கிளினிக் வந்து சேர்ந்ததும், சின்னவளின் காயத்தை விளக்கின் ஒளியில் தெளிவாகப் பார்த்த பக்கத்து வீட்டு உமா அக்காவிற்கு, வேதிகாவை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ‘வாயைக் கழுவிவிட்டு, கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கொடுத்தாலே போதும், வாயிலிருந்து வரும் ரத்தம் கொஞ்ச நேரத்தில் தானாக நின்றிருக்கப் போகிறது. காலிலும் லேசாத் தேங்காய் எண்ணெய் பூசியிருந்தாலே போதும் தான். இதற்கு போய் இவள் இப்படிப் பயந்து நடுங்குகிறாளே!’ என அவருக்குள் அவளின் முதிர்ச்சியற்ற செய்கையை நினைத்து அங்கலாய்ப்பாக இருந்தது.

பதற்றத்தில் வேதிகா தன் கைப்பேசியையும் வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்திருக்க, உமாதான் தன் போனில் இருந்து அருளுக்குத் தகவல் கூறினார். வேலையை முடித்துவிட்டுத் தன் பைக்கில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தவன், உமா அக்காவின் எண்ணிலிருந்து அழைப்பு வந்ததும் விஷயம் கேள்விப்பட்டு ‘என்னவோ ஏதோ’ என்று பதறியபடி, கிளினிக்கிற்கு வேகமாய் வந்து சேர்ந்தான். அவசரமாக உள்ளே வந்தவன் மகளுக்கு என்னவென்று பதற்றத்தோடு பார்த்தால், அவளின் காலிலோ மிகச் சாதாரணமான ஒரு சிராய்ப்பு காயம் மட்டுமே இருந்தது.

இவனைக் கண்டதும், “ப்பா…” என்று அழுகையோடு கவின் ஓடிவந்து இவனது காலை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு, தன்னைத் தூக்கும்படி அடம் பிடித்தான். ‘அம்மா பாப்பாவையே பார்த்துக் கொண்டிருக்கிறாள், தன்னைத் துளிகூடக் கவனிக்கவே இல்லை’ என்கிற குறை அவனுக்கு! அவனை உடனடியாகத் தன் கைகளில் அள்ளிக்கொண்ட அருள், சின்னவனின் கண்ணீரைத் துடைத்து, அவனது கலைந்திருந்த தலையை ஒதுக்கிவிட்டு, தன் தோளில் சாய்த்து மெல்லத் தட்டிக் கொடுத்தபடியே தன் மனைவியின் அருகில் வந்து நின்றான்.

காயம் பட்டதற்கு மகள் அழுகிறாள் என்றால் சரி, ஆனால் தன் மனைவியும் அவளோடு சேர்ந்து சின்னப் பிள்ளையைப் போல அழுது கொண்டிருக்கிறாளே என்று அருளுக்குத் தவிப்பாக இருந்தது. இவன் உள்ளே வந்ததும், உமா நடந்தவற்றை இவனிடம் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, “தம்பி… நான் வேதிகா தனியா வராளேன்னு அவசரமா கிளம்பி வந்தேன். நீ வந்துட்டல்ல, குழந்தைங்களை விட்டுட்டு வந்திருக்கேன். நான் கிளம்புறேன்ப்பா” என்று கூறித் தன் வீட்டிற்குப் புறப்பட்டுவிட்டார்.

மிகவும் சாதாரண ஒரு சிராய்ப்புக் காயத்திற்குப் போய் இவள் இப்படிப் பதறிப்போய் நின்றால் எப்படி என்று எண்ணிய அருளுக்கு, மனைவியின் நிலையை நினைத்து ஆயாசமாக இருந்தது. அதுவும் வீட்டில் போட்டிருந்த ஆடையோடு, கலைந்த கூந்தலைக் கூடச் சரியாக ஒதுக்காமல், குழந்தைக்கு இணையாக இவளும் அழுது கலங்கியபடி நின்ற அவளது தோற்றத்தைப் பார்க்கவே அவனுக்குள் என்னவோ போல இருந்தது.

‘இந்தக் காயத்திற்கு வீட்டிலேயே மருந்து போடாமல், இதற்காகவெல்லாம் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடி வராவிட்டால் என்ன?’ என்று தோன்றியபோது அவனுக்கு அவளைப் பார்த்துத் தலையிலடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.

தீபாலி வேறு இன்னும் தேம்பிக் கொண்டே இருக்க, வேதிகாவோ அவளைத் தன் கணவனிடம் கூடத் தர மறுத்துத் தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் இருந்த அந்தப் பரிதாபமான தோற்றத்தைப் பார்த்ததும் அவளைக் கடிந்துகொள்ள அருளுக்கு அணுவளவும் மனம் வரவில்லை. அவளது முகத்தைப் பார்த்தாலே அவள் எந்தளவிற்குப் பயந்திருப்பாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. அதனால், மகளுக்கு வேதிகா ஆறுதலாக இருக்க, தன் மனையாளையும் மகனையும் இவன் தேற்றினான்.

