தன்வி கணவனுடன் கிளம்பிய நிமிடம், சதாசிவம் குடும்பத்தாரை அங்கிருந்து கிளம்ப சொன்னான் முரளி.
“உடனே எப்படி கிளம்புறது? இங்க எல்லாம் முடிக்கணும்” என்று சதாசிவம் சொல்ல,
“அதை நம்மாளுங்க பார்த்துப்பாங்க. வாசுதேவன் சார் உங்க காரை எடுத்துட்டு வர சொல்லியாச்சு. கிளம்புங்க” என்றான் அவனிடமும்.
வாசுதேவன், “அவர் சொல்றதை கேளுங்க சித்தப்பா. வாங்க” என்று சதாசிவத்தை அழைத்து கொண்டு வந்தான்.
மனோகர் காரிலே காத்திருக்க, “என்ன மாப்பிள்ளை இதெல்லாம்?” என்று மருமகனிடம் அங்கலாய்த்தார் மாமனார்.
“தேசிகன்கிட்ட பேச முடியாது மாமா. நீங்க போறீங்களா, இல்லை நான் வேற ஆளை வைச்சு தன்வியை சென்னைக்கு அழைச்சுக்கவான்னு கேட்கிறான்” என்றான் மனோகரும்.
“போலீஸ்ங்கிற கேடயம் அவன் பொண்டாட்டிக்கு வேணும். அதனால தான் நானும். இல்லைன்னா எனக்கு இதெல்லாம் தெரிய கூட செய்யாது. நீங்களும் என்கிட்ட சொல்லலை” என்று மாமனாரிடம் கேட்க,
“எனக்குமே காலையில தான் தெரியும் மாப்பிள்ளை. அதுவும் ரெஜிஸ்டர் ஆபிஸ் வரணும்ன்னு ஆர்டர் தான் வந்தது”
“சித்தப்பா. தேசிகன் வழிதான் சரி. நாம எத்தனை முயற்சி பண்ணியும் அவன்கிட்ட சொத்தை வாங்க முடிஞ்சதா? இல்லை கொடுத்த பணத்தை தான் வாங்க முடிஞ்சதா இல்லையில்லை” என்றான் வாசுதேவன்.
“பணம், சொத்து போனா போகுது. எதிரிங்களை ஏன் கூட்டிக்கணும்? அந்தாளுக்கு மகன்னா உயிர். அவன் முகத்தை பார்த்தீங்களா?”
“ஆமா மாப்பிள்ளை கொதிச்சுட்டு இருக்கான். அண்ணாக்கு சொன்னா பார்த்துக்கலாம் விடுன்னு தான் சொல்றார். தன்வி பேர்ல நான் ரெஜிஸ்டர் பண்ணியிருக்கவே கூடாது” என்று சதாசிவம் மகளை நினைத்து தான் கவலை கொண்டார்.
தேசிகன், தன்வி பாதுகாப்பு பற்றி மனோகர் யோசிக்க, வாசுதேவனுக்கு தேசிகனின் செயல் பிடித்துவிட்டது.
என்னதான் தொழில் செய்தாலும், பணம் கொட்டி கிடந்தாலும் விரல் நுனியில் ஆட்டி வைக்க முடிந்த தைரியம் அவர்களுக்கு குறைவே. ராஜேந்திரன் அந்த வழியில் மகன்களை விடவும் மாட்டார்.
இப்போது ராஜேந்திரனே இது வேண்டாம் என்று தேசிகனிடம் பேசினாலும், “என்னோட வழி இது தான்” என்று முடித்து கொள்கிறான்.
“நான் இம்ப்ரெஸ் ஆகிட்டேன். தேசிகனுக்கு தான் என்னோட சப்போர்ட்” என்று வாசுதேவன் மகிழ்ச்சியாக சொல்ல, சதாசிவத்திற்கு இது வேறயா என்றிருந்தது.
ஆனாலும் மனதில் ஏதோ ஓர் இடத்தில் தேசிகன் அவரின் மனதை தொடவே செய்திருந்தான்.
‘உங்களால என்னை என்ன பண்ண முடியும்?’ என்று தெனாவட்டாக சுற்றிய சொத்துக்காரனை அடக்கி, அவனிடம் இருந்து சொத்தை எழுதி வாங்கிவிட்டானே? வித்தைக்காரன் தான்.
அதே நேரம் தந்தையாக, எதிர்வினைகளை நினைத்து கவலையும் கொண்டார்.
“பேசி முடிச்சிட்டீங்கன்னா கிளம்புங்க” என்று சதாசிவத்தின் காரோடு வந்துவிட்டான் முரளி.
