மழைவர பூமி மறுத்திடுமா? – 23

தன்னம்பிக்கையும் நிமிர்வும் நாம் எந்த இடத்தில், எப்படி இருக்கிறோம் என்பதைப் பொறுத்துத் தானாகவே மாறிவிடும். நாம் ஒரு நல்ல நிலையில் இருக்கும்போது, வீண் அச்சங்களோ அல்லது மற்றவர்களுக்கு அடங்கிப் போகும் நிலையோ இருக்காது; நம் நிலை உயரும்போது, அதற்குரிய தைரியமும் கம்பீரமும் தானாகவே வந்துவிடுகிறது.

கவிதாவின் அத்தகைய முன்னேற்றத்தைக் கண்கூடாகப் பார்த்த அருள்மித்ரனின் மனம் பெருமிதத்தால் நிறைந்து போனது. அவனுக்குத் தங்கை கவிதா அரசுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றதே பெரும் ஆச்சரியமாக இருந்தது! இப்பொழுதோ அவள் தேர்ச்சி பெற்று, அதற்குரிய பணியையும் பெற்றுக்கொண்ட ஓர் அரசு அதிகாரி! அதை நினைத்துப் பார்க்கவே அவனுக்கு அத்தனை சந்தோசமாக பெருமையாக இருந்தது.

‘அவளை ஒரு நல்ல இடத்தில் திருமணம் முடித்துக் கொடுத்தால் தான் அவளைப் பற்றிய கவலை குறையும், நம் கடமையும் முடியும்’ என்று எண்ணியிருந்தவனுக்கு… அவள் இப்படி யாரையும் சார்ந்திராமல் தன் சொந்தக் காலில் நிற்பதைக் காணும்போதே, தனக்குள்ளும் ஒரு புதிய தைரியம் பிறப்பதை அவன் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இதற்கெல்லாம் மூல காரணம் அவனின் மனையாள் வேதிகா! அவளுடைய கனவு அவனுக்குத் தெரியும்; அது அநியாயமாகக் கலைந்துபோன சூழலும் அவனுக்குத் தெரியும். அந்தப் பெரிய பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டவள், இன்று தான் மீண்டதோடு மட்டுமில்லாமல்… தனக்கென்று ஒரு கனவே இல்லாமல், தாயின் ஒவ்வொரு சொல்லுக்கும் அஞ்சி நடுங்கி நின்ற ஒரு பெண்ணுக்கு கனவு காணக் கற்றுக்கொடுத்து, அந்தக் கனவை நினைவாக்குவதற்கும் பக்கபலமாக இருந்து, அவளைச் சிறகு விரித்துப் பறக்க வைத்திருக்கிறாள்!

இதையெல்லாம் செய்வதற்கு அவளுக்கு எப்பேர்ப்பட்ட மனம் இருக்க வேண்டும்! அப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்டவளின் லட்சியக் கனவு கைகூடாமலேயே போவது பெரும் கொடுமையல்லவா!

களிமண்ணையே அழகாய் உருவேற்றி மகிழும் மனம் கொண்டவள், பாதி வடிக்கப்பட்ட சிற்பமாக நிற்கிறாள் என்கையில்… அந்தச் சிற்பம் சிதிலமடையாமல் காப்பது மட்டுமல்ல, அதை முழுமை பெற வைத்து ஊரே போற்றும் விதமாகச் செய்வதுதானே அழகு! அதைச் செய்யாமல், ‘அவளின் கணவன்’ என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்வதில் அவனுக்கு என்ன பெருமை இருக்கப் போகிறது?

தனக்குள் ஒரு தீர்க்கமான முடிவு வந்த பிறகே அவன் மனம் ஆசுவாசமடைந்தது. எப்படியாவது தன் மனையாளின் கனவுகளை நனவாக்கி விட வேண்டும் என்று எண்ணிக்கொண்டான். அந்த எண்ணம் அவனுக்குக் கொடுத்த நிறைவு அளப்பரியது!

எப்பொழுதும், ‘அம்மாவைப் பார்த்து வருகிறேன்’ என்று சென்று வரும் கணவனின் முகம் வாடிப்போயிருக்கும். அவளாக அவனிடம் என்ன, ஏதென்று விசாரிக்க மாட்டாள் என்றபோதும், வேதிகாவுக்கு அங்கு என்ன நடந்திருக்கும் என்றோர் அனுமானம் இருக்கும். ஆனால், இன்று வீடு திரும்பிய அவளது கணவனின் முகமோ சற்று வித்தியாசமாக இருந்தது. நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நிறைந்த அவனின் முகம் அவளுக்குள் தானாகவே ஓர் இதத்தைச் சேர்க்க… பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தவனையே தன் பார்வையால் பின்தொடர்ந்து கொண்டிருந்தாள்.

