Advertisement

அமிர்தவள்ளி சென்று சிறிது நேரம் கழித்தே அபய்தேவும் சசிதரனும் கிளம்பினர். அவர்கள் மாந்தோப்பை விட்டு வெளியே வந்த பொழுது, அவர்கள் எதிரே செந்தில்வேலும், ஒரு வேலையாளும் வந்தனர்.
செந்தில்வேல் மென்னகையுடன், “பட்டணத்து தம்பிகெளுக்கு எங்கூரு புடிச்சி இருக்குங்கெலா?” என்று கேட்டார்.
அபய்தேவும் மென்னகையுடன், “அருமையான ஊர் சார்” என்றான்.
“அதென்ன சாரு மோருனுட்டு! மொற வெச்சி அழைங்கெ தம்பி” என்றவர், “பட்டாளத்தான் யனக்கு தம்பி மொறத்தேன்.. மாமானே கூப்பிடுங்கெ” என்றார்.
சசிதரன், ‘ஜஸ்ட் மிஸ்.. அண்ணி தங்கை ஆகலை’ என்று முணுமுணுக்க, அபய்தேவ் அவர் அறியாமல் அவன் கையைப் பிடித்து அழுத்தினான்.
வலியை வெளியே காட்ட முடியாமல் சசிதரன் பல்லைக் கடித்து சிரித்தபடி நெளிய,
அவர், “என்ன தம்பி அவுசரமா ஒதுங்கனுங்கெலா?” என்று கேட்டார்.
அவன் புரியாமல் முழிக்க, அவன் கையை விட்ட அபய்தேவ், “ரெஸ்ட்ரூம் போகனுமானு கேட்கிறார்?” என்றான்.
சசிதரன் அவசரமாக, “இல்லை.. அதெல்லாம் இல்லை” என்றான்.
“பொறவு ஏ நெளிஞ்சீவ? 
அவன் மீண்டும் பல்லைக் காட்டி சிரித்தபடி, “சும்மா தான்” என்றான்.
வேலையாள், “இதேன் பட்டணத்து காப்ராவோ என்னவோ ஐயா!” என்றான்.
வேலையாள் கூறியது புரியாமலேயே சசிதரன் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினான்.
செந்தில்வேல், “என்ன காப்ராவோ! இங்குட்டுலா வெடல(விடலை) பயலுவல இருந்து முதுமகெனுவ வர ஊர் விதிய மீறுவதில்ல” என்றார்.
மெல்ல வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவது போன்ற அவரது பேச்சில் அபய்தேவ் புருவம் உயர்த்திப் பார்த்தான்.
“யாமத்துல எமவீதியாண்ட போனீவ போல!” என்றபோது செந்தில்வேலின் குரலில் அத்தனை நேரம் இருந்த இலகுத் தன்மை நீங்கி இருந்தது.
அபய்தேவ் வரவழைத்த பணிவான குரலில், “அது.. சும்மா ஒரு ஆர்வத்தில் போனேன்” என்றான்.
“வேண்டா வேல யெல்லா பாக்காதீவ” என்றபோது அவர் குரலில் சிறு மிரட்டல் இருந்தது.
“இப்படியே எத்தனை நாள் பேய் பயத்தில் இருக்கப் போறீங்க?” என்று அபய்தேவ் பணிவுடன் தான் கேட்டான்.
“எங்க ஐயாவயே எதித்து பேசுறீகெளோ!” என்று வேலையாள் எகுறிக் கொண்டு வர,
“கடம்பா” என்று அவனை அடக்கிய செந்தில்வேல் வெளிப்படையாவே சிறு கோபத்துடன், “அந்த கவல ஒங்களுக்கு வேணா தம்பி.. பட்டறைய போட வந்தாக்க, அத மட்டு பாத்துப்புட்டு ஒழுங்கா ஊர் போயி சேருங்கெ” என்றார்.
அபய்தேவோ அவரைத் தீர்க்கமாக பார்த்தபடி நிதான குரலில், “மிரட்டுறீங்களா?” என்று கேட்டான்.
