மழைவர பூமி மறுத்திடுமா? – 3

தீபாலியைப் பரிவுடன் நோக்கி, “குழந்தையை யாரு பார்த்துக்கிறாங்கப்பா?” என்று கேட்டார் அசோகன்.

அருள்மித்ரனிடம் சன்னமான பெருமூச்சொன்று வெளிப்பட்டது. “வீட்டுல அம்மாவும், தங்கச்சியும் இருக்காங்க சார்” என்றான். பார்வை என்னவோ அவர்களை எதிர்கொள்ளவே தயங்கியது. கணவனும் மனைவியும் தன்மீதும், தன் மகள் மீதும் அனுதாபப் பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவனால் உணர முடிந்தது. என்னவோ அதை எதிர்கொள்ளவே முடியவில்லை.

“கேட்கவே வருத்தமா இருக்குப்பா. உன் வாழ்க்கை சீக்கிரமே நல்லபடியா மாற கடவுளை வேண்டிக்கிறேன்” என்றார் ஆறுதலுடன். உயிர்ப்பின்றி சின்ன சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தான். தன் மகளுக்கும் அந்த அம்மா உணவை ஊட்டிக்கொண்டிருக்க அவனால் ஏதாவது காரணம் சொல்லி அங்கிருந்து திரும்பிப் போகவும் வழியில்லை.

அவனின் சங்கடம் புரிந்து, தொழில் எப்படி போகிறது என்று பேச்சைத் திசை மாற்றினார். அவனும் கொஞ்ச நேரத்தில் இலகுவாகி விட்டான்.

சற்று நேரத்தில், “அண்ணா, நீங்க சாப்பிட்டு வந்தா கிளம்பலாம்ன்னு அம்மா சொன்னாங்க” என்றபடி கவிதா அவ்விடம் வந்தாள்.

அருள் திரும்பி பதில் சொல்வதற்குள், தீபாலிக்கும் சேர்த்து ஓர் அம்மா உணவை ஊட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்தவள், “அச்சோ! பாப்பாவுக்கு ஊட்டி விடணும்ன்னே மறந்துட்டு நான் மட்டும் சாப்பிட்டு வந்திருக்கேன் பாருங்கண்ணா… அவளுக்கு கொண்டு வந்த பாலையாச்சும் உங்ககிட்ட கொடுத்துட்டு போயிருக்கலாம்” என்றாள் தவறு செய்துவிட்ட பாவனையில் குற்றவுணர்ச்சியுடன்.

கவினுக்கும் தீபாலிக்கும் உணவினை ஊட்டி விட்டுக்கொண்டிருந்த யமுனாவிற்கு இந்த பெண்ணின் சங்கடம் வினோதமாக இருந்தது. அவளின் வயதிற்கு அப்படியெல்லாம் யோசித்து செயல்படத் தோன்றாது தான்! அதற்குப்போய் ஏன் கலங்குகிறாள்? பேத்தியின் பொறுப்பை இந்த பையனின் அம்மா தானே பார்த்திருக்க வேண்டும், அப்படி செய்திருந்தால் இந்த குழந்தையின் வயிற்றையும் கவனித்திருப்பாரே என்று அவரின் யோசனை சென்றது.

அருள் கவிதாவிடம் “பரவாயில்லை விடும்மா” என சமாதானமாக சொன்னவன், “நீ பாப்பாவை வெச்சுக்க, நான் போயி சாப்பிட்டு வரேன்” என்று தீபாலியை அவளின் கையில் தந்துவிட்டு,

“வரேன் சார், வரேங்கம்மா. பாப்பாவுக்கும் சேர்த்து சாப்பாடு ஊட்டி விடறீங்க, ரொம்ப தேங்க்ஸ்” என்று அத்தனை நேரமும் நன்றி கூட சொல்லவில்லையே என்கிற சங்கடத்துடன் யமுனாவிடம் நன்றியுரைத்தான்.

அருள் திடீரென்று தன்னிடம் நன்றி கூறி பேசியதில் தன் யோசனைகளிலிருந்து மீண்டவர், “அதுல என்ன இருக்கு தம்பி, இவனுக்கு ஊட்டி விடும்போது சின்ன குட்டிக்கும் தரேன். அவ சாப்பிடற ஒரு வாய் சாப்பாட்டுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்லறீங்க. நீங்க போயி சாப்பிட்டு வாங்க. அப்பறம் மறக்காம நேரம் இருக்கப்ப வீட்டுக்கும் வாங்க தம்பி. இந்த குட்டி பொண்ணு மனசுல நிறைஞ்சு நின்னுட்டா” என்றார் சிரிப்புடன்.

கள்ளம் கபடமில்லாத அவரின் அன்பு அவனை நெகிழ்த்தியது. அவரைப் பார்த்து சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கும் ஆனாலும் அவர்கள்மீது பரிவு காட்டுகிறார்; இரத்த சொந்தங்களே ஒதுங்கி நிற்கும் இந்த காலத்தில், இந்த அம்மாவின் அன்பு அவனுக்கு மிகவும் பெரியதாக தோன்றியது. நல்ல மனம் கொண்டவர் என்று மனதார நினைத்தவன், வீட்டிற்கு வருகிறேன் என்றும் சொல்லாமல், மாட்டேன் என்றும் மறுக்காமல் சிரித்து மட்டும் வைத்தான்.

