Advertisement

மாயம் 1

புலர்ந்தும் புலராத அழகான வைகறை வேளையில் அந்த சிற்றூர் மொத்தமும் விழிக்கத் தொடங்கியது. சில வீடுகளில் குமரிகள் வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருக்க, அவர்களை ரகசியப் பார்வை பார்த்தபடி சில இளைஞர்கள் வேப்பம் குச்சியினால் பல்லை துலக்கியபடி கொலக்காடு(கொல்லைக்காடு) நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
மெல்ல கதிரவன் தனது தங்க கதிர்களால் ஒளி வீச, அந்த சிற்றூர் அழகோவியமாகக் காட்சி அழித்தது. ஆனால் அந்த சிற்றூரில் ஒரு வீதி மட்டும் இருள் சூழ்ந்த அடர்ந்த காட்டைப் போல் இருந்தது. அந்த வீதி தான் இந்த சிற்றூரின் தற்போதைய பெயர்க் காரணம். ஆம்! ‘மங்கலபுரம்’ என்ற அந்த சிற்றூரின் அழகான பெயர் அந்த வீதியினால் சுற்றுப்புற வட்டார மக்களால் ‘எமபுரம்’ என்று அழைக்கப் படுகிறது. சில உயிர்களைக் காவு வாங்கிய அந்த வீதி ‘எம வீதி’ என்று அழைக்கப்படுகிறது.
சரி சரி எம வீதியைப் பற்றி பிறகு பார்க்கலாம், அங்கே ஊர் தலைவர் வீட்டில் என்ன சத்தம் என்று பார்ப்போம் வாங்க….
“நிதமும் இந்த கழுதக்கு இதே சோலியாப் போச்சுது.. வெள்ளனே முண்டகலப்ப தூக்குமுன்ன இது ஓடிடுது..” என்று ஊர் தலைவர் செந்தில்வேலின் மனையாள் காமாச்சி சத்தமிட,
“என்னத்துக்கு இம்புட்டு சத்தமிடுறவ? யே ராசாத்திய வசவலைனா ஒனக்கு விடியாதோ! நமூட்டு சேவ கூவுதத விட ஒங் கூவல் பெருங் கூவலா இருக்குதே” என்றபடி செந்திவேல் வந்தார்.
கணவரை முறைத்தபடி காமாச்சி, “எல்லா நீர் கொடுக்கும் தெகிரியம் தான்.. வூடு தங்காம ஓடுது.. இன்னைக்கு வாரட்டும், கெரண்டையில ரெண்டு இழுப்பு இழுக்குறதுல, அடுத்து கால் எப்புடி ஓடுது பாக்குதீன்”
“இழுப்ப இழுப்ப! அப்புடியே அப்புனா தெரியும்” 
“சும்மா எகனக்கி மொகன பேசாம ஒம்ம சோலியைப் பாரும்” 
“வாயி ரொம்பத் தான் நீளுது..” 
“பொட்டப் புள்ள அடக்க ஒடுக்கமா வூடு தங்கலனா, வாயி மட்டுமில்ல கையும் நீளும்” 
“எம் புள்ள மேல கைய வச்சுதேன் பாரேன்” 
“நாள பின்ன கல்யாணம் காட்சி பாக்கணுங்காட்டி தானே சொல்லுதீன்! அது புரிலையா ஒமக்கு?”
“யே ராசாத்திக்கு என்ன! அதெல்லா ஜாம் ஜாமினுட்டு நடக்கும்” 
“சொல்லிட்டே இரும்” என்றவர், “இவ ஜோட்டு புள்ளங்கலாம் இப்படியா இருக்குதுங்கெ! குத்த வச்சதும் நல்லதனமா வூட்டுல அடங்கி இருக்குதுகெ தானே! இவ மட்டும் இன்னும் சுத்திட்டு திரியிறா.. அதுவும் சோக்காளிக அம்புட்டும் பசங்கதேன்..
