மழைவர பூமி மறுத்திடுமா? – 21

அன்று அதிகாலையிலேயே நெஞ்சு நிறைந்த பதற்றத்தோடு அண்ணன் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள் கவிதா. தன் அண்ணி வேதிகாவின் வழிகாட்டுதலின் பேரில், கடந்த சில மாதங்களாகவே அவள் பல்வேறு அரசுப் பொதுத் தேர்வுகளை எழுதி வருகிறாள்.

இதுவரை சில தோல்விகளைச் சந்தித்த போதிலும், வேதிகா அவளுக்குத் தொடர்ந்து ஊக்கம் தந்து, மென்மேலும் படிக்க வைத்து, அடுத்தடுத்த தேர்வுகளுக்கு அவளைத் தயார் செய்து வந்தாள்.

இன்று அவள் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுதியதற்கான முடிவுகள் வெளியாகின்றன. ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வெளியாகும் போதும் கவிதா அண்ணியிடம் வந்துவிடுவாள். அவளுக்கு வேதிகாவின் அருகாமை தேவைப்பட்டது. தோற்றால் தோள் கொடுத்துத் தேற்றி விடுவாள்; அவளது மனதை ஒருபோதும் உடைந்து போக விடவே மாட்டாள்! அதேசமயம், என்றாவது ஒருநாள் தான் வெல்லும்போதும், அந்த மாபெரும் மகிழ்ச்சியைத் தன் அண்ணியிடம் தான் அவளுக்கு முதலில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு காலத்தில் எந்தவொரு லட்சியமும், குறிக்கோளும் இல்லாமல் இருந்த தன்னை, இத்தனை தூரம் நம்பி நேசத்தோடு வழிநடத்தும் அந்தப் பெருந்தன்மைக்காகவாவது என்றாவது ஒரு நாள் தான் வென்றே தீர வேண்டும் என்ற தீவிரமும் நம்பிக்கையோடும்தான் கவிதா இத்தனை மாதங்களாகத் தூக்கத்தைத் தொலைத்துப் பயிற்சி எடுத்து வருகிறாள்.

“வா… வா கவிதா… இன்னைக்கு ரிசல்ட் வருதுன்னு டிவியில சொன்னதுமே நினைச்சேன், நீ விடியுறதுக்குள்ள இங்கே ஓடி வந்துடுவேன்னு!” என வேதிகா தன் முகத்தில் ஒரு இதமான புன்னகையோடு அவளை வரவேற்க, “அண்ணி… எனக்கு நேத்து ராத்திரியெல்லாம் கொஞ்சம்கூட தூக்கமே இல்லை அண்ணி. நெஞ்செல்லாம் ஒரே படபடப்பா இருக்கு!” என்று வாடிய முகத்தோடு தன் அண்ணியை அணைத்துக் கொண்டாள் கவிதா.

“ஹே… போன தடவை உன்னோட ஸ்கோர் எவ்வளவு நல்லா வந்திருந்துச்சு, ஞாபகம் இருக்கா? சின்ன வித்தியாசத்துலதான் நல்ல ரேங்க் கிடைக்காமப் போச்சு. இந்தத் தடவை நீ போட்ட உழைப்புக்கு கண்டிப்பா ரொம்ப நல்ல ரிசல்ட் வரும் கவி. எனக்கு உன் மேல முழு நம்பிக்கை இருக்கு!” அவளை ஆறுதலாக அணைத்தபடி நம்பிக்கையுடன் கூறினாள் வேதிகா.

“போங்க அண்ணி… நடந்தா சந்தோஷம்தான். நம்ம குலசாமிக்குப் பொங்கல் வச்சுக் கும்பிடுவேன். ஆனா, ஒவ்வொரு தடவையும் தோத்துப் போகும் போது மனசுக்கு ரொம்ப ஏமாற்றமா இருக்கு. நீங்க என் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கீங்க… ஆனா நான் இன்னும் இப்படியே இருக்கேனேன்னு நினைச்சாலே எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு அண்ணி!” என்ற கவிதாவின் முகத்தில் பெரும் கலக்கம் அலைமோதியது.

“கவி… இதுக்கே இப்படிச் சோர்ந்து வாடிப்போகலாமா? நீ சில மாசமாதான் கவர்ன்மெண்ட் எக்ஸாம்ஸ் எழுதிட்டு வர்ற. இங்கே எத்தனை பேர் வருஷக்கணக்கா பயிற்சி மையங்களுக்குப் போயிட்டு, தவம் கிடக்கிற மாதிரி முயற்சி செய்றாங்க தெரியுமா? இப்படி நீ நம்பிக்கை இல்லாம பேசறதை விடு. முதல்ல உன்னை நீ நம்பணும். நல்லாத் திட்டமிட்டுப் படிக்கணும், மன உறுதியோட எக்ஸாம் எழுதணும். உன் நேர்மையான முயற்சி என்னைக்குமே வீண் போகாது. சீக்கிரம் ரொம்ப நல்ல ரிசல்ட் வரும் பாரு, வீணா பயப்படாத!” என்றாள் வேதிகா அவளைத் தேற்றும் விதமாக.

