மழைவர பூமி மறுத்திடுமா? – 22

பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதைப் பார்த்து, நெஞ்சம் மகிழ்ந்து பூரித்துப் போகும் பெற்றவர்கள் கோடான கோடி பேர் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எல்லாவற்றிற்கும் விதிவிலக்கு என்று ஒன்று இருக்கிறதல்லவா!

கல்யாணி முற்றிலும் அந்த ரகத்தைச் சேர்ந்தவர்தான்! அவரைப் பொறுத்தவரையிலும், தான் பெற்றெடுத்த மூன்று பிள்ளைகளில் முத்தான பொக்கிஷப் பிள்ளை என்றால் அது மூத்த மகள் மாலதி மட்டும்தான்! ‘மாலதிக்கு போகத்தான் மற்ற பிள்ளைகளுக்கு எல்லாமே…’ என்றொரு சுயநல எண்ணமும் பாரபட்சமும் அவரிடம் எப்போதுமே ஊறிப் போயிருந்தது.

மகன் அருள்மித்ரன் தன் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, ஒட்டுமொத்தக் குடும்பச் சுமையையும் தன் தோள்களில் ஏற்றித் திணறிக்கொண்டிருந்த வறுமைக் காலம் அது! பெரிய மகள் மாலதி பள்ளிப்படிப்பில் மிகக் குறைந்த மதிப்பெண்களிலேயே தேர்ச்சி பெற்றிருந்த போதிலும், ‘அவளைக் கல்லூரியில் சேர்த்தே தீர வேண்டும்!’ என்று கல்யாணி அத்தனை வாதங்கள் செய்தார்; வீடே ரெண்டாகும் அளவிற்குப் பிடிவாதம்.

ஒருவேளை மாலதி நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தால், குறைந்த கட்டணத்தில் அவனால் எளிதாக அவளைப் படிக்க வைத்திருக்க முடிந்திருக்கும். ஆனால், அவளது மதிப்பெண்களுக்கு ஏற்ற வகையில் பெரும் தொகையை டொனேஷனாகத் தந்து படிக்க வைக்க வேண்டும் என்பது, அருளின் வருமானத்திற்குப் பெரிய விஷயமாக இருந்தது.

அப்பொழுதும் அவன் அந்த டொனேஷன் பணத்திற்காக இரவு பகல் பாராமல் அலைந்து கொண்டிருந்ததை கல்யாணி எள்ளளவும் பொருட்படுத்தாமல், “நீ படிச்சு முடிக்கலைன்னு உன் தங்கச்சியும் படிக்கக் கூடாதுன்னு நினைக்கிறியா? அவ்வளவு பெரிய சுயநலவாதியா நீ!” என்று தன் நச்சு வார்த்தைகளாலேயே அவனது மனதை நோகடித்தார். ஒட்டுமொத்தக் குடும்பத்திற்காகத் தான் செய்த தியாகம், பெற்ற அன்னையின் பார்வையில் மதிப்பிழந்து தெரியும் அந்தப் பெரும் வலியை, வெளியில் காட்டாமல் தனக்குள்ளேயே மௌனமாகப் புதைத்துக் கொண்டான் அருள்.

அவனது இளம் வயதில், அவன் தலையில் முதல்முறையாகப் பெரும் கடன்சுமை ஏறியது அப்பொழுதுதான். அதன் பிறகு, ‘மாலதி திருமண வயதில் நிற்கிறாள்…’ எனச் சொல்லி, அவளுக்கு நகை வாங்க வேண்டும் என்று கல்யாணி அம்மாளின் நச்சரிப்பு நாளுக்கு நாள் கூடியது. எல்லாவற்றையும் அவன் தன் சக்திக்கு மீறித்தான் செய்து முடித்தான்.

மாலதி படித்து முடித்ததும், ‘இப்படித்தான் மாப்பிள்ளை பார்க்க வேண்டும், இந்த அந்தஸ்தில் பார்க்க வேண்டும், இத்தனை பவுன் நகை போட்டு இவ்வளவு சீர் செய்ய வேண்டும்’ என்று ஒரு பெரும் இமயமலைச் சுமையை அவன் முதுகில் மீண்டும் ஏற்றியபோதுதான், அவர்கள் குடியிருந்த வீடு அடமானத்திற்குப் போனது.

ஆயினும், அருள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு பொறுத்துப் போனான். அந்தக் குடும்பத்தின் மூத்த ஆண்மகன் என்ற பொறுப்பில், தன் முதுகில் ஏறிய அத்தனை பாரங்களையும், கடன்களையும் அவன் யாரையும் குறை சொல்லாமல் சுமந்தான். அயராது உழைத்து, தன் சுக துக்கங்கள் அனைத்தையும் துறந்து, கொஞ்சம் கொஞ்சமாகக் கடனை அடைத்து வந்தான்.

