ட சொல்லாதீங்க ப்ளீஸ்.. என்னை நீங்க சந்திக்கவே இல்லைனு நினைச்சுக்கோங்க.. நான் உங்க ஊர் நன்மைக்காகவும், கனகப்ரியா நன்மைக்காகவும் தான் சொல்றேன்.. ப்ளீஸ்” என்று கெஞ்சும் குரலில் கேட்டான்.
அவர் யோசனையுடன் சிறிது தயங்கவும்,
அவன், “இன்னைக்கு ஒரு நாள் தான்.. சொல்லப் போனால் ஒரு நாள் கூட இல்லை.. அரை நாள் தான்.. நாளைக்கு விடியற் காலையில் கூட சொல்லிக்கோங்க ப்ளீஸ்” என்றான்.
அவர் அப்பொழுதும் தயங்க, அவன், “என் அம்மா மேல சத்தியம் செய்து சொல்றேன் ஆன்ட்டி.. என்னால் யாருக்கும் தீங்கு நேராது.. உங்க ஊருக்கு நன்மை தான் கிடைக்கும்” என்றான்.
அவன் அன்னை மீது சத்தியம் செய்ததும் அவரது தயக்கம் நீங்கியது. மேலும் அவனது பேச்சிலும் பார்வையிலும் உண்மையை கண்டவர், “செரி தம்பி.. இன்னிக்கு ஒருநா பொழுது அவுராண்ட நானா யதுவு சொல்ல மாட்டேன்” என்றார்.
அவன் உதட்டோர சிறு மென்னகையுடன், “நீங்களா சொல்ல மாட்டீங்க, அங்கிள் கேட்டா மறைக்காம எல்லாத்தையும் சொல்லிடுவீங்கனு சொல்றீங்க!” என்றான்.
அவனது புத்திக்கூர்மையை மெச்சும் பார்வை பார்த்தவர் தானும் சிறு மென்னகையுடன், “ஆமா” என்றார்.
“இது போதும் ஆன்ட்டி” 
“ரெண்டு ஒதவி சொன்னீங்கெளே தம்பி!” 
“ஹ்ம்ம்” என்றபடி கனகப்ரியாவை கை காட்டியவன், “இவங்களை உங்க வீட்டில் தங்க வச்சிக்கோங்க.. அது யாருக்கும் தெரிய வேண்டாம்.. தெரிந்தால் தானே ஏன் எதற்குனு கேள்விகள் வரும்! இதுவும், இன்னைக்கு ஒரு நாள் போதும்.. நாளைக்கு அங்கிளோட அனுமதியுடன் இவங்களை நான் என்னுடன் ஊருக்கு கூட்டிட்டு போய்டுவேன்” என்றான்.
அவன் நாளை கிளம்புவதாக கூறவும் அமிர்தவள்ளியின் மனம் அனிச்சம் பூவாக வாடியதோடு சொல்லத் தெரியாத வலியும் எழுந்தது. அகத்தை முகத்தில் காட்டாமல் இருக்க பெரிதும் பாடுபட்டாள்.
காமாட்சி, “மத்தவுகெ கேக்க மாட்டாவ, அவுரு கேப்பாரே” என்றார்.
“என் கணிப்பு சரியா இருந்தால் இவங்க காதல் விஷயம் அங்கிளுக்குத் தெரிந்து தான் இருக்கும்.. அபி விஷயத்தைச் சொல்லித் தான் உதவி கேட்டு இருப்பான்.. அவர் சரிப்படாதுனு சொல்லி அவனை கிளம்ப சொல்லி இருப்பார்.. அதுக்கு அப்புறம் தான் குற்றாசு அபியை தாக்கி இருக்கணும்..” என்றான்.
அன்று அபினவ் சோகமான முகத்துடன் தங்கள் வீட்டை விட்டு வெளியேறியதை பார்த்து இருந்தவர், “வாய்ப்பு இருக்குது” என்றார்.
