மழைவர பூமி மறுத்திடுமா? – 14

மகன் கவினின் இரண்டாவது பிறந்தநாளுக்காக, அருள்மித்ரன் தன் மனைவி மற்றும் பிள்ளைகளோடு செஞ்சேரிமலை வேலாயுதசுவாமி கோயிலுக்கு வந்து மனதார வழிபட்டான்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வேதிகாவின் மனது ஓர் இனிய அமைதியில் திளைத்திருந்தது. அவர்களது வாழ்வின் சவால்கள் எல்லாம் தீர்ந்துவிட்டனவா என்றால் இன்னும் இல்லைதான்; ஆனாலும், எத்தகையப் பேரலையையும் எதிர்கொள்ளும் துணிவை அவனது நேசம் அவளுக்கு அள்ளித் தந்திருந்தது.

திருமணத்தையே பெற்றோரின் விருப்பத்திற்காக செய்து கொண்டவளின் மனது கணவனின் காதலில் நெகிழும் அமைதியடையும் இந்த தலைகீழ் மாற்றம் எப்படியென்று அவளுக்கே புரியவில்லை.

அப்படியானால், இத்தனை நாள் அலைப்புறுதலோடு இருந்த அவளது உள்ளம் தேடித்தவித்தது கணவனது அன்பைத்தானா? அந்த அன்பின் தகிப்பில் அவளது கவலைகள் மெழுகு போல உருகி மறைந்ததால்தான் மனம் இத்தனை சாந்தமாகிவிட்டதோ?

அவனது அன்பில் அவள் இத்தனை தூரம் பூரித்துப் போகிறாள் என்றால், அவன் அவளது இதயத்தின் ஆழத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டான் என்பதுதானே நிதர்சனம்! இல்லையெனில், அவனது காதலுக்காக அவளது உள்ளம் ஏன் இப்படித் ஏங்கியிருக்கப் போகிறது?

அவன் அவளது மனதில் வந்து அமர்ந்தது எப்படிச் சாத்தியமானது என அவளுக்கு இன்னமும் புரியவில்லை. மழை வரும்போது மறுத்திடாத பூமி போல, நேசம் பொழியும் மனதை காயம் கொண்ட மனம் ஏற்க எங்கனம் மறுக்குமாம்?

அவள் இந்தத் திருமண வாழ்க்கையோடு பொருந்திப் போகும்வரை அவன் பொறுமையுடன் கொடுத்த அவகாசம், இரு பிள்ளைகளிடமும் எவ்விதப் பாகுபாடும் காட்டாத அவனது சமத்துவக் குணம், எதற்கும் அன்னையை எதிர்த்துப் பேசியிராதவன் தனக்காக எதிர்த்து நின்ற வேகம், தனக்கு உரிமையான வீட்டைக்கூட பெற்றவளின் பாகுபாட்டினால் எவ்விதத் தயக்கமுமின்றி விட்டுக்கொடுத்து வந்த அந்தப் பெருந்தன்மை… இப்படி அவன் செய்த ஒவ்வொரு செயலினாலும் அவளது மனதில் ஒவ்வொரு படியாக ஏறி, இன்று அவளின் மனதின் அரசனாக சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டிருந்தான்.

அவனது மனதில் தானும் நிறைந்திருக்கிறோம் என்று புரிந்த அந்த நொடியில், அவளது தவிப்புகளும் அச்சங்களும் தூள் தூளாகி, இந்த அகிலத்தையே வென்றது போன்ற ஒரு பெரும் பூரிப்பை அவளால் உணர முடிகிறது.

அவர்கள் திருமண பந்தத்தில் இணைந்ததற்குப் பின்னால் ஆயிரம் காரணங்கள் இருந்திருக்கலாம். ஆனால், இனி அவர்கள் இணைந்து பயணிக்கப் போவதற்கு ஆகப்பெரும் ஒரே காரணம் – அவர்களுக்குள் ஆழமாக வேரூன்றிவிட்ட இந்த நேசம் மட்டும்தான்! அதை நினைக்கையிலேயே அவளுக்குள் ஒரு மகா நிம்மதியும் ஆசுவாசமும் வந்து குடிபுகுந்தன.

வழிபாடு முடிந்து பிரகாரத்தில் அமர்ந்திருந்தபோது, அருள்மித்ரன் தன் பையிலிருந்து ஒரு கோப்பினை எடுத்து வேதிகாவிடம் நீட்டினான்.

கேள்வியாக அவனை ஏறிட்டவள், “இது என்னங்க?” என்று கேட்டபடி அதைப் பெற்றுக்கொண்டாள்.

