பெரியம்மாக்கள் வருகிறார்கள் என்றதிலேயே இங்குப் பிரச்சனை ஏதோ பெரிதாக வெடித்திருக்கிறது என்பது வேதிகாவிற்குப் புரிந்துவிட்டது. “குழந்தைங்க நல்லா இருக்காங்கண்ணா. அம்மாகிட்ட விட்டுட்டு வந்திருக்கேன்” என்றாள் என்னவாக இருக்கும் என்ற யோசனையோடே! கவினுக்கு இந்த வீடு சொந்தமாகி விடுமோ என்ற வன்மத்தில், தன் சொந்த மகனையே வீட்டை விட்டு அனுப்புமளவிற்கு அவளது மாமியார் கல்யாணி துணிந்துவிட்டதால்… கவினை இங்கே அழைத்து வருவதற்கு அருள்மித்ரன் என்றுமே விரும்புவதில்லை. அதனால்தான், அவளும் குழந்தைகளைத் தன் அம்மாவிடம் விட்டுவிட்டு வந்திருந்தாள்.
சற்று நேரத்தில் புவனாவும் சந்திராவும் அங்கு வந்து சேர்ந்தார்கள். கவிதா அவர்கள் அனைவருக்கும் தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள்; ஆனால், யாருக்கும் அதைக் குடிக்கும் மனநிலை இருக்கவில்லை.
“என்ன சாமி… திடீர்ன்னு வர சொல்லியிருக்க? எதுவும் பிரச்சனையா?” என்று புவனா கேட்க…
“பெரியம்மா… இந்த வீடு பரம்பரை சொத்துதானே? நீங்களும் சந்திரா பெரியம்மாவும் முன்னாடியே கையெழுத்து போட்டு, பத்திரத்தை மாத்தி கொடுத்துட்டீங்களா?” என்று முரளி நேரடியாகக் கேட்டான்.
மீண்டும் வீட்டை வைத்து ஏதோவொரு புதிய பிரச்சனை கிளம்பியிருக்கிறது என்ற அளவில் அவர்கள் இருவருக்கும் புரிந்தது. அக்காவும் தங்கையும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர். “நாங்க முன்னாடியே எழுதி கொடுத்துட்டோம்ப்பா. இப்ப வீடு அண்ணி பேருலதான் இருக்கு” என்று சொன்னவர்கள்… இப்பொழுது கல்யாணியைத் தான் ஒரு மாதிரி சந்தேகமாகப் பார்த்திருந்தார்கள்.
“அதாவது நீங்க அக்காவும் தங்கச்சியுமா சேர்ந்து, உங்க கூடப் பிறந்தவருக்கு இந்த வீட்டை எழுதிக் கொடுத்தீங்க. ஆனா பாருங்க… அவரு பெத்த மகனுக்கு இதுல கொஞ்சம் கூடப் பங்கில்லைன்னு இவங்க எழுதி வாங்கியிருக்காங்க…” என்று முரளி உண்மையை உடைத்துவிட, பெரியவர்கள் இருவருக்கும் பலத்த அதிர்ச்சி.
“என்ன அருளு… மாப்பிள்ளை என்னென்னவோ சொல்றாங்க? நீ தனியாப் போய்க் குடித்தனம் இருக்கேன்னு தானே எங்ககிட்ட சொன்ன? அப்புறம் ஏன் சொத்துல பங்கில்லைன்னு பத்திரத்துல கையெழுத்து போட்டுக் கொடுத்த?” என்று புவனா பதற்றத்தோடு கேட்டார்.
அவனுக்கு அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. அம்மா செய்த துரோகத்தை ஜீரணிக்க முடியாமல், இன்னமும் இடிந்து போய் தான் அமர்ந்திருந்தான் அருள்மித்ரன்.
