மழைவர பூமி மறுத்திடுமா? – 8

கவிதா இலகுவானதை புரிந்து கொண்டு, “சரி கவி… இப்ப சொல்லு. வேலைக்கு போகலையான்னு கேட்டா ஷாக்காயிட்டியே? ஏன் அது சம்பந்தமா நீ எதுவுமே யோசிக்கலையா?” என்று தான் பேச விரும்பிய விஷயத்திற்கு வேதிகா வந்தாள்.

உண்மையில் கவிதாவிற்கு இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. அவள் வேலையைப் பற்றியோ, மேற்படிப்பை பற்றியோ யோசித்திருந்தால் தானே சொல்வதற்கு!

“அண்ணி தீபாலிக்கு அஞ்சு மாசம் இருக்கும்போது இங்கே கொண்டு வந்து மாமாவும், அத்தையும் விட்டுட்டுப் போயிட்டாங்க. அப்ப எனக்கு எக்ஸாம் முடிஞ்சிருந்ததால, அவளைப் பார்த்துக்கிற பொறுப்பை நான் எடுத்துக்கிட்டேன். இந்த நாலு மாசமும் இப்படியேதான் ஓடிடுச்சு. மத்தபடி எனக்குன்னு ஒரு வேலையை பத்தி நான் யோசிச்சதே இல்லை அண்ணி. நம்ம வீட்ல பொம்பளப் பிள்ளைங்களை அப்படி வேலைக்கு அனுப்பவும் மாட்டாங்க. மாலதி அக்காவும் படிப்பு முடிஞ்சதுல இருந்து கல்யாணம் வரைக்கும் வீட்டுலதான் இருந்தாங்க” என்றாள் இயல்பாக.

சிந்திக்கத் தெரியாத அவளின் அந்தச் சிறுபிள்ளைத்தனமான பேச்சைக் கேட்டு வேதிகாவிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. “நீ உங்க அண்ணாகிட்ட இதைப் பத்திப் பேசினதே இல்லையா கவி?” என வேதிகா வினவ, இப்போதும் பதில் சொல்லாமல் திருதிருவென விழித்தாள் அவள்.

அண்ணனிடம் என்ன பேச வேண்டும் என்று அவளுக்கு நிஜமாகவே புரியவில்லை.

அவளின் பார்வையே வேதாவுக்குரிய பதிலை சொல்ல, “தீபுக்குட்டியை இத்தனை மாசமும் நீதான் பார்த்திருக்க… அது நிஜமாவே ரொம்பப் பெரிய விஷயம் கவி. ஆனா, அவ மட்டுமே உன் உலகம் இல்லைடா. இனி அவளைப் பொறுப்பா நான் பார்த்துப்பேன்” என்று உறுதியான குரலில் சொன்னதும், “அண்ணி… நீங்க தீபுக்குட்டியை நல்லா பார்த்துப்பீங்க. எனக்கும் அண்ணாவுக்கும் பூரண நம்பிக்கை இருக்கு அண்ணி” என்றாள் அவசரமாக.

வேதாவிற்கு சிரிப்பே வந்துவிட்டது. “நான் அதை சொல்லலை கவி…” என்றவளுக்கு இவளுக்கு என்ன விருப்பம் இருக்கிறது என்பதைக் கூட இவள் யோசிக்கவில்லையே எப்படி சொல்லி புரியவைக்க என்றிருந்தது.

அண்ணியின் அலைப்புறுதலும் கவலையும் ஏனென்று புரியாமல், “இப்பதான் கவின், தீபாலியைப் பார்த்துக்கிட்டே உங்ககிட்ட நான் எம்பிராய்டரி கத்துக்கிறேனே அண்ணி… இதுவே நல்லாத்தானே இருக்கு?” என்றாள் கவிதா, அதே அப்பாவித்தனத்துடன். என்னவோ இதை செய்கிறேன் தானே என்கிற அவளின் பெருமிதமான பதிலில் வேதிகா ரொம்பவும் சோர்ந்து போனாள்.

வேதிகா தன் வாழ்வில் நேர்ந்த அவலத்திலிருந்து மீண்டெழத் துணிவின்றி, தன் படிப்பைப் பாதியில் பலி கொடுத்தபோது… அவளின் கனவுகள் அவளது கண்முன்னேயே கருகிப் போயின. வேறு வழியின்றி தனக்குத் தெரிந்த இந்தக் கைத்தொழிலை மட்டுமே மூலதனமாகக் கொண்டுதான் இன்று மெல்ல முன்னேறிக் கொண்டிருக்கிறாள்.

ஆனால் கவிதா… இவள் அப்படியல்லவே! படிப்பை முறையாக முடித்தவள். தன் தகுதிக்கேற்ற ஒரு கௌரவமான வேலையைத் தேடிக்கொள்ளும் அத்தனை வாய்ப்புகளும் இவளுக்குக் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. அப்படியிருந்தும், ‘உங்களுக்கு உதவியாக இருந்தால் அதுவே போதும்!’ என்று இவள் மிகச் சாதாரணமாகச் சொல்கிறாளே என்று ஆற்றாமையாக இருந்தது. தன்னிடம் இல்லாத தகுதி இந்தப் பெண்ணிடம் இருந்தும், அதை அவள் சாதாரணமாகக் கடந்து போவதை வேதிகாவால் ஜீரணிக்கவே முடியவில்லை.