மின்ன சொன்னப்பலாம் குத்த வச்சதும் வூட்டோட இருப்பானுட்டு சொல்லி யே வாய அடைச்சீகெ.. குத்த வச்சு ஒரு வருசமாவியும்…” என்றவரின் பேச்சை இடையிட்ட செந்தில்வேல்,
“புள்ள எதுவும் வெனைய கூட்டுதா? இல்லாங்காட்டி ஆரும் கொற சொல்லுதாகலா?” 
“ஒமக்கு பயந்து ஆரும் வாயி தொறக்குதது இல்ல”
(ஆம்.. காமாட்சி சொல்வது உண்மையே.. ஊர் தலைவரான செந்தில்வேலின் மீது ஊர் மக்களுக்கு மரியாதையும் பயமும் நிறையவே உண்டு. தந்தையின் மறைவிற்கு பின் ஊர் தலைவரான செந்திவேல், ஊருக்கு என்றால் முன்னால் நின்று செய்யும் தாரள மனசுக்காரர், அதே நேரத்தில் கோபமானவரும் கூட. தப்பென்றால் முதலில் அவரது கை தான் பேசும். மகள் இடத்தில் மட்டுமே அவர் சாந்தசொரூபி. அதுவும் அவரிடம் அவர் மகளை யாரும் குறை சொல்லிவிட முடியாது.) 
“எவடி இவ! எம் புள்ள இந்த ஊருக்கே செல்லப் புள்ளடி” 
“ம்..க்கும்” என்று முகவாயை சுழித்த காமாட்சி, “பொட்டப் புள்ளய வளத்திருக்க லட்சணத்த பாருனுட்டு நாக்கு மேல பல்லுப் போட்டு என்னியத் தான் சொல்லுவாகெ” என்றார்.
“அவிங்க கெடக்கிறான்கெ.. பொசங்கட்ட பயலுவ” 
“நான் என்னத்துக்கு சொல்லுதேன்னுட்டு தெரிஞ்சுட்டே இப்படி பேசினாக்க?” 
“சும்மாங்காட்டி பொட்டப் புள்ளன்னு சொல்லாதவ.. நமக்கு பைய, புள்ள எல்லா ராசாத்தி தான்” 
“இப்படி சொல்லிச் சொல்லி தா அவளுக்கு மண்டகனம் ஏறிப்போச்சுது.. யே பேச்ச கேக்குறதே இல்ல” 
“எம் புள்ள தங்கம்.. அன்பா எடுத்து சொன்னாக்க கேட்டுக்கும்.. நீ வசவிட்டே இருந்தா, ஏறுக்கு மாறாதான் செய்யும்” 
காமாட்சி முறைப்புடன், “இப்போ நா சொல்லுதது அய்யனுக்கும் மவளுக்கும் புரியாது.. நாள பின்ன வெசனப்படும் போதுதேன் தெரியும்” என்றார்.
செந்தில்வேல் கோபத்துடன், “புள்ளைக்கு சாபமிடுறியா! மொத வாய கழுவுடி” என்று கூற,
காமாட்சி நெஞ்சில் கை வைத்தபடி, “ஆத்தி! என்ன வார்த்த சொல்லிப்புட்டீகெ” என்றார்.
செந்தில்வேலோ, “இன்னோருகா சொல்லிப் பாரு! வகுந்துடுவேன் வகுந்து” என்று கோபம் குறையாமல் கூறினார். 
பின், “ராசாத்திய கட்டிக்க சீமையில் இருந்து ராசகுமாரன் வருவான்.. சும்மாங்காட்டி சலம்பாம சோலி கழுதையைப் போய் பாரு” என்றார்.               
“நெனப்புத்தேன்” என்று காமாட்சி முறைப்புடன் நொடிக்கவும்,
“எம் புள்ளக்கு என்னவ கொறச்சலு?” என்று செந்தில்வேல் எகிறிக் கொண்டு வந்தார்.
காமாச்சி நாடியை தோள்பட்டையில் இடித்து நொடித்துவிட்டு முணுமுணுப்புடன் சென்றார். 
