“வேதிம்மா… ஏன் இப்படிப் பேசற? நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்லை. உன் பணம், என் பணம்ன்னு நான் என்னைக்குமே பிரிச்சுப் பார்த்ததில்லை. இன்னைக்கு வரைக்கும் நான் சம்பாதிக்கிறதை என்ன பண்றேன், ஏது பண்றேன்னு நீ ஒரு வார்த்தை என்கிட்ட கேட்டதில்லை. நான் கொடுக்கிற பணத்துல வீட்டுச் செலவை பார்த்துக்கிட்டு, பத்தாத போது கூட என்கிட்ட வாங்கிக்காம, உன்கிட்ட இருக்கிறதை வெச்சே சமாளிச்சுக்கிற. நாம ரெண்டு பேரும் வேற வேற இல்லைன்னு நான் நினைக்கிறதுனால தானேம்மா இதெல்லாம் நடக்குது?” என்றான் அவன் தெளிவாக.
அவன் சொன்னதை ஒப்புக்கொள்ள மறுப்பவள் போல, “அப்படி நினைக்கிறவர்… கடனை கட்ட நீங்க இப்படி கஷ்டப்படும்போது, நான் தர்றதை வாங்கிக்கிட்டா என்னவாம்?” என்று விடாமல் கேட்டாள.
“எல்லா பணத்தையும் கடன் கட்டி, வீட்டுச் செலவு பார்த்துன்னு தீர்த்துட்டா… நாளைக்கு ஒரு அவசர தேவைன்னு வரும்போது மறுபடி யார்கிட்டயாவது கடன் வாங்க நிக்கிறதா?” என்ற அருளின் கேள்வி நியாயமானதாக இருந்தாலும், அவளது பணத்தைக் கொஞ்சம் கூட பெற்றுக்கொள்ள மறுக்கும் அவன் செய்கையில் அவளது முகம் அனிச்ச மலராய் வாடிப் போனது.
‘கணவனின் இக்கட்டான சூழலில் கூடத் தன்னிடம் உதவி பெற மறுக்கிறானே! அந்த அளவிற்குத் தன்னை அந்நியமாக நினைக்கிறானா?’ என்கிற வேதனை அவளது நேசம் நிறைந்த நெஞ்சை நிலைகுலையச் செய்தது.
அவளது முகவாட்டம் புரிந்தாலும் அவளிடம் இருக்கும் சேமிப்பை எடுக்க அவனுக்கு மனம் வரவில்லை. இது அவன் பட்ட கடன்! மூத்த சகோதரியின் திருமணத்திற்காகக் கடனும் வாங்கிவிட்டு, இப்பொழுது இருந்த ஒரே வீட்டையும் அம்மா சொன்னார் என்பதற்காக அப்படியே விட்டுக்கொடுத்துவிட்டு வந்திருக்கிறான். அவனை நம்பி வந்த மனைவியை ஒரு வாடகை வீட்டில் அமர வைத்துவிட்டு, இனி அவளது சேமிப்பையும் இந்தச் சுமைக்குள் இழுப்பதா என்று அவனது நியாயமான மனம் அதற்கு அணுவளவும் அனுமதிக்க மறுத்தது.
அவளையும் இந்த புதைகுழிக்குள் இழுப்பது ஆபத்தானதல்லவா! அம்மாவின் பேச்சே, “ரெண்டு பேரும் சம்பாதிக்கிறீங்க, உங்களுக்கு என்ன குறை? எங்களுக்குச் செஞ்சா குறைஞ்சா போயிடுவீங்க?” என்ற ரீதியில்தான் இருக்கிறது. அப்படிச் சொல்லிச் சொல்லியே அவனுக்கு அம்மாவால் வரும் குடைச்சல்கள் ஏராளம். இதில் மனைவியும் கடன் கட்ட உதவி செய்கிறாள் என்று மட்டும் அவனுடைய அம்மா கல்யாணிக்குத் தெரிய வந்தால் அவ்வளவுதான், இருவர் தலையிலும் மிளகாய் அரைத்து விடுவார்.
அவன் ஒரு நல்ல எண்ணத்தில் மறுக்க, அதன்பின் வந்த சில நாட்களில் வேதிகா கோபத்தில் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அவனிடம் ஒரு மெளனப் போர் நடத்தினாள். அவளுக்கு வந்த அந்தச் செல்லக் கோபத்தைப் பார்த்து அவனுக்குள் சிரிப்புதான் பொங்கியது. அவள் கோபித்துக் கொண்டு நகரும் போதெல்லாம், வேண்டுமென்றே அவளை இழுத்து நிறுத்தி அழுத்தமாக முத்தம் வைப்பான். அவளோ கோபத்தைக் காட்டுவதற்காகத் தன் கன்னத்தையும் இதழ்களையும் கைகளால் அழுத்தித் துடைத்து விடுவாள்.
