Advertisement

ஓம் நமச்சிவாய..

 மலரே மன்னிப்பாயா 12.

 சுவாதி நிலவிடம் சத்தம் போட்டுவிட்டு அவளது வேலையை பார்க்கச் சென்று விட்டாள்..

 அவளுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.

 அவள் வேலை ஒன்று செய்ய எடுத்தால் அவளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இருந்தால் அனைத்து வேலைகளையும் நேர்த்தியாகவும் வேகமாகவும் செய்து முடித்து விடுவாள்..

 மீனை சுத்தம் செய்து அதன்பின் கூட்டுப் பொரியல் மீன் குழம்பு என ஒரு குட்டி சமையலையே வேகமாக முடித்துவிட்டு சரியாக 12 மணிக்கு தாய்க்கு உணவையும் கொடுத்து அனுப்பி விட்டாள்..

 சாரதாவின் வீட்டில் இருந்து சகுந்தலாவின் வீட்டிற்கு தேவி குழம்பு எடுத்து வருவதும் இங்கு சமைத்தவற்றை சிறு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு சுவாதி சாரதாவின் வீட்டில் கொடுப்பதும் வழமையானது..

 அதேபோன்று தேவி கொண்டு வந்தவற்றை சமையல் அறையில் வைத்து மூடிவிட்டு அவளும் அவர்களுக்கு மீன் குழம்பு கூட்டு பொரியல் அனைத்தையும் எடுத்துக் கொண்டு தேவியுடன் பேசிக்கொண்டே சாரதாவின் வீட்டிற்கு சென்றுவிட்டாள்..

 நிலாவிற்கு வேலை ஒன்றும் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் அவளது உடைகளை அனைத்தையும் பெட்டியிலிருந்து எடுத்து மீண்டும் உடைகள் அனைத்தையும் அழகாக மடித்து அதேப் பெட்டியில் வைத்தாள்..

அதன் பின் சிறிது நேரம் உறங்க முற்பட்டாள். ஆனால் உறக்கம் அவளுக்கு கிட்டாமல் சதி செய்தது..

 கைபேசியில் டிக் டாக் youtube பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களை அனைத்தையும் பார்த்துவிட்டு வர நேரம் சரியாக இருந்தது.. அதன் பின் சுவாதி அங்கிருந்து வந்து சமையலறையில் உணவு எடுக்கும் சத்தம் கேட்டதும் அவளுக்கும் பசி உணர்வு ஏற்பட்டது.. 

அவளும் கைப்பேசியை வைத்து விட்டு வெளியே வந்து குளியலறை என்று இருக்கும் அந்த அடைப்பில் முகமும் கை கால்களையும் தண்ணீர் எடுத்து கழுவி விட்டு சமையல் அறைக்கு வந்தாள்..

 சுவாதி அவளது தட்டில் அவளுக்கு தேவையான சாதம் கூட்டு பொரியல் முதலில் எடுத்து வந்து அங்கிருந்த பிளாஸ்டிக் கதிரை ஒன்றில் அமர்ந்து டிவியை ஆன் செய்து அதில் சன் டிவியில் அந்த நேரம் போக ஆரம்பித்த சீரியல் பார்த்துக் கொண்டு உணவை உண்ண ஆரம்பித்தாள்..

 அப்பொழுது நிலா சமையலறைக்குள் செல்வதை பார்த்தவள் அவளது உணவு தட்டை கதிரையில் வைத்து விட்டு சமையலறை வாசலுக்கு அவளும் வந்து ” இன்னும் நாலு பேர் மதியமும் சாப்பிடணும்.. இரவைக்கும் மீன் குழம்பு மிச்சம் இருக்கணும்.. சாதம் மட்டும் வச்சா போதும் பார்த்து கொஞ்சமா சாப்பிடு.. அள்ளி தின்னுட்டு போயிடாத இங்க சமைக்கிறதுக்கு ஆளும் இல்லை.. திரும்ப அரசி பருப்பு வாங்க காசும் இல்லை.. ” என்று வெடுக்கென கூறிவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள் சுவாதி..