கணவனிடம் பேசி எப்படியாவது ஒரு வழி காண வேண்டும் என்று வேதிகா உறுதியாக எண்ணிக் கொண்டாள். கவிதாவைப் பார்த்து, “கொஞ்சம் நிதானமா யோசி கவி. உனக்குன்னு ஒரு வேலைன்னா அது எதுவா இருந்தா நல்லா இருக்கும்னு யோசி… டீச்சர், அட்வகேட், பேங்க் ஜாப்னு எவ்வளவோ இருக்கு. ஒன்னும் அவசரம் இல்லை, நீ நாளைக்குக்கூட யோசிச்சுச் சொல்லு” என்று தணிந்த குரலில் வலியுறுத்தினாள்.

பேங்க் ஜாப் என்று சொன்னபோது அவள் குரலிலிருந்த ஏக்கத்தை புரிந்து கொள்ளுமளவு பக்குவம் கவிதாவுக்கு இருக்கவில்லை.

அண்ணியின் பேச்சில் குழப்பத்தோடு தலையசைத்த கவிதாவின் கண்கள் ஏதோ ஒரு புதிய தேடலில் ஆழ்ந்தன. கல்யாணியின் அதிகாரத்தை மீறி வேதிகாவால் நினைத்ததைச் சாதிக்க முடியுமா என்பதுதான் இப்பொழுது பெரும் கேள்வியாக இருந்தது.

இவர்கள் இருவரும் அறைக்குள் முடங்கி கிடப்பதும், சிரித்துப் பேசி மகிழ்வதும் கல்யாணியின் வயிற்றில் அமிலத்தைச் சுரக்கச் செய்தது. அறை வாயிலை அடிக்கடி எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தவர், அன்று வீட்டிற்கு வந்த மூத்த மகள் மாலதியிடம் தன் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டார்.

மாலதிக்கும் அவர்களின் பிணைப்பு துளியும் பிடிக்கவில்லை. தனியாக கவிதா அகப்பட்டதும், அவளைப் பார்த்துக் கேவலமாக முகம் சுளித்தவள், “அவளே தரங்கெட்டவ… அவகூட உனக்கென்னடி கூட்டு? ஊர்ல உன்னைப் பத்தி என்ன நினைப்பாங்கன்னு கொஞ்சம் கூட அறிவில்லையா?” என்று நஞ்சைக் கக்கினாள்.

அண்ணியை இப்படி பேசுவது கவிதாவுக்கு மனதிற்கு கஷ்டமாக இருந்தது. முகம் வாட, “அண்ணியைப் பத்தி தப்பா பேசாதக்கா” என்றாள்.

“நான் என்ன இல்லாததையா சொன்னேன்? அவ லட்சணம் தான் ஊருக்கே தெரியுமே! இந்த அம்மா வாயை வெச்சுட்டு சும்மா இல்லாம தீபாலியை எங்கேயாவது ஆசிரமத்துல சேர்த்து விட்டுடறேன்னு சொல்லப்போயி, இந்த அண்ணன் புத்திகெட்டத் தனமா இவளை போயி கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கான். இலவச இணைப்பா ஒரு பையன் வேற… எப்படித்தான் அப்பன் பேரு தெரியாத குழந்தையை எல்லாம் வெச்சுட்டு வெளிய நடமாடறாளோ? அழகுன்னு ஒன்னு இருந்துட்டா போதும் என்ன வேணா சாதிக்கலாம் போல… மூஞ்சியை வேற ஒன்னும் தெரியாத மாதிரி பாவமா வெச்சுக்க தெரிஞ்சிருக்கு. ஆனா அவளுக்கு வந்த வாழ்வை பாரேன்!” என்றெல்லாம் பேசிக் கொண்டே போனாள்.

எங்கே அண்ணியின் காதில் இந்த பேச்செல்லாம் விழுந்து விடுமோ என கவிதாவுக்கு மிகவும் தவிப்பாக இருந்தது. அக்காவின் வரைமுறையற்ற பேச்சு பிடிக்காமல் அவ்விடத்தை விட்டு நகரப் பார்த்தாள்.

அவள் செல்வது பிடிக்காமல், அவளது கையைப் பலமாகப் பற்றி இழுத்துத் தடுத்தாள் மாலதி. “எங்கடி ஓடுற? இங்கே ஒருத்தி பேசிட்டு இருக்கேன், நீ பாட்டுக்கு மதிக்காம போயிட்டு இருக்க” என்று சீறினாள்.

“ஏன்க்கா… அவங்க என்ன சூழ்நிலையில இத்தனை கஷ்டத்தையும் அனுபவிச்சாங்கன்னு நம்மளும் கேள்விப்பட்டோம் தானே? எந்தத் தப்புமே செய்யாம ஒரு தண்டனையை அனுபவிக்கிறது எவ்வளவு பெரிய கொடுமை? நாமளே இப்படிப் பேசலாமா? என்ன இருந்தாலும் அவங்க நம்ம அண்ணி… நாமளே இப்படி விட்டுக்கொடுத்துப் பேசுறது நமக்கே அசிங்கமில்லையா?” என்று மாலதியிடம் கண்கள் கலங்கக் கெஞ்சினாள் கவிதா.