உண்மையில், அருள்மித்ரன் இந்த விஷயங்களில் எல்லாம் அதிகமாகத் தலையிடுவதில்லை. தங்கை ஏதோ படிக்கிறாள், மனைவி அவளுக்கு ஏதோ வழிகாட்டுகிறாள், அவ்வளவுதான் அவனது பார்வை. அவனது வட்டாரத்திலோ அல்லது குடும்பத்திலோ இதற்கு முன்னால் யாரும் அரசாங்க வேலை என்ற உயரத்திற்கெல்லாம் போனதில்லை. அதனால், ‘ஏதோ சும்மா வீட்டிலிருப்பதற்கு ஏதோவொன்றை முயற்சி செய்துவிட்டுப் போகட்டும், அவளுக்கும் உத்வேகமாக இருக்கும்’ என்றுதான் அவன் சாதாரணமாக நினைத்திருந்தான்.

அவனைப் பொறுத்தவரை, இதுபோன்ற அரசு உத்தியோகம் எல்லாம் தங்களைப் போன்ற எளிய மனிதர்களுக்கு எட்டாக்கனி! இவர்கள் பெயருக்கு முயற்சிக்கிறார்கள் என்பதாகத்தான் அவனது எண்ணம் இருந்தது. அதற்காக அவன் அவர்களைக் குறைத்து மதிப்பிட்டான் என்று இல்லை; அதெல்லாம் ரொம்பவும் பெரிய விஷயம், தங்களைப் போன்ற சாதாரணக் குடும்பத்து ஆட்களால் அதையெல்லாம் எப்படி எட்ட முடியும் என்று அவன் எதார்த்தமாக நினைத்தான், அவ்வளவுதான்!

காலை பத்து மணி நெருங்கியது. டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதாகத் தொலைக்காட்சியில் செய்தி ஓடியது. அதைப் பார்த்ததும் கவிதாவின் கைகள் பயத்தில் நடுங்கத் தொடங்கின.

“அண்ணி… ரிசல்ட் லிங்க் ஓபன் ஆயிடுச்சு. எனக்குப் போனைத் தொடவே பயமா இருக்கு. நீங்களே பாருங்க அண்ணி!” என்று தன் கைப்பேசியைக் கைகள் நடுங்க வேதிகாவிடம் நீட்டினாள் கவிதா.

இது வழக்கமாக நடப்பதுதான் என்பதால் வேதிகா தன் முகத்தில் ஒரு சிறு புன்னகையை வரவழைத்துக் கொண்டு, நிதானமாக அவளிடமிருந்து கைப்பேசியை வாங்கினாள். மனதிற்குள், ‘இந்த முறையாவது நல்ல மதிப்பெண்கள் எடுத்து இவள் வெல்ல வேண்டும், இவளது அயராத உழைப்புக்கு நல்ல பலனைக்கொடு கடவுளே!’ என்று வேலாயுதசாமியிடம் மனம் உருகிப் பிரார்த்தித்துக் கொண்டாள். என்னதான் கவிதாவை தேற்றினாலும் அவளுக்கும் ஒரு மெல்லிய பதற்றம் இருக்கத்தான் செய்தது.

கவிதாவின் பதிவு எண்ணையும், பிறந்த தேதியையும் அந்த இணையப் பக்கத்தில் உள்ளீடு செய்தவளின் நெஞ்சமும் பதற்றத்தில் படபடத்துக் கொண்டிருந்தது. இணையதளம் சற்றுத் தாமதமாகச் சுழன்று, பின் மெதுவாக அடுத்த பக்கத்தைத் திறந்தது.

அங்கே… கவிதாவின் மதிப்பெண்ணும், அவளது மாநில அளவிலான தரவரிசையும் திரையில் பளிச்சிட்டன. அவளது மதிப்பெண் தகுதிப் பட்டியலில் மிகவும் நல்ல நிலையில் இருந்ததை வேதிகா விழி விரித்துப் பார்த்தாள். அடுத்த நொடி, அவளது கண்கள் மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் கலங்கிப் போனது.

“கவி… கவி… உன் ஸ்கோர் பாரு… ரொம்ப நல்ல மார்க்ஸ்! ஸ்டேட் ரேங்க் கூட செமையா வந்திருக்கு!” என்று ஆர்ப்பாட்டமாகச் சொல்லி, அவளை அணைத்துக் கொண்டு தன் மகிழ்ச்சியைப் பரிமாறினாள்.

கவிதாவுக்கு அதை அணுவளவும் நம்பவே முடியவில்லை. ஆனந்தத்தில் அவளது தொண்டை அடைத்துக் கொண்டது. அவளின் அத்தனை மெனக்கெடல்களுக்கும் பலன் கிடைத்து விட்டதா? “அண்ணி… நிஜமாவா அண்ணி?” என்றாள் வேதாவின் அணைப்பில் அழுதுகொண்டே.