 தட்டில் ஒரு கரண்டி சாதம் வைத்த மாதிரி சற்று நேரம் சுவாதி பேசியதை கேட்டு அங்கேயே நின்றாள் நிலா..

 அதன் பின் மனதில் என்ன நினைத்தாளோ..

சுவாதி பேசியதற்கு எதிர் மாறாக அவள் உண்ணாமல் கோவித்துக் கொண்டு அறைக்கு செல்லாமல். வேண்டும் என்று அனைத்து உணவுகளையும் அவள் வழமையாக சாப்பிடுவதை விட அதிகமாகவே தட்டில் வைத்துக்கொண்டு சுவாதிக்கு எதிராகவே போய் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்..

அதை பார்த்த சுவாதி ” ஏய் இப்பதானே சொல்லிட்டு வந்தேன். இன்னும் அப்பா குமரன் ராகவ் அண்ணா மூணு பேருமே சாப்பிடணும். அவங்க மூன்று பேருமே ஆம்பளைங்க ரொம்ப அதிகமாகவே சாப்பிடுவாங்க. அதனால அவங்களுக்கு எல்லாம் பசி போகும் வரை சாப்பிட போதுமான சாப்பாடு வேணும்.. நீயே அவ்வளவு கூட்டு பொரியல் மீன் குழம்பு எல்லாம் எடுத்து வச்சு சாப்பிட்டா அவங்களுக்கு என்ன பண்றது.. பொண்ணுதானே நீ வீட்ல இருக்குறவங்களுக்கு வேணும் புருஷனுக்கு வேணும்னு நினைச்சு சாப்பிடுறது இல்லையா?.. அவங்க மாலையில் வருவாங்க அதனால் தான் நான் இப்பவே சாப்பிடுறேன்.. இல்லை என்றால் அவங்க வந்ததும் அவங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு தான் மிச்சம் இருக்குறதை நாங்க சாப்பிடுவோம்.. 

அதெல்லாம் உனக்கு எங்க தெரியபோது உன்னை சொல்லி என்ன பண்ண. அம்மா அப்பா அண்ணன் தம்பி என்று குடும்பமா வாழ்ந்து இருந்தால் தானே குடும்பத்தில் இருக்கிற பழக்க வழக்கம் எல்லாம் தெரியும்.. அந்த கிழவியோட வளர்ப்பு பின்ன எப்படி இருக்கும்.. ” என்று பாட்டியையும் அவளது வளர்ப்பையும் பற்றி குறை கூறியதும் கோபம் வந்து தட்டை கீழே வைத்துவிட்டு நிலா சுவாதிக்கு அடிக்காமல் விட்டிருந்தால் சுவாதி இன்னும் என்னவெல்லாம் பேசி இருப்பாளோ?.. 

 சாரதா விடம் இன்று காலையில் அவளும் அவளது பாட்டியும் மட்டுமே அவர்களது உறவு என்று நிலா கூறியதை சுவாதி கேட்டு விட்டாள்..

 அதை வைத்துத்தான் நிலா யாரும்மற்றவள் என்று தற்போது மட்டம் தட்டி பேசியது..

 அவள் உணவு எடுக்கும் பொழுது திட்டியதை கூட நிலா பெரிதும் எடுத்துக் கொள்ளாமல் விளையாடுகிறாள் என்று நினைத்தாள்..

 ஆனால் தற்பொழுது அவள் பேசியது அனைத்தும் மனதில் ஏதோ ஒன்றை வைத்துக் கொண்டுதான் அனைத்து விஷயத்திலும் தன்னை கீழாக நினைத்து பேசி இருக்கிறாள். என்பது நன்றாக நிலாவிற்கு மண்டையில் உரைத்தது..

 சாப்பிட உணவில் கை வைத்ததும் சுவாதி அவ்வாறு பேசியதும் வைத்த கையை எடுத்து அவள் அனைத்தையும் தாங்கிக் கொள்வாள். ஆனால் அவளது பாட்டியையோ அல்லது பாட்டியின் வளர்ப்பைப் பற்றியோ பேசினால் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது..