“மிரட்டல் இல்லை, எச்சரிக்கை.. பாத்து சூதானமா இருந்துக்கோவ” என்றவர் வேலையாளிடம், “வாலே” என்றபடி முன்னால் நடந்தார். வேலையாள் இவர்களை மிரட்டுவது போல் பார்த்துவிட்டு நகர்ந்தான்.
சசிதரன், “என்னணா இப்படி சொல்லிட்டுப் போறார்?” என்றான்.
அவனோ புன்னகையுடன், “விடுடா.. இதெல்லாம் சப்ப மிரட்டல்! நாம போய் ராமையாவை பார்ப்போம்” என்றபடி அவன் தோளில் கைபோட்டு அழைத்துச் சென்றான்.
வேலையாள், “ஐயா அவிங்கெல பாத்தாக்க செரியாப் படல” என்றான்.
“ஹ்ம்ம்.. அவென் அடங்கா காளைங்கறது திண்ணம்.. அவென் கண்ணுல துளி அச்சம் இல்ல” 
“என்னயா செய்யிறது?” 
“அவிங்கெ மேல ஒரு கண்ணு வையிலே.. இப்போ சோலிய பாரு” என்றபடி வேலைகளை சொல்ல ஆரம்பித்தார். 
(இரவு உறக்கத்தின் நடுவில் சிறுநீர் கழிக்க வெளியே வந்த கடம்பன் என்ற வேலையாள் இருவர் எமவீதி முன் நிற்பதைப் பார்த்தான். யாரென்று அவன் உற்றுப் பார்க்கையில் சசிதரன் மயங்கி விழ, அபய்தேவ் அவனைத் தூக்கிக் கொண்டு சென்றதைப் பார்த்தான். விடிந்ததும் செந்தில்வேலிடம் வந்து தான் பார்த்ததைக் கூறி இருந்தான்.)
 
 
அபய்தேவும் சசிதரனும் வயல்வெளிக்கு செல்லும் போது புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
யோசனையுடன் அழைப்பை எடுத்தவன், “ஹலோ.. அபய்தேவ் ஸ்பீகிங்.. யாருங்க?” என்றான்.
அந்த பக்கத்தில் இருந்து பதில் இல்லை என்றதும், இவன் மீண்டும், “ஹலோ.. யாருங்க?” என்று கேட்டான்.
“ஹலோ” 
“ஓய் அமுதசுரபி!” என்று அவன் உற்சாக குரலில் கூறவும்,
அவள், “ஹ்ம்ம்” என்றாள்.
“போன் செஞ்சுட்டு பேச என்ன தயக்கம்?” 
“ஆருக்கு தயக்கம்?” என்று சீறிக் கொண்டு வந்தது அவள் குரல். 
“அதானே! பேச உனக்கா தயக்கம்! அவுத்து போட்டுட்டு ஆடுவேனானு கேட்டியே!” 
“யோவ்” 
“என்ன!” 
“அதேன் மாப்பு கேட்டே தான” 
“சரி விடு” 
“அத வுடுனுட்டு தா நானு சொல்லுறேன்” 
“ஹ்ம்ம்.. முதல்ல எதுக்கு அமைதியா இருந்த?” 
“அது.. போனு எடுத்து நீயி பேசியதும், யனக்கு புடுச்ச படத்தில வார வசனம் ஒன்னு நாபகம் வந்துச்சி”
 “ஹ்ம்ஹும்.. என்ன ஸீன்?” 
“காக்க காக்க அன்புசெல்வன் இப்புடி தா பேசுவியான்” 
“ஓ! ஆனா நீ டீச்சர் மாயா இல்லையே!” 
“நீயு தா போலீசு இல்ல” 
புன்னகையுடன், “சரி சொல்லு எதுக்கு போன் செஞ்ச? மாமன் கிட்ட பேசாம இருக்க முடியலையோ?” என்றான் உல்லாச குரலில்.
சிறு அதிர்வுடன், “மாமனா!” என்றவள் பின், “ஆருக்கு ஆரு மாமன்?” என்றாள்.
