Advertisement

சாரல் 7

       ரகுவிற்கு கரம் கொடுத்தவனை  விடாது பிடித்துக் கொண்டான்.ரகு ஏற்பாடு செய்திருந்த வண்டி என்பதால் தேவாவை தொந்திரவு செய்யாது சரியாக அங்கு வந்து நிறுத்திய ஓட்டுனர் , உறங்குபவனை தொல்லை செய்யாது தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே இருந்த அந்த கெஸ்ட் ஹவுஸில் வந்து வண்டியை நிறுத்தி இருந்தான்.

ஏற்கனவே அங்கு தங்கியிருந்த ரகுவரனும் காவலாளி அழைத்துக் கூறியதும் வெளியே வந்திருந்தான். நின்றதுக்கூடத் தெரியாமல் உறக்கத்திலிருந்தவனைப் பார்த்ததும் மனதுக்கு சங்கடமாக இருந்தது. எப்போதும் அழகாக உடையணிந்து, திருத்தப்பட்ட மீசை , தலைமுடி என வருபவன் , இன்று பாதி முகம் மறையும் அளவு தாடி மீசையுடன் , கையில் காயங்களுக்கான கட்டோடு அரைக்கை சட்டையுடன் , பார்க்கவே பரிதாபகரமான தோற்றத்தில் துணைக்கும் யாரையும் அழைத்து வராமல் தனியாக வந்திருந்தவனை எழுப்பவே சங்கடமாக இருந்தது.

ஆனாலும் எழுப்ப வேண்டுமே… சத்தமாக அழைத்தால் கூட எழும்பவில்லை என்றதும் ,மெதுவாக கன்னம் தட்டி அழைக்க கண் விழித்திருந்தான்.

வெல்கம் தேவராஜன் .. உள்ளே ஹீட்டர் போட்டு ரூம் ரெடியா இருக்கு அங்கே வந்து ரெஸ்ட் எடுங்க … ” என்றதும் தான் , தான் எங்கிருக்கிறோம் என்ற நினைவே தேவாவுக்கு வந்தது. கொடைக்கானலில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றில் கார்த்தி மற்றும் ரகுவரனுடன் சமீபத்தில் தான் தேவாவும் ஒரு பங்குதாரராக மாறியிருந்தான்.

பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்த தனது தங்கை மகனின் காதணி விழாவிற்கு ரகுவையும் அழைத்திருக்க , அவனோ அச்சமயம் தனக்கு வெளிநாட்டில் வேலையிருப்பதாகக் கூறியவன் இந்தியா வந்ததும் காண வருவதாகக் கூறியிருந்தான்.

அப்படி ஊருக்கு வந்த சமயம்  பானுவிற்கும் இரண்டாம் பிரசவம் ஆகவும் ஊரிலேயே தங்கியிருந்தவன் , அவனது தொழில் நிமித்தம் கொடைக்கானல் வருகையில் தேவராஜனைக் காண அவனது அலுவலகம் சென்ற போது தான் அவன் மருத்துவமனையில் இருப்பதை அறிந்துக் காண வந்திருந்தான்.

ஆதவன் தவிர தங்கள் உறவினர்களைக் காண மறுத்திருந்த தேவராஜன் , தொழில் நிமித்தம் தனது உதவியாளரின் அலைப்பேசி வழியாக அனைவரோடும் பேசிக் கொண்டு இருந்ததால் ரகுவரன் மதுரை வந்த போது சந்தித்திருந்தான். நடந்த களோபரங்கள் தேவாவின் மனதை வெகுவாக பாதித்திருக்க , சிறிது நடக்க ஆரம்பித்ததும்  தனிமை வேண்டி மருத்துவமனையிலிருந்து கிளம்பி விட முடிவு செய்த தேவா , ரகுவைக் கண்டதும் , சில முடிவுகளை எடுத்தவன் , ஓய்வு எடுக்க கொடைக்கானல் வருவதாக ரகுவிடம் தெரிவித்து இருந்தான்.

ரகு மருத்துவமனை சென்றிருந்த போதும் அங்கு உறவினர்கள் யாரும் இருந்தது போலத் தெரியவில்லை. சாதாரணமாகக் கேட்டபோதும் , தாய் மாமன் மறைந்து விட்டதாலும், அங்கு மருமகளாகச் சென்ற தன் தங்கையும் உடல் நலமின்றி இருப்பதால் அங்கு பெற்றோர் இருப்பதாகவும் கூறி விட்டான். கூடவே செவிலியர்கள் இருந்ததால் அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளாத ரகுவிற்கு இப்போதும் தனியாக வரவும், நிச்சியம் குடும்ப பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்பதைப் புரிந்துக் கொண்டான்.

