Advertisement

 ஓம் நமச்சிவாய..

 மலர் 8..

 திருமண மண்டபத்தில் இருந்து தாலி கட்டியதும் வெளியேறிய ராகவ் இன்னும் வீடு வந்து சேரவில்லை..

 அவனுக்கு மனதெல்லாம் ஒருவித அழுத்தம்.. வேறு என்னவென்றே சொல்ல முடியாத ஓர் உணர்வில் தத்தளித்துக் கொண்டிருந்தான்..

 வயது 30 ஆகியும் இதுவரையும் சகுந்தலா அவனுக்கு பெண்பார்க்கும் படலத்தை ஆரம்பிக்கவில்லை..

 தற்போது வரையிலும் அவனுக்கு காதல் என்ற ஒன்று யார் மீதும் வந்ததும் இல்லை..

 பல திருகுதாலங்கள் செய்தாலும் பெண்கள் மற்றும் காதல் விஷயத்தில் அவன் பச்சிளம் குழந்தை..

 அவனுக்கு இந்த எதிர்பாராத திருமணம் நடைபெறவில்லை என்றால் திருமணம் என்ற ஒன்று நடைபெறாமல் இருக்க அதிக சாத்தியக்கூறு உள்ளது..

 இது அனைத்தும் அவனுக்கு நன்றாகவே தெரியும்.. இந்த பணத்தை காரணம் காட்டி அவளை திருமணம் செய்து வைத்ததும் அவனுக்கு மகிழ்ச்சியையோ வேறு ஒரு நல்ல உணர்வையோ கொடுக்கவில்லை..

 மண்டபத்திலிருந்து நேரடியாக அனைத்து விஷயத்திலும் அவனுக்கு ஆறுதலாக இருக்கும் கடல் அன்னையை தேடி வந்தான்..

 அவன் காலேஜ் ப்ரொபஷராக போக வேண்டும் என்பதெல்லாம் அவனுக்கு கனவோ ஆசையோ இல்லை..

 படித்தான் வேலை கிடைத்தது ஏனோ தானோ என்று வேலை செய்கிறான்..

 அவனுக்கு இந்த கடல் அன்னை கடல் சார்ந்த தொழில்கள் மட்டுமே ஓர் உயிர்ப்பு உடைய பிடித்தமான விஷயமாகும்..

 சொந்தமாக ஒரு போர்ட் வாங்கி அதை ஆட்கள் வைத்து கடலுக்கு சென்று விதவிதமான மீன்களைப் பிடித்து விற்பதும்.. விற்காத காலங்களில் கருவாடு போட்டு விற்பதுமே மனதுக்கு நிறைவான தொழிலாகும் அவனுக்கு..

 அதற்காகத்தான் வரதனின் சென்னை பினான்சியல் கிளையில் வட்டிக்கு பணம் வாங்கினான்..

 காலம் கூடாதோ என்னவோ?.. பணம் வாங்கிய காலத்தில் இருந்து இன்று வரை அவன் நினைத்த படி கடலுக்கு சென்று மீன் பிடித்து நல்ல விதமாக தொழில் செய்ய முடியவில்லை..

 அவன் கடல் அன்னையை நேசிக்கிறான்.. ஆனால் ஏதோ ஒரு குறை காரணமாக கடல் அன்னை அவனை நேசிக்கவில்லை..

 போர்ட் வாங்கினான். ஆனால் அதில் தொழிலுக்கு செல்லும் மீனவர்களுக்கு ஏதாவது ஒரு பாதிப்போ தடங்கலோ ஏற்பட்டு தொடர்ந்து அவர்களால் அந்த போட்டில் மீன் பிடிக்கச் செல்ல விருப்பம் இல்லாத நிலையை உண்டாக்கியது..

இறுதியாக அந்த போர்ட்டில் நடேசனும் குமரனும் சென்றும் கூட அதிக காற்றில் சிக்கி கரை ஏறியது ஏதோ ஒரு புண்ணிய காரியமாகும்..

 அதனால் அந்த போர்டை விற்கவும் முடியாமல் அதை வைத்து தொழில் செய்யவும் முடியாமல் ஒரு சங்கடமான நிலையை சந்தித்தான்..

 ஏதோ ப்ரொபஷராக இருப்பதால் வாங்கிய பணத்திற்கு வட்டியும் கட்டி அவனின் செலவுகளையும் பார்த்து வருகிறான்..

