அருள் இந்த பேச்சினை நம்ப மாட்டாமல் மாமனாரை வெறித்துப் பார்த்தான். பிரீத்தியை திருமணம் செய்துகொள் என்று நடையாய் நடந்த மாமனும் அத்தையும் அவனுக்கு நினைவில் வந்தார்கள்.
பிரீத்தி பூஞ்சை உடம்புக்காரி, படிப்பிலும் ஒன்றும் சூட்டிப்பு இல்லை. அழகு, படிப்பு, ஆரோக்கியம் என அனைத்தும் குறைவாக இருக்க, அவளுக்கான மணமகனைத் தேடுவதற்குள் அவளைப் பெற்றவர்களுக்கு போதும் போதும் என்றாகிப் போனது.
இருபத்தியேழு வயதாகியும் பிரீத்திக்கு திருமணம் கூடி வரவில்லை. வசதி குறைவாக, படிப்பு குறைவாக எப்படித் தேடியும் மணமகன் கிடைத்தபாடில்லை. அவளுக்கு அடுத்து அவளுடைய தங்கை காவ்யா வேறு திருமணத்திற்கு இருந்தாள்.
அந்த நேரத்தில் தான், அத்தனை காலமும் கண்ணில் படாத தங்கை குடும்பம் கண்ணில் பட்டது போல சாமியண்ணனுக்கு
பிரீத்திக்கு அருள்மித்ரனை மணம் முடித்து வைக்கலாம் என்று கல்யாணியிடம் தூது வந்தார்கள் சாமியண்ணன், செல்வி தம்பதியினர்.
கல்யாணியின் பார்வைக்கு பள்ளிப்படிப்பைக் கூட சரியாக முடிக்காமல், மெக்கானிக் கடை வைத்திருக்கும் தன் மகனுக்கு பிரீத்தி நல்ல வரனாகத் தான் தோன்றினாள். கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் மகனின் சம்மதம் கேட்டு நின்றார்.
அருளுக்கு என்னவோ நெருடல்! அப்பாவுக்கு விபத்து நேர்ந்து படுத்த படுக்கையாக இரண்டு ஆண்டுகள் இருந்தார், அதன்பிறகு சிகிச்சை பயனளிக்காமல் இறந்தும் போனார். அப்பொழுதெல்லாம் குடும்பம் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. இவன் தன் பள்ளிப்படிப்பைக் கூட முடிக்க முடியாமல் அப்பாவின் மெக்கானிக் கடையை பொறுப்பேற்று நடத்தினான்.
மூத்த தங்கை மாலதிக்குத் திருமணம் செய்து கொடுத்த போதும் வீட்டை எல்லாம் அடமானம் வைக்கும் நிலையில் தான் இருந்தார்கள். அந்த கடனை அடைப்பதற்கு இவன் இன்னமும் அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறான்.
இப்படி இவர்களின் கஷ்டமான காலங்களில் எல்லாம் ஏனென்றும் எட்டிப்பார்க்காத மாமன் குடும்பம் இப்பொழுது தேடி வருகிறார்களே என மனம் முரண்டு பிடித்தது. அதோடு வயதும் பிரீத்திக்கும் இவனுக்கும் ஒரே வயது தான், அவள் இவனை விட இரண்டு மாதங்கள் தான் சிறியவள். பார்வைக்குக் கலையாக இருக்க மாட்டாள் என்றாலும் அது அவனுக்குக் குறையாக தெரியவில்லை. ஆனால், மற்ற விஷயங்கள் தான் ரொம்பவும் இடித்தது.
அம்மாவிடம் தன் ஆட்சேபனைகளை எல்லாம் அடுக்க, “பிரீத்திக்கு படிப்பு வரலை, உடம்பும் கொஞ்சம் நோஞ்சான் மாதிரி இருக்கும் அதுனால தான் எங்க அண்ணன் நம்மளை தேடி வந்திருக்காரு. இல்லைன்னா இங்கே ஏன் வர போறாரு? ஸ்கூல் படிப்பைக் கூட முடிக்காம மெக்கானிக் வேலை செஞ்சிட்டு இருக்க உனக்கு இதைவிட நல்ல சம்மந்தம் கிடைக்குமா? எங்க அண்ணன் இருபத்தியஞ்சு பவுன் நகை போட்டு பிரீத்தியை கட்டிக்கொடுக்கிறேன்னு சொல்லறாரு இதுக்கும் மேல என்ன வேணும்?” என்று கல்யாணி பதிலுக்குக் கேட்டு அவனை அதிர வைத்தார்.
உனக்கெல்லாம் பெண்ணே அமையாது, இப்படி ஏதாவது அமைந்தால் தான் உண்டு என்பது போலான அம்மாவின் பேச்சில் அவனுக்கு ஒருமாதிரியாகி விட்டது.