ஆனால், அதே அன்னை கவிதா விஷயத்தில் துளிக்கூடத் தலையீடோ அக்கறையோ காட்டவில்லை. அவளது பள்ளிப் படிப்பு முடிவடைந்த அடுத்த நொடியே, “பெரியவளைக் கட்டிக் கொடுத்த கடனே இன்னும் கழுத்தை நெரிக்குது. இவளுக்குக் காலேஜ் படிப்பு எல்லாம் எதுவும் வேண்டாம். சும்மா வீட்டிலிருக்கட்டும்!” என்று அத்தனை இலகுவாக, ஒரு சுமையைக் கழற்றி வைப்பது போலச் சொல்லிவிட்டார்.

அவரைப்போல பாரபட்சம் காட்ட அருள்மித்ரனால் எப்படி முடியும்? அதிலும், மூத்த தங்கை மாலதியை விடவும் நன்றாகப் படித்து, மிகச் சிறந்த மதிப்பெண்கள் எடுத்திருந்த தன் சின்னத் தங்கை கவிதாவைக் கல்லூரிக்கு அனுப்பாமல் அப்படியே வீட்டோடு முடக்கி வைப்பது அணுஅளவும் நியாயமே இல்லை ஆயிற்றே! அதனால், பெற்ற அன்னையின் எதிர்ப்புகளையும், வசவுப் பேச்சுகளையும் மீறி, தன் சின்னத் தங்கையைக் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்தான்.

‘அவள் படித்துக் கிழித்தால் மட்டும்… என் பெரிய மகள் மாலதிக்கு ஈடாகி விடுவாளா? அவளது அழகென்ன, பதவிசென்ன!’ என்ற மட்டற்ற இளக்காரத்துடனும் அகந்தையுடனும் இத்தனை நாட்களாக இருந்தவரை கல்யாணி அம்மாவுக்கு, ஒரு பிரச்சனையும் இல்லை. அதிலும், தான் ஆசைப்பட்டபடியே மாலதிக்கு மிக உன்னதமான, நல்ல அந்தஸ்தில் மாப்பிள்ளையும் அமைந்துவிட்டதில் அவருக்கு ஏக பெருமை!

அதோடு, அருள்மித்ரனுக்கு முதன்முதலாகப் பிரீத்தியோடு திருமணம் முடிந்தபோது, அவளின் குணத்தை புரிந்துகொண்ட கல்யாணி அம்மாள், கவிதாவை எல்லாம் இனி ஒருபோதும் கரையேற்றவே முடியாது என்ற முடிவுக்கே அவர் வந்துவிட்டிருந்தார். பிரீத்தி இருக்கும்போது இந்தக் குடும்பத்தையோ, தன் நாத்தனார் கவிதாவையோ துளிகூடக் கண்டுகொள்ள மாட்டாள்; அவளது செய்கையால் கவிதாவின் திருமணத்திற்கு அவள் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போட மாட்டாள் என்று முடிவே கட்டிவிட்டிருந்தவரின் வாயில் தினமும் அவலமாய் அரைபடுவதே கவிதாவின் நிலையாகிப் போனது.

பிரீத்தி தவறிய பிறகு, பச்சிளம் குழந்தையான தீபாலியைப் பார்த்துக்கொள்ளும் முழுப் பொறுப்பும் கவிதாவின் மடியில் வந்து விழுந்தபோது… ‘இவ எல்லாம் இந்த வீட்டுல ஆயா வேலை பார்க்கிறதுதான் சரி! ஆனா, இப்படியே காலத்துக்கும் பிறந்த வீட்டுலேயே உட்கார்ந்து நமக்கு பாரமா இருந்துடப் போறா…’ என்று எண்ணி, அருளையும் கவிதாவையும் தன் வஞ்சக வார்த்தைகளால் தினம் தினம் தாக்கிப் பேசி வந்தார் கல்யாணி.

என்னவோ தெரியவில்லை, கவிதாவின் அந்த இயற்கையான கருமை நிறம் கல்யாணிக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிப்பதே இல்லை. அதற்காக, மூத்த மகள் மாலதி ஒன்றும் பாலில் குளித்த நிறம் என்று சொல்வதற்கில்லை; அவளும் மாநிறமாகத்தான் இருப்பாள். அதற்கே அவர் அத்தனை அலுச்சாட்டியமும் செய்து கொண்டு, தன் சின்ன மகள் பிறந்ததே சாபக்கேடு என்கிற ரீதியில் அவளை கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார்.