 கொஞ்ச காலமாக வட்டியும் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால்தான் முதல் பணத்தை கேட்டு ஆள் அனுப்பி அவனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் வரதன்.. சிறிது கால அவகாசம் ராகவ் கேட்டும் வரதன் அப்பொழுது அதற்கு சரியான பதில் சொல்லாமல் விட்டுவிட்டு தற்பொழுது மகளின் திருமணத்தை காரணம் காட்டி 5 லட்சம் ரூபாய் பணத்துக்கு அவனை விலை பேசி வாங்கி விட்டான். என்று கோபம் வரதன் மற்றும் அவனது மகள் நிலா மேலும் எண்ணிலடங்கா கோபத்தை சுமந்து கொண்டு நிழலோரம் கடலில் ஏற்படும் அலைகள் அது எழுப்பும் சீற்றங்கள் போன்ற விதவிதமான காட்சிகளை பார்த்தும் கேட்டு கொண்டும் அமர்ந்திருந்தான் ராகவ்..

 அவனுக்கு பிடித்தமான கடல் அன்னையும் கூட அவனது மனதில் இருக்கும் கோபத்தையும் அவள் மீதான வெறுப்பையும் போக்கும் சக்தியை கொடுக்கவில்லை..

 அவனது கைபேசி சைலன்ட் மோடில் இருப்பதால் நண்பன் ரமேஷ் அழைப்பு விடுத்தும் அது அவன் கவனத்தை சென்றடையவில்லை..

 ரமேஷிற்கு திருமணம் செய்து வைக்க வேணும் என்று அவனது தாயின் விருப்பத்திற்கு இணங்க பெண் பார்க்கும் படலத்திலிருந்து அதனை தொடர்ந்து திருமணம் தடை இல்லாமல் நடைபெற ஐயர் கூறிய பரிகாரம் செய்ய கோயிலுக்கு அழைத்து சென்றது வரை அனைத்தும் ராகவ் தான்..

திருமண நாள் அன்று காலையில் வரை அனைத்திற்கும் உடன் இருந்து விட்டு காலையில் வீட்டிற்கு சென்று தயாராகி மண்டவத்திற்கே வருவதாக கூறிசென்ற நண்பனை தற்போது வரை மண்டபத்திற்கு வரவில்லை என ரமேஷ் சற்று பயத்துடன் தான் அவனுக்கு அழைப்பு விடுத்தான்…

ராகவ் இன்று நண்பனின் திருமணத்திற்கென்று காலேஜ் விடுமுறை வேறு எடுத்து விட்டான். என்றும் ரமேஷிற்கு தெரியும். பின்பு ஏன் வரவில்லை?.. என்ற குழப்பத்துடன் நண்பனுக்கு அழைத்தான். ஆனால் அழைப்பு சென்று கொண்டே இருந்தது அவன் எடுக்கவில்லை.. இங்கோ ராகவின் சிந்தை முழுவதும் நடந்த திருமணத்தில் இருந்ததால் அவனது கைபேசியை அவன் கவனிக்கவில்லை..

[ அட கூமுட்டை குக்கரு உன் கல்யாணத்துக்கு துணை மாப்பிள்ளையா வர வேண்டியவன் அங்க அவனுக்கே கல்யாணத்துக்கு புது மாப்பிள்ளை ஆகிவிட்டானே..! இது கூட தெரியாம இங்க ஒரு குக்கர் விசில் அடிக்குது ஹா ஹா ]

 ராகவின் வீட்டில்

 வீட்டில் அடி எடுத்து வைத்ததுமே அந்த வீட்டின் அமைப்பயும் வீடு இருக்கும் நிலையையும் பார்த்து முகம் சுளித்தால் நிலா..

 அவளுக்கென்று இருந்த அறையில் இருந்து வாத்தியின் தங்கை சுவாதி சத்தம் கேட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்..

 வீட்டிற்கு விரோதியே வந்தாலும் வரவேற்று அமர வைத்து தண்ணீர் கொடுப்பது தமிழரின் பண்பு என அனைவரும் அறிந்தது..

 ஆனால் அந்த அடிப்படை பண்பை கூட சகுந்தலா மகளுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை..

 வீட்டு தலை வாசலில் இருந்து ஹாலுக்கு அடியெடுத்து வைத்தாள் நிலா..

அப்போது அறையில் இருந்து வெளிவந்த சுவாதி புதியவளாக வீட்டிற்குள் வந்து நிற்கும் நிலாவை பார்த்து ” ஏய் யார் நீ?. வீடு திறந்து இருந்தால் நீ பாட்டுக்கு ஏதோ நுழையுற மாதிரி வந்துடுவியா?. வெளிய போ.. ” என்றாள் வாத்தியின் அருமை தங்கை..