அவன் பதில் சொல்லப் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்ட முரளி… வீட்டில் அருளுக்கு பங்கில்லை என எழுதி வாங்கக் கல்யாணி செய்த வேலைகள், அந்தப் பத்திரத்தில் அருளின் கடையையும் சேர்த்து அவனுக்கேத் தெரியாமல் எழுதி வாங்கியிருப்பது, இப்பொழுது கடையை விற்க அம்மாவும் மகளும் சேர்ந்து திட்டமிடுவது என ஒட்டுமொத்தச் சதியையும் எல்லார் முன்னிலையிலும் சொல்லி முடித்தான்.
ஆரம்பத்தில் மாலதியின் முகத்தில் இருந்த அறை வாங்கின தடங்களைப் பார்த்து, ‘மாப்பிள்ளை அவளை ஏதோ கோபத்துல அடிச்சிருப்பாரோ’ என்ற ஒரு மெல்லிய சுணக்கமும் சங்கடமும் பெரியவர்கள் இருவருக்கும் இருக்கத்தான் செய்தது. ஆனால், இப்பொழுதுதான் மாப்பிள்ளை முரளி ஏன் அவளை அடித்திருப்பார் என்பதற்கான காரணம் அவர்களுக்கு விளங்கியது!
வேதிகா அதிர்ந்து போனாள். தன் கணவனின் மனநிலை அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது. அவனுக்கு ஆதரவாக அவனது தோளினைத் தன் கரங்களால் அழுத்தமாகப் பற்றினாள்; அவளுக்கும் கண்கள் கலங்கும் நிலை ஆகிவிட்டது. பதினேழு வயதிலிருந்தே உழைத்தவனை… இன்று இப்படியொரு நிராதரவான நிலையில் கொண்டு வந்து நிறுத்த, மாமியாருக்கு எப்படித்தான் மனம் வந்தது என நினைத்து அவளது உள்ளம் துடித்தது.
கவிதாவுக்கு இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. “சொந்தப் புள்ளைங்களுக்குக் கெட்டது செய்யறதால… அதெல்லாம் பாவக்கணக்குல வராதுன்னு எதுவும் நினைச்சுட்டீங்களாமா? எப்படி இப்படி மூட்டை மூட்டையா பாவத்தைச் சேர்த்துக்கறீங்க? இத்தனை கெட்டதும் பண்ணிட்டு உங்களுக்கு மட்டும் நல்லது நடக்கணும்னா எப்படி?” என்று ஆத்திரத்துடன் சத்தம் போட்டாள்.
“வாயை மூடுடி கரிசட்டி! உனக்கு வேலை கிடைச்சதுல இருந்து ரொம்பத்தான் ஆட்டம் ஆடற!” என்றார் கல்யாணி, அவள் தன்னை எதிர்த்துப் பேசியதைச் சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாமல்.
“என் வேலையைப் பத்தி நீங்க ஏன் பேசறீங்க? அது எங்க அண்ணி மூலமா எனக்குக் கிடைச்சது… அதைப்பத்திப் பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை!” என்றாள் கவிதா பட்டென்று.
“பெரிய அண்ணி… அதென்னடி எப்ப பார்த்தாலும் பெத்த அம்மாவை விட எவளோ ஒருத்திக்கு நீ இப்படிப் பரிஞ்சுக்கிட்டு வர்ற? உன்னை எல்லாம் பெத்தெடுத்ததுக்கு நல்ல மரியாதை தர்றடி எனக்கு!” என்றார் கல்யாணி, ஆத்திரத்தில் முகம் சிவக்க.
கவிதாவால் தன்னைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அனைவரும் கூடியிருக்கிறார்களே என்று யோசித்துக்கூடப் பொறுத்துப் போக முடியாதபடி இருந்தது அம்மாவின் சுயநலம். “வாயைத் திறந்தா கரிசட்டி, தண்டம்னு வசைபாடற நீங்க எல்லாம்… அம்மான்னு சொல்லிக்கத் தகுதியிருக்க ஆளான்னு நீங்களே சொல்லுங்க? அதென்ன எவளோ ஒருத்தி?! அவங்க என்னோட அண்ணி! நீங்க அவங்களை பண்ணாத கொடுமையெல்லாம் பண்ணினப்பவும், நான் தனியா உங்ககிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படுவேனேன்னு எனக்காக யோசிச்சு… தனிக்குடித்தனம் போகக்கூடத் தயங்கினவங்க அவங்க! அவங்களையே வீட்டை விட்டு வெளிய துரத்திவிட்ட பெருமை உங்களோடதாச்சே!
