*** அழகான அலங்காரங்கள், இங்கும் அங்கும் ஓடியாடி விளையாடி மகிழும் குழந்தைகள், பூட்டி வைத்த பட்டுப்புடவைகளையும், நகைகளையும் பூட்டி மகிழும் இல்லத்தரசிகள் என்று அந்த திருமண மண்டபமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

இன்று காவ்யாவுக்குத் திருமணம். திருமணம் நிச்சயமானதும் வீட்டிற்கு அழைக்க வருகிறேன் என்று சொன்னவர்களை அவன் தடுக்கவும் இல்லை. அம்மாவையும் சண்டை போடும் விதமாகவோ, அவமானப்படுத்தும் விதமாகவோ எதையும் பேசவும் அனுமதிக்கவில்லை.

அமைதியாகவே அவர்களிடம் பத்திரிக்கையைப் பெற்றுக் கொண்டவன், இதோ குடும்பம் சகிதமாகத் திருமணத்திற்கும் வந்துவிட்டான்.

கல்யாணிக்கு உள்ளுக்குள் புகைச்சல். ஆனால், சமீப காலமாக வீட்டில் அவர் இஷ்டத்திற்கு எதுவும் நடப்பதில்லை. அவரின் கூர் நாக்கால் வார்த்தைகளைச் சாட்டையால் விளாசியும் எந்த பிரயோஜனமும் இல்லை. கொஞ்சம் பல் பிடுங்கிய பாம்பின் நிலையிலிருந்தவர், வேறு வழியின்றி மகனின் சொல்லுக்கு இழுபட்டுக் கொண்டிருந்தார்.

திருமண பரபரப்பிலிருந்து ஒதுங்கி தனது மகள் தீபாலியை சமாதானம் செய்வதற்காக மண்டபத்தின் வெளியே நடை பயின்று கொண்டிருந்தான் அருள்மித்ரன்.

அவனின் மகளோ இன்றென பார்த்து வெகுநேரமாகச் சிணுங்கிக் கொண்டே இருந்துவிட்டு, ஒரு சின்ன வாண்டுவை பார்த்ததும் அவனிடம் செல்ல வேண்டும் என்று அடம் செய்தது.

மகள் அடமாக காட்டிய இடத்தில் சிறியவன் ஒருவன் தன் தளிர் நடையால் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான். நடக்கும்போது அவனது காலணியிலிருந்து வந்த கீச் கீச் ஒலி தீபாலியை ஈர்த்திருக்க வேண்டும். அந்த குழந்தையின் அன்னை மட்டுமே அவனின் அருகிலிருக்க, அங்கு போகலாமா, வேண்டாமா என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான் இவன்.

அதற்குள் மகளின் அழுகையும், அடமும் வேறு அதிகரித்திருக்க, வேறு வழியில்லாமல் சற்றே அவர்களை நோக்கிச் சென்றவன், சிறு இடைவெளி விட்டு நின்றபடி மகளுக்கு அந்த சிறுவனைக் காட்டிக் கொண்டிருந்தான்.

திடீரென்று தன்னருகே வந்த புதியவனைப் பார்த்ததும் லேசாக மிரண்டு விழித்த அந்த சின்ன சிட்டோ அவன் கையில் பொம்மையென அமர்ந்திருந்த சின்னவளைப் பார்த்ததும், தன் பச்சரிசி பற்களைக் காட்டி சிரித்தான்.

அந்த குட்டி தேவதையைப் பார்த்ததும் சந்தோசம் பொங்க, நின்ற இடத்திலேயே குதித்தபடி, “ம்மா… ம்மா…” என தன் தாயை அழைத்து அந்த குழந்தையிடம் கையை காட்டி அட்டகாசம் செய்தான்.

அவன் குதித்ததில் செருப்பிலிருந்து வந்த கீச் கீச் ஒலி இன்னும் அதிகரித்திருக்க, தீபாலியும் அழுகையை நிறுத்தி தன் சின்னஞ்சிறு பச்சரிசி பற்கள் இரண்டையும் காட்டி அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

அருள் மகளை வியப்பாகப் பார்த்து, ‘இத்தனை நேரம் செஞ்ச அடம் என்ன, இப்ப சிரிப்பை பாரு’ என சிரித்தபடி நினைத்தவன், மகளின் கண்ணீர் தடங்களைத் துடைத்து விட்டு, அவளின் புன்னகையை ஆசையோடு பார்த்திருந்தான்.

அங்கே நின்றிருந்த அந்த சின்ன வாண்டும் தன் தாயிடம், “ம்மா… ம்மா” என இவளைக் காட்டி அடம் செய்து கொண்டிருந்தது. அவன் இருக்கும் உயரத்திற்கு இவளைத் தூக்க வேண்டும் என சைகை செய்து கொண்டிருக்க, அருளுக்குச் சிரிப்பு பொங்கியது.