“சும்மா சம்பிரதாயத்துக்கு கூப்பிடறேன்னு நினைக்காதீங்க தம்பி. கண்டிப்பா வீட்டுக்கு வரணும்” என்று மீண்டுமொருமுறை அழுத்திச் சொல்ல, அவர் மீண்டும் மீண்டும் சொல்வதால் வேறு வழியின்றி, “சரிங்கம்மா” என்றான் அவனும். அவனைப் பெற்ற அன்னையே அவன் மகளை ஒதுக்கி நிறுத்த, இந்த அம்மா பார்த்த நிமிடத்திலிருந்து காட்டும் பரிவு உண்மையில் அவனை வியக்க வைத்தது.

அருள் அவர்களிடமிருந்து விடைபெற்று உணவை உண்பதற்காகச் செல்ல, “அந்த குடும்பத்துக்கூட உனக்கு என்னடா பேச்சு?” என அவனின் அம்மாவும், மூத்த தங்கை மாதவியும் அவனை வழியில் பிடித்துக் கொண்டார்கள்.

புருவம் சுருங்க, அன்னையை அவன் கேள்வியாக ஏறிட, “போனவன் வருவேன்னு பார்த்தா ஒட்டு மொத்த குடும்பத்துகிட்டயும் கதை பேசிட்டு இருக்க. உன்னை கூட்டிட்டு வர சொல்லி உன் தங்கச்சியை அனுப்பினா, இப்ப அவ அங்க நின்னுட்டு இருக்கா?” என்றார் எரிச்சலுடன்.

அருளுக்கு ஒன்றும் புரியவில்லை. “அங்கே இருக்கிற அம்மா, அவங்க பேரனுக்கு சாப்பாடு ஊட்டிட்டே நம்ம தீபு குட்டிக்கும் ஊட்டி விடறாங்கம்மா, அதோட அந்த சாரும் என் கடைக்கு ரெகுலரா வரவரு. அதுதான் பேசிட்டு நின்னுட்டு இருந்தேன்” என்று இவன் எடுத்துச் சொல்ல,

“தொழில் விஷயம் தொழில் செய்யற இடத்தோட நிறுத்திக்க, தெரிஞ்சவங்க அப்படிங்கிறதுக்காக இப்படி அவங்க குடும்பத்து கிட்ட ஒட்டி உறவாடணும்ன்னு அவசியம் இல்லை” என்று கடுப்பாகக் கல்யாணி சொல்ல, சில நிமிடங்கள் நின்று அவர்களிடம் பேசுவது எப்படி ஒட்டி உறவாடும் வகையில் சேரும் என அருளுக்குச் சுத்தமாகப் புரியவில்லை.

மாலதியும், “என்னண்ணா யாரு என்னன்னு பார்த்து பேசறதில்லையா? அந்த பொண்ணுக்கு கல்யாணம் கூட ஆகலை. ஒரு குழந்தையை பெத்து வெச்சுட்டு இருக்கா. அது அப்பன் பேரு தெரியாத குழந்தை. இப்படி தரங்கெட்டவங்க கூட நமக்கென்ன சகவாசம்?” என்று முகத்தை சுளித்தபடி சொல்ல, அவன் அதிர்ந்து போனான்.

அத்தனை அமைதியாக, சாந்தமாக இருந்த பெண்ணிற்கு இப்படியொரு கொடுமையா என்றுதான் அவனின் மனம் எண்ணியது. திருமணமாகாமல் ஒரு பெண் குழந்தையைச் சுமக்க வேண்டும் என்கிற நிர்பந்தமும், அதனால் அவளும் அவளின் குடும்பமும் எதிர்கொள்ளும் இன்னல்களும் எத்தனை இருக்கும் என்றுதான் அவனது யோசனை போனதே தவிர, ஏனோ அந்த பெண்ணை அவனால் தவறாக நினைக்க முடியவில்லை.

ஒன்றுமே பதில் சொல்லாமல் அண்ணன் இருக்கவும், “நான் போயி கவிதாவை கூட்டிட்டு வரேன்” என்றாள் மாதவி கோபமாக.

அவளை தடுக்கும் விதமாக, “எதுக்கு?” என்று அருள் கேட்கவும், அண்ணனுக்கு என்ன நான் சொன்ன விஷயம் புரியவில்லையா என்பது போல முகத்தைக் கோணலாக்கியவள், “நான் தான் சொன்னேனே அண்ணா…” என மாலதி மீண்டும் தொடங்க,

“பாரு மாலதி, ஒரு பொண்ணை கரை சேர்க்கிறது எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்கும் தெரியும். அப்படி சேர்க்க முடியாம கஷ்டத்தை அனுபவிக்கிறவங்க அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக அவங்களை ஒதுக்கி வைக்கணும்ன்னு நினைக்கக் கூடாது” என்றான் அழுத்தமாக.

