“அண்ணி அப்ப கிச்சன்ல இருந்தாங்க அண்ணா… அநேகமா அக்கா பேசினதெல்லாம் கேட்டிருக்காதுன்னு நினைக்கிறேன். ஆனா, அக்கா அண்ணிக்கு கேட்குமேன்னு சங்கடப்படற ஆள் மாதிரி எல்லாம் தெரியலைண்ணா. அவ பேசினதையெல்லாம் கேட்ட எனக்கே தாங்கிக்க முடியலை. அண்ணி முன்னாடி இந்த மாதிரியெல்லாம் பேசினா ரொம்ப உடைஞ்சி போயிடுவாங்கண்ணா” என்றாள் தேம்பலுடன்.
“ம்ப்ச்…” என்று வேதனையுடன் நெற்றியை தேய்த்துக் கொண்டான். கவிதா கவலையுடன் அவன் முகத்தையே பார்த்திருக்க, “இன்னைக்கு முடிக்க வேண்டிய எம்பிராய்டரி வேலைகளையும் அவ இன்னும் முடிக்கலை போலருக்கு” என அங்கிருந்த மேஜையை காட்டியவன், “பகல்ல தூங்கியிருக்கவும் மாட்டா போல! அத்தனை சோர்வா தெரியறா. இனி இராத்திரியும் இந்த வேலையெல்லாம் செஞ்சுட்டு தான் தூங்குவேன்னு பிடிவாதம் வேற பண்ணுவா” என்றான் ஆதங்கத்துடன்.
கவிதா, மாலதியோடு அறைக்குள் தனித்து மாட்டிக்கொண்டது வேதிகாவிற்குத் தெரியும். அங்கிருந்து வெளியே வந்த கவிதாவின் முகம் வாடிப் போயிருந்ததையும் அவள் கவனித்திருந்தாள். இப்போது அண்ணனுக்குத் தேநீர் கொண்டு போனவள், வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை என்றதும், ‘எங்கே அவனிடம் எதையாவது உளறி வைக்கப் போகிறாளோ?’ என்கிற அச்சம் வேதிகாவிற்குள் எழுந்தது. அதனாலேயே, “கவிதா… இன்னும் உள்ளே என்ன பண்ற?” என்று சமையலறையிலிருந்தே சத்தம் போட்டாள்.
‘இவளும் ஒன்னும் சொல்ல மாட்டா. சொல்லறவளையும் விட மாட்டா…’ என்று தனக்குள் முணுமுணுத்த அருள், “நீ போ கவி… நான் என்னன்னு பார்த்துக்கிறேன்” என்று தங்கையை அனுப்பி வைத்தான்.
கவிதா சமையலறைக்குச் செல்ல, “வீட்டுல என்ன நடந்தாலும் அதை உங்க அண்ணன்கிட்ட உடனே சொல்லியாகணுமா உனக்கு? அவரே இப்பதானே வேலையை முடிச்சிட்டு வந்திருக்காரு. வேலை டென்ஷன் போதாதுன்னு, வீட்டு டென்ஷனையும் அவர் தலையில ஏத்தணுமா?” என்று மெல்லியக் குரலில் கடிந்து கொண்டாள்.
“நான் ஒன்னும் சொல்லலை அண்ணி… சொல்லறதுக்கு என்ன இருக்கு? ஒண்ணுமே சொல்லலையே!” என்று வேதிகாவிற்கு ஏதாவது தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் கவிதா பதறினாள்.
கவிதாவின் அந்தப் பதற்றமே வேதாவிற்குத் தெள்ளத்தெளிவாக விளக்கிவிட்டது, மாலதி நிச்சயம் தன்னை மட்டமாக ஏதோ பேசியிருக்கிறாள் என்று! வேதிகா ஏதும் பதில் சொல்லாமல், கவிதாவைத் துளைப்பது போல ஒரு பார்வை பார்த்தாள்.
“நிஜமா அண்ணி…” என்றவளின் வார்த்தைகள் தந்தியடித்தது.
ஒரு நீண்ட பெருமூச்சுடன் வேதிகா மீண்டும் வேலையில் கவனமாகி விட்டாள். “இன்னைக்கு நீங்க ஓய்வே எடுக்கலை அண்ணி… மீதியிருக்க வேலைகளை எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க கொஞ்ச நேரம் குழந்தைகளோட இருங்க” என்று கவிதா கேட்க, “அதெல்லாம் செஞ்சுப்பேன் விடு கவி…” என்று சோர்வான குரலில் சொல்லிவிட்டாள்.