அதற்கும் செந்தில்வேல், “அங்கன என்ன மொணங்குறவ?” என்று குரல் கொடுத்தார்.
அதே நேரத்தில் வீதியில் வட்டைப்(tyre) போட்டி நடந்துக் கொண்டிருந்தது. பத்தில் இருந்து பதினைந்து வயதில் இருக்கும் சிறுவர்கள் அங்கே குழுமி இருந்தனர்.
“யக்கா வாக்கா வா..”,
“யக்கோவ் விட்டுப்புடாத”,
“டேய் கதிரு இன்னிக்காச்சும் அக்காவை முந்துடா”,
“யக்கா இன்னைக்கும் நீ தா மொத வாரணும்”, என்ற பல குரல்களின் நடுவே மகிழுந்தின் வட்டையை அடித்து ஓட்டியபடி முதலில் வந்த பதினாறு வயது பெண் இலக்கை நெருங்கியதும் வட்டையை அதிவேகமாக அடித்து ஓட்டி, முன்னால் சென்ற வட்டையின் வேகத்திற்கு இணையாக ஓடிச் சென்று அதன் மேல் குதித்தேறி அமர்ந்து சறுக்கிக் கொண்டு இலக்கு கோட்டை அடைந்தாள்.
இப்படி இலக்கை அடைந்து வெற்றி பெறுவது அவளுக்கே உரியதான சிறப்பம்சம். அவளே அந்த வானரக் கூட்டத்தின் தலைவி, செந்தில்வேல் காமாட்சியின் தவப்புதல்வி அமிர்தவள்ளி.
அவளது வெற்றியைக் கண்டு, “ஏய்!!!!” என்று போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் கூச்சலிட்டனர்.
போட்டியில் தோல்வியுற்ற சிறுவர்கள் கூட, “இன்னைக்கும் நீ தா க்கா செயிச்ச” என்று பொறாமையின்றி கூறினர்.
அவள் மென்னகையுடன், “நாளைக்கு முங்கு நீச்சல்ல செயிக்கப் பாருங்கலே” என்றாள்.
சிறுவர்கள் மிதிவண்டியின் வட்டையை ஓட்ட, இவள் மட்டும் மகிழுந்தின் வட்டையை ஓட்டுவாள். மிதிவண்டியின் வட்டையை விட இதை அடித்து ஓட்டுவது சிரமம், இருப்பினும் எப்பொழுதும் முதலில் வருவது அமிர்தவள்ளியே.
“செரி.. செரி.. கருக்கல்ல பாக்கலாம்” என்றுவிட்டு இவள் கிளம்ப,
இவளுடன் வந்த சிறுவன், “யக்கோவ் இப்போ என்னத்துக்கு இம்புட்டு வெரசா ஓடுறவ?” என்று கேட்டான்.
“அய்யா வெள்ளனே தோப்புக்கு போவனுட்டு சொன்னாவுகெ” 
“ஆத்தா வெஞ்சாமரதோடு நிக்கப் போவுது” என்று சிரிப்புடன் கூறினான்.
“அத நா பாத்துக்கிடுதேன்.. நீ மூடிட்டு போலே” என்றபோது வீட்டின் அருகே வந்திருந்தனர்.
சிறுவன் சிரிப்பை நிறுத்தியபடி எச்சரிக்கும் குரலில், “யக்கோவ்” என்றான்.
அந்த சிறுவன் கூறியது போல் காமாட்சி வீட்டின் முற்றத்தில் வெளக்குமாறுடன் நின்று கொண்டிருந்தார். 
அவனைப் பார்த்து தலை அசைத்தவள் பதுங்கியபடி வந்து அவளது வீட்டின் முன் இருந்த மரத்தில் ஏறி கிளை வழியே வீட்டின் முதல் மாடி முற்றத்தில் குதித்து உள்ளே சென்றுவிட்டாள்.