சின்னவளுக்கோ அழுது அழுது பயத்திலேயே உடம்பு கொதித்துக் காய்ச்சல் வந்துவிட்டிருந்தது. மருத்துவர் காயத்திற்கு மருந்திட்டு, காய்ச்சலுக்கான சிரப்பையும் கொடுத்து அனுப்பிய பிறகு, அவர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

வேதிகாவின் முகத்தில் இன்னும் கவலை அகலவில்லை; அவளது வதனத்தில் துளிகூடத் தெளிவே இல்லாமல் அப்படியே உறைந்து போயிருந்தாள்.

“குழந்தைங்கன்னா விழத்தான்டி செய்வாங்க. ஏன் இப்படி அலும்பு பண்ணற, பேசாம தூங்கு” அதட்டி சமாதானம் செய்ய முடியாதளவிற்கு அவளின் தவிப்பு இருந்தபடியால், கொஞ்சி கெஞ்சி தான் சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

மருந்தின் வீரியத்தில் சற்று நேரத்தில் தீபாலி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். வேதிகா மகளின் தலையை வருடியபடி சோர்ந்த தோற்றத்துடன் படுத்திருந்தாள்.

“ஏன் வேதிம்மா… கவினுக்கு இப்படி ஒரு அடி பட்டிருந்தாலும் இதே மாதிரிதான் பதறிப்போய் நின்னுருப்பியா? கொஞ்சம் கூட நிதானமே இல்லாம, இப்படி விழுந்தடிச்சுக்கிட்டு ஓடியிருப்பியா?” அருளின் இந்தத் திடீர் கேள்வியில் வேதிகா திகைத்துப் போய் விழித்தாள்.

அவளது அகண்ட விழிகளில் தேங்கியிருந்த அந்தப் பயமே உண்மையை அப்பட்டமாகச் சொல்லிவிட, அருள் தொடர்ந்தான். “தீபாலிக்கு அடிபட்டதும்… அவளை நீ சரியா பார்த்துக்கலைன்னு நான் தப்பா சொல்லிடுவேன்னு நினைச்சியா? இல்லை ஊர் உலகத்துல வேற யாராச்சும் உன்மேல அப்படியொரு பழியை சுமத்திடுவாங்கன் உனக்கு பயமா?” என்று அவன் கனிவோடு கேட்டதும், தன் உள்மனதைத் துல்லியமாகப் படித்துவிட்ட கணவனின் பேச்சில் அவளுக்குக் கரகரவென்று கண்ணீர் கொட்டியது.

அவளது கலைந்திருந்த தலையைப் பரிவோடு வருடியவன், “உனக்குத் தெரியுமா வேதிம்மா… தீபுக்குட்டியை அவளோட அம்மா வழி தாத்தா, பாட்டியோ, இல்ல என் அம்மாவோ யாருமே ஏத்துக்கத் தயாரா இல்லை. பெத்த அம்மாவை இழந்த குழந்தைன்னு… அவ மேல ஒரு சின்னப் பரிவு காட்டக்கூட அங்கே ஆளில்லை. என் தங்கச்சி கவிதா மட்டும் இல்லாம இருந்திருந்தா…” என்றவனுக்கு மேலே பேச முடியாமல் தொண்டை அடைத்தது. சில நொடிகள் அவன் எதுவும் பேசவில்லை.

பிறகு குரலைச் செருமிக்கொண்டு மீண்டும் பேசினான், “ஆனா, நீ இந்த வீட்டுக்குள்ள வந்த அடுத்த நிமிஷமே அவளுக்கு ஒரு தாயோட ஒட்டுமொத்த அரவணைப்பையும் தந்திருக்க. அவளுக்குத் தாய்ப்பால் கிடைச்சதே உன்கிட்ட இருந்துதான்! அன்னைக்கு… என்ன காரணம்ன்னே புரியாம, எந்தத் தப்புமே செய்யாம நீ சுமந்த கவின் மேலேயே அந்தப் பத்தொன்பது வயசுல உன்னால ஒரு துளி வெறுப்பைக் கூடக் காட்ட முடியலை. அப்படிப்பட்ட உன்னால, தீபாலிகிட்ட எப்படிப் பாரபட்சமா நடந்துக்க முடியும்? அவ்வளவு ஏன் எங்க அம்மா உன்னைச் சரியா சாப்பிட விடாம, உனக்குத் தாய்ப்பாலே போதாம இருந்த அந்தக் கொடுமையான நாட்களில்கூட… நீ கவினுக்கான தாய்ப்பாலைத்தான் நிறுத்திட்டியே தவிர, தீபாலிக்குக் கொடுக்கிறதை ஒருநாளும் நிறுத்தலை.

இவ்வளவு செஞ்ச உன்னைப்போய் நான் தப்பா நினைப்பேனா? நல்ல விதமா யோசிக்கிற மத்தவங்களும் அப்படி கண்டிப்பா நினைக்க மாட்டாங்க. ஆனா, தப்பானவங்க கண்ணுக்கு நீ என்னதான் நல்லது செஞ்சாலும் எப்பவும் குறை மட்டும்தான் தெரியும். அவங்களுக்காக நீ உன்னோட அன்பை எங்கேயும் நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்லை வேதிம்மா!” என்று அவன் மிக நிதானமாகச் சொல்லி முடிக்க… அதற்குமேல் அவளால் தன் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவனது அகன்ற தோள்களில் முகம் புதைத்து, கதறி அழத் தொடங்கினாள் வேதிகா.

