“இது என் வீடு, இங்கே எந்தப் பொருளை எடுக்கணும், எதை எடுக்கக் கூடாதுன்னு நீ எனக்கு சொல்லாத” என்றார் கல்யாணி அதிகாரமாக. ‘என் வீடு’ என்பதில் அவர் கொடுத்த அழுத்தம், அவனுக்கும் இந்த வீட்டிற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதைப் பறைசாற்றுவது போல இருந்தது.
அதை சரியாக கவனிக்காதவனோ, “அப்படியா? அதெல்லாம் நான் சம்பாரிச்சது. அதுவும் என் பொண்டாட்டிக்காக வாங்கி போட்டது. அதுல எடுத்துக்க உங்களுக்கு உரிமை இருக்கலாம். ஆனா, அவளுக்கே இல்லாம துடைச்சு வைக்க உங்களுக்கு உரிமை இல்லை” என்றான் அவனும் பதிலுக்கு காட்டமாக.
‘கவினுக்கு இரண்டு வயசு வரைக்கும் பால் கொடுக்கிறேன். இல்லாட்டி ஏங்கிப் போயிடுவான்மா’ என தன் அன்னையிடம் உறுதிபடச் சொல்லியிருந்த வேதிகா, இப்போதும் அவனுக்குத் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறாளா என்கிற சந்தேகம் அவனுக்குள் இப்பொழுது முளைத்தது. சமீபகாலமாக அறையினுள் புதிதாக இடம்பெறும் பால் புட்டியைப் பற்றி அவன் விசாரித்தபோது, ‘அவசரத்திற்கு அதுவும் இருக்கட்டும்’ என்று சொல்லி மழுப்பி அவனைச் சாமாளித்திருந்தாள். அவனும் அப்போது அதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
இப்பொழுது எண்ணிப் பார்க்கையில், போதிய சத்தான உணவுகள் அவளுக்குக் கிடைக்காததால், போதாமல் போன தாய்ப்பாலுக்காக மகனுக்கு புட்டிப்பாலை பழக்கப் படுத்தியிருக்கிறாளோ என்கிற சந்தேகம் அவன் நெஞ்சைக் கீறியது.
வேதிகாவோ தன் மகளுக்கும் சேர்த்தே தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று உயரிய எண்ணத்தில் இருந்திருக்கிறாள். ஆனால், இங்கே அவளுக்கு நேர்ந்த கொடுமையால், அவள் பெற்றெடுத்த மகனுக்கே அவளால் அவள் நினைத்தபடி தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை. இத்தனை சோதனையிலும் தீபாலிக்குப் பாலூட்டுவதை அவள் ஒருபோதும் நிறுத்த நினைக்கவில்லை என்பதை உணர்ந்தபோது, அருள்மித்ரனின் நெஞ்சம் கூரிய வாளால் வெட்டப்பட்டது போன்று வலிகொண்டது.
வேதிகா அவனது மகளைத் தன் சொந்த மகள் போலப் பார்த்துக் கொள்ள, அவள் பெற்ற மகனுக்கோ இந்த வீட்டில் எவ்வளவு பெரிய வஞ்சகம் நடக்கிறது? சத்தான பொருட்களை வீட்டில் வாங்கி அடுக்கி வைப்பதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக நினைத்துவிட்டோமே, அவள் அதைச் சரியாக உண்கிறாளா என்று ஒருமுறைகூடக் கவனிக்கத் தவறிவிட்டோமே என்று எண்ணியபோது, அவனது இதயம் குற்ற உணர்வில் குறுகிப் போனது. மேற்கொண்டு எதையும் யோசிக்க முடியாமல், அவ்விடமே காற்றற்றப் பிரதேசம் போல மாற, அவனுக்கு மூச்சு முட்டியது.
