மழைவர பூமி மறுத்திடுமா? – 11

புயலுக்கு முன் அமைதி நிலவும் என்பார்கள்! அது எத்தனைக்கு எத்தனை நிஜம் என்பதை உணர்வதற்கு வேதிகாவிற்கு இதுவரை எவ்வித அனுபவ அறிவும் கிட்டியதில்லை. ஆனால், இனி கிடைக்குமோ என்கிற அச்சம் அவளுள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.

அந்தளவிற்கு மாமியாரின் அதீத அமைதி, எப்பொழுது என்ன பூகம்பம் வெடிக்குமோ என்ற நடுக்கத்தை அவளின் மனதுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தது.

வழக்கமான குத்தல் பேச்சுக்கள், முறைப்பான பார்வைகள் என எதுவுமே இல்லாத கல்யாணியை எதிர்கொள்வது அவளுக்கு மிகவும் கடினமாகவே இருந்தது.

எந்த நிமிடம் எரிமலை வெடிக்குமோ என்கிற பதற்றத்திலேயே வேதிகாவின் பொழுதுகள் கரைந்ததென்றால், இன்று தன் மனைவிக்கு எந்தவித பிரச்சனையும் வந்துவிடக் கூடாதே என்கிற தவிப்புடன் அருள்மித்ரனின் நாட்கள் நகர்ந்தன.

அன்று மதியம், மகளை உறங்க வைத்துவிட்டு, மகனைக் கவிதாவிடம் ஒப்படைத்துவிட்டு உண்பதற்காக வேதிகா வந்தாள். அப்பொழுது அங்கே நின்றிருந்த கல்யாணி, காலையில் மீதமான இட்லிகளையும் நேற்று வைத்த பழைய சாதத்தையும் சுட்டிக்காட்டி, “இதைச் சாப்பிடு” என்று ஒரு மறைமுக உத்தரவைப் பிறப்பித்தார்.

அவளின் உணவு விஷயத்தில் மாமியார் தலையிடுவது இதுவரை அந்த வீட்டில் நடக்காத ஒன்று. என்ன செய்வது என்கிற தடுமாற்றத்துடன் கொஞ்ச நேரம் செய்வதறியாது நின்றாள்.

அவர் சாதாரணமாகச் சொல்வது போலத் தோன்றினாலும், அந்தக் குரலில் பொதிந்திருந்த அதிகாரம் வேதிகாவிற்குத் தெளிவாக புரிந்தது. காலையில் அவள் சமைத்து வைத்த உணவுகளெல்லாம் இப்பொழுது எங்கே போயின என்று அவளுக்குப் புரியவில்லை; சமையலறையில் பழைய உணவுகளைத் தவிர வேறெதுவும் மிச்சமில்லை.

இத்தனை நாட்கள் இவர் அமைதியாக இருந்ததற்கும் சேர்த்து இன்று பஞ்சாயத்தை தொடங்குகிறாரா என்று அவளுக்கு ஆயாசமாக இருந்தது. ஒவ்வொரு முறை அவர் காயப்படுத்தும் போதும், அதிலிருந்து மீண்டு வர வேதிகாவிற்குப் பெரும் போராட்டமே தேவைப்படுகிறது. ஆனால், அப்படி சிரமப்பட்டு மீண்டு வருபவளை மீண்டும் மீண்டும் நிலைகுலையச் செய்வதில் அவர் வல்லவராக இருக்கையில், அவளாலும் என்னதான் செய்ய முடியும்?

கைக்குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய் என்பதால், வேதிகா எப்போதும் பழைய உணவுகளைத் தவிர்ப்பது வழக்கம். ஆனால் இன்று, கல்யாணி வெறும் கட்டளையோடு நிறுத்தாமல், அவள் தன் பேச்சை மீறுகிறாளா என்று அங்கேயே நின்று கண்காணிக்கவும் செய்தார். அவள் மறுத்தால், அதை வைத்தே ஒரு பெரிய வாக்குவாதத்தைத் தொடங்கிவிட வேண்டும் என்பதே அவரின் நோக்கம் என்பதை எள்ளலும் அலட்சியமுமாக பார்த்த அவரது பார்வையே காட்டிக் கொடுத்தது.

வேதிகா சில நொடிகள் கைகளைப் பிசைந்தபடி செய்வதறியாது தவித்தாள். பின்பு வெகுவாகத் தயங்கிய குரலில், “குழந்தைகளுக்குப் பால் கொடுக்கிறதால நான் பழசு சாப்பிடுறதில்லை அத்தை…” என்றாள்.

‘குழந்தைகள்’ என்ற அவளது அந்தப் பன்மைச் சொல்லில், கல்யாணியின் முகம் ஏளனத்தில் சுருங்கியது. நஞ்சை உமிழும் கண்களோடு அவளைத் திரும்பிப் பார்த்தவர், “இப்படியெல்லாம் மாய்மாலம் பண்ணிதான் என் மகனை உன் கைக்குள்ளேயே வச்சிருக்கியோ?” என்று இளக்காரமாகக் குத்திப் பேசினார். அந்த வார்த்தைகளின் வீச்சில் வேதிகாவின் முகம் அப்படியே இருண்டு போனது.