“நான் தான்.. இந்த அமுதசுரபி என்னோட அத்தை மக ரத்தினமாமே!” 
“ஆரு சொன்னது!” 
“உன்னோட அப்பா தான்” 
“என்ன!!!” 
“எஸ்.. அவரை சாரு மோருனுட்டு சொல்லப்பிடாதாம்.. முறை வைத்து தான் கூப்பிடனுமாம்.. அதுவும் அவர் எனக்கு மாமா முறையாம்” 
“ஓ!” 
“என்ன ஓ! மாமானு கூப்பிடு” 
“ஆச தா” 
சற்றே கிறங்கிய குரலில், “ஹ்ம்ம்.. ஆசை தான்” என்றான்.
அந்த குரலும் அவன் கூறிய விதமும் உணர்வு பேரலைகளாய் அவளைத் தாக்க, சிரமத்துடன் மனதை அடக்கியபடி, “என்ன?” என்றாள்.
“நீ சொன்னதைச் சொன்னேன்” 
“நான் என்ன சொன்னேன்?” 
“நீ தானே ஆசை தான்னு சொன்ன” 
“நா சொன்ன அர்த்தம் வேற” 
“எனக்கு உனக்கு ஆசைங்கிற மாதிரி தான் தோனுச்சு” 
“ஒனக்கு தோனலாம் யனக்கு தோனல” 
“அப்படியா?” 
“அப்புடிதேன்” 
“வேற என்ன தோனுச்சு?” 
“என்ன தோனனும்?” 
“அதைத் தான் கேட்கிறேன்” 
“யனக்கு எதுவு தோனல.. ஏ ஒனக்கு ஏதும் தோனுதா?” 
“என்னென்னவோ தோனுது” என்று கிசுகிசுத்தான்.
அவள் மௌனமானாள். 
இவர்கள் உரையாடலில் ஒரு பக்க பேச்சை கேட்டதிற்கே ‘நினைப்பு போய் இப்போ தோனுதா! முடியிலேயே!’ என்று தலையை பிச்சிக்காத குறையாக சசிதரன் அபய்தேவை பார்க்க, இவனை கவனிக்கும் நிலையில் அபய்தேவ் இல்லை. கவனித்தாலும் கொண்டுக்கொள்ளப் போறது இல்லை.
அபய்தேவ் அவளிடம், “என்ன தோனுதுனு கேட்க மாட்டியா?” என்று கேட்டான்.
இதயம் வேகமாக அடித்துக் கொண்டாலும் அதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல், “ஒனக்கு என்ன தோனினா யனக்கு என்ன?” என்றாள்.
“அப்படியா?” 
“அப்புடித்தே” என்றவள், “ஒனக்கு ஏ இம்புட்டு ஆர்வம்?” என்று தூண்டில் போட்டாள்.
அவனோ விலாங்கு மீனாக இல்லாமல் சுறா மீனாக, “எனக்கென்ன ஆர்வம்! எனக்கு ஆர்வம் வரனும்னு நீ ஆர்வமா இருக்குறியோ?” என்று அவளுக்கே துண்டில் போட்டான்.
“ம்க்கும்.. ஆச தா” 
“ஹ்ம்ம்.. ஆசை தான்” 
‘என்ன முதல்ல இருந்தாதாதா!!!!’ என்று மனதினுள் அலறிய சசிதரன், ‘இருக்கிற கொஞ்சூண்டு மூளையை காப்பாதிக்கனும்னா ஓடிடு சசி’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டே சற்று தள்ளி நின்று கொண்டான்.
“ஆருக்கு ஆரு மேல?” 
“யாருக்கோ யார் மேலயோ!” 
“இருந்துட்டு போவட்டும்” 
“அப்படியா?” 
“ஹ்ம்ம்.. ஆருக்கோ ஆருமேலயோ ஆச இருந்தாக்க யனக்கு என்ன?” 
“ஹ்ம்ம்” என்று அவன் கேள்வியாய் கூற, 
“ஹ்ம்ம்” என்று பதிலாய் கூறினாள். 
