யாரையும் அவளால் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. எப்பொழுதும் இடம், பொருள் அறிந்து தான் கணவர் கண்டிப்பார். இப்பொழுது பிறந்த வீட்டில் வைத்து, அதுவும் தான் துச்சமாக நினைக்கும் வேதிகா முன்னிலையில் இப்படி திட்டியதில் மிகுந்த அவமானமாக உணர்ந்தாள்.

கல்யாணியால் பேசவே முடியவில்லை. எப்பொழுதும் மகள் இங்கே வந்தால், ஒன்றும் பேசாத மருமகன், இன்று அவள் வந்த கையோடு அழைத்துப் போக வந்திருப்பது ஏன் என்று புரியாமல் குழம்பினார். எல்லாரும் இருக்க மகளிடமும் வீட்டில் எதுவும் பிரச்சனையா என்று கேட்கவும் வழியில்லை. ஆனால், அவர் அறிந்து பிரச்சனை இருக்க வாய்ப்பேதும் இல்லை. அப்படி இருந்திருந்தால்தான் மகள் மாலையில் வீட்டிற்கு வந்ததுமே சொல்லி இருப்பாளே! அதனால், குழப்பம் இன்னும் அதிகரித்தது.

தயங்கியபடியே, “மாலதி எதுவும் தப்பு பண்ணிட்டாளா மாப்பிள்ளை?” என்று கல்யாணி கேட்க, “அவ இங்கே என்ன தப்பு பண்றான்னு உங்களுக்குத் தெரியாதா என்ன?” என்று முரளி குத்தலாகத் திருப்பிக் கேட்டான். கல்யாணிக்கு அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை.

முரளி எப்போதும் தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருக்கிற ரகம். ஒற்றை ஆளாக நின்று உழைத்து, தன் தங்கையை நல்லபடியாகக் கட்டிக்கொடுத்திருக்கும் மைத்துனன் அருள் மீது அவனுக்கு எப்போதுமே பெருமதிப்பு உண்டு.

பொதுவாக அருள் அவனிடம் எந்த கோரிக்கையும் வைத்ததில்லை. இன்று அவனே போன் செய்து, ‘மாலதி வீட்டிற்கு வந்தாலே பிரச்சனையாக இருக்கிறது, என் மனைவியை மட்டமாக பேசுகிறாள். மதிப்பதே இல்லை. வேலைக்காரியைப் போல நடத்துகிறாள். அம்மாவும் இவளும் சேர்ந்தால் எப்படி இருக்கும்ன்னு உங்களுக்கு தெரியாதா மச்சான்?’ என்றெல்லாம் மனம் வருந்தி பேசியிருக்க, அவ்வளவு தான் முரளிக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்துவிட்டது.

மாமியார் வீட்டில் மதிப்பும் மரியாதையுமாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தால், இவள் சொந்தக் குடும்பத்தையே கெடுக்கக் கிளம்பி வந்து விடுவாளா? இவள் செய்யும் காரியத்தால் என் மானமும் மரியாதையும் தானே சேர்ந்து போகும். நானாக அருளை அழைத்து உன் தங்கை சரியில்லை என்று புகார் சொன்னால் அது வேறு விஷயம்… ஆனால், அருளே போன் செய்து உன் மனைவி சரியில்லை என்று சொல்லும் அளவிற்கு இவள் நடந்துகொண்டது எவ்வளவு பெரிய அவமானம்!

அந்த ஆத்திரத்தோடுதான் முரளி மாமியார் வீட்டிற்கு வந்தது. அவர் வந்த நேரத்தில் மாமியார் அருளிடம் பேசிய அந்த நன்றிகெட்டப் பேச்சைக் கேட்டதும், அவனது ரத்தம் இன்னும் கொதித்தது. அம்மாவும் மகளும் துளியும் ஈவு இரக்கமில்லாமல், அருள் இந்த குடும்பத்திற்கு என்னவெல்லாம் செய்திருக்கிறான் என்கிற நன்றியுணர்ச்சி இல்லாமல் இருக்கிறார்களே என்று எண்ணினான். ‘ஏதோ அருளாக இருக்கப்போய்த்தான் இவ்வளவு தூரம் பொறுத்துப் போகிறான்; வேறு யாராவதாக இருந்தால் இந்நேரம் வீடே போர்க்களமாகியிருக்கும்!’ என்று முரளிக்குத் தோன்றியது.

மாலதி பதற்றத்துடன் கிளம்பத் தயாராக, “இனி தேவையில்லாமல் இங்கே கிளம்பி வந்தேன்னா… அப்புறம் நீ இங்கேயே நிரந்தரமா தங்க வேண்டியதுதான்! அதை ஞாபகம் வச்சுட்டு இங்கிருந்து கிளம்பு” என்று முரளி எச்சரிக்கை விடுத்தான்.

