வீட்டில் தனக்கு ஒருத்திக்கு மட்டும் சமைக்க வேண்டும்; எங்கும் போக வேண்டுமென்றாலும் தனியாகவே போய் வர வேண்டும். மூச்சு முட்டும் தனிமை… கல்யாணிக்கு பெரும் கொடுமையாகத் தோன்றியது. தன்னை ஒரு அநாதையைப் போல உணர்ந்தார்.

மகள் மாலதியோ… தன் தாய் தனக்கு ஏதோ ஒரு மாபெரும் கொடுமை செய்துவிட்டது போல அவரை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டாள்; கவிதாவோ வெறும் கடமைக்காக வாரம் ஒருமுறை மட்டும் வந்து எட்டிப் பார்த்துவிட்டுச் செல்கிறாள். யார் வீட்டுக்கும் அவரால் உரிமையோடு போக முடியவில்லை. கணவனின் வீடு, கடை என எல்லாமே இப்பொழுது அவரது வசம்தான் இருக்கிறது; ஆனால், நிம்மதி மட்டும் அவரை விட்டு ஒட்டுமொத்தமாக ஓடிப்போயிருந்தது!

*** முதல் முறை வங்கித் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறத் தவறிய வேதிகா, மீண்டும் தன் முழு முயற்சியுடன் கடுமையாக உழைத்துத் தேர்ச்சி பெற்றிருந்தாள்! அவள் ஒரு வங்கியில் வேலைக்குச் சேர்ந்து ஆறு மாதங்கள் கடந்திருந்தன. தன் கணவன் அருள்மித்ரனின் கடன்களை விரைவாக அடைப்பதற்காக… அவன் எவ்வளவு தடுத்தும் கேட்காமல், அவளும் தன் சம்பளப் பணத்தைத் தந்து உதவிக் கொண்டிருக்கிறாள்.

அவன் சுற்றி வளைத்து ஆயிரம் கதைகள் சொன்னாலும்… வேதிகா அதைத் தன் காதில் வாங்கிக்கொள்வதே இல்லை. அவனுக்கு அவளும் கைகொடுக்க… அவர்களது குடும்பக் கடன் மிகச் சீக்கிரமாகவே குறைந்து வந்தது

அத்தோடு நின்றுவிடாமல்… அவன் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தி, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதுவதற்கான சேர்க்கைப் படிவங்களையும், பாடப் புத்தகங்களையும் அவனிடம் வாங்கி வந்து நீட்டினாள். அதைக் கண்டு பதறிப்போன அருள்மித்ரன், ‘என்னடி இது?’ என்கிற ரீதியில் அவளைப் பார்க்க… “நீங்கதானே அன்னைக்குச் சொன்னீங்க… படிக்க வாய்ப்பிருந்தா கண்டிப்பா படிச்சிருப்பேன்னு! இப்ப உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு, ஒழுங்கா படிங்க…” என்றாள் மனையாள் கட்டளையாக!

அவளைப் படிக்க வைக்க அன்று அவன் வாய்விட்டிருந்ததில்… இப்பொழுது அவன் மிக அழகாக மாட்டிக் கொண்டான். ஆனால், பல வருடங்களுக்கு முன்பு பாதியிலேயே விடுபட்டுப்போன படிப்பை… இப்பொழுது இந்த வயதில் எப்படி மீண்டும் படிக்க முடியும் என்று அவனுக்குப் புரியவில்லை. அதை அவளிடம் சொல்லவும் செய்தான்.

தான் இழந்த கனவுகள் யாவும் அவளே எதிர்பாரா விதமாக கைகூடி வந்த பிறகும், அவனுடைய கனவுகளை அவள் மீட்காமல் விட்டால் எப்படி? அவனது கல்விக்கு அவள் உதவி செய்தாள்.

