Advertisement

சாரல் 6

  சில மாதங்களுக்கு முன்..

           ஏழாவது தளத்தில் இருந்த ‘லக்சூரி சூட் ‘ எனப்படும் ஆடம்பர அறைக்கு தேவராஜனை மாற்றியிருந்தார்கள். கண் விழித்தவன் ஆதவனிடம் மட்டும் தான் பேசினான். தலையில் அடிபட்டு இருந்ததால் வண்டியோட்டி வருகையில் மயக்கம் வருவது போல் இருக்க , வண்டியின் வேகத்தைக் குறைத்து கதவைத் திறந்து வெளியில் விழுந்துருந்தான். எதிரில் வந்த வாகனத்தால் அவனது வாகனம் தூக்கி வீசப்பட்டு இருந்தது.

தேவாவைத் தேடி வந்துக் கொண்டிருந்த ஆதவன் கண்டது இதைத் தான். வேகமாக தனது காரிலிருந்து இறங்கி மைத்துனனைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்க அழைத்து வருகையில் , “மச்சான்… செல்விய காப்பாத்து ..” என்றவாறு  தேவா மயக்கத்திற்கு சென்றிருந்தான்.

இதோ மூன்று நாட்கள் சென்று தான் கண் விழித்திருந்தான்.. ஐ சி யுவில் விழித்தவுடன் மருத்துவரை அழைத்த செவிலியரிடம் கைப்பேசியை வாங்கி ஆதவனிற்கு மட்டும் அழைத்தான்.

தன் தந்தைக்கு இறுதிக் காரியங்கள் முடித்துவிட்டு திரும்பியவன், மருத்துவமனையில் ஏற்கனவே பெற்றிருந்த செவிலியரின் எண் என்றதும் சிறிது பதற்றத்துடனயே காதில் வைக்க தேவராஜனின் குரல்..

அந்தச் சூழ்நிலையிலும் தேவாவின் குரலில் ஆதவனுக்கு நிம்மதி பரவ … “சொல்லு மச்சான்.. வலி குறைஞ்சுருக்கா…” என்றவனிடம் , “செல்வி… ” என ஆரம்பித்தவனிடம் ,தன் மற்ற துக்கங்களை மறைத்து,

“பாப்பாவுக்கு எந்த பிரச்சினையுமில்ல.. இனி நான் பார்த்துக்குவேன் .. இதோ உடனே வாறேன்..” என்றவனிடம் , ” நீ மட்டும் வா… உன் அத்தை மாமானு யாரோடையும் எனக்கு இப்ப பேச முடியாது… ” என்றவனை நன்கு உணர்ந்துக் கொண்டான் ஆதவன்.

முழு பிரச்சினைகளுக்கும் சொக்கலிங்கம் காரணமாகவில்லை என்றாலும் அவரும் ஒரு காரணமே .. அவர் கோபத்தில் மகன் பாசத்திற்காக செய்தாரோ… அவர் குடும்ப கெளரவத்திற்காக செய்தாரோ..செய்தது மன்னிக்க முடியாத , மனிதாபிமானமற்ற செயல் தானே…

தேவாவைப் புரிந்துக் கொண்டவன் , மனைவியைப் பார்க்க , உடல் வேதனையோடு மன வேதனையும் சேர்ந்து தில்லையை உருக்குலைத்திருக்க சோர்வுடன் கட்டிலில் படுத்திருந்தவளின் அருகில் மகனை மடியில் போட்டு உறங்க வைத்துக் கொண்டிருந்த தேவகி அருகில் வந்தவன்,

“அத்தை நான் ஹாஸ்பிட்டல் வரைக்கும் போய்ட்டு வந்துடுறேன்..” என்றவனிடம் , “மாப்ள ராஜாவ பார்க்கவிடுவாகளா… மகளப் பார்க்கவா… மகனைப் பார்க்க வா…” என மீண்டும் புலம்ப ஆரம்பித்தவரை ..