மாப்பிள்ளை ஏன் இத்தனை கோபமாக இருக்கிறார் என்று கல்யாணிக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் ஏற்கனவே கோபத்தில் வெடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், குறுக்கே பேசுவது சூழலை இன்னமும் மோசமாக மாற்றி விடுமோ என்று கல்யாணிக்கு அச்சமாக இருந்தது. ‘அருளாவது மாப்பிள்ளையிடம் ஏதேனும் சமாதானம் பேசிச் சூழலைச் சரி செய்வான்’ என்று பெரும் எதிர்பார்ப்போடு மகனைப் பார்த்தார். ஆனால் அருளோ, எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதைப் போல அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

முரளி தான் இங்குக் கிளம்பி வந்ததற்கு அருள்தான் காரணம் என்பதற்கான எந்தச் சிறு அடையாளத்தையும் காட்டிக் கொள்ளவில்லை. அவனிடம் தனியாகப் பேசுவதோ, சைகை காட்டுவதோ இன்றித் தன் மனைவி பிள்ளைகளோடு அங்கிருந்து கிளம்பினான். இருப்பினும், அருளின் அமைதியைக் கண்டே, கல்யாணிக்கு அத்தனையும் புரிந்து போனது. இதற்குப் பின்னால் இருப்பது தன் மகன்தான் என்பதை அவர் ஊகித்துக்கொண்டார்.

மாலதி கிளம்பிய அடுத்த நொடியே, “கூடப் பிறந்த தங்கச்சி வீட்டுக்கு வந்திருக்கா… நீ என்னடான்னா உடனே மாப்பிள்ளைக்குப் போனைப் போட்டு அவளைக் கூட்டிட்டுப் போகச் சொல்லியிருக்க! நீயெல்லாம் மனுஷன் தானா? குடும்பத்தை மதிக்காத உன்னையும் நான் தான் பெத்தேனா?” என்று கல்யாணி ஆங்காரத்துடன் தொடங்கிவிட்டார்.

அருள் அவர் சாட்டிய குற்றச்சாட்டை மறுக்கவில்லை. அதே சமயம், தன் அன்னைக்கு எந்தப் பதிலையும் சொல்லவும் அவன் பிரியப்படவில்லை.

வேதிகாவிற்குத்தான் திக்கென்றிருந்தது. தன் கணவனா இத்தகைய காரியத்தைச் செய்தான் என்று பேரதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். சற்று நேரத்திற்கு முன்பு குழந்தைகளைக் கூடக் கவனிக்காமல், அவன் யாரிடமோ பேசுவதற்காக வெளியே சென்றதை அவளும் கவனித்திருந்தாளே! அதனால், மாமியாரின் குற்றச்சாட்டை அவளால் வீண் பழி என்று ஒதுக்க முடியவில்லை.

“பதில் பேசாம மண்ணு மாதிரி நின்னா என்னடா அர்த்தம்? அவ உன் கூடப் பிறந்த தங்கச்சி… அந்த நினைப்பு கொஞ்சமாச்சும் உனக்கு இருக்கா” என்று கல்யாணி மீண்டும் கத்தினார்.

“எனக்கு மட்டும் இருந்து என்ன பிரயோஜனம் அம்மா? அவளுக்கும் அந்த நினைப்பு இருக்க வேண்டாமா? என் பொண்டாட்டியை மட்டமா நடத்த அவ யாரு? என் பொண்டாட்டி என்ன இந்த வீட்டு வேலைக்காரியா?

ரெண்டு கைக்குழந்தைகளை கவனிச்சுட்டு, தன்னோட தையல் சம்பந்தமான வேலையையும் வீட்டிலிருந்தே பார்த்துட்டு, கூடவே இந்த வீட்டையும் கவனிச்சுக்கிறா. அப்பவும் நீங்க அவளைக் குறை சொல்லிட்டே இருப்பீங்க… மரியாதை இல்லாம மட்டமா பேசிட்டே இருப்பீங்க! இதையெல்லாம் வேடிக்கை பார்த்துட்டு நான் மட்டும் பொறுமையா போயிட்டே இருக்கணுமா?” என்று அருள் சீறினான்.

எப்பொழுதும் அனைத்தையும் பொறுத்துப்போகும் மகனைப் பார்த்துப் பழகிய கல்யாணிக்கு, அருளின் இந்த அதிரடி மாற்றம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

ஆனால், மகன் குரல் உயர்த்துகிறான் என்பதற்காக பொறுத்துப்போகும் ரகமா கல்யாணி? தன் ஆவேசம் மொத்தத்தையும் விஷமான வார்த்தைகளால் கொட்டித் தீர்த்துவிட்டார். “என்னடா பேசற? உன் பொண்டாட்டி வேலைக்காரியான்னு கேக்குறியா? கேட்க நாதியில்லாமப் பிறந்த வீட்டுல இருந்தா… முறை தவறிப் போய் எவனுக்கோ ஒரு பிள்ளையை வேற பெத்து வெச்சுட்டு…” என்று அவர் முடிப்பதற்குள், அருளின் ஆத்திரம் எல்லை கடந்தது.