“அதுதான் நீ துடைச்சிடுவியே… அப்பறம் நான் முத்தம் கொடுத்தா என்ன? அது என்ன முகத்துல ஒட்டிட்டா இருக்கப் போகுது?” என்று கிண்டலாகச் சொல்லி, மீண்டும் ஆசைதீர அவள் முகமெல்லாம் முத்தங்களால் நிரப்புவான்.
அவனைத் தன் கைகளால் தள்ளி விலக்கிவிட்டு, “உங்களை…” என்று கோபமாக எதையோ சொல்லத் தொடங்குபவள், அதற்குமேல் என்ன சொல்வதென்று புரியாமல் முகம் சுருக்கிக் கொண்டு சமையலறைக்குள் புகுந்து கொள்வாள்.
பகலில் முத்தத்தோடு முடிந்த அவனது சேட்டைகள், இரவில் படுக்கையறைக்குள் நுழையும்போது வேறு வடிவங்களில் மாறும். அவன் நெருங்கி வரும்போதெல்லாம், “விடுங்க… நான் தான் உங்க மேல கோபமா இருக்கேனே?” என அவள் முரண்டு பிடிப்பாள்.
“நீ கோபமா இருந்தா என்னடி… நான் உன் மேல கோபமா இல்லையே?” என்று அவன் சொல்லும் நியாயத்தில் அவள் வாயடைத்துப் போவாள்.
அவன் என்னதான் சமாதானம் செய்ய முயன்றாலும், அவளது அந்தச் செல்ல முறைப்பு மட்டும் மாறுவதாகவே இல்லை. ஒரு கட்டத்தில் அவளது தவிப்பைப் புரிந்து கொண்டவன் அவளைத் தடுத்தாட்கொண்டு, “இப்போதைக்கு கடனை நானே சமாளிச்சிடுவேன் வேதிம்மா… என்னால முடியாத ஒரு சூழல் வரும்போது கண்டிப்பா உன்கிட்ட கேட்டு வாங்கிக்கிறேன். இந்தப் பணத்தை நீயே பத்திரமா வச்சிரு. நாளைக்கு நமக்கே ஏதாவது ஒரு அவசரத் தேவைன்னு வரும்போது இதுதான் கை கொடுக்கும். கைக்குழந்தைகளை வச்சுக்கிட்டு நாம எங்கே போய் நிக்கிறது?” என்று கூறிச் சமாதானம் பேசினான்.
மேற்கொண்டு எப்படி அவனை வற்புறுத்திக் கொடுக்க முடியும் என்று அவளுக்குப் புரியவில்லை. இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டிருக்கிறோம்; நாளை ஏதேனும் ஒரு மருத்துவச் செலவோ அல்லது ஆத்திர அவசரமோ என்று வந்தால், யாரிடமும் கையைப் பிசைந்துகொண்டு நிற்கக் கூடாதே என்கிற அவனது முன்னெச்சரிக்கை அவளுக்குப் புரிந்தது. ஆனாலும், அவன் தனியாளாகச் சுமக்கும் பெரும் பாரத்தில் ஒரு சிறு பங்கைக்கூடத் தன்னால் பங்கிட்டுக் கொள்ள முடியவில்லையே என்கிற கவலை, அவளது நேசம் நிறைந்த நெஞ்சை மழைக்கால மேகமாய் வாட்டியது.
*** சாமான்ய மக்களுக்கு எதுவும் அத்தனை எளிதாகக் கைகூடிவிடுவதில்லை; ஜெகனைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்கும் அருள்மித்ரன் அதிகமாக மெனக்கெட வேண்டியிருந்தது.
தலைக்கு மேல் ஏறி நிற்கும் கடன் சுமை, அதற்காக மூச்சிரைக்க ஓட வேண்டிய நெருக்கடி, போதாக்குறைக்கு அன்னை கொடுக்கும் இடைவிடாத மன உளைச்சல்… இத்தனையையும் தாண்டி, யாருடைய உதவியும் கோராமல் தனி ஆளாக ஜெகனைப் பற்றிய விபரங்களைத் திரட்டுவது அவனுக்கு மிகப்பெரும் சவாலாகவே இருந்தது.
ஜெகனைப் பார்த்த நொடியிலிருந்து, ஒரு பெரு நெருப்பொன்று அருளின் நெஞ்சில் நிரந்தரக் குடியுரிமை பெற்றுவிட்டது. அழகான மலரொன்றைச் சிதைத்தெறிந்த வன்நெஞ்சம் கொண்டவனின் குடலை உருவி மாலையாகப் போட வேண்டும் என்கிற ஆக்ரோஷம் தனக்குள் வீறுகொண்டு எழுவதை, அருளால் என்ன முயன்றும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
அருள்மித்ரன் இயல்பிலேயே நிதானமானவன், பெரும் பொறுமைசாலி என்று பெயரெடுத்தவன். ஆனால், அத்தகைய சாதுவையும் அவனது ஆருயிர் மனைவிக்கு இழைக்கப்பட்ட அந்தப் பெரும் அநீதி, இன்று மூர்க்கனாக உருமாற்றியிருந்தது.