கொடைக்கானலுக்கு செல்லும் போது தேவா அங்கு தங்கியதேக் கிடையாது. மலையை விட்டு இறங்கிய அரை மணி நேரத்தில் அவனது ஊர் வந்து விடும் என்பதால் , காரிலோ , பைக்கிலோ எதில் சென்றாலும் உடனே வந்து விடுபவன், அப்படியே தங்க வேண்டியது இருந்தாலும் ஆடம்பர விடுதி எதிலாவது தங்கிச் செல்வான்.

இதனை நன்கு அறிந்திருந்த ரகுவரன் , உடல் நிலை சரியில்லாத சமயத்தில் விடுதி எல்லாம் வேண்டாம் என்றவன்,ஓய்வெடுக்க வருகையில் தங்குவதற்கு தான் ஏற்பாடு செய்வதாகக் கூறியதோடு தான் புதிதாக வாங்கியிருந்த விருந்தினர் மாளிகையை அவனது குடும்பத்தினர் வந்து தங்கியிருந்து கவனித்துக் கொள்வது போல் தயார்படுத்தியவாறு  அவர்கள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

இப்படி தனியாக வருவான் என சுத்தமாக எதிர்பார்க்கவில்லை , ஏன் எனக்கேட்கவும் மனமின்றி , ” நம்மக்கிட்ட வேலை செய்யற பேச்சிலர் பசங்க… நிறைய பேர் இருக்கிறாங்க , அவங்கள்ல ஒருத்தர உங்களுக்கு துணைக்கு அனுப்பறேன்.” என்றவனிடம் ,

” அதெல்லாம் வேண்டாம் ரகு… எனக்கு தேவையான நேரத்துல இவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணியிருக்கிற உங்ககிட்ட என் பர்ஸனல் ஷேர் பண்றதுல எனக்கு எந்தப் பிரச்சினையுமில்ல… ” என சிறிது அமைதியானவன் ரகுவிடம் ,

” நான் தனியா வந்தப்பவே உங்களுக்கு புரிஞ்சு இருக்கலாம்.. காதணி விழா நடந்த அன்றைக்கு குடும்பத்துல கொஞ்சம் பிரச்சினை .. அந்த அதிர்ச்சியில மாமா தவறிட்டார். நானும் அந்த டென்ஷன்ல வண்டி ஓட்டறப்ப தான் இந்த ஆக்ஸிடென்ட் கூட… இன்றைய சூழல்ல எனக்கு அதையெல்லாம் மறந்து ஒதுங்கனும்போல இருந்தது. இப்போதைக்கு இங்கே வந்துட்டேன்… கைக் கொஞ்சம் சரியானதும் மேல என்ன செய்யுறதுனு யோசிக்கனும்.. அதுக்குக் கொஞ்சம் தனிமை வேணும் …ஹெல்ப் வேணும் தான் ஆனாலும் இப்போதைக்கு.. “என்றவன்,

அங்கு வந்து இறங்கியதும் ரகு அறிமுகம் செய்து வைத்த காவலாளியையும் , அவர் மனைவியையும் காண்பித்து , “அவங்கப் போதும்..” என்று விட்டான். அதற்கு மேல் அவனிடம் வேறு எந்தக் கேள்வியும் ரகுக் கேட்கவில்லை. 

நிஜத்தில் ஓய்வு எடுக்கவெல்லாம் வரவில்லையே… சிலதை மறக்க மற்றவற்றில் கவனம் செலுத்தினால் தான் முடியும் என்பதை நன்கு உணர்ந்தவன் ,அங்கிருந்தே ரகு மூலமாக அவர்களது மற்ற தொழில்களிலும் பங்குதாரராக விரும்பி , உடல் நிலை சற்றுத் தேற  ஆரம்பித்ததும் அதற்கான முயற்சிகளில் இறங்க விரும்பினான்.

அதிகப்படியான மன அழுத்தத்தை குறைக்க , புகைப்பிடிக்கலாமா , மது அருந்தலாமா என்றெல்லாம் தோன்றினாலும் அவன் மீண்டும் அதன் பக்கம் திரும்பிப் பார்க்கக் கூட இல்லை. காரணம் இதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டிருந்த தான் , இத்தனை வருடங்களாக அதனிலிருந்து விலகி கட்டுப்பாடுகளோடு இருக்க காரணமே அவள் தானே…அவள் … அவள். அவள் ..