சண்டையின் தீவிரம் வேதிகாவை அச்சுறுத்தியது. என்ன செய்வதென்று புரியாமல், கணவனைத் தடுக்கவும் முடியாமல் பரிதவிப்போடு நின்றிருந்தாள். அவன் ஒருமுறை அவளைத் திரும்பிப் பார்த்தால் கூட, ‘அமைதியாக போய்விடுங்கள்…’ என்று சொல்லி விடுவாள். ஆனால், அவனோ பார்வையைக் கூட அவள்புறமாகத் திருப்பத் தயாராக இருக்கவில்லை.
கல்யாணியின் கோபக் கனலில் அருள்மித்ரன் தன் பேச்சினால் எண்ணெயை தாராளமாக ஊற்றி வைத்திருக்க, “அட! அட! அட! உரிமையாம்… பொண்டாட்டியாம்… இவன் சம்பாரிக்கிறானாம்! இவ உனக்கு மட்டும்தான் பொண்டாட்டின்னு உனக்குத் தெரியுமா முதல்ல?” என்று கல்யாணி அருவருக்கத்தக்க வகையில் நஞ்சைக் கக்கினார். அதற்குமேல் பொறுத்துக்கொள்ள முடியாமல், “அம்மா…” என்று கர்ஜித்தபடி, ஆள்காட்டி விரலை நீட்டி அவரை எச்சரித்தான் அருள். ஆத்திரத்தில் அவனது உடல் நடுங்க, மூச்சுக்காற்று அனலாய்ப் புறப்பட்டது.
‘ச்சீ! ஒரு தாயால் இவ்வளவு கீழ்த்தரமாகப் பேச முடியுமா?’ அவனால் அதைச் செரித்துக்கொள்ளவே முடியவில்லை.
பரிதவிப்போடு தன் மனைவியைத் திரும்பிப் பார்த்தான், இதழ்களைக் கடித்தபடி தலைகுனிந்து நின்றிருந்தாள். தன் அழுகையை மற்றவர்கள் கண்டுவிடக் கூடாது என்பதற்காகவே அவள் அப்படிக் குனிந்து நிற்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது. அவளது உடல் கூனிக் குறுகிப் போயிருக்க, கைகள் நடுக்கத்தில் ஒன்றை ஒன்று பிணைத்துக் கொண்டிருந்தன.
“ஏன்மா இப்படியெல்லாம் பேசறீங்க?” எஎன்று அவனது குரல் கோபத்திலும் இயலாமையிலும் உடைந்து ஒலித்தது.
“உண்மையைத்தானேடா சொல்லறேன்… என்ன பெரிய பத்தினியையா நான் கேள்வி கேட்டுட்டேன்?” அவர் ஏளனமாக விஷத்தைக் கக்க, அதற்குமேல் வேதிகாவால் அங்கே நிற்க முடியவில்லை. வாயைப் பொத்தி தன் அழுகையை அடக்கியவாறு, தங்கள் அறைக்குள் வேகமாக நுழைந்து கொண்டாள்.
உள்ளே கவிதா அவளைப் பரிதாபமாகப் பார்ப்பது போலத் தோன்ற, வேதிகா இன்னும் கூனிக் குறுகிப் போனாள். பிறர் காட்டும் பரிதாபம் அவளது தன்மானத்தை அடியோடு சிதைத்தது.
அண்ணிக்கு என்ன சமாதானம் சொல்வதென்று தெரியாமல் தவித்த கவிதா, “அண்ணி… அவங்க சொல்றதைப் பெருசா எடுத்துக்காதீங்க” என்றாள் தவிப்பான குரலில். பின் அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல், “கவின் கிட்ட படுத்துக்கங்க அண்ணி, நான் வெளிய இருக்கேன்” என்று கூறிவிட்டு மெல்ல அறைக்கு வெளியே வந்து விட்டாள்.
