எப்போது யார் என்ன பேசினாலும் அரண்டு மிரண்டு போய் நடுங்கி நிற்பவள், ஓரமாகப் போய் விம்மி விம்மி அழுபவள்… இன்று தங்களை நேருக்கு நேர் எதிர்த்துப் பேசுகிறாளே என்று கல்யாணி அம்மாவுக்குக் கோபம் தலைக்கேறியது. “நாங்க பெரியவங்க பேசும்போது நடுவுல உனக்கு என்னடி பேச்சு? ஒழுங்கா ஓரமாப் போடி! அரசாங்க வேலைக்கு போறேன்னு உனக்கு ரொம்பத்தான் ஆட்டம் கூடிப்போச்சு!” என்று கத்தினார்.
“அதெப்படிம்மா நான் ஓரமா போக முடியும்? இங்கே பேச்சே… நான் வேலைக்குப் போறதை பத்திதானே நடக்குது! ஏற்கனவே நம்ம சொந்த வீட்டைக் குறிவச்சு, இங்கிருந்து அண்ணனைத் துரத்தி அடிச்சாச்சு. அவளைப் படிக்க வை, இத்தனை பவுன் நகை போட்டுச் சீர் செய்யி… அப்படி இப்படின்னு கறாராகக் கேட்டு வாங்கி அண்ணன் தலையில மிளகாய் அரைச்சு, அக்காவை நீங்க நினைச்ச மாதிரி ஒரு நல்ல இடத்துல கட்டியும் கொடுத்தாச்சு. இதுக்கும் மேல அண்ணன் வேற என்ன செய்யணும்? இவ்வளவு செஞ்சும் இன்னும் கொஞ்சம்கூட வெட்கமே இல்லாம வந்து நின்னு நாலஞ்சு லட்சம் பணம் வேணும்னு கேட்கிறா… இவளுக்கெல்லாம் அசிங்கமாவே இருக்காதா? அக்காவுக்கு புத்தி சொல்லாம நீங்களும் அவ கூட சேர்ந்துட்டு அவளுக்கு ஒத்து வேற ஊதுறீங்க!” என்று கவிதா காட்டிய அந்தப் புதிய கோப அவதாரத்தில், அவளைப் பெற்ற தாயும் அக்கா மாலதியும் மட்டுமன்றி… அவளது அண்ணன் அருள்மித்ரனே ஒரு நொடி பிரமித்து, மலைத்துப் போய் நின்றான்!
பொதுவாகக் கவிதா தன் அன்னையிடம் எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேசவே மாட்டாள். அன்னையின் நச்சு நாக்கிற்கும் வஞ்சகப் பேச்சிற்கும் பயந்து எப்போதுமே மூலைக்குள் ஒடுங்கித்தான் இருப்பாள்! அப்படிப்பட்டவள், இன்று எல்லாருக்கும் முன்னால் இவ்வளவு துணிச்சலாகவும் கம்பீரமாகவும் பேசுகிறாளே என்று அருளுக்கு ஒருபுறம் ஆச்சரியமாக இருந்தது. அதேசமயம், தன் தங்கை தன் காலில் நிற்குமளவிற்கு மனதளவில் உயர்ந்துவிட்டாள் என்பதை நினைத்து அவனுக்குள் ரொம்பவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது.
அனைவர் முன்னிலையிலும் தன் முகத்திரை கிழிந்து, அசிங்கமாகப் போய்விட்டதை உணர்ந்த மாலதிக்கு, அங்கே மேற்கொண்டு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. உடனே, அன்னையின் பச்சாதாபத்தைப் பெறுவதற்காகத் தன் போலித்தனமான கண்ணீரை வேண்டுமென்றே கண்களிலிருந்து வடியவிட்டாள். முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு தன் தாயைப் பார்த்தாள்.
மகளின் அந்த நாடகத்தைப் பார்த்ததும் கல்யாணி அம்மாவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “ஹே… கவிதா வாயை மூடுடி! கூடப் பிறந்த அக்கான்னு கொஞ்சம்கூடப் பார்க்காம அவளைப் பார்த்து இப்படிப் பேசுற? நீ என்னடான்னா அரசாங்க வேலை வாங்கிட்டு நல்லா சந்தோசமா இருக்க! உங்க அண்ணன் என்னடான்னா வசதியான வீட்டுப் பொண்ணைக் கட்டிக்கிட்டு சுகபோகமா இருக்கான். உங்களுக்கெல்லாம் இப்ப என் மூத்த பொண்ணைப் பார்த்தா இளக்காரமாதான் இருக்கும்!” என்று கவிதாவிடம் சீறியவர், அப்படியே ஆவேசமாக அருளின் பக்கம் திரும்பினார்.