 சுவாதியின் இந்த அவமதிப்பான பேச்சைக் கேட்டு வெடுகென நிமிர்ந்து அவளைப் பார்த்து முறைத்தாள் நிலா..

” ஏய் உன்னைத்தான் வெளியே போ என் வீட்டுக்குள் வந்து என்னையவே முறைக்கிற அளவுக்கு நீ பெரிய இவளா?.. ” என்றாள்..

 மேலும் அவளை பேச விட்டால் என்னவெல்லாம் பேசுவாளோ என்று நினைத்து சுவாதியின் பேச்சை தடுத்து நிலா யார் என்று கூற முற்பட்டாள்..

 ஆனால் எதிரில் இருப்பவரின் பேச்சை அந்த குடும்பத்தில் யாரும் இதுவரை காது குடுத்து கேட்டு பழக்கமில்லை சுவாதி மட்டும் விதிவிலக்கா என்ன..?

 சுவாதி அவளை அவமதித்தாலும் வாத்தியை திருமணம் செய்து வாழ வந்திருக்கும் வீட்டில் முதல் முதலில் அவளால் ஒரு கசப்பு ஏற்பட விரும்பாமல் இளம் புன்னகை ஒன்றை சிந்தி ” ஹாய் நான் பிறை நிலா சொந்த ஊர் திருச்சி இங்க இதுவரை ஹாஸ்டல் தங்கி படிச்சிட்டு இருந்தேன்.. ஆனால் இன்னைக்கு காலையில் எனக்கும் உங்க வீட்டு உதயராகவன் என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது..

 இப்போ நான் இந்த வீட்டு மருமகள்.. திருமதி பிறைநிலா உதயராகவன்.. ” என்றாள் நிலா.. கண் ஜாடையில் இந்த தகவல் போதுமா என்று கெத்தாக அங்கேயே நின்று கொண்டு ஏதோ வேலை கேட்டு வந்தவர்கள் அறிமுகம் செய்து கொள்வது போன்று நிலா அவளைப் பற்றி கூறியதும் இன்னும் திருமணம் நடந்தது எனும் அதிர்ச்சியில் இருந்து சுவாதி வெளிவராமல் விழித்துக் கொண்டிருந்தாள்..

 அப்பொழுது சகுந்தலாவின் வீட்டிற்கு எதிர்ப்புறம் இரண்டு வீடு தள்ளி இருக்கும் நடேசனின் சித்தி குடும்பமான சாரதாவின் வீட்டில் இருந்து சகுந்தலாவின் மாமியார். நடேசனின் அன்னையும் சாரதாவின் அக்காவுமான லட்சுமி வெளியே வந்தார்..

 லட்சுமி வீட்டுக்குள்ளே சென்று சாரதா மற்றும் அவரது குடும்பத்தை அழைக்கவும் என்னவென்று கேட்டவாரே சவுந்தலாவின் வீட்டு முற்றத்திற்கு அனைவரும் வந்தார்கள்..

 அவர்கள் வந்ததும். லட்சுமி மட்டும் முற்றத்தில் நின்று விட மற்ற அனைவரும் வீட்டுக்குள்ளே சென்று நிலாவை பார்த்து யார் என்ன என்று விசாரிக்கும் சத்தத்தில் தான் சுயநினைவுக்கு வந்த சுவாதி கைபேசியை எடுத்த தாய்க்கு அழைப்பு விடுத்தாள்..

அப்பொழுதுதான் சகுந்தலா வேலைக்கு சென்று இருந்த கடலோரம் இருக்கும் வாடியில் அனைவரும் கருவாடு போட மீனை ஒழுங்காக சுத்தம் செய்து சரியான முறையில் வேலை செய்கிறார்களா?. என்று மேற்பார்வை செய்து கொண்டே எப்பொழுது எந்த திகதியில் யார் யார் வட்டி தர வேண்டும் என்று தகவல்களை நோட்டை பார்த்து அவர்களுக்கு சற்று அதிகாரமாகவே கூறிக் கொண்டிருந்தார்..

 அப்பொழுது தான் அவரது கைபேசி அழைப்பு விடுத்தது..

சேலை மறைவில் இடையில் சொருகி இருந்த கைபேசி சத்தமிடவும் அதை எடுத்து திரையில் மகளின் புகைப்படம் வரவும் அதை பார்த்து மகள்தான் அழைக்கிறாள் என்று அதை ஆன் செய்து என்னவென்று கேட்டாள்..