“ஷ் … அத்தை பேசின வரைப் போதும்… நான் சித்திய வர சொல்லியிருக்கேன் … அவங்க வந்ததும் நீங்க கிளம்புங்க.. இனி என் பொண்டாட்டி புள்ளைய நான் பார்த்துக்கிறேன்…” என கோபமாக சொன்னவன் , உடனே கிளம்பி விட்டான்.

நிச்சியமாக இழப்புதான் … வருத்தம் தான்… ஆனால் அவன் தங்கையை தேவகி பழிப்பதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும். யோசனைகளுடனே மருத்துவமனை வந்து இறங்கியவனை மருத்துவமனை வாசலிலேயே சொக்கலிங்கம் எதிர்கொண்டார். “மாப்ள…” என்றவரை பார்க்கக் கூட இல்லாமல் மருத்துவமனை லிஃப்டிற்குள் நுழைந்து விட்டான்.

ஐ சியு சென்று தேவாவைப் பார்த்து , அவனுக்கு இனி பிரச்சினை ஏதும் இல்லை… கையில் எப்படியும் நான்கு வாரங்களாவது கட்டுப் போடப்பட்டு இருப்பது கட்டாயம் என்றவர்… ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் ஆகிக் கொள்ளலாம் என்று இருந்தார். இதோ இப்போது அறைக்கு மாற்றி ஒரு வாரமும் சென்றிருந்தது.

சொக்கலிங்கம் மகனிடம் பேச முயல …”டாக்டர்… எனக்கு அப்பா.. அம்மானு யாரும் கிடையாது. மீறி யாரும் என்னைய பார்க்கணும்னு சொன்னா… எனக்கு ட்ரீட்மென்டே வேண்டாம்….” என்றிருந்தான். மருத்துவரும் உறவினரே என்பதால் தேவாவைப் புரிந்துக் கொண்டவர் ,மருத்துவ உதவியாளர்களிடமும் தேவா சரியென்றால் மட்டுமே யாரையும் அனுமதியுங்கள் என்றிருந்தார்.ஆதவனிடம் மட்டுமே பேசி நடந்த நிகழ்வுகளை அறிந்துக் கொண்டவனுக்கு மனது வெறுத்துப் போனது.

ஒரு ஆணும் பெண்ணும் விரும்பி இணைய இந்த நாட்டில் தான் எத்தனை எத்தனை தடைகள் .. அதுவும் சந்திரனை மட்டுமல்ல நிலவையும் நெருங்கிய இந்த டிஜிட்டல் உலகிலும் சாதி மதம் எனத் தூக்கிச் சுமந்துக் கொண்டு செல்லும் மனிதர்களைக் கண்டு வெறுப்பாகியது.. அது தன்னைப் பெற்றவர்களே என்றாலும் அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தன் தந்தையும் தாய்மாமனும் அரசியலில் இருந்தாலும் அவனுக்குப் பெரிய ஈடுபாடுக் கிடையாது. அவர்களை சுற்றி இருக்கும் மனிதர்களின் நடவடிக்கைகள் எப்போதும் அவனுக்குப் பிடிக்காத ஒன்று தான்.. ஆனால் அவை அடுத்தவர்களைப் பாதித்த வரை , ” அப்பாவுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை…” என கண்டும் காணாமல் இருந்தவனுக்கு , கடைசியில் தனக்கேப் பாதிப்பு வரவும் வாழ்வே வெறுத்துப் போனது.

கண்ணாடி ஜன்னல்கள் வழியாக இரவு நேர விளக்குகளின் ஒளியில் மதுரை மாநகர் அப்படியொரு அழகைக் கொடுத்தாலும் அதனை ரசிக்க முடியவில்லை. சாதி, கெளரவம் , ஆணவக்கொலை என்ற வார்த்தைகள் எல்லாம் காதில் அடிக்கடிக் கேட்டாலும் , கண்டுகொள்ளாமல் சென்றவனுக்கு ,இன்று தன் குடும்பத்திலும் அப்படியொரு நிகழ்வை சந்திக்க இருந்தது மிகுந்த மன வலியைக் கொடுத்தது.