மனோகர், வாசுதேவனை ஒரே காரில் அனுப்பி வைத்த முரளி, “ம்ம். ஏறுங்க” என்றான்.
“அண்ணன் உங்களை வீட்டில் விட சொல்லியிருக்கார். உங்க பாதுகாப்புக்காக தான்” என்று முரளி சொல்ல, தேசிகனின் மாமனார் கேட்கவே இல்லை.
“என்னை பார்த்துக்க எனக்கு தெரியும். நீங்க பாதுகாப்பு கொடுக்கிற அளவு இங்க யாரும் வீக்கா இல்லை” என்று முரளியை தள்ளி விட்டு அவரே கிளம்பினார்.
வழியில் போன் வர, சொத்தை விற்றவன். இந்தாளுக்கு என்ன வேணுமாம்?
“என்ன சொத்தை எழுதி வாங்கிட்டோம்ன்னு சந்தோஷத்துல இருக்கீங்க போல” என்று அந்த மனிதர் கோவமாக கேட்க,
“மூணு மடங்கு பணத்தை கொடுத்ததுக்கு அப்புறம் தான் சொத்து கைக்கு வந்துச்சு” என்றார் சதாசிவம்.
“பணத்தை கொடுத்தா? என்ன தொழிலதிபரே என் மகனை வைச்சு சொத்தை வாங்கிட்டு, அப்படியே தோசையை திருப்பி போட்டு பேசுற? நீ கேட்டு வேலை நடக்கலைன்னதும் உன் மருமகனை என்கிட்ட மோத விடுறியா?”
‘க்கும். என்கிட்டேயே அவன் மோதிட்டு தான் இருக்கான். போயா’ நொடித்து கொண்ட மனிதர், “இங்க பாருங்க. பணத்துக்கும், சொத்துக்கும் சரியா பேச்சு. இனி நமக்குள்ள பேச்சு வேண்டாம்” என்றார் சதாசிவம்.
“பணம், சொத்து கணக்கு சரிதான். ஆனா என் மகன் கணக்கு? அதுக்கென்ன பதில் சொல்ல போறீங்க? பேச்சு பேச்சா இருக்கும் போது, என் மகனை தூக்குவீங்களா? உங்கண்ணா சென்ட்ரல்ன்னா, நான் ஸ்டேட். யாருக்கு பவர் ஜாஸ்தின்னா மோதி பார்த்துடலாமா?” என்று அந்தாள் குதிக்க,
“பணத்துக்கு ஆசைப்பட்டு நீங்களா இழுத்துக்கிட்டது தான் இது” என்றார் சதாசிவம்.
“உனக்கு என்னை பத்தி தெரியல. கட்சி, பதவி எல்லாம் எனக்கு சும்மா வந்திடலை. பார்க்கிறியா இப்போவே உன்னை காரோட என் இடத்துக்கு கொண்டு வரேன்” என்று மிரட்ட, சதாசிவத்திற்கு காரிலே முட்டி கொள்ளலாம் போலானது.
“என்ன செய்ய மாட்டேன்னு நினைக்கிறியா? உன் மருமகன் முதல்ல சொத்து கேட்டு, கம்முன்னு ஆயிட்டான். ஆனா நீ உள்ளாரா பூந்து, மருமகனையும் ஏத்தி விட்டுட்ட இல்லை. என் மாமனார் சொல் பேச்சு கேட்க மாட்டிங்களான்னு என் மகன் மூக்கிலே குத்தியிருக்கான்யா உன் மாப்பிள்ளை. பதிலுக்கு உன் மூக்குல மார்க் போடலை, என் மகனுக்கு நான் அப்பன் இல்லை” என்று சூளுரைத்து கொண்டான் அவன்.
‘இது எப்போ?’ சதாசிவம் தாங்க முடியாமல் காரை விட்டு இறங்கி நின்றுவிட்டார்.
“ஊர்க்காரன் அவனுக்கு என்னை பத்தி தெரியலை. அவனை விட்டுடுவேன். ஆனா அவனுக்கு ரூட் போட்டு கொடுத்த உன்னை விடமாட்டேன். என்ன பண்றேன் பாரு” என்று மிரட்டிவிட்டு வைக்க,
இதென்னடா அநியாயம்? சதாசிவத்திற்கு ஒன்றும் புரியவில்லை.
மனிதர் கடுப்பிலே காரை எடுக்க போக, சர்ரென ஒரு கார் மிக வேகத்துடன் இவரை நோக்கி வந்தது.