“அப்போ நமக்கு வேலை ஈஸி தான்.. ஜஸ்ட் குற்றாசு கிட்ட இருந்து இவங்களை காப்பாத்த கூட்டிட்டு வந்ததா சொல்லுங்க” 
“நா அவுருகிட்டக்க பொய் சொல்லமாட்டேன்” 
“நீங்க சொல்லப் போறது பொய் இல்லை ஆன்ட்டி, உண்மை.. நிஜமாவே இப்போ இவங்க உயிருக்கு ஆபத்து தான்.. இவங்க இங்கே இருந்தால், இவங்க அம்மாவோ அண்ணனோ..” என்று சொல்லிக் கொண்டிருந்தவன் அமிர்தவள்ளியின் பார்வையில் சட்டென்று பேச்சை நிறுத்தினான். 
தோழியின் முகமும் அகமும் வலியுடன் வாடுவதை பொறுக்க முடியாமல் அமிர்தவள்ளி அவனிடம் லேசாக மறுப்பாக தலையசைத்து ‘போதும்’ என்பது போல் பார்த்தாள்.
இவர்களின் புரிதலை கண்டு காமாட்சியின் மனம் பதறியது.
கசப்பான புன்னகையை உதிர்த்த கனகப்ரியா, “நீங்க சொல்லாங்காட்டியும் அதே உண்ம.. ராவு சோத்துலியே ஆத்தா வெஷம் வெச்சிபுடும்” என்றாள்.
காமாட்சி முறைப்புடன், “என்னா பேச்சு பேசுற! ஓ வாயில வசம்பைதா தேய்க்கோனும்” என்று அதட்டினார்.
அவளோ விரக்த்தியாக சிரித்தபடி, “ஒங்களுக்கும் நா சொல்லுறதுதா உண்மனுட்டு திரியும்” என்றாள்.
“நீயி மொத கெளம்பு.. ஓ ஆத்தாளையு, இவ அய்யனையு நா கையாண்டுகிடுறே” என்றவர் அபய்தேவைப் பார்த்து, “நீங்க சொல்லுறதுதே செரி தம்பி” என்றுவிட்டு அமிர்தவள்ளியை பார்த்து, “கனகாவோட உடுப்பு நாலனத்தை எடுத்துகிட்டு கெளம்பு” என்று முடித்தார்.
அபய்தேவ் அமிர்தவள்ளியை பார்த்து, “நீ டிரஸ் எடுத்து வை.. அதுக்குள்ளே இவங்களை அபி கிட்ட பேச வச்சிடுறேன்” என்றபடி அன்னைக்கு காணொளி அழைப்பு விடுத்தான்.
மறுபடியும் காமாட்சியின் மனம் அடித்துக் கொண்டாலும் ‘நாளிக்கு இந்த தம்பி கெளம்பிடும்’ என்று கூறி தன்னைத் தானே தேற்றிக் கொண்டார். அவரது மகளை சுருட்டிக் கொண்டு செல்ல, திருநெல்வேலியில் இருந்து ஒரு பயல் வரப்போவதை பாவம் அவர் அறியவில்லை.
அழைப்பை எடுத்த சிவகாமி, “டேய் எருமமாடு.. ச.. பயில்மாடு பாஹுபலி, சொன்னதை எதையாச்சும் செய்றியாடா? தினமும் ரெண்டு வேளை போன் பேசுறேன்னு சொன்ன தான! நீ தான் பேசலைனா என்னோட கட்டப்பாவையும் பேச விடாம ஒன்னோட வார்த்தை ஜாலத்தால் கட்டிபோட்டு வச்சிருக்க.. உன்னோட மனசுல என்ன தான்டா நினைச்சிட்டு இருக்க..” என்று திட்டிக் கொண்டே போக, அவரை தடுக்க முயற்சித்து தோற்ற அபய்தேவ் சட்டென்று கைபேசியை ஒரு சுற்று சுற்றி அறையில் இருப்போரை காட்டிவிட்டு தன்னிடம் நிறுத்தினான்.
