அவர் என்னதான் சண்டையிட்டாலும், பழைய உணவுகளை அவளால் உண்ண முடியாது. குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாத எதையும் ஒரு தாயாக அவளால் நிச்சயம் செய்ய முடியாது.

நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, “நீங்க சொல்ற மாதிரியே நான் உங்க மகனை என் கைக்குள்ள வச்சிருக்கிறதாவே இருக்கட்டும். அதுக்காக நான் பழைய சாப்பாட்டைச் சாப்பிட்டா, உங்க மகன் என் கையை விட்டு வெளியே போயிடப் போறாரா என்ன?” என்று நிதானமான குரலில் கேட்டாள்.

அவள் பேசுவதைக் கேட்டு அவளை முறைத்துப் பார்த்தார். “என்னடி கூடக்கூடப் பேசுற? இப்ப இதைச் சாப்பிட முடியுமா முடியாதா? திட்டம் போட்டு என் மகளை வீட்டுப்பக்கமே வரவிடாம செஞ்சுட்டு, நீ மட்டும் உங்க அம்மா வீட்டுக்குப் போய் சீராடிட்டு வந்துடுவ… உனக்கெல்லாம் வெட்கமாவே இல்லையா?” என்று கத்தினார்.

மூத்த மகள் மாலதியால் இங்கே வர முடியவில்லை என்கிற ஆத்திரம், இவள் தன் தாய்வீட்டுக்குச் சென்று வந்ததால் பல மடங்கு கூடியிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டாள். ஆனால், இந்தச் சூழலை எப்படி கையாள்வது என்று அவளுக்குத் தெரியவில்லை.

சண்டை வலுத்துவிடக் கூடாதே என்று அவள் எடுத்த முயற்சிகள் எல்லாம் பலனின்றிப் போய்க்கொண்டிருந்தன. அவள் என்னதான் பணிந்து பேசினாலும், கல்யாணியால் தன் வம்புப் பேச்சைக் குறைத்துக்கொள்ள முடியவில்லை.

வேறு வழியின்றி, “இப்போ என்னால இந்தப் பழைய சாப்பாட்டைச் சாப்பிட முடியாது அத்தை” எனத் தன் முடிவை மெல்லிய, ஆனால் உறுதியான குரலில் கூறியவள், அவரை கண்டுகொள்ளாமல், தனக்கு உண்பதற்கு ஏதுவாக, அரிசியையும் பருப்பையும் தாளித்து அரிசிம்பருப்பு சாதத்தை மளமளவென்று அடுப்பில் வைத்தாள்.

“இங்கே ஒருத்தி கத்திக்கிட்டு இருக்கேன்… எனக்கு என்னடி மரியாதை? ஒரு மெக்கானிக்கைக் கட்டிக்கிட்டு இவ்வளவு ஆட்டம் ஆடுறியா? உனக்கெல்லாம் பழைய சோறு கூடப் பெரிய விஷயம் தான். விரலுக்குத் தகுந்த வீக்கம் வேணும்டி!” என்று விஷத்தைக் கக்கிக்கொண்டே வந்தவர், அவளை அடுப்படியிலிருந்து ஆக்ரோஷமாகத் தள்ளிவிட்டார்.

பசியால் ஏற்பட்ட சோர்வு ஒருபுறம், இவரிடம் வாக்குவாதம் செய்ய முடியாத இயலாமை மறுபுறம். எல்லாவற்றுக்கும் மேலாக, தன் கணவரின் உழைப்பைக் கேவலமாகப் பேசுகிறாரே என்ற வேதனை என எல்லாமும் சேர்ந்து அவளை தளரச் செய்தது.

“உங்க பையனை மறுபடி மறுபடி விட்டுக்கொடுத்துப் பேசாதீங்க அத்தை, கேட்க நல்லாவா இருக்கு? கொஞ்சமாச்சும் அவர் செஞ்சதுக்கெல்லாம் நன்றியோட இருக்க வேணாமா?” என்று தன்னையும் மீறி வார்த்தைகளை கொட்டிவிட்டாள்.