இவ்வூரில் பெரிய வீடு என்றால் இரண்டே வீடுகள் தான். ஒன்று ‘பெரிய வீடு’, ‘மச்சி வீடு’ என்று அழைக்கப்படும் செந்தில்வேலின் வீடு. அதுவும் இவர்கள் வீடு மட்டுமே இரண்டடுக்கு கொண்ட வீடு. இரண்டாவது தளத்தில் பத்துக்கு பத்து பரப்பளவில் ஓட்டுக் கூரை கொண்ட ஒரே ஒரு அறை மட்டுமே இருக்கும். அவ்வறையினுள் செல்ல சாதாரண கதவு கிடையாது. தரையில் தான் சதுர வடிவில் இரண்டிற்கு இரண்டு பரப்பளவில் சிறிய மரகதவு இருக்கும். முதல் தளத்தில் இருக்கும் கூடத்தில் இருந்து தடிமனான மரஏணியில் ஏறி இந்த சதுர மரக்கதவைத் திறந்து செல்ல முடியும். இந்த அறை அமிர்தவள்ளியின் சாம்ராஜிய அறை. சுத்தம் செய்யக் கூட யாரையும் அனுமதிக்க மாட்டாள். சன்னல் வழியே வானம் தெரியும் என்றாலும், மெத்தையில் படுத்தபடி வானத்து நட்சத்திரங்களைப் பார்க்க வேண்டும் என்று  மகள் கேட்டதிற்காக ஒரு இடத்தில் மட்டும் ஓட்டிற்கு பதில் கண்ணாடி சட்டம் வைத்துக் கொடுத்திருந்தார் செந்தில்வேல்.
இன்னொரு வீடு எம வீதியில் இருக்கும் ‘எம் வீடு’. முன்பு ‘புது வீடு’ என்று அழைக்கப்பட்ட வீடு, சில ஆண்டுகளாக ‘எம வீடு’ என்று அழைக்கப் படுகிறது. அந்த வீட்டின் உரிமையாளர் சோமசுந்தரம் தற்போது இவ்வூரில் இல்லை. எம வீடு ஓர் அடுக்கு கொண்ட வீடு தான் என்றாலும் செந்தில்வேல் வீட்டை விட சற்றே பெரியதாக, சிமின்ட் கூரை கொண்ட வீடு. இதில் செந்தில்வேலிற்கு சோமசுந்தரம் மீது சிறு பொறாமை இருந்தது. ‘தங்கள் குடும்பத்திற்கு கீழ் இருந்த ஒருவன், தன்னை விட இவ்வூரில் பெரிய ஆளாக தலை எடுப்பதா’ என்ற பொறாமை தான் அது. ‘புது வீடு’ ‘எம வீடாக’ மாறியதில் ஊர் மக்களுக்கு பயம் ஏற்பட்டது என்றால் இவருக்கு மட்டும் சிறு மகிழ்ச்சி நெஞ்சின் ஓரம் இருக்கிறது.
அந்த சிறுவன் அவள் வீட்டைக் கடந்து செல்கையில், “ஏலே!” என்று காமாட்சி குரல் கொடுத்தார்.
அவன் கேட்காதது போல் செல்ல, அவர் விடாமல், “ஏலே கதிரு, இங்குட்டு வாலே” என்றார்.
‘நிதம் நாமதேன் சிக்குதோம்’ என்று மனதினுள் புலம்பியபடி காமாட்சி முன் நின்றான்.
“ஒ கூட்டாளி எங்கலே?” 
“அவே வூடு அங்குட்டு இருக்குதே.. அதா……..” 
“என்னாலே லந்தா! நொக்கிபுடுவேன்.. நா ஆர கேக்குதீனுட்டு ஒனக்கு தெரியாது?” 
“நிசமாலுமே வள்ளிக்காவ நா இன்னைக்கு பாக்கல ஆத்தா”
 “கூட்டு களவானிகளா…” என்றவரின் பேச்சைத் தடை செய்வது போல் முதல் மாடி முற்றத்தில் இருந்தபடி அமிர்தவள்ளி, “ஏலே கதிரு, இங்குட்டு என்னலே செய்யிற?” என்று கத்தி கேட்டாள்.