உண்மையான பாசம்னா எப்படி இருக்கும்… ஒருத்தங்க நம்மளை அரவணைச்சுக்கிட்டா மனசு எப்படி பாதுகாப்பா இருக்கும்னு என்னை முதன்முதலா உணர வச்சவங்க அவங்க! எனக்கு உங்களை விட என்னோட அண்ணி எப்பவும் உசத்திதான்…” என்றாள் கவிதாவும் அழுத்தம் திருத்தமாக.
கல்யாணிக்கு மகளது பேச்சில் முகம் கறுத்தாலும், “உன்கிட்ட வேற என்னத்தை எதிர்பார்க்க முடியும்?” என்று அந்த பேச்சை கத்தரித்தவர், “இங்கே பாரு… உன் பொழப்புக்கு அரசாங்க உத்தியோகம் இருக்கு; மாப்பிள்ளையும் அரசாங்க உத்தியோகம் பார்க்கிறவனையே உங்க அண்ணன் புடிச்சுட்டான். உன் அண்ணனுக்கு மட்டுமென்ன… ஓரளவுக்கு வசதியான வீட்டுலதானே பொண்ணு எடுத்திருக்கான்! ஒரே பொண்ணு வேற… அவங்க மொத்தச் சொத்தும் அவனுக்குத்தான் வரும். அப்ப நான் என் மூத்த மகளுக்குத்தானே எதுவும் பார்த்துச் செஞ்சு விடணும்? நீங்க ரெண்டு பேரும் மட்டும் நல்லா இருக்க… என் புள்ளை மாலதி மட்டும் ரெண்டு பொட்டைப் புள்ளைங்களை வச்சுட்டு கஷ்டப்படணுமா?” என்று தன் மனதிலிருந்த நஞ்சு முழுவதையும் ஆக்ரோஷமாகக் கொட்டினார் கல்யாணி.
மற்றவர்கள் அதற்குப் பதில் சொல்லும் முன்பு, “ஏன்… என் புள்ளைங்களைப் பார்த்துக்க வக்கிலாதவனா நானு?” என்று கோபமாகக் கேட்டான் முரளி. கல்யாணி அதிர்ந்து போய், தன் மாப்பிள்ளையைப் பார்த்தார்.
“மாப்பிள்ளை… நான்…”
“ஒன்னு பண்ணுங்க… உங்க மகளை நான் விவாகரத்து பண்ணிடறேன்! நீங்க அவளுக்கு என்ன வேணுமோ பண்ணி… உங்க கூடவே வச்சு அவ கஷ்டப்படாமப் பார்த்துக்கங்க! ஏன்னா… நான் தான் என் பொண்டாட்டியையும் புள்ளைங்களையும் பார்த்துக்க வழியில்லாம நடுத்தெருவுல இருக்கேனே…” என்று முரளி ஆத்திரத்துடன் சொன்னதும்… “என்னங்க… பேச்சுக்குக் கூட அந்த மாதிரி சொல்லாதீங்க…” என்றாள் மாலதி கதறிய குரலில். திகைத்து எழுந்து நின்றுவிட்ட அவளது ஒட்டுமொத்த உடலும், கணவன் சொன்ன அந்த விவாகரத்து என்ற சொல்லில் வெளிப்படையாக நடுங்கிக் கொண்டிருந்தது.