“அப்படியென்னடா உனக்கு அவ மேல மட்டும் ஒசத்தியான பாசம்? இவளுக்கு மட்டும் ஓரவஞ்சனையா அரசாங்க வேலை வாங்கித் தந்திருக்க? என் மூத்த மகளுக்குப் பணம் கொடுக்க உனக்கு அவ்வளவு கசப்பா இருக்கா?” என்று காய்ந்தார்.
அருள்மித்ரன் தன் முகத்தில் எந்தவொரு சலனமும் காட்டாமல் மிக அமைதியான குரலில், “அதெப்படிம்மா… நான் போயி சொன்னா உடனே கவர்ன்மெண்ட் வேலை தந்துடுவாங்களா? இத்தனை நாளா எனக்கு இந்த விபரமே தெரியாமப் போச்சே!” என்றான் ஒரு அப்பாவி போல.
தன் அண்ணனின் அசத்தலான தோரணையைப் பார்த்ததும், கவிதாவுக்குத் தனக்குள் எழுந்த சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் மெல்லச் சிரித்துவிட்டாள். கல்யாணி அம்மாள் அவர்கள் இருவரையும் ஒரு முறைப்புடன் பார்த்து, “என்னடா… என்கிட்டயே நக்கலாப் பேசுறியா?” என்று அதட்டலான குரலில் கேட்டார்.
“அவ விடிய விடியத் தன் தூக்கத்தைத் தொலைச்சுப் படிச்சு இந்த வேலை வாங்கியிருக்கா… அது முழுக்க முழுக்க அவளோட சொந்தத் திறமை! மாலதிக்கும் அப்படித் திறமை இருந்தா அவளையும் இதேபோல ஒரு எக்ஸாம் எழுதி வேலை வாங்கிக்கச் சொல்லுங்க… அவ வேலை வாங்குறதை இங்கே யாராவது தடுத்து நிறுத்திட்டு இருக்காங்களா என்ன? அதை விட்டுட்டு, நான் தான் கவிதாவுக்கு வேலை வாங்கித் தந்தேன்னு நீங்க பேசினா… நான் உங்களுக்கு வேற எப்படி பதில் சொல்ல முடியும்?” என அவர்கள் இருவருக்கும் பொதுவாகச் சொல்லி, மாலதி கேட்கும் அந்த நாலஞ்சு லட்சத்திற்குத் தான் ஒரு நயா பைசாகூடத் தர மாட்டேன் என்பதைச் சொல்லாமல் சொல்லி அவர்களின் மூக்கை உடைத்தான் அருள்.
அவனால் அந்த பேச்சை அத்தோடு விட முடியவில்லை… பெற்ற அன்னை நா கூசாமல் சொன்ன அந்த ‘பாரபட்சம்’, ‘ஓரவஞ்சனை’ போன்ற கொடூரமான சொற்கள் எல்லாம் அவனது அடிமனதை வெகுவாகத் தொந்தரவு செய்து காயப்படுத்தின. அவன் தன் அன்னையை நேருக்கு நேராகப் பார்த்து, “இன்னைக்கு… என்னையும் கவியையும் பார்த்து ஓரவஞ்சனை செய்யற, பாரபட்சம் காட்டுறன்னு கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாம எப்படிம்மா உங்களால சொல்ல முடியுது? அன்னைக்கு அப்பாவுக்கு ஆக்சிடெண்ட் ஆனப்ப நான் ஸ்கூல்ல கடைசி வருஷம் படிச்சுக்கிட்டு இருந்தேன். வீட்ல இருக்கிற நகைங்களை எதையாச்சும் அடமானம் வச்சாவது, ‘நீ ஸ்கூல் படிப்பை முடிக்கிற வரைக்கும் அம்மா நான் வீட்டைச் சமாளிக்கிறேன்… நீ படிச்சு முடிச்சிட்டு வேலைக்குப்போ’ அப்படின்னு ஒரு வார்த்தை சொல்ல உங்களுக்கு மனசு வரலை!
என்னோட படிப்பை பாதியில நிறுத்தி, என்னை மெக்கானிக் வேலைக்கு அனுப்ப அன்னைக்கு உங்களுக்குத் தயக்கம் இருக்கலை. ஆனா, மாலதி ஸ்கூல்ல கம்மியான மார்க் வாங்கியிருந்தப்பவும்… நான் யார்கிட்டயாவது வட்டிக்குக் கடன் வாங்கியாவது அவளைக் காலேஜுல சேர்த்து விடணும்னு பிடிவாதம் பிடிச்சீங்க… சரி… அவளுக்குச் செஞ்ச மாதிரி கவிதா விஷயத்துலயும் நீங்க அதையே செஞ்சு படிக்க வச்சிருக்க வேண்டியதுதானே? அப்ப மட்டும் அவ படிக்காட்டி பரவாயில்லை, அவளுக்குக் காலேஜ் படிப்பு எதுக்குன்னு கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாம அத்தனை சாதாரணமா சொல்லிட்டுப் போனீங்க! நீங்க எல்லாம் பாரபட்சம் காட்டறதைப் பத்தி எங்ககிட்ட பேசலாமா?” என்று இத்தனை வருட வடுக்களை அவன் ஆவேசமாகக் கொட்டியபோது, கல்யாணி அதற்குமேல் மறுவார்த்தை பேச முடியாமல் அப்படியே அதிர்ந்து போய் உறைந்து நின்றார்!