மற்றவர்களை பார்த்ததும் கப்-சிப் என்று வாயை இறுக்கமாக மூடிக் கொண்ட சிவகாமி மனதினுள், ‘அவனை பேச விடாம தம் கட்டி மூச்சு விடாம பேசினது வேஸ்ட்டா போச்சே! மண்டை மேல இருக்க கொண்டையை மறந்த மாதிரி அவன் சூழ்நிலையை யோசிக்காம விட்டுட்டேனே! சும்மாவே ஆடுவான் இப்போ சலங்கை வேற கட்டி விட்டுட்டேனே! ச.. ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாய் போய்விட்டதே சிவகாமி!’ என்று புலம்ப, அவர் அருகே அமர்ந்து இருந்த அபய்தேவின் தந்தையோ சத்தம் வராமல் சிரித்துக் கொண்டு இருந்தார்.
முறைத்துக் கொண்டு நின்ற மகனின் முன் சிரிக்கும் கணவரை முறைக்க முடியாமல் கணவரின் தொடையில் நறுக்கென்று கிள்ள, அவர் கத்த முடியாமல் திணறியபடி வலியை பொறுத்துக் கொண்டார். மகனை பார்த்தபடியே ஆள்காட்டி விரலை மட்டும் ஆட்டி கணவரை மிரட்டினார்.
உள்ளே உள்ளம் கதறினாலும் வெளியே ‘இப்போ என்னடா?’ என்பது போல் கெத்தாக பார்த்தார்.
“உங்க கட்டப்பா மட்டும் தான் உங்களை ராஜமாதானு சொல்லுவான்.. நீங்க ஒரு நாய் சேகருனு மத்தவங்களுக்கு தெரியும்” என்றான் முறைப்புடன் மெல்லிய குரலில். 
“என்ன டா?” என்று அவர் புரியாமல் விழிக்க,
அபய்தேவின் தந்தை சிரிப்புடன், “அதான்மா பில்டிங் ஸ்டராங் பேஸ்மென்ட் வீக்னு சொல்றான்.. அதாவது என்ன தான் நீ கெத்தா பார்த்தாலும் நீ ஒரு வெத்து பீஸுனு அவனுக்கு தெரியுமாம்” என்றார்.
கணவரை பார்த்து முறைத்தபடி கையால் வாயை மூடிக் காட்டியவர் எதுவும் நடக்காதது போல் மகனிடம், “வீட்டுல கிட்சன்ல விம் போட்டு தேய்க்க சொன்னா இங்க வந்து தேய்ச்சிட்டு இருக்கார்டா உங்க அப்பா.. சரி அதை விடு” என்றவர், “இருந்தாலும் தாயை நாய் கூட கம்பேர் செய்திருக்கக் கூடாது.. அதுவும் எல்லார் முன்னாடியும்” என்றார்.
“நான் அப்படியா கம்பேர் செய்தேன்?” என்று பல்லை கடித்தபடி கேட்டவன், “இப்போ நீங்க சொன்னதில் தான் இங்க இருக்கிறவங்களுக்கு கேட்டு இருக்கும்” என்றான்.
“அடடா வட போச்சே! இப்படி தன் சேதம் செஞ்சுக்கிட்டியே சிவகாமி!” 
“உங்களை அப்புறம் கவனிச்சுக்கிறேன்.. இப்போ போனை அபி கிட்ட கொடுங்க” 
“அதுக்கு நான் ஹாஸ்பிடலில் இருக்கணுமே?” 
“இப்போ கொடுக்க போறீங்களா இல்லையா?” 
“அதுக்கு நான்……” 
“நீங்களும் வெள்ளை சுவரும் மட்டும் தான் தெரிந்தாலும் நீங்க ஹாஸ்பிடலில் தான் இருக்கிறீங்கனு எனக்கு தெரியும்.. நம்ம வீட்டு சோபாவில் எந்த இடத்தில உட்கார்ந்தாலும் பின்னாடி போட்டோ தெரியும்” 
“ஏன்! நான் பெட்ரூமில், பெட்டில் உட்கார்ந்து இருக்க கூடாதா?” 