“ச்சீ… வாயை மூடுடி! இன்னைக்கு நீ உங்க அம்மா கூடச் சேர்ந்து கூடப் பிறந்தவங்களுக்குத் துரோகம் செய்யறவ… நாளைக்கு எனக்கும் என் புள்ளைங்களுக்கும் என்ன துரோகம் செய்யவும் அஞ்ச மாட்ட!” என்று முரளி மிகக் கடுமையாகப் பேசவும்…
மாலதி கண்ணீருடன், “அச்சோ! புத்தி கெட்டுப்போய் ஏதேதோ பண்ணிட்டேங்க… அதுக்காக விவாகரத்துன்னு அவ்வளவு பெரிய வார்த்தையெல்லாம் பேசாதீங்க…” என்று தன் தலையிலேயே அடித்துக்கொண்டு அழுது துடித்தவள், கணவனின் நிராகரிப்பில் ஞானோதயம் வந்துவிட்டது போல…
“அண்ணா… அண்ணா… உனக்கு பண்ணினது பெரிய பாவம்தான்! தெரியாம பண்ணிட்டேன்… என்னை மன்னிச்சுடுண்ணா! அவர்கிட்டயும் என்னை மன்னிக்கச் சொல்லுண்ணா… நிஜமாலுமே தெரியாமத்தான் இப்படியெல்லாம் பண்ணிட்டேன்! எங்களை வளர்த்து ஆளாக்கின உன்னை யோசிக்காம விட்டது தப்புதான்ண்ணா…” என்று கதறியபடியே ஓடிச் சென்று அருளின் கால்களிலேயே விழுந்துவிட்டாள்.
தன் தங்கையாக மட்டுமா அவளுக்குரிய கடமைகளை அவன் இத்தனை காலம் கவனித்துக் கொண்டான்? தந்தை இல்லாத அவர்கள் இருவருக்கும், தந்தை ஸ்தானத்திலிருந்துதானே அவர்களுக்குரிய அத்தனை கடமைகளையும் எவ்விதக் குறையுமின்றிச் செய்து தந்தான்! ஆனால், அவளோ இன்று அவனையும் அவன் குடும்பத்தையும் நட்டாற்றில் விடுவதற்குத் துணிந்திருக்கிறாள். இப்பொழுது வந்து ‘தெரியாமல் செய்துவிட்டேன்’ என்று சொன்னால் அவனுக்கு எப்படி மனம் இறங்கும்? முதலில்… இது தெரியாமல் செய்யும் காரியமா என்ன? தன் காலை வேகமாக அவளிடமிருந்து அகற்றிக் கொண்டவன், அவளைப் பார்க்கக்கூடப் பிடிக்காதவன் போலத் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவனது மனதில் அப்படியொரு தாங்க முடியாத வலியும் வேதனையும்.
பெற்ற தாயின் இந்த மாபெரும் துரோகத்தில் அத்தைகளான புவனாவும் சந்திராவும் வாயடைத்துப் போய்விட்டார்கள். “வீடு அருளுக்குப் போகாதுன்னா… எங்களுக்கும் இதுல சொத்துப் பங்கு வேணும்னு கோர்ட்ல கேஸ் கொடுக்க நாங்க ரெண்டு பேரும் தயாரா இருக்கோம்!” என்று கல்யாணியின் முகத்திற்கு நேரே உறுதியாகச் சொல்லிவிட்டார்கள்.
கல்யாணிக்குக்கு உள்ளுக்குள் ரத்தம் கொதித்தது. மற்ற இரு பிள்ளைகளுக்கும் ஏற்கனவே வளமான வாழ்க்கை தான்! இருந்தாலும், பரம்பரைச் சொத்தில் அவர்களுக்கும் பங்கு தர வேண்டும் என இவர்கள் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதுதான் அவரது வாதமாக இருந்தது! ஆம்… சிலர் தன் தவறுகளை எக்காலத்திலும் திருத்திக்கொள்ளவே மாட்டார்கள்; கல்யாணி முற்றிலும் அந்த ரகம்! ஆனால், அவர் ஆதரவாக நிற்கும் மூத்த மகள் மாலதியே… இன்று தன் குடும்பத்தில் பெற்ற தாயால் ஏற்பட்ட விரிசலால், அவரை முழுமையாக வெறுக்கும் நிலைக்கு வந்திருந்தாள்.