 சகுந்தலா கைபேசியை இணைத்து காதில் வைக்கவும் மறு பக்கம் இருந்து சுவாதி “அம்மா அம்மா அம்மா” என கத்தினாள்..

 அவள் கத்திய சத்தத்தில் உண்மையிலேயே சகுந்தலாவுக்கு காதில் ரத்தம் வரும்போல் இருந்தது..

 கைபேசியை காதிலிருந்து சற்று எடுத்து விரல் விட்டு காதை குடைந்து விட்டு மறுபக்க காதில் கைபேசியை பொருத்தி ” ஏய் எருமை என்னடி ஒப்பாரி வைக்கிற?. என்ன விஷயம்னு மெதுவா சொல்லித் தொலை.. நீ கத்துற கத்துல மனுஷனுக்கு காது செவிடாகபோகுது.. ” என்றார் சகுந்தலா..

” அம்மா இங்க எவ்ளோ பெரிய விஷயம் நடந்திருக்கு உனக்கு தெரியாது.. யாரோ ஒருத்தி அண்ணா அவளை கல்யாணம் பண்ணிட்டான்னு சொல்லி நடு வீட்டுக்குள்ள வந்து நிக்கிறா. நீ சீக்கிரம் வா அவளை பாத்து சாரதா பாட்டி வீட்ல இருந்து எல்லாரும் வந்துட்டாங்க..” என்றாள் சுவாதி..

 உடனே சகுந்தலாவோ ” சாரதா மாமி வீட்டில் இருந்து யார் எல்லாம் வந்திருக்காங்க?.. அவ வந்திருக்காளா?..அதான் உங்க அப்பனை பெத்த பாட்டி கழுவி என் வீட்டுக்குள்ள வந்து இருக்காளா?.. சொல்லுடி இதோ உடனே வரேன்.. “

” இல்லம்மா அவ எப்படி வீட்டுக்குள்ள வருவாங்க உன் குணம் தெரிஞ்சு தான் முற்றத்திலேயே நிக்கிறாங்க. மத்தவங்க தான் வந்து இருக்காங்க.. ” என்றாள் சுவாதி..

 இங்கே மகன் தாய்க்கு கூட தெரியாது திருமணம் செய்து வந்து விட்டான். என்ற விஷயத்தை விட அவரது மாமியார் லட்சுமி வீட்டுக்குள் வந்து விட்டாளா? என்கின்ற கேள்வியே சகுந்தலாவிற்கு பெரிதாக தெரிந்தது..

 [ மகன் கல்யாணம் பண்ணினா கல்யாண செலவு மிச்சம்.. என்று நினைக்கும் அற்புதத் தாய் இந்த சகுந்தலா.. நம்ம பொண்ணு பார்த்து மண்டபம் பிடிச்சு செலவு பண்ணி கல்யாணம் பண்றதை விட மாகனே யாரோ பிடிச்ச மண்டபத்துல கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டான்.. என்று கேள்விப்பட்டால் செலவு மிச்சம் என்ற ஒரே காரணத்துக்காகவே இந்த கல்யாணத்தை ஏற்றுக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.. மகனின் திருமணத்தை விட மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் இருக்கும் சண்டையே சகுந்தலாவுக்கு பெரியதாக எப்பொழுதும் இருக்கும்..]

போர்ட் முதலாளியிடம் வேகமாக சென்று அவசரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும் அதனால் விடுப்பு வேண்டும் என்று சொல்லிவிட்டு அவர் சம்மதித்ததும் அங்கிருந்து வேகமாக வீட்டிற்கு வந்தார் சகுந்தலா..

 வந்தவர் அங்கே முற்றத்தில் ஒரு ஓரமாக அவரின் மாமியார் லட்சுமி நிற்பதை பார்த்துவிட்டு எச்சில் காரி துப்பி விட்டு வேகமாக முகத்தை திருப்பிக் கொண்டு வீட்டிற்குள் சென்றார்..

 மகன் திருமணம் செய்த கொஞ்ச காலத்தின் பின் இது வழமையாக நடப்பது என்பதால் சகுந்தலாவை கணக்கிலும் எடுக்காமல். யார் அந்த பெண்?. என்ற தகவலுக்காக காத்திருந்தார்..