இந்த பெரிய மனுஷனைத் தூக்கவே ஆள் வேணும். இவன் பாப்பாவைத் தூக்குவானா என அருள் சிரிப்போடு அவனது சேட்டைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, சாதத்தை குழையப் பிசைந்தபடி அவர்கள் அருகில் வந்த நடுத்தர வயது பெண்மணி ஒருவர், தன் பேரனின் சுட்டித்தனத்தை ரசித்தபடியே, “கவின் குட்டி… உனக்கு அந்த குட்டி பாப்பா வேணுமா? அப்படின்னா அம்மச்சி தர புவ்வா சாப்பிடணும். அப்பதான் குட்டி பாப்பாவை தூக்க பலம் கிடைக்கும்” என்று சொல்லிக்கொண்டு வர, ம்ம் ம்ம் என அவனும் வேகமாகச் சம்மதித்துத் தலையசைத்தான்.

“பார்த்தியா உன் மகனை? இவன் இருக்க சைஸுக்கு அவளை தூக்கணுமாம். அதுக்காக சாப்பிடறேன்னு கூட சொல்லறான் பாரு” என்று அந்த கவினின் அம்மாச்சி அந்த சின்னவனுடைய தாயிடம் சிரித்தபடி சொல்லிக் கொண்டிருந்தார்.

கவனின் அன்னையோ மகனை ரசனையான பார்வையால் வருடியபடி, “கொடுங்கம்மா அவனுக்கு நான் ஊட்டி விடறேன்” என்றபடி உணவை வாங்க வர, “வேதா… நான் அவனுக்கு ஊட்டி விட்டுக்கிறேன். நீ போயி சாப்பிட்டு வா” என்றபடி அந்த மூத்த பெண்மணி உணவை தன்னிடமே இழுத்து வைத்துக் கொண்டார்.

அந்த பெண் உணவுண்ண போகாமல் தயங்க, அவளின் அன்னை அவளை முறைத்துப் பார்த்தார்.

ஏதாவது காரணம் சொல்ல வேண்டுமே என்று, “இவனை தனியா சமாளிக்கிறது கஷ்டம்மா, இவனை சாப்பிட வெச்சுட்டு நான் சாப்பிட்டுக்கிறேன்” என்று சொன்னாள். அதற்கும் அவளின் அன்னை முறைக்க, ஒரு பெருமூச்சோடு வேறு வழியே இல்லாமல் நகர்ந்தாள்.

கல்யாண விருந்தை சாப்பிட வேண்டா வெறுப்பாகச் செல்லும் அந்த பெண்ணை குழப்பத்தோடு கவனித்தது அருளின் விழிகள். அவனுக்கு அந்த பெண்ணை எங்கோ பார்த்ததுபோல இருந்தது. எங்கென்றுதான் சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

“நீங்க சாப்பிட்டீங்களா தம்பி?” பேரனுக்கு உணவை ஊட்டியபடியே அந்த அம்மா இவனிடம் கேட்க, இப்படி திடீரென்று அவர் பேசுவார் என எதிர்பார்க்காதவன், மையமாக தலையசைத்தான்.

“பாப்பாவோட அம்மா சாப்பிட போயிருக்காங்களா?” அவர் எதார்த்தமாகக் கேட்க, அவனுக்கு என்ன பதில் சொல்ல என தெரியவில்லை, அமைதியாகவே இருந்தான். அவனின் பதிலை கவனிக்கும் நிலையில் இல்லாதவரும், பேரனுக்கு ஊட்டியபடியே, “பாப்பாவோட இவன் பக்கத்துலேயே நில்லுங்க தம்பி, ரெண்டு பேரும் ஒன்னா விளையாண்டுட்டு சாப்பிட்டாலும் சாப்பிடுவாங்க” என்றபடி அந்த ரச சாதத்தை தீபாலியை நோக்கியும் நீட்டினார்.

அந்த சின்ன வாண்டு சாப்பிடுவதைக் கவனித்திருந்ததாலோ என்னவோ, இவளும் வாயைத் திறந்து வாங்கிக் கொண்டாள். அருளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவளைச் சாப்பிட வைப்பதற்குள் கவிதாவும் இவனும் படும் பாடு என்ன, இங்கே என்னவோ நல்ல பிள்ளை போல நடந்து கொள்கிறாளே என்று அதிசயத்தைப் பார்ப்பதைப் போலப் பார்த்தான்.