“படிப்பு ஒருபக்கம்… நம்ம குடும்பம் நடத்துறது ஒருபக்கம்… இதுக்கும் மேல என்னால பட்டினி கிடக்க முடியாது…” என அவளிடம் பேரம் பேசித்தான் படிக்கவே சம்மதம் சொன்னான் அருள். மீண்டும் தடா போட்டுவிடப் போகிறாள் என்கிற முன்னெச்சரிக்கையோடு!

அவனது பேச்சைக் கேட்டுத் நமட்டுச் சிரிப்பை உதிர்த்தவள், “அப்பவும் நான் உங்களைப் பட்டினி கிடக்கச் சொல்லலையே… நீங்களா இருந்தா அதுக்கு நானா பொறுப்பு?” என்று அவனது காதோரம் ரகசியமாகக் கிசுகிசுத்தாள்.

‘அடிப்பாவி..!’ என்று விழி விரித்தவன், அவளது இதழ்களை கடித்து இழுத்து, “உனக்கு பாவம் பார்த்தா… என்னவெல்லாம் பேசற நீ?” என்று போலியாகக் கண்டித்தான்.

தன் இதழ்களை மெல்லத் தேய்த்து விட்டுக் கொண்டவளோ, “முதல்ல இன்னைக்கு படிக்க வேண்டியதை ஒழுங்கா படிச்சு முடிங்க… அப்புறம்தான் இதெல்லாம்!” என்றாள் செல்ல மிரட்டலாக. “சரி சரி… சீக்கிரம் வந்து சொல்லிக்கொடு…” என்று மிகுந்த ஆர்வமாகப் படிக்க அமர்ந்தவனுக்கு அப்பொழுது தெரிந்திருக்க நியாயமில்லை… அவனது மனைவி இவனை இந்த ப்ளஸ் டூ படிப்போடு மட்டும் நிறுத்தப் போவதில்லை, அடுத்து ஒரு பட்டப்படிப்பு வாங்க வைக்கும் வரை பின்னாடியே துரத்தப் போகிறாள் என்று! என்னவோ அவன் பாடு, அவள் பாடு!

அருளின் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்ததுதான் தாமதம்… வேதிகா தான் வேலை செய்யும் வங்கியிலேயே கடன் பெற்று, டிவிஎஸ் நிறுவனத்தின் டீலர்ஷிப்பும் வாங்கி, தன் கணவனுக்குச் சிறிய அளவில் ஒரு டூவீலர் ஷோரூம் வைத்துக் கொடுப்பதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கினாள். அவளது வேகத்தைக் கண்டு அருள்மித்ரன் அரண்டு போனான்.

“கடனுக்கு மேல கடன்…” என அருள் ஆட்சேபிக்க, “வளர்ச்சிக்கு மேல வளர்ச்சி” என்று அவனின் வாயை அடைத்தாள்.

“அகலக்கால் வைக்கக் கூடாது வேதிம்மா… ஏற்கனவே இருக்கிற கடன் எல்லாம் இன்னும் முழுசா அடையாம, இப்படி மேல மேல கடன் வாங்கினா அதுக்கு என்ன அர்த்தம்?” என அவளிடம் கோபித்துக் கொண்டான்.

அவளோ தன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு, அவனை முறைத்தபடி நின்றிருந்தாள். “அழகி… மெல்ல மெல்ல முன்னேறுவோம்டி… நமக்கு இன்னும் காலம் இருக்கு…” என்று அவளது கோபத்தைக் கண்டு இறங்கி வந்து கெஞ்சினான் அருள்.

“மெல்ல மெல்லன்னா… நாம ரெண்டு பேரும் கிழவன், கிழவி ஆனதுக்கு அப்புறமாங்க? கவினை ஸ்கூல்ல சேர்த்தாச்சு; இந்த வருஷம் நம்ம தீபுக் குட்டியையும் ஸ்கூல்ல சேர்க்கணும்… இனி அடுத்து வரப்போற நம்ம பிள்ளையும் வேற இருக்கு…” என்றாள் வேதிகா. அவள் சொன்ன அந்த இறுதி வார்த்தையைக் கேட்டதும், அருளின் விழிகள் அதிர்ச்சியில் அகல விரிந்தன! அவனால் கேட்டதைச் சற்றும் நம்பவே முடியவில்லை.