“இதைச் சொல்ல தான் போன் செஞ்சியா?” 
அப்பொழுது தான், தான் பேச வந்த விசயமே அவள் நினைவிற்கு வர, “எம்புட்டு முக்கியமான வெசயத சொல்ல போனு போட்டே! பேச்ச எங்கெங்கோ கொண்டு போயிட்ட” என்றாள்.
“யாரு நானா! நீ தான் காக்க காக்க சூர்யா ஜோதிகானு பேசின” 
“மறுக்கா பேச்ச தெச திருப்பாதவெ” 
“யாரு நானா?” 
“சுப்.. பேச்சக் கொற!” என்று அவள் அதட்ட,
அவன் மென்னகையுடன், “சரிங்க மேடம்.. சொல்லுங்க” என்றான்.
“அன்னிக்கு நா மயங்கியது நடிப்புதே ஆனாக்க நா பேயைப் பாத்தது உண்ம” என்றாள். 
சட்டென்று தீவிர மனநிலைக்கு மாறியவன், “என்ன சொல்ற?” என்றான்.
“நெசமாதீன் சொல்லுறேயா” 
“பேயை பார்த்தனா? ஏதும் உருவத்தை பார்த்தியா? இல்லை கிணறுக்குள்ள இருந்து கை ஏதும் வெளியே வர மாதிரி பார்த்தியா?” 
“வெள்ளையா ஒரு உருவத்த மரத்துக்கிட்டக்க பாத்தேன்” 
“அது அந்த பரிமளம் மாதிரி தெரிஞ்சுதா?” 
“மொகம்லா பாக்கல.. ஒரு நொடி தா.. மரக்கிளைகளுக்கு ஊடால ஒரு வெள்ள உருவம் வாராப்ல இருந்துச்சிது.. நா திரும்பி வந்துபுட்டேன்” 
அவன் யோசனையுடன், “நல்ல பார்த்தியா?” என்று கேட்டான்.
“பாத்தேன்” 
“நிச்சயமா?” 
“யோவ்” என்று அவள் சிறு கோபத்துடன் கூற,
அவன், “இல்லை.. முகத்தை பார்க்கலைனு சொல்ற.. ஒருவேளை வெள்ளை துணி லைக் வேஷ்டி இல்லை புடவை கூட பறந்து வந்து இருக்கலாமே!” என்றான்.
“துணிக்கும் பேய்க்கும் யனக்கு வித்தியாசம் திரியாதா? அது பேய் தான்.. ஜாதிமல்லி வாசம் கூட வந்திச்சி..” என்றவள், “இத நா அய்யா, கதிர் கிட்டக்க கூட சொல்லல” என்றாள்.
“ஏன்?” 
“கதிரு பேலுவியானுட்டு சொல்லல” 
“என்ன? எனக்கு புரியலை” 
“பயப்படுவானுட்டு சொல்லலன்னுட்டு சொன்னேன்” 
“ஓ” 
“அய்யாவுக்கு நா நடிச்சது திரியும்.. இனி அங்குட்டு நாடி போவ கூடாதுனுட்டு பதறினாவ.. அதேன் சொல்லல.. ஓ தம்பி ஏற்கெனவே பயத்தில இருக்காவ.. அதேன் தோப்புல வெச்சி சொல்லாம போனு போட்டேன்” 
“ஹ்ம்ம்”
 “என்னயா சத்தத்தயே காணும்?” 
“இல்ல யோசிக்கிறேன்” 
“என்ன?” 
“எனக்கு என்னவோ இந்த பேய்க் கதையில் நம்பிக்கை இல்லை” 
“யாமத்தில நீயி எமவீதி உள்ளார போனியா?” 
“இல்லை” 
“பொறவு ஓ தம்பி எத கண்டு மயங்கினாவ?” 
“ட்ரோன் ஒன்னை உள்ளே பறக்கவிட்டு என்னோட மொபைலில் பார்த்துட்டு இருந்தோம், கிணத்துக்குள்ள இருந்து ஒரு கை வந்து ட்ரோனை இழுத்துட்டு போய்டுச்சு.. அதைப் பார்த்ததும் மயங்கிட்டான்” 
“அத பாத்துமா நீயி நம்பல?” 