அருளின் ஆவேசம் அத்தோடு அடங்கிவிடவில்லை. தன் தங்கை மாலதியை திரும்பிக் கூர்மையாகப் பார்த்தவன் அவளை சுட்டிக்காட்டி, “அதைக்கூட விடுங்கம்மா… மாலதிக்குக் கல்யாணத்தை நல்லபடியா முடிச்சு, அவளோட ரெண்டு பிரசவத்தையும் எந்தக் குறையும் இல்லாம பார்த்து, அந்தப் பிறந்த குழந்தைகளை அஞ்சாறு மாசம் இங்கேயே வச்சு வளர்த்துவிட்டுத்தான் நீங்க அவ புகுந்த வீட்டுக்கு அனுப்புனீங்க. அவ அங்கே போனாலும், அவளை இங்கேயே அடிக்கடி கூப்பிட்டு வச்சு, ஆசை ஆசையாச் சீராட்டி அனுப்பி வைக்கறீங்க. அதுக்கு என் மூலம் பாதிப்பு வர மாதிரி தோணினப்ப என்னை வீட்டை விட்டே துரத்தியும் விட்டுட்டீங்க.
ஆனா… பெத்த அம்மா இல்லாம தவிச்ச என் குழந்தையை ஒரு நாள் கூட பொறுப்பெடுத்து நீங்களும் பார்த்ததில்லை, உங்க அருமை மூத்த மகளும் வந்து எட்டிப் பார்த்ததில்லை! அப்ப மட்டும் இந்த அண்ணன் அவ கண்ணுக்கு தெரியலையா? அன்னைக்குக் கவிதா மட்டும்தான் அந்தப் பிஞ்சுக்குத் தாயா இருந்து வளர்த்தா. அப்படிக் காலமெல்லாம் சுயநலமா வாழ்ந்த உங்களுக்கெல்லாம்… இப்ப மட்டும் எங்கிருந்து வருது இந்த நீலிக்கண்ணீர்? அதுவும் கூடப்பிறந்த சொந்தத் தங்கச்சிக்குத் தன் சொந்தத் திறமையால ஒரு நல்ல வேலை கிடைச்சதுக்குப் போயி, இப்படிப் பொறாமையில வந்து நிக்கிறா!” என அவன் சுருக்கென்று கேட்டுவிட, அருள் தங்களை இப்படி நேரடியாகத் தாக்குவான் என எள்ளளவும் எதிர்பார்க்காத மாலதியும் கல்யாணியும் திணறிப் போய் வாயடைத்து நின்றார்கள்.
அருளின் வார்த்தைகளில் ஏற்பட்ட அந்தத் திகைப்பு நீங்கி, கல்யாணி மீண்டும் ஏதோவொரு வஞ்சகக் கோபத்தோடு வார்த்தைகளைக் கொட்ட வாயெடுத்தார். ஆனால், அவனது வலது கரத்தை நீட்டி அத்தோடு அவர்களைத் தடுத்து நிறுத்திய அருள், “குழந்தைங்க… நான் இன்னும் வீட்டுக்கு வரலைன்னு தேடுவாங்க. நான் கிளம்புறேன்!” என்று கூறியவனின் மனதிற்குள், ‘இனி இவர்களிடமெல்லாம் நியாயம் பேசுவதும், வாதம் செய்வதும் அடியோடு வீண்…’ என்ற தீர்க்கமான எண்ணம் மட்டுமே நிறைந்திருந்தது.
“கவிம்மா பார்த்து இருடா, வேலைக்கு பத்திரமா போயிட்டு வரணும்” என்று இளைய தங்கையிடம் மட்டும் முறையாக விடைபெற்றவன் பெற்றவளையும் மூத்த தங்கையையும் திரும்பியும் பார்க்காமல் வண்டியை கிளப்பி சென்று விட்டான். இருவருக்கும் முகத்திலேயே அடித்தது போல இருந்தது. அவமானத்தில் முகம் கன்ற இருவரும் நின்றிருக்க, அவர்களை கண்டுகொள்ளாமல் கவியும் உள்ளே சென்று விட்டாள்.
அருளின்இந்த தார்மீகக் கோபப் பேச்சுக்களுக்கெல்லாம் கல்யாணியும் மாலதியும்அவ்வளவு எளிதில் திருந்திவிடும் ரகங்கள் இல்லை என்பதால், தங்களின் தவறைஉணர்வதற்குப் பதிலாக, அருளின் மீது வீண் கோபத்தையும் வஞ்சகப் பகையையும் மட்டும்தான் அவர்கள் தங்களுக்குள் வளர்த்துக் கொண்டார்கள்.