இத்தனை ஆண்டுகள் அவள் அனுபவித்த அத்தனை இன்னல்களுக்கும் வேர்க்காரணம் அந்த ஜெகன் தானே! அவன் எவ்விதக் குற்ற உணர்ச்சியுமின்றி எங்கோ நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொகுசாக உலா வர, அவன் சேதப்படுத்தியதாலேயே ஒருத்தி தான் உயிராக நேசித்த கல்வியைத் துறந்து, வருங்கால கனவுகளோடு புத்தகத்தைச் சுமக்க வேண்டிய இளம் வயதில் கருவைச் சுமந்து, ஊராரின் நச்சு விமர்சனங்களைப் பெற்று … என எத்தனைத் துயரக் கடலில் மூழ்கிப் போனாள்!
திருமணம் முடிந்த பிறகும் கூட, அவனோடு இயல்பாக இணக்கம் காட்ட முடியாமல் அவளைத் தடுத்தது அந்த ஜெகன் அவளுள் ஏற்படுத்திய ஆறாத ரணங்கள் தானே?
அவளை இந்த அவல நிலைக்குத் தள்ளியவனை அப்படியே விட்டுவிடுவதா? அருள்மித்ரனால் அது ஒருபோதும் முடியாது! அவனது உயிரைப் பறிக்காவிட்டாலும், இன்னொரு பெண் பிள்ளையை ஏறெடுத்தும் பார்க்க முடியாதபடி அவன் கை, கால்களை முறித்து மூலையில் முடக்கிப் போட வேண்டாமா? பணமிருக்கும் திமிரில் அடுத்தவர் வாழ்க்கையோடு எளிதாக விளையாடும் அவனது கொழுப்பை அடக்க வேண்டாமா?
அருள்மித்ரன் அவனுக்கு கிடைக்கும் நேரங்களிலெல்லாம் ஜெகனைப் பற்றிய தகவல்களைத் தேனீயைப் போலச் சிறுகச் சிறுகச் சேகரிக்கத் தொடங்கினான்.
பொள்ளாச்சிதான் ஜெகனின் பூர்வீகம்; அங்கே பத்து ஏக்கர் பரப்பளவில் செழித்து நிற்கும் தென்னந்தோப்புகளுக்குச் சொந்தக்காரன். அந்தப் பெரிய வீட்டின் ஒரே வாரிசு என்பதால், அவன் ஒரு ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி என்பதையும் அருள் புரிந்துகொண்டான்.
ஜெகனை எப்படி தண்டிப்பது என்கிற யோசனைக்கான விடை இன்னும் அவனுக்குக் கைவரவில்லை. ஆனால், அவன் இனி இந்தச் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடக் கூடாது என்பதில் மட்டும் அருள் உறுதியாக இருந்தான். தன் மீது எந்தச் சந்தேகமும் வராதபடி, கனகச்சிதமானத் திட்டத்தை வகுக்க அருளுக்குச் சற்றே அவகாசம் தேவைப்பட்டது.
ஒருவழியாக விவரங்களை சேகரித்தும், அந்தத் துரோகி இன்னும் தன் கண்ணில் படவில்லை என்பதுதான் அருளுக்குப் பெரும் பின்னடைவாக இருந்தது. பசுமையானத் தென்னஞ்சோலைகளும், குளிரும் காற்றும் நிறைந்தப் பொள்ளாச்சியின் வீதிகள் இப்போது அருளுக்கு எரிமலைக் குளம்பாய்த் தெரிந்தன.
‘இன்னொரு முறை மட்டும் என் கண்ணுல படுடா!’ நெஞ்சுக்குள் எரியும் ஆத்திரத்துடன் பொள்ளாச்சிக்கு அவன் அடிக்கடி விஜயம் செய்தாலும், இதுவரை கிடைத்தப் பலன் என்னவோ பூஜ்ஜியம்தான். ஜெகன் அவனின் கண்ணில் அகப்படாமல் இருப்பது, அருளின் பொறுமையைச் சோதித்துக் கொண்டிருந்தது.
அருள்மித்ரனின் உள்ளம் ஒரு எரிமலையாய்க் குமுறிக் கொண்டிருந்தது. அந்த வஞ்சகத் தீ அவனை எங்கு கொண்டு போய் நிறுத்தப் போகிறதோ என்பதைக் காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.