 வீட்டின் உள்ளே வந்த சகுந்தலா அவர்களின் ஊருக்கும் அந்த வீட்டிற்கும் சற்றும் பொருந்தாத நிலாவைப் பார்த்து ” ஏய் யாரடி நீ? ” என்று கர்ஜித்தார்..

[ சாக்கடையில புரளும் அந்த பன்னி கூட்டங்களுக்கு நடுவில் பால் வெள்ளை நிறத்தில் மெலிந்த தேகத்தோடு சிற்பம் போன்று தோன்றிய அவளை அந்தக் கூட்டம் வெரித்து பார்த்தது..]

 அங்கு நடப்பதை நின்று கொண்டே கவனித்த நிலா சுவாதி கைபேசியில் அழைப்பு விடுத்து அம்மா என்றதுமே சகுந்தலா சற்று நேரத்தில் தோரணையாக வந்ததை வைத்து அவர்தான் வாத்தியின் தாய் எனக் கண்டு கொண்டாள்..

” ஏய் புள்ள யார் நீ?.. வாயை திறந்து பேசு உன்னைத்தான் கேட்கிறேன் யார் நீ?.. என்றார்..

 நிலா அப்பொழுதும் வாய் திறக்காமல் இருந்ததை பார்த்துவிட்டு சாரதா சற்று அவளது அருகில் வந்து ” யாருமா நீ? இப்பதான் கல்யாணம் முடிச்சு வந்த புது பொண்ணு மாதிரி நிக்கிற?. யாருன்னு சொன்னா தானே எங்களுக்கு தெரியும்..” என்று சற்று தன்மையாக அவளிடம் விஷயம் என்னவென்று கேட்டார் சாரதா..

 வந்ததிலிருந்து சுவாதி மற்றும் சகுந்தலாவின் கடுமையான பேச்சை பார்த்து விட்டு சாரதாவின் தன்மையான பேச்சு அவளை வாய் திறக்க வைத்ததோ என்னவோ?. காலையில் திருமண மண்டபத்தில் நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் கூறிவிட்டு ” நான் திருமதி பிறைநிலா உதயராகவன்.. ” என்றாள் நிலா..

 சுவாதி இதைக் கேட்டு வாயை பிளந்தது போன்று நிலா கூறிய தோரணையில் சகுந்தலா சாரதா மற்றும் அவரின் பிள்ளைகள் என அனைவரும் சற்று திகைத்து தான் போனார்கள்..

” ஏய் நீ என்ன விளையாடுறியா?.. என் மகனா வந்து உன் கழுத்துல தாலி கட்டினான் ?.. இதை எங்களை நம்ப சொல்றியா?..” என்றார் சகுந்தலா..

” நான் ஏங்க பொய் சொல்ல போறேன் உங்க மகனை கூப்பிடுங்க அவர் நடந்த உண்மையை சொல்லுவார்.. ” என்று நிமிர்வாக கூறினாள் நிலா அவள் பொய் கூறவில்லையே உண்மைக்கு என்று இருக்கும் தனித்துவமான நிமிர்வு அவளின் முகத்திலும் இருந்தது.. ஆனால் அதை பார்க்கும் கண்கள் நிமிர்வு என்று எடுத்துக் கொள்ளாமல் திமிர் என்று எடுத்துக் கொண்டது..

 நடந்தது என்னவென்று அறிவதற்காக சகுந்தலா அவரது மகனுக்கு அழைப்பு விடுத்தார்..

 எவ்வளவு நேரம் அனைத்தையும் யோசித்துக் கொண்டு கடலை பார்த்துக் கொண்டு இருந்தானோ வெயில் அந்த மரநிழலையும் தாண்டி அவனது முகத்தில் சுல்லென்று அடிக்க சற்று உணர்வுக்கு வந்து திரும்பியபோது அவனுக்கு அருகே கைபேசியில் அழைப்பு வருவதற்கான சமிஞ்சையாக கைபேசி ஒளியால் மின்னி மறைந்தது..

 முதல் தரம் விடுத்த அழைப்பு முழுவதும் சென்று துண்டிக்கப்பட்டதும். மீண்டும் சகுந்தலா அழைப்பு விடுத்தார்..

 சகுந்தலாவின் பொறுமையை சற்று அதிகமாகவே சோதித்து விட்டு அழைப்பை ஏற்று கைபேசியை காதில் வைத்தான்..

 சற்றும் பொறுமை இல்லாமல் மறுபக்கம் அழைப்பு ஏற்றதை உணர்ந்த சகுந்தலா ” டேய் ராகவா நீ இந்த அம்மாவுக்கு கூட சொல்லாமல் யாரோ ஊர் பேர் தெரியாத ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டியா என்ன?.. ” என்றார் குரல் சற்று கரகரப்பாக ஒலித்தது சகுந்தலாவிற்கு ..