அவளின் பார்வையை கவனித்து, ‘என்ன?’ என்று புருவம் உயர்த்தி கேட்டவனின் முகத்தையே ஆசையோடு பார்த்திருந்தவள், ‘ஒன்றுமில்லை’ என்பதாகத் தலையசைத்தாள்.

அவனோ அவளையே சில நொடிகள் குறுகுறுவெனப் பார்த்துவிட்டு, உதடு குவித்து முத்தமிடுவது போலச் சைகை காட்டினான். விழிகளைப் பெரிதாக்கி, அசைவற்று ஓரிரு நொடிகள் திகைத்து நின்றுவிட்டவள், பின் அவனைச் செல்லமாக முறைத்துவிட்டுத் தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிவிட்டாள்.

அவள் சமையலறைக்குள் நுழைந்த அதே வேகத்தில் அவளுக்குப் பின்னால் தானும் நுழைந்தவன், தன் மனையாளின் இடையை வளைத்துத் தன்புறம் வேகமாகத் திருப்பி, அவள் எதிர்பாராத நேரம் அவளின் இதழ்களைக் கொள்ளையிட்டான். இதைச் சற்றும் எதிர்பார்க்காதவள் அப்படியே தடுமாறிப்போனாள். “அழகி…” என்றவனின் குரல் தாபத்தோடு அவளது செவிகளை நிறைக்க, தேகம் கூசிச் சிலிர்த்தது அவளுக்கு.

இடையில் பதிந்திருந்த அருளின் கரங்கள் இன்னும் அழுத்தம் கொடுக்க… அவனது இதழ்கள் தன் மனையாளின் காதோரத்திலும் கழுத்தோரத்திலும் ஈர முத்தங்களைப் பதித்து ஊர்வலம் நடத்தின. “அச்சோ! குழந்தைங்க…” என்றாள் வேதிகா மெல்லிய தவிப்போடு.

அவளை விடுவிக்கச் சற்றும் மனமில்லாதவனோ, “அவங்க விளையாடிட்டு இருக்காங்கடி…” என்று சொல்லி, அவளைத் தன்னுள் இன்னும் ஆழமாகப் புதைத்துக் கொண்டான்.

“அச்சோ!” என்று மெலிதாக முணுமுணுத்து, அவனைத் தன் கைகளால் விலக்கி நிறுத்தி, மறுப்பாகத் தலையசைத்தாள். அவன் அப்போதும் அவளின் சொல்பேச்சு கேட்க மறுக்கவே, அவனைச் சமையலறையை விட்டு வெளியே கொண்டுபோய் நிறுத்தினாள்.

அவளைப் பொய்யாக முறைத்துக்கொண்டே அங்கிருந்து சென்றவன், அவனுக்குள் இருந்த அந்த மட்டற்ற மகிழ்ச்சியில் அன்றிரவு அவளைப் படுத்தி எடுத்து விட்டான். எப்பொழுதும் அவனது ஆளுகையில் அதீத முரட்டுத்தனம் இருக்காது; மென்மையாய், அனுசரணையாய் பார்த்துப் பார்த்து நடந்து கொள்வான். இன்றோ, அவனது அத்தனை நிதானங்களும் பக்குவங்களும் காணாமல் போயிருந்தன!

‘எதற்குத்தான் இவன் மனம் இப்படித் துள்ளுகிறதோ?’ என்று வியந்தவளுக்கு பதிலாய்… மறுநாள் மாலையே கல்லூரியில் சேர்வதற்கான சேர்க்கைப் படிவங்களுடன் வந்து நின்று அவளுக்கு பேரதிர்ச்சியளித்தான்!

“இது நீ படிச்ச அதே காலேஜ்ல கோர்ஸ் கம்பிளீட் பண்ண அவங்க கொடுத்த ஃபார்ம்… இது நம்ம வட்டாரத்துல இருக்க இன்னொரு காலேஜ் ஃபார்ம்… உனக்கு எங்கே படிக்கணும்னு தோணுது வேதிம்மா? இன்னும் மூணே மூணு செமஸ்டர் எக்ஸாம் மட்டும் எழுதினா போதுமாமே…” என்று அளப்பரிய ஆவலோடு கேட்டு நின்றான்.