சுவற்றில் ஓங்கி அடிக்க கையைத் தூக்க முயன்றவனால் வலி தாங்க முடியவில்லை.என்ன எண்ணம் இது… தான் நேசித்த பெண் தான், ஆனால் அவள் தன்னை நேசிக்கவில்லையே, அதுவும் இன்னொருவனை விரும்பி திருமணம் செய்துக்கொண்டவளை தான் நினைத்துக் கொண்டே இருப்பது எவ்வளவு தவறு.. அன்று கடைசியாக அவளைத் தேடிச் சென்ற போது ஒரு பெண் , “உங்கள இன்னொரு அண்ணன்னு சொல்லுவா” என்பது போல ஏதோ கூறியது நியாபகம் வந்து சிரிப்பு வந்தது.

“அண்ணனாவே இருந்துட்டுப் போறேன்…” என நினைத்துக் கொண்டவன். கொடைக்கானலில் இருந்தவரை அதிகமாக ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் , வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான்.. முழுமையாக பழைய நினைவுகளிலிருந்து மீள முடியவில்லை என்றாலும் மீண்டுக் கொண்டு தான் இருந்தான்.

.ரகு அங்கு தங்கியிருந்தவரை தேவாவிடம் நலம் விசாரித்தும் , தொழில் குறித்தும் பேசிக் கொண்டவன் கொடைக்கானலை விட்டுக் கிளம்புகையில், தேவா அவனிடம் , “ரகு நானும் கொஞ்ச நாள்ல சென்னைக்கு கிளம்பலாம்னு இருக்கிறேன்… அதோட அடுத்த முறை ஆஸ்திரேலியா பிரான்ச் விசிட் க்கு நான் போகலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க…” என்றதும் ரகுவிற்கு வியப்பாக இருந்தது.

 இரு மாதங்களுக்கு முன்பு நடந்த பிஸ்னஸ் பார்ட்டி ஒன்றில் தொழில் நிமித்தம்  வெளி நாடுகளுக்கு செல்ல வேண்டியிருக்கும் என பேசிக் கொண்ட போது , ” இன்னும் ரெண்டு மாசத்துல பிஸ்னஸ்டூர் எல்லாம் தேவாவிற்கு வாய்ப்பே இல்ல.. ஹனிமூன் பிளான் தான் போட வேண்டியிருக்கும் அப்படி தானே தேவாராஜன் ” என மற்றொரு நண்பர் கேலி செய்ய, அழகான வெட்கச் சிரிப்புக் கொடுத்தவனை ரகுவரனும் ரசித்தானே. இப்போது என்னாகிற்று… என்ற ரகுவின் யோசனையை அதிகரிக்க விடாமல் ,

” இப்போதைக்கு பிஸ்னஸ் தவிர எந்த கமிட்மென்ட்டும் எனக்கு கிடையாது ரகு .. எனக்கு இருக்குற ஸ்ட்ரெஸுக்கு உலகத்துல எந்த மூலைக்கும் போகத் தயாரா இருக்கிறேன்.. இந்த நாட்டை விட்டேப் போகணும்.. சொல்லப் போனா இந்த உலகத்தை விட்டே… ” என மேலும் ஏதோ நினைவில் கூறிக் கொண்டேப் போனவனை … “தேவராஜன் ” என சத்தமாக அழைத்து பேச்சை நிறுத்தி விட்டான் ரகு.

தன் உணர்வுக்கு வந்த தேவா “சாரி .. கொஞ்சம் டஸ்டர்ப் ஆகிட்டேன் … ” என்றவன் , மீண்டும் வலிக் கொடுத்த கரத்தினைப் பிடிக்க , “தேவராஜன் ,கை வலி இன்னும் இருந்தா சொல்லுங்க … எங்க அக்காக்கு, அதாவது கார்த்திக் அத்தான் மனைவிய தான் சொல்றேன். அவங்களுக்கு தெரிஞ்ச ஆர்த்தோ ஸ்பஷலிஸ்ட்  இங்க இருக்காங்க  அவங்கள வரச் சொல்றேன் …” என்றவனிடம் , இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் ,,தானும் சென்னைக்கு கிளம்ப இருப்பதால் அங்கு சென்று பார்த்துக் கொள்கிறேன் என்றவனிடம், சென்னையிலுள்ள திவ்யஸ்ரீயின் மருத்துவமனைக்கே வாருங்கள் என்றிருந்தவன் அவர்களது மருத்துவமனை முகவரியைக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தான்.