அவன் பார்வையில் மதுரையில் நடைபெறும் பொருட்காட்சி திடலும் … வானுயர ராட்டினமும் கண்ணில் பட… ஐந்து வருடங்களுக்கு முன்பு , இதேப் போன்றதொரு பொருட்காட்சி ராட்டினத்திலிருந்து இறங்கியவளை தானே கைப் பிடித்து இழுத்து வந்தான்.

அந்த நியாபகம் வரவும் அவன் மனதில் பதிந்திருந்தவளும் நியாபகத்திற்கு வந்தாள். அதன் பிறகு வந்த இந்த ஐந்தரை வருடங்களும் அவளைக் கொண்டு தானே அவன் வாழ்வே…

எல்லாம் அவளால், .மேற்படிப்பு அவளால் … புதிய புதிய தொழில்கள் ஆரம்பித்தது அவளால் … ஒரு மருத்துவரை மணந்துக் கொள்ள அனைத்து தகுதிகளையும் வளர்த்துக் கொண்டு , காதலைச் சொல்லாமலே காதலை வளர்த்து வந்தவனுக்கு , தன் காதலியை அவளது காதலனுடன் இணைத்து வைக்கப் போவதே அவன் தான் என்பதை அறியாமலே அவன் வளர்த்த… அவனது காதலின்..  இன்றைய நிலையை யோசித்தவனின் தலைவலித்தது.

மாமன் மகளே… சிறுமியாக இருக்கும் போது பார்த்திருக்கிறானா என்றுக் கூடத் தெரியாது. ஆனால் பருவப் பெண்ணாக பார்த்ததும் இதயத்தில் அமர்ந்துக் கொண்டவளை இப்போது இதயத்திலிருந்து இறக்கி விடச் சொன்னால்.. இப்போது நெஞ்சும் வலித்தது,

தன் அடிபடாதக் கையால் இதயத்தைத் தொட்டுப் பார்த்தவன் , ” இன்னும் நிக்கலயா நீ… ” என மனதினுள் கேட்டுக் கொண்டான். யார் மீது தவறு… எங்கு தவறு… தேவராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை.உடல் தேறி வந்தாலும் மனம் தேற மறுத்தது.. யாருமில்லாத இடத்தில் சென்று அமர்ந்துக் கொள்ளத் தோன்றியது.

தலையிலும் ,கையிலும் பெரிய கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டு சிறிய கட்டுகளோடு இருந்தவனைக் காண ஆதவன் வந்தான்.”மச்சான் தில்லை எப்படி இருக்கா…”

“ம்… இருக்கா தேவா … நீ ஃபோன்லயும் பேச மாட்டிக்கிற… அவளையும் அழைச்சுட்டு வர வேண்டாம் கிற … ” என்றவன் , அவன் கேட்டிருந்த சில கோப்புகளைக் கொண்டு வந்திருந்தான். அலுவலகப் பணியாளர்கள் வருகையில் அவர்களது அலைப்பேசி மூலமாக இந்த நாட்களாகப் பேசிக் கொண்டிருந்தவனது அலைப்பேசி விபத்தில் ஒன்றுமில்லாமல் போயிருக்க புதியது ஒன்றையும் தற்போது வாங்கி வந்திருந்த ஆதவனிடம் ,

“ஆதவ்… உன்னால மட்டுமில்ல என்னாலயும் நடந்து முடிஞ்சத மறக்க மன்னிக்க முடியுமா தெரியாது… இதையெல்லம் ஜீரணிக்க கொஞ்சம் டைம் கொடு… ஆனா என்னால இனி இங்க இருக்க முடியாது. என் பழைய நம்பர் இனி வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். புது நம்பர் வாங்கினாலும் உன்கிட்டேயும் பேசுவேனாத் தெரியாது… உன்கிட்டப் பேசினா அப்படியே எல்லார்கிட்டயும் பேச வேண்டி வரும்..” என்ற தேவா “வேண்டாம்… எனக்கு யாரும் வேண்டாம்”… என்றவன் செவிலியரை அழைக்கும் மணியை அழுத்தினான்.