“ஆமா ஆமா நான் பொய் சொல்லறேன் பாரு… நம்பிக்கை இல்லைன்னா நீயே பாரு!” என்று அவளின் ரிசல்ட்டை காட்டினாள்.

கவிதா கண்ணீருடன் திரையைப் பார்த்தபடி இருக்க, “உனக்கு வந்திருக்கிற இந்த மார்க்ஸுக்கும் ரேங்குக்கும் உனக்கு விஏஓ போஸ்டிங் கன்பார்மா கிடைக்கும்! நீ அரசாங்க அதிகாரி ஆயிட்ட கவி!” என்று வேதிகா அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டபடி ஆனந்தக் கூச்சலிட்டுக் கூறினாள்.

சில பெற்றவர்கள் தனக்குக் கிடைக்காத உன்னதமான லட்சியங்கள் அனைத்தும் தங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று கனவு காண்பார்களே… அந்தக் கனவு நினைவாகும்போது அவர்களின் சந்தோஷம் எத்தனை நூறு மடங்கு பெருக்கெடுத்து ஓடும்! வேதிகாவும் இப்பொழுது அந்த நிலையில் தான் இருந்தாள். அவளும் தன் கனவுகள் யாவும் ஒரு கோரத் தீயில் சிதைந்துபோன துக்கத்தில் வாழும் ஒரு சாதாரணப் பெண்தான். ஆனால், இன்று அவளது தூண்டுதலாலும் உழைப்பாலும் கவிதா அடைந்த இந்த மாபெரும் வெற்றி, தனக்கே கிடைத்த வெற்றியைப் போல வேதிகாவின் நெஞ்சில் பேரானந்தத்தைத் தந்தது.

“எல்லாத்துக்கும் நீங்கதான் அண்ணி காரணம். கருப்பா இருக்கா, இவளை எவன் கட்டுவான், மூட்டை மூட்டையா சீர் கொடுத்தாத்தான் உண்டுன்னு அம்மா எப்பவும் என்னை வீட்டுக்கு பாரமாத்தான் பார்ப்பாங்க… ஆனா, நீங்க மட்டும்தான் அண்ணி என் நிறத்தையோ தோற்றத்தையோ பார்க்காம என் அறிவை நம்புனீங்க! அம்மா மட்டம்தட்டி பேசும்போதெல்லாம் மனசொடிஞ்சு போன என்னை, நிறமும் தோற்றமும் அழகை தீர்மானிக்காதுன்னு நம்பிக்கை தந்து அம்மா பேச்சுக்கு கவலைப்பட விடாம என்னை பார்த்துக்கிட்டீங்க. என் மேல நம்பிக்கை வெச்சு என்னை விடிய விடியப் படிக்க வெச்சு, இன்னைக்கு என்னை இப்படி ஒரு உயரத்துல ஏத்தி வச்சு அழகு பார்க்கிறீங்க அண்ணி!” எனக் கண்ணீரோடு அவளது நெஞ்சில் முகம் புதைத்துக் கதறினாள் கவிதா.

அருள்மித்ரன் அங்கே நடப்பதையெல்லாம் அணுவளவும் நம்ப முடியாமல் அதிசயித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நேற்றுவரை குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடிய, எதற்கும் அஞ்சி நடுங்கும் தன் சின்னத் தங்கை… இன்று ஒரு கிராமத்தையே ஆளப்போகும் அரசாங்க உத்தியோகம் வாங்குமளவிற்கு மாநில அளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறாளா? அவனது எளிய உலகப் பார்வையில் இது அவனால் நம்பவே முடியாத ஒரு மாயாஜாலமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல், தன் குடும்பக் கடமைகளுக்கு நடுவே இந்த மாபெரும் சாதனையைத் தன் தங்கையை வைத்து அமைதியாகச் சாதித்துக் காட்டிய தன் மனைவியை அவன் பெரும் பிரமிப்போடு பார்த்தான். அவளது நெஞ்சில் விழுந்து கிடக்கும் தன் தங்கையைப் பார்க்கும்போது அவனது நெஞ்சு பெருமிதத்தால் நெகிழ்ந்து போனது.

அருள் மெல்ல அவர்கள் அருகில் வந்து, கவிதாவின் தலையை அன்போடு வருடினான். “வாழ்த்துக்கள் கவி… நிஜமாவே அண்ணனால இதை நம்பவே முடியலடா. உன்னை இந்த உயரத்துல பார்க்கும்போது அண்ணனுக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா?” என்றவனின் குரல் தழுதழுத்தது.

பிறகு அவன் வேதிகாவின் கரங்களைப் பற்றி, “எல்லாம் உன்னால தான் வேதிம்மா… கவிக்கு ஒரு நல்ல வாழ்க்கைங்கிறது, அவளுக்குப் பார்க்கிற நல்ல மாப்பிள்ளை மூலமாத்தான் கிடைக்கும்னு நான் நினைச்சேன். ஆனா, நீ அவளையே ஒரு நல்ல உயரமான இடத்துல கொண்டு போய் உட்கார வச்சிருக்க!” என்று குரல் நெகிழக் கூறினான்.