பச்சிளம் குழந்தைக்குப் பாலூட்டுவதை ஏன் எப்பொழுதும் ஒரு குறையாகவோ அல்லது தந்திரமாகவோ சித்திரிக்கிறார்கள் என்பது வேதிகாவிற்குப் புரியவே இல்லை. விழிகளை இறுக மூடியபடி, தலைகுனிந்து மௌனமாக நின்றாள். ஆனால், அவளது அந்த அமைதி கல்யாணியின் வன்மத்தை அணைப்பதற்குப் பதில், இன்னும் அதிகப்படியாகத் தூண்டிவிட்டது.

“ஒன்னுக்கும் வழியில்லாம மெக்கானிக் வேலை செஞ்சு பிழைப்பு ஓட்டறவனை கட்டிக்கிட்டே, அவனை உன் முந்தானையில முடிஞ்சு வச்சுக்க இத்தனை வேஷம் போடுறியே! இதுல உனக்கு வேற எதாவது பெரிய இடத்து மாப்பிள்ளை கிடைச்சிருந்தா, நீயெல்லாம் தரையிலயே கால் வச்சிருக்க மாட்ட போல!” என்று மனதின் ஆங்காரம் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய வன்மம் நிறைந்த குரலில் கூறினார் கல்யாணி.

அறையினுள் கவினைக் கவனித்துக் கொண்டிருந்த கவிதாவுக்கு, அம்மா தன் இஷ்டத்திற்குப் பேசுவதைக் கேட்டதும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. சண்டை வலுப்பதை கவனித்தவள், தவிப்புடன் தன் அண்ணனுக்குத் தகவல் தெரிவித்துவிட்டாள்.

அருள் வீட்டில் இல்லாத நேரத்தைப் பார்த்து, இதற்காகவே காத்திருந்தது போல மாமியார் நஞ்சைக் கக்குவதைக் கண்டு வேதிகா உள்ளூரத் துடித்தாள். ‘இப்படியான வசைச் சொற்களை இன்னும் எவ்வளவு நேரம் தான் அவளால் பொறுத்துக் கொள்ள முடியும்?’ என்று அவள் மனம் விம்மியது.

அருள்மித்ரனின் உழைப்பை இத்தனை கேவலமாகப் பேசும் இந்தத் தாய்க்கு, அவனது அந்த மெக்கானிக் வேலைதான் இந்தக் குடும்பத்தை இத்தனை ஆண்டுகாலம் கௌரவமாகத் தாங்கிப் பிடிக்கிறது என்பது புரியவில்லையா? பெற்ற மகன் என்கிற பாசம் கூட இல்லாமல், தன் மகனை இப்படி வார்த்தைகளால் வதைக்கிறாரே என்று எண்ணி வேதிகா மௌனமாக வேதனைப்பட்டாள்.

“இவனையெல்லாம் மயக்கி நீ என்ன சாதிக்கப் போறியோ? இவனெல்லாம் கால்காசுக்குப் பிரயோஜனம் இல்லாதவன்!” என கல்யாணி மீண்டும் தரம் தாழ்ந்து பேச, வேதிகா அவரை வெறுப்பாகப் பார்த்தாள்.

என்ன சீண்டினாலும் எதிர்த்துப் பேசிவிடக் கூடாது, மௌனமாகவே எல்லாவற்றையும் கடந்துவிட வேண்டும் என்று தான் வேதிகா உறுதியெடுத்திருந்தாள். ஆனால், தன் கணவனின் உழைப்பை அவர் கொச்சைப்படுத்துவதைக் கேட்டதும், அந்த உறுதி கரைந்து போனது.

“அத்தை… உங்க மகனோட ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி உழைக்கிற உழைப்புல தான், இந்த வீடே ஓடுது. அவரைப் போய் இப்படி மட்டமா பேச உங்களுக்கு எப்படி மனசு வருது?” என்று அவள் ஆற்றாமையோடு கேட்க, கல்யாணியின் முகம் ஆத்திரத்தில் தணலாய் சிவந்தது.

“ஆமாம்… ஆமாம்! சொந்தக் குடும்பத்துக்குச் செஞ்சதை எல்லாம் பெரிய தர்மகாரியம் செஞ்ச மாதிரி சொல்லிக் காட்டு! அப்போ உனக்கும் உன் மகனுக்கும் அவன் பொறுப்பெடுத்திருக்கானே… அதை நாங்க என்னன்னு சொல்லறது?” என்று விஷத்தைக் கக்கினார்.

அவள் விக்கித்துப் போய் நிற்க, “அதுசரி… கண்டபடியும் ஊர் மேஞ்சு கல்யாணத்துக்கு முன்னாடியே வயித்தை நிரப்பிட்டு வந்த உன்னை மாதிரி கண்ட கழிசடைங்களுக்கு எல்லாம் நல்ல மாப்பிள்ளை எங்கே இருந்து வருவான்? இப்படி ரெண்டாம் தாரமா, ஏற்கனவே பிள்ளையை வெச்சுட்டு வாழ வழியில்லாம இருக்கிறவனோட தான் வாழ்க்கை அமையும். இதுவே உனக்குப் பெரிய அதிர்ஷ்டம் தான்! ஒருவேளை அதைத் தக்கவெச்சுக்கத் தான் இப்படி நீ நல்லவ வேஷம் போட்டு, உன் புருஷனை கைக்குள்ள வச்சிருக்கியோ?” என அவர் ஏளனமாக வினவினார்.