அவனின் பார்வையை உணர்ந்து, “குழந்தைங்க அப்படித்தான் தம்பி, நம்ம ஊரையே சுத்தி காட்டினாலும் சாப்பிடாதுங்க. இப்ப கூட விளையாட ஆளைப் பார்த்ததும் சாப்பிட ஆசை வந்துடுச்சு. அதுவும் நாலு வாய் சாப்பாடு உள்ளே போகுதான்னு பார்த்துட்டு தான் முடிவை சொல்ல முடியும். இவனும் இப்படித்தான், இவங்க அம்மா வேலையா இருப்பா. இவனை சாப்பிட வைக்கிறதுக்குள்ள நான் ஒரு மணி நேரம் நடக்கணும்” என்றார் அலுப்பும் பெருமையுமாக.

“என் பேரனால தானே உனக்கு சர்க்கரை கட்டுக்குள்ள இருக்கு” என்றபடி அங்கே ஒரு பெரியவர் வர, அவரை அங்கு எதிர்பாராததில் அருள் ஆச்சரியமாகப் பார்த்து அறிமுக புன்னகை செய்தான்.

அவனை கவனித்தவரும் அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை போல! “அருள், இங்கே என்ன செய்யறப்பா?” என்றார் ஆச்சரியமாக.

அருளின் மெக்கானிக் கடைக்கு வரும் ரெகுலர் கஷ்டமர் அவர். பெயர் அசோகன். “சார் சொந்தக்காரங்க கல்யாணம்” என்றான் அவனும் பதிலுக்குச் சிரித்த முகமாக.

“சொந்தமா? யாரு?” என்றார் அசோகன் யோசனையாக.

முகத்திலிருந்த சிரிப்பு தேய, “பொண்ணுக்கு சொந்தம்” என்றவனுக்கு எந்த வகையில் சொந்தம் என்று சொல்லப் பிடிக்கவில்லை.

அசோகனுக்கு பேச்சை இடையில் விட விருப்பமில்லை போல! “ஓ அப்படியா! பொண்ணு உங்களுக்கு என்ன வேணும்?” என மேலும் கேட்டார்.

மாமா மகள் என்றோ, மச்சினிச்சி என்றோ உறவு சொல்லப் பிடிக்கவில்லை. பதில் சொல்ல வேண்டுமே என்று, “பாப்பாவுக்கு சித்தி ஆகணும்” என்று மட்டும் மேலோட்டமாக சொன்னான்.

புருவம் சுருக்கி யோசித்தவர், “பொண்ணு ஒரே பொண்ணுன்னு தானே சொன்னாங்க, மூத்த பொண்ணு ஒன்னு இறந்துட்டதா சொன்னாங்க…” என்று அவர் சொல்லிக்கொண்டே வந்துவிட்டு சட்டென்று நிறுத்திக் கொண்டார்.

அருளின் முகம் உணர்வுகளற்று இருந்தது. அவன் கையில் பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தை. இந்த சின்னவளுக்கு அன்னை இல்லையா மனதில் பாறாங்கல்லைச் சுமப்பது போல பாரம் ஏறியது அசோகனுக்கு. சில நொடிகள் அவரால் ஒன்றும் பேசவே முடியவில்லை.

அவரின் மனைவி யமுனாவின் நிலையும் கிட்டத்தட்ட அதே தான்! குழந்தையுடைய அம்மாவைப்பற்றிய கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை என்பதே இப்பொழுது தான் உரைத்தது. கண்களில் கண்ணீர் தேங்கிவிட, அந்த பூஞ்சிட்டை வாஞ்சையோடு பார்த்தார். கடவுளுக்குக் கண்ணே இல்லையா என்று தான் தோன்றியது.

அருளின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த யமுனாவுக்கு உணவுண்ணும் போது மற்றவர்கள் பேசிக்கொண்ட விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.

“பிள்ளையை வளர்க்க முடியாது. மகளுக்குப் போட்ட நகையை வேணும்ன்னா கொடுத்திடறோம்ன்னு போயி கொடுத்திருக்காங்க, அவனுக்கு வசதி வாய்ப்பு இல்லாட்டியும் மானம், மரியாதை கூடவா இருக்காது. அதுதான் ரோஷக்காரன் கல்யாணத்துக்கு வந்து அவன் பொண்டாட்டி நகையை மொத்தமா இவங்க இளைய மக கல்யாணத்துக்கு சீரா கொடுத்து, ‘நீங்க என் பிள்ளையையும் பார்த்துக்க வேணாம், அவளுக்கு நகையும் கொடுக்க வேணாம்ன்னு’ மூஞ்சியில அடிச்ச மாதிரி சொல்லாம சொல்லிட்டான்” என அவர்கள் பேசிக்கொண்டது இவனைப் பற்றி தான் என புரிய, ‘எப்பேர்ப்பட்டவன் இவன்’ என பிரமிப்போடு பார்த்திருந்தார்.