“அம்மா!!!!” என்று பல் இடுக்கில் அவன் உச்சரிக்க,
சிவகாமியோ அலட்டிக் கொள்ளாமல், “என்னடா பல்லு வலியா?” என்று கேட்டார்.
சிவகாமி செய்த அக்கப்போரில் காமாட்சியும் கனகப்ரியாவும் மெலிதாக சிரிக்க, அமிர்தவள்ளி வாய்விட்டு சிரித்தாள்.
அபய்தேவ் முகத்தை திரும்பி அவளை முறைக்க,
அவளோ அதை சிறிதும் கண்டு கொள்ளாமல் அவனது கைபேசியை பிடுங்கி சிவகாமியிடம் மென்னகையுடன், “வணக்கம்ங்க.. நான் அமிர்தவள்ளி.. ஒங்க மருமக கனகப்ரியாக்கு ஒங்க மவனுகிட்டக்க பேசனுமாம்” என்றாள். 
அவள் சொன்னதை கேட்டு ‘நை’ என்று விழித்தவர், அபினவிடம் தெரிந்த பரபரப்பில் சட்டென்று விளையாட்டுத்தனத்தை கைவிட்டவராக அவன் அருகே விரைந்தபடி, “என்ன அபி? என்ன வேணும்?” என்று கேட்டார்.
அவன் செய்கை மூலம் கைபேசியை கேட்கவும் அவர் யோசனையுடன் அதை அவனிடம் கொடுத்தார்.
திரையில் கண்ணில் தேடலுடன் அபினவை கண்டதும் அமிர்தவள்ளி கைபேசியை தோழியிடம் கொடுத்தாள்.
சில நொடிகள் இருவரின் கண்கள் மட்டுமே பேசிக் கொண்டது. இருவரின் கண்ணிலும் காதலும் தவிப்பும் சரிசமமாக கலந்து இருந்தது. மெத்தையில் மருத்துவமனை உடையில் படுத்திருந்த அபினவை கண்ட கனகப்ரியாவின் கண்ணில் கூடுதலாக வேதனை கலந்து இருந்தது.
அவளது கண்ணில் வேதனையை கண்டவன் சைகை மூலம் தனக்கு எதுவும் இல்லை என்றான்.
அபய்தேவ் கூறியது நினைவிற்கு வரவும் முகத்தை இயல்பாக வைத்தவள் சிறு மென்னகையுடன், “வாத்தி ஆரையும் விரும்புறீகெளா?” என்று கேட்டாள்.
சட்டென்று அவனது முகத்தில் இயல்பான புன்னகை அரும்பியது. அவள் தன்னிடம் காதலை சொன்ன தருணம் நினைவிற்கு வந்தது.
ஆம்! காதலை சொன்ன தினத்தில் இப்படி தான் அபினவிடம் கனகப்ரியா பேச்சை ஆரம்பித்தாள்.
அன்று அவள் இவ்வாறு கேட்டதும், அவன் சிறு பதற்றத்துடன், “இல்லையே! இல்லை.. ஏன் கேட்கிறீங்க?” என்று கேட்டான்.
இடுப்பில் கைவைத்தபடி அவனை முறைதவள், “அப்போ என்னிய நீங்க காதலிக்கலியா?” என்று கேட்டாள்.
அவன் பதில் சொல்வதறியாது திருதிருவென்று விழிக்க,
அதை காதலுடன் ரசித்து பார்த்தவள், “வாத்தி என்னிய கட்டிக்கிறீகெளா? ஒங்கள கண்கலங்காம நா பாத்துக்கிடுறே” என்றாள். 
முதலில் அதிர்ச்சியுடன் பார்த்தவன் பின் சத்தமாக சிரித்தபடி, “சரி” என்றான்.
இன்று அவள் அதே கேள்வியை கேட்க, அவன் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினான்.
அன்று போலவே, “வாத்தி என்னிய கட்டிக்கிறீகெளா?” என்று கேட்டவள், “ஒங்கள கண்கலங்காம நா பாத்துக்கிடுறே” என்றபோது கண்ணீரை கடினப்பட்டு அடக்கினாள். ‘ஆனா ஒங்கள நா பாத்துக்கல.. இந்த பாவியாலதே ஒங்களுக்கு இந்த நெல’ என்று அவளது மனம் ஊமையாக கதறியது.
