மழைவர பூமி மறுத்திடுமா? – 13

கல்யாணிக்கு, அருள்மித்ரன் இந்தத் திருமணத்தைச் செய்துகொண்டதே பிடிக்கவில்லை. வேதிகாவை வேற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவள் என்று ஒதுக்காமல், ‘முறைதவறி அப்பன் பெயர் தெரியாத குழந்தையைப் பெற்றெடுத்தவள்’ என்கிற சமூகப் பழியையும் பொருட்படுத்தாமல் அவன் மணந்தது, கல்யாணியின் அகங்காரத்திற்குக் கிடைத்த பலமான அடி!

எவனோ பெற்றுப்போட்ட கவின், தன் கண் முன்னே இந்த வீட்டில் வளர்வதைப் பார்க்கப் பார்க்க அவருக்கு வயிறு பற்றி எரிந்தது. ‘நாளைக்கு இவன் வளர்ந்து இந்த வீட்டிலேயே உரிமையோடு வாழ்வானா?’ என்கிற எண்ணமே அவருக்குப் பெரும் மனவுளைச்சளைத் தந்தது.

அது போதாதென்று, வேதிகா பார்க்க லட்சணமாக இருப்பதோடு, தன் வீட்டிற்கு ஒரே பெண் என்பதும் அவருக்குப் பொறுக்கவில்லை. இவர்களின் திருமணத்தின் போது வரதட்சணை பற்றி எந்தப் பேச்சும் எழாத போதும், பார்த்தாலே ஓரளவிற்கு வசதியாகத் தெரியும் வேதிகாவின் குடும்பத்தைக் கண்டு அவருக்குள் பெரும் பொறாமைத் தீ மூண்டது.

‘உன்னையெல்லாம் கட்டிக்க யாரு வருவா?’ என்று அவர் எகத்தாளமாகச் சொல்லி வந்ததற்கு மாறாக, அழகான, வசதியான, சுயமாகச் சம்பாதிக்கும் ஒரு பெண் அவனுக்கு மனைவியாக அமைந்தது அவருக்குப் பெரும் எரிச்சலைத் தந்தது.

‘தன்னுடைய அருமை மகள் மாலதி அங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, இங்கே எதற்கும் தகுதியற்றவன் என்று தான் நினைத்த மகனுக்கு இத்தனை வளமான வாழ்வா?’ இதைச் செரித்துக்கொள்ள முடியாமல் அவர் ஆத்திரத்தில் வெந்து கொண்டிருந்தார்.

எப்படியும் வேதிகா வீட்டுச் சொத்துப்பத்துகள் அனைத்தும் இவன் பெயருக்குத்தான் வந்து சேரப் போகிறது. ஏற்கனவே தன் கணவன் விட்டுச் சென்ற தொழிலையும் இவன்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான். மிச்சம் மீதியிருக்கும் இந்த இடமும் வீடும் கூட அவனுக்கே போய் விடுவதில் கல்யாணிக்குத் துளியும் இஷ்டமில்லை. அதனால்தான் வேதிகாவை முடிந்தவரையிலும் மனரீதியாகச் சித்திரவதை செய்து நோகடித்தார்.

அவர் படுத்தும் பாடு தாங்காமல், அவளாகவே வீட்டை விட்டு போய்விடுவாள் என்று அவர் போட்ட கணக்கைச் சுக்குநூறாக்கிவிட்டு, அவரின் அருமை மகள் மாலதியையே இந்தப் பக்கம் வரவிடாமல் செய்துவிட்டார்கள்!

அவ்வளவுதான்… கல்யாணியின் மொத்தப் பொறுமையும் பறந்து போனது. மகனின் வருமானம் வாழ்வாதாரத்திற்குத் தேவையே என்று ஆரம்பத்தில் பொறுத்துப் போகத்தான் நினைத்தார். ஆனால், நாளாக நாளாக இவர்களுக்கு எல்லாம் சிறப்பாக நடக்கிறதே, வேதிகாவும் வீட்டிலிருந்தே கைநிறையச் சம்பாதிக்கிறாளே என்றெல்லாம் எண்ணியபோது, அவருக்குள் வஞ்சகம் வெடித்துச் சிதறியது.

அவன் தனியாகப் போனாலும், கவிதாவின் திருமணப் பொறுப்பையும் தன் பராமரிப்பையும் அவன் கவனித்துக் கொள்ளத்தான் வேண்டும்; எப்படியும் புருஷனும் பொண்டாட்டியும் நன்றாகத்தானே சம்பாதிக்கிறார்கள், கண்டிப்பாகப் பார்த்துக் கொள்வார்கள் என்கிற துணிச்சல் இருந்ததால், அவர்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்ல அவர் கொஞ்சமும் தயங்கவில்லை

*** அருள்மித்ரனும் வேதிகாவும் புதிதாக ஒரு வாடகை வீட்டிற்குத் தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

கல்யாணி வீசிய அந்த அருவருக்கத்தக்கச் சொற்கள், வேதிகாவின் அடிமனதில் முள்ளாய் இறங்கி அவ்வப்போது அவளைக் குத்திக்கொண்டே இருந்தன. ‘தான் இந்தத் திருமண வாழ்க்கைக்குத் தகுதியற்றவளோ?’ என்கிற தாழ்வுமனப்பான்மை நாளுக்கு நாள் அவளை அலைக்கழித்தது. புதிய வீட்டிற்கு வந்த பின்பும், அவளால் கணவனின் முகம் பார்த்துப் பேச முடியவில்லை; அவளாக எந்தவொரு உரையாடலையும் அவனிடம் முன்னெடுக்கவும் இல்லை.