உடல் நிலை சற்றுத் தேற ஆரம்பித்து , தன் வேலைகளைத் தானே செய்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வந்ததும் மீண்டும் மதுரைக்கு வந்தவன் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி ஆதவனை மட்டும் அழைத்திருந்தான்.

வந்திருந்த ஆதவனிடம் , “மச்சான்… நான் இங்கே வர்ற வரை  உனக்கு அப்டேட் ஆகிட்டே இருந்திருக்கும்ங்கிறது என்னோட கணிப்பு சரிதானே… ” என மெல்லியப் புன்னகையுடன் தேவா கேட்க ,

கைகளை கட்டிக் கொண்ட ஆதவன் சிறிது நேரம் மெளனமாக இருந்தான்.பின் ” எப்படி தேவா… உடம்பு சரியில்லாத உன்னை தனியா விட முடியும் … நானும் மனுஷன் தானேடா.. கோபமும் வெறுப்பும் எல்லார் மேலயும் அதிகமாவே இருக்கு தான் … அதுக்காக நான், என் பொண்டாட்டி.. பிள்ளைனு இருக்க முடியலடா… அது போல தான் உனக்கும்னு எனக்குத் தெரியும்…” என்றவனின் கூற்றும் உண்மை தானே.

சொக்கலிங்கம் தற்போது பக்கவாதத்தால் தாக்கப்பட்டு மிகவும் அவதிப்படுகிறார் என்பதை அறிந்து தான் இருந்தான். அவர் மீது வெறுப்புகள் அளவுக்கு மீறி இருந்தாலும் ஆதவன் அவர்களையும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான் என்பதையும் அறிந்து தான் இருந்தான். மெளனமாகவே ஐன்னல் வழியாக வெளியே பார்த்தவாறு அமர்ந்திருந்த தேவாவிடம் ,

“இப்போ உனக்குப் பரவாயில்லனு நினைக்கிறேன்… நீயும் எங்கே இருந்தாலும் உன்னைப் பெத்தவங்கள கவனிச்சுட்டு தான் இருக்கேன்றதும் எனக்கும் தெரியும் மச்சான்…” என்றவாறு அவன் தோளில் ஆதரவாக கை வைத்தவன்,

“நீ அவங்களையும் பார்க்காம வீட்டுக்கும் போகாம இங்க வந்து இருக்கிறதும் அப்படியே இங்கேயிருந்து சென்னைக்கு கிளம்ப இருக்கிறதுக்குமான  காரணம் உன் கோபத்தின் வெளிப்பாடு தான்… அதை என்னால புரிஞ்சுக்க முடியுது. புரியாத  இன்னொரு விஷயம் இருக்கு.. அது தான் எனக்கு தெரிஞ்சாகனும்…” என்ற ஆதவனை எழுந்து நின்று இப்போது நேருக்கு நேர் பார்த்தான் தேவராஜன்.

“உன் குணம் நல்லா தெரிஞ்சதால கேட்கிறேன்… உன் அப்பா மேல இருக்கிற கோபத்தை நீ இப்படி காட்ட மாட்ட… அவர் தப்பு பண்ணினா , ஏன் இப்படி பண்ணுனீங்கனு நேருக்கு நேரா … ஏன் பெத்தவருனுக் கூடப் பார்க்காம சட்டையப் பிடிச்சுக் கேட்டுருப்ப… அது தான் உன் குணம் … ” என்ற ஆதவனின் நேருக்கு நேரான பார்வையை தேவராஜனால் தவிர்க்க முடியவில்லை.

” ட்ரிம் கூட பண்ணாத உன் தாடி மீசை மட்டுமில்ல உன் ஃபிஸிக்கல் அப்பியரன்ஸ் அப்படியே மாறிப் போய் இருக்கு … உன் கண் லக் கூட கோபம் தெரியல… வலி .. வேதனை .. வருத்தம்.. ஏமாற்றம் இது தான் நிறையத் தெரியுது.. அதுக்கான காரணம் … ” என சற்று நிறுத்தியவன் ,

“பாப்பா வா மாச்சான். செல்விய நீ விரும்பி இருந்தியா..” என்ற ஆதவனின் கேள்வியில் தேவராஜன் பேச்சற்று நின்றான்.

விடாத சோகம் என்னிலே உலாவும் ஆழ்மனம்…

நில்லாது ஓலம் கேட்குதா..

Advertisement