ஜெகன் இருக்கும் அதே ஊர்… அங்கு அவளை மீண்டும் அனுப்ப அருளின் மனதிற்குச் சற்றும் உடன்பாடில்லை என்றாலும், ‘அவன் இனி இவள் வழிக்கு வர மாட்டான், அப்படியே வர நினைத்தாலும் அவனை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவேன்’ என்ற துணிச்சலோடு தன் மனதைத் தேற்றிக்கொண்டுதான் அவன் இந்த முடிவை எடுத்திருந்தான்.

அவனது பரபரப்பையும் ஆர்வத்தையும் இமைசிமிட்டாமல் பார்த்தவள், அவனுக்குப் பதில் சொல்லும் நிலையில் கூட இருக்கவில்லை. திருவிழாக் கூட்டத்தில் பெற்றவர்களைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் குழந்தையைப் போலிருந்தது அவளது தற்போதைய தோற்றம்.

“என்ன பார்க்கிற வேதிம்மா… நான் எல்லாமே விசாரிச்சிட்டேன். ஒரு டிகிரி முடிக்க அஞ்சு வருஷம்தான் கால அவகாசம் இருக்குமாம். ஏற்கனவே உனக்குக் கிட்டத்தட்ட மூணு வருஷத்துக்கும் மேல படிப்புல இடைவெளி விழுந்துடுச்சு. இன்னும் ஒரே ஒரு வருஷம்தான் உன் கையில இருக்கு. நீ இப்ப இந்த படிப்பை முடிச்சு டிகிரி வாங்காட்டி, மறுபடியும் முதல்ல இருந்துதான் முதலாவது வருஷத்துல இருந்து படிக்க வேண்டியதிருக்கும்…” என்று அவன் சொல்லச் சொல்ல… அவளுக்குத் தலை சுற்றியது.

முன்பு எப்படியோ… ஆனால் இப்பொழுது அவள் இரண்டு பிள்ளைகளின் தாய்! அவள் இனி புத்தகம் சுமந்து கல்லூரிக்குச் செல்வதெல்லாம் நடக்கிற காரியமா? திடீரென்று தன் கணவனுக்கு என்னதான் ஆயிற்று?

அவள் இன்னமும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அப்படியே உறைந்து போய் நிற்க… “வேதிம்மா…” என்று அவளது கன்னத்தைத் தட்டி, அதிர்ந்து பேச்சற்று நின்றிருந்தவளை மெல்ல நிகழ் காலத்திற்கு இழுத்தான் அருள்மித்ரன்.

சுயம் மீண்டவள், “விளையாடாதீங்க… இப்ப போய் நான் படிக்கிறதா? அடுத்த வருஷம் மூத்தவனை ஸ்கூல்ல சேர்க்கணும். பிள்ளைங்களைப் படிக்க வைக்க வேண்டிய வயசுல நான் போய் மறுபடி படிக்கிறதா? இதெல்லாம் எப்படிங்க சரியா வரும்?” என்றாள் முற்றிலும் தளர்ந்து போனவளாக.

அவள் இவ்வளவு உறுதியாக மறுப்பாள் என்று சற்றும் எதிர்பார்க்காதவன் சட்டென்று கோபமடைந்தான். “எடுத்த உடனே முடியாதுன்னு சொன்னா எப்படி வேதிம்மா? சும்மா காலத்துக்கும் இப்படியே முடங்கி, எல்லாரையும் விட்டு ஒதுங்கியே இருக்கணுமா நீ? அப்படி இருக்கிறதா இருந்தாலும்… நீ செஞ்ச தப்பு என்னன்னு இப்படி ஒரு தண்டனை உனக்கு?” என்று சினந்தான்.

“விடுங்க… இதையெல்லாம் தப்பு, தண்டனைன்னு யோசிச்சா நமக்கு வீணா மனவருத்தம்தான் வரும். எனக்கு இதுதான் விதிச்சிருக்குன்னு நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்; அதுக்கு தகுந்தபடி வாழவும் பழகிக்கிட்டேன். நீங்க வீணா ஏதேதோ யோசிச்சு உங்க மனசைக் கெடுத்துக்காதீங்க” என்றாள் சோர்ந்துபோனவளாய்.