மகளின் குரலில் சிறு அதிர்ச்சியுடன், ‘இந்த கழுத எப்போ, எப்புடி உள்ளார வந்தா!’ என்று நினைத்தபடி திரும்பி முறைத்தார்.
அவர் அந்த பக்கம் திரும்பவும், கதிர் சிட்டாக பறந்து இருந்தான்.
மகளைப் போல் கத்தாமல் வீட்டினுள் சென்ற காமாட்சி கூடத்திற்கு வந்த மறுநிமிடம், “ஏட்டி வள்ளி, கீழ வாட்டி” என்று கத்தினார்.
அவளோ அலட்டிக் கொள்ளாமல், “இப்போ என்னத்துக்கு இப்புடி கத்துற?” என்று கேட்டபடி படியில் இறங்கி வந்தாள்.
அவள் கீழே வந்ததும், “எம்புட்டு நெஞ்சழுத்தம் இருந்தாக்க நா சொல்லச் சொல்ல நிதமும் வெளில ஓடுற!” என்றபடி விளக்குமாறுடன் அவளை அடிக்க வர,
அவளோ அவருக்கு போக்கு காட்டி ஓடியபடி, “யம்மோய் நா இன்னைக்கு போவவே இல்ல” என்றாள்.
“ஆரு கிட்ட காது குத்துற? நா தா மச்சியில பாத்தேனே” என்றபடி அவளைப் பிடிக்க முயற்சிக்க,
“நா அங்கன இல்ல.. மேல் மச்சியில(மொட்டை மாடி) இருந்தீன்.. நீ செரியா கெவனியாம என்னிய வையாத”  
“பொய் சொல்லாதடீ.. யே கைல ஆம்புட்ட விளக்குமாறு பிஞ்சிபுடும்” 
‘அதேன் தெரியுமே!’ என்று மனதினுள் கூறியவள், “பாரதி கண்ட புதுமை பெண்ணாட்ட நா இருக்குதது ஒனக்கு பொறுக்கல” என்று அவரிடம் வாயாடினாள்.
“எதுக்கு எத எனக்கூட்டுத! இதாட்டீ பாரதி கண்ட புதுமைப் பெண்!” 
“வூட்டுக்குள்ள என்னிய அடைக்கத் தான பாக்குத!” 
“ஒன்னலாம் படிக்க அனுப்புததே பெருசு” 
அவள் முறைப்புடன், “பயலுவ மட்டு என்னத்த ஒசத்தி? ஏ அவனுக மட்டு வயசுக்கு வாராமலா இருப்பானுவ?” என்றாள்.
“ஆத்தி! என்னா பேச்சு பேசுற! வாயிலவும் ஒன்னு இழுக்குதீன்” என்று கோபத்துடன் கூற,
“எம் பேத்தி செரியா தான சொல்லுதா! நீ வாடி ராசாத்தி” என்றபடி வந்த செந்தில்வேலின் அன்னை தாயம்மாள், அமிர்தவள்ளி முகத்தில் திருஷ்டி கழித்தபடி, “என்னெ அறிவு யே ராசாத்திக்கு!” என்றார்.
சட்டென்று பணிந்த குரலில் காமாட்சி, “அத்த..” என்று ஆரம்பிக்க,
அவரோ, “இப்போ என்னத்துக்கு ஓரண்டை இழுக்குறவ? நா தா வெத்தல வாங்கியார சொன்னே” என்றார் சற்று குரலை உயர்த்தி.
அவர் அருகில் நின்றிருந்த அமிர்தவள்ளி பல்லை கடித்தபடி, “அப்பத்தா நா வெளில போவவே இல்ல” என்றாள்.