“ச்சீ… உனக்கெல்லாம் என்ன சொன்னாலும் புரியாது. எக்கேடும் கெட்டு ஒழி! அவ ஏதோ ஒரு கதையைச் சொல்லறான்னா, அதையும் நம்ப இங்கே ஒரு கூட்டம்… அதெப்படிடி, யாரு கூட இருந்தான்னு கூட அவளுக்குத் தெரியாமப் போயிருக்கும்? இல்லை, கணக்கே இல்லாமப் பல பேர் கூடப் போய் வந்திருப்பாளோ என்னவோ…” என்று மாலதி நஞ்சைக் கக்கினாள்.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும், “ஐயோ!” என்று காதை பொத்திக்கொண்டு கவிதா அலறிவிட்டாள். மாலதியின் அந்தக் கொடிய வார்த்தைகள் கவிதாவின் உடல் முழுவதையும் ஒரு கணம் தூக்கிப் போட்டது.

“அக்கா… நானும் பொறுமையாத்தான் போறேன். ஆனா நீ மனிதாபிமானமே இல்லாம இப்படி எல்லாம் பேசுறியே! அவங்களைப் புரிஞ்சுக்க முயற்சி செய்யாட்டியும் பரவாயில்லை, தயவுசெஞ்சு இந்த மாதிரி கேவலமா பேசாதே. இப்போ நீ தேடிக்கிற இந்தப் பாவத்தை எல்லாம் எத்தனை புண்ணியம் செஞ்சாலும் உன்னால கழிக்க முடியாதுக்கா!” என்று கலங்கிய குரலில் கோபத்தோடு கவிதா சொல்ல,

“ஆமாம்டி கூடப்பிறத்தவளுக்கே சாபம் கொடு. ஆனா ஊரு மேயறவளுக்கு வக்காலத்து வாங்கிட்டு வா” என்று மாலதி ஆங்காரத்துடன் எள்ளலாகக் கூறினாள்.

இவளிடம் பேசுவதே வீண் என்று தோன்றியது போல, அக்காவை அருவருப்பாக பார்த்தபடி கவிதா அங்கிருந்து திரும்ப, மீண்டும் அவளின் கையைப் பற்றி தடுத்தாள் மாலதி. ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தவள், தன் கையை வெடுக்கென்று உருவிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

மாலதி கொஞ்சமும் ஓய்வு தராமல் வேதிகாவை வேலை ஏவிப் படுத்தி எடுக்க, இரவில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதால் சரியாக உறங்காதவளுக்கு உடல் மிகவும் சோர்ந்து போனது.

அருள்மித்ரன் மாலையில் வீட்டிற்கு வந்ததுமே, மனைவியின் வாடிய முகத்தைக் கண்டே அவளது நிலையைப் புரிந்து கொண்டான். அவளைக் கவனித்தபடியே அறைக்குள் சென்றவன், இன்று முடிக்க வேண்டும் என்று அவள் எடுத்து வைத்திருந்த எம்பிராய்டரி வேலைகள் பாதியிலேயே முடிக்கப்படாமல் கிடப்பதைக் கவனித்தான்.

மாலதி வந்திருப்பதால் அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை அவனால் எளிதாக யூகிக்க முடிந்தது. அவனாக முன்வந்து விசாரித்துக் கேட்டாலும், “அதெல்லாம் ஒன்றும் இல்லை” என்று சொல்லி மழுப்பி விடுவதில் அவனது மனைவி கில்லாடி! தன்னவளை என்ன செய்வது என்று தெரியாத நீண்ட பெருமூச்சு அவனிடம்.

பொதுவாக அருள் வீட்டிற்கு வந்தால், அவனுக்காகச் சூடான தேனீருடன் வேதிகாதான் அறைக்கு வருவாள். ஆனால், மாலதி வீட்டில் இருக்கும் நாட்களில் ஏனோ வேதிகா அப்படி வருவதில்லை என்பதால், கவிதாவின் கையால்தான் தேநீர் கிடைக்கும்.

இன்று என்ன நடந்தது என்று கவிதாவிடம் விசாரிக்கலாம் என்கிற எண்ணத்துடன், முகம் கை கால்களைக் கழுவிக்கொண்டு அவன் அறைக்கு வரவும், கவிதாவும் தேநீருடன் அங்கே வந்து சேர்ந்தாள். அண்ணனைக் கண்டதும் அதுவரை அடக்கி வைத்திருந்த மாலதியின் நஞ்சான பேச்சுகளை மொத்தமாகக் கொட்டித் தீர்த்துவிட்டாள்.

கவிதா சொன்னதைக் கேட்ட அருள்மித்ரனுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. “உன் அண்ணி இதெல்லாம் கேட்டுட்டாளா கவி?” என்று கேட்டான், பெரும் பரிதவிப்புடன்.