எங்கே தன் மீது ‘மாற்றாந்தாய்’ என்ற பழிச்சொல் விழுந்துவிடுமோ என்றுதான், தீபாலியிடம் அவள் எப்போதும் கூடுதல் கவனமும் அக்கறையும் எடுத்துக் கொள்கிறாள். நாளை தன் மகள் வளர்ந்து விபரம் தெரிந்த பிறகு, ‘அம்மா என்னிடம் வேற்றுமை காட்டுகிறாள்’ என்று அவளது பிஞ்சு மனதிலோ அல்லது இந்த ஊர் வாயிலோ ஏதும் பதிந்துவிடக் கூடாது என்பதில் அவளுக்கு அத்தனை ஜாக்கிரதை!

அந்த அளவுகடந்த பயமும் நேசமும்தான், அவளை இன்று அந்தச் சாதாரணக் காயத்திற்கே அத்தனை தூரம் பதற வைத்துவிட்டிருந்தது. இப்பொழுது தன் கணவன் சொல்லச் சொல்லத்தான்… இனிவரும் காலங்களில் இன்னும் கொஞ்சம் பொறுமையாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று அவளுக்குப் புரிகிறது.

அவள் அழும் வரை அருள் ஒன்றும் பேசாமல் ஆறுதலாக அவளின் தலையை முதுகை வருடி விட்டான்.

ஓரளவு அவளது அழுகையின் வேகம் குறைந்ததும், அவளது முகத்தைத் தன் கைகளில் ஏந்தி, “வேதிம்மா… உனக்கு இப்படி ஒரு சந்தேகமோ பயமோ எப்பவும் வேணாம். நான் எந்தச் சூழலிலும் உன்னை தப்பா நினைக்க மாட்டேன். இனியும் இப்படிப் பயந்து பயந்து பயத்தோட பாசம் காட்டாத. இப்படியே நீ பயந்துட்டே இருந்தா… நாளைக்கு அவ ஏதாவது ஒரு தப்பு செய்யும்போதும், அவளைக் கண்டிக்கக் கூட உனக்கு ஒருவித பயம் வந்துடும். அது கண்டிப்பா நம்ம குழந்தையோட எதிர்காலத்துக்கு நல்லது இல்லை. புரியுதா?” என்றான் இதமாக.

தன்னவன் தன்னை இத்தனை ஆழமாகப் புரிந்து வைத்திருப்பதைக் கண்டு அவளுக்கு மனம் நெகிழ்ந்து போனது. அவனது அகன்ற மார்பிலிருந்து மெல்ல நிமிர்ந்து, அவனது காதலும் காருண்யமும் நிறைந்த விழிகளைத் தன் கண்ணீர் வழியும் விழிகளால் ஏறிட்டுப் பார்த்தாள். அவள் சரியென்று தலையசைப்பாள் என அவன் எதிர்பார்த்திருக்க, அவளோ அடுத்த நொடி… அவனது வலது கன்னத்தில் அத்தனை ஆழமாகத் தன் இதழ்களைப் பதித்து ஒரு நெடிய முத்தமிட்டாள்!

அவன் கேட்காமல், அவளாகவே முன்வந்து அவனுக்குத் தரும் முதல் முத்தம் அது! அவனது காந்த விழிகள் ஆச்சரியத்தில் சட்டென்று விரிந்தன. அவளது காதலில் திக்குமுக்காடிப் போனவன், அவளது மூக்கைப் பிடித்துச் செல்லமாக ஆட்டி, “அதென்னடி… கன்னத்துல தர்ற? கஞ்சப்பிசுனாரி…” என அவளது செவிகளுக்குள் தன் சூடான மூச்சுக்காற்று உரச முணுமுணுத்தவன், அவளது மெல்லிய இதழ்களை வேகமாகப் பற்றிக் கொண்டான்!

அந்த நீண்ட முத்தத்தின் ஆழம் தீர்ந்த பிறகும், அவனிடமிருந்து விலக மனமில்லாமல் மீண்டும் அவனது கழுத்தடியில் தஞ்சம் புகுந்து அணைத்துக் கொண்டாள் வேதிகா. இன்று நடந்த அந்தத் திடீர் சம்பவமும், அவளுள் எழுந்த பயமும் அவளது உடலையும் மனதையும் ரொம்பவே அலைக்கழித்துவிட்டிருந்தது.

அவளது சோர்வை உணர்ந்தவனாய், “அழகி… தூங்கலாமா?” என்றான் அவளின் மென் கன்னத்தைத் தட்டி. அவளும் சம்மதமாக அவனது நெஞ்சில் முகம் புதைத்துத் தலையசைத்தாள். நாள்தோறும் பிள்ளைகளை கட்டிக்கொண்டு உறங்கும் அவளை, இன்று தன் தோள்வளைவில் அரவணைத்து, உறங்க வைத்தான் அருள்மித்ரன்.