அவரின் ஒவ்வொரு சொல்லும் வேதிகாவின் இதயத்தில் எரியும் நெருப்புத் துண்டுகளை வீசியதைப் போல இருக்க, அவள் சொல்லொணாத் துயரத்தில் துடித்துப் போனாள்.

தாயின் அரவணைப்பை அறியாத பச்சிளம் குழந்தை தீபாலி. அவளை முதன்முதலில் பார்த்த அன்றே, அவளுக்குப் பெற்றவள் இல்லை என்று தெரிந்ததும் தனது தாய்மை சுரந்ததே! இதைச் சொன்னாலும் இவரால் புரிந்து கொள்ள முடியுமா? உண்மையில் அன்றே வாய்ப்புக் கிடைத்திருந்தால், தன் மார்பு சுரந்த தாயமுதை அந்தச் சின்னவளுக்குத் தந்து அள்ளி அணைத்திருப்பாள். ஆனால், நினைத்ததையெல்லாம் நடத்திக் கொள்ளும் சூழல் இங்கே யாருக்கு அமைகிறது?

அன்று மார்பில் தேங்கிய கனத்தோடு, குழந்தையைத் தூக்கி உச்சி முகரக் கூட வழியில்லாமல், வெறும் பார்வையாலேயே அவளைத் தழுவிவிட்டுப் பிரிந்து செல்லும் நிலைதானே அவளுக்கு வாய்த்தது.

அதன்பிறகு அந்தச் சின்னவளை வேதிகாவால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியவில்லை. தன் தயக்கத்தையும் மீறி, அந்தக் குழந்தையை ஒருமுறை பார்க்க வேண்டும் என்று தன் தந்தையிடம் சிலமுறை கேட்டும் பார்த்தாள். இரண்டரை ஆண்டுகளாகத் தன் கூட்டுக்குள்ளேயே ஒடுங்கிக் கிடந்தவள், முதல்முறையாக ஒரு விருப்பத்தை முன்வைக்கிறாளே என்று பெற்றவர்களுக்கு ஆச்சரியம்தான். அவளின் கோரிக்கையைக் கேட்டு வினோதமாகப் பார்த்த அசோகனிடம், மகள் கேட்டதை அத்தனை எளிதில் நடத்திக் கொடுக்க முடியாதே என்கிற வாட்டமே அதிகமாகத் தெரிந்தது.

ஆனால், வேதிகாவின் மனப் போராட்டத்தைக் கடவுள் கண்டு கொண்டாரோ என்னவோ, அந்தச் சின்னவளுக்கு அன்னையாகும் பாக்கியத்தை அவளுக்கே வழங்கினார். இனி அவளை யாரால் தடுக்க முடியும்? குழந்தையை நெஞ்சார அணைக்கலாம், தாயமுதம் புகட்டலாம். தன் மடியில் தாலாட்டி தூங்க வைக்கலாம். அவளது அந்தத் தூய அன்பிற்குத் தடையிட இப்போது யாருமேயில்லையே!

தன் வாழ்வையே புரட்டிப் போட்ட கவினை அவளின் தாய்மை முழுமனதோடு சுவீகரித்துக் கொண்டது போலத்தான், அன்னையை இழந்தவள் என்று தன் பார்வையில் விழுந்த தீபாலியையும் அவள் மனம் ஏற்றுக் கொண்டது. ஆனால், தன் மகளைப் போல அந்த இளஞ்சிட்டை அவள் பார்த்துக் கொள்வது இவர்களுக்கு ஏன் இத்தனை உறுத்துகிறது? அவளைக் கவனித்துக் கொள்வதால் இவர்களுக்கு என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது என்று அவளுக்குப் புரியவே இல்லை.

அவள் தன் தாய்மையைப் பகிர்ந்து கொள்வதையே ஒரு குறையாகச் சொல்லிச் சண்டை வளர்க்கிறார். அவளை மட்டம் தட்டுகிறார்; அவளின் ஒழுக்கத்தை மீண்டும் மீண்டும் கீழ்த்தரமாகப் பேசுகிறார். அது போதாதென்று, பெற்ற மகனையும் இழிவாகப் பேசுகிறார். இதையெல்லாம் மனசாட்சியே இல்லாமல் இவரால் எப்படிச் செய்ய முடிகிறது? மகன் மீது இவருக்குப் பாசமும் பிரியமும் கிடையாதா? அவன் மனம் நொந்தால் இவருக்குக் கவலையில்லையா? சொந்தப் பேத்தியையே எங்காவது கொண்டு போய் விட்டுவிட்டு வந்துவிடு என்று கல்மனத்தோடு சொன்னவரிடம், வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்? அவள் மனதில் அவர் மீது வெறுப்பு படர்ந்தது.