பெருமூச்சுடன் அருகில் வந்த ஆதவன் ,

“தேவா… எனக்கு என்ன சொல்றதுனு தெரியல…எனக்கு என் தங்கை எவ்வளவு முக்கியமோ அதே அளவு என் மனைவியும் குழந்தையும் முக்கியம்… ” என்றவனுக்கு நடந்து முடிந்தவைகள் நினைவுக்கு வந்து, கண்கள் சிவக்க , “ஆனா என் மனைவிக்கு இனி பிறந்த வீடு கிடையாது தேவா..” என்றவனின் கோபம் நியாயமானது என்பதை அறிந்த தேவராஜனும்,அமைதியாக தனது பொருட்களை ஒற்றைக் கையால் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

உடன் பிறந்தவளை கொலை செய்ய முயன்றவர்களோடு எப்படி உறவு கொண்டாட முடியும் … தன்னாலயே முடியவில்லையே… தவறாகப் பரவிய செய்தியை நம்பி கொலை செய்ய துணிந்தவரை எப்படி பெற்றவராக ஏற்றுக்கொள்ள முடியும்… சொக்கலிங்கத்தின் மேல் கோபம் கோபமாக வந்தது. ஒரு உயிரை எடுக்கத் துணிந்தவருக்கு இனி தான் மகனேக் கிடையாது… வெறுப்பாக எண்ணிக் கொண்டிருக்கும் போதே ஆண் செவிலியர் ஒருவர் அறைக்குள் நுழையவும்,

“ப்ரோ எனக்கு டிரஸ் சேன்ஜ் பண்ண ஹெல்ப் பண்ணுங்க..” என்றவன் அவரது உதவியால் உடை மாற்றிக் கொண்டு , தேவையானவற்றையும் எடுத்துக் கொண்டு ஆதவனிடம் ,

“ஆதவ் … நான் கிளம்பறேன்.. எங்கேப் போறேன்… என்ன செய்யப் போறேன்… எதுவும் கேட்காத மச்சான் … என்னால எந்த பதிலும் சொல்ல முடியாது.. ஏன்னா பதில் எனக்கேத் தெரியலங்காது தான் உண்மை. நடந்த எல்லாத்துக்குமா நான் உன்கிட்ட மன்னிப்புக் கேட்கிறேன்…” என்றவனின் தோள் தட்டிய ஆதவனிடம் ,

” நீ என்னைய காப்பாத்தாமலே இருந்து இருக்கலாம் மச்சான்… நிம்மதியா போயிருப்பேன்ல… ” என்றவனால் மேலும் பேச முடியவில்லை.ஆதவனாலும் பேச முடியவில்லை. வலி இருவருக்கும் தானே.. அடுத்த ஐந்து நிமிடத்தில் ,

 “கொஞ்ச நாள் என்னைய தனியா விடுங்க… என் பின்ன ஆள் போட்டு நான் எங்கே இருக்கேன்.. என்ன செய்யுறேன்னு வேவுப் பார்க்கிற வேலைய உன் மாமனார் செய்தா…” என நரம்புகள் தெறிக்கப் பேசிய தேவா…