தன் மனைவியின் பின்னே ஓடிச் சென்று அவளைத் தேற்றத் துடித்த கால்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அருள்மித்ரன் அங்கேயே நின்றான். இன்று இதைப் பேசித் தீர்க்காமல் விடக் கூடாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான். மேலும் மேலும் இவரோடு வாக்குவாதம் செய்து, ஒவ்வொரு முறையும் இவர் வரைமுறையின்றிப் பேசும் நஞ்சைக் கேட்டுக் கொண்டிருக்க அவனால் இனிமேலும் முடியாது.
“உண்மையைச் சொன்னா உன் பொண்டாட்டிக்கு எதுக்கு அழுகை வருது? இவளை மாதிரி நடிக்க இந்த ஊர்ல ஆளே இல்லை!” என்று கல்யாணி இளக்காரமாகப் பேசினார்.
“அவளை இப்படி நோகடிச்சு உங்களுக்கு என்ன கிடைக்கப் போகுது? அவ என் பொண்டாட்டிம்மா. அவ சந்தோசமா, நிம்மதியா இருக்கிறதுல தான் என் சந்தோசம் அடங்கியிருக்கு. அவ எவ்வளவோ பொறுமையா அனுசரிச்சு போறா, அப்பவும் அவளை இப்படி கரிச்சுக்கொட்ட உங்களுக்கு எப்படி மனசு வருதும்மா? ஏன் இப்படியெல்லாம் செய்றீங்க? உங்களுக்கு என்னதான் பிரச்சனை?” என்று மனமுடைந்தவனாய் அருள் கேட்டான்.
“இந்த வீட்டை ஏமாத்தி எடுத்துட்டு, என் புருஷன் விட்டுட்டுப் போன தொழிலையும் நீயே வச்சுக்கிட்டு… என்னவோ இந்தக் குடும்பத்தையே நீதான் தாங்கிப் பிடிக்கிற மாதிரி தம்பட்டம் அடிச்சுட்டுத் திரியுற உனக்கெல்லாம் என்னைக் கேள்வி கேட்கத் தகுதி இருக்கா?” என்று கல்யாணியின் மனதிலிருந்த ஆங்காரம் ஒருவழியாக வெளியே வரத் தொடங்கியது.
அவன் அதிர்ந்து போய் நின்றான். “இந்த வீட்டை நான் ஏமாத்தி எடுத்துக்கிட்டேனா? என்னம்மா பேசுறீங்க?” என்றான் புரியாமல்.
“இல்லையா பின்னே? இங்கேதானே குடும்பம் நடத்துற! உனக்குப் பிறந்த அந்தத் தண்டத்தையே எனக்குப் பிடிக்கல… பிறந்த உடனே பெத்த அம்மாவையே முழுங்கிடுச்சு! சரி, அந்த அம்மா வழி சொத்தாவது வரும்னு பார்த்தா… பிள்ளையைத் தலையில கட்டிட்டு, நகையை மட்டும் கொடுத்துக் கழிச்சு விட்டுட்டு எங்க அண்ணன் போறாரு. நீ என்னவோ பெரிய தானப்பிரபு மாதிரி, அதையும் கொண்டு போய் அவர்கிட்டயே திருப்பிக் கொடுத்துட்டு வர்ற! நான் தெரியாமத்தான் கேட்கிறேன்… காசு, பணம் இல்லாதவனுக்கு எதுக்குடா இந்த வெட்டி ரோஷம்?
நீ பெத்த தண்டத்துக்கே நான் வெட்டிச் செலவு செய்யணுமான்னு பார்த்தா… நீ எவனோ பெத்த தண்டத்தை வீட்டுக்குக் கூட்டிட்டு வர்ற! என் காலத்துக்கு அப்புறம், எவனோ பெத்த புள்ளை என் வீட்டுல ராஜா மாதிரி இருக்கணுமா? அதைத் தெரிஞ்சுக்கிட்டு நான் எப்படிடா சும்மா இருக்க முடியும்?’ என்று மனிதத்தன்மையற்றக் கொடூரத்துடன் சீறினார்.