இதையெல்லாம் இழுத்துக் கொண்டது வேதிகாவே தான். ஆரம்பத்திலிருந்தே அருள்மித்ரன் தனித்துப் போய்விட கேட்கும் போதெல்லாம் ‘குடும்பத்தைப் பிரிப்பதா… கவிதாவை தனித்து விடுவதா…’ என்று யோசித்து யோசித்து மறுத்து வந்தவள், இன்று மொத்தமாக மனம் உடைந்தபிறகு வெளியே வந்திருக்கிறாள். பொறுமைக்கும் எல்லை வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டாமா?

நத்தை தன் ஓட்டிற்குள் சுருங்கிக்கொள்வது போல, தனக்குள் சுருங்கிப் போய்விட்ட அவளின் மனக்காயம் புரிந்தவனும் அவளுக்கான இடைவெளியை கொடுத்து அமைதி காத்தான்.

அவள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் போராட்டம் அவனுக்குப் புரியவில்லை. தெரிந்திருந்தால், அவளது இந்தக் கவலைகள் அவசியமே இல்லை என்பதைத் தன் அன்பால் இந்நேரம் அவளுக்குப் புரிய வைத்திருப்பான்.

கவிதாவின் நிலைதான் மிகவும் பரிதாபமாக இருந்தது. அண்ணி, கவின், தீபாலி என இவர்களைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்த அவளது நாட்கள், இப்போது அவர்கள் அருகில் இல்லாமல் உயிரற்ற நாட்களாக நகர்ந்தன. வேதிகா தினமும் அழைத்து நலம் விசாரிப்பதும், ‘இதைப் படித்து முடித்துவிடு’ என்று அவளை வழிநடத்துவதும் ஒருபுறம் ஆறுதல் தந்தாலும், கவிதாவிற்கு அதெல்லாம் போதுமானதாக இல்லை.

அண்ணியின் அருகாமைக்கும், குழந்தைகளின் மழலைச் சத்தத்திற்கும் அவள் மனம் வெகுவாக ஏங்கித் தவித்தது. ஆனால், கல்யாணிக்கோ அவர்களை வீட்டை விட்டுத் துரத்திவிட்டதில் அப்படி ஒரு உற்சாகம்! இந்த வீட்டிற்கும், அவனுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்று அருள்மித்ரனிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிவிட்டவருக்கு, தான் நினைத்ததைச் சாதித்துவிட்ட உற்சாகம் இல்லாமல் இருந்தால் தானே ஆச்சர்யம்.

வேதிகா புதிய சூழலில் குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு, தன் கைத்தொழிலிலும் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். நாள் முழுவதும் ஓயாத வேலைகள் அவளைச் சூழ்ந்திருந்தாலும், அடிமனதை அழுத்தும் அந்த வலி மட்டும் குறைந்தபாடில்லை; கல்யாணி வீசிய நச்சு வார்த்தைகளே அவளது நினைவுகளில் நீங்காமல் நிழலாடிக்கொண்டிருந்தன.

முன்பு படுக்கையறையில் இருந்த அவளது தையல் இயந்திரமும், எம்பிராய்டரி உபகரணங்களும் இப்போது அந்த ஒற்றைப் படுக்கையறை வீட்டின் வரவேற்பறையிலேயே நிரந்தரமாகக் குடியேறின.

குழந்தைகளைக் குளிப்பாட்டி, அவர்களுக்கு உணவு கொடுத்து, சில விளையாட்டுப் பொருட்களை அவர்கள் முன் பரப்பிவிடுவாள். அவர்கள் தங்களுக்குள் மூழ்கியிருக்கும் அந்தச் சிறிய இடைவெளியில், வேதிகா தன் எம்பிராய்டரி வேலைகளை செய்யத் தொடங்கி விடுவாள்.

இப்பொழுதெல்லாம் கவின் கொஞ்சம் சூட்டிப்பாகி விட்டான். தான் எடுக்கும் எந்தப் பொருளையுமே தீபாலி பிடுங்கப் பார்ப்பாள் என்பது அவனது பிஞ்சு மனதில் அழகாகப் பதிந்துவிட்டதோ என்னவோ? வேண்டுமென்றே அவனுக்குத் தேவையில்லாத ஒரு விளையாட்டுப் பொருளை எடுத்து அவன் விளையாட முனைய, சின்னவள் ஓடி வந்து அதைத் தட்டிப் பறிப்பாள். அதைத் தங்கையிடமே கொடுத்துவிட்டு, சத்தமில்லாமல் அவனுக்கு வேண்டிய வேறொரு பொருளை எடுத்து விளையாடச் சென்று விடுவான்.