ஆனால் அபினவோ மறுப்பாக தலை அசைத்தான்.
அவள் சிறு அதிர்ச்சியுடன் பார்க்க, அவன், ‘இந்த ஊமை உனக்கு வேண்டாம்’ என்று செய்கையில் கூறினான்.
அவன் கூறியது புரியாமல், “என்ன சொல்லுறீகெ? யனக்கு புரியிலயே!” என்று சிறிது பதறியபடி தவிப்புடன் கூறினாள்.
அவன் திரும்பவும் அதையே செய்கை செய்ய,
‘ஏ பேச மாட்டிக்காவ?’ என்று மனதினுள் நினைத்தவள் அபய்தேவை பார்த்து, “ஒங்களுக்கு புரியுதா?” என்று கேட்டபடி கைபேசியை அவன் பக்கம் திருப்பினாள்.
அபினவ் மறுபடியும் அதையே செய்கையில் கூற, அபய்தேவ் முறைப்புடன், “இன்னும் மூணு வாரத்தில் உன்னால் பேச முடியும்.. அப்புறம் கொஞ்ச நாளில் பழையபடி பேசுவ” என்றான்.
அபினவ் மறுப்பாக தலை அசைக்க, அபய்தேவ், “பாசிடிவ்வா யோசி அபி” என்று அதட்டினான்.
இங்கே கனகப்ரியா அதிர்ச்சியுடன் தோழியை பார்த்து, “அவு.. அவுரு கொரலுக்கு.. என்னாச்சி?” என்று சிறு திணறலுடன் கேட்டாள்.
அமிர்தவள்ளி, “ஒன்னுமாகல.. குற்றாசு தாக்கியதுல அவுரோட குரவளை லேசா சேதமடைஞ்சு இருக்குவுது.. ஒரு மாசம் மட்டு தா பேச முடியாது.. பொறவு கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சு பழையபடி பேசுவாரு புள்ள.. நீயி தா அவுருக்கு தெகிரியம் சொல்லனும்” என்றாள்.
சட்டென்று தவிப்பையும் வேதனையையும் மறைத்துக் கொண்டு திடமாக முகத்தை வைத்துக் கொண்ட கனகப்ரியா கைபேசியை அபய்தேவிடம் இருந்து வாங்கி பேசினாள்.
“ஒங்களுக்கு பேச்சு வரும்.. அத நீங்க மொத நம்பனும்” என்று திடமான உறுதியான குரலில் கூறினாள்.
அவன் இயலைமையுடன் அவளைப் பார்க்க,
அவள் இன்னும் தீர்க்கமாக முகத்தை வைத்தபடி, “யனக்கு நம்பிக்கை இருக்குது அத்தான்.. ஒங்களுக்கு பழையபடி பேச்சு வரும்.. நீங்க யனக்கு பாடம் எடுப்பிகெ” என்றாள்.
அவளது ‘அத்தான்’ என்ற அழைப்பில் அவனது கண்கள் ஒளிர்ந்தாலும் அவளது இந்த முதல் அழைப்பை அவனால் ரசிக்க முடியவில்லை.
“ஒங்க பயம் யன்ன? நூத்துல ஒரு சதவிதமா, ஒங்களுக்கு பேச்சு சரியா வரலனா அப்புடிங்கெறது தான! ஒங்களுக்கு பேச்சே வரலனா கூட ஒங்களுக்கு சேத்து நா கொரலா இருந்துட்டு போவுறேன்” என்றாள். 
அவள் கூறியது அபினவ் மனதிற்கு இதமாக இருந்தாலும், ‘நான் உனக்கு வேண்டாம்’ என்பது போல் நிராசையுடன் அவளைப் பார்த்தான்.