“ஹ்ம்ஹும்.. இப்பவும் யாரோ இப்படியெல்லாம் செய்ற மாதிரி தான் தோனுது.. பார்க்கலாம்.. உங்க ஊரை விட்டு போறதுக்குள்ள இதைக் கண்டுபிடிக்கிறேன்” 
அப்பொழுது காமாட்சி அவளை அழைக்கவும், “ஆத்தா கூப்பிடுது.. நா வெக்கறே” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவள் கீழே இறங்கிச் சென்றாள். 

 

 
“சசி” என்று அழைத்த அபய்தேவ், அவன் வந்ததும் வயவெளி நோக்கிச் சென்றான்.
சசிதரன், “அண்ணி எதுவும் சொன்னாங்களா?” என்று வினவ,
“இல்லை டா” என்றான். 
“அப்புறம் என்ன யோசனை?” 
“இது வேற” என்றவன் கொண்டு வந்திருந்த எண்மப் படமி(digital camera) கொண்டு சற்று தள்ளி இருந்த வயலைப் புகைப்படம் எடுத்தான்.
புகைப்படம் எடுத்தபடி வயல்வெளிக்கு சென்றவன் முதலில் பாட்டு பாடியபடி வேலை செய்துக் கொண்டிருந்த பெண்மணியிடம் சென்றான்.
“நீங்க பாடுறதை நான் ரெக்கார்ட் செஞ்சிக்கவா? என்று கேட்டான். 
“என்னப்பா சொல்ற?” என்று அந்த பெண்மணி கேட்டார்.
“நீங்க பாடுறதை இதில் படம் பிடிச்சிக்கவா?” 
அவர் வெட்கப் புன்னகையுடன், “நா பெருசா என்னத்த பாடிபுட்டேன்!” என்றார்.
அவர் வெட்கத்தை அழகாக படம் பிடித்தவன் அதை அவரிடம் காட்டினான்.
“ஆத்தி! நானா இது!” என்று இன்ப அதிர்ச்சியுடன் கூவியவர், “அடியே ராக்கு, பேச்சி.. இங்குட்டு வாங்கடி” என்று அழைத்தார்.
அடுத்த நொடி அங்கிருந்த பெண்கள் ஒன்று கூடி அந்த புகைப்படத்தைப் பார்த்து தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
“எங்களையு இப்புடி அழகா படம் புடிங்கெ தம்பி” என்று ஒரு பெண்மணி கூற,
“அதுக்கு நீயி அழகா இருக்கோனும்” என்று இன்னொரு பெண்மணி பதில் கொடுக்க,
மற்றவர்கள் சிரித்தனர்.
“போடி போக்கத்தவளே! ஒனக்குப் பொறாம” 
“பட்டுட்டாலு!” என்று நொடித்தவர், “சட்டியில இருந்தாதேன அகப்பையில வரும்” என்றார். 
அப்பொழுது நடுத்தர வயதில் இருந்த ஆண் ஒருவர் வந்து, “சோலிய பாக்காம இங்கன என்ன அரட்டை வேண்டிகிடக்குவுது?” என்று அரட்டினார்.
“ரெண்டு வார்த்த பேசிபுட்டா ஒமக்கு பொறுக்காதே!” என்று ஒரு பெண்மணி சண்டைக்கு வர,
அவரோ, “ரெண்டு வார்த்தனுட்டு ரெண்டாயிரம் வார்த்த பேசிப்புடுவீங்கெ” என்றார்.
அபய்தேவ், “அய்யோ சாரி சார்.. நான் தான் அவங்க பாடுறதை படம் பிடிச்சுகிட்டானு கேட்டேன்” என்றான்.