தீபாலி கொஞ்ச நேரம் கையில் இருக்கும் பொருளில் கவனம் செலுத்துவாள். ஆனால், அண்ணனிடம் வேறொன்று இருப்பதை கவனித்ததும், மீண்டும் தத்தித் தத்தி ஓடி வந்து அதையும் பிடுங்கிக் கொள்வாள். அப்போதும் கவின் சண்டையிடாமல், அந்தப் பொம்மையைத் தங்கையிடமே விட்டுவிட்டு ஒரு ஓரத்தில் அமைதியாக அமர்ந்து கொள்வான்.

அவனது நடிப்பைப் பார்க்கையில் வேதிகாவின் இதழ்களில் இளம்முறுவல் அரும்பும். மேற்கொண்டு என்னதான் நடக்கிறது என்று அவர்களின் குட்டிப் போரை அமைதியாக வேடிக்கை பார்ப்பாள்.

அண்ணனின் மௌனத்தை ஒரு வயது தீபாலிக்குத் தாங்க முடியாது போலும்! தான் பிடுங்கிய பொருளை அவனிடமே திருப்பிக் கொடுத்துச் சமாதானம் செய்வாள். அவள் சிறிது தூரம் தவழ்வதும், சிறிது தூரம் தத்தித் தத்தி நடைபயின்று வருவதுமான அந்தக் காட்சி கொள்ளை அழகாக இருக்கும்.

தங்கை எழுந்து நிற்கிறாள் என்றாலே கவின் உஷாராகி விடுவான். அவளை விழாமல் பார்த்துக்கொள்ள ஒரு பாதுகாவலனைப் போல அவளுடனேயே இவனும் போவான்.

அவர்களின் இந்தப் பிணைப்பை வேதிகா ஆசையோடு பார்த்துக் கொண்டே தன் வேலைகளைத் தொடருவாள். கல்யாணி ஏற்படுத்திய ஆழமான காயங்களுக்கெல்லாம், இந்த மழலைகளின் வாசம் தான் அவளுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்தது.

வேதிகா இருவருக்கும் உணவூட்டும் தருணங்கள் எல்லாம் தனி அழகு. தீபாலி தன் பிஞ்சு கரங்களால் அண்ணனுக்குச் சோறு ஊட்ட முயல, அவள் சிந்திச் சிதறி ஊட்டும் அழகைக் கண்டு கவினுக்கு அப்படி ஒரு பெருமை! ‘அம்மா… பாப்பா… ஊத்தி விற்றா பாரு!’ என்று மழலை மாறாத குரலில் சொல்லி குதூகலிப்பான்.

வேதிகா வியப்போடு சிரிக்க, கவின் உடனே போட்டியாக, “நானு… நானு…” என்று அடம்பிடித்துத் தங்கைக்கும் ஊட்டி விடுவான். அந்தப் பிஞ்சு விரல்களால் உணவு கிடைப்பது தீபாலிக்கும் ஏக குஷி போலும்!“ம்மா… ம்மா…” என்று ஆனந்தமாகக் கையாட்டி, தன் நாலைந்து பச்சரிசிப் பற்களைக் காட்டி அவள் மின்னலாகச் சிரிப்பாள். கண்கள் பூரிக்கக் குழந்தைகளின் அந்த அழகை ரசிப்பாள் வேதிகா. ‘இதைவிடவும் பெரிய மகிழ்ச்சி இந்த உலகில் வேறென்ன இருக்கப் போகிறது?’ என்று அவளது தாயுள்ளம் பூரித்துப் போகும்.

இருவரும் உண்ணும்போது செய்யும் சேட்டைகளில், அப்போதுதான் துடைத்தெடுத்த வீடு அலங்கோலமாகி அவளைப் பார்த்துப் பல்லிளிக்கும். அவர்களோடு போராடி, அதட்டி உணவுண்ண வைத்து, மீண்டும் ஒருமுறை அவர்களைச் சுத்தப்படுத்தி, சிந்திய உணவைத் துடைத்து என அவளுக்கு வேலைகளுக்குப் பஞ்சமே இல்லை. ஆனாலும், தன் பிள்ளைகளைச் சுற்றியே பிணைக்கப்பட்ட இந்த வாழ்க்கை, அவளது மனதைப் பேரமைதியால் நிறைத்திருந்தது.

பொதுவாகத் தன் கணவனின் தேவைகளை முகம் சுளிக்காமல் செய்பவள், தனக்குள் முளைத்திருந்த தாழ்வுமனப்பான்மையால் அவனிடம் பேசுவதைத் தவிர்த்து வந்தாள். சமீபகாலமாக அவளது இந்த மௌனத்தை அருள்மித்ரன் தெளிவாக உணர்ந்ததால், அடிக்கடி அவளையே தன் பார்வையால் தொடர்ந்தான். அவனது ஓயாதப் பார்வை புரிந்தாலும் வேதிகா துளியும் அசைந்து கொடுக்கவில்லை.