இன்றோ… நிலைமை அப்படியே தலைகீழாக மாறிப் போயிருந்தது! கவிதாவைத் தன் காலுக்குக் கீழே பார்த்துக் கொண்டு, அவளை எப்போதுமே கரித்துக் கொட்டுவதில் ஒரு வக்கிரச் சுகம் கண்டு பழகிவிட்ட கல்யாணி அம்மாவுக்கு, இன்று அவளை ஒரு கிராம நிர்வாக அதிகாரியாக… கம்பீரமான அரசாங்க அதிகாரியாகப் பார்க்கவே முடியவில்லை. அவளது தோரணையும், நிமிர்வும், முகத்தில் வீசிய கம்பீரமும் பார்க்கப் பார்க்க, ‘இவளுக்கு வந்த வாழ்வைப் பாரேன்…’ என்று தனக்குள் பொறாமைத் தீயில் பொருமிக் கொண்டுதான் இருந்தார்.

மூத்த மகள் மாலதியும் அம்மாவுக்கு இணையாக இருந்தாள். “என்னம்மா இது? அவளுக்கு கவர்ன்மெண்ட் வேலை கிடைச்சிருக்கு. என்கிட்டே நீங்க இதை சொல்லவே இல்லையே!” என்று அங்கலாய்த்தாள்.

அருள்மித்ரன் தன் அம்மாவைக் காண்பதற்காகத் வீட்டிற்கு வந்திருந்தச் சமயம், அவன் வருவது கேள்விப்பட்டு மாலதியும் அங்கே உடனடியாகக் கிளம்பி வந்துவிட்டாள். வந்தவள் சும்மா இருக்காமல், “அவளுக்கு மட்டும் கவர்ன்மெண்ட் வேலை வாங்கி கொடுத்து, காலத்துக்கும் ஒரு நல்ல வழியைப் பண்ணிக் கொடுத்திருக்கீங்கண்ணா… அதேபோல, என் பேருலயும் ஒரு நாலு லட்சமோ அஞ்சு லட்சமோ பணத்தை பேங்க்ல போட்டு விடுங்க!” என்று எவ்வித மனசாட்சியுமின்றித் தன் பேராசையைப் பரிதாபமான குரலில் கொட்டினாள்.

“ஆமாடா அருள்… அவ கேட்கிற மாதிரி அந்தப் பணத்தைக் கொஞ்சம் ஏற்பாடு பண்ணி கொடு, ரெண்டு தங்கச்சிங்களுக்கும் பாரபட்சம் பார்க்காதே! அதுதான் நீயும் உன் பொண்டாட்டியும் நல்லா சம்பாதிக்கிறீங்கதானே! கூடப்பிறந்தவளுங்களுக்கு செஞ்சா உனக்குப் புண்ணியம்தான் கிடைக்கும்!” என்று கல்யாணியும் சற்றும் கூச்சமின்றி, அவனை அட்டையாய் இத்தனை ஆண்டுகளாக உறிஞ்சியது போதாமல் மீண்டும் தயவுதாட்சண்யமின்றி அவனிடம் அடுக்கினார்.

அருள்மித்ரன் முன்பு போல இருந்திருந்தால்… தங்கையின் இந்தப் போலியான பேச்சுக்கும், அம்மாவும் மகளும் சேர்ந்து கொண்டு செய்யும் இந்தத் தொடர் நச்சரிப்பிற்கும் பணிந்து, தன்னை மேலும் மேலும் வருத்திக் கொண்டு எப்படியாவது அவர்கள் கேட்ட அந்தப் பணத்தைச் செய்து தந்திருப்பானோ என்னவோ! ஆனால் இப்பொழுது, அவர்களின் அத்தனை சுயரூபங்களையும், வஞ்சகப் புத்தியையும் அப்பட்டமாகக் கண்ணாரப் பார்த்தவன் ஆயிற்றே! அதிலும்… தன் வாழ்நாள் முழுக்கப் பிள்ளைகளிடம் அநீதியான முறையில் பாரபட்சம் காட்டிய அதே பெற்ற அன்னை, இன்று தன்னிடம் வந்து ‘பாரபட்சம் பார்க்காதே…’ என்று தர்ம உபதேசம் செய்வதை நினைத்தபோது அவனுக்குள் கோபத்தைத் தாண்டி ஒரு மெல்லிய எள்ளல் சிரிப்புதான் வந்தது.

அவன் தன் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவர்களுக்குப் பதிலடி கொடுக்க நினைப்பதற்குள்… அங்கே ஒரு பெரும் அதிரடி நிகழ்ந்தது; கவிதா தன் வாயைத் திறந்தாள். “ஏன் அக்கா… வெறும் நாலஞ்சு லட்சம் மட்டும் போதுமா? இன்னும் கொஞ்சம் கூடச் சேர்த்துப் போட்டுடச் சொல்லலாமே!” என இளக்காரமாகக் கேட்டாள்.