“அப்பாவ கொன்ன மகன்ற பலிய எனக்கு வாங்கிக் கொடுத்துராத 

ஆதவ்… ” என்றவனைத் தேற்றிய ஆதவனிடம் ,

“அவருக்கு நான் செத்தவனாவே இருந்துட்டுப் போறேன்.. உன் மாமியாருக்கிட்டேயும் சொல்லு.. அவங்க என்கிட்டப் பேசாதவரை… என்னையப் பார்க்காத வரை நான் உயிரோட தான் இருப்பேன்னு ” என்றவன் அதிகம் பேசியதாலோ என்னவோ தலையும் ,கையும் அதிகம் வலிப்பது போல் தோன்ற.. ஆதவனிடம் காண்பித்துக் கொள்ளாது,

“தங்கச்சியப் பார்த்துக்கோ…” என்ற தேவா, நேருக்கு நேர் ஆதவனின் விழிகளைப் பார்த்து ,” என் தங்கச்சிய பார்த்துக்கனு சொல்லல… ஏன்னா அதுக்கு அவசியமே இல்ல… நீ அவளை எந்தளவு விரும்பறனு தெரியும் ஆதவா…” என மெல்லிய புன்னகையைத் தங்கைக் கணவனுக்குக் கொடுத்தவன் …’நானே உன்னையக் கூப்பிடுறேன்.. அதுவரை ப்ளீஸ்…” என்ற தேவா ஒற்றைக் கையால் ஆதவனை தோளணைத்து விட்டு,சக்கரம் பொருத்தப்பட்ட பெட்டியையும் நகர்த்திக் கொண்டு, லிஃப்டிற்கு சென்று விட்டான்.

மருத்துவமனையின் வெளியேக் காத்துக் கொண்டிருந்த வாடகைக் காரை கொடைக்கானலுக்கு விடச் சொன்னவன், நன்கு வசதியாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டவன் வாகனம் மலையேறத் துவங்கியதும் கண்களை மூடிக்கொண்டான்.

காரில் காதல் மெல்லிசைப் பாடல்கள் ஒலிக்கத் துவங்க … அவனால் கேட்க முடியவில்லை.. கேட்க கேட்க அவள் நியாபகம் அதிகம் வரத் துவங்கியது. எப்போதும் விரும்பிக் கேட்கும் பாடல்கள் இப்போது கேட்கத் தோன்றாமல் போக , டிரைவரிடம் பாடல்களை நிறுத்தச் சொல்லி விட்டான். கண்களைத் திறந்து வெளியேப் பார்க்க ஒரே இருளடைந்த காடுகள்… அவை அவனது மன வலியை அதிகப் படுத்த… கை வலித்தால் மட்டும் போட்டுக் கொள்ளத் தந்த மாத்திரையை  எடுத்துப் போட்டுக் கொண்டான்.

இதுப் போன்ற வலி மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது அவன் அறிவுக்குத் தெரியும்.. ஆனால் மனதிற்கு தெரிவதில்லையே.. மாத்திரையின் வீரியத்தில் சிறிது நேரத்தில் உறக்கமும் வந்துவிட்டது .

யாரோ, “தேவராஜன் ” என அழைத்துக் கொண்டே அவன் கன்னம் தட்டுவது உணர்ந்து விழித்தவனின் எதிரில் குளிருக்கு இதமான ஜாக்கெட்டுடன் ,தலையிலும் குல்லா அணிந்துக் கொண்டு , புன்னகைத்தவாறே , “வெல்கம் தேவராஜன் ” என கைக் கொடுக்க வலது கரத்தை நீட்டியவாறு  ரகுவரன் நின்றுக் கொண்டிருந்தான்.

காதல் தோல்வியால் தனிமைத் தேடி வந்தவனை காதல் மழையில் நனையவைக்க… ரகுவரன் மூலமாக காதல் தேவதை ஒருத்தி வரப் போகிறாள் என்பதை அப்போது தேவா அறியவில்லை…

                           இனி தேவராஜன்..அமுதினியின் காதல் சாரல் மட்டுமே இனிதாக வீசும்….

Advertisement