“அட என்ன தம்பி! நீங்க என்னாத்துக்கு மன்னிப்பு கேட்டுபுட்டு! இவிங்க இதான் சாக்குனுட்டு அரட்டையடிக்க கெளம்பிடுவாங்கெ” என்றவர் பெண்களைப் பார்த்து, “செரி.. செரி.. போயி சோலிய பாருங்க” என்று விரட்டினார்.
பெண்கள் முணுமுணுத்தபடி களை எடுக்கும் வேலையைத் தொடர்ந்தனர்.
அபய்தேவ் மென்னகையுடன், “நான் அபய்தேவ்.. நீங்க?” என்று கேட்கவும்,
அவர், “ராமையா?” என்றார் மென்னகையுடன்.
சசிதரன், ‘ஆகா! இதான் பழம் நழுவி பாலில் விழுறதா!’ என்று மனதினுள் கூறியபடி அபய்தேவைப் பார்த்தான்.
அபய்தேவ் கண்களை மூடி திறந்து, ‘பொறு!’ என்றான்.
வேலை செய்யும் பெண்களை பார்த்தபடி, “இவங்கலாம் என்ன செய்றாங்க?” என்று கேட்டான்.
“களை எடுக்கிறாங்கெ” 
அவரிடம் பேச்சு கொடுக்கவென்றே தெரியாதது போல், “களைனா?” என்று கேட்டான். 
“நெற்பயிரு ஊடால வளந்திருக்க தேவையில்லாத செடி” 
“ஓ” என்றவன், “இவங்க பாடுறதை நான் எடுத்துக்கட்டுமா?” என்று கேட்டான்.
“தாராளமா” 
அந்த பெண்மணியின் நாட்டுப்புற பாடலை தனது எண்மப் படமியில் பதிவு செய்தவன் ராமையாவிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தான்.
பேச்சின் நடுவே குரலை தாழ்த்தி, “நீங்க உண்மையை தான் சொல்லுவீங்கனு ராம் அங்கிள் சொன்னாங்க.. நிஜமாவே நீங்க பேயைப் பார்த்தீங்களா?” என்று கேட்டான்.
“ஆமா தம்பி” என்று குரலை தாழ்த்திக் கூறியவர், “யே கூட்டாளி கைய புடிச்சு இழுத்ததப் பாத்தேன்.. இப்ப நெனைச்சாக்க கூட யே ஒடம்பு பதறுது” என்றவரின் உடல் சிலிர்த்தது.
“என்ன சொல்றீங்க? உங்க நண்பரை பேய் இழுத்துட்டு போச்சா? ஆனா உங்களை தாக்கலையா?” 
“நா எமவீதி உள்ளார போவல.. ஆனா கணேசன் பேய் இல்லனுட்டு நிரூபிக்க உள்ளார போயிட்டு நல்லபடியா திரும்பி வாரேனுட்டுப் போனான்.. உள்ளார போனவென் அந்த கெணத்த எட்டிப் பாத்தான்.. அப்ப ஒரு கையி வந்து அவென கெணத்துக்கு உள்ளார இழுத்துகிடுச்சி.. அலறிகிட்டு உள்ளார விழுந்தவெ சத்தம் அரை நிமிசத்தில நின்னதும் யனக்கு ஆடிபுடுச்சு.. அதிர்ச்சியிலு, பயத்திலு நா அப்புடியே நின்னப்ப ஒரு வெள்ள உருவம் என்னிய பாக்க வாரவு நா ஓடியாந்துட்டே” 
“அந்த வெள்ளை உருவம் எங்க இருந்து வந்துச்சி?” 
“அது.. கெணத்துக்குள்ளார இருந்து தா வந்துச்சினுட்டு நெனைக்கறே”
 அப்பொழுது ஒருவர் அவரை அழைக்கவும், “செரி தம்பி பொறவு பாக்கலா” என்றுவிட்டு சென்றார்.
                              விளக்கம்
காப்ரா       –  காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடைய / நவநாகரிகமான (Fashionable)
விடலை     – பதினாறு வயதான ஆண்
முதுமகன்   – முப்பது வயதுக்கு மேலான ஆண்
அங்குட்டு நாடி – அந்த பக்கம்

Advertisement