 தாய் விட்டு சென்று பின் தந்தையும் விட்டு சென்றதும் அனைத்தும் பாட்டியே பார்த்து அவளை வளர்த்து ஆளாக்கியுள்ளார்..

 அவளும் அவரது வளர்ப்பை பொய்யாக்காமல் அனைத்து விதத்திலும் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் இருந்து வந்துள்ளாள் இதுவரைக்கும்..

இனியும் அவ்வாறு இருப்பாள்..

 அப்படி இருந்தும் அவளை ஒரு உணவிற்காக சுவாதி இவ்வாறு மட்டம் தட்டி கீழாக பேசியதை ஏற்றுக் கொள்ள முடிந்தவளால் பாட்டியை பற்றி பேசியதும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் உணவில் வைத்த கையை எடுத்து சற்று கோபம் அதிகமாகவே அடித்து விட்டாள்..

 அடித்ததும் சுவாதி உணவு தட்டை கீழே வைத்துவிட்டு எழுந்து அவளது அருகே வரவும் நிலா அவளது உணவு தட்டை எடுத்துக் கொண்டு சமையல் அறையில் வைத்து விட்டு கையை கழுவி விட்டு சுவாதி வருவதை பொருட்படுத்தாமல் அவளது அறைக்கு சென்று கதவை அடைத்துவிட்டாள்..

அவளது வீட்டில் வந்து அவளையே நிலா கை நீட்டி அடித்ததும் அகங்காரத்தின் உச்சத்திற்கு சென்று விட்டாள் சுவாதி..

” ஏய் வாடி வெளிய. என்னையே அடிச்சிட்ட தானே. இனி நீ இந்த வீட்டுல ஒரு நிமிஷம் கூட இருக்க கூடாது. வீட்டை விட்டு வெளிய போடி அனாதை நாயே.. ” என்றாள்.

 ரொம்ப அதிகமாகவே சுவாதி நிலாவை பேசிவிட்டாள்..

 சுவாதி இன்னும் அதிகமாக பேசியும் கூட நிலா கதவை திறந்து வெளியே வராமல் இருந்ததால் அவள் நேரடியாக சாரதா விடம் சென்று அவள் அடித்ததை கூறி அவரை வந்து என்னவென்று கேட்குமாறு பேசியே தொந்தரவு செய்து கொண்டிருந்தாள்..

 சாரதாவிற்கு தெரியும் இதற்குள் தான் சென்று இரண்டு பேருக்கும் சாதகமாக பேச முடியாது என்று..

 வீட்டுக்கு வாழ வந்த பெண்ணிற்கு கணவனும் மாமியாரும் அங்கீகாரம் கொடுத்தாலே அதனைப் பின்பற்றி மற்றவர்கள் அவளை மரியாதையாக நடத்துவார்கள்..

 இங்கு ராகவும் சவுந்தலாவும் அவளை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் சுவாதி மாதிரியானவர்கள் இன்னும் அவளை அதிகமாக மட்டம் தட்டி ஏறி மிதிக்க தான் பார்ப்பார்கள்..

 அவர்கள் மட்டம் தட்டுவதை ஏற்றுக்கொள்ளாமல் நிலா மாதிரி எதிர்த்து நிற்கும் பெண்களே இவ்வுலகில் நிலைத்து நிற்பார்கள்..

 இன்னும் நன்றாக சுவாதி நிலா விடம் வாய் கொடுத்து வாங்கி கட்டிக் கொண்டால் தான் ஓரளவுக்கு அவளது வாலை சுருட்டி வைத்துக் கொள்வாள் என்று நினைத்து சும்மா சாதாரணமாகவே சுவாதியை சமாதானம் செய்ய முற்பட்டார் சாரதா..

 நிலா கொஞ்சம் சாப்பாட்டு விரும்பி..

 உண்ணும் உணவில் அதிகம் அக்கறை எடுத்து சமைப்பாள்.. அத்தோடு ருசியும் இருக்க வேண்டும் என்று நினைத்து ரசித்து ருசித்து சமைத்து உண்பவள்..