ஒரு புதிய குடும்பத்திற்கு மணமகளாக வரும் பெண் எத்தனை இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்? ஒரு சாதாரண பெண்ணிற்கே இந்நிலை என்றால், வேதிகாவைப் போன்ற ஒருத்தியின் நிலையைச் சொல்லவும் வேண்டுமா?
மாலதியும் கல்யாணியும் ஒவ்வொரு பொழுதும் வேதிகா வேதனையில் கழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். நாம் மற்றவர்களுக்கு நல்லதை செய்யாவிட்டாலும் கெட்டது செய்யாமல் இருக்க வேண்டும் தானே! இங்கோ அவர்கள் நஞ்சான வார்த்தைகளை வீசி அவளின் மனதை வருத்துவதில் வல்லவர்கள்.
இதெல்லாம் வரும் என்று தெரிந்துதான் அவள் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்தாள். தன் வாழ்வில் நடந்த பேரிழப்பால் ஒளியை இழந்து தவிக்கும் தன் பெற்றவர்களுக்கு, இனியும் பாரமாக இருக்க அவளுக்கு மனமில்லை. ஆனால், நிதர்சனம் என்று வருகையில், அதை எதிர்கொள்கையில் உடைந்து போகிறாள்.
ஊரார் பேச்சிற்கு அஞ்சி, இரண்டரை ஆண்டுகள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தவள் அவள். அந்த வயதில் அவளுக்கு அவ்வளவுதான் பக்குவம் இருந்தது. இப்போதும் கூட, பிறர் வீசும் நஞ்சான வார்த்தைகளைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமை அவளுக்கு வந்திருக்கவில்லை. அந்தச் சொற்களை மௌனமாகத் தாங்கிக்கொள்வதைத் தவிர அவளுக்கு வேறு வழியும் தெரியவில்லை. அவளது மனம் ஊமையாக அழுதுகொண்டிருந்தது.
சோர்வுடன் இரவு உணவுக்கான வேலைகளை முடித்துவிட்டு வேதிகா வெளியில் வர, பசியில் தீபாலி சிணுங்கத் தொடங்கியிருந்தாள். தங்கை அழுவதைக் கண்ட கவின், “ம்மா… ம்மா…” என்று வேதிகாவை அழைக்கத் தொடங்கினான்.
மாலதியும் கல்யாணியும் எதுவுமே நடக்காதது போல, அங்கே அந்த குழந்தைகள் இருப்பதே தங்கள் பார்வையில், கருத்தில் விழவில்லை என்பதுபோல அமர்ந்திருப்பதை வெறுப்புடன் ஒரு பார்வை பார்த்த வேதிகாவிற்கு, உள்ளம் அத்தனை வலித்தது.
கவிதா தான் பதறிப்போனாள். “அண்ணி… சின்னவளைக் கவனிங்க…” என வேதிகாவிற்கு முன்னே ஓடி வந்து தீபுவைத் தூக்கிக்கொள்ள, கவினும் அம்மாவிடம் வந்து, “ம்மா… பா…பா…” என்று தன் மழலையில் தங்கையைக் கை காட்டினான்.
‘அருளைக் காணோமே… பிள்ளைகளை அழ விடமாட்டாரே?’ எனப் பார்வையாலேயே தேடியபடி, சின்னவளைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் சென்று கதைவடைத்து பசியாற்றத் தொடங்கினாள்.
“இப்படியெல்லாம் நாடகம் ஆடித்தான் புருஷனைத் தன் கைக்குள்ள போட்டு வச்சிருக்கா!” என்று மாலதியிடம் கல்யாணி கசப்புடன் பொருமினார்.
“ரொம்பச் சாமர்த்தியம்தான் அம்மா… எனக்குப் பத்திக்கிட்டு வருது!” என்று மாலதியும் பதிலுக்குத் தன் வன்மத்தைக் கொட்டிக் கொண்டிருந்தாள். சின்னவளுக்கு அவள் தாய்ப்பாலைக் கொடுப்பதில் என்ன குறையைக் கண்டார்களோ?