அவர் எத்தனை தூரம் யோசித்து வைத்திருக்கிறார். மனம் முழுக்க நஞ்சு கொட்டிக்கிடக்கும் அவரைப் பார்க்கவே அவனுக்கு அருவருப்பாக இருந்தது.
“நானும் என் பொண்டாட்டி, புள்ளைகளும் இங்கே இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறீங்களா?” என்று மனதின் வலியோடு நேரடியாகவே கேட்டுவிட்டான்.
அதற்கு, “ரோஷம் இருக்கிறவங்க நான் பேசின பேச்சுக்கு எப்பவோ கிளம்பிப் போயிருப்பாங்க!” என்று அவர் இளக்காரமாகச் சொல்ல, அருளின் இதயம் சுக்குநூறாக உடைந்து சிதறியது.
அன்னையின் மனதில் இத்தனை வன்மம் நிறைந்திருக்கும் என்று அவன் ஒருபோதும் நினைத்ததில்லை. இதைத்தான் அவர் விரும்புகிறார் என்றால், எதற்காக இவ்வளவு கீழ்த்தரமாகப் பேசி மனதை ரணமாக்க வேண்டும்? நேரடியாகவே சொல்லியிருக்கலாமே! இதையெல்லாம் அவர் தவிர்த்திருக்கலாம். அவன் என்ன இந்த வீட்டை விட்டுப் போக மாட்டேன் என்றா பிடிவாதம் பிடித்தான்?
கவிதாவால் இதைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. “அம்மா! அண்ணன் இல்லாம நாம எப்படிம்மா தனியா இருப்போம்? ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க? அண்ணன் நம்ம குடும்பத்துக்காக எவ்வளவு செஞ்சிருக்காங்க?” என்று இடையில் புகுந்து கதறினாள்.
“ச்சீ! வாயை மூடுடி. கரிசட்டி. அவன் என்ன பெருசா தியாகத்தைச் செஞ்சுட்டான்? யாரும் செய்யாததையா செஞ்சுட்டான்? அவனுக்குச் சோறு போட்டதும் இதே தொழில்தான்! அவன் உழைக்காட்டி அவனே பிச்சைதான் எடுத்திருக்கணும்’ என்றார் கல்யாணி எவ்வித மனசாட்சியுமின்றி.
எங்கே தியாகங்கள் மதிக்கப்படவில்லையோ, அங்கே அதைப் பற்றிப் பேசுவதே வீணான ஒன்று என்பதை அருள்மித்ரன் உணர்ந்தான். அன்னையின் இந்தத் தீராத சுயநலத்தைக் கண்டு கவிதா வாயடைத்து நிற்க, அருள்மித்ரன் அந்த இடமே வெறுத்துப்போய்ச் சிலையென நின்றிருந்தான்.
“நாங்க வீட்டை விட்டு வெளியே போகணும்னு நீங்க ஒரு வார்த்தை சொல்லியிருந்தாலே எப்பவோ கிளம்பியிருப்போமே அம்மா! அதை விட்டுட்டு இத்தனை மட்டமாப் பேசி, மனசை நோகடிச்சு ஏன் இவ்வளவு கீழ்த்தரமா நடந்துகொள்கிறீங்க?”
“உன் நடிப்பையெல்லாம் நான் நம்ப மாட்டேன்…நீ மொத்தமா வாரிச் சுருட்டிக்கிட்டுத்தான் போவ!‘ என்று அவர் அவன் மீதுஅபாண்டமாகப் பழி சுமத்த, அதற்குமேல் ஒரு வார்த்தைகூடப் பேச அவனிடம்தெம்பில்லை. சுக்குநூறாக உடைந்த மனதோடு, கனத்த மௌனத்தைச் சுமந்தபடி அவன்அறைக்குள் சென்று மறைந்தான்.