பேத்தியைப் பார்த்து சிறு அசட்டு சிரிப்பை உதிர்த்த தாயம்மாள் மருமகளைப் பார்த்து, “ஆனாக்க பாரு.. ஒன்னால எம் பேத்தி வெத்தல வாங்கக் கூட போவல.. நல்லதனமா வூட்டுல இருக்கா.. அவுள போய் வைய்யுற” என்று சமாளிப்பாக நீட்டி முழக்கினார்.
மகளை முறைத்த காமாட்சி தாயம்மாளிடம் பணிவுடன், “ரொம்ப செல்லம் குடுக்காதிகெ அத்த” என்றார்.
“அதா என்னேரமும் வசவ நீ இருக்குறியே” என்றவர் பேத்தியைப் பார்த்து, “பள்ளிக்கூடத்துக்கு நேரமாவல? நீ போய் கெளம்பு ராசாத்தி” என்று கூறி அனுப்பி வைத்தார்.
காமாட்சி, ‘எல்லா வூட்டுலயும் அய்யனும் அப்பாதாவும் தா கண்டிப்பா இருப்பாவுகெ.. இங்குட்டு எல்லா தலகீழா இருக்கு’ என்று முணுமுணுத்தபடி சென்றார்.
அவர் கூறியதை கேட்ட அமிர்தவள்ளி, “அப்பத்தா.. அம்மா அய்யனையும் ஒன்னையும் வையுது” என்று கத்தியபடி மாடியேறி தனது அறை நோக்கி ஓடிவிட்டாள்.
காமாட்சி கோபத்துடன், “கோட்டி.. அங்குட்டு வந்தீன், தோல உரிச்சு உப்புகண்டம் போட்டுபுடுவேன்” என்றார்.
“நா ஆம்புட்டா தான!” என்று அவள் மேலிருந்தே கத்த,
அவர் அடங்கா கோபத்துடன், “ஒன்னிய…” என்று திட்ட ஆரம்பிக்கும் முன்,
தாயம்மாள், “விடுத்தா.. எனக்கு ஒன்னிய தெரியாதா?” என்றார்.
சட்டென்று குரலை தனித்த காமாட்சி, “இவள நெனைச்சாக்க நெஞ்சு அடிச்சுக்குவுது அத்த.. போற வூட்டுல என்ன ஓரண்டை இழுப்பளோனுட்டு..” என்று கவலையுடன் பேசியவரின் பேச்சை இடையிட்ட தாயம்மாள்,
“பேலாத தாயி.. எம் பேத்தி அதெல்லாம் சூதனமா நடந்துக்குவா” என்றார்.
இப்படி தினமும் காமாட்சியிடம் வித விதமாக திட்டு வாங்கினாலும், அமிர்தவள்ளி தனது விளையாட்டுகளை ஒருபோதும் நிறுத்துவது இல்லை.
அதுவும் வட்டைப் போட்டி, மரம் ஏறி குரங்கு, எறிபந்து, கால் தாண்டி(பச்சைக் குதிரை), செல்லாங்குச்சி(கில்லி), மட்டைப்பந்து(கிரிக்கெட்), பம்பரம், கோலிக்குண்டு, மாடு விரட்டுதல், எதிர் நீச்சல், முங்கு நீச்சல், ஆற்றில் பல்டி அடித்தல் என்று அவளது விளையாட்டுகள் அனைத்தும் பசங்களுடன் தான்.
சுட்டித்தனம் நிறைந்த அமிர்தவள்ளி விளையாட்டு, குறும்பு என்று இல்லாமல் படிப்பிலும் முதல் இடம் தான்.
விளக்கம்
கொலக்காடு       –      காலைக்கடமை முடிக்கும் இடம்
வெள்ளனே       –      அதி காலை
முண்டகலப்ப      –      ஏர்
எகனக்கி மொகன   –      எதுகை மோனை
வசவிட்டே        –      திட்டிட்டே
கருக்கல்           –      சாயுங்காலம்(6- 7 மணி)
லந்து             –      கிண்டல்
நொக்கிபுட்டான்     –      நையப்புடைத்தான்
பேலாத           –      பயப்படாத

Advertisement