“ஆமாம்… அப்படியே அவன் கலெக்டர் உத்தியோகம் பார்க்கிறான், அவனை நான் விட்டுக்கொடுத்துப் பேசிட்டேன்! ஒரு மெக்கானிக் வேலை செய்யறவனைத் தானடி கட்டிக்கிட்டிருக்க… அதுக்கே இத்தனை பகட்டு வேற! இதுல இவ புருஷனுக்கு நான் நன்றி காட்டணுமாம். எதுக்கு? அவனை பெத்து வளர்த்ததுக்கா?” என்று கல்யாணி அலட்சியமாகத் திருப்பிக் கேட்க, அவள் மனம் அடியோடு உடைந்தது.

அப்படியென்ன கணவனின் மெக்கானிக் வேலை இவருக்கு இத்தனை மலிவாகப் போய்விட்டது? அதோடு, இவள்தான் அப்படி என்ன பகட்டைக் காட்டிவிட்டாள்?

இவர் வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கிறார் என்பது அவளுக்குப் புரிந்தது. கணவனைப் பற்றி இழிவாகப் பேசினால் இவள் கொதிப்பாள் என்பதைத் தெரிந்துகொண்டே, மீண்டும் மீண்டும் அவனை மட்டம் தட்டிப் பேசி இவளைப் பேச வைக்கிறார் என்பதும் தெளிவாக விளங்கியது. ஆனால், இந்த வீண் சண்டை எதற்காக என்றுதான் அவளுக்குப் புரியவில்லை. பசியில் கண்கள் இருட்டிக்கொண்டு வர, தலை பாறாங்கல்லை சுமப்பது போல பாரமேறி வலிக்கத் தொடங்கியது. அதற்குமேல் அவரிடம் வாதிடத் தெம்பில்லாமல், தலையைப் பற்றியபடி அமைதியாக வந்து ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

பின்னாலேயே வந்த கல்யாணிக்கு அவளை அத்தனை சீக்கிரம் விட மனமில்லை. “ஆமா… இத்தனை சூதானமா இருக்கிறவ, எப்படிடி கூடச் சுத்தினவன் குழந்தையை மட்டும் வாங்கிட்டு வந்த? அவனையே கட்டிட்டுப் போயிருக்க வேண்டியதுதானே? இல்லை… நிறையப் பேரு கூடச் சுத்தி, எவன்கிட்ட புள்ளை வாங்கிட்டு வந்தேன்னே தெரியாமப் போயிடுச்சா?” என்று அவர் நஞ்சைக் கக்க, அந்தச் சொற்கள் செவியில் விழுந்து மனதை வலிக்கச் செய்தாலும், அவள் மாமியாரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

அப்போதுதான் அருள் வீட்டிற்குள் நுழைந்தான். அன்னை பேசிய வார்த்தைகள் அவன் செவிகளிலும் தெளிவாக விழுந்தன. அவரின் கீழ்த்தரமான பேச்சில் கோபம் உச்சிக்கு ஏறியது. “அவ யாரு கூட ஊர் சுத்தினதை நீங்க பார்த்தீங்க? ஏதோ ஒரு பொறம்போக்கு, அவ சுயநினைவு இல்லாத நேரத்துல சீரழிச்சதுக்கு… இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இதையே சொல்லி அவளைப் பேசப் போறீங்க?” என்று அதிரடியாகக் கேட்ட அருளின் குரலில், கல்யாணியும் வேதிகாவும் திடுக்கிட்டு அவனைப் பார்த்தனர்.

வேதிகாவின் முகம் கலைந்து, சோர்வாக இருப்பதை முதல் பார்வையிலேயே அவன் கண்டு கொண்டான். கல்யாணி சண்டையிடும் ஆவேசத்தில் அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாலும், அவரைப் பொருட்படுத்தாமல், “கவிதா…” என்று சத்தமாக அழைத்தான்.

அறையிலிருந்து பரிதவிப்புடன் வெளியே வந்த கவிதாவிடம், “அண்ணிக்குச் சாப்பிட என்ன இருக்குன்னு பாரு. உடனே கொண்டு வா…” என்றான் அவசரமாக.