“அம்மா…!” என்று இடி முழக்கமாய்க் கத்தினான். “இங்க பாருங்க… இதுவரை நீங்க என்னை பேசுனீங்க, நான் பொறுத்துப் போனேன். ஆனா இனி நீங்க பேசுற ஒவ்வொரு வார்த்தையும் என்னைத் தாண்டி என் பொண்டாட்டியையும், குழந்தைகளையும் காயப்படுத்தும்! அந்த காலத்து மனுஷியான உங்களால சில விஷயங்களை ஏத்துக்க முடியாமப் போகலாம். அதுக்காக என் பொண்டாட்டியோட ஒழுக்கத்தைப் பத்தித் தரம் தாழ்ந்து பேசாதீங்க!” என்றான் ஆத்திரத்துடன்.

“உண்மையைச் சொன்னா உனக்கு ஏன் கோபம் பொங்குது?” என அவர் அப்பொழுதும் கத்த, “எது உண்மை? அவளுக்கே தெரியாம அவளுக்கு நேர்ந்த விபத்து மட்டும்தான் உண்மை! இன்னும் எத்தனை வருஷத்துக்கு அந்தப் பழியை அவ சுமக்கணும்? இந்த நிமிஷம் அவ என்னோட பொண்டாட்டி! கவின் என்னோட மகன்! தீபாலிக்கு என்ன உரிமை இருக்கோ, அத்தனை உரிமையும் அவனுக்கும் என்கிட்ட இருக்கு! இது மட்டும்தான் நிஜம்… இனி வேற எதையும் பேசாதீங்க!” என்றான் அழுத்தம் திருத்தமாக.

கணவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் வேதிகாவின் கண்கள் நிறைந்து வழிந்தன. ‘ஏன் இவன் மட்டும் என்னை இத்தனை ஆழமாக நம்புகிறான்? எந்தப் பாகுபாடும் பார்க்காமல் எங்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறானே! நான் அனுபவித்த வேதனைகள் போதும் என்று கடவுளே இவனை எங்களிடம் அனுப்பி வைத்தாரா?’ என்று எண்ணியவளின் நெஞ்சம் விம்மிக் கொண்டிருந்தது.

கல்யாணிக்குத் தன் மகன் மனைவியையே முதன்மையாகக் கருதிப் பேசப் பேச, கோபம் கொதிநிலைக்கே சென்றது. “எந்தத் தப்பும் பண்ணாதவ வயித்துல குழந்தை வந்தா… நிஜமாவே நல்ல குடும்பத்துப் பொண்ணா இருக்கிறவ மானம் போன அன்னைக்கே நாண்டுக்கிட்டு செத்துப் போயிருப்பா!” என்று விஷமாக.

வேதிகாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. ‘ஒரு பெண் தன் சுயநினைவு இல்லாத நிலையில் வஞ்சிக்கப்பட்டால், அதற்காக அவள் இந்த உலகில் வாழத் தகுதியற்றவளாகி விடுவாளா என்ன?’ மனதில் கூர்மையான ஆயுதம் ஒன்று தாக்கியத்தைப் போல துடித்தவள், அங்கே நிற்கக் கூடத் திராணியற்றவளாய் அறைக்குள் ஓடி மறைந்தாள். அவளது அழுகை அணை உடைந்த வெள்ளமெனப் பெருகியது.

‘இவரிடம் பேசினாலே இப்படித்தான் இழிவான வார்த்தைகள் வரும் என்று தெரிந்திருந்தும், வீணாகப் பேசிக்கொண்டு நின்றோமே!’ எனத் தன்னைத்தானே நொந்துகொண்ட அருள், தன் மனைவியை சமாதானம் செய்ய விரைந்தான். கவிதா அம்மாவை வெறுப்பாகப் பார்த்தாள்.

அருளின் நிலைதான் பெரும் திண்டாட்டமாக இருந்தது. அவனால் தன் மனைவியை நிம்மதியாக வைத்திருக்க முடியவில்லை. சரி… அதற்குத் தீர்வாகத் தனியாகப் போய்விடலாம் என்று அழைத்தால், அவளோ அதற்கு உடன்பட மறுக்கிறாள். ‘அவளைத் திருமணம் செய்துகொண்டு வந்து வீணாகக் கஷ்டப்படுத்துகிறோமோ?’ என்கிற குற்றவுணர்வு அவனது மனதை ரணமாக்கியது.