மாலதிக்கு அண்ணன் பேசுவது புரியவில்லை. அன்னையைப் பார்த்தாள். கல்யாணியும் மகன் அந்த வீட்டைக் குறை சொல்லவில்லை என்றளவில் புரிந்து கொண்டு, “உன் தங்கச்சி இவ்வளவு விளக்கமா சொல்லியுமா உனக்கு புரியலை? அந்த பொண்ணு செஞ்ச அசிங்கத்துக்கு…” என தொடங்க,

வேகமாக இடையிட்டவன், “என்னம்மா உங்க பிரச்சனை? அசிங்கம் யாரு செஞ்சாலும் அந்த குப்பையை ஒரு பொண்ணு தான் சுமந்தாகணும். அதுக்காக அவ தப்பு செஞ்சாளா இல்லையான்னு தெரியாமலேயே இப்படி எல்லாம் பேசறீங்க, பேசாம இருங்கம்மா. உங்களுக்கு சொந்த பேத்தியவே பிடிக்காது. இதுல அடுத்தவங்களை தான் நல்லவங்கன்னு சொல்லிட போறீங்களா?” என்று எரிந்து விழுந்துவிட்டு உணவுண்ண சென்றான்.

எப்பொழுதும் கல்யாணி தான் மகனை, மகளை எல்லாம் திட்டுவார், மட்டம் தட்டுவார். அதனை பிள்ளைகள் எதிர்வாதம் செய்யாமல் கேட்டுக்கொள்ள வேண்டும், இன்றோ மகன் இப்படி எடுத்தெறிந்து பேசியதில் அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“இவனை எல்லாம் பெத்து வளர்த்ததுக்கு எவளோ ஒருத்திக்கு என்கிட்ட பரிஞ்சு பேசிட்டு போறான் பாத்தியா? சம்பந்தமே இல்லாம கரிசட்டி மாதிரி என் வயித்துல வந்து பொறந்த தரித்திரம் ஒன்னு, ஏற்கனவே இருக்க சுமை போததுன்னு உன் அண்ணிக்காரி பெத்து போட்டுட்டு செத்து போன தரித்திரம் ஒன்னுன்னு இதுங்களையெல்லாம் வீட்டுல வெச்சுட்டு நான் படற பாடு என்ன, இவன் என்னையவே எதிர்த்து பேசறான். சமயம் கிடைக்கட்டும் வெச்சு உண்டு, இல்லைன்னு பண்ணிடறேன்” என மாலதியிடம் கருவியவர், கோபத்தில் இன்னும் கொஞ்சம் கத்திக் கொண்டிருந்தார்.

இவர்களின் வாயில் பத்தோடு பதினொன்றாக அரைபட்டுக் கொண்டிருந்த வேதிகாவின் மனநிலை என்னவென்று அவளாலேயே கணிக்க முடியவில்லை. போதும் போதும் என்கிற அளவில் ஏற்கனவே வார்த்தை அம்புகளால் வதைபட்டு, மூச்சு முட்டிப்போய் உணவுக் கூடத்திலிருந்து வெளியில் வந்தவள், தனது கையினை கழுவிக் கொண்டிருந்தபோது தான் இவர்கள் மூவரின் பேச்சுக் குரலும் அவளுக்குக் கேட்டிருந்தது.

சற்று நேரத்திலேயே அவர்கள் பேசிக்கொள்வது அவளைப் பற்றித்தான் என்று அவளுக்கு புரிந்து போனது. மனம் கனக்க நகரப் போனவள், அந்த ஆணின் குரலில் திகைத்து நின்று விட்டாள்.

யார் என்றே தெரியாத ஒருவன், அவள் மீது களங்கம் இல்லை என்று சொல்கிறான். இது எப்படி சாத்தியம் என்று என்ன யோசித்தும் அவளுக்குப் புரியவில்லை. இதற்கும் அவளைக்குறித்து எதுவுமே அவனுக்குத் தெரியாது. அவளை நன்கு அறிந்திருந்த அவளின் சுற்றத்தில் கூட அவள்மீது தவறில்லை என்று ஒப்புக்கொள்ள பெரும்பாலானோருக்கு மனமில்லை. ஆம்! பெரும்பாலானோருக்குத் தான்! அவளைப் பற்றி நன்றாகத் தெரிந்த சிலர் இன்றும் அவளை நம்புகிறார்கள்! அவளுக்கு உறுதுணையாக நிற்கிறார்கள். அவளின் பெற்றோரைப் போலவே! அந்த நம்பிக்கை மட்டும் தான் அவளின் ஒரே பற்றுகோல்.

அவளே அறியாமல் ஓர் விபத்து நடந்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு மேலான பிறகும், வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தவளை, நீ வெளியில் வந்தே ஆக வேண்டும் என சொன்னதும், அனைவரையும் எதிர்கொள், எத்தனை நாட்களுக்கு யார் பார்வையிலும் படாமல் வாழ்வாய் என வற்புறுத்தி அழைத்து வந்ததும் அவளின் பெற்றவர்களான அசோகனும், யமுனாவும் தான்!