பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து, எஞ்சியிருந்த உறவுகளும் அவரவர் வீட்டிற்குப் புறப்பட்டிருந்தனர். கவிதா விழா முடிந்ததும் அங்கேயே தங்கும் திட்டத்தில்தான் வந்திருந்தாள். ஆனால், கல்யாணி அதற்கு அனுமதிக்காததோடு, அவளை அலைபேசியில் அழைத்துத் தேவையில்லாமல் கத்தித் தீர்த்ததால், மனமே இல்லாமல் அங்கிருந்து புறப்பட்டுவிட்டாள். அருள்மித்ரன் அவளை வீட்டில் விட்டு வருவதற்காகச் சென்றிருந்தான்.
வீட்டை ஏற்கனவே அம்மா மற்றும் கவிதாவின் துணையோடு வேதிகா ஒழுங்குபடுத்தி வைத்திருந்ததால், அடுத்துப் பிள்ளைகளைக் குளிப்பாட்டி, அவர்களுக்குத் திருஷ்டி சுற்றிப் போட்டு உறங்க வைத்தாள்.
இன்று நாள் முழுவதும் ஓடி ஆடி விளையாடியதால், படுத்ததுமே அந்தச் சின்னஞ் சிறு சிட்டுகளுக்கு உறக்கம் வந்துவிட்டது.
உறங்கும் பிள்ளைகளின் பேரழகு அந்த அன்னையின் கண்ணைப் பறித்தது. சிறிது நேரம் பார்வையை அகற்றாமல் அவர்களையே ரசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தவள், “அச்சோ! குழந்தைகளை நானே கண்ணு வைச்சிடுவேன் போலிருக்கே…” என்று முணுமுணுத்தபடி, தன் தலையிலேயே லேசாகத் தட்டிக்கொண்டு புன்னகையோடு எழுந்தாள்.
இப்படி ஒரு நிறைவான வாழ்க்கை தனக்கு அமையும் என்று அவள் கனவில் கூட எண்ணிப் பார்த்ததில்லை. கடந்த காலத்தின் இருண்ட பக்கங்களையும், அத்தனை கொடுமையான நாட்களையும் நினைத்துப் பார்த்தால், அதிலிருந்து கடவுள் அவளை மீட்டெடுத்ததே ஒரு பெரும் அதிசயம் போலத் தோன்றியது. தான் செய்த ஏதோ ஒரு புண்ணியம்தான், அருள்மித்ரன் வடிவில் அவளின் வாழ்வில் வரமாய் வந்திருக்கிறது என அவளது மனம் எண்ணிக் கொண்டது.
கணவன் திரும்பி வருவதற்குள் அவளும் சென்று அலுப்புத் தீரக் குளித்துவிட்டு வந்தாள். இந்த இரவுக்கான எதிர்பார்ப்பு அவளிடம் சற்று அதிகமாகவே இருந்தது. அதற்கு அச்சாரமிட்டது அவளது கணவனாயிற்றே!
குளித்து முடித்து வந்தவள், தன் தோற்றத்தில் கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டாள். வழக்கமாக உறங்கும்போது மகளுக்கு பாலூட்டுவதற்கு சௌகரியமாக பீடிங் டிரஸ் அணிபவள், இன்று ஏனோ விருப்பப்பட்டு புடவையையே உடுத்திக் கொண்டாள்.
காலையில் அவளது அழகில் கணவன் நிலைதடுமாறிப் போனதும், தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அவளை அணைத்து முத்தமிட்டதுமே நினைவுகளில் வந்து அலைமோதியது. அந்த வெட்கம் கலந்த நினைவுகளே அவளது கன்னங்களைக் குங்கும வண்ணத்தில் ஜொலிக்க வைத்தன. கண்ணாடி முன் நின்று கூந்தலை வாரி, லேசாக ஒப்பனையிட்டுக் கொண்டவள், அவன் மீண்டும் காதலோடு தன்னை நெருங்கும் தருணத்திற்காக இனிய படபடப்புடன் காத்திருக்கத் தொடங்கினாள்.