அவனும் நன்றாகப் படித்தவன் தான், பன்னிரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது தான் அவனுடைய தந்தை கந்தசாமி விபத்தில் படுத்த படுக்கையாகி விட்டார். அதன்பிறகு அப்பா, அம்மா, தங்கைகள் என மொத்த குடும்பத்தையும் தன் தோளில் சுமக்கும் நிலைக்குக் காலம் அவனைத் தள்ளியிருந்தது.
படிப்பை இழந்தான், அந்த வயதிற்கான சந்தோசங்களை இழந்தான், வயதுக்கு மீறிய பொறுப்பு, கடமைகளைச் சுமந்தான். ஆனாலும், ஒரு நாளும் தளர்ந்ததில்லை, வாழ்க்கையைக் குறை சொன்னதில்லை. உணவு, உறக்கம், ஓய்வு என அனைத்தையும் மறந்து இரவு பகலாக உழைத்து வருகிறான்.
படிப்பில்லை என்பதைத்தவிர அவனிடம் வேறு எந்த குறைகளும் இல்லை. அப்படியிருக்க அவனைக் கட்டிக்கொள்ள ஒரு பெண்ணும் முன் வராது என்று அம்மா சொன்னது அவன் மனதைக் காயப்படுத்தியது.
அருள்மித்ரனை பொறுத்த வரையில் அவனது பெயருக்கு ஏற்றாற்போல கருணை உள்ளம் கொண்டவன். அந்த குடும்பத்தின் ஆண் மகன் தான்தான் என்பதில் பொறுப்பு, பொறுமை எல்லாமே அதிகம். குடும்பத்தினர் செய்வது ஏதேனும் அவனது கோபத்தை தூண்டும் விதமாக இருந்தாலும், அத்தனை எளிதாக முகத்தில் காட்டிவிடவோ சண்டை போடவோ கூட மாட்டான். அவர்களுக்கு நாம் தானே ஆதரவு என்று நினைத்து அனுசரித்து செல்பவன்.
அதனால், அன்னை பேசியதில் உண்டான வருத்தமும் அவனுள்ளேயே புதைந்தது.
கல்யாணியிடமும், “சரிம்மா உங்களுக்கு சரின்னு பட்டா செய்யுங்க” என்று தான் அவனின் திருமணம் பற்றிய பேச்சின் போதும் கூறினான். அதாவது அவனது வாழ்க்கைக்கான முக்கிய பொறுப்பை அப்படியே தூக்கி அன்னையிடம் தந்திருந்தான்.
அவர் இவனின் நலம் விரும்பியாக இருந்திருந்தார் என்றால், நிச்சயம் எந்த பிரச்சனையும் வந்திருக்காது. பிரீத்தி திருமண சந்தைக்கு எடுபடாதவள், பொறுமை, அனுசரணை, அனைவரோடும் ஒன்றிப் போகும் பண்பு என எந்தவிதமான நல்ல குணங்களும் இல்லாதவள், தன் மகனுக்கு ஏற்றவள் இல்லை என்று நன்கு தெரிந்திருந்தும், அண்ணன் வீட்டு உறவுக்காகவும், அண்ணன் தரும் சீருக்காகவும் மகனைப் பற்றி யோசிக்காமல் சுயநலமாகச் சிந்தித்து திருமணத்திற்குச் சம்மதித்தார்.
அதன் விளைவோ, அருளும் பிரீத்தியும் திருமணமாகி வாழத் தொடங்கியதிலிருந்து பிரச்சனை தான்! அடிக்கடி உடல்நிலை சரியில்லை என்பாள். வீட்டில் எல்லாரிடமும் சண்டை, அதிகாரம் தான். மாமியார் வேலை ஏவுகிறார் என தினமும் சண்டை பிடித்தாள். போதாக்குறைக்குச் சின்ன விஷயத்துக்கும் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்குப் போய் விடுவாள். அருள் உறவுச் சிக்கல்களைக் கையாளத் தெரியாமல் விழி பிதுங்கி நின்றான்.
திருமண வாழ்க்கை என்பது இத்தனை நரகமாக அமையுமா? அவனால் நடப்பதை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. மனைவியை சமாதானம் செய்யச் செல்வதும், அவள் முறுக்குவதும் வாடிக்கையாக, இந்த நிலையில் அவள் கருவுற்றாள். இந்த சமயத்தில் எந்த பிரச்சனைகளும் வேண்டாம் என்று மாமியார் வீட்டிலேயே விட்டு வைத்திருக்க, கடைசியில் பிணமாகத்தான் வீடு திரும்பினாள்.
யாரைக் குற்றம் சொல்வது? அவன் விதி நன்றாக இருந்திருக்க இப்படி எல்லாம் இன்னல்களைச் சந்திக்க நேரிடுமா?
அந்த நிலையிலும் தன்னை தேற்றிக்கொண்டு வாழ்க்கையின் ஓட்டத்தில் இணைந்து கொண்டான்.
இந்த சமயத்தில் தான் மாமனாரும் மாமியாரும் வந்து பேத்தியின் பொறுப்பைக் கைமாற்றி விட நினைத்தது.
