அடுத்தடுத்து வந்த நாட்கள் ஒருவிதமான இறுக்கத்திலேயே அனைவருக்கும் கழிந்தன. அருள்மித்ரன் அவளைத் தேற்ற எடுத்த எந்த முயற்சிகளும் வேதிகாவிடம் பயனளிக்காமல் போக, மேற்கொண்டு அவளிடம் என்ன பேசி சமாதானம் செய்வதென்றே அவனுக்குப் புரியவில்லை.
எப்போதும் ஒரு மெல்லிய புன்னகையுடனும், அமைதியுடனும் வலம் வருபவள், இப்போது தனக்குள் சுருங்கிப் போனவளாகவே காட்சியளித்தாள். அவளது முகத்தில் பொலிவென்பதே சுத்தமாக இல்லை. அது அருளை மிகவும் பாதித்தது.
‘இப்படியொரு கொடூரமான வார்த்தையை எப்படிச் சொல்ல மனம் வந்தது?’ என்று மனதளவில் சுக்குநூறாக நொறுங்கிப் போயிருந்த வேதிகாவிற்கு, அதிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ளவே முடியவில்லை. இதற்கு முன்பு எத்தனையோ வசவுகளை அவள் புறந்தள்ளியிருக்கிறாள்; அவளை ஒழுக்கமற்றவள் என்று வசைபாடியவர்கள் ஏராளம். அதையெல்லாம் ரணமான மனதோடு பொறுத்துப் போனவள்தான் அவள்!
ஆனால், கல்யாணி ஒரு படி மேலே போய்… ‘உனக்கே தெரியாமல் நீ சீரழிக்கப்பட்டிருந்தால், உன் உயிரைத் துறந்திருக்க வேண்டியதுதானே?’ என்று ஈவு இரக்கமில்லாமல் கேட்ட அந்த நொடியில், வேதிகாவின் மொத்த உயிரும் அனுபவித்த தவிப்பு, வார்த்தைகளில் விவரிக்க முடியாதளவு கொடூரமான ரணமாக இருந்தது. அனலில் விழுந்த புழுவாய் அவள் துடித்த அந்தத் தருணத்தில், தன் உயிர் அங்கேயே ஆவியாய்க் கரைந்து மறைந்துவிடக் கூடாதா என்று அவளின் எண்ணம் போனது.
எத்தனையோ மாபாதகங்களைச் செய்தவர்களுக்கும் தூக்குத் தண்டனை தராமல், ஆயுள் தண்டனை வழங்கி உயிர்வாழ அனுமதிக்கும் நம் பாரத பூமியில், ஒரு பெண் எந்தப் பாவமும் செய்யாவிட்டாலும்… அவளது கற்பு களவாடப்பட்டிருந்தால் அவள் உயிர் வாழவே தகுதியற்றவள் என்று பேசுவது எத்தனைப் பெரிய அநியாயம்! இதையெல்லாம் நினைத்து நினைத்து அவள் உள்ளூற மருகிப் போனாள்.
கவிதாவும் தன்னால் முடிந்தவரை அண்ணிக்கு ஆறுதலாகவும், அனுசரணையாகவும் இருக்கத் தொடங்கினாள். இப்போது அவள் அம்மாவிடம் முகம் கொடுத்துப் பேசுவதே இல்லை. அவர் ஏதேனும் வேலை ஏவினாலும் செய்ய மறுத்துத் தன் எதிர்ப்பைக் காட்டினாள்.
‘அண்ணியை எப்படி அந்த மாதிரிப் பேசலாம்?’ என்கிற ஆத்திரம் அவளுக்குக் குறையவே இல்லை. ‘ஒருவேளை இதே விபத்து எனக்கோ அல்லது அக்காவுக்கோ நடந்திருந்தால்… அம்மாவுக்கு இப்படிப் பேச மனம் வருமா?’ என்று நினைக்கையிலேயே அவளது உள்ளம் எரிந்தது.
கல்யாணியைத் தவிர மற்ற இருவரும் வேதிகாவிடம் மிகுந்த அனுசரணையாக இருந்தபோதிலும், அவளது மனதின் ஆழமான ரணம் அவளை அவ்வளவு எளிதில் மீண்டு வர விடவில்லை.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அருள்மித்ரன், ஒரு கட்டத்தில் மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு தன் மாமனார் வீட்டிற்குச் சென்றான். வேதிகாவை அங்கே விட்டுவிட்டு அவன் மட்டும் அங்கிருந்து கிளம்பத் தயாராக, அவளுக்கு ஏதும் புரியவில்லை. ‘நான் இன்னும் இயல்புக்குத் திரும்பவில்லை என்று என் மேல் கோபமா?’ என்பது போலத் தவிப்புடன் தன் கணவனின் முகத்தைப் பார்த்தாள்.