யாரின் கஷ்ட காலமோ என்னவோ..? ராகவ் இன்னும் முழுவதுமாக தன் உணர்விற்கு வரவில்லையோ?. தாய் என்ன கேட்டாள் என்பதை சற்றும் உணராமல் ” ஏன்மா எப்பவுமே புரியிற மாதிரி பேசவே மாட்டியா?.. என்னமா உளறிட்டு இருக்க. நான் எங்க கல்யாணம் பண்ணினேன். வை மா போனை.. மனுஷனை கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடுவதில்லை.. எப்பவும் நொய் நொய்னு தொல்லை பண்ணிக்கிட்டு..” என்று சற்று எரிச்சலாக பேசிவிட்டு கைபேசியை வைத்தவன் நண்பனிடம் இருந்து வந்திருக்கும் அழைப்பை பார்த்து ரமேஷ்க்கு மீண்டும் அழைத்தான்..

 தேவையில்லாமல் இவளால் அரை நாள் விடுப்பெடுத்து அதனால் சம்பளப் பணம் வெட்டுப்பட்டதையும் மகன் அவருடன் கடுமையாக பேசியதையும் நினைத்து அருகே சாரதா ராகவ் என்ன சொன்னான் என்று கேட்டதற்கும் பதில் கூறாமல் நிலாவின் கையைப் பிடித்து தரதரவென இழுத்து வந்து வெளியே தள்ளிவிட்டார் சகுந்தலா..

 அவர் சற்று அழுத்தி தள்ளியதால் மெல்லிய தேகம் கொண்டவள் வேகமாக சென்று முற்றத்தில் விழுந்துவிட்டாள்..

 அப்பொழுதும் கோபம் அடங்காமல்

” கண்ட கண்டதுகளும் என் வீட்டுக்குள்ள வாருவதற்கு நான் என்ன இங்க வீடு கட்டி சத்திரமா நடத்துறேன்.. வந்துட்டா வெள்ள தோலை காட்டி நான் முத்தா இரண்டு பிள்ளைகளை பெத்து வச்சிருக்கேன்.. அதுகளை மயக்கி மடியில போட்டுக்கிறதுக்கு. எங்க இருந்து தான் எனக்கு எழவு கொடுக்க வருவாள்களோ..” என்று லட்சுமி மற்றும் நிலாவையும் ஒன்று சேர்த்து முறைத்து பார்த்துவிட்டு சேலையை உதறி இடுப்பில் சொருகிக்கொண்டு உள்ளே சென்றார் சகுந்தலா..

நிலா கீழே விழுந்ததும் சாரதாவின் மகள் தேவி ஓடி வந்து கை கொடுத்து அவளை தூக்கி நிறுத்தினாள்..

 திருமணம் முடித்து புகுந்த வீட்டிற்கு வந்த அன்றே கல் குத்தி நெற்றியிலும் கையிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது நிலாவிற்கு..

 தேவியின் தங்கை மாலா ஓடி சென்று அவர்கள் வீட்டில் இருந்த மருந்தை எடுத்துக்கொண்டு வந்து நிலாவின் கையில் பூசுவதற்கு வந்தாள்..

 அதை வேண்டாம் என்று தடுத்த நிலா. ” பொய் சொல்லாத எனக்கு கிடைத்த இந்த தண்டனையும் அவமானமும் முறையற்றது என்று நிரூபித்து இதோ இந்த தாலியை கட்டிய அவரே இனி வந்து உங்களுக்கு நடந்த உண்மையை சொல்லி வீட்டுக்குள்ள வரும்படி கூறாமல் நான் இந்த வீட்டு வாசல் படி மிதிக்க மாட்டேன்.. ” என்று கூறிவிட்டு சகுந்தலாவின் வீட்டு முற்றத்தில் அங்கேயே நின்றாள் நிலா..

 நிலாவின் இந்த சபதத்தை கேட்டு சகுந்தலா உள்ளே இருந்து அவளது பெட்டிகளையும் எடுத்துக் கொண்டு வந்து அவளது காலடியில் வீசிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே சென்று விட்டார்..

 வாத்தி உணர்வற்று கூறிய ஒரு வார்த்தையால் அவன் இரவு வீட்டிற்கு வரும் வரை நிலா வெளியே நின்றாள்..

Advertisement