அதுக்குள்ளவா பழி வாங்குவான்? சதாசிவம் அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டார். மனிதருக்கு வேர்த்து போக, கண்களை மூடி கொண்டவருக்கு தேசிகனின் முகம் தான் வந்தது.
கடைசி நிமிஷத்திலும் இவரா? சுதா எங்கடி நீ? என்று அவர் மனைவியின் முகத்தை தனக்குள் கொண்டு வர, அந்த வேக காரோ அவரின் காலுக்கருகில் பிரேக்கடித்து நின்றது.
“சார். சார். என்னாச்சு உங்களுக்கு?” என்று முரளி அவரின் தோளை பிடித்து உலுக்க, சதாசிவம் அதுவரை இழுத்து பிடித்திருந்த மூச்சை வேகமாக விட்டவர்,
“நீயா?” என்று காரின் மேலே சாய்ந்துவிட்டார்.
முரளி அவருக்கு தண்ணீர் எடுத்து கொடுக்க, முழு பாட்டிலையும் காலி செய்தவர், “இப்படித்தான் பயமுறுத்துவியா” என்று முரளியின் தலையிலே கொட்டிவிட்டார்.
முரளிக்கு சட்டென ஓர் கோவம். “சார்” என,
“எதுக்குடா அவ்வளவு வேகமா வந்த?”
“நீங்க எதுக்கு காரை நிறுத்தி இறங்குனீங்க? ஏதோ அவசரம்ன்னு”
“உண்மையை சொல்லுங்கடா, சொத்துக்காக இதெல்லாம் பண்றீங்களா? இல்லை என்னை முடிச்சுவிடவா? அந்தாள் என்னை மிரட்டுறான்டா” என்று எகிற,
“அதனால தான் என்னோட வாங்கன்னு சொன்னேன். நீங்க தனியா கிளம்பவும், என் அண்ணனுக்கு ஏத்த மாமனார்ன்னு பார்த்தா நீங்க இப்படி?. சரி வாங்க. நாம போலாம்” என்று அவரின் காரை எடுக்க போக,
“முடியாது. நான் உன்னோட வர மாட்டேன்”
“அவங்க பின்னாடி தான் வந்திட்டு இருக்காங்க.”
“வந்துட்டு போகட்டும், நீங்க காப்பாத்தி கொடுக்கிற உயிர் எனக்கு வேணாம். பாமையும் இவங்களே வைப்பாங்களாம், இவங்களே வந்து காப்பாத்தவும் செய்வாங்களாம்! என்ன டகால்டி வேலை இது” என்று திட்டி கொண்டே கிளம்பிவிட்டார்.
மகளுக்கு அழைத்து அவளின் நலம் விசாரிக்கலாம் என்றால் மகள் போன் எடுக்கவில்லை.
அவரின் மகள் தன்வியோ தன்னை மிகவும் கட்டுப்படுத்தி கொண்டே கணவனுடன் பயணித்து கொண்டிருந்தாள்.
தேசிகனின் சென்னை வீட்டிற்குள் தம்பதிகள் வரவும், சாவித்திரி மகனுக்கு அழைத்துவிட்டார்.
“ம்மா” என்றான் மகன்.
“இப்போ என்ன சொல்ல போற தேசிகா?” என்று சாவித்திரி கேட்க,
“தன்வி பேர்ல அக்ரீமெண்ட் பண்ணிட்டு, பணத்தையும் வாங்கிட்டு, சொத்தை எப்படி விட்டுட முடியும்மா?” என்று அவரிடம் கேட்டான் மகன்.
“அதனால உன் வேலையை காட்டிட்ட இல்லை”
“வேறென்ன பண்ண சொல்றீங்கம்மா? நான் முதல்ல அவர்கிட்ட நல்லவிதமா தான் பேசினேன். ஆனா அந்தாள் ரொம்ப திமிர் பண்ணான். நான் கேட்கிற பணத்தை கொடுத்திட்டு எழுதி வாங்கிங்கன்னே சொல்றான்”
“உனக்கு அந்த சொத்து வேணும்ன்னா கொடுக்க வேண்டியது தானே?”
“ஏற்கனவே அதிகமா வாங்கிட்டான். கொடுத்துட்டே இருக்க சொல்றீங்களா?”
“சரி அப்போ வேணாம்ன்னு விட்டிருக்கணும் தேசிகா”
“முடியாதும்மா. வேற யார் பேர்ல இருந்திருந்தாலும் விட்டிருப்பேன். என் பொண்டாட்டி பேர்ல ரெஜிஸ்டர் கொடுத்துட்டு அவன் கொடுக்க முடியாது சொல்வானா?” தேசிகன் இப்போதும் ஆத்திரம் கொண்டான்.