‘இவ மனசு தேறட்டும்ன்னு இங்கே கொண்டு வந்து விட்டா, இதுக்கும் என் முகத்தையே இப்படிப் பார்த்தா என்ன அர்த்தம்?’ என அருளுக்குத் தீராத அலுப்பாக இருந்தது. அவர்களுக்குத் திருமணம் முடிந்து வெறும் மூன்று மாதங்கள்தான் ஆகியிருந்தன. அதற்குள் எத்தனைப் பிரச்சனைகள்! உண்மையில் அவனுக்கு மூச்சு முட்டுவது போல இருந்தது.
திருமணம் முடிந்திருக்கிறது… தன் மனைவியோடு இணைந்து மகிழ்ச்சியானதொரு வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்கிற அடிப்படை எண்ணம் கூடத் தோன்றாத அளவிற்குப் பிரச்சனைகள் சூழ்ந்தால், அவனும் என்னதான் செய்வான்? அவனது மௌனப் போராட்டத்தின் பாரம் அவனை நாளுக்கு நாள் ரொம்பவும் அழுத்தியது.
தங்கள் வாழ்க்கையை நல்லமுறையில் எப்படி எடுத்துச் செல்வது என்று அவனுக்குப் புரியவில்லை; மேற்கொண்டு என்ன செய்வது என்கிற தடுமாற்றம் அவனிடம்.
மனைவியின் அந்தப் பரிதவிப்பான பார்வை அருளின் மனதை அசைத்துப் பார்க்க, அங்கிருந்து உடனே புறப்பட நினைத்தவன் சற்றுத் தாமதித்தான். அவளிடம் தனியாகப் பேசிவிட்டுப் போகலாம் என்றுதான் அவனது மனம் ஏங்கியது. ஆனால், மாமியாரும் அருகிலேயே இருக்கையில் எப்படித் தன் மனதைத் திறந்து பேசுவது என்கிற சங்கடம் அவனைச் சூழ்ந்துகொள்ள, அமைதியாகவே அமர்ந்திருந்தான்.
அந்த நேரம் பார்த்து, மகள் தீபாலி பசிக்காகச் சிணுங்கத் தொடங்கவே, தன் அறைக்குள் நுழைந்த வேதிகாவைத் தொடர்ந்து அவனும் உள்ளே சென்றான். கணவனும் தன்னைத் தொடர்ந்து உள்ளே நுழைவதை வேதிகா கவனித்தாலும் கண்டுகொள்ளவில்லை. கட்டிலில் அமர்ந்து சுவரைப் பார்த்தபடி மகளுக்குப் பசியாற்றத் தொடங்கி விட்டாள். அருளும் அமைதியாக அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டான்.
திருமணம் முடிந்த இந்த மூன்றே மாதங்களில், தன் மகளிடம் எத்தனை மாற்றங்கள் என்று அருளின் மனம் யோசனையில் ஆழ்ந்தது. எலும்பும் தோலுமாக இருந்த முந்தையத் தோற்றம் மறைந்து, இப்போது கன்னங்கள் சதை வைத்து, முகம் மலர்ந்து, பொலிவு கூடியிருந்தது. அவளின் எலும்பான தேகம் மாறி பார்ப்பதற்கே அத்தனைப் பாந்தமாக லட்சணமாய் இருந்தாள். அதிலும் கடந்த மாதம் மொட்டை அடித்தபோது, மொட்டை பாப்பா லுக்கில் அவள் கொலு பொம்மையே தான்!
வேதிகா, கவிதாவையும் சும்மா இருக்க விடுவதில்லை. தன்னோடு சேர்த்து அவளுக்கும் எம்பிராய்டரி கற்றுக் கொடுப்பதோடு, அரசுத் தேர்வு எழுதவும் அவளைத் தூண்டி ஊக்குவிக்கிறாள். தன் மனம் வாடி வதங்கி நின்றபோதும், குடும்பத்தைப் பராமரிப்பதில் அவள் சிறு குறையும் வைத்ததில்லை. அனைவரின் நலத்தின் மீதும் அத்தனை அக்கறையோடு இருக்கிறாள். ஆனால், இவளை கவனிக்கத்தான் ஆள் இல்லை. அருளுக்குப் பெருமூச்சு வந்தது.
மகள் பால் குடித்து முடித்ததும், வேதிகா அவள் வாயைத் துடைத்துவிடவும் அப்பாவிடம் தாவிச் சென்றாள். அருள் அவளை ஆசையோடு அள்ளிக் கொஞ்சும்போதே, “ஊ… ஊ…” என்றாள் மழலையில்.