“வேதிம்மா இப்ப நீ என்ன சொன்ன?” என்றான் பரபரப்புடன்.

“அதுதான் உங்களுக்குத் தெளிவா கேட்டுச்சே…” என்று தன் முகத்தை இன்னும் முறைப்பாக வைத்துக் கொண்டு, வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள் வேதிகா.

“என்னடி… இவ்வளவு பெரிய விஷயத்தை இத்தனை சாதாரணமா சொல்ற? நீ எப்படி சமாளிப்ப?” அவனுக்கு அதுதான் பெரும் கவலையாக இருந்தது.

“அதை புள்ளை கொடுக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும் நீங்க!” என்று அவள் பட்டென்று சொன்னதும், அருள்மித்ரன் அதிர்ச்சியில் தன் வாயிலேயே கை வைத்துக் கொண்டான். குழந்தை உண்டாகாமல் இருக்க, மருத்துவரிடம் கலந்தாலோசித்து மருத்துவ மாத்திரைகள் எல்லாம் வாங்கித் தந்திருக்கிறான்; இப்பொழுது இவள் இப்படிச் சொன்னால்?

அவளையே மிகவும் பாவமாகப் பார்த்தவன், “உனக்கு கஷ்டம் தானேடி…” என்றபடி, அவளது மணிவயிற்றைத் தன் கரங்களால் இதமாகத் தடவிப் பார்த்தான். அவனது கண்கள் லேசாகக் கலங்கிவிட்டன. அவன் சற்றும் எதிர்பாராமல் கிடைத்த சந்தோஷம் அல்லவா?! ஆனால், அவனுக்கு கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

“சாமாளிச்சுப்பியா?” என்று மிகுந்த பரிதவிப்புடன் அவளிடம் மீண்டும் கேட்டான். மாத்திரையையும் மீறி, தப்பி உதித்த குழந்தை இது என்றுதான் எண்ணிக்கொண்டான் அவன்.

அவனது எண்ணத்தைப் புரிந்துகொண்டவள் போல, “நான் தான் போன மாசம் மாத்திரையை எடுத்துக்கலை… என்னால சமாளிக்க முடியாதுன்னா எடுத்துக்காம இருப்பேனா?” என்று அவள் நிதானமாகச் சொல்லவும்… அவன் மீண்டும் பேரதிர்ச்சியடைந்து தன் வாயில் கை வைத்துக் கொண்டான்

‘கேடி! இதனால்தான் ஆபரேஷன் செய்து கொள்ளலாம்; நீ செய், இல்லாவிட்டால் நான் செய்து கொள்கிறேன்’ என்று இவன் சொன்னபோதெல்லாம் இவள் மறுப்புத் தெரிவித்து வந்தாளா?!

‘இவள் மட்டும் எப்படி ஓர் அட்சய பாத்திரம் போல வரங்களை இப்படி வாரி வாரிக் கொடுக்கிறாள்?’ அவனது அகம் வியந்து நின்றது.

“வேதிம்மா… எனக்கு கண்ணு கலங்குதுடி… நீ எப்படி ஒரு மந்திரக்கோல் வச்ச மாதிரி, மொத்தமா என் வாழ்க்கையையே இப்படி மாத்திட்ட!” என்று அருள்மித்ரன் தழுதழுத்த குரலில் கேட்டு, அவளைத் தன் நெஞ்சோடு அள்ளிக் கட்டியணைத்துக் கொள்ளவும்… அவளின் இதழ்கள் புன்னகையில் அழகாக விரிந்தன!

இவர்கள் வாழ்வு மென்மேலும் சிறக்கும் என்ற நம்பிக்கையோடு நாமும் இவர்களை வாழ்த்தி விடைபெறுவோம்.

*** சுபம் ***