 நேற்று இரவு தான் இந்த வீட்டுக்கு வந்திருக்கிறாள். இன்றைய நாள் ஆரம்பமாகி இருக்கிறது அவளே சமைத்து கணவனுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று நினைத்து தான் சுவாதியின் கையில் இருந்த மீனை கேட்டாள்.. ஆனால் அவள் தர மறுத்ததோடு அதிகமாக பேசிவிட்டு சமைத்தாள்.. அப்படி அவள் சமைத்த அந்த உணவையும் இறுதியில் நிலாவை உண்ண விடாமல் செய்துவிட்டாள்..

சுவாதியை வெறுப்பேற்றுவதாகவும் ஆகிவிட்டது. அவளும் நினைத்த படி வீட்டில் இருப்பவர்களுக்கு விரும்பி சமைத்து உணவை கொடுக்கலாம் என்றும் நினைத்து தான் சுவாதி சொல்லியதையும் மீறி உணவுகளை அதிகம் தட்டில் எடுத்து வைத்து கொண்டு வந்தாள் நிலா…

 ஆனால் அனைத்திலும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு நிலாவையும் கோபப்படுத்தி கைநீட்டி அடிக்க வைத்துவிட்டு சென்றுவிட்டாள் சுவாதி..

 நேரம் யாருக்கும் காத்திராமல் ஒரு நல்ல முடிவு எடுப்பதற்காக நிலா எதிர்பார்த்த நேரமும் சுவாதி நிலாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப எதிர்பார்த்த நேரமும் வந்தது..

 நிலாவிடம் அடி வாங்கிவிட்டு சாரதா வீட்டிற்கு சென்ற சுவாதி மீண்டும் சகுந்தலா வேலை முடித்து வீட்டிற்கு வந்ததும் தான் வந்தாள்..

 ராகவும் அன்று அவனுக்கு காலேஜ் முடிந்ததும் வெளியே வந்து ரமேஷுக்கு அழைப்பு விடுத்தான். அவனும் திருமணம் நேற்று நடந்தபடியால் மறுவீட்டு விருந்து என்று கூறி ராகவ் அழைத்ததற்கு வெளியே வர மறுத்து விட்டான்..

 ராகவ் என்ன நினைத்தானோ குடி என்று செல்லாமல் நேரடியாக நல்லபடியாகவே வீட்டிற்கு வந்து விட்டான்..

 ராகவும் வர சகுந்தலா சுவாதியின் பேச்சைக் கேட்டு சுவாதியை நிலா அடித்ததை தெரிந்து கொண்டு நிலா விடம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்..

 அவன் வந்து தாயின் சத்தத்தை என்னவென்று கூட மதித்து பார்க்காமல் அறைக்கு சென்று உடையை மாற்றிக் கொண்டு குளிப்பதற்கு தயாராகி வெளியே வந்தான்..

 அவனிடம் நடந்ததை கூறி நியாயத்தை கேட்கலாம் என்று நினைத்த நிலா அவனை அழைத்தாள்..

” ஏங்க கொஞ்சம் நில்லுங்க.. “

” ம்ச்சே. என்னடி இப்ப உங்க சண்டையில் என்னத்துக்கு என்னை இழுத்து விடுற?.. உருப்படியான ஒரு விஷயத்துக்கு நீங்க சண்டை பிடிக்கிறது இல்லன்ன்னு எனக்கு நல்லாவே தெரியுது.. அது தெரிஞ்சு தான் நான் தலையிடாமலுக்கு விலகி போறேன்.. மனுஷன் காலையிலிருந்து ரொம்ப தொண்டை தண்ணி வத்தக் கத்தி களைத்து போய் வீட்டுக்கு வந்தா இங்கேயும் நிம்மதி இல்லை.. என்ன இப்போ உன் பிரச்சனை என்னன்னு சொல்லி அழு.. ” என்றான் வேண்டா வெறுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு..

Advertisement