கவிதா சமையலறைக்குள் சென்று பார்க்க, அங்கே பழைய உணவைத் தவிர வேறொன்றும் இல்லை. அண்ணி அடுப்பில் ஏதோ வைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு வெளியே வந்தவள், “அண்ணி இப்பதான் ஏதோ சாப்பாடு அடுப்புல வச்சிருக்காங்கண்ணா” என்றாள் கைகளைப் பதற்றத்தில் பிசைந்தபடி.

மணி நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது. “இந்த நேரத்திலா சமைக்கிறாள்?” என்பது போன்ற ஒரு கேள்விக்குறியோடு தங்கை கவிதாவையும், சோர்ந்து போயிருந்த மனைவி வேதிகாவையும் மாறி மாறிப் பார்த்தான் அருள்மித்ரன்.

“நான் மதியம் சாப்பிடும்போது சாப்பாடு இருந்ததுண்ணா… ஆனா இப்போ எங்க போச்சுன்னு தெரியலை. தீபுக்குட்டி இன்னைக்கு அண்ணியை விடவே இல்லை; அவளைச் சமாதானம் செஞ்சு தூங்க வைக்கிறதுக்கே மூணு மணி ஆயிடுச்சு” என்று கவிதா தனக்குத் தெரிந்ததைச் சொன்னாள்.

“சாப்பிட ஏன் ஒண்ணுமில்லை? பழைய சாதம் இருக்கு… இந்த வெயிலுக்கு அதுதான் உடம்புக்கு நல்லது. காலையில சுட்ட இட்லி கூட மிச்சமிருக்கு, அதைச் சாப்பிட வேண்டியதுதானே?” என்று கல்யாணி நீட்டி முழக்க, அருள் அவரை வெறுப்பாகப் பார்த்தான்.

தன் மனைவி நிம்மதியாக உண்பதற்குக்கூட இந்த வீட்டில் சூழல் இல்லையே என்று நினைத்தபோது, அவனது ஆண் என்ற கர்வம் சரிந்து அதல பாதாளத்தில் விழுந்தது. அவளுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கையைப் பரிசளித்திருக்கிறோம் என்று எண்ணியபோது, அவனால் அவனையே மன்னிக்க முடியவில்லை.

அவன் மனக்கண்ணில், திருமணமான புதிதில் நடந்த அந்தச் சம்பவம் நிழலாடியது.

மறுவீடு சென்றிருந்த சமயம், வேதிகா இரு பிள்ளைகளுக்கும் தாய்ப்பால் கொடுப்பதைக் கவனித்த யமுனா, தன் மகளின் உடல்நிலை குறித்துக் கவலைப்பட்டார். “கவினுக்குத்தான் ரெண்டு வயசு ஆகப்போகுதே., அவனுக்கு வேணும்ன்னா பால் கொடுக்கிறதை நிறுத்திடலாமா வேதா?” என்று அவர் கேட்க, “சும்மாவே என்கூட இருக்கிற நேரம் குறையுதுன்னு ஏங்கிட்டு இருக்கிறான் மா, இந்த நேரத்துல பாலை நிறுத்தினா இன்னும் ஏங்கிடுவான். நான் சமாளிச்சுப்பேன் மா” என்று உறுதியாகச் சொன்னாள்.

“என்னத்தைச் சமாளிப்ப? ஆட்டுக்கால், பால் சுறா, கருவாடுன்னு சத்தான சாப்பாடா நீ சாப்பிடணுமே! புது இடம்… அங்கே இதையெல்லாம் நீ எதிர்பார்க்க முடியுமா?” என யமுனா ஆதங்கப்பட, “அதெல்லாம் நான் பார்த்துப்பேன், என்னை நினைச்சு கவலைப்படாதீங்கம்மா” என்று பேச்சை முடித்துக்கொண்டாள்.