அதை புரிந்து கொண்டவள் வேண்டுமென்றே, “யனக்கு புரிஞ்சிபுடுச்சி” என்று ஆரம்பித்து, “என்னியாலதே ஒங்களுக்கு இப்புடி ஆகிபோச்சுனுட்டு என்னிய வேணாமிட்டு சொல்லுறியளா அத்தான்?” என்று வருத்ததுடன் கேட்டாள்.
அவன் அவசரமாக மறுப்பாக தலை அசைத்தான்.
“இல்ல.. யனக்கு திரியும்.. அதான்..” 
அவன் முறைப்புடன் மறுக்க, அவள், “அப்போ என்னிய கட்டிக்கிறீங்கெளா?” என்று அவனை மடக்கினாள்.
அவன் இன்னும் அதிகமாக முறைக்க,
அவளும் முறைப்புடன், “ஒழுங்கு மருவாதயா என்னிய கட்டிக்கோவ, இல்லனாக்க நா ஒங்களுக்கு தாலி கட்டிபுடுவேன்” என்று மிரட்டினாள்.
அவள் கூறிய விதத்தில் லேசாக சிரிப்பு வந்தாலும் சிரிக்காமல் முறைத்தபடியே இருந்தான்.
“இது ஆவுறதுக்கில்ல.. ஹலோ அத்த! ராஜமாதா!” என்று கத்தியவள், “எம்புட்டு நேரதா அதிர்ச்சியிலேயே இருப்பிவ? சட்டுபுட்டுனுட்டு எங்க கல்யாணத்துக்கு நாள் குறிங்கெ” என்றாள்.
அபினவ் இவளை முறைக்க, அதை இவளும் சரி, சிவகாமியும் சரி கண்டு கொள்ளவில்லை.
கைபேசியை வாங்கிய சிவகாமி மென்னகையுடன், “எனக்கு ஒரே ஒரு கண்டிஷன்.. அதுக்கு நீ சரி சொன்னா உடனே உங்க கல்யாணத்துக்கு நாள் பார்த்திடுறேன்” என்றார்.
இவள், “யன்ன அத்த?” என்று வினவ,
இவள் அருகே வந்து தன் முகத்தை சிவகாமியிடம் காட்டிய அமிர்தவள்ளி, “பாஹுபலி கூட்டணியில சேராம ராஜமாதா கூட்டணியில சேரோனும்.. செரியா?” என்றாள் புன்னகையுடன்.
சிறு ஆச்சரிய பார்வை பார்த்த சிவகாமி விரிந்த புன்னகையுடன், “சரி” என்றார்.
அமிர்தவள்ளி அபய்தேவை நக்கலாக பார்க்க, அவனோ அலட்டிக்கொள்ளாமல் தோள் குலுக்கினான்.
காமாட்சி, “வள்ளி அதிகபிரசங்கி வேல பாக்காத.. இங்குட்டு வா.. அவிங்கெ பேசிக்கட்டும்” என்றார்.
அன்னையின் பார்வை மற்றும் குரலில் தெரிந்த வித்தியாசத்தில் அமிர்தவள்ளியின் மனதினுள் அபாய மணி அடித்தது. அன்னை தன் மனதை கண்டுக் கொண்டாரோ என்ற சந்தேகம் அவளுள் எழுந்தது.
சட்டென்று அமைதியான குரலில், “நீங்கெ பேசுங்கெ” என்றுவிட்டு கையில் இருந்த பையுடன் அன்னை அருகில் சென்று நின்றுக் கொண்டாள். (கனகப்ரியா அபினவுடன் பேசிய பொழுது அவளது உடைகளை எடுத்து வைத்திருந்தாள்)
அபய்தேவ் மனதிலும் அந்த சந்தேகம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் நின்றான்.
சிவகாமி வரவழைத்த கறார் குரலில், “என்ன சொல்ற? நாள் பார்க்கட்டுமா?” என்று கேட்டார்.
கனகப்ரியா திருதிருவென்று விழிக்கவும், சிவகாமி மென்னகையுடன் பரிவான குரலில், “என்னடா?” என்றார்.
கனகப்ரியா மெல்லிய குரலில், “அது.. வந்து.. இவுக தான என்னிய சிறை மீட்டாவ.. அதீன்..” என்று தயங்கியபடி நிறுத்தினாள்.