அண்ணனிடம் போக வேண்டும் என்று கைகாட்டியவளைப் பார்த்து, “அவன் என்ன வெச்சு விளையாடிட்டு இருக்கானோ… அதை பிடுங்கிக்கணும்! அதுக்குத்தானே இந்த ஊ… ஊ… எல்லாம்?” என்று மகளிடம் கொஞ்சியபடியே எழுந்தவன், “இங்கேயே இரு வேதிகா… நான் பாப்பாவை வெளியில விட்டுட்டு வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு அறைக்கு வெளியே சென்றான்.
அங்கே கவின் விளையாடுகிறேன் பேர்வழி என்று அனைத்து விளையாட்டுப் பொருட்களையும் பரப்பி அமர்ந்திருக்க, அவனின் பாட்டி பாவம் உணவூட்ட முடியாமல் திணறிக் கொண்டிருந்தார். கொஞ்சம் வலுக்கட்டாயமாக உணவை ஊட்டிவிட நினைத்தால், எழுந்து ஓடி விடுகிறான். இழுத்து வந்து மீண்டும் அமர வைத்தால், வாயை திறக்கவே மாட்டேன் என்றான்.
அருள் தீபாலியுடன் அங்கே வரவும், யமுனா மிகுந்த ஆசையோடு, “அழகிக்குட்டி வாங்க… வாங்க! இங்க பாருங்க, அண்ணன் சாப்பிடவே மாட்டேங்கிறான். நீங்கதான் சமத்து பாப்பா… ‘ஆ’ காட்டுங்க பார்ப்போம். சீக்கிரம் சாப்பிட்டுப் பெரிய பொண்ணா வளர்ந்து ஸ்கூலுக்குப் போகலாம்!” என்று கொஞ்சியபடியே அவளுக்கு ஊட்டினார்.
தங்கைக்கு மட்டுமே நல்ல பெயர் கிடைக்கிறதே என்கிற மழலைப் போட்டியில், கவினும் தானாகவே முன்வந்து உணவைச் சாப்பிடத் தொடங்கினான். யமுனாவின் சாமர்த்தியத்தைச் சிரிப்புடன் பார்த்துவிட்டு, அருள் மீண்டும் அறைக்குள் சென்றான்.
வேதிகா வந்ததிலிருந்தே அவளது முகமே சரியில்லை என்பதை யமுனாவும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார். கணவன், மனைவிக்குள் என்ன பிணக்கோ என்று அவருக்கு கவலையாக இருந்தது.
ஆனால், இப்போது அருள் தன் பிள்ளைகளைச் சிரித்தபடி ரசித்துப் பார்த்துவிட்டு, வேதிகாவைத் தேடி அறைக்குள் சென்றதைக் கண்ட பிறகே யமுனாவிற்குச் சற்று ஆசுவாசமாக இருந்தது.
இவர்கள் இருவரின் உறவுத் தொடக்கமே வினோதமானது அல்லவா? ஓர் இளந்தளிரைப் புது மண்ணில் நட்டு வைப்பதற்கும், ஓரளவிற்கு வளர்ந்த செடியைப் பிடுங்கி வேறொரு மண்ணில் நட்டு வைப்பதற்கும் எத்தனை வித்தியாசங்கள் இருக்கிறது! தன் மகளும் அப்படி வேரூன்றி வளர்ந்த செடிதானே! அவள் அந்தப் புது மண்ணில் தன் வேர்களை ஆழமாக ஊன்றி நிலைபெற வேண்டுமே என்கிற எதிர்பார்ப்பு ஓர் அன்னையாய் அவரிடம் நிறையவே இருந்தது. அதற்காக அவர் வேண்டாத தெய்வங்களே இல்லை.
அறைக்குள் நுழைந்த அருள்மித்ரன் குழப்பத்துடன் அமர்ந்திருந்த வேதிகாவிடம், “எல்லாரையும் நீ தான் பார்த்துக்கணும். ஆனா, உன்னை சரிபண்ணும் கடமை எங்களுக்கு இல்லை அப்படித்தானே” என்றான்.
பெண்ணவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அமைதியாக ஏறிட்டு கணவனின் முகம் பார்த்தாள்.
“வீட்டுல சண்டை நடந்து ரெண்டு வாரம் ஆகுது. ஆனா, இன்னும் உன்னை என்னால சரி பண்ண முடியலை வேதிகா” என்றான் அருள் இயலாமையுடன். அவள் தன் கீழ் உதட்டைப் பற்களால் கடித்தபடி தலையை குனிந்து கொண்டாள்.