“கவினுக்கும் தீபாலிக்கும் நாம கொடுக்கப்போற பரிசு வேதி… இதோ இது, கவினை நான் சட்டப்படி தத்தெடுப்பதற்கான விண்ணப்பம். அதேபோல தீபாலியை நீ தத்தெடுப்பதற்கானப் படிவமும் இதில் இருக்கு. இனி யாராலும் நம்ம பிள்ளைங்க கிட்ட நமக்கு உரிமையில்லைன்னு சொல்ல முடியாது. கவின் இனி வெறும் கவின் இல்ல… கவின் அருள்மித்ரன்!” என்றான் அழுத்தமான குரலில்.

வேதிகா அடியோடு உறைந்து போனாள். கல்யாணி வீசிய நச்சு வார்த்தைகள் அவளது இதயத்தை ரணமாக்கிக் கொண்டிருந்த வேளையில், அருள்மித்ரன் இத்தனை தூரம் யோசித்துச் செய்த இந்தச் செயல் அவளது காயங்களுக்குப் பேரௌஷதமாக (மருந்தாக) அமைந்தது. தன் கணவன் தன் மீது வைத்திருக்கும் அந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும், கவினை தன் மகனாகவே சட்டப்படி வரித்துக்கொள்ள நினைத்த செய்கையையும் கண்டு அவளது கண்கள் பூரிப்பில் நனைந்தன.

“ஸ்ஸ்ஸ்… எதுக்கு இப்போ கண் கலங்குற?” என்று மெலிதானக் குரலில் அதட்டினான். அவளால் தன்னைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை; மூக்கை உறிஞ்சியபடி, பொங்கி வந்த கண்ணீரைத் தடுக்கப் போராடினாள்.

அருள் மனைவியின் கைகளை ஆறுதலாக அழுத்திப் பிடித்தான். “ஞாபகம் இருக்கா வேதிம்மா… உனக்கு எப்பவும் துணையா இருப்பேன்னு வாக்கு தந்து இதே கோயில்லதானே உன்னை என் மனைவியா ஏத்துக்கிட்டேன்? அப்போ இது என் கடமைதானேம்மா! இதை நான் முன்னாடியே பண்ணியிருக்கணும். ஆனா எனக்கு இதுபத்தி பெருசா எதுவும் தெரியலை. நமக்கு கல்யாணமாகிட்டதால நம்ம குழந்தைகள் நமக்கானவங்க தானேன்னு சாதாரணமா நினைச்சுட்டேன். ஆனா, கவினுக்கு எங்க வீடு கிடைக்கக்கூடாதுன்னு எங்க அம்மா தீவிரமா இருந்தப்போதான், நாளைக்கு நான் எதுவும் சம்பாரிக்கும் போது என் மகனுக்கு பங்கு போகாதோன்னு பயம் வந்துடுச்சு. அதுதான், சட்டப்படி என்ன செய்யணும்னு விசாரிச்சேன்” என்று அவன் விவரிக்க, வேதிகாவோ இமையசைக்காமல் அவன் விழிகளையே நோக்கினாள்.

நெக்குருகி பார்த்தவளின் பாவனையில் அவனுக்கு சிரிப்பு வந்தது. “என்னடி?” என்றான் புருவங்கள் உயர்த்தி.

“வேதிம்மா… வேதி… இப்ப, ‘டி’ கூட சொல்லிட்டீங்க” என்றாள் சலுகையாக, என்னவோ அதுதான் பெரிய விஷயம் என்பது போல!

“அழகி… இங்கே நான் என்ன பேசிட்டு இருக்கேன், நீ எதை கவனிக்கிற?” என்றான் செல்ல கண்டிப்புடன். அவன் இதழ்களில் தனது செய்கைகள், சொற்கள் என அனைத்தையும் கவனித்து குறிப்பிட்டு வேறு சொல்கிறாளே என்றொரு சங்கடமான வெட்கப்புன்னகை.

“இப்பவும் அழகின்னு சொல்லறீங்க, இதையும் நான் கவனிக்கக் கூடாதா?” என மயக்கும் குரலில் கேட்டு அவனை இன்னமும் பாடுபடுத்தியவள், தன்னருகில் அவன் தந்த அந்தக் கோப்புகளை வைத்து கையெழுத்திடப் போனாள்.

அவளது கைகள் கையெழுத்திடுவதற்கு நடுங்கின. அவை வெறும் காகிதங்களில் அல்ல, தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திலும், தனக்குக் கிடைத்த கௌரவத்திலும் கையெழுத்திடுவது போன்ற ஓர் உணர்வு.