வாய்விட்டு சிரித்த சிவகாமி குதுகலத்துடன், “அடேய் பாஹுபலி! ஒத்த வார்த்தையில என் மருமக உன்னை குரங்குனு சொல்லிட்டா” என்றார். 
“அய்யோ இல்ல.. நா அப்புடி சொல்லலிங்கெ” என்று கனகப்ரியா பதற,
சிவகாமி சிரிப்புடன், “நீ தான அவன் உன்னை சிறை மீட்டான்னு சொன்ன! சீதையை சிறை மீட்டது யாரு?” என்று கேட்டவர், “இப்போ புரியுதா?” என்றார்.
அப்பொழுதும் கனகப்ரியா பதில் சொல்வதறியாது பரிதாபமாக தோழியை திரும்பி பார்க்க,
அபய்தேவ் மென்னகையுடன் கையை நீட்டியபடி, “இங்க கொடுங்க.. நான் பேசிக்கிறேன்” என்றான்.
கனகப்ரியா சிவகாமியையும் அபய்தேவையும் மாறி மாறி பார்க்க,
சிவகாமி மென்னகையுடன், “சும்மா விளையாடினேன் டா.. போனை அபய் கிட்ட கொடு” என்றார்.
அதன் பிறகு தான் கைபேசியை அவனிடம் கொடுத்தாள்.
கைபேசியை வாங்கிய அபய்தேவ், “டாக்டர் எப்போ டிஸ்சார்ஜ்னு சொல்லி இருக்காங்க?” என்று கேட்டான்.
“இன்னைக்கு சாயுங்காலம் பெரிய டாக்டர் பார்த்துட்டு சொல்லுவார் டா.. மோஸ்ட்லி இன்னைக்கு இருக்கும்னு நினைக்கிறேன்” 
“ஹ்ம்ம் சரி ம்மா, நான் அப்புறம் பேசுறேன்.. அபியை கவனிங்க” 
“நான் பார்த்துக்கிறேன் டா” என்றவர், “ப்ரியா தைரியமா இருக்கணும்” என்றார்.
அபய்தேவ் அவள் பக்கம் கைபேசியை திருப்பவும், “செரிங்க அத்த” என்றாள்.
கைபேசியை தன் பக்கம் திருப்பிய அபய்தேவ், “சரி.. பை” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவன் கனகப்ரியாவிடம், “தேங்க்ஸ்” என்றான்.
உடனே அவள், “நான் தா ஒங்களுக்கு நன்றி சொல்லோனும்” என்றாள்.
“இல்லைங்க, அபியோட பலம் பலவீனம் ரெண்டும் நீங்க தான்.. உங்க நல்லதுக்காக உங்களை பிரியும் முடிவை அவன் எடுத்தாலும் நீங்க இல்லாம அவன் இல்லை.. அதை சரியா புரிஞ்சதோட, கொஞ்சம் கூட சுயநலம் இல்லாம அவனை விட்டு தர மாட்டேன்னு சொன்னீங்க.. ரியலி யூ ஆர் கிரேட்” என்றான்.
“நீங்க பாராட்டுற அளவு நா எதுவும் செய்யில.. யனக்கு அவுரு வேணும் என்றதில நா சுயநலவாதிதீன்.. காதலில் சுயநலம் இருக்கலாம், காதலுக்குள் தான் சுயநலம் இருக்க கூடாது.. அவுரு நல்லா இருக்கார், தற்காலிகமா பேச முடியல அம்புட்டுதே.. இத்த பெருசா பேசாதீவ..” என்றாள்.
மென்னகையுடன் கட்டை விரலை காட்டி, ‘சரி’ என்பது போல் தலையை அசைத்தவன், காமாட்சியை மட்டும் பார்த்து, “சரி நான் கிளம்புறேன்.. நீங்க பார்த்துகோங்க ஆன்ட்டி” என்று கூறி விடை பெற்றான்.

மாயம் தொடரும்…

Advertisement