காலையிலிருந்து அத்தனை மகிழ்வாக இருந்தவனின் முகம், கோயிலிலிருந்து புறப்படும் சமயம் மொத்தமாக மாறிவிட்டது.
‘ஒருவேளை வசதி வாய்ப்புகளுடன் இருக்கும் ஜெகனின் தோற்றம், அவனது வளமான நிலை இவற்றை எல்லாம் பார்த்ததும், அன்றாடத் தேவைகளுக்காகப் போராடும் தன் நிலையை ஒப்பிட்டுப் பார்த்து கணவனுக்கு ஏக்கம் எழுந்திருக்குமோ? இல்லையென்றால், அவனைப் பார்த்த பிறகு ஏன் சட்டென்று பணப் பிரச்சனை நினைவுக்கு வந்து அவனை வாட்ட வேண்டும்?’ வேதிகா இணைத்த புள்ளிகள் அவளுக்கு இந்தப் பதிலைத்தான் கொடுத்தன.
கணவனின் பணப் பிரச்சனைக்குத் தன் சேமிப்பு மூலம் ஓரளவிற்கு உதவி செய்ய முடியும்; அவனது கவலைகளைத் தன் காதலும் அருகாமையும் போக்கிவிடும் என்கிற நம்பிக்கையோடு அவனின் வரவுக்காக, அவர்கள் உறவு அடுத்த நிலை செல்வதற்காக ஆவலுடன் காத்திருந்தாள்.
இந்த அந்தி நேரத்தில், நிலவொளியில் நனைந்து மணம் வீசும் நந்தவனத்து மலரைப் போல அவள் புடவை உடுத்தி நிற்பதைப் பார்த்தால், அவனது விழிகள் என்ன சேதி சொல்லும் என்ற இனிய படபடப்பு அவளிடம்.
‘எதற்காக இன்று புதிதாக புடவை உடுத்தியிருக்கிறாய்?’ என்று வியப்போடு வினவுவானா? அல்லது அவனது வருகைக்காகக் காத்திருக்கும் அவள் உள்ளத்தின் ரகசியத் துடிப்பைத் தானாகவே உணர்ந்து கொள்வானா? கற்பனையில் தன் கண் முன்னே விரிந்த அந்த இனிய காட்சியில், அவளின் முகம் செவ்வண்ணம் பூசிக்கொண்டது.
அவனுக்குப் பிடித்த வண்ணத்தில், அவனுக்குப் பிடித்த வகையில் தன்னைச் செதுக்கிக் கொண்டு நிற்கும் அவளது வனப்பைக் கண்டு, அதே மையலான பார்வையால் அவன் மீண்டும் அவளைக் களவாடுவான் தானே? காலையிலிருந்து அவனை வாட்டும் அந்தச் சோர்வும், முகத்தில் குடிபுகுந்த அந்த இறுக்கமும்… அவளது இந்தத் தோற்றத்திலும், அது மௌனமாகச் சொல்லும் காதலிலும் பனித்துளியாய் உருகிக் கரைந்து போய்விடும்தானே?
அவளுக்குள் ஓராயிரம் கற்பனைகள் மளமளவென்று கிளைபரப்பி வளர்ந்தன. அந்தக் கற்பனைகள் தந்த இதம் அவளை ஒருவிதப் பரவசத்திலேயே ஆழ்த்தியிருந்தது. நினைவு தெரிந்த நாள் முதலாய் அவள் அனுபவித்தறியாத சுகம்… ஒருவித இனிய மயக்கம்! இந்தச் சுகமயக்கம் அவளை மெல்லக் களவாடிக்கொள்ளும் விந்தையை அவள் என்னவென்று சொல்வாள்?
ஆனால், வீடு திரும்பிய அருள்மித்ரனோ அவளது எந்த மாற்றத்தையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை. அவனது விழிகள் அவள் மீது பதியாமல், அவள் ஆசையாகச் செய்த அலங்காரத்தை ஆராதிக்காமல் கடந்து சென்றன. ஒரு நிழலைக் கடப்பது போல மிகச் சாதாரணமாக அவன் அவளைக் கடந்து சென்றதில், வேதிகாவின் உள்ளம் வெயிலில் துவண்ட மலரென வாடிப் போனது. அத்தனை நேரமும் அவள் ரசித்துக் கட்டிய கற்பனைக் கோட்டைகள் ஒரு நொடியில் தரைமட்டமாகிப் போக, அவளது இதயம் நிலைகுலைந்து நின்றது.