ஒவ்வொரு எழுத்தாக அவள் கோர்க்கும்போதும், அவளின் உள்ளம் நடுங்கியது. கையெழுத்திட்டு முடித்தவளுக்குத் தன்னையும் மீறி மீண்டும் கண்கள் கலங்கிப் போயின. நேசத்தோடு கணவனின் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

தானாக முன்வந்து தன் தோளில் சாய்ந்த மனைவியின் நெருக்கத்தில் அருள்மித்ரன் திகைத்துப் போனான். சுற்றியிருப்பவர்கள் பார்க்கக்கூடும் என்று தெரிந்தும், அவளை விலக்கிவிட அவனது மனம் இசையவில்லை. அவள் நெகிழ்ந்து போயிருப்பாள் என்பதைப் புரிந்துகொண்டவன், தன்னை மீட்டுக்கொள்ள அவளுக்குச் சிறிது கால அவகாசம் கொடுத்து, அவளை அப்படியே விட்டுவிட்டான்.

சிறிது நேரத்தில் மெல்லத் தன்னிலை மீண்டு விலகியவள், பொது இடத்தில் இப்படி நெருக்கமாக அமர்ந்துவிட்டோமே என்கிற குறுகுறுப்பில் அவன் முகம் பார்க்கச் சங்கடப்பட்டு, பார்வையை எங்கெங்கோ அலைய விட்டாள். அவளின் தடுமாற்றத்தை அவனது விழிகள் ஆசையோடு கவனித்துக் கொண்டிருந்தன.

பிள்ளைகள் அருகில் பாதுகாப்பாக விளையாடிக் கொண்டிருக்க, அவன் தந்த கோப்புகளைப் பத்திரப்படுத்தியபடியே, “அச்சோ! மதியம் சமையல் செய்யணுமேங்க!” என்றாள் திடீரென்று தொற்றிக்கொண்ட பதற்றத்துடன்.

அருள்மித்ரன் பதில் சொல்லாமல் கண்களால் சிரிக்க, அவளுக்கோ ஒன்றும் புரியவில்லை. “சமைக்க நேரம் போதாதுங்க… சீக்கிரம் கிளம்பலாம் வாங்க!” என்று கணவனிடம் அவசரம் காட்டினாள் வேதிகா.

அவன் இதழ்களில் விரிந்த சிரிப்புடன், “என் சின்சியர் பொண்டாட்டியே! மதியம் என் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு வரோம்னு சொல்லியிருக்கேன்” என்றான் குறும்பு மின்னும் குரலில்.

அவளது இதழ்கள் வியப்பில் தானாகவே விரிந்தன; எப்போதுமே அளவான பேச்சுடன் இருக்கும் தன் கணவனா இப்படிப் பேசுகிறான் எனத் திகைத்துப் போனாள். அந்த அளவிற்கு அவனது இந்த விளையாட்டுப் பேச்சு அவளுக்குப் புத்தம் புதியதாக இருந்தது. ‘இவருக்கு இப்படியெல்லாம் கூடப் பேசத் தெரியுமா?’ என்று அவனை விசித்திரமாகப் பார்த்தாள்.

அவளது அந்த ஆழமானப் பார்வையில், அவனுக்குள் அவஸ்தை கூடிக்கொண்டே போவது அவளுக்கு எங்கே தெரியப் போகிறது?

அவள் பார்வையை அகற்றாமல் திகைத்து இருக்கவே, ‘என்ன?’ என்று தன் புருவங்களை உயர்த்தி மீண்டும் வினவினான் அருள்.

“அம்மா வீட்டுக்குப் போயிட்டா… அப்புறம் சாயங்காலம் கேக் கட் பண்றது?” என்று அப்போதும் சந்தேகம் கேட்டவளிடம், “சாயங்காலம் சீக்கிரமே வீட்டுக்கு வந்துடலாம் வேதிம்மா… என்ன இத்தனை கேள்வி உனக்கு?” என்றபடி அவளது நெற்றியில் செல்லமாகத் தட்டினான்.

ஒற்றை நாளில் தங்களுக்குள் இருந்த அந்தப் பெரும் இடைவெளி மறைந்து, நெருக்கம் பல மடங்கு கூடியிருப்பதை அவளால் உணர முடிந்தது. பேச்சு, செய்கை என இருவரிடமுமே இன்று எத்தனையோ மாற்றங்கள்!

முகத்தில் ஒரு சிறு அசட்டுச் சிரிப்பை உதிர்த்தவள், “அப்ப நீங்க வேலைக்கு போகலையா?” என்று மெல்லியத் தயக்கத்தோடு கேட்டாள்.

“இன்னைக்கு போகலை…” அவளது திகைப்பை ரசித்தபடியே ஒரு குறும்புச் சிரிப்புடன் பதில் தந்தான் அருள். ‘கடமை கண்ணாயிரம் வேலைக்கு போகவில்லையா?’ கணவன் இன்று விடுப்பு எடுத்தது அவளுக்குப் பெரும் அதிசயமாக இருந்தது. அவளது விழிகள் மீண்டுமொருமுறை வியப்பில் அழகாக விரிந்தன.