அவர்களின் இந்த உரையாடலை அருள்மித்ரனும் கேட்க நேர்ந்தது. வேதிகா படும் சிரமம் அவனுக்குத் தெரியாததல்ல. அவள் தீபாலியைத் தூக்கினாலே கவின் கோபித்துக் கொள்வதும், “நம்ம பாப்பாடா… சின்னக் குழந்தைதானே” என அவள் மகனைச் சமாதானம் செய்வதும் அவன் அடிக்கடி காண்பதுதான்.

கவினுக்குத் தீபாலியை மிகவும் பிடிக்கும்; அத்தை கவிதாவுடன் சேர்ந்து சின்னவளுடன் ஆசையாக விளையாடுவான். ஆனால், அம்மா என்று வரும்போது மட்டும் அவனது உரிமை உணர்வு தலைதூக்கிவிடும். இரு பிள்ளைகளின் மனமும் நோகாமல் இருக்க, தன் கவனிப்பை அவர்களுக்கு அதிகமாக கொடுக்க வேதிகா ரொம்பவுமே மெனக்கெடுகிறாள். இந்த நேரத்தில் அவளுக்குத் தாய்ப்பால் பற்றாக்குறையும் ஏற்பட்டால் இன்னும் சிரமப்படுவாளே என்று அருள்மித்ரன் கவலைப்பட்டான்.

தன் மாமியார் சொல்லும் உணவுமுறைகளைக் கேட்டபோது, மாலதிக்குக் குழந்தை பிறந்த சமயத்தில் தன் அம்மா இதுபோன்ற உணவுகளையெல்லாம் பார்த்துப் பார்த்துச் சமைத்துப் போட்டார் என்பது அவனுக்கு நினைவிருந்தது. அன்றிலிருந்தே இரு பிள்ளைகளுக்கும் பாலூட்டும் வேதிகா, அதற்குத் தகுந்த சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று, வீட்டில் எப்போதும் சத்தான பொருட்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்வான்.

ஆனால், இவனது அம்மாவோ அவள் சரியான உணவு உண்பதற்கே இத்தனை ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார். தன் அன்னையைக் கோபத்தோடு நோக்கியவன், கவிதாவிடம் திரும்பி, “உங்க அண்ணிக்குக் கருவாடு, ஆட்டுக்கால் எல்லாம் வாங்கி வச்சிருந்தேனே… குழந்தைகளுக்குப் பால் கொடுக்கிறவ அதையெல்லாம் தானே சாப்பிடுறா?” என்று விசாரித்தான்.

“அது… அண்ணா…” என்று கவிதா தயக்கத்தோடு இழுத்துவிட்டு, அண்ணியைப் பார்த்தாள். பேச்சு இந்தத் திசையில் திரும்பும் என்று சற்றும் எதிர்பார்க்காத வேதிகா, என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள்.

“சொல்லு கவி…” என்று அருள் அதட்டினான்.

“அண்ணா… நீங்க வாங்கி வைக்கிறதெல்லாம் மாலதி அக்கா வந்தா அம்மா கொடுத்து அனுப்பிடுவாங்க. இப்போ அக்கா இங்கே வர்றதில்லைன்னு, அம்மாவே அக்கா வீட்டுக்குப் போய்க் கொடுத்துட்டு வந்துடுறாங்க” என்று மெல்லிய குரலில் உண்மையை உடைத்தாள் கவிதா.

கல்யாணி இதற்கெல்லாம் துளியும் அசரவில்லை. உனக்கு தெரிந்தால் எனக்கு என்ன என்பது போல ஜம்பமாக நின்றிருந்தார்.

கல்யாணியின் அந்த ஏளனமான பார்வையும், தன் மனைவியின் முகத்தில் படர்ந்திருந்த சோர்வும் சேர்ந்து அருளின் பொறுமையைச் சோதித்தன. அவன் கண்கள் கோபத்தில் சிவக்க, கைகள் இறுகின.

ஏன் இந்த வீட்டில் இத்தனை சண்டை சச்சரவுகள் என்று வேதிகாவிற்குப் புரியவில்லை. இனி நடக்கவிருக்கும் மோதலைத் தடுக்கும் அளவுக்குக் கூட வலு இல்லாமல், அவள் மனமும் உடலும் சோர்ந்து வாடி அமர்ந்திருந்தாள்.