ஏமாற்றம் தந்த வலி, ஒரு நச்சுப் படலத்தைப் போல அவளது நரம்புகளெங்கும் விநாடிக்குள் பரவி அவளைச் செயலற்றுப் போகச் செய்தது. தன்னைக் கடந்து சென்ற கணவனின் முதுகை வலியோடு பார்த்தவளின் விழிகளில் மெல்ல நீர் முட்டியது.
கண்ணாடியின் முன் நின்று அவள் பார்த்துப் பார்த்துச் செய்த அலங்காரமெல்லாம், இப்போது அவளைப் பார்த்துக் கேலியாகச் சிரிப்பதைப் போலிருந்தது. கல்லொன்று வேகமாக வந்து மோதியதில் சிதறும் கண்ணாடியைப் போல, அவளது எதிர்பார்ப்புகள் யாவும் ஒரே நொடியில் சுக்குநூறாக உடைந்து சிதறின.
கலங்கிய தன் விழிகளைச் சிரமப்பட்டுக் கட்டுப்படுத்தியவள், பொலிவிழந்த முகத்தோடு வாசல் கதவைப் பூட்டினாள். அந்த அறையின் விளக்கையும் அணைத்துவிட்டு, வலி நிறைந்த மனதோடு கணவனின் பின்னாலேயே அறைக்குள் நுழைந்தாள்.
அங்கே அவன் விளக்கைக் கூட உயிர்ப்பிக்காமல், இருட்டிலேயே உடை மாற்றிக் கொண்டிருந்தான். பிள்ளைகள் உறங்கும் போது அவர்கள் தூக்கம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காக வழக்கமாக அவன் இப்படித்தான் செய்வான் என்றாலும், இன்று அவளது மனம் வேறு எதையோ எதிர்பார்த்துத் துடித்துக் கொண்டிருந்தது.
அத்தனை பலத்த ஏமாற்றத்தைச் சந்தித்த பிறகும், ‘என்னை ஒருமுறை பாரேன்…’ என்று அவனிடம் மௌனமாகப் பேசிக் கொண்டிருந்தது பெண்ணவளின் மனம். அவளது சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள் யாவும் சிதைந்து போனதில், அவள் உள்ளுக்குள் முற்றிலும் உடைந்து போயிருந்தாள்.
அவள் மனதின் வார்த்தைகள் அவனிடம் சேரவே இல்லை போல! அவன் கொஞ்சமும் அவளைக் கவனிக்கவில்லை. அவனது பார்வையில் படாத தன் அலங்காரத்தை ஒருமுறை குனிந்து பார்த்துக் கொண்டவளுக்கு, தன் மீதே ஒருவிதச் சுயபட்சாதாபம் எழுந்தது. எங்கே தன்னை மீறி அழுகை வெடித்துவிடுமோ என்கிற அச்சத்தில் கீழுதட்டைப் பற்களால் பற்றிக்கொண்டாள். அவளது தொண்டையை ஒரு பெரும் பாரம் அழுத்தி மூச்சடைக்கச் செய்தது.
உடையை மாற்றி முடித்த அருள்மித்ரனோ, அவளை ஏறிட்டும் பாராமல், “நாளைக்குக் காலையில சீக்கிரம் கிளம்பணும் வேதிகா… லேட் பண்ணிடாதே!” என்று சொல்லிவிட்டு, அமைதியாகச் சென்று படுத்துக் கொண்டான். ‘வேதிகா’ என்று அவன் நீட்டி முழக்கி அழைத்த கோபம் வேறு அவளுக்கு சுர்ரென்று ஏறியது.
ஏமாற்றமும் கோபமுமாக அவள் பதில் சொல்லாமல் மௌனமாக நிற்க, அருள் தன் முகத்தின் மீது குறுக்காக வைத்திருந்த கரத்தை விலக்கிவிட்டு அவளைப் பார்த்தான்.