அவனுக்கும் காலத்துக்கும் மகளை அவர்கள் பொறுப்பில் விட வேண்டும் என்ற எண்ணமில்லை. ஆனால், கைக்குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை இரு வீட்டிலும் பகிர்ந்து கொண்டால், அவனுக்கு அது பேருதவி அல்லவா?
அதோடு அவர்கள் முன்பே இதுமாதிரி சூழல் என்று அவனிடம் சொல்லியிருந்தால் அவனே சென்று பிள்ளையை வாங்கி வந்திருப்பான். இப்படி வீடு தேடி வந்து இந்த மாதிரி பேசுவது ஒரு மாதிரி இருந்தது.
மகளோடு எங்கள் பொறுப்பு முடிந்தது என்று நினைக்கிறார்கள் போல! விரக்தியாக எண்ணிக் கொண்டவன் தன் முகத்திலும் எதையும் காட்டவில்லை, வார்த்தையிலும் எதையும் சொல்லவில்லை.
‘நீங்க வேண்டுமே வேண்டும் என்று நினைத்த உங்க அண்ணன் குடும்பத்தின் லட்சணத்தை பாருங்கம்மா’ என்று தொண்டை வரை வந்த கேள்வியை தனக்குள் விழுங்கிக் கொண்டான். அவனது பார்வை மட்டும் அன்னையைக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தது.
கல்யாணியோ அண்ணனிடம் சண்டைக்குப் போனார். “நோஞ்சான் பொண்ணை கட்டி வெச்சு என் பையன் வாழ்க்கையை பாழாக்கிட்டீங்க, இப்ப குழந்தையை வளர்க்கிற பொறுப்புல இருந்தும் கழண்டுக்க பார்த்தா என்ன அர்த்தம்?” என்று கத்தினார். அதாவது அவர் தலையில் பொறுப்பு விழுந்து விடுமோ என்பது தான் அவரது தலையாய பிரச்சனையாக இருந்தது.
“உங்க வீட்டு வாரிசை நாங்க என்ன வளர்த்தறது?” செல்வி வெடுக்கென்று கேட்டார். ஐந்து மாதங்களாகத் தாயில்லா கைக்குழந்தையை வைத்துக் கொண்டு அவரும் படாத பாடுபட்டுவிட்டார். இளைய மகள் காவ்யாவோ கொஞ்சமும் உதவிக்கு வரவில்லை. பையனைப் பெற்ற அம்மாவோ எட்டிக்கூடப் பார்க்கவில்லை. அவருக்கும் மகள் வயிற்று பேத்தி, தாயில்லா குழந்தை என்கிற பாசமும் பட்சாதாபமும் இருக்கிறது தான்! ஆனால், நிரந்தரமாக அவர் பொறுப்பிலேயே வந்துவிடுமோ என்று பயம் வந்துவிட்டது. அதனால், மொத்த பொறுப்பையும் உதறத் தயாராகி விட்டார்.
“வாரிசா? உங்க பொண்ணு இங்கே நாலு நாள் வாழ்ந்து பத்து நாள் உங்க வீட்டுல குடியிருந்து எங்களை சோதிச்சது போதாம, ஒரு பொட்ட புள்ளையை வேற பெத்து போட்டுட்டு போயி சேர்த்துட்டா, இனி நாங்க அதை வேற வளக்கணும். அவளை பெத்த ஆத்தாவும் அப்பாவும் கணக்கா அஞ்சு மாதம் பார்த்துட்டு இனி எங்களைத் தொல்லை பண்ணாதீங்கன்னு சொல்லிட்டு போயிடுவீங்க. நாங்க இனி காலத்துக்கும் வளர்த்து ஆளாக்கணும். நல்லா இருக்கு உங்க நியாயம்?” என்று கல்யாணி கத்திய கத்தில் அருளிற்கு மனம் நொந்தது.
தன் மகளைக் குறித்து இதுபோன்று பேச்சு வருவதில் அவனுக்கு சுத்தமாக உடன்பாடில்லை.
பிஞ்சு குழந்தை, அம்மாவை இழந்து நிற்கிறாள். அவளை வளர்க்க உதவி செய்யாவிட்டால் அவனால் என்ன செய்ய முடியும்? அவனால் வேலையை உதறிவிட்டு மகளை பார்த்துக்கொள்ள முடியாதே! அப்படியான பொருளாதார நிலை அவனுக்கு இல்லை. இருந்திருந்தால், மகளை அவனே வளர்த்திருந்திருப்பான். இப்படி அடுத்தவர் பந்தாடும் நிலையில் தன் மகளின் நிலை இருப்பது அவனது இதயத்தை நொறுக்கியது.
பேசக்கூட முடியாமல் மகளை தன்னோடு சேர்த்து அணைத்தபடி நின்றிருந்தவனின் மனம் ஆதரவிற்காக ஏங்கிக்கொண்டிருந்தது.