கைப்பேசியில் யாருடனோ பேசிவிட்டு வீட்டிற்குள் வந்த அருள், கவினுக்கும், மாலதியின் மகள்களுக்கும் உணவூட்டிக் கொண்டிருந்த கவிதாவைப் பார்த்துவிட்டுத் தன் அறைக்குள் நுழைந்தான்.
அங்கே அவனது மனையாள் வாடிய முகத்துடன் மகளுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தாள். அவள் மகளைக் கவனித்து முடிக்கும் வரை இடையூறு செய்யாமல், வேதிகா வேலை செய்யும் மேஜை அருகே அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டான். தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் இத்தனை செய்பவளை நிம்மதியாக வைத்திருக்க முடியவில்லையே என்கிற குற்றவுணர்வு அருளின் மனதை ரணமாக்கியது.
பசியாறியதும் மகள் உறங்கிவிட, வேதா அவளை தொட்டிலில் மாற்றிக் கொண்டிருந்தாள். உடனே எழுந்து வந்தவன், மனைவிக்கு உதவி செய்தான்.
“சாப்பிட வாங்க…” உயிர்ப்பில்லாத ஒரு மெல்லிய புன்னகையுடன் வேதிகா சொல்லிவிட்டு நகர முயல, அவளது கரம் பற்றித் தடுத்து நிறுத்தினான் அருள்.
வேதிகா புரியாமல் திரும்பிப் பார்க்க, அவள் அருகில் நெருங்கி வந்தவன், அவளது கன்னங்களைத் தன் இரு கைகளாலும் கனிவோடு தாங்கிக் கொண்டான். அவள் பரிதவிப்புடன் அவனையே பார்த்திருக்க, “நீ எவ்வளவு சோர்வா இருக்க தெரியுமா?” என்றான் கலக்கமாக. அவள் தன் விழிகளைத் தாழ்த்திக் கொள்ள, “எல்லா வேலையையும் நீதான் செஞ்சு ஆகணும்னு எந்த அவசியமும் இல்லைம்மா. முதல்ல ஒண்ணை நீ தெளிவா புரிஞ்சுக்கோ… நீ இந்த வீட்டுக்கு வேலைக்காரி கிடையாது! உனக்கு செய்ய முடியாட்டி நீ செய்யாத. ஏன் இப்படி எல்லாத்தையும் இழுத்துப் போட்டுட்டு கஷ்டப்படுற?” என்று ஆதங்கத்துடன் கேட்டான்.
“நமக்கு வேண்டியதை நாமதானே செஞ்சுக்கணும்… அதை ஏன் இவ்வளவு பெருசா நினைக்கிறீங்க?” என்று கணவனுக்கு மென்மையாகச் சமாதானம் சொன்னாள்.
அவளது அந்த அதீதப் பொறுமை அருளின் பொறுமையைப் சோதித்தது. “வேதிகா!” என்று அழுத்தமாக அவளது பெயரை அழைத்தான். அவன் கோபப்படுவதை உணர்ந்து அவளது முகம் வாடவே, சட்டென அவள் நெற்றியில் தன் நெற்றியை முட்டிக் கொண்டவன், “நிஜமா… இதெல்லாம் சரியா வரும்னு எனக்குத் தோணலை. நாம இங்கிருந்து தனியாப் போயிடலாம் மா” என்றான் ஆழமான குரலில்.
அருள் அடிக்கடி இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறான். ஆனால், வேதிகாவிற்கு அதில் துளியும் உடன்பாடில்லை. “சும்மா ஏன் எதையாவது யோசிச்சு வருத்தப்படுறீங்க? எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை… இது நம்ம வீட்டு வேலைதானே!” என்று அவனைத் தேற்றி ஆறுதல்படுத்தினாள்.
எத்தனை சொன்னாலும் புரிந்துகொள்ள மறுக்கிறாளே என்று அருள்மித்ரனுக்கு ஆயாசமாக இருந்தது. ஓரளவிற்கு மேல் அவளிடம் கடுமை காட்டவும் அவனுக்கு மனம் வரவில்லை. ஆனால், கடுமை காட்டியாவது அவளைத் தனியாக அழைத்து போயிருக்க வேண்டுமோ என்று, பின்னாளில் அவன் வருந்தும்படியாகிவிட்டது!